Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006

பெரியதம்பி மரைக்காயர்
-ஆ. சிவசுப்பிரமணியன்

17-ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்கள் வலிமை குன்றிய பின்னர், இவர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினர். இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில், தொண்டி, இரமேஸ்வரம் எனத் துறைமுகங்கள் இருந்தமையால், சேதுபதிகளின் ஆட்சிப் பரப்பில் கடல் வாணிபம் தழைத்து வளர்ந்தது. முத்துக்குளித்தலும், சங்கு குளித்தலும் இங்கு நிகழ்ந்தன. அத்துடன், முத்தும் சங்கும் முக்கிய ஏற்றுமதிப் பொருளாகவும் விளங்கின. இதன் அடிப்படையில் வாணிபத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், குறிப்பிடத்தக்க அளவில் இராமநாதபுரம் பகுதியில் குடியேறினர். இவ்வாறு குடியேறிய இஸ்லாமிய வணிகர்களில் பெரியதம்பி மரைக்காயர் சிறப்புமிக்கவராய் விளங்கினார். தனக்கும், சேதுபதி மன்னருக்கும் உரிமையான மரக்கலங்கள் வாயிலாக, வங்காளத்திற்கு சங்குகளை அனுப்பும் வணிகத்தில் இவர் ஈடுபட்டு வந்தார். அத்துடன், இக்கால கட்டத்தில் முக்கியத் துறைமுகங்களாக விளங்கிய நாகப்பட்டினம், திருமுல்லைவாசல், பரங்கிப்பேட்டை ஆகிய உள்நாட்டுத் துறைமுகங்களுடன், மலாக்கா, அச்சின் ஆகிய வெளிநாட்டுத் துறைமுகங்களுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்.

16-ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான முத்துக்குளித்துறைப் பகுதிகளில் போர்ச்சுக்கீசியர்கள் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருந்தனர். கி.பி.1658-இல் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடியை டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். நெசவாளர்களை உள்நாட்டிலிருந்து அழைத்து வந்து தூத்துக்குடியில் குடியமர்த்தி, அவர்கள் நெய்த, கச்சைத் துணிகளை இலங்கைக்கும் வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, பழவேற்காடு ஆகிய கடற்கரை ஊர்களிலும், மதுரையிலும் பண்டகசாலைகளை நிறுவினர்.

இவ்வாறு டச்சுக்காரர்கள், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் காலூன்றிய பின்னர், பெரிய தம்பி மரைக்காயர் போன்ற இந்திய வணிகர்களின் வாணிப நலன் பாதிப்படையத் தொடங்கியது. பெரிய தம்பி மரைக்காயர், இலங்கைக்கு துணி ஏற்றுமதி செய்து வந்தார். இலங்கையின் மேற்குப் பகுதித் துறைமுகங்களுக்குச் சென்ற அவரது மரக்கலங்கள் துணிகளை இறக்கிவிட்டு ‘பாக்கு’ ஏற்றி வந்தன. இலங்கையின் கல்பட்டிப் பகுதியில் நடந்து வந்த பாக்கு ஏற்றுமதி வாணிபமானது கி.பி. 1684- வாக்கில் பெரியதம்பி மரைக்காயர் மற்றும் இரண்டு இந்தியர் வசம் இருந்தது. தன் நாட்டில் விளையும் பாக்கு அனைத்தையும் பெரியதம்பி மரைக்காயரிடம் விற்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருந்தது. இதை, டச்சுக்காரர்கள் விரும்பவில்லை. கேரளத்தில் கொள்முதல் செய்யப்படும் மிளகு, முத்துக் குளித்துறையின் கடற்கரைப் பகுதியில் எடுக்கப்படும் சங்கு, முத்து, உற்பத்தி செய்யப்படும் துணி ஆகியன தொடர்பான வாணிபத்தில் ஏகபோக உரிமையுடன் இருக்க அவர்கள் விரும்பினர். டச்சுக்காரர்களின் இத்தகைய ஏகபோக வேட்கைக்கு எதிராகப் பெரியதம்பி மரைக்காயர் செயல்பட்டார். மன்னர் பகுதிக்கும், இலங்கையின் புத்தளம் பகுதிக்கும் இடையிலான கடற்கரைப் பகுதி ஆழமற்றது. எனவே டச்சுக்காரர்களின் பார்வையிலிருந்து தப்பிக்கும் வழிமுறையாக, சிறு படகுகளின் வாயிலாகத் தமது கடல் வாணிபத்தை, பெரிய தம்பி மரைக்காயர் நடத்தினார். அத்துடன் டச்சுக்காரர்களின் ஏகபோகத்தை விரும்பாத, இலங்கையின் கண்டிப் பகுதி வாணிகர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.

வங்கக் கடலில் ஆதிக்கம் செலுத்திய டச்சு நாட்டினர் இப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு அனுமதிச் சீட்டு முறையை அறிமுகப்படுத்தினர். அவர்களது அனுமதிச் சீட்டுப் பெற்ற மரக்கலங்கள் மட்டுமே, வலிமை வாய்ந்த டச்சுக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. இவ்வாறு அனுமதிச் சீட்டு வழங்கும்போது தம்முடைய நலனைப் பாதுகாக்கும் வகையில், மரக்கலங்கள் சுமந்துசெல்லும் பொருள்கள், அவற்றின் அளவு ஆகியன குறித்து, சில கட்டுப்பாடுகளை டச்சுக்காரர்கள் விதித்தனர். இதை எதிர்கொள்ளும் வகையில், ஆங்கில மற்றும் பிரெஞ்சு நாடுகளின் அனுமதிச் சீட்டுக்களை பெரியதம்பி மரைக்காயர் பயன்படுத்தத் தொடங்கினார். இவ்விரு நாடுகளையும் தமது ஆட்சிப் பகுதியில் வாணிப நிலையங்களை நிறுவும்படி சேதுபதி அழைப்பு விடுத்தார். இதன் வாயிலாக டச்சுக்காரர்களின் வாணிப ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பது அவரது நோக்கம். ஆனால் அவரது நோக்கம் வெற்றி பெறவில்லை. ஆயினும் பாக்கு, சங்கு, முத்து, துணி ஆகியவற்றை சேதுபதியின் ஆட்சிப் பகுதியில் கொள்முதல் செய்வதில் இவ்விரு நாடுகளும் ஆர்வம் காட்டின.

மதுரை நாயக்கர்கள் வலுக்குன்றியதைப் பயன்படுத்தி கி..பி.1682-இல் இராமேஸ்வரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான கடற்கரைப் பகுதியில், வரிவாங்கும் அதிகாரியாக, பெரியதம்பி மரைக்காயரை சேதுபதி மன்னர் நியமித்தார். இக்கடற்கரைப் பகுதியின் முக்கியக் குடிகளான பரதவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே ஏற்கனவே பகை இருந்தமையால் இஸ்லாமிய அதிகாரிகளைப் பரதவர் எதிர்த்தனர். டச்சுக்காரர்கள் பரதவர்களின் பக்கம் நின்றனர். அத்துடன் திம்மராசா என்பவரை சேதுபதியிடம் தூதனுப்பினார். இதையறிந்த பெரியதம்பி மரைக்காயர் திம்மராசா வீட்டினைத் தாக்கிக் கொள்ளையடிக்கச் செய்தார். எனினும் டச்சுக்காரர்கள் நிர்பந்தம் காரணமாக பரதவர் வாழும் பகுதிகளிலிருந்து இஸ்லாமிய அதிகாரிகளை, சேதுபதி திருப்பியழைத்துக் கொண்டார்.

அத்துடன் டச்சுக்காரர்கள் 1685-இல் சேதுபதியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பெரியதம்பி மரைக்காயர், அவரது இரு மகன்கள், அவரது சகோதரர்கள், இவர்களுடன் தொடர்புடைய இஸ்லாமிய அதிகாரிகள் ஆகியோர் கோடிக்கரை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதியில் அதிகாரம் செலுத்துவதலிருந்து நீக்கப்பட்டனர். மீண்டும் 1609-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்திலும் இந்நிபந்தனை இடம்பெற்றுள்ளதால் இது நிறைவேற்றப்படவில்லை என்று கருத இடமுள்ளது. 1697-இல் தூத்துக்குடியில் நிகழ்ந்த முத்துக்குளிப்பின் போது சேதுபதியின் பிரதிநிதியாய், பெரியதம்பி மரைக்காயர் செயல்பட்டு, டச்சுக்காரர்கள் ஆதாயத்தை மட்டுப்படுத்தினார். இதனால் ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் தூத்துக்குடி, புத்தளம், மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள பெரியதம்பி மரைக்காயரின் மரக்கலங்களைக் கைப்பற்றினர். ஆனால் பாட்வியாவில் இருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் அவற்றை விடுவிக்கும்படி உத்தரவிட்டனர். இவ்வாறு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி வாணிப ஏகபோகத்தை எதிர்ப்பவராக பெரியதம்பி மரைக்காயர் விளங்கியுள்ளார். பேராசிரியர் S. அரசரத்தினம் எழுதிய ‘A Note on periathamby Marikkar a 17th century Commercial Magnate என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே பெரியதம்பி மரைக்காயர் தொடர்பான இச்செய்திகள் எழுதப்பட்டுள்ளன.

* * * *

இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியதம்பி மரைக்காயர் குறித்த இந்தியத் தொல்பொருள் துறையின் ஆண்டறிக்கையில் (A.R.E. 1993-94:5) அவரைக் குறித்த தவறான பதிவு இடம் பெற்றுள்ளது.

பெரியதம்பி மரைக்காயரின் மகன் சேகு இப்ராஹிம் மரைக்காயர் என்பவர் கி.பி.1687இல் இறந்து போனார். இவரது உடல் இராமநாதபுரம் மாவட்டம், ‘வேதாளை’ ஊரிலுள்ள ஜும்மா பள்ளிவாசலை அடுத்த மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரை அடக்கம் செய்தஇடத்தில் கல்வெட்டு ஒன்றுள்ளது. அக்கல்வெட்டில் அவரது தந்தை பெரிய தம்பி மரைக்காயரின் சிறப்பு,

“. . . நசுருக்கள் ஏழு
கரை துறைக் கோவில்
சுட்டு இடிச்சுக் கீர்த்தியும்
மிக விருதும் பெற்ற பெரிய தம்பி”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அக்காலத்திய சமயச் சகிப்பின்மையை வெளிப்படுத்துவதாகக் கூறி, “ஏழு கரை நாட்டிலுள்ள ஏராளமானக் கோவில்களை அழித்தும், எரித்தும் இடித்ததாகப் புகழ்கிறது” என்று இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் குறிப்பெழுதியுள்ளனர். ஆனால் இக்குறிப்பு முற்றிலும் தவறானது. இக்கல்வெட்டை “வேதாளைக் கூறைப் பள்ளிக் கல்வெட்டு” என்ற தலைப்பில் “ஆவணம்” நான்காவது இதழில் (1994 : 50) ஆய்வாளர் கமால், பதிப்பித்துள்ளார். இக்கல்வெட்டில் இடம்பெறும் “நசுருக்கள்” என்பதற்குக் ‘கிறித்தவர்கள்’ என்று அவர் பொருள் கொண்டுள்ளார். இதுவே சரியான பொருளாகும். தோமையர் (தாமஸ்) காலக் கிறித்தவர்களை, “நசுரேயனிஸ்’ என்றே அழைத்ததாகக் குரோனின் (Cronin) என்பவர் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1554இல் கோவாவில் அச்சிடப்பட்ட “கார்த்தியா” என்ற நூல், கத்தோலிக்கச் சமயத்தின் அடிப்படை மந்திரங்களையும், கத்தோலிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் சமய உண்மைகளையும் கூறுவதாகும். இந்நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள கேள்வி பதில் வருமாறு:

நீ நசரானியோ?
தம்பிரானடே நன்னியால் (நன்றியால்): ஆம்
நசரானிக்குள்ள அடையாளம் எது?

எனவே நசுருக்கள் என்பது கிறிஸ்தவர்களை, குறிப்பாகக் கத்தோலிக்கர்களைக் குறிப்பது என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகும். இயேசு கிறிஸ்து, நாசரேத் என்ற ஊரில் பிறந்தமையால் நசரேன் என்றும், அவரைப் பின்பற்றியவர்கள் நசரேனியர்கள் என்றும் குறிப்பிடப்பட்டனர். திருக்குர்ஆனிலும் கிறிஸ்தவர்கள் நஸ்ரானிகள் என்றே குறிப்பிடப் படுகின்றனர். நசரேனியர் என்ற சொல்லே நசுருக்கள் என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இராமேஸ்வரத்திற்கு தெற்கில் உள்ள வேம்பாறு, வைப்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டிணம், ஆலந்தலை, மணப்பாடு ஆகிய ஏழு கடற்கரை ஊர்களும் “ஏழு கடல் துறை” என்று அழைக்கப்பட்டன. இவ்வூரில் வாழ்ந்த பரதவர்கள் அனைவரும் கத்தோலிக்கர்கள், போர்ச்சுக்கீசிரியரின் பாதுகாப்பைப் பெற்றவர்கள். சேதுபதி மன்னர் இப்பகுதிகளில் வரிவாங்கும் உரிமையை, பெரியதம்பி மரைக்காயருக்கு அளித்த போது, பரதவர்கள் எதிர்த்ததை மேலே குறிப்பிட்டோம். போர்ச்சுக்கீசியப் பாதிரியார்களின் பாதுகாப்பில் இருந்த கத்தோலிக்கப் பரதவர்களுடன் ஏற்பட்டப் பகையுணர்வின் வெளிப்பாடாகவே, கத்தோலிக்கத் தேவாலயங்களை, பெரியதம்பி மரைக்காயர் அழித்துள்ளார் என்பது தெளிவு. இது அரசியல் பகையுணர்வின் அடிப்படையில் நிகழ்ந்ததே அன்றி சமயப் பகையுணர்வில் நிகழ்ந்ததல்ல.

‘இஸ்லாமியர்கள் இந்துக் கோவிலை இடித்தவர்கள்’, என்ற கருத்து ஆதிக்கம் செலுத்தியதின் விளைவாக, மேற்கூறிய கல்வெட்டு ஆண்டறிக்கையைத் தயாரித்தவர் தவறான விளக்கத்தைத் தந்துள்ளார். நசுருக்கள் யார்? ஏழுகடல் துறை என்பது எது? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை.

*கட்டுரையாளர் நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய அறிவுத் துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு கட்டுரைகளும், நூல்களும் எழுதிவருபவர்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com