Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006
சிறுகதை

கடல்
- டி.பத்மனாபன் / தமிழாக்கம் : ஜே.ஆர்.வி.எட்வர்ட்

Lady நேற்று காலை அம்மா எங்களையெல்லாம் விட்டுப் போய்விட்டாள். சென்ற ஒருவாரமும் அம்மாவின் கூடவே இருந்தேன் நான். சொல்லிக் கொள்ளும் விதத்தில் நோய் எதுவுமில்லை அவளுக்கு. ஐம்பது வயது சாக வேண்டிய வயதா? ஆனாலும், மரணத்தோடு நெருங்கிக் கொண்டிருப்பதான ஓர் உணர்வு அவளுக்கு இருந்ததென்று படுகிறது. அதனால் தானே அவசரமாக என்னை அழைத்துவர அப்பாவை அனுப்பியிருந்தாள்.

அப்பா வரும் வேளையில் நான் விடுதியில் தான் இருந்தேன். அது விடுமுறை நாள். பெரும்பாலான தோழிகளும் வெளியே சென்றிருந்தனர். வராந்தாவில் அமர்ந்தவாறு வாசித்துக் கொண்டிருந்த நான் அப்பாவைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்தே போனேன். நாளது வரை எனது பணியிடத்திலோ விடுதியிலோ என்னைப் பார்க்க வந்திராத அப்பாவாயிற்றே. அருகில் சென்ற என்னோடு நேரடியாகவே விஷயத்தைச் சொன்னார் அப்பா.

“உன்னை கையோடு கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன்”.

ஏன், என்ன ஆச்சு? என்ற வினாக்குறியோடு அப்பாவின் முகத்தை நோக்கி நின்றேன்.

“அம்மாவுக்கு உன்னைப் பார்க்கணும்’ என்றார். கூடவே, நான் எதுவும் பேச வாய்ப்புத் தராமல்.

“அப்படி விசேஷமாயொன்றும் இல்லை. ஆனால் கொஞ்சநாளாக எப்பவும் ஏதோ யோசனையிலிருக்கிறாள். வேறு ஏதோ உலகத்தில் இருப்பது போல் பேசுகிறாள். டாக்டரிடம் காட்ட சம்மதிக்கவில்லை. ‘டாக்டர் எதுக்கு? டாக்டர் நினைத்து என் நோயைக் குணப்படுத்த முடியுமா?’ என்று கேட்கிறாள்”.

“எதுக்கு டாக்டர்? டாக்டர் நினைத்து என் நோயைக் குணப்படுத்த முடியுமா?” என்ற அம்மாவின் கேள்விகளை உச்சரிக்கிற போது என் முகத்திலிருந்து பார்வையை விலக்கியிருந்தார் அப்பா. அவர் குரல் அப்போது தழுதழுப்பது தெரிந்தது.

வழியில் நாங்கள் எதுவும் பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி நடக்கும் வேளையும் மௌனமே நிலவியது. என் மனசுக்குள் அப்போது அம்மா பற்றிய எண்ணங்களுடன் அப்பா பற்றிய எண்ணங்களும் நிறைந்திருந்தன. கூடவே என்னைப் பற்றிய எண்ணங்களும் மனசினுள் ஊடுருவியிருக்கும் நுண்ணிய முள்ளொன்றை வெளியேயெடுக்கப் பிரயத்தனப்படும் விதமாய் நான் என்னையே கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தேன். அப்பாவை விட்டு அம்மா அகன்று போனது எப்போ? என்னை விட்டு அகன்று போனது எப்போ? அம்மாவின் பிரிய மகளாயிருந்தவளல்லவா நான்? ஏக புதல்வி! ஆணானாலும் பெண்ணானாலும் அத்தகைய என்னிலிருந்து கூட. . .

அல்லது, இப்படியும் யோசிக்கலாமே. அம்மாவை விட்டு அப்பா அகன்று போனதெப்போ? செல்ல மகளான நான் அம்மாவை விட்டு அகன்று போனதெப்போ? திடுமென எனக்குள் எழுந்த எண்ணமிது.அப்படி யோசித்த போது ஒரு வகையான குற்ற உணர்வு மனசை நிறைத்தது. நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். அப்படியும் இருக்கலாம் தானே. அப்படியும். . .

அதுவரை வாயே திறவாமல் நடந்து கொண்டிருந்த அப்பா என் மனசைப் புரிந்திட்டவர் போல் கேட்டார்.

“என்ன யோசிக்கிறே?”

நான் அப்பா முகத்தை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்து விட்டு மீண்டும் மௌனமாய் நடக்கத் தொடங்கினேன். எனக்கும் அப்பாவிடம் கேட்கத் தோன்றியது. “நீங்க என்ன யோசிக்கிறீங்க அப்பா?” ஆனால் கேட்கவில்லை.
வீடு சேரும் வரை எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் இவ்வளவு தான்.

வீடு சேரும் போது சாயங்கால வேளையாயிருந்தது. இருள் கவியத் தொடங்கவில்லை. மாடியிலிருக்கும் அம்மாவின் அறை நோக்கி நான் நடக்கத் தொடங்கிய வேளை, ஒரு நிமிட தயக்கத்துக்குப் பின் அப்பா சொன்னார்.

“ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்”.

ஆச்சரியமாயிருந்தது எனக்கு. அப்படியென்ன விஷயமோ? பிரயாண நேரம் முழுதும் மௌனமாயிருந்துவிட்டு, வீடு வந்தவுடனே, அம்மாவைப் பார்க்குமுன்பாக, அப்படியென்ன விஷயமோ?

எதுவும் பேசாமல் என்னை அவரது அறைக்கு அழைத்துப் போனார் அப்பா. மேசை திறந்து, ஒரு கட்டுத்தாள்களும் சில டைரிகளும் எடுத்து என் கையில் தந்தார். பிறகு நான் எதுவும் கேட்குமுன் சொன்னார்.

“உனக்குத் தருவதற்காய் அம்மா என்னிடம் தந்தவை. நான் இவற்றைத் தந்ததாகச் சொல்” தொடர்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராய்

“அம்மா கேட்டால் மட்டும் சொல்” என்றார். அப்பாவின் குரல் உடைந்திருந்தது அப்போது. என் முகத்திலிருந்து பார்வையை விலக்கியிருந்தார் அவர்.

நான் அறைக்குள் நுழைகிற போது அம்மா மேற்குப் பக்க சன்னலினூடே சூரியனைத் தரிசித்துக் கொண்டிருந்தாள். சூரியன் ஏறக்குறைய மறையும் நிலையிலிருந்தான். ஆனாலும் அவனது கடைசிக் கதிர்கள் அம்மாவைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தன. அம்மாவின் அழகிய முகம் அப்போது இன்னும் கொஞ்சம் அழகாய் ஜொலித்தது.

வாசலருகே நான் செயலிழந்து போய் நின்று கொண்டிருக்கையில் என் வருகையை உணர்ந்தவளாய், மெதுவாய் திரும்பி என்னைப் பார்த்தாள் அம்மா.

அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். கணப்பொழுதில் என் மனசினின்று ஆண்டுகள் பல பின்னகர்ந்தன. . நான் அம்மாவின் பழைய செல்லமகளானேன், என்னைக் குளிப்பாட்டி, எனக்கு பட்டுப்பாவாடை உடுத்தி, பாட்டுப்பாடி. . வேண்டாம் என்று பிடிவாதமாக முகம் திருப்பிக் கொள்ளும் போது ‘என் செல்லக் குட்டிப்பிள்ளை இல்லையா, இந்த ஒரு பிடி மட்டும்’ என்று பாசத்துடன் மீண்டும் மீண்டும் உணவூட்டி. . என் கூட பள்ளிக்கூடம் வந்து. . உயர்நிலைப் பள்ளியில் நான் கால் வைத்தபோது அம்மாவைக் கட்டிப் பிடித்து அம்மாவின் முகத்தை உற்று நோக்கி. . அப்போது அம்மா ஒரு பொய்ச் சிரிப்புடன் ‘என்ன, அப்படி உற்றுப் பார்க்கறே?’ என்று கேட்ட போது ‘அம்மா, நீ எவ்வளவு அழகு!’ என்று கூற ஆசைப்பட்டு, ஆனாலும் வெட்கத்தால் அப்படிக் கூறாமல். . பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக அகன்றுபோய். .

நான் அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தேன். அப்பா தந்த பழைய தாள்கட்டு அப்போது அம்மாவின் கையிலிருந்தது. தனது ஆழ்ந்த பழம் நினைவுகளை வருடிக் கொடுப்பது போல் அம்மாவின் மெல்லிய நீண்ட விரல்கள் அத்தாள்களின் மீது ஊர்ந்து கொண்டிருந்தன.

“நீ இவற்றைப் படித்தாயா?”

“இல்லை. இப்போதான் அப்பா என்னிடம் தந்தார்”என்றேன்.

ரொம்ப நேரம் வரைக்கும் வெளியே பார்த்தவாறிருந்தாள் அம்மா. அம்மா சாய்ந்து அமர்ந்திருந்த தலையணைகள் வழுகிப் போகாமல் கவனமாய்ப் பிடித்திருந்தேன். பின்னர் அம்மா பேசத் தொடங்கினாள்.

“அந்தக் காலத்தில் எனக்கு டைரி எழுதும் பழக்கமிருந்தது. அப்புறம் நிறுத்திவிட்டேன். அந்த டைரிகளும், எனக்கு வந்த கடிதங்களும் தான் இதெல்லாம். இவற்றையெல்லாம் நான் உனக்குத் தருகிறேன். வேண்டுமானால் இவற்றையெல்லாம் நான் அழித்திருக்கலாம். ஆனால் ஒரு போதும் அப்படிச் செய்ய நான் நினைக்கவில்லை. இக்கடிதங்களை அழிப்பதென்பது இவற்றையெல்லாம் எழுதிய அம்மனிதனை அழிப்பதற்குச் சமம் இல்லையா? அம்மனிதனின் நினைவுகளை என் மனசிலிருந்து பிடுங்கிக்களைவது இல்லையா? என்னால் அது இயலாது. அதனால் தான் அவற்றையெல்லாம் நான் பத்திரமாய். . இக்கடிதங்களையெல்லாம் என்னோடு கூட சிதை நெருப்பிலிட்டு சாம்பலாக்க வேண்டுமென்று ஒரு முறை யோசித்தேன். . அப்புறம், அதுவும் வேண்டாமென்று எண்ணிவிட்டேன்”. .

அம்மா வாழ்வின் இம் மறுபக்கத்தைக் குறித்து முதல் முறையாகக் கேட்கிறேன், அம்மா வாயாலேயே. வெறுமனே கேட்டவாறு அமர்ந்திருந்தேனே தவிர, அம்மாவிடம் எதுவும் கேட்க இயலவில்லை என்னால். உண்மையில் எதுவும் கேட்கத் தோன்றவுமில்லை. விடுதியிலிருந்து அப்பா அவசரமாக அழைத்து வரும் போது இப்படியொன்றும் நான் எதிர்பார்க்கவில்லையே!

அம்மாவின் பேச்சைத் திசைதிருப்பும் வகையில் நான் கேட்டேன். “டாக்டரைப் பார்க்க அம்மா சம்மதிக்கலை. இல்லையா?”

ஒரு நிமிடம் என்னைக் கூர்ந்து நோக்கினாள் அம்மா. என் ஆன்மாவை ஊடுருவுவதாயிருந்தது அப்பார்வை. ஆனால் மறுகணம் அம்மா சகஜமாகிவிட்டாள்.

“டாக்டரை பார்க்கவா?. . எதுக்கு? டாக்டர் சிகிச்சை பண்ணி தீர்க்கக்கூடிய என்ன நோய் இருக்கிறது எனக்கு?”. . என்று கேட்டாள்.

நான் சொன்னேன்.

“நாளைக்கு நான் கண்டிப்பாய் டாக்டரைக் கூட்டி வருவேன்; கண்டிப்பாய். . .”

அப்போது சற்றும் நான் எதிர்பார்த்திராத சம்பவமொன்று நிகழ்ந்தது. அம்மா என்னைத் தன் உடலோடு சேர்த்து அணைத்து, நான் சிறுமியாயிருந்த போது செய்வது போல், விரலால் என் தலைமயிரை வருடி. .

என்னால் அம்மாவின் முகத்தைப் பார்த்திருக்க இயலவில்லை. அழுகையாக வந்தது. ஆனால், அழக்கூடாது என்று என்னோடு நானே சொல்லிக் கொண்டிருந்தேன். இறுதியில் அடக்க முடியாமல் போன போது அம்மாவின் மடியில் முகம் புதைத்து. .

அம்மா சொன்னாள்;

“எப்படி உனக்கு சொல்வதென்றே தெரியலை எனக்கு. பயம் அல்ல. இத்தனை காலம் பயமில்லாமல் வாழ்ந்த எனக்கா இப்போது பயம்? இல்லை, பயம் இல்லவே இல்லை. உள்ளுக்குள்ளே ரகசியங்களைப் பூட்டி வைத்திருப்பவர்களுக்குத் தான் இந்த பயமெல்லாம். எனது வாழ்வில் ஒரு போதும் ரகசியங்கள் இருந்ததில்லை. தவறென்று தோன்றிய எதையும் ஒரு போதும் நான் செய்ததுமில்லை. ஆனாலும் இதையெல்லாம் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டிய உன் அப்பா கூட. .”

அம்மா மௌனமானாள்.

இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. அக்கடிதங்களையும் டைரிகளையும் மேலோட்டமாய்ப் புரட்டிப் பார்த்துவிட்டு படுக்கலாமென்று தான் நினைத்திருந்தேன். சாவகாசமாய்ப் பிறகுபடியேன். அவசரமில்லை என்று தான் அம்மாவும் கூறியிருந்தாள். ஆனால் ஆர்வமிகுதியால் படிக்கத் தொடங்கிய போது, அனைத்தையும் மறந்து அதில் மூழ்கிவிட்டேன். குறிப்பாக டைரிகளைப் படிக்கும் போது. அம்மாவைப் பொறுத்தவரை, நான் சற்றும் அறிந்திராத ஒரு உலகத்தை டைரிகளில் கண்டேன். எனக்கு சந்தோசமும், கவலையும், கோபமும், விரக்தியும் ஆச்சரியமும் தந்தன டைரி வாசகங்கள். சில மிகச்சிறியனவாக. சில முடிவுறாமல் நீள்வனவாக. .

இடையிடையே கவிதையையும் சங்கீதத்தையும் பாசத்தையும் குறித்த விவரணைகள். பிடித்த கவிதைகளிலிருந்து எடுத்த ஈரடிகள், பாடல்களின் முதல்வரிகள். ஓர் இந்திப் பாடலின் சில வரிகள். நட்பைக் குறித்த அசாதாரண, ஆனால் மிகப்புனிதமான விவரங்கள்.

மேலும், கடல் குறித்து. . மீண்டும் மீண்டும். . கடல் பார்க்க இயலாததாலுள்ள வருத்தம். கடல் பார்ப்பதற்கான ஆர்வம், கடலின் அம்சமாகி, அலையாகி, சுழல் ஆகி, சலனம் ஆகி, ஆழமாகி, ஆர்ப்பரிக்கும் கடலின் மேல் இறைந்துள்ள சூரியக் கதிர்களில் ஒரு வண்ணத்துப் பூச்சி போல் பறந்துயர்ந்து, இறுதியில் களைப்புறும் போது மீண்டும் அமைதியான கடலின் மார்பில் சாய்ந்து..

டைரியில் பனாரஸ் வாழ்க்கை பற்றிய குறிப்புகளும் நிறைய. அவ்வூரின் காட்சிகள் பற்றி, சங்கிதம் பற்றி, சங்கீதம் கற்றுத் தந்த குரு பற்றி, உடன் படித்த மாணவர்கள் பற்றி, மேலும் ஆண்டாண்டு காலமாய் மக்களுக்கு வாழ்வளித்து வரும் கங்கை பற்றி, தூய கல்யாணியின் மந்திர ஒலி ஆன்மாவிலிருந்து வழிகிற தருணங்கள் கங்கைக் கரையோரங்களில் செலவழித்த மாலைப் பொழுதுகள் பற்றி. .

இதற்கெல்லாம் அப்புறமாக அம்மாவின் அப்பா பற்றி. நான் நேரில் பார்த்திராத என் தாத்தா. ஆனால் டைரிகளில் அவரைப் பார்க்கிறேன். பனராஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்ற தாத்தா. தனது மகள் அதே ஊரில் சென்று சங்கீதம் பயில வேண்டுமென்ற ஆர்வமும் பிடிவாதமும் அவருக்கு!

அம்மாவின் திருமண விவரங்களும் டைரியில் இருந்தன. இந்தத் திருமணத்தில் அம்மாவுக்கு அவ்வளவு விருப்பமில்லை என்று ஊகிக்க முடிந்தது. . ஆனால், எதிர்ப்புமில்லை. படிப்பு முடியட்டும் பிறகு பார்க்கலாமே’. மாப்பிள்ளையும் அதற்குச் சம்மதம் சொல்லிவிட்டார்.

திருமணம் முடிந்த அப்புறமும் அப்பா பற்றிய விவரங்கள் அதிகமாய் ஒன்றுமில்லை. ஆனால் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பாசபூர்வமானவை. குறிப்பாக திருமணத்துக்குப் பிறகும் அம்மாவைப் படிக்க அனுமதித்தது குறித்த விவரங்கள் அதே வேளையில், அப்பாவுக்கு சங்கீதத்தில் எவ்வித ஈடுபாடும் இல்லாதது குறித்தான குறிப்பும் உண்டு. ஆனால், அவை வெறும் தமாஷாக மட்டும் சற்றும் விமர்சன பூர்வமாக இல்லாமல். .
போகப் போக மின்னல் போல் கூர்மையான வரிகள். . . ஒன்றன்பின் ஒன்றாய். . .

ஒருநாள் அம்மா எழுதியது;

(எனக்கு அப்போது மூன்று வயது)

“இது ஒரு போதும் நான் எதிர்பார்த்ததல்ல, எனக்குத் தெரியாமல் மேசையின் பூட்டுடைத்து, திருட்டுத் தனமாய் அதிலிருந்த கடிதங்களை, டைரிகளை எடுத்து. . என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. நான் நேசிக்கும், அதற்கு மேலாய் நம்பிக்கை வைத்திருக்கும் என் துணைவன் எனக்குத் தெரியாமல் இப்படிச் செய்தது ஏன்? நேரடியாகவே என்னோடு கேட்டிருக்கலாமே! ‘உனக்குக் கடிதம் எழுதுவது யார்? நீ விடுமுறையில் வரும் வேளையெல்லாம்.. உங்களுக்கிடையே அப்படி என்ன உறவு?’ சரி, அப்படிக் கேட்க வேண்டாம். மறைமுகமாகவேனும் கேட்டிருக்கலாமே. அப்போது நான் எல்லா கடிதங்களையும் கொடுத்து ‘இதோ, படித்துப் பாருங்கள்’ என்று கூறி, எவ்வித மன வருத்தமின்றி. . ஆனால் அதைவிட்டு இப்படி இல்லையில்லை, என்னால் இதைச் சகிக்கவே முடியவில்லை. .

அப்புறம், சில நாள்கள் இடைவெளிக்குப் பின். . .

(அந்த நாள்களுக்கான டைரியின் பக்கங்கள் வெறுமையாயிருந்தன)

“என்னுடைய கடிதங்களைத் திருப்பித் தர வேண்டும் என்று நேற்று ராத்திரி கேட்டேன். உடனே மிகவும் அசுவாரசியத்தோடு ‘எந்தக் கடிதம்?’ என்றல்லவா கேட்டார். நான் ஒரு கணம் திகைத்துப் போய்விட்டேன். ஏன் இப்படி இவர்?. . ஆனால் நான் கொஞ்சமும் பொறுமையிழக்கவில்லை. கோபத்தில் கத்தவுமில்லை. மிகவும் சாந்தமாய் ஆனால் மிகுந்த சக்தியுடன் சொன்னேன்: ‘எந்தக் கடிதங்கள் என்று தெரியாதா?’ அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. எனது முகத்தைப் பார்க்கவும் இல்லை. கட்டாயம் மனச்சாட்சி உறுத்தியிருக்கும். நான் மீண்டும் சொன்னேன்: ‘கேட்டிருந்தால் நானே எடுத்துத் தந்திருப்பேனே! ஏன் ஒரு திருடனைப் போல, எனக்குத் தெரியாமல்.? இப்படி ஒரு செயலை ஒரு போதும் நான் எதிர்பார்க்கலையே!’

அப்போது ஒன்றும் பேசாமல் கடிதங்களை எடுத்துத் தந்தார். அவற்றைத் திருப்பித் தருவார் என்று நான் நினைக்கவில்லை. எனினும் நான் கேட்டேன். ‘எல்லாம் படித்தாயிற்று அல்லவா? ஏதாவது ரகசியம் கண்டுபிடிக்க முடிந்ததா? ஒரு பெண்ணாய், ஒரு மனைவியாய், நான் செய்யக் கூடாத ஏதேனும். . .

அதற்கும் அவரிடமிருந்து பதில் எதுவுமில்லை.

அப்புறம் சில தினங்களுக்குப் பிறகு. . .

“எங்கள் திருமண உறவு தகர்ந்து கொண்டிருக்கிறது. இனி ஒரு போதும் இது சரியாகி விடுமென்று தோன்றவில்லை. கவலையாக இருக்கிறது. . . திடீரென்று நேற்று என்னிடம் கேட்டார். அவன் யார்? உன் வாழ்க்கையில் என்னை விட அதிகம் அவனுக்கிருக்கும் இடம்?. . உனக்கு சங்கீத வாத்தியார் என்பதற்கு மேல். . எனக்குப் புரியவில்லை.. அப்படியானால் எதற்கு நீ என்னைக் கல்யாணம் பண்ணினாய்? நான் உனக்குத் துரோகம் செய்ததில்லையே. நீங்கள் பனாரஸில் கணவன்-மனைவி போல். . .

நான் உடனே குறுக்கிட்டேன்: ‘போதும், நிறுத்துங்கள்’ ஒரு போதும் சத்தமுயர்த்திப் பேசியிராத நான். . . நிச்சயம் அவர் பதறிப் போயிருப்பார். பிறகு நான் வெறுப்போடு சொன்னேன்: வருத்தமுண்டு எனக்கு. எப்படி உங்களைப் புரிய வைப்பேன் என்று தெரியவில்லை. ஓர் ஆணுக்கும் ஓர் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பின் பரிமாணங்கள் குறித்து உங்களோடு பேசுவதில் பயனில்லை என்று தெரியும் எனக்கு. அதனால் தான் நான் அது பற்றிப் பேச விருப்பப்படவில்லை. எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். . .’

அவர் எதுவும் பேசாது மௌனியாக நிற்கவே, நான் தொடர்ந்து சொன்னேன்: ‘ஆனாலும் என்னோடு இப்படிக் கேட்க முடிந்ததே! பனாரஸில் நாங்கள் கணவன் மனைவியைப் போல் இருந்தோமா. . என்று, உங்கள் ஆறுதலுக்காகச் சொல்கிறேன். நாங்கள் கணவன் மனைவியாகவும் இருந்ததில்லை. காதலன் காதலியாகவும் இருந்ததில்லை. அவர் எனக்குக் குருவாகவும் நான் அவருக்கு மிகவும் பிரியமான ஓர் மாணவியாகவும் மட்டுமே இருந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் நேசித்தோம். மிகவும் ஆழமாக, அவ்வளவு தான், எழுதிய கடிதங்களிலிருந்து நீங்கள் இதைப் புரிந்திருப்பீர்களே. என் மனசின் ஆழத்தில் எங்கேயாவது அப்படியொரு காதலின் அம்சம் இருந்ததாவென்று கேட்டால், எனக்குப்பதில் சொல்லத் தெரியவில்லை’. ஒரு வேளை இருந்திருக்கலாமோ?. . இல்லாவிட்டால். .

அம்மாவின் டைரி எழுத்து ஏறக்குறைய இங்கு முடிந்துவிட்டதாகச் சொல்லலாம். இதன்பின் ஒரேயொரு குறிப்பு மட்டுமே இருக்கிறது. அது சில நாட்களுக்கு பிறகானது.

“இனி பனாரஸுக்குப் போவதில்லையென்று நான் சொன்னேன். இதை அவர் ஒருபோதும்

எதிர்பார்த்திருக்கமாட்டார். உண்மையில் அவர் திகைத்துப் போனார். ரொம்ப நேரம் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்து விட்டு ‘படிப்பை முடிக்க வேண்டாமா? அதல்லவா நல்லது?’ என்று கேட்டார். பிறகு, ‘இப்போ திடீரென படிப்பை நிறுத்தினால் மற்றவர்கள் ஏதாவது சொல்ல மாட்டார்களா?’ என்றும் கேட்டார். நான் அவரது வெளிறியிருந்த முகத்தைப் பார்த்து கேட்டேன்: ‘மற்றவர்களா? மற்றவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது? இது என்னுடைய விஷயமில்லையா? அல்லது நம்முடைய விஷயம் மாத்திரமில்லையா? மற்றபடி. .’

மனசில் அழுதுகொண்டேயிருந்தேன் நான். பலநாள் ஆலோசனைக்குப் பிறகே இனி பனாரஸ் போவதில்லையென்று முடிவெடுத்திருந்தேன். இருப்பினும் அதைத் தெரிவித்த போது. . .

அவர் அப்புறம் ஏதோ யோசனையில் ஆழந்திருந்தார், எதுவும் பேசாமல்.

எதுவானாலும் தற்காலிகமாக இவ்விவகாரம் இங்கு முடிகிறது. ஆனால் நிரந்தரமாய் முடிந்து விடுமா? நானறியேன். என்னால் தாங்கிக் கொள்ள முடியுமா என்றும் அறியேன். கடவுள் எனக்கு..’

இவ்வாக்கியம் முழுமையாகாமலே டைரிக்குறிப்பு முடிவுற்றிருக்கிறது. எழுத்துக்கள் சரியாகத் தாளில் பதிந்திருக்கவில்லை.

டைரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நீண்ட நேர யோசனைக்குப் பின் கடிதங்களைப் பார்த்தேன்.

எல்லா கடிதங்களும் ‘எனது செல்லக் குழந்தைக்கு’ அல்லது ‘பிரியமானவளுக்கு’ என்ற ஆரம்பத்துடன் ஒருவரால் எழுதப்பட்டவை. எல்லாவற்றிலும் நிறைய கவிதையும் சங்கீதமும். . மேலும், கோவில்கள், தெருக்கள், குளியல் படிகள், கல்லூரிகள், சங்கீத பாடசாலைகள், கங்கைக்கரை சூரிய உதயங்கள், மறைவுகள், இவற்றினூடே ஊடுருவிக் கிடக்கும் நேசத்தின் பல்லவிகள். .

களைப்பால் உறக்கத்தின் படிக்கட்டுகளில் எப்போதோ வீழ்ந்திருந்த நான் நேரம் நன்றாய் விடிந்த பின்னரே விழித்தேன். அறைக்குள் சூரிய ஒளி நிறைந்து வழிந்தது.

அம்மா கட்டிலில் அமர்ந்தவாறே பாசத்தோடு என் முகத்தை நோக்குவதை நான் கண்டேன். கடிதங்களும் டைரிகளும் படுக்கை மீதும், மேசை மீதும் இறைந்து கிடந்தன.

சடாரென எழுந்தேன் நான். அவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைக்க முயன்ற போது அம்மா தடுத்தாள். ‘அதெல்லாம் அப்படி கிடக்கட்டும்; கொஞ்ச நேரம் கூட உறங்கு பயணம் செய்த களைப்பு இல்லையா? நேற்று வேறு உறங்கியிருக்மாட்டாய், அம்மாவின் இத்தகு குணங்களை நினைத்து. .’ என்றாள்

அம்மாவின் கைகளைத் தடவிக் கொண்டிருந்தேன் நான். எனது கண்கள் அம்மாவின் முகத்தைப் பார்த்தவாறே இருந்தன. ஆச்சரியமாயிருந்தது எனக்கு. இந்த அம்மா. .

அம்மா என்னருகில், என்னைப் பார்த்தவாறே அமர்ந்திருக்க வேண்டும் என்று மனசு ஆவல் கொண்டது. ஆனால் விரைவாக அறையை விட்டு வெளியேறினாள் அம்மா.

அம்மாவின் நடையில் பதட்டம் எதுவும் தெரியவில்லை. எனினும் கால் சுவடுகளில் தளர்வு தெரிந்தது. நேற்று மாலை அம்மாவைப் பார்த்த போது தோன்றியது சரியல்ல. அம்மா மிகவும் களைத்துப் போயிருக்கிறாள் என்பது புரிந்தது.

பிறகு அப்பாவும் அறைக்கு வந்தார். ஆனால் விரைவிலேயே திரும்பிப் போய்விட்டார். எதுவும் அவர் பேசவில்லை. அப்பாவின் மனசை ஏதோ குடைந்து கொண்டிருந்தது. அதைச் சொல்வதற்குத்தான் என்னிடம் வந்தார் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது என்ற போதிலும் நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை. அப்பா தானாகவே சொல்லட்டும், மற்றபடி நான் அவரிடம் கேட்டு. . என்று எண்ணிக் கொண்டேன். பலமுறை இவ்வாறு நடந்தது.

நேற்று மாலைப்பொழுதில். . மேற்கே பாறைக் கூட்டத்தின் மேல் அமர்ந்து மறைந்து கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தவாறிருந்தேன் நான். அம்மாவின் சிதை செருப்பு அப்போதும் முழுமையாய் அணைந்திருக்கவில்லை. சிதையினின்றெழும் வாசனை அப்போதும் ஆகாயத்தில் நிறைந்திருந்தது. நான் தனிமையில் அமர்ந்திருந்தேன். இறுதிச் சடங்குக்கு வந்திருந்தோரெல்லாம் திரும்பப் போயிருந்தார்கள்.

அந்நேரம் அப்பா வந்து என் அருகில் அமர்ந்தார். கொஞ்ச நேரம் அவர் எதுவுமே பேசவில்லை. அப்புறம் மனசினின்று ஒரு பாரத்தை இறக்கி வைப்பது போல் சொன்னார்.

“ஒரு மாதத்துக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு நான். .”

நான் உடனே கேட்டேன்,

“யார்?”

ஆனால், பிறகு, அப்படி கேட்டிருக்க வேண்டாம் என்று பட்டது.

அப்பா மீண்டும் சொன்னார்:

“பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஸ்டேட் ஸ்மானிலும் வேறு பல பத்திரிகைகளிலும் யாரோ கட்டுரையும் எழுதியிருந்தார்கள். ஒரு வேளை, அவருடைய மனைவியாகக் கூட இருக்கலாம். .”

நான் எதுவும் பேசாமல் மௌனத்தில் ஆழ்ந்திருந்தேன். இருள் பரவத் தொடங்கியபோது நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். அப்போது அப்பா தன்னோடு மெதுவாய் சொல்லிக் கொண்டிருந்தார்:

‘என்னால் எதையும் புரிந்து கொள்ள இயலவில்லை, எதையும், கவிதையும் சங்கீதமும் ஒரு போதும் எனக்குப் பரிச்சயமானவையாய் இருந்ததில்லை. அதனால் தான். . இல்லை, எதுவும் உளப்பூர்வமாய் நான் செய்ததில்லை’.

நான் எதுவுமே பேசவில்லை. கடலைக் குறித்தும், கனவு கண்டு கொண்டிருந்த. . ஆனால் ஒரு போதும் கடல் காண இயலாத. . என் அம்மாவைக் குறித்தும், தொலைந்து போன என் இளமைப் பருவத்தைக் குறித்தும் என் மனசில் எண்ண அலைகள் எழும்பிக் கொண்டிருந்தன.

(புதியகாற்று நடத்திய சிறுகதைப் போட்டியில் மொழிபெயர்ப்புப் பிரிவில் முதற்பரிசு பெற்ற கதை)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com