Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006

ஈரான் : நிர்ப்பந்தம் ஏன்?
- எம். அசோகன்

‘ஈரான் நாகரீகமடைந்த நாடு. அதற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை’ என்று அதன் ஜனாதிபதி மகமூத் அகமதினெஜாத் கூறியுள்ளார்.
Iran Girls
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ள ஈரான் வளர்ச்சிப் பணிகளுக்காக அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு மின்சாரம் தயாரிப்பதற்கான மூலப்பொருள்.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துக் கொண்டு அணுகுண்டும் தயாரிக்க முடியும். இந்த உண்மையை வைத்துக் கொண்டு ஈரான் அணுகுண்டு தயாரிக்கப் போவதாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பொய் சொல்கின்றன.

இந்தப் பழியை மீண்டும் மீண்டும் சொல்லி ஈரானை சர்வதேச அணுசக்தி கழகத்தின் சோதனைகளுக்கு உட்படுத்தியது. கழகத்தின் தலைவர் முகமது எல்பராடியும் சகாக்களும் அந்நாட்டின் பல்வேறு இடங்களில் பல மாதங்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட சோதனைகளில் அணுகுண்டோ அல்லது அது தொடர்பான ஒரு துண்டு காகிதத்தையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

2004 அக்டோபர்3-ம் தேதி எல்பராடி அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

‘ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் ஏதுமில்லை. நிச்சயம் ஆபத்து விளைவிக்கக் கூடியதென்று எதையும் நான் பார்க்கவில்லை. அணு ஆயுதத் திட்டம் எதையும் நான் காணவில்லை. யுரேனியம் செறிவூட்டும் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக ஈரான் முயற்சிக்கிறது என்பதை மட்டுமே கண்டேன். இதுவரை, ஈரானிலிருந்து எந்த ஆபத்துமில்லை. . ’

அல்ஜசீரா தொலைக்காட்சியில் அடுத்து அவர் சொன்னது இன்னும் முக்கியமானது.

‘ஈராக்கில் எங்கள் கண்டுபிடிப்புகள் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் அணு ஆயுதங்கள் இருப்பதைச் சுட்டுகிறமாதிரி நாங்கள் எதையும் காணவில்லை. ஈராக்கிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எல்லா யதார்த்த நிலைமைகளும் தெள்ளத் தெளிவாகும் வரை நாம் அவசரப்படக் கூடாது. இதைத்தான் ஈரான் விஷயத்தில் நாங்கள் செய்ய விரும்புகிறோம்.

இரண்டாவது முறை அணுசக்தி கழகத்தின் தலைவராக இருக்கும் பராடியின் பதவிக்காலம் 2005 இறுதியில் முடிவடைய இருந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையும் தலைவராக விரும்பினார். ஆனால், மேற்படி பேச்சுக்களுக்காக அமெரிக்கா பராடி மீண்டும் தலைவராவதை எதிர்த்தது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை.

“ஈரான் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. தன்னுடைய வெளிப்படைத் தன்மையை நிரூபிக்க அது எடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக வேண்டும். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் கூடுதல் ஒப்பந்தங்களின் எல்லைகளைத் தாண்டி வேறு பல இடங்களையும் தனிநபர்களையும் சோதனையிடவும் விசாரிக்கவும் அது அனுமதிக்க வேண்டும்.” என்று பராடி பயமுறுத்தினார்.

ஈரானில் ஆட்சேபிக்கத் தகுந்தது ஒன்றுமில்லை என்றவர் அங்கு ஏதேதோ இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முற்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் 24 அன்று சர்வதேச அணுசக்தி கழகத்தில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இந்த அறிக்கை பெரிதும் பயன்பட்டது. அமெரிக்காவின் மனம் குளிர்ந்தது. பராடி மூன்றாம் முறையாகத் தலைவராகத் தொடர்கிறார்!

ஈராக் விஷயத்தில் என்ன நடந்ததோ அதுவேதான் இப்போதும் நடக்கிறது. ஈராக்கில் பல ஆண்டுக் கணக்கில் பல்வேறு சோதனைகளை நடத்தினார் ஐநா ஆயுதப் பரிசோதகர் ஹான்ஸ் பிளிக்ஸ்.

‘ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களோ அல்லது அவற்றைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளோ எதுவும் இல்லை. இருந்தாலும், சோதனையிடுவது சம்பந்தமான நமது கோரிக்கைகளை போதுமான அளவு வேகமாக நிறைவேற்ற மாட்டேனென்கிறார்’ என்றார்.

அதாவது ஈராக்கில் ஒன்றுமில்லை. சதாம் நாம் சொல்வதற்கெல்லாம் சம்மதிக்கிறார். ஆனால் வேகமாகச் சம்மதிக்க மாட்டேன்கிறார். எனவே எதையோ மறைக்கிறார்!

இப்படி ஜார்ஜ் புஷ்சின் தாளத்திற்கேற்ப ஆடிய பிளிக்ஸ் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

சுவீடன் தொலைக்காட்சிகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோன்றி ஈராக் ஆக்கிரமிப்பைக் கண்டித்துக் கொண்டிருக்கிறார்! ஆனால் இன்று இந்த உண்மைக்கு எந்த மதிப்புமில்லை. அன்று அவர் சொன்ன பொய்யின் விலையோ. . . லட்சக் கணக்கான ஈராக்கிய உயிர்கள்!

எல்பராடியும் இதுபோல் எதிர்காலத்தில் புலம்பக் கூடும்.

அமெரிக்காவின் உண்மையான நோக்கம் :

அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்காவிற்கு எந்த அக்கறையுமில்லை.

உண்மையான அக்கறை இருக்குமெனில் முதலில் அமெரிக்கா தன்னிடம் இருக்கும் ஆயிரக்கணக்கான பேரழிவு ஆயுதங்களை அழிக்க வேண்டும். மேலும் இஸ்ரேலிடம் இருக்கும் பேரழிவு ஆயுதங்கள் குறித்து அது ஏன் கண்டு கொள்வதேயில்லை? ஏற்கனவே அணுகுண்டு வெடிப்பு சோதனை நடத்திய இந்தியா அணு மின்சாரம் தயாரிக்க உதவி செய்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியா இதை அணுகுண்டு செய்யப் பயன்படுத்தாது என்று ஒப்பந்தம். ஆனால் ஈரான் மட்டும் அணு மின் ஆராய்ச்சி செய்யக் கூடாது என்கிறது. பின்லேடன் பெயரைச் சொல்லி ஆப்கானிஸ்தானையும், பேரழிவு ஆயுதங்களின் பெயரால் ஈராக்கையும் ஆக்கிரமித்தது. அணு ஆயுதங்கள் என்கிற சாக்கில் ஈரானை ஆக்கிரமிக்கத் திட்டமிடுகிறது.

சரி, ஈரானை ஏன் குறிவைக்கிறது?

மேற்காசியாவின் மீது அமெரிக்கா தொடுத்திருக்கும் யுத்தத்தில் ஈரான் மிக முக்கியமான நாடாகும். புஷ் அடிக்கடி சொல்லும் தீய சக்திகளின் அச்சு என்பது ஈரான், ஈராக், வடகொரியா ஆகிய நாடுகளாகும்.
ஆப்கான் படையெடுப்பு ஈராக் படையெடுப்பிற்கான ஒத்திகை என்றால் ஈராக் படையெடுப்பு ஈரான் ஆக்கிரமிப்பிற்கான ஒத்திகை. ஈராக்கில் நுழைந்தபோது அமெரிக்கா என்ன நினைத்தது? வளைகுடாப் பகுதியின் நுழைவாயில் ஈராக் என்று நினைத்தது. ஈராக்கிற்குப் பின் சிரியா, அடுத்து ஈரான், அடுத்து சவூதி அரேபியாயைவும் கூட அள்ளிப்பையில் போட்டுக் கொள்ளலாம் என்று எண்ணியது. எல்லா நாடுகளிலும் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவது, ஆட்சி மாற்றம் என்றால் தன் கைப்பாவைகளை அதிகாரத்தில் அமர்த்துவது.

சரி, ஈரானின் முக்கியத்துவம் என்ன?

இந்த யுத்தங்களின் பிரதான குறிக்கோள் வளைகுடா பகுதியில் நிரம்பி வழியும் எண்ணை வளம் என்பது தெரிந்ததுதான். ஈரானின் எண்ணை இருப்பு 12580 கோடி பேரல்கள். ஈராக்கைவிட அதிகம்! அது மட்டுமல்ல, சவூதி அரேபியா (28000 கோடி பேரல்கள்) தவிர்த்து அப்பகுதியின் மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகம். அதேபோல் 940 லட்சம் கோடி கன அடி எரிவாயு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட அதிகமான எரிவாயு உலகிலேயே ரஷ்யாவில்மட்டுமே (1680 லட்சம் கோடி கன அடி) இருக்கிறது! இந்த இரு எரிசக்தி அளவையும் சேர்த்தால் சவூதி அரேபியாவின் எரிசக்தி வளத்திற்கு இணையாகும்!

அது மட்டுமல்ல. ஈரானின் கிழக்கு எல்லையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மேனிஸ்தான் இருக்கின்றன. மேற்கு எல்லையில் அஜர்பைஜான், துருக்கி, இராக் இருக்கின்றன. வடக்கே காஸ்பியன் கடல். ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையே இருக்கிறது. நாலாபக்கமும் நிலத்தால் சூழப்பட்ட கடல். தன்னுடைய கரையிலிருந்து பத்து மைல் தூரத்திற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேக உரிமை இருக்கிறது; நீர் பரப்பு மற்றும் நீருக்கு உள்ளே இருக்கும் எண்ணை வளங்கள் மீது! ஆனால் சோவியத் வீழ்ச்சியால் உருவான ஐந்து காஸ்பியன் கரை நாடுகள் இந்த ‘உரிமையோடு’ முரண்படுகின்றன.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு ஆப்கானிஸ்தான் வழியாக எண்ணைக் குழாய்கள் போடுவது, காஸ்பியன் கரை நாடுகளிலிருந்து எண்ணையை அதன் வழியாக செங்கடலுக்கும் மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது பற்றி அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் ஈரான் வழியாக குழாய்கள் போடப்பட்டால் பாரசீக வளைகுடாவிற்கு மிகச் சுலபமாக எண்ணையை எடுத்துச் செல்ல முடியும். அதேபோல், பாகிஸ்தான் வழியாக எண்ணைக் குழாய்கள் போடப்பட்டால் ஈரான் எண்ணையை மட்டுமின்றி, ஈராக், ரஷ்யா மற்றும் காஸ்பியன் கடல் எண்ணையையும் எரிவாயுவையும் இந்தியாவிற்கு எடுத்து வர முடியும்.

ஈரானுக்கு தென்மேற்கே பாரசீக வளைகுடா இருக்கிறது. இந்துமாக்கடலையும் வளைகுடாவையும் இணைக்கும் ஹார்மஸ் ஜலசந்தியாக இருக்கிறது. ஒரு பக்கம் சவுதி அரேபியாவையும், அதோடு சேர்த்து குவைத்தையும், எமிரேட்சையும் இன்னொரு பக்கம் ஈரானையும் கொண்டுள்ளது. ஜலசந்தி ஈரானுக்கும் மேற்குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கும் இடையே கடல் சில மைல்கள் அகலம் தான் இருக்கிறது. ஒரு இடத்தில் வெறும் ஆறுமைல்தான் இடைவெளி. கிட்டத்தட்ட மேற்காசியப் பகுதியின் எண்ணை முழுவதும் இதன் வழியாகத்தான் ஏற்றுமதி ஆகிறது. நாள் ஒன்றுக்கு 1500 கோடி பேரல்கள்!

ஈரானுக்கு எதிராக யுத்தம் துவங்கினால் என்ன ஆகும்? உலகம் முழுவதற்குமான எண்ணை விநியோகம் தடைபடும். நாடுகள் எண்ணை தாகத்தால் தவிக்கும். உலகப் பொருளாதாரமே சீர்குலையும்.
ஆப்கன் போல இருபது வருடங்களுக்கும் மேலான உள்நாட்டு யுத்தத்தால் நைந்து போன நாடல்ல ஈரான்; அல்லது ஈராக் போல பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளால் பலகீனப் படுத்தப்பட்ட நாடுமல்ல.

ஈராக்கை விட நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் மூன்று மடங்கு பெரியது ஈரான். மனித வளமும் கட்டமைப்பும் நல்ல நிலையில் உள்ளது. ஈராக்கில் இப்போதிருக்கும் படைகளே போதாது, மூன்று மடங்கு அதிகமான படைகள் வேண்டும் என்று அமெரிக்காவின் மூத்த படைத் தளபதிகள் யுத்தம் துவங்கியதிலிருந்தே கூறிவருகிறார்கள். அப்படியானால் ஈரானைத் தாக்க எவ்வளவு பெரிய படை வேண்டும் என யூகித்துக் கொள்ளுங்கள். ஆக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எண்ணை விநியோகம் தடைபடாமல் ஈரானை நசுக்குவது என்பது தற்போது சாத்தியமில்லை.

ஈரானின் எரிசக்தி வளம், ‘இயற்கையாகவே’ அமைந்துவிட்ட அதன் அரசியல் புவியியல் முக்கியத்துவம் போன்றவை மட்டுமின்றி வேறு சில முக்கிய காரணங்களும் இருக்கின்றன; அமெரிக்கா அதன் மீது கண்வைக்க!

Manmohan-Bush ஈரான் தற்போது தன்னால் முடிந்ததைவிட மிகக் குறைவாகவே உற்பத்தி செய்து வருகிறது. இடையூறுகளோ தடைகளோ எதுவுமில்லாமல் உற்பத்தி அதிகப்படுமானால் உலகில் வேறு எந்த நாட்டை விடவும் கூடுதலான உற்பத்தியை சில வருடங்களில் எட்டிவிடும். உலக எரிசக்தி சந்தையில் அதன் பாத்திரம் ஏற்கனவே மிக முக்கியமானதாகும்; அது மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க பெரு மூலதனம் இச்சந்தையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்புகிறது. ஆனால் ஈரானோடு வர்த்தகம் செய்வதை அமெரிக்கச் சட்டம் தடைசெய்துள்ளது.

இதனால் ஈரான் வேறு பல நாடுகளுடன் வர்த்தகம் செய்கிறது. அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களாகிய ரஷ்யாவும் சீனாவும் அவற்றில் அடங்கும். ஈரான் எண்ணை வளப் பின்னணியில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஈரானோடு சேர்ந்து இந்நாடுகள் வர்த்தகம் செய்வதன் மூலம், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்வதன் மூலம் இன்னுமொரு பத்தாண்டுகளில் ஆசிய எரிசக்தி பாதுகாப்பு அமைப்பை (ASIAN ENERGY SECURITY GRID) உருவாக்க முடியும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் உலக எண்ணை விநியோகத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை உடைக்க முடியும்.

அது மட்டுமல்ல. மாபெரும் ஆசியத் தொழில் புரட்சியையும் சாதிக்க முடியும்!

எரிசக்தி என்பது வெறும் நுகர்வுப் பொருளல்ல. அது மூலதனச் சரக்கு. மூலதனச் சரக்கு என்றால்? அது செலவிடப்படும்போது சங்கிலித் தொடர் உற்பத்தியை விளைவிக்கும். எரிசக்தி இல்லையெனில் உற்பத்தியே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இன்னொரு அதிமுக்கிய மூலதனச் சரக்கான (CAPITOL GOODS) மின்சாரம் தயாரிக்கவும் இப்போது எண்ணை பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆசிய எரிசக்தி பாதுகாப்பு கிரிட் உருவாகத்தின் ஒரு சில பகுதிகளாக ஈரானிலிருந்து இந்தியாவிற்கு பாகிஸ்தான் வழியாகவும், துருக்மேனிஸ்தானிலிருந்து சீனா வரைக்கும் எண்ணை மற்றும் எரிவாயு குழாய்கள் அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

கிரிட் அமைக்கப்படுகிறதோ இல்லையோ ஈரான் தன்னுடைய எண்ணை வர்த்தகத்தின் பெரும்பகுதியை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பக்கமிருந்து ஆசியாவின் பக்கமே திருப்ப விரும்புகிறது. எரிசக்தி துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை சாத்தியமான அளவு குலைக்க வெனிசுலாவின் பாதையை ஈரான் பின்பற்றும் என்று கருதப்படுகிறது.

மேலும் இப்போது எண்ணை வர்த்தகத்தில் அமெரிக்க டாலரே நாணயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நியூயார்க் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லண்டன் இண்டர்நேஷனல் பெட்ரோலியம் எக்ஸ்சேஞ்ச் ஆகிய இரண்டு மிக முக்கியமான எண்ணைச் சந்தைகளிலுமே அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவை டாலரிலேயே வர்த்தகம் செய்கின்றன.

ஏற்கனவே சில நாடுகள் யூரோ மற்றும் இதர நாணயங்களில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்து விட்டன. ஈரானும் எண்ணையின் ஒரு பகுதியை யூரோவில் விற்கிறது. மேலும் அதற்கொரு கனவும் திட்டமும் இருக்கிறது. டெஹ்ரானில் ஒரு எண்ணை வர்த்தகச் சந்தையை நிர்மாணிக்க நினைக்கிறது. டாலர் தவிர்த்து யூரோ மற்றும் இதர நாணயங்களில் அதில் வர்த்தகம் செய்யப்படும். குறிப்பாக யூரோ.

இது நடந்தால் என்ன ஆகும்? டாலரின் தேவை வெகுவாகக் குறைந்து போய்விடும். ஏற்கனவே குறைந்து கொண்டிருக்கும் டாலரின் மதிப்பு பெருமளவு சரியும். அளவின்றி கடன் வாங்கியும் பற்றாக்குறை பட்ஜெட் போட்டும் சமாளித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

அமெரிக்காவிற்கு கிலி பிடித்துக் கொண்டுவிட்டது. இவையெல்லாம் நடக்கிறதோ இல்லையோ இப்படியெல்லாம் நினைப்பதே ஈரான் செய்யும் குற்றம். அந்நாட்டை தன் பிடிக்குள் கொண்டுவந்து விட்டால் ஆசிய எரிசக்தி பாதுகாப்பு கிரிட்டோ எண்ணை வர்த்தகச் சந்தையோ எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என அமெரிக்க பெரு மூலதனமும் ஆட்சியாளர்களும் துடிக்கிறார்கள்.

உண்மையில், அணு சக்தி வளர்ச்சிக்கான திட்டங்களையும் தொழில் நுட்பத்தையும், ஏன், அணுஉலைகளையும் கூட ஈரானுக்கு வழங்கியது அமெரிக்காதான்.

1953ல் சிஐஏவால் வழிநடத்தப்பட்ட கலகத்தின் மூலம் ஷாவை மீண்டும் மன்னராக்கியது அமெரிக்கா. பின்னர் 1957ல் அவரோடு அமெரிக்க சிவில் பணிகளுக்கான அணுசக்தி ஒப்பந்தம் போட்டது. அன்றிலிருந்து இஸ்லாமியப் புரட்சி (ஈரான்) காலம் வரை அணு உலைகள், செறிவூட்டப்பட்ட யுரேனியம், புளுட்டோனியம் போன்றவற்றையெல்லாம் கொடுத்து வந்தது. ஏராளமான எரிசக்தி வளம் கொண்ட ஈரானுக்கு எதற்கு அணுசக்தி என இன்று கேட்பதுபோல் அன்று யாரும் கேட்கவில்லை! தன்னுடைய பேரரசு கனவிற்காக ஷா நிஜமாகவே அணுகுண்டுகள் தயாரிக்க முயற்சிக்கும் சாத்தியம் உள்ளது என்று சந்தேகம் சிலரால் எழுப்பப்பட்டது. ஆனால் சாத்தியமே இல்லை என ஏகாதிபத்தியம் மறுத்தது. ஏனாம்? அவர் விசுவாசமிக்க கூட்டாளி; இஸ்ரேலின் நண்பர்!

இப்படி அன்று கூறியவர்கள் யார் தெரியுமா? அன்றும் இன்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் டொனால்ட் ரம்ஸ்பெல்டு; அன்று படைத்தளபதியாக இருந்த, இன்று துணை ஜனாதிபதியாக இருக்கும் டிக் சென்னி; அன்று அமெரிக்காவின் ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் அணு ஆயுதப் பரவல் தடைப்பிரிவின் தலைவராக இருந்த, இன்று துணை அமைச்சராக இருக்கும் பால் உல்போவிட்ஜ் ஆகியோர். (அன்று அமெரிக்க அதிபராக இருந்தது ஜெரால்ட் போர்ட்.)

இதே அயோக்கியர்கள் தான் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் சதாம் உசேனை ஈரான் மீது படையெடுக்குமாறு தூண்டியது. பின்னர் ஈராக் மீது படையெடுத்ததும், இன்று ஈரானை ஆக்கிரமிக்க நினைப்பதுவும் இவர்களே!
தங்களுக்கிடையே இருந்த பகைமையின் காரணமாக ஈராக்கும் ஈரானும் ஏகாதிபத்திய வல்லூறுக்கு போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்து, அதன் பேச்சையெல்லாம் கேட்டு இன்று அதற்கே இரையாகும் நிலைக்கு வந்துள்ளன!

மன்மோகன்சிங் காதில் விழுகிறதா இச்சொற்கள்?

இந்தியாவின் துரோகம்

அடுத்தவர் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமையில் அவர் இல்லை. இந்தியாவின் பிரதமருக்கு இவையெல்லாம் தெரிந்தே இருக்கும். ஆனாலும் அவர் அமெரிக்காவைச் சார்ந்திருக்க முடிவு செய்துவிட்டார்; இந்திய நலன்களுக்கு விரோதமாக!

ஈரானோடு 2000 கோடி டாலர் எரிவாயு ஒப்பந்தம் போட்டுள்ளோம். பாகிஸ்தான் வழியாக போடப்படும் குழாய் மூலமாக எரிவாயு ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வரும். தற்போது சந்தையில் என்ன விலையிருக்கிறதோ அதைவிட மிகக் குறைந்த விலையில் 25 வருடங்களுக்கு இந்தியாவிற்கு ஈரான் விற்கும்.
கடந்த அக்டோபர் மாத ஐஏஇஏ கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தபோது அந்நாட்டுத் தூதர் நம் தூதரிடம் கூறினார்: எரிவாயு ஒப்பந்தம் ரத்து!

அடுத்த 24 மணி நேரத்தில் மிகத் தீவிரமான ராஜதந்திர முயற்சிகளுக்குப் பின் ஈரான் கூறியது: ஒப்பந்தம் ரத்து இல்லை!

அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றும் அதிகமாகச் சொல்லவில்லை. இப்போது மீண்டும் இந்தியா ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளது. அநேகமாக எரிவாயு ஒப்பந்தத்தின் கதை முடிந்தது போலத்தான்.

ஆசிய எரிவாயு பாதுகாப்புச் சட்டத்தில் (GRID) இந்த எரிவாயுக் குழாயும் ஒரு பகுதி. பேச்சளவில் அல்லது எழுத்தளவில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தை இத்தோடு விட்டுவிட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மிரட்டினார். ஈரானோ இல்லை என்று சொல்கிற மாதிரி இந்தியா செய்துவிட்டது. இனி எரிவாயும் இல்லை; தொழில் புரட்சியும் இல்லை.

மன்மோகன்சிங் அரசாங்கத்தின் துரோகத்திற்குப் பின்னும் ஈரான் ஒருவேளை ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லiயென்றாலும் கூட எரிவாயு இவ்வளவு குறைந்த விலையில் வேண்டிய அளவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஈரான் ஒரு சுதந்திர நாடாக எதிர்காலத்தில் இருக்குமா என்பதே சந்தேகம். அமெரிக்கா ஆக்கிரமித்து விடக்கூடும். அப்படி நடந்தால் இந்தியாவின் நிலைமை என்ன ஆகும்?

ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தால் தன்னுடனான அணுமின்சார ஒப்பந்தம் ரத்து என அமெரிக்கா மிரட்டுகிறது. அந்த மிரட்டலுக்கு இந்தியா பணிந்துவிட்டதா அல்லது அந்த ஒப்பந்தத்தின் விதியே அதுதானா என்று ஐயம் எழுந்துள்ளது.

எப்படியாயினும், ஈரானும் அமெரிக்கா வசம் போய்விட்டால், அணுசக்தியோ எரிசக்தியோ, அமெரிக்காவை அண்டிப் பிழைக்க வேண்டியிருக்கும், அணுசக்திக்கு வேறு ஆளை நாடுகிறோம் என்றால் எரிசக்தி இல்லை என்பார்கள்; எரிசக்திக்கு வேறு ஆளை நாடுகிறோம் என்றால் அணுசக்தி இல்லை என்பார்கள்.

காஷ்மீர் பிரச்சனையை சர்வதேசப் பிரச்சனையாக மாற்றி இந்தியாவிற்குச் சிக்கலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு 1994ல் ஒரு முயற்சி பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அன்று இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளின் அமைப்பான ஓஐசி (OIC)யில் தீர்மானம் கொண்டு வரப்பட இருந்தது. ஈரான் அத்தீர்மானத்தை எதிர்த்ததால் அது தாக்கல் செய்யப்படவேயில்லை. அது அன்று செய்த உதவிக்கு இன்று நாம் மறுஉதவி செய்திருக்கலாம். நண்பனுக்குத் துரோகம் இழைத்திருக்கிறோம்.

பல வருடங்களாகவே அமெரிக்கா ஈரானைப் பழித்து வருகிறது. ஐஏஇஏ-வின் முதல் சோதனை 2000ல் நடத்தப்பட்டது. ஆனால் 2005 ஆகஸ்டுக்கு முன்பு வரை ஈரானால் அணுஆயுத ஆபத்து என்று எந்தவொரு இந்திய அதிகாரியோ, அமைச்சரோ அல்லது அரசாங்க அறிக்கையோ சொன்னதில்லை. 2005 ஜுலையில் புஷ் நிர்வாகத்தோடு அணுசக்தி ஒப்பந்தம் போடுகிறார்கள். ஆகஸ்டில் அணு ஆயுத ஈரான் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்! இடையே என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிப்பது சிரமமில்லை.

இந்தியாவின் கையைத் திருகி அமெரிக்கா தன் காரியத்தைச் சாதித்திருக்கிறது. எலும்புகள் உடையும் சத்தம் உலகெங்கும் கேட்டது. பரஸ்பர மரியாதையுடனும், சுதந்திரத்துடனும், சகஜ சமாதான வாழ்வு என்பதுதான் கூட்டு சேரா கொள்கையின் கோட்பாடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் தேசத்தின் இறையாண்மையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகு வைத்துவிட்டது; ஈரானுக்கும் அவமரியாதை செய்து விட்டது; தேசத்தின் மரியாதையையும் குறைத்துவிட்டது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com