Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006
அயல் மகரந்தச் சேர்க்கை

பூவரம்
பேரா. அப்துல் காதர்

இது பூவுலகம், நாளடைவில் பிள்ளையின் பெயரை வைத்தே இன்னார் அப்பா, இன்னார் அம்மா என அழைக்கப்படுவதைப் போலவே, நிலத்தையும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என பூக்களாலேயே நம் முன்னோர்கள் ‘ஞானஸ்நானம்’ செய்தார்கள். வாழ்விலும், சாவிலும் பூவே முதலிடம் பெற்றது. வழிபாட்டுக்கும் மலர்தான். உன்மதம், என்மதம், சம்மதம் ஆக்கும் மன்மதம்; மன்மத நாட்டின் ஏவுகணையே மலர்தான். Flowers



“அன்பே!
இந்தப் பூக்கள்
கொடியில் வாழ்வதைக் காட்டிலும்
உன்
கூந்தலில்
சாவதையே விரும்புகின்றன”

என்கிறான் வடமொழிக் கவிஞன் பர்த்துஹரியின் கவிதைக் காதலன். இரவில் மலரும் பூக்கள் எல்லாம் பால்சொட்டுப் போல; வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்? இரவின் நிறமோ கருப்பு. இருளின் நிறமும் கருப்பு. மலரின் காதலன் வன்டின் நிறமும் கருப்பு. இரவில், இருளில், வருகிறக் காதலன் தன் இருப்பிடம் தெரியாமல் தவிக்கக் கூடாது என்றே இரவுப் பூக்கள் வெள்ளையாகவே மலர்கின்றன.

காலகாலமாகச் சூரியனும், தாமரையும், நிலவும், அல்லியும் முறையே காதலன், காதலியாகப் பாடப்பெற்று வருகின்றன. இதனை ஏற்றுக் கொள்ள இயலுமா? சூரியனின் காதலி அல்லிதான். நிலவின் காதலி தாமரைதான்? சூரியன் வருகையில் தாமரையும், நிலவு வருகையில் அல்லியும் நாணமின்றி இதழ் அவிழ்த்து, காதலனை நேருக்கு நேர் பார்த்து விரிகின்றன. எந்தக் காதலி, காதலனைக் கண்டவுடன் இப்படி நடந்து கொள்வாள்? மாறாகச் சூரியன் வந்தவுடன் அல்லி நாணிக் கூம்பிவிடுகிறது. நிலவு வரும்போது தாமரையும் வெட்கத்தோடு இதழ் குவித்துக் தலை கவிழ்கிறது. எனவே சூரியன்-அல்லி, நிலவு-தாமரை என்பவைகள் தான் நிஜமான ஜோடியாக இருக்க முடியும்.

காதல் தேசத்து செலவாணி நாணயங்களே பூக்கள் தான். மலர் காதல் நட்பின் குறியீடு. பழைய தமிழ்ப்பாடல் ஒன்று காதல் நாட்புக் குறித்துப் பின்வருமாறு பேசுகிறது.

“கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி-நாட்டில்
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாற
நயப்பாரும் நட்பாரும் இல்”

இருவகையான பூக்கள். ஒன்று கிளையில் மலரும் கோட்டுப்பூ. மற்றொன்று குளத்தில் மலரும் கயப்பூ. கிளைப் பூக்கள் மலர்ந்து விட்டால் பின்னர் கூம்புவதில்லை. நல்ல நட்பும், காதலும் அப்படித்தான். ஆனால் இதற்கு எதிரான போலிக் காதலும், நட்பும், குளத்துப் பூப்போல, முதலில் விரியும், பின்னே கூம்பும். இதனை உள்வாங்கியே கவியரசு கண்ணதாசன் ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ திரைப்படத்திற்காக எழுதிய பாடலில், உண்மைக் காதல்

“ஒரு கொடியில்
ஒரு முறைதான்
மலரும் மலரல்லவா!
ஒரு மனதில்
ஒரு முறைதான்
மலரும் உறவல்லவா!

எனக் குறிப்பிடும் வரிகட்கு உலக இலக்கியங்களில் இணையில்லை. அடுத்த பெண்ணின் பெயரை, நாவினால் படித்தால் எச்சில் படுத்தியதாகி விடுமே என்று, இமையுதடுகளால் மட்டுமே படிக்கும் இங்கிதக் கற்பு உண்மைக் காதலுக்கு மட்டுமே சாத்தியம். பேரின்பக் காதலும் “காமமிகு காதலன் தன் கலவிதனைக் கருதுகின்ற, ஏமமிகு அன்புடையாள் இன்பினும் இன்பாய் அது” என்பார் வள்ளலார்.

ஞானப் பெண்மணி இராபியா பஸ்ரியிடம், ஒருவன் நீங்கள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. எனக் கேட்க, அவர்

1. “இவ்வுலகை விரும்புபவன் அலி
அலியை எப்படி மணக்க முடியும்?

2. சுவர்க்கத்தை விரும்புவது பெண்
நான் ஒரு பெண்!

3. இறைவனை விரும்புகிறவர் ஆண்
நீங்கள் ஒரு ஆண்

அந்த ஞானப்பூ இறைமணத்துடன் இரண்டறக் கலக்க விரும்பியது. இதனைப் பேரின்பக் காதலின், கற்புநிலையாக அறியலாம், மானுடர்க்கென்று பேச்சுப் படின், வாழகில்லேன்’ என்ற ஆண்டாளின் அகமியமும் படியெடுக்க முடியாப் பக்திக் கற்பாகும். ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் உறவாகும். அது புனிதமிக்க ஏகத்துவத்தின் பூப்பு நிலையாகும்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்தியாவிற்குக் கிடைத்தது குருதேவர் இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியால் தான். கீதாஞ்சலியின் சாரமே இறைக்காதல்தான்.

“இந்தப் பூவைப்
பறித்துக் கொள் தலைவா!
பூஜாவேளை தவறிவிட்டாலும் இந்தப் பூவைப்
பறித்துக் கொள் தலைவா
மலர்
பூஜைக்குப் பயன்படாவிட்டாலும்
உன் ஸ்பரிசமாவது
அதற்குக் கிட்டுமல்லவா!”

மொட்டு நிலையில் கும்பிடும் கரமாக இருக்கும் பூ, பக்குவ அவிழ்வில் மௌன மண மந்திர உச்சாடனத்தில் நிற்கிறது. முதிர்வின் உதிர்வில் பூசை வழியாக இறைமட்டம் அடையத் துடிக்கிறது. இந்தச் சடங்குகளில் இறை தரிசிக்கக் கிடைக்கலாம். ஸ்பரிசிக்கக் கிடைக்குமா? பூசை வேளை தவறிவிட்டாலும் பூ தலைவனை எண்ணியே ஒற்றைக் காலில் தவம் இருக்கிறது. எதற்காக? அள்ளி வழங்குபவன், கிள்ளி வழங்க மாட்டானா? அப்படிக் கிள்ளும் போது கிடைக்கும் அவன் ஸ்பரிசமே எனக்கு முக்தி எனப் பூ எண்ணுவதாகத் தாகூர் குறிக்கிறார். நார் கழுத்திறுக்கும் போதும் சிரிக்கும் பூ. பிணத்தின் மேல் விழுகையிலும் அருவெறுப்பின்றிச் சிரிக்கும் பூ. வாழ்வின் அர்த்தமற்ற நிலையாமையைச் சொல்லிச் சிரிக்கும் பூ. இப்படிப் பல படிநிலைகளில் பூ ஆன்மாவின் உருவகமாக நிற்கிறது. அவன் தீண்டலுக்காகவே, மரணம் கூட அவன் சரணத்திற்காகவே என்ற பூ வாழ்வு நமக்குள் கமழ்கிறது. பூவரம் தா என இறைவனிடம் கரமலர்கள் துஆவில் (பிரார்த்தனையில்) விரிகின்றன.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com