Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மே 2006
விளையாட்டென்றால் விளையாட்டா?

இமயம் எட்டிய உயரம்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

ஐம்பதுகளில், இங்கிலாந்தின் ஃப்ரட்டி ட்ரூமனின் புயல் வேகப் பந்து வீச்சில் சுருண்டு, பதறிச் சிதறி; கூனிக்குறுகி; நமக்கு கிரிக்கெட்டும் ஒரு கேடா என்னுமளவுக்கு, ஏளனத்துக்கும் இளக்காரத்துக்கும் உள்ளாகி, எழுபதுகளில், அவர்களது மண்ணிலேயே, அவர்களை வென்று, எண்பதுகளில், மீண்டும் அவர்களது மண்ணிலேயே, உலகக் கோப்பை என்னும் உச்சத்தை எட்டி, ஆஸ்த்ரேலிய உலகச் சுற்றுப் போட்டிகளிலும், முத்திரை பதித்து, இத்தனை ஆரோகணங்களுக்குப் பின், தொடங்கியது ஒரு அவரோகணம்!

சச்சின், கங்குலி, ட்ராவிட், லஷ்மணன், ஒரு விக்கட் கீப்பர். அவரை எத்தனை முறை மாற்றினோம் என்பது ஞாபகமில்லை. ‘ஆல் ரவுண்டர்’ என்று சொல்லிக் கொள்ளும் படியாக யாரும் தேறவில்லை. இரண்டு வேகப் பந்து வீச்சாளர்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இப்படி ஒருசில பேர்தான் வந்து, தங்களுக்கு புகழையும் பணத்தையும் வாரினார்கள்; நாட்டின் காலையும் வாரினார்கள். புதியவர்களுக்கு எங்கே இடம் இருக்கிறது என்ற கேள்வி வேறு!

அவ்வப்போது சில புதியவர்களை அணியில் சேர்த்துக் கொண்டார்கள். வெளிநாடுகளுக்கும் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் தண்ணீர் சுமக்கவும், டவலை எடுத்துச் செல்லவும் பயன்பட்டார்களே தவிர, மூத்தவர்கள் சரியாக விiளாயாடாத போதும் சந்தர்ப்பம் அளிக்காமல், நாடு திரும்பியதும் முதல் வேலையாக அவர்களை கழற்றி விட்டார்கள்!

2005ல் பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் ஜான்ரைட் ஓய்வு பெற்றார். அவரது இடத்துக்கு வர, உலக அளவில் ஏகப்பட்ட போட்டி. இப்போதுள்ள பயிற்சியாளர் ஆஸ்த்ரேலியாவின் கிரேக்சப்பல் மட்டும் தான் தனக்கு என்னென்ன தேவை, தான் என்னென்ன செய்ய உத்தேசம் என்பதை கணினி மூலம் விளக்கினார். பதவி அவருக்கே போயிற்று. அத்துடன் ஏகப்பட்ட சம்பளம் மற்றும் இதர சலுகைகள் சௌகரியங்கள்!

ஜிம்பாப்வே பயணம் பலரது திறமை வெளிப்பட காரணமாக அமைந்தது. அணியின் சாதனை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அவர் உத்தேசித்திருந்த சில-பல பரீட்சார்த்தங்கள் அங்கு தான் துவங்கின.

ஸ்ரீலங்காவுக்கு எதிராக அதன் விளைவுகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன. பாகிஸ்தானுக்கு எதிராக இழந்த நம்பிக்கையினை மீட்டெடுத்தார்கள். தாங்கள் தான் கோபுரத்தை தாங்குவதாக எண்ணிக் கொண்டிருந்த பல பொம்மைகள் தூக்கி எறியப்பட்டன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர், நமது வெற்றிகளைத் தீர்மானிப்பது; நாம் தானே தவிர, வேறு யாருமல்ல என்பதை, நமக்கு உறைக்கும் படியாக உணர்த்தியது.

இதோ, இப்போது, இங்கிலாந்திடம் நமக்கு வித்தையை கற்பித்தவர்களிடமே நமது ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கிறோம். டெஸ்ட் போட்டித் தொடரில் 2-1. ஒருநாள் போட்டி ஆட்டங்களில் 5-1 என்று அவர்களை வெல்லுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஆக கடந்த அரை நூற்றாண்டில் ஒரு முழுச்சுற்றே சுற்றி வந்து விட்டோம்.

புதியவர்களுக்கு எங்கே இடம் என்று கேட்டது போக, பெரியவர்களை கூட மாற்றி நிறுத்தி விட்டு, இளைஞர்களுக்கு இடம் கொடுத்தோம். எத்தனை எத்தனை திறமைகள்! வந்தவர்கள் எல்லாருமே வென்றார்கள்!! அவரை விட்டால் என்ன செய்வது? இவர் போய் விட்டால் எப்படி சமாளிப்பது? என்பதெல்லாம் போய் யாரை விடுவது, யாரை வைத்திருப்பது என்கிற இக்கட்டுக்கு ஆளாகி இருக்கிறோம். சுமைகள் சுலபமானவைகள் அல்ல. ஆனால் இந்தச் சுமைகள் சுவையானவை.

சென்ற உலகக் கோப்பையின் போது ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் பெவிலியனில் உட்கார்ந்தே ஆசனத்தை தேய்த்துக் கொண்டிருந்த அகார்கருக்கும் பார்த்திவ் பட்டேலுக்கும் கூட சன்மானத் தொகை தலா 92 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

முன்பெல்லாம் லட்சங்களில் பேசிக் கொண்டிருந்த வாரியம், கோடிகளுக்கு உயர்ந்து; இப்போது கோடானு கோடி என்கிற உயர்நிலையை எட்டியுள்ளது! எனவேதான், முன்னைநாள் கிரிக்கெட் வீரர்களுக்கு, ஓய்வு ஊதியமாக; மாதம் 25,000/- வழங்க தீர்மானித்ததோடு, அருகதைப் பட்ட; ஆனால் பொருளாதார வசதியில்லாத பல விளையாட்டு அமைப்புகளை தத்து எடுத்துக் கொண்டு, நிதி உதவி செய்யவும் தீர்மானித்துள்ளது. நல்ல விஷயம் பாராட்டலாம்.

அமீரகத்தின் ஷார்ஜாவில் மிக வெற்றிகரமாக நடந்து வந்த கிரிக்கெட் போட்டிகள் நின்று போக ‘டால்மியா தலைமையிலான’ இந்திய கிரிக்கெட் வாரியம்தான் காரணம் என்றால் (அதுதான் உண்மை என்கிறார்கள்) இப்போது அது புதிய வீறுடன் அபுதாபியில் தொடங்குகிறது. ஏப்ரல் 18-19 தேதிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத ஏற்பாடு. இந்தத் தொடர் இனி தொய்வு இல்லாமல் தொடரும் என்று நம்பலாம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com