Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006

‘இராமையாவின் குடிசை’ யை முன்வைத்து சில குறிப்புகள்
-அ. குணசேகரன்

தமிழகத்தின் நெற்களஞ்சியமும், கலைகளின் பிறப்பிடம், கர்நாடக இசையின் இருப்பிடம் எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்கும் தஞ்சை மாவட்டம் (ஒருங்கிணைந்தது) நிலவுடமைக் கொடுங்கோண்மைக்கும் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சாதிய மேலாதிக்கத்தையும் நிலவுடமை ஆதிக்கத்தையும் ஒருங்கே பெற்றிருந்த நிலவுடமையாளர்களை எதிர்த்துக் களமிறங்கிய அடிநிலை மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், இழப்புகள் வரையறுத்து இயம்ப முடியாத் திறத்தன என்பதை அந்தப் போராட்ட வரலாற்றின் ஊடாகவே அறிய முடியும். தோழர் பி.சீனிவாசராவ் போன்றோரின் வரவால் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகவும் நிலவுடமைக் கொடுங்கோண்மைகளுக்கு எதிராகவும் உரத்தக் குரல் எழுப்பும் சக்தியை நசுக்கப்பட்டு வந்த அடிநிலை மக்கள் பெற இயன்றதன் விளைவாக அடிமைகளாக இருந்தவர்கள் வாழ்வில் புதிய மாறுதல்கள் தோன்றின.

Cricket கீழவெண்மணியில் அரைப்படி கூலி உயர்வுக்கான போராட்டத்தில் 44 மனித உயிர்களை உடைமையாளர்கள் காவு கொண்டதும் காவல்துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு எந்திரங்கள் அதற்குத் துணை நின்றதுமான வரலாறு உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்நிகழ்வு குறித்த கலை, இலக்கியப் பதிவுகள் ஏராளம் உண்டெனினும் அந்தப் பட்டியலில் அண்மையில் இடம் பெற்றிருப்பது ‘இராமையாவின் குடிசை’ என்னும் ஆவணப்படம்.

கே.பழனிவேல் (படத்தொகுப்பு), சிபி சரவணன் (ஒளிப்பதிவு), இரா.ப்ரபாகர் (இசை) போன்றோரின் ஒத்துழைப்புகளோடு பாரதி கிருஷ்ணகுமாரின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த ஆவணப்படத்தின் வாயிலாக வெண்மணி வரலாறும் அதுபற்றிய கருத்துப் பகிர்வுகளும் மீண்டும் இந்திய அரசியல் மற்றும் பண்பாட்டுக் களத்தில் ஒரு உரையாடலைத் தொடங்கியிருக்கிறது. ‘இராமையாவின் குடிசை’ என்னும்ட இந்த ஆவணப் பதிவின் ஊடாக வெண்மணிச் சாம்பலையும் மிச்சமிருந்த எலும்புத் துணுக்குகளையும் (மாயாண்டி பாரதியால் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுபவை) ஊடக (Media) வெளிச்சத்தில் காண்பதன் மூலம் மக்கள் மனங்களில் வெண்மணி வீர வரலாறு ஒரு மீள்பார்வைக்கு உள்ளாகியிருக்கிறது.

நிலவுடமைக்கு எதிரான போராட்டங்கள் குறித்த முந்தைய ஆவணப் பதிவுகளாக ‘வாட்டாகுடி இரணியன்’ போன்ற திரைப்படங்கள் விளங்குகின்றன. என்றாலும் அவை புனைவு நிலை சார்ந்த படைப்புகளாகத் திகழ்வதால் அவை பெற்றிருந்த கவனத்தை விடவும் ‘இராமையாவின் குடிசை’ கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. ஏனெனில் நிலவுடமைப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கு கொண்டவர்கள் என்ற நிலையிலும் வெண்மணி நிகழ்வை நேரடியாகக் கண்டறிந்தவர்கள் என்ற நிலையிலும் அவற்றோடு தொடர்புடையோர் பலரின் கருத்துப் பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.

நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்தோடு சாதிய ஒடுக்குமுறைகளும் கைகோர்த்துக் கொண்டிருந்த தன்மையைத் தோழர் வி.தம்புசாமி (CPIM), தோழர் கோ.வீரையன் (CPIM), ஏ.ஜி.கஸ்தூரி ரங்கன் (தமிழர் தன்மானப் பேரவை) ஆகியோர் விவரித்துச் செல்லும் பாங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அதே நேரத்தில் இத்தகைய ஒடுக்கு முறைகளுக்கு நேரடியாக ஆளாகித்தாம் அனுபவித்த கொடுமைகளை செல்வ கணபதி (விவசாயக்கூலி), செல்வராஜ் (விவசாயக்கூலி), கோ. பழனிவேல் (துப்பாக்கிக் குண்டடி பட்டு இன்றும் குண்டுகளை உடலில் தாங்கி வருபவர்) ஆகியோர் பகிர்ந்து கொள்ளும்போது அது குறித்த கோபக்கணல் மக்கள் மனங்களில் மூண்டெழவே செய்கிறது.

உணவு உற்பத்தியாளர் சங்கத் தொடக்கம் அது பற்றிய விமர்சனங்கள், பின்னர் அது நெல் உற்பத்தியாளர் சங்கமாக மாறிய நிலை. அச்சங்கத்திற்குத் தொடர்பில்லாத விவசாயக் கூலிகள் அதில் சேர வேண்டுமென வற்புறுத்தப்படும் நிலை குறித்த பதிவுகள் தமிழ்ச் சமூக வரலாற்றோடும் அரசியல் வரலாற்றோடும் வைத்துப் புரிந்து கொள்ளப்பட வேண்டியவையாகும்.

நிலவுடமைக்கு எதிரான போராட்டங்களிலும் இப்பகுதியில் அவ்வப்போது நடைபெற்ற படுகொலைகளைக் கண்டித்தும் இரண்டு பொதுவுடமை இயக்கங்களும் தம்மளவில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தாலும் அவற்றில் CPM கருத்துகள், தீர்மானங்கள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் மீது செலுத்தப்பட்ட நிலவுடைமை, சாதிய ஆதிக்கப் போக்குகளை இரிஞ்சியூர் கோபால கிருஷ்ண நாயுடுவின் செயல்கள் மூலம் விளக்குவதாக உள்ளது. இதில் பெண்களின் நேரடிக் கருத்துப் பகிர்வு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து கோபால கிருஷ்ணன் பற்றி இந்திரா பார்த்தசாரதி முன் வைத்த கருத்துக்களை ஓரளவு யூகிக்கலாம்.

பேராயக் கட்சி (காங்கிரஸ்) யிடமிருந்து தமிழக ஆட்சிப்பீடம் அண்ணாவின் தலைமையிலான கழகத்தின் கைக்கு மாறியபோதும் நிலவுடமையாதிக்கப் போக்குகள் எப்போதும் போலவே இருந்தன என்பது குறித்த பதிவுகள், தொண்டர் படையைத் தொடங்க அண்ணா அனுமதி மறுத்த விவரங்களை எல்லாம் கவனப்படுத்தியிருப்பது குறித்த பதிவுகள் இன்றைய நிலையிலும் கழகங்களின் மீதான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்குத் துணைபுரியக் கூடும்.

தங்களுடைய வாழ்க்கைப் போராட்டங்களுக்கு இடையிலும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக விவசாயக் கூலிகள் போராடியது. அதற்காக ரூ.125/- அபராதம் கட்ட வேண்டுமென்று நிலவுடைமையாளர்களால் வற்புறுத்தப்பட்டது போன்றவற்றை இப்படம் எடுத்துரைத்துள்ளது. இவை வெவ்வேறு நிலைகளிலிருந்து சிந்திக்க வேண்டிய விசயங்களாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உச்சக்கட்டமான வெண்மணி எரிப்புப் பற்றிய பதிவுகள் கவனிக்கத்தக்கன. இவற்றின் வழியாக அறியலாகும். தமிழக அரசு, காவல்துறை, நீதிமன்றங்களின் நிலைப்பாடுகள் எத்தகையன என்பதும் பாதிக்கப்பட்டவர்களே தண்டிக்கப் பட்டதும், அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் ஆவணங்கள் ஆகியன மக்கள் முன் மீண்டும் கவனப்படுத்தப் பட்டுள்ளன.

வெண்மணியை எரித்த குற்றவாளிகளை நீதிமன்றங்கள் தண்டிக்காமல் விட்டாலும் பாதிக்கப்பட்டோரின் கோபத்தீ அவர்களை விட்டு வைக்கவில்லை. காலம் பார்த்துச் சுட்டெரிக்கவே செய்தது. அதே நேரத்தில் இந்த எரிப்புக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று நிரூபித்துச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியவர்கள் இன்று அந்நிகழ்வுக்கும் தமக்கும் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகவே பேசியுள்ளனர். தீர்ப்புகள் தம்மையே மறுபரிசீலனை செய்துகொள்ள வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை.

வெண்மணி எரிந்த பிறகு அம்மக்களுக்கு ஆதரவாக யார் யார் வந்தார்கள், எந்தெந்த விதங்களில் உதவிகள் நல்கப்பட்டன என்பனவெல்லாம் ‘இராமையாவின் குடிசை’ மூலம் விவரமாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன. அத்துடன் இது தொடர்பான பலரின் கருத்துகளும் கவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து வருகைதந்த சிபிஎம் கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் வருகை சிறப்புக் கவனத்துடன் பதிவுக்குள்ளாக்கப் பட்டுள்ளது.

ஆனால் அன்றைய தினம் திருவாரூரில் கூட்டம் ஒன்றிற்கு வருகை தந்திருந்த ஏ.எம்.கோபு உள்ளிட்ட CPI தோழர்கள் உடனடியாக வெண்மணிக் களத்திற்கு வந்து தமது கடமைகளை ஆற்றியுள்ளார்கள். இது குறித்த பதிவு இங்கு விடுபட்டிருப்பதன் காரணம் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனைப் போன்று, வெண்மணி நிகழ்வுகள் பற்றிய செய்திகளை வெளியிட்ட இதழ்களின் (தீக்கதிர், The hindu, தினத்தந்தி, Peoples Democracy, தினமணி, Indian Express, சுதேசமித்ரன் போன்ற இதழ்கள்) பங்களிப்புகள் பற்றிய பதிவுகளில் ‘ஜனசக்தி’ பற்றிய விடுபடலும் நிகழ்ந்திருக்கிறது.

இப்படியான பதிவுகள் பல வந்தாலும் வெண்மணி மக்களின் வாழ்க்கை என்பது 1967லும் அதற்கு முன்பும் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றும். “உயிரோடு இருந்து சின்னாபின்னப் படுவதைவிட அந்தக் கொலகார தீயில் கருகியவர்களோடு கருகியிருந்திருந்தால் ஒரு பெருமையாவது இருந்திருக்கும்” என்ற புலம்பல்கள் வெண்மணி மக்களிடம் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான வாழ்க்கைத் தரம் அங்கு நிலவுவதுதான் வேடிக்கைக்குரியது.

குடந்தை கொலைத் தீயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கிடைத்த ஆதரவும் வாழ்வாதார உதவிகளும் வெண்மணித் தீயில் கருகியவர்களின் குடும்பங்களுக்கு இன்றுவரை கிடைக்காமலிருப்பது கவனத்திற்குரியது.

வெண்மணிப் போராட்டம் முழுக்கவும் ஒரு வர்க்கப் போராட்டமே என்று பேசப்பட்டு வந்தாலும் ஊடாக அடிநிலை மக்கள் (தலித்துகள்) மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் அடங்கியிருக்கிறது. மேலும் அப்போராட்டங்களை அரைப்படி கூலி உயர்வுக்கானது என்பதாக குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை அடிநிலைச் சாதியினரின் சமூகப் பண்பாட்டு விடுதலையோடும் இயையுடையதாகப் பார்க்க வேண்டியுள்ளது. அதனைப் போன்று தியாகிகளைப் போற்றுகிற கடமை அனைவருக்கும் உண்டு என்பதில் ஒரு பொதுமையான மனநிலை அனைவரிடமும் மலர்வதே நன்மை பயக்கும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com