Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

கரிசலாங் கண்ணிக்குக் காமாலை
பேரா. அப்துல் காதர்

தன் நிழலும் தரையில் விழாத தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம் கம்பீரமாய் நிற்கும். கட்டிடக் கலை அதிசயம் மட்டுமா அது? தன் நிழலும் பிறன் காலில் மிதிபடல் ஆகாது என்று சொல்கிறதா? இல்லை, இல்லை. மனிதா உன் நிழல் கூட உன் காலில் விழ வேண்டாம். உன் நிழலாக இருக்கலாம் அதனை உன் காலில் விழக் கூட அனுமதிக்காதே. கோபுரத்தின் பெருமிதம் உனக்கும் வரவேண்டும். அதன் பெருமிதம் வளையாமையிலும், உறுதியாக நிற்பதிலும், தன் நிழலும் கூட தன் காலில் கூட விழல் ஆகாது என்ற சுயமரியாதையிலும் தான் இருப்பதை உணர்கிறாயா?

அந்தக் கோபுரத்திற்குள் குடமுழுக்கின் போது பொன்னும், பொருளுமா இட்டு நிரப்பி வைத்துள்ளார்கள்? நவதானிய விதைகள், அண்டம் புரண்டு, அகிலம் அழிந்தாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைக்கான விதைகள்தான் முந்திய தலைமுறை விட்டுச் செல்ல வேண்டியவை; முன்னோர்களின் கலசக் கருத்து இதுதான். எனவே விதைகள் காப்பாற்றப்பட வேண்டும். பாத்திரம் கூட பசித்திருக்க வேண்டாம். கோபுரக் கலசமாயினும், ஏழைகளின் கலமாயினும், அவைகளின் வயிறும் நிரம்பியிருக்குமாறு பார்த்துக் கொள், அதற்கான விதைகளைக் காத்துக்கொள் என்பதே மனிதரை நோக்கி விடுக்கப்பட்ட செய்தி.

தெய்வங்கட்கு முன்னால் வகைவகையான உணவு வகைகளை மனிதர்கள் படைக்கிறார்கள். எந்தத் தெய்வமும் அவைகளை எடுத்துப் புசிப்பதில்லை. புசித்ததில்லை. வெளியே சாதமாய் இருப்பது, படையலுக்கு பிறகு ‘பிரசாதம்’ ஆகி விடுகிறது. தெய்வ சம்பந்தம் இருப்பதாலா சாதத்திற்குப் பிரசாதம் என்ற ஞானக்குளியல்? பசித்த வயிற்றோடு இருக்கும் மனித விரல்கள் தீண்டும் பேறு பெறுவதால் தான் சாதத்திற்குப் பிரசாதம் என்று பெயர். எரியும் ஏழை வயிற்றுக்குள் சின்னச் சின்னக் கற்பூரத் துணுக்குகளாக சோறு இறங்கும் போது, உண்மையான கற்பூர தீபாராதனை நிகழ்ந்து விடுகிறது. அதுவும் ஜீவாலயத்தின் முன்பு என்ன தானம் என்றாலும் அன்னதானம் ‘அன்ன’தானம் எதுவுமில்லை.

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”

என்ற குறளும், ‘திருவுடைய மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்ற ஆழ்வார் வாக்கும், ஆள்பவனை ஆண்டவனாகக் கருதியமையைப் புலப்படுத்தும் வேண்டுதல் வேண்டாமையற்றவானாக ஆண்டவன், படையலிடப் பட்ட உணவு படைப்பினங்களுக்கு உரியதே தவிரத் தனக்கன்று என்று, அதனைத் தீண்டுவதில்லை. மக்களுக்குரியதை, பொருளாயினும், அன்றிப் பொதுப்பணம் ஆயினும் ஆள்வோர் தீண்டுதல் ஆகாது.

பொதுப்பணம் என்பது நீ பெற்றெடுத்த பெண்ணைப் போன்றது; என்றார் நபிகள் நாயகம் (ஸல்). பொதுப்பணம் என்பதின் பாதுகாவலனாக நீ இருக்கலாமே தவிர; அதனை நீ தீண்டல் கூடாது. ஆகாது. அப்படி ஒருவன் அதனைத் துய்க்க முற்படுவது எத்தகைய அருவெறுப்பான செயல்?

இன்று அரசியல்வாதிகளை இந்த இலக்கணப்படி சலித்தால், சல்லடைக் கண்களிலும் நீர் கசியும். கொள்கையை விட்டு விட்டு எதனோடும் சமரசம் செய்யாமை, சுயமரியாதை, எதற்கும் வளையாமை, அடுத்த தலைமுறைக்கான விதைக் கருத்துக்கள் பேணுதல், பொதுப்பணத்தைச் சுரண்டாமை போன்றவை தேர்தல் தராசில் எடைக்கற்களாக இருக்க வேண்டும். “18 வகைக் குற்றங்கள் இல்லாதவர்களே ஊராட்சி வேட்பாளர்களாக இருக்க வேண்டும்; அவர்களில் யாராவது ஒருவர் பெயரை ஓலை நறுக்கில் எழுதி குடத்தில் இட வேண்டும். அப்படி இடப்பட்ட நறுக்குகளில் ஒன்றை வெளியில் எடுத்து, அன்னாரையே வெற்றி பெற்றவராக அறிவிப்பார்கள்” என்ற செய்தியைத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. முடியாட்சிக் காலத்திலிருந்த குடியாட்சி உரிமை வியக்கத் தக்கதாக இருக்கிறது. மாறாக, இன்று மக்களாட்சி யுகத்தில், ஜனநாயகத்திற்குப் பதிலாகக் கட்சி நாயகமே கோலோச்சுகிறது. இருக்கிற நல்லவர்களில் ஒருவரைத் தெரிவு செய்யும் குடவோலை முறை எங்கே? கட்சி நிறுத்துகிற அயோக்கியர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் அவல நிலை எங்கே?

பழைய ஆங்கிலக் கதை ஒன்று. சொர்க்க வாசலில் செயின்ட் பீட்டர் உள்ளே தகுதி பெற்றவர்களை அனுப்பிக் கொண்டிருந்தார். கதவு மூடப் போகும் சமயம் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர். ஒரு பொறியாளர், ஒரு அரசியல்வாதி ஆகிய மூவர் வந்தனர். செயின்ட் பீட்டர் அவர்களிடம் “உள்ளே அனுப்ப வேண்டியவர் பட்டியலில் ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது தற்போது ஒருவர் மட்டுமே தான் உள்ளே நுழைய முடிவும் உங்கள் மூவரில் யார் பழமையான தொழிலுக்கு உரியவரோ அவர் தான் உள்ளே அனுப்பப்படுவார்” என்றார். அறுவை மருத்துவர் ‘இரத்தத்தின் விலா எலும்பிலே இருந்து ஏவாள் படைக்கப்பட்டார். அது அறுவையால் தான் நிகழ்ந்திருக்க முடியும் எனவே பழமையான தொழில் என் தொழில் தான்” என்றார். பொறியாளரோ, “அப்படியில்லை, ஆதாம், ஏவாளைப் படைக்கும் முன்பு மூலம் ஒரே குழப்பமாய் இருந்தது. குழம்பிய நிலையிலிருந்து, முறையாகத் திட்டமிட்டு ஒரு ஒழுங்கு முறையில் அனைத்தும் படைக்கப்பட்டன. திட்டமிட்டு அமைப்பு வேலை நிகழ்ந்துள்ளதால் பொறியியலே பழமை ஆனது” என்று மறுத்தார். உடனே துள்ளிக் குதித்த அரசியல்வாதி

“நீங்கள் இருவரும் எனக்குப் பிந்தித்தான் நிற்க வேண்டும். மூலப் பொருள்

குழம்பிய நிலையில் இருந்ததல்லவா? யார் குழப்பியது என்று நினைக்கிறீர்கள்?”

எனக் குழப்புதலே பழமையானது எனத் தனக்கேதான் அந்தத் தகுதி என்று முடித்தார்.

தெளிவான மக்களைக் குழப்பி, ‘தன்னிறைவு திட்டம்’ ஒன்றே எல்லாத் திட்டங்களுக்குமான உள்நோக்கம் ஆகக் கொண்ட அரசியல்வாதிகள் அணிவகுத்து ஜனநாயக சுயம்வரத்திற்காக நிற்கிறார்கள். சாதி, மத, கட்சி சார்பின்றி வல்லமை மிக்க நல்லவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.

“Stand with any body that stands
right: stand with him while he is
right; part with him when he goes wrong”

என்கிறார் ஆபிரஹாம் லிங்கன்

“யார் சரியானவற்றிற்காக நிற்கிறார்களோ அவர்களுடன்
நில்லுங்கள்; அவர்கள் சரியாக இருக்கும் போது, அவர்களுடன்
நில்லுங்கள்; தவறிழைக்கும் போது அவர்களை விட்டுப்
பிரிந்து விடுங்கள்”

பாதிரியாரிடம் யாரோ ஒருவர் கேட்டார், “ஓர் அரசியல்வாதியைப் பார்த்தால், அவருக்காகப் பிரார்த்தனை செய்வீர்களா?” பாதிரியார், “இல்லை. ஓர் அரசியல்வாதியைப் பார்த்தால் நாட்டுக்காகப் பிரார்த்தனை செய்வேன்” என்றார்.

சிணுங்கும் செல்பேசிச் செய்தியைப் பார்த்தேன். “ஒரு படகில் கருணாநிதி, ஜெயலலிதா, லல்லு பிரசாத் யாதவ், அத்வானி, உமாபாரதி, நட்வர்சிங் போன்றோர் செல்லும் போது, படகு கவிழ்ந்தால் யார் தப்புவார்கள்?” என்பது SMS கேள்வி. பரிசுக்குரிய விடை: “நாடு, நாடு”

சர்வாதிகார நோய்க்குச் சரியான மருந்தென்று ஜனநாயகம் கண்டோம். மருந்துக்கே நோயா? கரிசலாலங் கண்ணிக்கே காமாலையா? காப்பாற்றுவார் யார்? கரையேற்றுவார் யார்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com