ஏவுகணைகள் - பெயர் சூட்டுதல் குளருபடிகள்
மத அடையாளம் இயல்பாகிப்போன பாதுகாப்புத்துறை
- ராஜசேகரன்
இந்திய இராணுவத்தில் இருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினர் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுப்பை ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்டது தொடர்பாக விவாதங்கள் காரசாரமாக எழுந்திருக்கிறது. இதுபோன்ற கணக்கெடுப்புகள் இராணுவம் போன்ற உயர் பாதுகாப்பு துறைகளின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிராக அமையும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் இராணுவம் தொடங்கி நம் அரசின் எல்லா இலாகாக்களும் தனது செயல்பாட்டை மதச்சார்பற்ற தன்மையில் தான் வைத்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
தொடர்ந்து இந்தியாவை ஆட்சி செய்து வரும் அரசியல் கட்சிகள் எல்லாக் கால கட்டத்திலும் மதம் சார்ந்த அடையாளங்களை குறிப்பாக-இந்து மதம் சார்ந்த அடையாளங்களை தூக்கிப் பிடிப்பவைகளாகவே இருந்து வந்திருக்கின்றன. இந்தியா ‘மதச்சார்பற்ற நாடு’ என அறிவித்துக் கொண்டாலும் அரசின் ஒவ்வொரு செயல்களும் இந்த தன்மையிலேயே அமைந்திருக்கின்றன.
அரசு அலுவலகங்களில் இந்து மத நம்பிக்கை சார்ந்த படங்கள் தேசத் தலைவர்களின் படங்களோடு இடையிடையே காட்சி தருகின்றன. அரசு விழாக்களில் கலாச்சார அடையாளங்கள் என்ற பெயரில் குத்துவிளக்கு ஏற்றுதல் தொடங்கி பல விஷயங்கள் மத அடையாளத்தோடு ஒட்டி அமைவதைப் பார்க்கிறோம். அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வளாகத்தின் ஒரு மூலையில் கோயிலை அமைத்துக் கொள்வதும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, துர்கா பூஜை போன்ற நாட்களில் அதற்காக சிறப்பு வழிபாடுகளை அரசு ஊழியர்களே முன்னின்று மேற்கொள்வதும் இங்கு சாதாரண நிகழ்வாகிவிட்டன. இந்த சாதாரண நிகழ்வுக்குள் செயல்படும் மதம் சார்ந்த தன்மைகளை நம்முடைய பொது மனங்கள் இதுவரையிலும் விமர்சனத்திற்கு உட்படுத்தியதில்லை.
அரசுத் திட்டங்களுக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழாக்களில் பூமி பூஜை மேற்கொள்வதும், அரசு ஊழியர்களுக்கு புதிதாக வாகனங்கள் வழங்கப்படும் போது எலுமிச்சம் பழங்களை சொருகி வைப்பதும், செந்தூரத் திலகங்களை கண்ணாடியில் இடுவதும் இந்து மத நம்பிக்கை சார்ந்த மனோபாவம் எங்கெல்லாம் ஊடுருவி இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இதையெல்லாம் மிஞ்சிவிடும் வகையில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி (ஐ.ஜி) டி.கே.பாண்டா தன்னை கிருஷ்ண பரமாத்மாவின் காதலி ‘ராதையாக’ உருவகப் படுத்திக் கொண்டு அலுவலகத்திற்கு வருவதும், உத்திரப்பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளர் ஞானேந்திர பிரதாப்சிங் ‘நானே கடவுள்; சிவபெருமானுடன் தினமும் தொலைபேசியில் பேசுகிறேன்’ என்று கூறி மக்களை ஏமாற்றி அலுவலத்திற்கு வந்து ஊழியர்களைக் கண்டிப்பதும், மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் வணிகவரித்துறை எழுத்தராகப் பணிபுரியும் கிருஷ்ணா என்ற பெண் ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம்அக்ரம் தான் என் கணவர்; தேவலோக தூதர் என் கனவில் தோன்றி இதைத் தெரிவித்தார். எனவே அவரை எப்படியாவது மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வேன்’ என்று கூறியும் அரசு ஊழியர்கள் எந்த அளவிற்கு தீவிர இந்து சமயம் சார்ந்த மனோபாவங்களோடு இயங்கி வருகின்றனர் என்பதை அடையாளப் படுத்தியுள்ளனர்.
இவர்களின் எண்ணங்களை கூர்தீட்டிவிடும் முகமாகத்தான் கடந்த கால பா.ஜ.க. அரசும் வரலாற்றுப் பாடங்களில் திருத்தம் செய்வதாகக் கூறி, வரலாற்றையே மாற்றி எழுதியது. புராணம் சார்ந்த சொற்களை புழக்கத்தில் விட்டதில் பா.ஜ.க.விற்கு பெரும் பங்கு உண்டு. அதே போன்று பொக்ரானில் நிகழ்த்தப்பட்ட அணுஆயுதச் சோதனைக்கு ‘புத்தர் சிரித்தார்’ என்று நம் அரசுகள் பெயரிட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
‘சரஸ்வதி வந்தனத்தை’ தூக்கிப் பிடிப்பதும் சமஸ்கிருதத்தை வேத மெழியென்று கூறி ‘தொன்மை வாய்ந்த மொழியென’ நிலை நிறுத்தியதும், பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் வானிலை இயலை சோதிடமாக மாற்றி அறிவியல் பாடமாகப் புனைந்ததும் இங்கு தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு பட்ட தேசிய இனங்களின் அடையாளங்களை மறைத்து ஒற்றை அடையாளமாக (இந்துத்துவ அடையாளமாக) அகண்டபாரதக் கனவோடு நிலைநிறுத்த இங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்திய பாதுகாப்புத் துறை உபகரணங்களான ஏவுகணை, செயற்கை கோள், போர்க்கருவிகள், ராணுவத் தளவாடங்கள் போன்றவற்றிற்கு பெயரிடுவதிலும் இத்தகைய அணுகுமுறை மேற்கொள்ளப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய பாதுகாப்புத் துறையில் கூட இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது எனும் போது நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உற்பத்தியில் உலகளவில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது. அவ்வப்போது ‘ஏ.எஸ்.எல்.வி’, ‘பி.எஸ்.எல்.வி’, ‘ஜி.எஸ்.எல்.வி’ என செயற்கைக் கோள்களை அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும் ஏவுகணைகளின் பெயர் சூட்டுதலில் ஒரு வித மதச்சார்புள்ள தன்மை இங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.
இந்திய அரசாங்கத்தால் இதுவரை ஏவப்பட்டுள்ள அக்னி (அரசிடம் அனுமதி பெறுவதற்கு முன்னர் இதற்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர் ‘ரெக்ஸ்’ என்பது), பிருத்வி (பூமி), திரிசூல் (சிவபெருமானின் திரிசூலம்), தரையிலிருந்து வானில் பாய்வதற்கு ஆகாஷ் (வானம்) , பீரங்கி தகர்ப்பு ஏவுகணை திட்டத்திற்கு நாக் (நாகப்பாம்பு), பிரம்மாஸ் (படைத்தலை தொழிலாக கொண்ட கடவுள்) ‘அஸ்திரம்’, ‘தேஜாஸ்’ உள்ளிட்ட ஏவுகணைகள் அனைத்தும் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள பெயர்களே. மகாபாரதத்தில் அர்ஜுனனை நோக்கி ஏவப்பட்டதாகச் சொல்லப்படும் ‘நாகாஸ்டம்’ ஏவுகணையின் சுருக்கம் தான் ‘நாக்’ எனும் ஏவுகணை. அதே போன்று இந்திய தரைப்படையால் பயன்படுத்தப்படும் ‘மல்டி பேரல் ராக்கெட் சிஸ்டமான’ பினாகா என்பது ராமர் உடைத்த வில்லின் பெயராகும்.
தரைப்படைப் போரில் பயன்படுத்தப்படும் முக்கிய டாங்கியான ‘அர்ஜுன்’ டாங்கும் இதில் அடங்கும். இது தவிர விமானப்படையின் முக்கிய விமானமான ‘வஜ்ரா’ என்பது இந்திரனின் ஆயுதம் ஆகும். இந்தியா பயன்படுத்தக் கூடிய, விமானம் தாங்கி போர்க் கப்பல்களான ஐ.என்.எஸ்.வீரட்டும், நீர்மூழ்கிக் கப்பல்களான ஐ.என்.எஸ். சாம்புஸ்ம், ஐ.என்.எஸ். சக்ராவும் (சக்கர ஆயுதம்) ஐ.என்.எஸ்.சல்கியும், எஸ்.எல்.வி. 3 ரோஹினியும் மகாபாரதத்தில் இடம்பெறும் பெயர்கள் தான்.
இப்படி பெயர் வைத்தலின் உச்சபட்சமாக இந்திய அரசாங்கத்தால் பிரம்மாஸ் (படைத்தலை தொழிலாகக் கொண்ட கடவுள்) எனும் ஏவுகணை ஏவப்பட்டது. முகமது கோரியை வென்ற இந்து அரசரான பிருத்விராஜ் மன்னனின் அடையாளமாகத்தான் இங்கு ‘பிருத்வி ஏவுகணை’ எனும் பெயர் வைக்கப்பட்டது. இதை எதிர்க்கும் விதமாக ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய கோரிவம்சத்தின் முதல் இஸ்லாமிய மன்னனான முகம்மது கோரியின் பெயரை பாகிஸ்தான் அரசு தனது நாட்டு ஏவுகணைக்கு பெயர் சூட்டியது. இதன் தொடர்ச்சி தான் எப்16 ரக போர் விமானத்தை அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் பெற முயற்சித்த போது, அதைவிட கூடுதலான சக்தி கொண்ட எப்18 ரக போர் விமானத்தை தங்களுக்கு தரவேண்டுமென அமெரிக்காவிடம் இந்தியா கெஞ்சிக் கேட்டதும். ஆக இப்படியான ஆயுதப் போட்டியை மகாபாரத, இராமாயணப் பெயர்களால் துவங்கி வைத்த பெருமை கடந்த கால காங்கிரஸ், பி.ஜே.பி. அரசுகளைத்தான் சாரும்.
இந்த பெயர் சூட்டல்கள் எல்லாம் ஏதோ தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாக நாம் புறந்தள்ளி விடமுடியாது. நீண்டகால ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்கள் இவை. அதை பி.ஜே.பி. அரசாங்கம் செய்து முடித்தது. பி.ஜே.பி.யின் அகண்ட பாரத இந்துத்துவ தோற்றம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ‘இந்தியாவின் ஏவுகணைத் தொழில் நுட்பத் தந்தை’ என்று புகழப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது ஏவுகணைகளுக்கு பெயர் சூட்டுதல்களில் இந்திய விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமானது.
ஏவுகணைத்துறையின் அதிகார மையமாக பதவி வகித்தவர்கள்
டாக்டர். டி.எஸ். கோத்தாரி - 1948 - 1961
டாக்டர்.எஸ். பகவந்தம் - 1961 - 1969
டாக்டர்.என்.டி. நாக்சௌத்ரி - 1970 - 1974
டாக்டர். எம்.ஜி.கே.மேனன் - 1974 - 1978
டாக்டர். ராஜா ராமண்ணா - 1978 - 1982
டாக்டர்.வி.எஸ். அருணாச்சலம் - 1982 - 1992
டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 1992 - 1999
டாக்டர். வி.கே. ஆத்ரே - 1999 - 2004
எம். நடராஜன் - 2004 முதல் தற்போதுவரை
இந்திய ஏவுகணைகள் தாக்கும் தூரம்
ஆகாஷ் 25 கி.மீ. வரை
திரிசூல் 500மீ - 9 கி.மீ.வரை
பிருத்வி
1000 கிலோ எடையைத் தாங்கி 150 கி.மீ செல்லும்.
500 கிலோ எடையைத் தாங்கி 250 கி.மீ.செல்லும்.
நாக் 4. கி.மீ.வரை
அக்னி 1000 கி.மீ. - 2500 கி.மீ.வரை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|