சிரிப்பு தரும் சிந்தனைகள்
சும்மா தின்றால் சுவை தெரியாது
- நீலம் மதுமயன்
உண்ணும் உணவு உடம்போடு ஒன்று சேர்ந்து தன்மயமாக வேண்டுமானால் சுவைத்துத் தின்ன வேண்டும். சும்மா தின்றால் சுவை தெரியாது. சும்மா வந்தேன், சும்மா போறேன், சும்மா படிக்கிறேன், சும்மா அதுவரை, சும்மா இதுவரை - என்றெல்லாம் சும்மாச் சேர்ப்பவர்களை ஒரு நாளும் வரலாறு சேர்த்துக் கொள்ளாது.
உண்ணும் போது டி.வி. பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் கவனியுங்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், “என்ன சாப்பிட்டீர்கள்?” என்று கேட்டுப் பாருங்கள். முழிப்பார்கள். ஏன்? எண்ணத்தை டி.வி.யில் வைத்து கிண்ணத்தை மறப்பவர்கள். ஆகவேதான் அவர்கள் சும்மா தின்று சுவை தெரியாமல் போனார்கள்.
இதைப் போலத்தான் ஒன்றில் ஈடுபாடில்லாமல் செய்வதும். எதைச் செய்கிறோமோ அதில் ஈடுபாட்டுடன் இருந்தால் மட்டுமே அச்செயல் முழுமை பெறும். இல்லை என்றால் செயல் முடிவைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம்.
சொல்லும் சொல் எல்லாம் அர்த்தம் உடையன. அந்த அர்த்தங்கள் புரிய வேண்டுமானால் சும்மா கேட்காமல் சுவையோடு கேட்க வேண்டும். சுவையுணர்வின்றி கேட்கப்படும் எதிலும் சுவையிருக்காது. மாறாக அது சுமையாகவே இருக்கும்.
தீபாவளி நேரம் கடைகளில் பொருட்களை பயங்கரத் தள்ளுபடியில் விற்பார்கள். பயங்கரத் தள்ளுபடி விற்பனை என்றே விளம்பரம் செய்வார்கள். எப்போதாவது இது பற்றிச் சிந்தித்திருக்கின்றோமா என்றால் இல்லை என்றே பதில் வரும். கொஞ்சம் அந்த விளம்பர வார்த்தையைச் சுவைத்துப் பாருங்கள். பயங்கரத் தள்ளுபடி உண்மைதான் வாங்கும் நமக்குப் பயங்கரம் - விற்கும் அவர்களுக்கு தள்ளுபடி.
இன்னும் சிலரோ ஒவ்வொரு சொல்லையும் சுவைப்பார்கள். அப்படிச் சுவைப்பவர்களிடத்தில் இருந்துதான் நகைச்சுவை புறப்படும். எனவேதான் இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவரிடம் அகப்படுவர்.
வீட்டில் கணவன் இல்லை. அவர் எங்கோ வெளியே சென்று விட்டார். அந்த நேரம் அவரின் நண்பன் என்று சொல்லி ஒருவர் வந்து விட்டுப் போனார். இதை, கணவன் வந்ததும் மனைவி சொல்கிறாள்.
“ஏங்க நீங்க வெளியே போயிருந்த நேரம் உங்களத் தேடி ஒருத்தர் வந்திருந்தார்”.
“யார் அது?”
“உங்க நண்பராம்”
“நண்பரா? எப்படி இருந்தார்?”
“தாடி வச்சிருந்தார். உங்க கூட நாலாவது வகுப்பு படிச்சாராம். .” -உடனே அவள் கணவன் இடைமறித்து,
“எங்கூட, நாலாவது வகுப்பில தாடி வச்சிட்டு எவனும் படிக்கலியே. .” - என்றானே பார்க்கலாம். சொன்னவர் மட்டும் சிரிக்கவில்லை. சுவையோடு கேட்டதால் அவரது மனைவியும் வாய்விட்டுச் சிரித்தாள்.
ஒரு இலக்கிய விழா அமைப்பாளர் என்னிடம் வந்து, “நீங்கள் இந்த ஆண்டு எங்கள் விழாவில் பேச வேண்டும்”- என்றார். நானும் “சரி வருகின்றேன்”- என்றேன். உடனே அவர், “அதிகமா பணம் கேட்கக் கூடாது”-என்றார். நானும் பெருந்தன்மையுடன், “அதனால் என்ன? எவ்வளவு முடியுமோ குடுங்க அது போதும்”- என்றேன்.
அதற்கு அவர், “கடந்த ஆண்டு வந்தவருக்கு 500 ரூபாய் கொடுத்தோம். நீங்கள் அதையே வாங்கி கொள்ள வேண்டும்” - என்றார். எனக்கு சிரிப்பாக வந்தது. “நானும் அதையே வாங்கிப் பேச வேண்டுமா? நீங்க அவருக்குக் குடுத்தத போய் நான் கேட்டால் தருவாரா?” - என்றதும் சொல்லாடலை சுவைத்தார் என்பதற்கு அடையாளமாக விழுந்து விழுந்து சிரித்தார்.
பொதுவாக எதையும் சுவைக்கும் பழக்கம் உடையவர்களால் மட்டுமே இது போன்றவற்றைப் புரிந்து சிரிக்க முடியும். இல்லாதவர்கள் அடுத்தவர்களிடம், “என்ன சொன்னார்?”- என்று கேட்டுப் புரிந்து அதன் பின் சிரிப்பர். டியூப் லைட் புத்தி என்பது இவர்களைத்தான்.
ஒருவர் ஒன்றைச் சொல்லி முடித்ததும் உடனே உங்களால் அதை வெல்லும் படியாகச் சொல்ல முடிகிறதா? ‘ஆம்’- என்றால் நீங்கள் சும்மாக் கேட்பவர் அல்ல, எதையும் சுவைத்துக் கேட்பவர் என்ற முடிவுக்கு வரலாம்.
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி, “எம் புருஷன் குழந்தை மாதிரி”- என்றதும் அடுத்தவள் சற்றும் யோசிக்காமல் எள்ளளவும் கால இடைவெளி இன்றி, “அப்பத் தூக்கித் தொட்டிலில் போட்டு ஆட்டு”- என்றாள் என்றால் அவளிடம் சுவையுணர்வு இருந்தது என்றே கொள். கேட்பது காதல்ல-மனம். காண்பதும் கண் அல்ல-மனம்தான்.
ஒன்றி இருப்பவர்களால் மட்டுமே ஒன்றிணைத்துப் பேசும் ஆற்றல் உருவாகும். ஒரு இளைஞன் தனது நெருங்கிய உறவினர் ஒருவரை தெருவில் தற்செயலாகச் சந்தித்து விட்டான். அவன் சற்றும் எதிர் பார்க்காத சூழ்நிலை.
எனவே அவன் பற்ற வைத்துக் குடித்துக் கொண்டிருந்த சிகரட்டை அணைக்கவும் முடியாமல், அமுக்கவும் முடியாமல், தவியாய் தவித்தான்.
அவராவது அவனது இக்கட்டான சூழ்நிலையைக் கண்டு அகன்று போயிருக்கலாம். அல்லது அதைக் கண்டும் காணாமலும் இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த உறவுக்காரரோ, “என்ன சிகரட் குடிக்கிற பழக்கம் எல்லாம் உண்டா?”- என்று தொடங்கினார். அவனும் முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற எண்ணி, குடித்தவாறே “எப்பவாவதுதான் மாமா”- என்று அழுது வடிந்தான். “எத்தனை வருஷமா இந்தப் பழக்கம்?” என்றார். அவனும், “அஞ்சு வருஷமா”- என்றான்.
அப்புறம் அவர் விடாமல் அதையே தொடர்ந்தார். “ஒரு நாளைக்கு சிகரட்டிற்காக எத்தனை ரூபாய் செலவழிக்கிறாய்?”- என்றார். அவன், “குறைந்தது 50 ரூபாய் ஆகும்”- என்றான்.
உடனே அவர் கணக்குப் போட ஆரம்பித்தார். “டேய், ஒரு நாள் 50 ரூபாய் என்றால் மாதம் ஒன்றிற்கு 1500 ரூபாய். அப்ப வருஷத்துக்கு 18000 ரூபாய். அப்ப அஞ்சு வருஷத்தில் 90,000 ரூபாய். அடப்பாவிப் பயலே அஞ்சு வருஷத்தில ஏறத்தாழ ஒரு லட்சம் ரூபாய கரியாக்கிக்கிட்டு இருக்கிறியே”- என்று அறிவுரை கூறி முடித்ததும், அவன் அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கினான்.
“மாமா நீங்கள் சிகரட் குடிக்க மாட்டீங்களா?”- “அந்தக் கெட்டப் பழக்கமே நமக்கு கிடையாது”- என்றார். அவன் உடனே, “நான் அஞ்சு வருஷத்தில ஒரு லட்ச ரூபாய அழிச்சிட்டதா சொல்றீங்களே, அப்ப நீங்க அதே அஞ்சு வருஷத்தில ஒரு லட்சம் ரூபாய சேர்த்து வச்சிருங்கீங்களா?” என்று கேட்டதும் மாமா மறைந்தே போனார்.
சொல்லுக்குச் சொல் பதில் தரும் திறன் வேண்டுமானால் படிக்க வேண்டாம், கவனிக்க வேண்டும். எதையும் சுவைக்கப் பழகுங்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|