Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006
நூல் மதிப்புரை

மழை இரவு . இலாகு பாரதி
- களந்தை பீர்முகம்மது

Mazhai Iravu

நூல் : மழை இரவு
ஆசிரியர் : சா. இலாகுபாரதி
வெளியீடு : மருதா.
226(188), பாரதி சாலை,
ராயப்பேட்டை, சென்னை-14.
விலை : ரூ.40/- பக்கம் : 78


நம் வயதையொத்த ஒரு பெண் நமக்கும் முன்பே பெரிய மனுஷியாக ஆகிவிடுகின்ற விசித்திரத்தை இந்த வாழ்க்கை செய்து காட்டும். ‘பெரியமனுஷி’ என்கிற அந்தப் பெரிய மரியாதைக்குள் அவள் முதலில் இழப்பது தன் நண்பர்களை அல்ல, தன் சுதந்திரத்தைத்தான். அதுமுதற்கொண்டே அவளைக் குடும்பப் பொறுப்பிற்குள் வேகமாக இழுத்துக் கட்டி, நுகத்தடி மாட்டி அவளின் பால்யத்தையும் பறித்து விடுகின்றது சமூகம். ஆனால் கூடவே வளர்ந்த பையன் கன்னுக்குட்டியாகவே இருப்பான்; அவன் வீட்டுக்கு வெளியே விளையாடும் களம் அப்போதும் பத்திரமாக இருக்கின்றது; எப்போதும் அப்படியே இருக்கவும் செய்யும். இலாகுபாரதியின் கன்னுக்குட்டி கவிதை இப்படித்தான் சமப்பருவ ஆணையும் பெண்ணையும் இயல்பாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இருவருக்கிடையிலான பாசப்பிணைப்புகள் சின்னச்சின்னக் காட்சிகளாய் நகர்ந்து சென்று, இனி இணைய முடியாததான இடைவெளியொன்றில் கவிழ்ந்து விடுகின்றன. அவள் பெரிய மனுஷியானது ஒரு வரமல்ல, சாபமே என்கிறது வாழ்க்கையனுபவம். இப்படியான துயரங்களை அதன் நேர்ப்பொருளில் சொல்லி, உள்ளுறைந்து கிடக்கிற ஆணாதிக்கச் சமூகத்தை அம்பலப்படுத்துகிறது கன்னுக்குட்டி கவிதை. ஒரு முற்போக்கு முகாம் கவிஞனின் பணி திட்டமிடப்பட்டது தான். ஆனால் தன் கொள்கைக்கேற்ற கவிதை வடிவத்தை அழகியல் தன்மையுடன் வார்ப்பதுதான் அவனுடைய பணி. அந்தப் பணியைத் தெரிந்து கொண்ட இலாகுபாரதி அகலக்கால் வைக்காமல், தன் சக்திக்கேற்ப கடக்க முயல்வது மகிழ்ச்சி தருகின்றது. விடலைப்பருவம் கழியும் தருணத்தில் இருக்கின்ற ஒரு கவிஞனுக்குரிய இயல்பான உணர்வுகள் என்னென்னவோ, அவையே கவிதைகளாக மலர்ந்துள்ளன. அதற்கொரு சான்றாகத்தான் ‘கன்னுக்குட்டி’ கவிதைக்கடுத்த சில பக்கங்களிலேயே ‘திரைச்சீலை’ கவிதையைக் காணமுடிகின்றது. ஒரு பெரிய துயரத்தைப் பிசிறில்லாமல் நேரடியாக விவரிக்கும் சிறிய கவிதை அது.

மனித இனத்தின் வேகமான வளர்ச்சி என்பது நுகர்வு வெறியுடன், சுயநலத்துடன் இசைவு கொள்கின்றது; அதனால் நற்பண்புகள் தேய்வு நிலைக்குச் சென்று விடுகின்றன. இதன் மூலம் மனிதனின் கூட்டு இயக்கமும் தகர்க்கப்பட ஏதுவாகின்றது. இந்த நிலை ஐந்தறிவு ஜீவன்களின் உயர்நிலைக்குக் கொண்டு செல்வதைத் தலைப்பில்லாத ஒரு கவிதை எளிமையான முறையில் சொல்கின்றது. ஒரு காக்கையின் பிணத்திற்குக் கிடைக்கின்ற மரியாதை கூட மனிதனின் பிணத்திற்குக் கிடைப்பதில்லை. அதிகார அமைப்புகள் தொடர்ந்து நடத்திவருகின்ற மனித உரிமை மீறல்கள் ஏன் என்பதற்கான விளக்கமாக இந்தக் கவிதை அமைந்துள்ளது. காகம் கரைதல் என்பதால் விருந்தினர் வருகைக்கான முன்னறிவிப்பு என்கிற நம் நம்பிக்கையைக் கடுமையாகக் கேலிசெய்கிற இன்னொரு கவிதை செறிவாக இருக்கின்றது. குடியில்லாது பாழடைந்துபோன வீட்டுக்கூரை அது என காகத்திற்கு யார்சென்று உணர்த்துவது? பகுத்தறிவு மனித இனத்திற்கு பகுத்தறிய இயலாத உயிரினங்களை முன்னோடியாகக் கொண்டால் இப்படியும் “ சீப்பட” வேண்டியதுதான்.

மழையின் கோரத்தாண்டவம் இந்த முறை அதிகப் பிரபல்யத்தைப் பெற்றுவிட்டது. கச்சிதமாக வீடுகட்டி, பத்திரமாக வாழுகிறோம் என்று நினைத்திருந்த மேதாவிகளையும் குடிசைவாழ் மக்களின் வரிசையில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது சமீபத்திய மழை. பொதுவாக கவிஞர்கள் அனைவருமே மழையின் ரசிகர்கள்தான். ஆனால் அது, அதுவாகப் பெய்தால் தான் கலாரசனைக்கு உட்படும். தன் இயல்பிலிருந்து அது சற்றே பிறழ்ந்தாலும் கவிஞனின் சாபம் தவிர்க்க முடியாமல் தீண்டிவிளையாடும் மழையையும்! மழைப்பெண் கவிதையில் “முன்பு தீர்மானித்திருந்த / ஒரு பெண் / இப்போது ராட்சசியாகியிருந்தாள்” என்கிற வரி கவிச்சாபம்தான். மழைப்பெண் இவ்வளவு கொடும் கோபத்திற்கு ஆளாகியிருக்க வேண்டாமே என்கிற பரிதாபம் மழையின்மீது நமக்கே உண்டாகும் அளவிற்கு மழைப்பெண் வசையாடலில் விழுந்துவிட்டாள்.

மரணக்குறிப்புகளை எழுத முனைந்தால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமையும். இலாகுபாரதியும் அதனை எழுதிப்பார்க்க முயன்றதில் கிடைத்த அந்தக் கடைசி வரி துயர அலையை முழுவீச்சாக எழுப்புகின்றது. இளம் கவிஞர்களுக்கு இத்தகையப் பார்வைகள் கிடைப்பது கவிதையின் உச்சத்தை எட்ட உதவும். ‘நகர நாகரிகம்’ கவிதையில் “தீர்மானமாகவே எழுதியிருப்பார்கள்” என்கிற வரியும் அதுபோன்றதே. மழை, இரவு, பால்யம், நினைவு என்பன திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற இந்தத் தொகுப்பில் அவற்றையும் மீறி கங்கையம்மன், மழை, நகர நாகரிகம் உள்ளிட்ட சில கவிதைகள் இந்தத் தொகுப்பை கனமுடையதாக ஆக்குகின்றது.

ஆனாலும் அவர் செல்ல வேண்டிய தூரமும், தேடல்களும் அதிகம்தான். தூரத்தைக் கடக்கும் வளமையான கால்கள் கொண்டவர்தான் என்பதற்கும் இந்தக் கவிதைகளே அத்தாட்சி. நவீன கவிஞர்களால் கவிதைவெளி பிரம்மாண்டம் கொண்டுள்ளது. அதனை இலாகுபாரதி கவனிப்பது நல்லது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com