நூல் மதிப்புரை
குற்றவாளிக் கூண்டில் வட அமெரிக்கா
- குருசாமி மயில்வாகனன்
நூல் : குற்றவாளிக் கூண்டில் வடஅமெரிக்கா
ஆசிரியர் : அமரந்த்தா
வெளியீடு : பரிசல்,
1, இந்தியன் வங்கி காலனி,
வள்ளலார் தெரு, பத்மநாப நகர்,
சூளைமேடு, சென்னை - 94.
விலை : ரூ.35/- பக்கம் : 72
கியூப மையத் தொழிற்சங்கம், சிறு விவசாயிகளின் தேசிய ஒன்றியம், கியூபாப் பெண்கள் கூட்டமைப்பு, பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு, நடுநிலைக் கல்வி மாணவர்களின் கூட்டமைப்பு, ‘ஹொஸே மார்த்தி’ குழந்தைகள் அமைப்பு, புரட்சி பாதுகாப்புச் சங்கங்கள், கியூபப் புரட்சியின் போராளிகள் ஒன்றியம் மற்றும் கியூப மக்கள் அனைவரும் அங்கம் வகிக்கும் சமூக மக்கள் திரள் அமைப்புகள் யாவும் இணைந்து, வடஅமெரிக்க அரசுக்கு எதிராக, ஹவானா நகர நீதிமன்றத்தின் உரிமையியல், நிர்வாகப் பிரிவின் முன்பாக வைத்துள்ள சட்டப் பூர்வமான உரிமைக் கோரிக்கை ஆவணமானது அமரந்தாவினால் மொழி பெயர்க்கப்பட்டு 35 ரூபாய் விலைக்கு 72 பக்க சிறு நூலாக ‘பரிசல்’ வெளியிட்டுள்ளது.
மூன்றாம் உலக நாடுகளில் வாழும் வாசிக்கத் தெரிந்த அனைவரும் ஒருமுறையேனும் இந்நூலை முழுவதுமாக வாசித்து விட வேண்டுமென்பது தான், இந்நூலை வாசித்தவர் பிறருக்கு வைக்கும் கோரிக்கையாக இருக்க முடியும்.
United states of America (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) என்று பொதுவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நாம் விளிப்பது தவறு என்பதை இந்நூல் சுட்டுகிறது. தென்அமெரிக்க நாடுகளையும் கொடூரமாகச் சுரண்டும், அச்சுறுத்தும், நசுக்கும் வடஅமெரிக்க அரசின் பயங்கரவாதத்தை இந்த ஆவணம் ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்துகிறது.
இந்நூலை இன்னுமொரு அமெரிக்க எதிர்ப்பு நூல் என்று நாம் எளிதாகத் தள்ளிவிட முடியாது! காரணம், இது கியூபாவின் குரல். அதுமட்டுமல்ல அந்த குரல் இந்தியாவில் ஏன் எழும்பவில்லை? அல்லது எழுப்புபவர்களுக்கு எப்படி ஆதரவிருக்கிறது? அல்லது எதிர்ப்பவர்கள் போல வேடமிடும் போலிகள் குறித்த அம்பலப்படுத்தல்கள் எவ்வளவு தூரம் இங்கே நடந்திருக்கிறது?- இவ்வாறான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது.
எட்டு தலைப்புகளில் வடஅமெரிக்க அரசின் பயங்கரவாதம், கியூபாவின் மீது கட்டவிழ்க்கப் பட்டதை விரிவாக எடுத்துரைக்கிறது. மொத்தமே கற்க வேண்டிய நூல் என்பதால் ஒரு அத்தியாயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். அது நமக்கு மிகவும் அவசியமானது.
ஏழாவது தலைப்பாக பக்கம் 50லிருந்து 56 வரையிலுள்ள விவரங்கள் மனித குலத்திற்கே வடஅமெரிக்க அரசு எதிரானது என்பதைத் தெளிவாக நிரூபிக்கிறது. இது கியூப மக்களின் உடல் நலன்கள் மீது ஏற்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க தீயவிளைவுகள் பற்றியதாகும்.
1981-மே மாதம், கியூபத் தலைநகரான போயரோஸ் நகராட்சியில் வாழும் மக்களுக்கு திடீரென காய்ச்சல், கொப்புளங்கள், மண்டைஇடி, சோகைநோய், கண்நோய்கள், மற்றும் குடல், தலைவலி, பல உறுப்புகளின்வழியாக ரத்தக்கசிவு. . . போன்ற பல புதிய நோய்கள் ஏற்பட்டன. சீயான், ஃப்யூகோஸ், ஹோலகுவின், வில்லாகிளாரா ஆகிய மாகாணங்களிலும் இதே போன்று நோய்கள் உண்டாகி நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
முதற்கட்ட ஆய்வுகளிலேயே இது இயல்பாக ஏற்படுகின்ற தொற்று நோய்க்கிருமிகள் ஏற்படுத்தும் நோய்கள்தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கான சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.
இது டெங்குவகை-2 நோய்க்கிருமி என்பது ஆய்வுக்கூட சோதனைகளில் உறுதி செய்யப்பட்டன. அமெரிக்கர்கள் பகுதியிலோ, கியூப நாட்டின் மக்கள் பரிமாற்றம் உள்ள வேறெந்த நாட்டிலுமோ டெங்குவகை-2 நோய்கள் உள்ளதாக எந்தத் தகவலும் இல்லை.
மேலும் இது ஒரே நேரத்தில் நாட்டின் பலபகுதிகளில் தோன்றியது எப்படி? உயிரியல் ரீதியான சதி வேலைகளைக் கண்டு பிடிப்பதிலும் அதை எதிர்ப்பதிலும், நிபுணத்தும் வாய்ந்த அயல்நாட்டு விஞ்ஞானிகள் துணையுடன், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கொள்ளை நோய்கள், வடஅமெரிக்க அரசின் கைக்கூலிகளால் வேண்டுமென்றே உண்டாக்கப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள், விரிவான ஆய்வுகள் சோதனைகளில் வெளியாகின.
1979ம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பற்றிய 14வது சர்வதேசக் காங்கிரசுக்கு வடஅமெரிக்க கர்னல் பிலிப்ரஸ்ஸல் அளித்த தகவலானது, வடஅமெரிக்கர்கள் டெங்குவகை-2 நோய்களை பரப்பும் ஏடிஸ் எகிப்தி எனும் கொசு வகையை வாங்கிப் பரப்பினார்கள் என்று கூறுகிறது.
1975லேயே டெங்குவகை-2 நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் திறனின்மை குறித்த புள்ளிவிபரங்களை வடஅமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் ஹென்றி காலிடிர் கியூபாவிற்கு வந்திருந்தபோது தனிக்கவனத்துடன் கேட்டு வாங்கிச் சென்றார் என்பதும் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது.
1984ம் ஆண்டு ஓமேகா-7 எனும் பயங்கரவாத இயக்கத் தலைவன் எட்வார்டோ அரோசினோ, கிருமிகளைக் கியூபாவில் பரப்பியதை ஒப்புக் கொண்டான்.
இதுமட்டுமின்றி டெங்கு-2 கிருமியிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசி இருப்பதாக காந்தனாமோ கப்பல் தளத்தினுள்ள வடஅமெரிக்க ராணுவம் அறிவித்திருந்தது. நாடு முழுவதும் கொள்ளை நோய்க்கு ஆளாயிருந்த போதிலும் அந்த ராணுவப் பகுதியில் ஒருவரைக்கூட இந்நோய்கள் தாக்கவில்லை.
1959ம் ஆண்டிலேயே ‘டெட்ரிக் கோட்டை’ எனுமிடத்தில் கிருமிகளைப் பரப்பும் பூச்சிகளைப் பற்றி பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. கொசுக்களின் மூலம் மஞ்சக் காமாலை, மலேரியா, டெங்கு, தெள்ளுப் பூச்சிகள் மூலம் கொள்ளை நோய்கள்; ஒட்டுண்ணிகளால் வரும் திலரீமியா, தீராக் காய்ச்சல், கொலராடோ காய்ச்சல் மற்றும் ஈக்களின் மூலம் காலரா, ஆந்தராக்ஸ் பேதி - இவைகளைப் பற்றி பட்டியலிடப்பட்டதாக பத்திரிக்கையாளர் ஒருவர் அறிவித்திருக்கிறார்.
1958ல் அமெரிக்கத் தரைப்படையின் ‘கிருமிகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துவது குறித்த ஆய்வு மையம்’, மஞ்சள் தொற்றுக் காய்ச்சல் நோயை உண்டாக்கக் கூடிய ‘ஏழாம் எகிப்தி’ வகைக் கொசுக்களை வைத்துப் பல சோதனைகளை நடத்தியுள்ளது. ‘ப்ளோரிடா’ மாநிலத்திலுள்ள தரைத்தளம் ஒன்றில் ஆறு லட்சம் வகைகளிலான கொசுக்களை விமானம் மூலம் பரப்பி, இக்கொசுக்கள் ஒருநாளில் 16முதல் 32 கி.மீ தொலைவைக் கடந்து செல்லும் போது பலபேரைக் கடித்ததால் ‘ஏழாம் எகிப்தி’ இந்நோயைப் பரப்பும் திறன் பெற்றவை என நிரூபிக்கப்பட்டது.
1980 அக்டோபர் 29 அன்று வாஷிங்டனின் செய்தித்தாளில், “1950ல் சோவியத் யூனியனுக்கு எதிராக இக்கொசுக்களைப் பரப்புவதற்கு வடஅமெரிக்க அரசு தீவிரமாக யோசித்து வந்தது” எனும் குறிப்பு தெரிவிக்கிறது.
டெட்ரிக் கோட்டையின் மேரிலாந்தில் ஒரு மாதத்திற்கு 5லட்சம் கொசுக்களை உற்பத்தி செய்ய முடியும். 13 கோடிக் கொசுக்களை ஒரு மாதத்தில் உற்பத்தி செய்யுமளவிற்கான நிலையம் விரைவில் தொடங்கப்படும் என்கிற செய்தியும் வெளியாகியுள்ளது.
“தான் போரில் ஈடுபட்டிராத வல்லரசிடம் ஓசையின்றி உயிரியல் போர் தொடுக்கலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தது வடஅமெரிக்கா”.
1971ல் C.I.A ன் ஆதரவோடு ‘காஸ்ட்ரோ எதிர்ப்பு பயங்கரவாதிகள்’ ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கிருமியைக் கியூபாவினுள் பரப்பினார்கள். குலிக்கோட்டையில் கிருமிகள் நிறைந்த வாளி ஒன்று தம்மிடம் கொடுக்கப்பட்டதெனவும், அது கியூபாவின் ரகசிய ஏஜன்டுகளிடம் மீன்பிடி படகு மூலம் அனுப்பப்பட்டதெனவும் C.I.A. க்கு தகவல் அளித்த செய்தி வெளியாகியிருக்கிறது.
இந்த டெங்குக் காய்ச்சல் 3,44,203 பேரைப் பாதித்தது. 1981ல் 11,400 கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 1,16,143பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். 24,000 பேர் ரத்தக் கசிவினாலும் 10,224 பேர் டெங்கு ஏற்படுத்திய அதிர்ச்சியினாலும் துன்புற்றார்கள். 101 குழந்தைகள் உட்பட மொத்தம் 158 பேர் டெங்கு நோய்க்குப் பலியானார்கள். இந்த நோய்த் தொற்று 1981 அக்டோபர் 10 அன்று உண்டாக்கப்பட்டது என்று உறுதியாகக் கூறமுடிகிறது.
இதற்குப்பிறகு இத்தகைய கொடுரங்களை எதிர்கொண்ட கியூபாவின் நடவடிக்கைகளை இந்த அத்தியாயம் சுருக்கமாகச சொல்கிறது. அதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஐரோப்பாவிலிருந்து “மாலத்தியான்” என்கிற மருந்தை டன் ஒன்றுக்கு 5,000 வடஅமெரிக்க டாலர் கொடுத்து அதாவது மூன்றரை மடங்கு பணம் செலவழித்து வடஅமெரிக்காவிடமிருந்தே கியூபா வாங்கியதாகும். இந்த “மாலத்தியான்” எனும் மருந்து தமிழக விவசாயிகள் தினமும் வாங்கி தங்களது பயிர்களுக்கு அடிக்கக் கூடிய மருந்தாகும் என்பதும் கவனிக்க வேண்டியது. இதோடு 7வது அத்தியாயம் முடிகிறது.
இலவச போலியோ சொட்டு மருந்து முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம்
இலவச சர்க்கரை நோயாளிகள் முகாம்
இலவச எய்ட்ஸ் மருத்துவ முகாம்
இலவச அம்மைத் தடுப்பூசி முகாம்கள்
இலவச ஊட்டச் சத்திற்கான உணவுகள்
இலவச இரும்புச் சத்து மாத்திரைகள். . .
இதுதவிர வெள்ளம், பஞ்சம், பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவு நேரங்களில் நடத்தப்படும் முகாம்கள், இலவச மருந்துகள். . . இவைகளெல்லாமே ஏகாதிபத்தியங்களைச் சார்ந்த நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் உதவித் தொகைகளைக் கொண்டே நடத்தப் படுகின்றன. மருந்துகளும் அவர்களது பன்னாட்டுக் கம்பெனிகள் மூலமே தயாரிக்கப் படுகின்றன.
நமது ஊரில் நம் கண்முன்னே நடைபெறும் இந்த முகாம்களின் பின்னே மறைந்திருப்பது ஏகாதிபத்தியங்களின் தாக்குதல்கள் தான் என்பதை இந்த 7வது அத்தியாயத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
உலக மக்களுக்கு எதிரான ஒரு நாசகாரக் கும்பல் தான் வடஅமெரிக்க அரசு என்பதை இந்த கியூபாவின் ஆவணம் நேரடியாக நிரூபிக்கிறது. கியூபா உலக அரங்கில் வடஅமெரிக்காவை எதிர்க்கிறது. குற்றம் சுமத்துகிறது. ஆனால் இந்திய அரசும், ஆட்சியாளர்களும், கட்சிகளும் அமெரிக்காவிற்கு எதிரானவர்களாக இல்லை. இந்த நூல் வெளியிடப்பட்ட மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கூட அமெரிக்க ஆதரவாளர் தான். காங்கிரஸ் அரசோ அமெரிக்க அடிமைகள் மட்டுமல்ல. கைக்கூலிகளும்தான் என்பது வெளிப்படையானது.
அமெரிக்க இராணுவப்படையின் பயிற்சி முகாமானது மேற்குவங்கத்தில் நடைபெற்றது. தனது பயிற்சி முகாமை நடத்த அது மேற்குவங்க மாநிலமே பாதுகாப்பானது என முன்மொழிந்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதின் பின்னணியிலுள்ள ரகசியங்களையும் நாம் இதோடு இணைத்துத்தான் பார்க்க வேண்டும். நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த சொல் நம்மை என்ன செய்யத் தூண்டுகிறது?
அதோ, “தாமிரபரணி எங்கள் ஆறு! அமெரிக்கக் கோக்கே வெளியேறு” என்கிற நெல்லை மக்களின் முழக்கம் கேட்கிறது. அதைத் தமிழகமெங்கும் பரவச் செய்வோம்! அவர்களோடு இணைந்து கொள்வோம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|