Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006
நேர்காணல்

டி.கே. ரங்கராஜன்,    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சந்திப்பு: அ. ஜெகநாதன்

T.K.Rangarajan திரு.டி.கே.ரங்கராஜன் மிக முக்கியமான இடதுசாரி போராளி. சி.பி.எம். அமைப்பு சார்ந்து தனது அரசியல் செயல்பாடுகளைக் கொண்டு செல்லும் ரங்கராஜன், சி.ஐ.டி.யு.தொழிற்சங்க அமைப்பில் தீவிரமாக பணியாற்றி வருபவர். புதியகாற்று இதழுக்காக நாம் சில கேள்விகளோடு அவரை சந்தித்தோம். நாம் கொண்டு சென்ற கேள்விகளும் அவரின் பதில்களும். . .

கேள்வி : உங்களுக்கும் கம்யூனிச இயக்கத்துக்குமான தொடர்பு எங்கிருந்து துவக்கியது என்பது குறித்து கூறுங்களேன்?

1958ல் காவேரி சர்க்கரை ஆலை திருச்சி மாவட்டத்தில் இருந்தது. அப்ப எனக்கு வயது பதினெட்டு. அன்றைய தொழிலாளிகளின் போராட்டங்கள்; நிர்வாகத்தின் அணுகுமுறை; அடக்குமுறை இவற்றை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர். ஆரம்பத்தில் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டமும் அவர்களின் கோசமும் தான் என்னை பாதித்தது. அன்று அந்த தொழிற் சங்கத்திற்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். உமாநாத் அதன் தலைவராக இருந்தார். பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் பிரச்சனை குறித்து பேசிய உரைகள்; விவாதத்தில் அவர் பேசிய பொருள்கள் இவ்வியக்கத்திற்கு வருவதற்கு எனக்கு ஆரம்ப உந்துதலை கொடுத்தது. அதற்கு முன்பே எனது மாணவப் பருவத்தில் பொதுவான அரசியல் பிரச்சனையில் அக்கரை இருந்தது. நான் திராவிடர் கழக கூட்டத்தில் கலந்து கொள்வேன். அரசியல்ரீதியாக எனக்கொரு இடம் கிடைத்தது தொழிலாளர் போராட்டத்தில்தான்.

கேள்வி : கம்யூனிச இயக்கத்தில் இருந்து பல்வேறு காரணங்களை முன்வைத்து CPM உருவானது. கடந்த 20 ஆண்டுகாலமாக பொதுத்தளத்தில் நீங்கள் இருவரும் இணைந்து வேலை செய்து கொண்டு வருகிறீர்கள். பிரிவினைக்கு நீங்கள் முன்வைத்த காரணங்களை இன்று எவ்வாறு காண்கிறீர்கள்?

அடிப்படைக் காரணங்கள் இன்றும் அப்படியே இருக்கின்றன. அதனில் எந்த மாற்றமும் வரவில்லை. உதாரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டது. இந்திய அரசின் வர்க்கத் தன்மையை நிர்ணயிப்பதில் இருவேறான அணுகுமுறை உருவானதுதான் அடிப்படை காரணமாகும். Assesment of the Indian State CPI, CPI(M) நிலை இன்றும் வேறுபட்டுதான் இருக்கிறது.

கேள்வி : தற்போது CPI கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும் என முன்மொழிந்தது. இதற்கு சீத்தாராம் யெச்சூரி மறுப்பு தெரிவித்தார். நீங்கள் இவ்விணைவு கோசத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

இரண்டு கட்சிகளும் இணைவது; கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றுபடுவது என்ற ஆலோசனை நல்ல ஆலோசனை. இந்த ஆலோசனையை அமுல்படுத்துவதற்கு முன்னர் சுமார் 39 ஆண்டுகள் தனித்தனியாக வேலை செய்தோம் என்ற உண்மையும் நம்முன் இருக்கிறது. இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு முன்னர் நாங்கள் விரும்புவது; நாங்கள் சொல்வது இரண்டு அமைப்புகளிலும் இயங்கக் கூடிய வெகுசன அமைப்புகள் பல்வேறு கட்டங்களில் ஒன்று பட்டு போராடுகின்றனர். இணைப்பும் போராட்டமும் அதிகமாக அதிகமாக; இறுதியாக அரசியல் ரீதியாக ஒன்றுபடுதல் என்பது கீழிருந்து மேலெழும்பும். இணைப்பென்பது மேலிருந்து உருவாவதல்ல. கீழிருந்து அது உருவாக வேண்டும். இணைந்து வேலை செய்து வரும்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் கடந்து வந்த பாதை நோக்கி ஒரு ‘Review’ செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி தான் கடந்து வந்த பாதை குறித்து Review செய்ய வேண்டும். இதிலிருந்துதான் ஒரு முடிவுக்கு வர முடியுமே தவிர; திடீரென்று ஒன்று படுதல் என்பது பிளவுபட்ட காரணத்தை எல்லாம் மூடி மறைத்ததாகிவிடும். இன்றை புதிய சூழல்களுக்காக; -இன்று இத்துத்துவா வந்திருக்கிறது, உலகமயம் வந்திருக்கிறது - இணைந்து போராடுவதற்கான; இணைந்து வேலை செய்வதற்கான சூழல் முன்னெப்போதையும் காட்டிலும் மிக அதிகமாக இருக்கிறது என்பது மிகப் பெரும் உண்மை. அதைத்தான் அமல் படுத்திக் கொண்டிருக்கிறோம். இதற்காகத்தான் இடதுசாரிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் இணைந்து பல்வேறு பிரச்சனைகளில் செயல்புரிந்து வருகிறார்கள்.

கேள்வி : இந்துத்துவம் இஸ்லாமியர்களை குறிவைத்து கோரத்தாண்டவம் ஆடியது. தமிழகத்தை பொருத்தவரை இந்துத்துவம் படித்த நடுத்தர இந்துக்களின் ஆழ்மனதில் ஊடுருவி நின்றது. இவற்றிற்கு எதிராக மதச்சார்பின்மை என்ற கோசம் மிக வலுவாக முன்வைக்கப்பட்டதில் இடதுசாரிகளுக்கு மிக முக்கியப் பங்கு இறுக்கிறது. மதச்சார்பின்மை என நீங்கள் பேசும்போது சாதிச்சார்பின்மை குறித்து ஏதாவது பேசினீர்களா? மதச்சார்பின்மைக்கும் சாதிச் சார்பின்மைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை எவ்வாறு பர்க்கிறீர்கள்?

சாதி என்பது இன்றைய சமுதாயத்தில் ஆழமாக ஊடுருவி இருக்கிறது. நம்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் வழியாக இச்சாதியை படிப்படியாக குறைக்க வேண்டும். அது தமிழகத்தில் நடந்திருக்கிறது. நடக்காமல் இல்லை. தென்மாவட்டத்தில் சாதிச் சண்டைகள் வேகமாக வரும்போது இங்கு தொழில் வளர்ச்சி இல்லை. இரத்தினவேல் பாண்டியனுடைய பரிந்துரையை நீங்கள் எடுத்து படித்தீர்களானால் இப்பகுதியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்திதான் மக்களுக்குள் Intractionனை உருவாக்க முடியும் என்றார். இந்த Intraction அதிகமாக இருக்கும் போது தத்துவார்த்த ரீதியிலான கல்விகள் அவர்களுக்கு கொடுத்தோமானால் சாதிப் பிரிவினைகள் குறைய ஆரம்பிக்கும். சாதி வேண்டாம், கலப்புத் திருமணத்தால் சாதி போய்விடும் எனச் சொல்வதால் சாதி போய்விடாது. கலப்பு திருமணத்தில் னுடிஅiயேவநன சாதியை சேர்ந்தவர் ஒருவர் இருந்தால் அச்சாதிதான் நிலைக்கும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நிலை அதுதான். தென்மாவட்டங்களிலேயோ அல்லது வடமாவட்டங்களிலேயோ கிராமப் புறத்தில் நீங்கள் பார்த்தீர்களானால் இன்னும் ஒரு நிலப்பிரபுத்துவ பின்னணியுள்ள நாடாக அப்பகுதி இருப்பதை அறியலாம். அங்குள்ள சாதிய மனோபாவத்தை மாற்ற வேண்டுமானால் கிராமப்புறத்தில் நிலச்சீர்த்திருத்தம் செய்ய வேண்டும். தொழில் வளர்ச்சியையும் பெருக்க வேண்டும். இவ்விரு செயல்பாடுகளும் ஒருங்கிணைந்து நடக்கும் போது கூடவே தத்துவார்த்த அறிவும் செலுத்தப் பட்டால் சாதி மறையும்.

கேள்வி : மதப் பெரும்பான்மையைக் காட்டிலும் தமிழகத்தில் சாதிப் பெரும்பான்மை கடுமையாக வினை புரிந்து வருகிறது. இந்தியாவிலேயே மலம் கொடுத்த கொடூரம் தமிழகத்தில் தான் நடைபெற்றது. இது தமிழர்களாகிய நமக்கு ஏற்பட்ட மிகப்பெரும் வெட்கக்கேடு. பத்தாண்டுகளாக இங்கே பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்களத்தில் தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இங்கு சூத்திர அரசியலின் எழுச்சியும், பண்பாட்டு அரசியலும் அதிக மேலாண்மையுடன் வினைபுரிகிறது. மதப் பெரும்பான்மை வாதத்திற்கு எதிரான பரந்து பட்ட முன்னணி உருவாக்கிய இடதுசாரிகளால் சாதிப் பெரும்பான்மைக்கு எதிராக ஒரு முன்னணியை உருவாக்க ஏதாவது முயற்சித்தீர்களா?

நாங்கள் ஒட்டுமொத்த சாதி அமைப்பு முறையையே தகர்க்க வேண்டுமென கருதுபவர்கள். அதில் பெரும்பான்மை சாதிக்கு எதிராக சிறுபான்மை சாதியையோ, சிறுபான்மை சாதிக்கு எதிராக பெரும்பான்மை சாதியையோ, நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிற அதே நேரத்தில் அனைத்துச் சாதியை சேர்ந்த உழைப்பாளி மக்கள் அனைவரையும் வர்க்கரீதியாக ஒன்று படுத்துவதற்கும் போராடுகிறோம்.

CPI(M) அல்லது இடதுசாரிகளைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஏதாவது ஒரு இடத்தில்சாதியோடு இணைந்தே இருக்கின்றன என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட இருபதாண்டுகாலமாக அனைத்து சாதிய மாநாடுகளிலேயும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதென்பது நடக்கிறது. எந்த ரூபத்திலேயும் அவர்களை அக்கட்சிகளால் இழுத்துப்பிடிக்க முடியவில்லை என்ற எதார்த்தமான உண்மையையும் நீங்கள் காணவேண்டும். இன்றும் கூட தமிழகத்தில் இருக்கிற பெரும் கட்சிகள் எனச் சொல்லும் கட்சிகள் வேட்பாளர் எந்த சாதி எனக் கேட்கும் நிலையும்; வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும் என்ற நிலையும் இருக்கிறது. ஆக இச்சாதியச் சூழல் இருக்கின்ற கட்சிகளுக்கு பெரும்பான்மையாகப் பயன்படுகிறது. ஆகவே அவர்கள் சாதியத்தோடு சமரசம் செய்து கொள்கிறார்கள். திராவிட கட்சிகள் உட்பட என நான் சொல்கிறேன். பாப்பாபட்டி, கீரிப்பட்டிக்கு CPI, CPM தவிர வேறுயாரும் வரமாட்டேன் என்கிறார்கள். வரவில்லை என்பது மட்டுமல்ல, ஏதோ ஒரு சம்பவத்தை கம்யூனிஸ்டுகள் சரித்திரமாக்கி வருகிறார்கள். இந்தியா, தமிழகம் என்ற வரைபடத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஒரு சிறிய துளி. அச்சிறுதுளியை இவர்கள் பெரிதாக்கி வருகிறார்கள் எனச் சொல்லும் போக்குதான் தமிழக கட்சிகளிடம் இருக்கிறது. அதை நாங்கள் விமர்சிக்கிறோம். கட்டுரைகள் எழுதுகிறோம். தோழர்கள் இது குறித்துப் பேசுகிறார்கள்.

கேள்வி : தமிழகத்தில் உதயமான தலித் இயக்கம்தான் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என முதலில் கோரியது. 1891ல் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும் தலித்துகளுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என அன்றைய வெள்ளையரிடம் கோரிக்கை விடுத்தனர். அதுதான் பின்னர் இரட்டை வாக்குரிமையாக பரிணமித்தது. அக்கோரிக்கை காந்தியால் காவு கொள்ளப்பட்டது சோகம். இன்று இருக்கும் சூழலில், குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டி நிகழ்வும்; மேலவளவுப் படுகொலையும் தமிழக தலித் கட்சிகளை இரட்டை வாக்குரிமை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இன்று தலித் கட்சிகள் கேட்டுக் கொண்டிருக்கும் இரட்டை வாக்குரிமை விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

இரட்டை வாக்குரிமை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவில் இன்றைய பாராளுமன்ற ஜனநாயகம் என்பது அதையெல்லாம் தாண்டி வந்திருக்கிறது. தற்போது உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையே இந்த நோக்கத்தை நிறைவேற்றப் போதுமானது. தலித் பிரச்சனையை தலித்துகள் போராடி பெறவேண்டும் என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. சிறுபான்மை பிரச்சனைகளை சிறுபான்மையினர் தான் தீர்க்க வேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்பதில்லை. இந்திய அரசியல் சட்டம் நூறுகோடி மக்களுக்கான அரசியல் சட்டம். அரசியல் சட்டத்தின் எந்தப் பகுதி அமுலாக்கப்பட்டாலும் அது நூறு கோடி மக்களின் உணர்வோடு இணைக்கப்பட்டது தானே ஒழிய தனித்தனியாக போராடுவது என்பது அவ்வமைப்பில் உள்ள சில ஆதிக்க சக்திதான் பயன்பெரும். தலித்துகளில் சிலபேர் இன்று படித்து முன்னுக்கு வந்திருக்கிறார்கள். பிற்பட்டவர்களில் சிலர் படித்து முன்னுக்கு வந்திருக்கிறார்கள். படித்து முன்னுக்கு வருபவர்கள் இச்சாதியை பயன்படுத்தி தன்னை மேன்மைப் படுத்திக் கொள்கிறார்கள் என்பதே எனது கருத்து.

T.K.Rangarajan கேள்வி : ஈரான் பிரச்சனையில் இடதுசாரிகளின் நிலைப்பாடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அரசு உங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரானுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. உங்களுடைய அடுத்த கட்ட நிலைப்பாடு என்ன?

இந்திய அரசு இன்று தனது குறைந்த பட்ச செயல்திட்டத்தில் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கையை நாங்கள் கடைபிடிப்போம் எனச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இடதுசாரிகள் கடுமையாக இந்திய அரசிடம் வலியுறுத்துவது, உங்களுடைய குறைந்த பட்ச செயல்திட்டம் என்பது எங்களுடைய கட்சியின் செயல் திட்டமல்ல. அரசு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய செயல்திட்டம். அதில் நீங்கள் நிற்க வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இதை வலியுறுத்துவதின் மூலமாக காங்கிரசிற்குள்ளேயும் அதற்கான ஆதரவு இருக்கிறது. முலாயம் சிங் போன்றோரும் அதை ஆதரிக்கின்றனர். இந்த ஆதரவு மேலும் மேலும் பெருகும்போதுதான் அரசின் கொள்கையை மாற்ற முடியும். இடதுசாரிகளுக்கும் ஆளும் ஐக்கிய முன்னணிக்கும் நடக்கும் மோதல் அல்ல. இந்திய அரசுக்கும்; இந்திய மக்கள் எம்மாதிரியான வெளியுறவுக் கொள்கை வேண்டும் என நினைக்கிறார்களோ அதற்கும் இடையே நடக்கும் போராட்டம். இந்திய அரசும்; அதை ஆளும் பெரும் முதலாளிகளும் தங்களுக்குத் தேவையான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றனர். இந்திய நாட்டின் பெரும் முதலாளிகள் அன்னிய நாட்டின் மூலதனத்தோடு கூட்டுசேருகின்றனர். இன்றையச் சூழலில் அமெரிக்காவுடன் இணைந்து நிற்பது இந்திய ஆளும் வர்க்க நலனுக்கு உதவும் என ஆளும் வர்க்கம் நினைக்கிறது. இந்த ஆளும் வர்க்கத்தின் நிலையைத்தான் காங்கிரஸ் கட்சி, தான் ஏற்றுக் கொண்டிருக்கும் நிலைப் பாட்டையும் மீறி வழுவிச் செல்கிறது. ஆக இடதுசாரிகள் செய்வதென்பது, உடனடியாக இவ்வரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதல்ல. மாறாக இந்த விஷயத்தை மக்களுக்கு எடுத்துச் செல்கிறோம். இந்திய மண்ணிற்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வரலாறு நமக்கு இருக்கிறது. இதை மீண்டும் எழுப்புவதன் மூலமாக; மக்களுக்கும் அரசுக்குமாக இக்கொள்கை போராட்டத்தை கொண்டு செல்வதுதான் எங்களின் நிலை.

கேள்வி : உலகமயம் என்ற கோட்பாடு இன்று இலத்தின் அமெரிக்க நாடுகளில் படுதோல்வியடைந்து வருகிறது. அங்கு தோற்கும் கம்பெனிகள் இந்தியாவிற்கு வருகின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

இலத்தின் அமெரிக்க நாடுகளில் உலகமயத்தை எதிர்த்து ஒரு பெரும் போராட்டம் நடந்து கொண்டிருப்பது உண்மைதான். போராட்டத்தின் ஆரம்பம்தான். அப்போராட்டம் வாயிலாக அங்கிருக்கும் பிற்போக்கு அரசுகள் அகற்றப்பட்டு இடதுசாரிகள் ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். அது ஒரு ஆரம்ப கட்டம். அது ஏதோ முடிந்து போய்விட்டது என எண்ணக் கூடாது. இலத்தின் அமெரிக்க நாடுகள் இன்று போராட்டத்தின் மையமாக மாறியிருக்கிறது. இன்று அமெரிக்கா ஈரானிலேயும்; ஈராக்கிலேயும் சிக்கி இருக்கிறது. இலத்தின் அமெரிக்க நாடுகளில் பன்னாட்டு மூலதனம் இன்றுவரை செயலாற்றி வருகிறது. சில கேந்திரமான இடங்களில் நிலங்கள் எடுக்கப் பட்டுள்ளது. சில எண்ணெய் வளங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அங்கே Capital system தான் செயல்படுகிறது. வெனிசுலா உட்பட எந்த நாட்டிலும் சோசலிச system கிடையாது. முதலாளித்துவ அமைப்பிற்குள் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். ஆனால் அது கம்யூனிச நாடல்ல. இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, இதன் வரையறைக்கு உட்பட்டு கம்யூனிஸ்டுகள் சட்டமன்றத்தை நிரப்பி இருக்கின்றார்கள். நாங்கள் விரும்புவதையோ, கட்சியின் செயல் திட்டத்தையோ இஷ்டப்படி அங்கு அமல்படுத்த முடியாது. வெனிசுலாவில் எழுந்துள்ள மாற்றம் என்பது வரவேற்கத் தகுந்துள்ள மாற்றம்தான். அங்கு நடக்கின்ற போராட்டம் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு உத்வேகம் கொடுக்கிறது. அப்போராட்டம் இன்னும் வலுவடைய வேண்டும் என விரும்புகிறோம். அந்த மாற்றம் எப்படி வந்தது? அந்த மக்கள் இடதுசாரிகளை வெற்றியடையவைத்ததில் இருந்தே மாற்றம் ஏற்பட்டது. மக்கள் உலகமயமாக்கத்தால், அமெரிக்காவின் பொருளாதார தாக்கங்களினால், கடுமையான விளைவு ஏற்பட்டதால் மக்கள் போராடினார்கள். நம் நாட்டில் அதுபோன்ற போராட்டம் ஏற்படாதவரை பன்னாட்டு மூலதனத்தின் தாக்கம் ஏற்படத்தான் செய்யும். நிலத்தடி நீரை எடுப்பது போன்ற விஷயங்களால் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். திருநெல்வேலியில் இடதுசாரிகள் மட்டும் இயக்கத்தை எடுத்து நடத்துகின்றனர். சிவகங்கையில் இடதுசாரிகள் போராடுகின்றனர். சில தன்னார்வக் குழுக்கள் சேருகின்றது. ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் தனக்குப் பின்னால் உள்ள மக்களை இதற்கு எதிராக திரட்ட முன்வரவில்லை. தன்னந்தனியாகத்தான் மக்களை இப்போராட்டம் நோக்கி ஈர்க்க வேண்டி இருக்கிறது. எனவே இப்போராட்டம் கடினமானதாகத் தெரிகிறது.

கேள்வி : இலாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதை இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். எந்தெந்த துறையில் நீங்கள் தனியாரை அனுமதிக்கலாம் எனக் கருதுகிறீர்கள்?

இலாபம் தரக்கூடிய தொழில்கள் என்பதல்லாமல் கேந்திரத் தொழில்களை தனியாருக்கு தரக்கூடாது என நாங்கள் கூறுகிறோம். கேந்திரத் தொழில்கள் எனச் சொல்லும்போது நிலக்கரி, சுரங்கம், போக்குவரத்து, எண்ணெய் வளங்கள் இவைகளை தனியாருக்கு விடக்கூடாது எனச் சொல்கிறோம். இவைகளை தனியாருக்கு விடுவதால் இந்திய சுயாதிபத்திய உரிமை பாதிக்கப்படும் என நாங்கள் கருதுகிறோம். இந்தியா சுயகாலில் நிற்கமுடிவதற்கான காரணமே இந்தியாவினுடைய தொழில் துறைதான். இன்று வளரும் நாடுகளில் எத்தனை நாடுகளால் ஏவுகணை விட முடியும், இந்தியாவால் முடியும். இந்த திறமைக்கு காரணமே பொதுத்துறைதான். பொதுத்துறை வருவதற்கு முன்னர் டாட்டா ஆய்வு இன்ஸ்டியுட் தவிர வேறு ஒன்றும் இங்கு இல்லை. பொதுத்துறை நம் நாட்டின் தொழில் நுட்பத்தை, விஞ்ஞானத்தை பெருமளவில் வளர்த்தது. சீனாவைப் பற்றி சிலர் பிரமாதமாக சொல்கிறார்கள். இன்று கூட சீனாவைக் காட்டிலும் இந்தியாவில்தான் உயர்கல்வி சிறப்பாக இருக்கிறது. சீனா இந்தியாவிற்கு கீழேதான் இருக்கிறது. இந்தியாவோ உயரமாக இருக்கிறது. இவ்வுயரம் பாதுகாக்கப் படவேண்டும் என்றால் நீங்கள் உங்கள் கல்வியில் எந்த அணுகுமுறையை மேற்கொள்வதென தீர்மானிக்க வேண்டும். தொழில் நுட்பத்தில் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இருக்கிற பொதுத்துறையை பாதுகாப்பதன் மூலம்தான் நீங்கள் இந்த நாட்டின் உரிமையை, சுயாதிபத்தியத்தை பாதுகாக்க முடியும்.

தனியார் துறை என வருகின்றபோது புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது. இம்முதலீடுகள் அனைத்தும் தனியாரிடம் தான் இருக்கிறது. கடந்த 57 ஆண்டுகாலமாக இந்தியா சோசலிச நாடாக இல்லை. பொதுத்துறையை பயன்படுத்தி தனியார் துறையை வளர்க்க கூடிய ஒரு கலப்பு பொருளாதாரம் இங்கு இருக்கிறது. பொதுத்துறை நம் நாட்டில் தனியார் துறையை வளர்ப்பதற்குத்தான் இருக்கிறது. இந்த கலப்பு பொருளாதாரத்தைதான் காங்கிரஸ்காரர்கள் சோசலிசம் எனச் சொல்லி வருகிறார்கள். இது நேரு சோசலிசமும் கிடையாது. காமராசர் சோசலிசமும் கிடையாது. இது கலப்பு பொருளாதாரம். இந்த கலப்பு பொருளதாரத்தில் கேந்திரத் தொழிலில் பொதுத்துறை என்பது மேலோங்கி இருக்கும். பஞ்சாலை, சர்க்கரை ஆலை, போக்குவரத்து முதலானவற்றில் தனியார்துறை இருக்கலாம். இதனில் தொடர்ந்து தனியார் துறை இருப்பதால் எந்த நஷ்டமும் கிடையாது. புதிய முதலீடுகள் வருவதால் வேலைவாய்ப்பு பெருகும் என்பதுதான் என்னுடைய கருத்தாகும். தனியார் துறையை உடனே அகற்ற முடியாது. அப்படி அகற்ற வேண்டும் என்றும் நாங்கள் சொல்லவில்லை. எதார்த்தம் என்ன என்று கேட்டால் தனியார்துறை இருக்கும். எல்லாவற்றையும் பொதுவுடமையாக்க வேண்டும் என்ற கோசம் இடதுசாரிகளிடம் இருக்கிறது. நோக்கமெல்லாம் கேந்திரத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பது தான். பாதுகாப்புத் துறையை தனியாருக்கு கொடுப்பதால் ஆபத்து வரும்.

கேள்வி : கேந்திர தொழிலை தனியாருக்கு தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள். ஆனால் தற்போதைய அரசு உங்களுடைய எதிர்ப்பையும், ஊழியர்களின் கடுமையான போராட்டத்தையும் மீறி மும்மை, தில்லி விமானத் தளங்களை தனியார் மயமாக்கியிருக்கிறது. இது உங்கள் நிலைப்பாட்டுக்கு ஏற்பட்ட தோல்வி எனக் கருதலாமா?

எங்களுக்கு இழைக்கப்பட்டது எனப் பார்ப்பதே சரியல்ல. நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட தோல்வி. இடதுசாரிகள், நாட்டு மக்களுடைய எதிர்கால நன்மைக்காக, இந்த நாட்டின் சுயாதிபத்திய உரிமைக்காக வைக்கப்படும் கோசம்தான். அந்த சண்டையை இடதுசாரிகள் இன்று தலைமை தாங்கி நடத்துகிறார்கள். சண்டைக்கு ஆதரவாக அமைப்பில் உள்ள தொழிலாளிகள் போராடுகின்றனர். நாங்கள் எதிர்பார்ப்பது நாட்டு மக்கள் இதனை எதிர்த்தால் தான் அரசாங்கம் தெளிவு பெறும். அதைவிட்டு அரசின் நிலைப்பாட்டை எங்களால் தள்ளிப் போடத்தான் முடிந்தது. உலக மயமாக்கம் இன்று உலகம் முழுவதும் அமலாக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் எந்தவிதமான தங்குதடையின்றி அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய அளவுக்கு இடதுசாரிகள் எதிர்ப்போ; சனநாயக சக்திகளின் எதிர்ப்போ இல்லாததால் அங்கு அமலாகிக் கொண்டிருக்கிறது. இலத்தின் அமெரிக்க நாட்டில் ஆரம்பத்தில் அமுலாகி இன்று கடுமையான எதிர்ப்பை பெற்று வருகிறது. வளரும் நாடுகளில் இதனுடைய எதிர்ப்பு குறிப்பாக இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவ்வெதிர்ப்பு இல்லாமல் போயிருந்தால் இன்று வங்கிகள் அனைத்தும் தனியார் மயமாகி இருக்கும். எதிர்ப்பு இல்லை என்றால் விமானத் தளங்கள் அனைத்தும் தனியார் மயமாகி இருக்கும். எதிர்ப்பு இல்லை என்றால் இன்சூரன்ஸ் துறை தனியார் மயமாகி இருக்கும். அதனால் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை; IMFன் கொள்கைகளை தன்ளிப்போடும் சக்தியாக இடதுசாரிகள் இருக்கின்றனர். இது முற்றிலும் தள்ளிப் போடப்பட்டு மாற்றுக் கருத்து வரவேண்டுமானால் அதற்கு மக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. அது இல்லாமல் சாத்தியமே இல்லை. எங்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் சண்டை என்பதில் பாதியளவு உண்மை இருக்கிறது. இடதுசாரிகள் சண்டை போடுவது இந்திய நாட்டின் மக்களுக்காக. மக்கள் அனைவரும் இதை எதிர்த்து போரிட்டால்தான் வெற்றியடைய முடியும்.

கேள்வி : உலக முதலியம் பலவீனமாக இருந்தபோது முதலாளித்துவத்திற்கு எதிராக இடதுசாரிகள் உக்கிரமாக போராடினர். இன்று உலக முதலாளியம் ஏகாதிபத்திய முதலாளியமாக; நுகர்வு முதலாளியமாக மாறிவிட்ட சூழலில் தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டங்களை கோசங்களாகவும் உண்ணாவிரதமாகவும் சுருக்கிக் கொண்டுவிட்டன. இது குறித்த உங்கள் பார்வை என்ன?

தொழிற்சங்கங்கள் இன்று ஒரு புதிய சூழலில் சிக்கியிருக்கின்றன. உலகம் முழுவதும் இச்சிக்கல்கள் இருக்கின்றன. கடந்த இருபதாண்டு காலமாக தொழிற்சங்கங்கள் இச்சூழலில் சிக்கி இருக்கின்றன. விஞ்ஞான தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றம்தான் இதற்கு அடிப்படையான காரணமாக இருக்கின்றது. விஞ்ஞானத் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டமாற்றம் என்பது உலகத்தில் இது முதன்முறையல்ல. ஜேம்ஸ்வாட் நீராவி எந்திரத்தை கண்டு பிடித்ததில் இருந்து இன்று வந்திருக்கின்ற மாற்றம் ஐந்தாவது மாற்றம். ஒவ்வொரு மாற்றத்தின் போதும் பாதிக்கப்படக் கூடிய மக்கள் தொழிற்சங்கத்தில் இணைந்து புதிய சூழலுக்கு தகுந்தாற்போன்று தங்களை மாற்றி கொண்டுதான் போராடுகின்றனர். இன்று நீங்கள் சொல்லக்கூடிய உலகமயமாக்கல் சூழலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தங்களை தயார்படுத்த வேண்டி இருக்கிறது. உதாரணமாக உற்பத்தியை பெருக்க கூடிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மதுரை கோட்சில் 5,000 பேர் வேலை பார்த்த இடத்தில் இன்று 800 பேர் வேலை பார்க்கின்றனர். இந்த 800 பேர் 10,000 பேர் கொடுக்கும் உற்பத்தியை கொடுக்கின்றனர் என்பதை மறந்திட வேண்டாம். விஞ்ஞான தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் வரும்போது உற்பத்தி பெருகுகிறது. தொழிலாளர் எண்ணிக்கை குறைகிறது. Bio-technology என்ற ஒரு புதிய அம்சம் உலகத்தை இன்று ஆட்டிப் படைக்கிறது. இன்று Service sector தான் அதிகமாகிறது. அமைப்பாக திரட்டப்படாத தொழிலாளர்களின் பணி அதிகமாகிறது. தொழிற்சங்கம் புது ஏரியாவில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரு சர்க்கரை ஆலையை உருவாக்கி இருக்கிறார்கள். 60பேரை வைத்துக் கொண்டு 3.,000 பேரின் வேலையை செய்கின்றனர். 60 பேரும் டிகிரி முடித்தவர்கள். தொழிற்சங்கம் Highly Technological Knowledge உள்ள ஒருவரை approach பண்ணுவதற்கு தன்னை equip பண்ண வேண்டியிருக்கிறது. தொழிற்சங்கம் பலவீனம் அடையவில்லை. தொழிற்சங்கம் அதன் Learning processல் இருக்கிறது. தொழிற்சங்கம் தன்னுடைய செயல்பாட்டை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. கற்றுக் கொள்ளக் கூடியதில் நாங்கள் தலைமை தாங்கக் கூடிய C.I.T.U இருப்பதனால்தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம். தேயவில்லை. திரட்டப்பட்ட தொழில்களில் எங்களுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தொழில் நலிவடையும் போது தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைகிறது. அதனால் தொழிற் சங்கங்களின் எண்ணிக்கையும் குறைகிறது. திரட்டப்படாத தொழிலாளர்கள் மத்தியில் C.I.T.U வேகமாக வளர்ந்து வருகிறது. C.I.T.U போன்ற தொழிற் சங்கங்கள் Serviceல் கவனம் செலுத்துகிறது. Hi-tech industryயில் கவனம் செலுத்த நாங்கள் எங்களையே தயார் படுத்தி வருகிறோம்.

கேள்வி : கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரி இயக்கம் வளர்ந்து வந்த தொழிலாளர்களையும், தொழிற்சாலை களையும் கவனத்தில் கொண்டிருந்தது. அதைப் போன்று விவசாய தொழிலாளர்களிடம் இருந்து அன்னியப்பட்டுப் போன ஒரு போக்கும் நிலவியது. இந்த அன்னியப்படுதலின் காரணமாக இவ்விவசாயிகள் தங்களுக்கான பிரதிநிதித்துவம் நோக்கி நகர்ந்து சென்றனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கடந்த ஐம்பதாண்டு காலமாக தொழிற்சங்க இயக்கமும்; இடதுசாரிகளும் மூலதனம் யாரைச் சுரண்டுகிறதோ அவர்களை கவனத்தில் கொண்டது. அது மிகவும் முக்கியம். இப்போது Hi-tech industry பக்கம் தொழிற்சங்கம் போகிறது என்றால், மூலதனத்தில் முரண்படாமல் வெறும் உதிரித் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த நாட்டில் புரட்சி வருவது என்பது வளர்ச்சியல்ல. இரயில்வேயில் எவ்வளவு தூரம் வளர்வது, Hi-tech எவ்வளவு தூரம் வளர்கிறது என்பதை பொறுத்துதான் வளர்ச்சி என்பது சாத்தியமாகிறது. இதன் கூடவே கிராமப் புறங்களிலும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அப்படி வளரவில்லை. அதற்காக புறக்கணித்தார்கள் என்று சொல்ல முடியாது. இப்பவும் தஞ்சாவூரில் கீழத் தஞ்சையிலும், மேலத் தஞ்சையிலும் இடதுசாரி இயக்கம் வலுவாக இருக்கிறது. கூடுதலாக பரவலாக கவனம் செலுத்தப்படவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com