Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
மார்ச் 2006
விளையாட்டென்றால் விளையாட்டா?

மடியில் விழுந்த மாங்கனி

- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

வெற்றி என்னும் மாங்கனி மரத்தில்தான் இருந்தது. அதை பாகிஸ்தானியர்கள் பறித்தார்கள் என்று சொல்வதைவிட, நம் இந்திய அணியின் புண்ணியத்தால் அது, அவர்கள் மடியில் தானே வந்து விழுந்தது என்று சொன்னால் மிகையல்ல.

ஆறுக்கு முப்பத்தாறு என்கிற அவலத்திலிருந்து, பாகிஸ்தான் அக்மல் என்கிற இளைஞனின் சாகசம் நிறைந்த ஆட்டத்தால் மீள்கிறது. எந்த எண்ணமும், கவலையுமின்றி, எந்த அழுத்தத்தின் நிழலும் தன்மீது படியாமல் கர்மமே கண்ணாயினார் என்று ஆடினார் கம்ரான். ஆகவே ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

Cricket ரன் மழையும், நிஜ மழையும், மாறி மாறி சுழன்றடித்த முதல் டெஸ்ட் போகட்டும். இரண்டாவது டெஸ்டில் யூனிஸ்கான் இரட்டைச் சதம் பெரும்வரை காத்திராமல், அவர் முதல் சதம் பெற்றபோதே, ஒரு நியாயமான இலக்கை நிர்ணயித்து விட்டு, ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்து, இந்திய அணிக்கு ஒரு சவாலை விடுத்திருந்தால், அது ஒருநாள் போட்டி ஆட்டத்தை விட படு விறுவிறுப்பாக இருந்திருக்கும். ஏன் செய்யவில்லை?- பயம்!

மூன்றாவது டெஸ்டில், ஆறுநூறுக்கும் அதிகமான ரன்கள் முன்னிலை பெறும் வரை, பாகிஸ்தான் அசையக்கூட இல்லை. அப்துல் ரஸ்ஸாக் தொண்ணூரில் ஆட்டமிழந்தார். இல்லாவிட்டால் அவர் சதம் பெறும் வரை கூட காத்திருப்பார்கள். ஏனெனில் விரேந்திர சேவாக் முதல், இர்பான் பத்தான் வரை எட்டு பேர் அங்கீகரிக்கப்பட்ட பேட்ஸ்மேன்கள், இந்தத் தலைக.ள் மட்டும் அல்ல தேவைப்பட்டால் கும்ப்ளே, ஸஹிர், ஆர்.பி.சிங் என்கிற வால்களும் ஆடும்.

இந்த பயத்தைத்தான் இல்லாமலாக்கி, தங்களையும் ஏமாற்றிக் கொண்டு, நம்மையும் ஏமாற்றி இருக்கிறார்கள் இந்திய அணியினர். இதற்காக அவர்கள் யாரையும், ஆடுகளம் உட்பட, எதையும் குறைகூறு முடியாது. ஆடுகளம் இரண்டு அணிகளுக்கும் ஒன்றுபோல கைகொடுக்கவும் செய்தது; காலை வாரவும் செய்தது. இர்பான் பத்தானின் ‘ஹாட்ரிக்’குடன் ஆறு விக்கெட்டுக்களை நமக்கு அள்ளித்தந்ததும் அதே ஆடுகளம்தான். அப்புறம் இரண்டாவது இன்னிங்சில் நாமே தடுக்கி விழுந்து, மூஞ்சி முகரையை பெயர்த்துக் கொள்ளச் செய்ததும் அதே ஆடுகளம்தான்.

அதே ஆடுகளத்தில்தான் பாகிஸ்தான் அணி 140 ஓவர்களில், பைசல் இர்பானின் சதம் உட்பட அனைத்து பேட்ஸ் மேன்களும் அரை சதங்களை பூர்த்தி செய்துள்ளனர். ஆனால் நாமோ அறுபதுக்கும் குறைவான ஓவர்களில் அத்தனை பேரும் சுருண்டு போனோம். பாதிப்பேர் இரட்டைப்படை எண்களைக் கூட எட்டவில்லை என்பதுதான் சோகம்.

சர்ச்சைக்குரிய கங்குலியை உள்நுழைப்பதற்காக, நல்ல திறனுடன் இருந்த முகம்மது கைஃபை கொண்டு செல்லாதது முதல் தப்பு. கைஃபும், யுவராஜ்சிங்கும் களப்பணியாற்றினால் எதிரணிக்கு கிடைக்க வேண்டிய சுமார் 30-40 ரன்கள் கிடைக்காமலே போய்விடும். இவர்கள் இருக்கும் திக்கில் செலுத்திடவே எதிரணி பேட்ஸ்மேன்கள் யோசிப்பார்கள். அந்த வகையில் இந்தியாவின் நட்டம், உத்திரபிரதேச மாநிலத்தின் லாபம், முதல் இன்னிங்சில் 92, இரண்டாவது இன்னிங்சில் சதம். நல்ல தலைமை, நல்ல திறமை ஆகியவற்றுடன் உத்திரபிரதேசம் ரஞ்சி விருது துவங்கிய 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக ரஞ்சி கோப்பை கைப்பற்றும் சரித்திரம் கைஃபால் நிகழ்ந்திருக்கிறது.

இரண்டாவதாக, டிராவிட் ஆட்டத்தை துவக்கியதே தவறு. முதல் டெஸ்டில் ஆட்டத்தை துவக்கி அவர் சதம் பெற்றது Beginners Luck எனப்படும் ஆரம்ப சூரத்தன வகை. இதற்காகவே கொண்டு செல்லப்பட்ட வசிம் ஜாஃபரை பயன்படுத்தி இருக்க வேண்டும், அல்லது ஒருநாள் போட்டி ஆட்டங்களில் ஆட்டத்தை துவக்கி, அனுபவமுடைய கங்குலியை பயன்படுத்தியிருக்க வேண்டும். மறுத்திருப்பின் அணியை விட்டே தூக்கி இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, இரண்டு விக்கெட்டுகள் சடுதியில் வீழ்ந்த நிலையில் Pinch-Hitter என்கிற வகையில் இர்பான் பத்தானை அல்லது எதிரணியை கதிகலங்கச் செய்தவர் என்கிற வகையில் மகேந்திரசிங் டோனியை களமிறக்கி இருக்க வேண்டும். இப்படி அனுப்பப்பட்ட தருணங்களில்தான், அவர்கள் ஒளிவிட்டு வெளிச்சத்துக்கு வந்தார்கள் என்பதை எப்படி இத்தனை சடுதியில் மறந்து போனார்கள் என்பது புரியாத புதிர்.

ஜியோஃப் பாய்க்காட் சொன்னது போல் 600 என்கிற இலக்கை எட்டுவது என்பது ஏதாவது அற்புதங்கள் நிகழ்ந்தாலொழிய சாத்தியமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே தோல்வி இங்கு பிரச்சனையல்ல. எதிர்கொண்ட அம்பு மார்பில் தைத்ததா முதுகில் குத்தியதா என்பது தான் கேள்வி. ஐந்தாவது நாள்வரை இழுத்தடித்து ஒரு நானூறு ரன்கள் பெற்று தோற்றிருந்தால் அதில் ஓர் அந்தஸ்த்து உண்டு.

பாகிஸ்தானியர்கள் இரண்டாவது டெஸ்டில் தோல்வி இல்லை என்பதை உறுதி செய்வதில் குறியாக இருந்தார்களே தவிர, வெற்றியை பற்றி யோசிக்கவில்லை. மூன்றாவது டெஸ்டிலும் தோல்வி இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு தான் வெற்றியைப் பற்றி யோசித்தார்கள்.

இந்த இடத்தில் சில புகழ்பெற்ற Declaration (ஆட்டம் முடிந்ததற்கான அறிவிப்புகள்) நினைவுக்கு வருகின்றன. மேற்கிந்தியத் தீவுகளில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டி, சமநிலையை நோக்கி அன்ன நடை போடுகிறது. பார்வையாளர்கள் கொட்டாவி விட ஆரம்பிக்கின்றனர். திடீரென்று எழுந்தார் அணித்தலைவர் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ். ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தார். அப்படி ஒன்றும் வலுவான நிலையில் அணி அப்போது இருக்கவில்லை என்றாலும் ஒரு துணிச்சல். எதிரணிக்கு ஒரு சவால். ஆட்டத்துக்கு விறுவிறுப்பூட்டி, திடீரென்று பரபரப்பை ஏற்படுத்தி உயிர் கொள்ள வைத்த செயல். மேற்கிந்திய தீவுகள் அணி தோற்றது. சோர்சுக்கு உள்ளூரில் கண்டனம். ஆனால் உலகெங்கும் பாராட்டு.

ஆஸ்த்ரேலியாவுக்கும், பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி. ஆஸ்த்ரேலியா அணித்தலைவர் மார்க் டெய்லர் முன்னூறுக்கும் அதிகமான ரன்களைப் பெறுகிறார். பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க ஒரு பொன்னான வாய்ப்பு. ஆனால் டெய்லர் அதுபற்றிக் கவலைப் படவில்லை. பாகிஸ்தான் அணியை வெளியேற்றி, தன் அணி வெற்றி பெற போதிய அவகாசம் வேண்டும் என்பதற்காக, ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவிக்கிறார்.

சமீபத்தில் ஆஸ்த்ரேலியாவில் ஒரு டெஸ்ட்டை வென்று ஆஸ்த்ரேலியா முன்னில் நிற்கிறது. அடுத்த ஆட்டம் சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், இந்த போட்டியில் வென்றால்தான் தொடரை சமன் செய்ய முடியும். தோற்பதாயிருந்தால் ஒன்றில் தோற்றால் என்ன? இரண்டில் தோற்றால் என்ன? வெற்றி பெற்றால் தொடரைச் சமன் செய்யலாமே என்று, வெற்றி பெற வேண்டும் என்கிற திடத்துடன், வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கையுடன், தோற்றாலும் பரவாயில்லை என்கிற துணிச்சலுடன், தென்ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மிட் ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவிக்கிறார். தோற்கவே செய்கிறார். ஒரு வித்தியாசம் இவருடைய துணிச்சலான அணுகுமுறைக்கு வெற்றி பெற வேண்டும் என்கிற, துணிச்சலான முயற்சிக்கு உள்ளூரிலும் பாராட்டு, உலகெங்கிலும் பாராட்டு.

வெற்றி-தோல்வி பெரிதல்ல கிரிக்கெட் முக்கியம் என்றெண்ணிய சோபர்சின் பெருந்தன்மை. தன் சாதனையை விட அணியின் வெற்றி முக்கியம் என்றெண்ணிய டெய்லரின் தன்னலமற்ற தன்மை. கையை நனைக்காமல் மீன்பிடிக்க முடியாது என்று எண்ணித்துணிந்த கிரேம் ஸ்மித்தின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை, பாகிஸ்தான் தலைமைக்கு ஏன் ஏற்படவில்லை?

பயமா? புத்திசாலித்தனமா? ஜாக்கிரதை உணர்வா? இவை எதுமில்லை. இந்தியாவோடு பாகிஸ்தானும், பாகிஸ்தானோடு இந்தியாவும், மோதும் போது இரு அணியினருக்கும் ஏற்படும் ஒரு வித குளிர் ஜுரம். டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்றதென்று ஒருநாள் போட்டி ஆட்டத் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றிருப்பதை Poetic justice கவிதைசார்நீதி என்று வர்ணிக்கலாம். யுவராஜ் சிங், இர்ஃபான் பத்தான், மகேந்திரசிங் தோனி, ருத்ர பிரதாப் சிங் ஆகியோர் மூத்த ஆட்டக்காரர்களின் உறக்கத்தை கெடுத்திருக்கிறார்கள். அகர்கர் போன்ற ‘அதிகப் பற்றுகள்’ இனி அணியில் தொடர்வது கடினம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com