Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006

‘மாட்டுக் கொம்பாட்டம்’ சாதி ஒழிப்பு கலையின் புதுவடிவம்
-அ. ஜெகநாதன்

தலித் விடுதலை பேசுவோர்கள் பல தளத்திலும் இன்று பயணிக்கிறார்கள். கதை, புனைவு, கவிதை முதலான இலக்கிய தளத்திலும் ‘மீட்டுருவாக்கம்’ என்ற கோட்பாட்டோடு ஆய்விலும், ‘சுயசார்பு’ என்ற நிலைப்பாட்டோடு அரசியலிலும் தலித் விடுதலை பேசுவோர்கள் பயணித்து வருகிறார்கள். இதைப் போன்றே கலைகளிலும் இம்மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். பறையடித்தல் இழிவு எனச் சொல்லப்பட்டபோது அதை அடிக்க மறுத்தனர். ஒப்பாரி, கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், பறை முதலிய கலை வடிவங்கள் தொல் மக்களின் எச்சங்களாக இருந்த போதும் இவையனைத்தும் தீண்டாமை வடிவத்தில் மிக முக்கியப் பங்காற்றின எனச் சொன்னால் மிகையல்ல. அதனாலேயே இக்கலை வடிவத்தை ஒரு காலகட்டத்தில் இம்மக்கள் புறக்கணித்தனர். நவீன கல்வியின் நாகரீக அடையாளத்தோடு இக்கலை வடிவத்தை எதிர்த்தே வடமாட்ட தலித் அரசியல் ஒரு காலத்தில் முன்னேறி வந்தது.

Mattu Kombattam ஒருபுறம் வைதீக கலைவடிவங்கள் புனிதமாகவும், தமிழ் கலைகள் புனிதமற்றதாகவும் பேசப்பட்டன. தமிழ் கலைவடிவம் மொழியில் மட்டுமே கவனம் செலுத்தியது. தெலுங்கு கீர்த்தனை இடத்தில் தமிழை வைக்கப் போராடியது. இப்போராட்டம் இன்றுவரை தொடரவும் செய்கின்றது. ஆனால் இவ்விரு கலை வடிவமும் தலித் கலைகளை தீண்டாக் கலைகளாக பாவித்து வந்தது வருகின்றது. இவை ஒருபுறம் இருக்க தலித்கலைகள் சூத்திரர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளுடன் மட்டுமே தொடர்பு கொண்டதாக இருந்தன. சூத்திரர்களின் வாழ்க்கை வட்டச் சடங்கான பிறப்பு, பூப்பெய்தல், திருமணம், இறப்பு, கோவில் விழாக்கள் முதலானவற்றில் தலித் கலை வடிவங்கள் இடம் பெற்றன. ஆனால் தலித் மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இக்கலை வடிவம் இடம் பெறவில்லை. இக்கலையை நிகழ்த்துபவருக்கு பணம் தரப்படுவதில்லை. அல்லது குறைந்த அளவே பணம் தரப்பட்டது. பணம் அதிகம் கேட்டாலோ, அல்லது சுயமரியாதையை காரணம் காட்டி இக்கலைகளை விட முயற்சித்தாலோ அடிதடிகளும், கொலைகளும் மிக லாவகமாக மேற்கொள்ளப் பட்டன. சுருங்கச் சொன்னால் சூத்திரர்களின் பண்பாட்டு மேலாண்மைமை வெளிப்படுத்தும் கலை வடிவமாகவே தலித் கலைகள் செயல் பட்டன எனச் சொன்னால் அது மிகையல்ல.

தலித் கலைகள் இழிவை உண்டாக்கியது என்ற கோஷத்துடன் 1947 முதல் 1980 வரை மிக வீச்சாக வடமாவட்ட தலித் அரசியல் செயல்பட்டது. பறை ஒழித்தல் வடமாவட்டத்திலும், ‘அரிச்சந்திரா நாடகம்’ ஒழித்தல் பரமக்குடி பகுதியிலும் செயல்படுத்தப் பட்டது. இத்தருணத்தில் 1992ல் உருவான மதுரை ‘தலித் ஆதார மய்யம்’ கலைகளையும் விடுதலைக்கான கருவிகளாக்குவோம் என்ற கோசத்துடன் தலித் கலைகளை நகரத்தின் மையத்திற்கு இழுத்து வந்தது. தலித் மக்களிடம் இருந்த கலைவடிவத்தின் அமைப்பில் சாதி ஒழிப்பு பாடல்களை இணைத்து அக்கலை வடிவத்தை வெகுசனப் படுத்தியது. தற்போது இதே கோசத்துடன் “மாட்டுக் கொம்பாட்டம்” எனும் கலைவடிவம் புதிதாக உருவாக்கப் பட்டிருந்தது.

பொதுவாக கலைகள் அனைத்தும் அந்தக் காலத் தேவையுடன் உருவாக்கப்பட்டவைதான். அக்கலை வடிவத்தின் அகப்பண்பை வைத்தே அக்கலை எப்பண்பாட்டை பிரதிபலிக்கிறது என்பதை கூறமுடியும். “மாட்டுக் கொம்பாட்டம்” இக்காலத் தேவையின் பிரதிபலிப்பாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இக்கலை வடிவத்தை மணிமாறன் குழுவினர் உருவாக்கியிருக்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில் மாட்டின் தோலை உரித்த 5 தலித்துகள் உயிரோடு எரிக்கப்பட்டனர். இதன் எதிர்விளைவாகவே மாட்டுக் கொம்பாட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘மனிதனைக் காட்டிலும் மாட்டை புனிதம் என இந்துத்துவ சக்திகள் சொல்லும் போது, அம்மாட்டின் கொம்பை பிடுங்கி இந்துத்துவா எனும் பூதத்தை கிழிப்பேன்’ என்ற உள்ளார்த்தத்தின் வெளிப்பாடாகவே இக்கலை தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது.

Mattu Kombattam மாட்டுக் கொம்பாட்டம் போர் முறை அடவுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆடுவோர் கையில் கொம்பு வைத்திருக்கின்றனர். இரண்டு வரிசையாக வரிசைக்கு நால்வர் வீதம் இருக்கின்றனர். போருக்கு போகும் போது சங்கு ஊதப்படும். இங்கு சங்குடன் கொம்பிசையும் சேர்த்து ஊதப்படுகிறது. சாதி ஒழிப்புக்கான படை திரண்டு விட்டது என்பதாக இதனை இங்கு நாம் அர்த்தப்படுத்தலாம். கையில் கொம்பு வைத்திருப்பவர்கள் ஒரு போர் வீரன் போல் அடவெடுத்து குத்தி கிழிப்பது போல் ஆடுவர். இந்த ஆட்டத்திற்கு பறை இசை முக்கியப் பங்காற்றுகிறது. இந்த ஆட்டத்தை ஒட்டியே சாதி ஒழிப்பு பாடலும் பாடப்படுகிறது. 20 நிமிடம் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. பாட்டின் பல்லவிக்குத் தக்க ஆட்டத்தின் நேரத்தை கூட்டலாம். இத்தோடு ஆட்டத்தின் இடையே நாடகத்தையும் இணைத்து பகுதி பகுதியாக ஆட்டத்தை நிகழ்த்தினால் ஒரு மணி நேரத்திற்கு இக்கலையை நிகழ்த்தலாம். இந்த ஆட்டத்தில் பெண்கள் சரிபாதி பங்கேற்றிருக்கின்றனர்.

தலித் கலை வடிவங்கள் கணநேரத்தில் உருவாகும். அதைப் போன்று மறைந்து போகவும் கூடும். அல்லது மனித மறதியால் மறக்கப்படவும் கூடும். மாட்டுக் கொம்பாட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. மாட்டுக் கொம்பாட்டம் இழிவுக் கலையாக தோற்றம் பெறவில்லை. ஒரு போராட்டக் கலையாக தோற்றம் பெற்றிருப்பது இக்கலையின் சிறப்பம்சமாகும். இக்கலை எதற்கு தோன்றியதோ அதற்கு பயன்பட வேண்டும். மாறாக இக்கலையை வெகுஜனப் படுத்துகிறோம் எனும் பெயரில் சுனாமி தாக்கம், எய்ட்ஸ் ஒழிப்பு, மது ஒழிப்பு முதலானவற்றிற்கு இழுத்துச் சென்றால் இக்கலை வடிவம் நீர்த்துப் போகும் என்ற எச்சரிக்கையையும் இங்கு முன்வைக்கலாம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com