Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006

புஷ் - திரும்பிப் போ
அர்ச்சனா

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்து சிதறடித்து எழுபதுக்கும் மேற்பட்டவர் களை பலிகொண்ட பயங்கரவாதியை குற்ற விசாரணைக்கு ஒப்படைக்க மறுப்பு.

America குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குற்றமற்றவர்கள் என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டும் அவர்களை விடுதலை செய்ய மறுப்பு.

சொந்த நாட்டு மக்களை இரவு பகலாக கண்காணித்து சட்டவிரோதமாக தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக்கேட்பு.

ஓசோன் படலத்தை அழித்து உலகின் உடல்நலத்தைக் கெடுக்கும் வாயுக்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறிய விஞ்ஞானிக்கு வாய்ப்பூட்டு.

உச்ச நீதி மன்றம் உட்பட அரசு உயர்பதவிகளில் தனக்கு, தனது கொள்கைக்கு வேண்டியவரை வெகுஜன எதிர்ப்புகளை மீறி நியமனம்.

ஆயிரக்கணக்கானோரை சிறைக் கொட்டடியில் அடைத்து நீதிமன்ற விசாரணை ஏதுமின்றி வருடக்கணக்காக சித்திரவதை - ஐ.நா. உட்பட உலகின் பலநாடுகள் கண்டனம்.

பல கோடிகளின் அதிபர்களுக்கு வரிச்சலுகை - ஏழை நடுத்தர மக்களுக்கான சலுகைகளில் வெட்டு ஆயிரக்கணக்கான பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்துக் கொண்டு தான் கூறியபடி கேட்காத நாடுகளை தாக்கப் போவதாக மிரட்டல். இன்னும் பல. . .

இவையனைத்தும் ஏதோ பல நூற்றாண்டு களுக்கு முன் வாழ்ந்த சர்வாதிகாரியின் செயல்களல்ல; அல்லது தற்போது மூன்றாம் உலக நாடுகள் என்று அறியப்படும் வறிய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கொக்கரிப்பும் அல்ல.

‘ஜனநாயகத்தின் பாதுகாவலன்’, ‘உலகின் உத்தமகாவலன்’ என தன்னைத்தானே முதுகில் தட்டிக் கொள்ளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவர் திருவாளர் ஜார்ஜ் புஷ்ஷின் லீலா வினோதங்கள்.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை கண்டிராத தேர்தல் தில்லுமுல்லுகளைச் செய்து ஆட்சியைக் கைப்பற்றி, மக்கள் விரோதக் கொள்கைகள் மூலம் வெகுஜன எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்ட போதிலும், அமெரிக்காவை உலக மக்களின் எதிரியாக திருப்பி சாதாரண மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட போதிலும், இரண்டாவது தேர்தலில் யுத்த பீதியைக் கிளப்பி மக்களின் பய உணர்ச்சியின் அடிப்படையில் வெற்றியைத் தேடிக்கொண்ட புஷ் இந்தியா வருகிறார்.

தங்களால் கடுமையாக முயன்ற பின்னும் செய்து முடிக்க முடியாதவைகளை லாவகமாகச் செய்யும் தங்கள் ஆதர்ஷ புருஷனை வரவேற்க சிவப்புக் கம்பளத்துடன் காத்துக் கிடக்கிறது இந்திய அதிகார வர்க்கம். அந்த அதிகார அடிமைக் கூட்டம் பார்க்க விரும்பாத, கேட்க விரும்பாத, கூற விரும்பாத கசப்பான உண்மைகளைக் கண்டு சாமானியன் கவலை கொள்கிறான்.

செப்டம்பர் 11, உலக வர்த்தக மையக் கட்டிடத் தாக்குதல் யுத்த வெறிபிடித்த அமெரிக்க பாசிச கும்பலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. வெறிபிடித்த ஆதிக்கக் கும்பல் ‘நாகரிகங்களின்’ மோதலைத் தொடங்கியது. பழிக்குப் பழியாக அப்பாவி ஆப்கானிய மக்கள் மீது தீ மழை பொழிந்தது. சாலைகளை அழித்தது, பாலங்களை உடைத்தது, திருமண வீட்டில் தீயிட்டது. மலைமுகடுகளில் குண்டு மழை பொழிந்தது. ஆப்கானில் பல்லாயிரம் உயிர்களைக் கொன்று ஊழித் தாண்டவமாடிக் கொண்டிருந்த யுத்த வெறியர்களுக்கு வாய்ப்பாக வந்தது ஈராக் பிரச்சனை.

வர்த்தக மைய கட்டிடம் தகர்க்கப்பட்ட அன்று மதியமே, தொடர்பு இருந்தாலும் இல்லா விட்டாலும் ஈராக்கை தாக்க அமெரிக்க ராணுவ அமைச்சர், உத்தரவிடுகிறார். துடித்தெழுந்த ஏகாதிபத்திய அடிவருடிகள் பேரழிவு ஆயுதங்கள் பெருமளவில் ஈராக்கில் தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் இட்டுக் கட்டி கதைத்தார்கள். நம்பாமல் பார்த்த உலகின் நெஞ்சத்தின் மீது ஏறிநின்று ஐ.நா.சபையின் கையைத்திருகி ஈராக் மீது போர் தொடுத்தது புஷ் தலைமையிலான ஏகாதிபத்தியம். மூன்று வருடங்கள் தாண்டிவிட்டன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்பும், ஈராக்கின் மாடமாளிகைகளை இடித்து, மசூதிகளை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த பின்பும் ஆயிரக்கணக்கான ஈராக்கிய இளைஞர்களை நாகரிக உலகம் நாணித் தலைகுனிய சித்திரவதை செய்து விசாரித்த பின்பும் பேரழிவு ஆயுதங்கள் கிடைத்தபாடில்லை. இல்லாத ஆயுதங்களின் பெயரில் போருக்கு முந்தைய பொருளாதார தடைகாலத்தில் உயிரிழந்த ஈராக்கியர் 15 லட்சத்திற்கும் அதிகம். இதில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். ஈராக் மக்களை பூவுலக நரகத்தில் தள்ளியபின் அடுத்த குறி ஈரான்.

அந்தக்கால இங்கிலாந்தின் கொடுங் குற்றவாளிகளின் வாரிசுகள், அமெரிக்க செவ்விந்திய இனத்தை படுகோரமாக படுகொலை செய்தவர்களின் வாரிசுகள், நாகரிகத்தின் தொட்டிலாம் ஈரான் மக்களை பயங்கரவாதி என்கின்றனர். ஈரான் அணுகுண்டு தயாரிப்பதற்காக குற்றம் சாட்டுகின்றனர். ஈராக் மீது ‘ஆதாரங்களை’ அடுக்கிய அதே அமைப்பு ஈரானுக்கான ஆதாரங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஈரான் மீது வெற்று விமானங்களைப் பறக்கவிட்டு வேவு பார்க்கிறது.

ஈரான் மீது பொருளாதார தடைகொண்டு வரத் துடிக்கிறது, உலக நாடுகளைத் தூண்டுகிறது ஆனால் ஒரு முறை ஏமாந்துபோன உலக நாடுகள் இம்முறை ஏமாறத் தயாரில்லை. ஈரான்மீது தன்னிச்சையாக போர் தொடுக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை உலக நாடுகள் அமெரிக்காவிடம் கோரியுள்ளன.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைகளை தன்வசம், ஏவத்தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா அரசு, இஸ்லாமிய மக்களின் எதிரியாக தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் சட்ட விரோதமாக இருநூறுக்கும் அதிகமான அணுவிசை ஏவுகணைகளை தயாரித்திருப்பதை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, ஈரான் விஷயத்தில் காட்டும் தீவிரம் ஈரானின் எண்ணெய் வளம் மீதான கண் என்பதன்றி வேறு எதுவாக இருக்க முடியும். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்ற ஈரான் இஸ்லாமிய நாடென்ற காரணம் வேறு. ஜார்ஜ் புஷ் ஆதரவாளரான அமெரிக்க செனட்டர் ஷாம் ப்ரவுண் பேக் கூறுகிறார், ‘முதல்படி ஆப்கானிஸ்தான், அடுத்து ஈராக் பின் இப்போது நீங்கள் ஈரான் மீதான கவனத்தைப் பார்க்கிறீர்கள்’ என்று.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் ஈரானுக்கு எதிராக டி.வி. ரேடியோ மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய எழரை கோடி டாலர் நிதி ஒதுக்க அமெரிக்க பாராளுமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். புஷ் நிர்வாகம் ஈரானை தனிமைப் படுத்த எடுத்த முயற்சிதான் “ஈரான் இந்திய எரிவாயு குழாய் திட்டத்திற்கு’ எதிர்ப்பு. ஈரானுடன் தொடர்பு கொள்ளும் இன்னும் பல நாடுகளையும் எச்சரித்துள்ளது.

புஷ் கும்பலின் நீண்ட காலத்திட்டம் ஈரானுடன் மட்டும் நின்று விடவில்லை. அடுத்த குறி வடகொரியா, சிரியா. சிரியாவுடன் இந்தியா செய்து கொண்டிருக்கும் எண்ணெய் வயல் சம்பந்தமான உடன்படிக்கையை ரத்து செய்ய அமெரிக்க கோருகிறது.

George Bush இஸ்லாமிய மக்கள் மட்டுமே புஷ்ஷின் எதிரிகள் என்பதல்ல. ஒடுக்கப்பட்ட பின்தங்கிய அனைவரும் எதிரிகளே. உலகம் முழுவதும் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்க தலைமையை ஏற்காத நாடுகளை குறிவைக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சி.ஐ.ஏ. அமைப்பு மூலம் அந்நாடுகளில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது. அந்நாடுகளின் ஆட்சியாளர்களை படுகொலை செய்யவும் தூண்டிவிடுகிறது. பொறுத்துப் பார்த்த லத்தீன் அமெரிக்கர்கள் போதும் உங்கள் உதவி எங்கள் கதையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ஜார்ஜ்புஷ்க்கு எதிராக கோஷமிடுகிறார்கள்.

தென்அமெரிக்காவை தடையற்ற வர்த்தக பகுதியாக மாற்றும் புஷ்ஷின் முயற்சி வெகுஜன எதிர்ப்பால் தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஜார்ஜ் புஷ்ஷின் வருகையின் போது லட்சக்கணக்கில் திரண்டு புஷ்ஷை திரும்பிப் போகச் சொல்லி கோஷமிடுகிறார்கள். அர்ஜென்டினா நாடு உலகவங்கி, ஐ.எம்.எஸ்ஸின் கடன்களை முன்னதாகவே திருப்பிச் செலுத்தி தன் உள்நாட்டு விவகாரங்களில் அவற்றின் தலையீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தன் சொந்த நாட்டு சாமான்ய மக்களையும் ஜார்ஜ் புஷ் விட்டு வைக்கவில்லை. வசதியானவர்களுக்கு, கோடீஸ்வரர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் இந்தச் சலுகைகள் மற்றும் ஈராக் போன்ற நாடுகளை ஆக்கிரமிப்பு போர் மூலமாக ஏற்படும் அதிக செலவுகளை ஈடுகட்ட சாமான்ய மக்கள் மேல் அதிகவரி, சமூக பாதுகாப்புத் திட்டங்களில் வெட்டு.

இதன் மூலம் 2011ம் ஆண்டிற்குள் சுமார் 700 கோடி டாலர் சேமிக்கப்படும் என்று கணக்கிடப் படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள் மறுவாழ்வு திட்டம், மாணவர் கல்விக் கடன் வசதி, இறந்துபோனால் இறுதிச் சடங்கிற்காக வழங்கப்படும் 255 டாலர் உதவி போன்றவற்றின் வெட்டு. பணியின் போது ஊனமுற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமும் வெட்டு. இது குறித்து கூறும் அமெரிக்க ஜனநாயக கட்சித் தலைவர் நான்சி பெலோச; “இந்த பட்ஜெட் தொழிலாளர்கள் உழைத்து போராடி சம்பாதித்த உறுதியளிக்கப் பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களை வெட்டும் குடியரசு கட்சியின் செயல் திட்டத்தை வெளிக் காட்டுகிறது” என்கிறார்.

பொருளாதார நிபுணர் டான்லி இ.கோலண்டன் எங்கு செல்கிறோம் என்பது தெரியாமல் இவ்வளவு வேகமாக செல்லும் இது போன்ற பட்ஜெட்டை நான் இதுவரை கண்டதில்லை என்கிறார்.

புஷ் நிர்வாகத்தின் சாமான்ய மக்கள் குறித்த அக்கறையின்மைக்கு கத்ரீனா உள்ளிட்ட சூறாவளிகளுக்கு பிந்திய நிவாரணப் பணிகள் சரியான எடுத்துக்காட்டு. பேரிடர் நிர்வாக அமைப்பை புறக்கணித்ததன் மூலம், அந்த அமைப்புக்கு சற்றும் தொடர்பில்லாத, தனிப்பட்ட முறையில் தனக்கு வேண்டப்பட்டவர் என்பதால் மட்டுமே உயர்பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் செயலின்மை காரணமாக நிவாரணப் பணிகள் அரையும் குறையுமாக நடந்தன. கறுப்பர் வெள்ளையின மக்கள் என்ற பாரபட்சம் தன்கோரப் பற்களைக் காட்டி நின்றது.

சூறாவளியின் போது கடலரிப்புச் சுவர்கள் உடையலாம் என நிபுணர்கள் எச்சரித்தும் புஷ் கவலைப்படாதது அமெரிக்க சுற்றுச்சூழல் பற்றி மட்டுமல்ல; உலகின் வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்களை சமாளிப்பது குறித்த கியேட்டோ ஒப்பந்தத்திலிருந்து புஷ் வெளியேறியதும் உலக சுற்றுச் சூழல் இயக்கத்திற்கு கிடைத்த பலத்த அடி உலகில் அவ்வகை வாயுக்களை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் அமெரிக்க இல்லாமல் ஒப்பந்தத்தினால் பயன் மிகக்குறைவே.

மனித உரிமை குறித்து மிக அதிகமாகக் கவலை கொண்டு மற்றநாடுகள் மேல் போர்த்தொடுக்கும் அமெரிக்கா தனது குடிமக்களையும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் தனக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று கருதுவோரையும் அடைத்து வைக்க பயன் படுத்தும் ‘குவான்டனாமோ’ சித்தரவதை பற்றிய ரத்தத்தை உறையவைக்கும் தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நீதிமன்ற விசாரணையின்றி கைதிகளைப் பூட்டிவைத்து சித்தரவதை செய்யும் இந்தக் கடற்படை சித்தரவதை கூடத்தை மூட ஐ.நா.சபை அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளது.

‘கடந்த நான்கு வருடங்களாக குவான்டனாமோ; சித்தரவதைக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்க அரசு நசுக்கும் மனித உரிமைகள் பற்றிய கண்டனத்திற்கும் மறுபெயராக உள்ளது என்கிறது’ ஐ.நா. அறிக்கை.

அமெரிக்காவின் ஆஸ்தான சீடன் பிரிட்டனும் இதே வேண்டுகோளை விடுத்துள்ளது. அமெரிக்க நாட்டில் சித்தரவதைக்கு எதிரான சட்டங்கள் கடுமையானதாக இருப்பதால் அமெரிக்கா இதுபோன்ற சித்தரவதைகளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வைத்து நடத்துகிறது. இந்த சித்தரவதைக் கூடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றவர்கள் பிரிட்டன் வழியாக கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து பிரிட்டனிலும் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குவான்டனாமோ சித்தரவதைக் கூடமும் அமெரிக்காவில் இல்லை. கியூபாவில் இருக்கும் அமெரிக்கக் கப்பற்படைத் தளத்தில் செயல்படுகிறது.

‘குவான்டனாமோ சித்தரவதைக் கூடம் நமக்கு கண்ணுக்கு புலனாகின்ற ஒன்று. சி.ஐ.ஏ.வால் நிறுவப்பட்டுள்ள இது போன்ற கருந்தளங்கள் உலகெங்கும் நம் கண்ணுக்கு தெரியாமல் நிறைய இருக்கின்றன. அமெரிக்கா சட்டத்தின் ஆட்சிக்கு வெளியில் இருப்பதாக தன்னைக் கருதிக் கொள்கிறது’ என்று கூறுகிறார் அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பினுடைய செக்ரட்டரி ஜெனரல் அய்ரின்கான்.

மனிதகுல நன்மைக்கு எதிராக தொடர்ச்சியான செயல்பாடுகள், தத்துவங்கள் மூலமாக உலகின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் புஷ் ஆட்சியை விழுந்து விழுந்து ஆதரிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ஆனால் இந்திய அணுவிசை விஞ்ஞானிகளான டாக்டர்.வி.என்.பிரசாத், சுரேந்திரன் இருவருக்கும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா விசா தர மறுக்கிறது.

தன் சொந்த நாட்டு உள்விவகாரங்களில் அமெரிக்காவின் எந்தத் தலையீட்டையும் எந்தத் தயக்கமுமின்றி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் இவர்கள், இந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை சாதாரண மக்கள் உரக்கக் கூறுகிறார்கள் கொலைகார புஷ் திரும்பிப்போ.

நன்றி : அவுட் லுக் (படம்)




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com