வெற்றுக் கோஷங்களும் அரசியல் தலைமையும்
கண்ணாளன்
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே தமிழக முஸ்லிம் அரசியல் பற்றிய காட்சிகள் ஏறக்குறைய தெளிவாகி விட்டிருக்கின்றன. நேற்றைய தேதியிட்ட (25-2-06) டெக்கான் கிரானிக்கல் சென்னை பதிப்பில் ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு தனது ஆதரவைத் தரும்’ என்ற செய்தி அதன் தலைமை நிருபரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு தௌஹீது ஜமாஅத்தின் தலைவர் பி.ஜெய்னுல் ஆப்தீன் ‘கலைஞர் முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்’ என்று மேலப்பாளையத்தில் பேசியது அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது எம்.ஜி.ஆரில்’ மூன்று பத்தி செய்தியாக அதிக முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழக தலைவரும் எம்.பியுமான காதர் மைதீனுக்கு மார்ச் 3-ம் தேதி அன்று திருச்சியில் நடைபெற இருக்கும் தி.மு.க. மாநாட்டில் பேசுவதற்கு இடம் தரப்பட்டுள்ளது.
பகுஜனக் கட்சியின் தமிழக பிரிவு தலைவராக இருந்த கே.எம்.ஷரீப் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இடதுசாரிகள், தலித்துகள், இஸ்லாமியர் ஒற்றுமை மூலமாக முஸ்லிம்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் புதுக்கோட்டையில் இந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற அரசியல் பிரகடன உரிமை மாநாடு அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காயிதேமில்லத்துடைய காலத்தில், முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் நலனை பிரதிநிதித்துவம் செய்ததான ஒரு வரலாறு நமக்குத் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வரலாற்றில் இருந்ததாகச் சொல்லப்படும் தனித்துவம் திராவிட மாயையினாலோ அல்லது தமிழ் அடையாளம் என்கிற தேசிய கோஷத்தின் உள்ளோ மறைந்து போயிருக்கலாம்.
1981ல் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்தபோதுதான் தமிழக முஸ்லிம் அரசியலுக்கு வேறொரு பரிமாணம் கிடைத்தது. அதற்கு எதிர்வினையாக உருவான இந்து முன்னணி தமிழகத்தில் முஸ்லிம்களின் இருப்பையே பிரச்சனைக்குரிய ஒன்றாக தமிழக அரசியல் பொதுத்தளத்தில் முன்வைத்தது.
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரிய சமாஜ் போன்ற அமைப்புகள் கூட தமிழகத்தில் முஸ்லிம் எதிர்ப்பை முன்வைத்ததாக எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற சமூக ஆய்வாளர்கள் கூறினாலும் கூட அவற்றின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்ததென்பது இன்னும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் சமகாலவரலாற்றில் இந்து முன்னணிக்கு எதிர்வினையாக பழனிபாபா போன்றவர்கள் உருவானதற்கு நாமே சாட்சிகளாக இருக்கிறோம். பழனிபாபாவும், டாக்டர் ராமதாஸ் போன்றவர்களுடன் சேர்ந்து அரசியல் இணக்கத்தை வலியுறுத்தி கூட்டிணைவான அரசியல் பலத்தை முன்மொழிந்தார். ஆனால் அதுபோன்ற ஒரு தனிநபரால் எதிர்கொள்ளவியலாத சக்தியாக இந்து அடிப்படைவாத இயக்கங்கள் எழுச்சி பெற்றன.
தொண்ணூறுகளில் பாபர் மசூதி இடிப்பு முஸ்லிம்களிடையே மேலதிகமான அரசியல் விழிப்புணர்வுக்குக் காரணமாக இருந்தது. பழனிபாபா பேசமட்டும்தான் செய்கிறார். இந்து அடிப்படைவாத இயக்கங்களின் முஸ்லிம் அழித்தொழிப்புக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்று தனது டிம்பர் வியாபாரத்தை விட்டுவிட்டு கோவை பாட்சா அல் உம்மா இயக்கத்தை தொடங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் இந்து அடிப்படைவாத இயக்கங்களால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் உயிருக்கு பழிக்குப் பழிவாங்கும் செயல்திட்டத்தை தனது அமைப்பின் இளைஞர்கள் மூலம் செயல்படுத்தினார். அப்போது சன் தொலைக்காட்சி அவருடைய செயல் பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கிற பேட்டியை ஒளிபரப்பியது. ‘தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் மற்ற இந்து அடிப்படைவாத இயக்கங்களும் தங்கள் அமைப்புகளை கலைத்துவிட்டால் நான் அல்உம்மாவைக் கலைத்துவிட்டு மீண்டும் மரவியாபாரத்துக்குப் போகிறேன்’ என்று அந்தப் பேட்டியில் சொன்னார். ஆனால் இந்து அடிப்படைவாத இயக்கங்களுக்கு மேலும் உரமூட்டுவதாகவே அந்த செயல்பாடுகள் அமைந்தன. 1997ம் ஆண்டு பழனிபாபாவும் இந்து அடிப்படைவாத சக்திகளால் கொல்லப் பட்டார். முஸ்லிம்களின் அபிலாசைகளை சுமார் 12 ஆயிரம் கேசட்டுகளில் பேசிய பழனிபாபா தன்னந்தனியாக செத்துப்போனார்.
1997 நவம்பர் 27ம் தேதி கோவையில் போலீஸ்காரார் செல்வராஜ் குத்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீஸாரும் இந்து அடிப்படைவாத இயக்கங்களும் நடத்திய கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அதை ஒட்டி அப்போது ஒன்றுபட்டிருந்த த.மு.மு.க. தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பைச் செய்தது. ஆனால் ஜனநாயக அரசியலில் எந்த வித பயிற்சியும் நம்பிக்கையும் இல்லாத அல்உம்மா 1998 பிப்ரவரி 14ம் தேதி அத்வானியைக் கொல்வதாகச் சொல்லி 48 அப்பாவி மக்களைக் கொன்றது. அந்தக் கோபத்துக்கு எத்தனை நியாயங்களைச் சொன்னாலும் அது தமிழக முஸ்லிம் எழுச்சிக்கு ஒரு பின்னடைவாகவே இருந்தது.
த.மு.மு.க.வும் சரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் சரி பிற முஸ்லிம் அமைப்புகளும் சரி இந்த கோவைப் புள்ளியிலிருந்து தமிழக முஸ்லிம்களுக்கான புதிய பரந்துபட்ட ஒரு செயல்திட்டத்தை வகுத்து முன்னெடுத்து சென்றிருக்க முடியும். ஆனால் அவர்களோ தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கே முன்னுரிமை கொடுத்து அந்த எதிர்வினை சம்பவத்திலிருந்து தங்களை எப்படி அன்னியப் படுத்திக் கொள்வது, எப்படி தொலைவாக்கிக் கொள்வது என்பதிலேயே ஏராளமான வருடங்களை வீணடித்தார்கள்.
இப்போது தேர்தல் வருவதால் த.மு.மு.கவுக்கும், தௌஹீது அமைப்புக்கும் எல்லா முஸ்லிம் அமைப்புகளுக்கும் சிறையிலிருக்கும் முஸ்லிம் கைதிகளைப் பற்றி திடீர் கரிசனம் பிறந்திருக்கிறது. எட்டு வருடங்கள்; ஒரு சமூத்தின் நோய்க்குறி சரிசெய்யப்படுவதற்கு இது மிகவும் அதிகமான கால அவகாசம் தான். அதுபற்றி கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும், ராமதாசுக்கும், திருமாவளவனுக்கும் யாருக்கும்
எந்த அக்கரையும் இல்லை. எம்.எச்.ஜவாஹிருல்லாவுக்கும், எம்.ஜெய்னுலாப்தீனுக்கும் போட்டிக் கூட்டங்களை நடத்தி தங்கள்சக்தியை கலைஞர், ஜெயலலிதா போன்ற அரசியல் எஜமானர்களிடம் நிரூபிப்பதில்தான் ஆர்வம் இருக்கிறது.
பாஷா, அழித்தொழிப்பு நம்பிக்கைகளுக்காக முஸ்லிம் இளைஞர்களின் ஆற்றலை விரயம் செய்தார் என்றால் ஜவாஹிருல்லாவும், ஜெய்னுலாப்தீனும் அரசியலில் விலை போவதற்காக முஸ்லிம் இளைஞர்களின் ஆற்றலை விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் பலத்தை வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரம் பெறுவதும், அரசியல் கோரிக்கைகளை வென்றெடுப்பதும் தான் அடிப்படை என்பதை மறந்துவிட்டு முஸ்லிம்களின் பலத்தைச் சிதறடித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறெதையும் இவர்கள் செய்யவில்லை.
தமிழகத்திலுள்ள பரந்துபட்ட வறிய முஸ்லிம்களுக்கு உண்மையான பிரதிநிதிகளான இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமை இல்லையென்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் எழுப்புகிற இடஒதுக்கீடு கோரிக்கையும், சிறைவாசிகள் விடுதலை கோரிக்கையும் சமூகத்தின் நம்பகத்தன்மையை பெறுவதற்கான உபாயங்கள் மட்டுமே. ஒரு சமூகத்தின் எழுச்சியை கருணாநிதியால் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் முடக்க முடிந்திருக்கிறது என்றால் ஜெயலலிதாவும் அதையேத்தான் செய்திருக்கிறார். முஸ்லிம் அரசியல் தலைமையோ ஒரு சமூகத்தின் அரசியல் தன்னெழுச்சியை வெற்றுக் கோஷங்களுக்குப் பின்னால் மூடிமறைத்திருக்கிறது.
தேர்தல் புறக்கணிப்பு என்கிற கோஷத்தைக்கூட முன்வைக்க முடியாத அளவுக்கு முஸ்லிம் தலைமைகள் அரசியல் பொதுத்தளத்தில் தனிமைப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் முஸ்லிம்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கான ஆதரவை சமூகத்தின் எல்லாமட்டங்களிலும் பெற்றுத்தரக் கூடிய தலைமை ஒன்றுக்கான வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தலைமை வறிய முஸ்லிம்களின் மத்தியிலிருந்தே எழுந்து வரவேண்டும். அந்தத் தலைமை தான் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் விலை போகாத ஒன்றாக இருக்கும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|