Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006

பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள்: ஸ்ரீராமானுஜரின் முயற்சிகள்

அ.மார்க்ஸ்

மே16ம் தேதி கூடிய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், எந்த சாதியைச் சேர்ந்தவர் களானாலும் ஆகமம் பயின்று தகுதியுடையவர்களாயின் அர்ச்சகராகலாம் என்கிற முடிவை கலைஞர் அரசு எடுத்துள்ளது. தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகளிலேயே ரொம்பவும் துணிச்சலானதும் முக்கியமானதும் இதுவே. எனினும் இதற்கான ஆணை வெளியிடப்பட்டு, ஏதேனும் ஒரு பெருந்தெய்வக் கோயிலில் பார்ப்பனரல்லாத ஒரு அர்ச்சகர் கருவறைப் பிரவேசம் செய்து பூசையை நிறைவேற்றும் போதே கலைஞரின் முயற்சி முழு வெற்றியடைந்தது என ஏற்க முடியும்.

அமைச்சரவை முடிவை, நாம் எதிர்பார்த்தது போல, அர்ச்சகர் சங்கம் எதிர்த்துள்ளது. இதன் மாநிலத் தலைவர் எஸ். அருணாசலம் என்பவர் “இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அரசியல் சட்டம் வழங்கும் மதச் சுதந்திரத்திற்கு எதிரானது” என்று சாடியுள்ளார் (இந்து, மே.17). சட்டம் வரும்போது அவர்கள் இந்த அடிப்படையில் நீதி மன்றத்தை அணுகுவார்கள் என்பதில் அய்யமில்லை.

இதே நேரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற முடிவை ‘ஸ்ரீ வைணவ அர்ச்சகர்கள் கமிட்டி’ ஆதரித்துள்ளது. இதன் தலைவர் உ.வே.ஆ.ச. நம்பிள்ளை ராமானுஜர் விடுத்துள்ள அறிக்கை வாசகங்கள் வருமாறு:

“இந்து அறநிலையத் திருக்கோயில்களில் காழ்ப்புணர்ச்சியுடனும், சாதி வித்தியாசங் களுடனும் தீண்டாமை தலைவிரித்தாடும் இந்நேரத்தில் தகுதியுடைய அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் என்கிற மனித நேய உத்தரவை சமூக நல்லிணக்கத்துடன் வரவேற்கிறோம். வாழ்த்து கிறோம். கொண்டாடுகிறோம். இந்த உத்தரவைப் பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

மேலும் வைணவக் கோயில்களில் திராவிட வேதமாகிய நாலாயிர திவய்ப் பிரபந்தத்தை பிராமணர்கள் மட்டும்தான் இறைவன் முன் ஓதுகிறார்கள். மற்றசாதி ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுமதிப்பது கிடையாது. அதேபோல இறைவனுக்கு நைவேத்யம் செய்யப்படும் பிரசாதமும் பிராமணர் களுக்கு உட்கார வைத்து கொடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு நிற்க வைத்துக் கொடுக்கிறார்கள்.

இந்த மனித உரிமை மீறலைத் தடுத்து நிறுத்தி எல்லோரையும் சமமாக நிறுத்தி, எல்லோரையும் சமமாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று முதல்வரை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”
(தினகரன் - மே.21)

கவனமாக மேற்படி அறிக்கையை வாசித்துக் கொள்ளுங்கள். இந்து மதத்திற்குள்ளிருந்து இப்படி ஒரு குரல் நமக்கு வியப்பை அளித்தாலும், தென்னிந்திய வைணவத்தின் வரலாற்றை, குறிப்பாக வைணவத் தத்துவப் பேராசிரியர்களில் முதன்மையானவரும், நடைமுறையில் பல சீர்திருத்தங்களுக்காகப் போராடியவருமான ஸ்ரீராமானுஜரது செயற்பாடுகளையும் அறியும் போது வைணவத்திற்குள்ளிருந்து இப்படி ஒரு குரல் எழுவதை நாம் புரிந்து கொள்ள முடியும். புகழ்பெற்ற தென்னிந்தியவியல் அறிஞர் (மறைந்த) பர்ட்டன் ஸ்டெய்ன் மத்தியகால வைணவத்திற்கு

சூத்திரர்களின் இடம் குறித்து கருத்தியல் தளத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தையும் நடைமுறையில் மேற்கொள்ளப் பட்ட சில மாற்றங்களையும் குறித்து எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலிருந்து சில தகவல்களை இங்கே, இந்நேரத்தில் முன் வைப்பது பயன் தரும்.

மத்திய கால பக்தி இயக்க அடிப்படையில் உருவான மதப்பிரிவுகளுள் ஸ்ரீவைணவத்தை உருவாக்கிய ராமானுஜர் (பி.இ.பி: 1017), வைணவத் தலங்களில் முதன்மையானதாக திருவரங்கக் கோயிலின் வழிபாடு மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் தலையீடு செய்து ஆழ்வார்கள் பாடிய சாதிச் சமத்துவத்தை நிலைநாட்ட பெரு முயற்சிகள் செய்தார். மூன்று முக்கிய தென்னிந்திய வைணவத் திருத்தலங்களில் திருவரங்கக் கோயில் வரலாற்றைச் சொல்கிற ‘கோயில் ஒழுகு’ மற்றும் திருப்பதியிலுள்ள திருவேங்கடக் கோயிற் பிரகாரத்திலுள்ள நீண்ட கல்வெட்டு ஆகியவற்றி லிருந்து இது தொடர்பாக சில முக்கிய செயதிகள் கிடைக்கின்றன.

வைணவத் தலங்களின் ஆகம வழிபாட்டு முறையில் இரு மரபுகள் உண்டு. முதலாவது : பஞ்சராத்ரம ஆகமம். கி.மு. முதலாயிரத்தில் உருவான இம்மரபு விஷ்ணுவை வணங்குவதற்கான சில நெறிமுறைகள், கோட்பாடுகள், சடங்குகள், தொன்மங்கள் ஆகியவற்றின் தொகுப்பு, இறுக்கமான பார்ப்பன ஆதிக்கம் உருவாகாத காலத்தில் தோன்றிய இவ்ஆகம நெறியில் விஷ்ணு வழிபாட்டில் பார்ப்பனரல்லாதோரின் பங்கேற் பிற்கும், சமஸ்கிருதம் இல்லாத மக்கள் மொழிகள் பயன்படுத்தப்படுவதற்கும் ஓரளவு இடமுண்டு. இரண்டாவது மரபு : வைகானச ஆகமம். விஷ்ணு வழிபாட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்கள் மட்டுமே பங்கேற்பதற்கும், சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்படுவதற்கும் காரணமான இம்மரபே ஸ்ரீராமானுஜரின் காலத்திற்கு முன்னர் தென்னக வைணவக் கோயில்களில் வழிபடு நெறியாக இருந்தது.

ஸ்ரீ ராமானுஜரும் வைணவத் தத்துவ உருவாக்கத்தில் அவர் வழியின் பின்னாளில் பெரும் பங்களிப்புகளைச் செய்த வேதாந்த தேசிகரும் (பிறப்பு கி.பி : 1269), பிள்ளை லோகாச்சாரியாரும் (பிறப்பு கி.பி.1264) மேற் கொண்ட முயற்சிகளின் விளைவாக வைணவக் கோயில்கள் பலவற்றில் வைகானச ஆகம முறை நீக்கப்பட்டு பஞ்சராத்ர முறை இடம் பெறலாயிற்று. ஆனால் இதொன்றும் அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை. பஞ்சராத்ர மரபை நடைமுறையாக்கு வதற்கு ஸ்ரீராமானுஜர் பெரும் போராட்டங்களை உள்ளுக்குள் நடத்த வேண்டியிருந்தது. அப்படியும் கூட அவர் வாழ்நாளில் மூன்று முக்கிய தென்னகத் தலங்களில் திருவரங்கத்தில் மட்டுமே அதைச் சாதிக்க முடிந்தது. திருவேங்கடத்திலும், பத்மநாப சுவாமி ஆலயத்திலும் (திருவனந்தபுரம்) இதைச் சாதிக்க இயலவில்லை. முழுமையான பார்ப்பன ஆதிக்கம் அங்கு தொடர்ந்தது.

பஞ்சராத்ர ஆகம மரபு குறித்த பல கையேடுகள் சுமார் நூறாண்டுகாலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றுள் தலையாயது பரமசம்ஹிதை (11ம் நூற்றாண்டு) யாரெல்லாம் ஸ்ரீவைஷ்ணவர்களாக இயலும் என்பதற்கு பரமசம்ஹிதை அளித்த வரையறை: 1.இருபிறப்பாளர்கள் 2.நற்பிறவி, நற்பண்பு, நற்குணம் வாய்க்கப் பெற்ற சூத்திரர்கள். இத்தகைய சூத்திரர்கள் 12 ஆண்டு காலம் முறையான பயிற்சி பெற்றால் மூன்று விதமான அக்னி வழிபாடுகள் தவிர (பரி-ஹோமா / அக்னிகார்யம்) மற்றெல்லா வைணவ வழிபாடுகளிலும் பங்கு பெற அருகதை உண்டு எனவும் பரமசம்ஹிதை கூறியது. விலக்கப்பட்ட அம்மூன்று அக்னி கார்யங்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது.

பார்ப்பனர்களின் சடங்கு மேலாண்மையில் ஒருபடி உயர்வு தொடர்ந்த போதும் ஆலய வழிபாட்டிற்கான பிறவித் தகுதி தகர்க்கப்படுவதென்பது அன்றைய சூழலில் மிகப்பெரிய கலகம் என்பதை விளக்க வேண்டியதில்லை.

இந்த இடத்தில் தென்னக வைணவத்தில் உருவான வடகலை / தென்கலை வேறுபாடுகள் பற்றிச் கொஞ்சம் காணலாம். வடகலை வைணவர்களால் ஸ்ரீராமானுஜருக்குப் பிந்திய பேராசிரியராக (குரு) ஏற்கப்படுபவர் வேதாந்த தேசிகர். சாதி குறித்தும், சாதிக் கடமைகள் குறித்தும், வருணாசிரமம் குறித்தும் அவரது எழுத்துக்கள் அதிகம் வற்புறுத்தும். பஞ்சராத்ர மரபு வற்புறுத்தும் சமூக சமத்துவக் கருத்துக்கள் வருணப் படிநிலையைக் குலைத்துவிடும் என்கிற கவலை அவரது எழுத்துக்களில் உள்ளார்ந்து நிற்கும். வருண சாதிப்படி நிலையில் கீழே உள்ளோர் கடமைகளில் தவறுவது சமூக ஒழுங்கை குலைத்துவிடும் என்கிற அச்சம் அவருக்கு இருந்ததை அவரது புகழ் பாடும் வரலாற்றாசிரியர் களும் கூடச் சொல்லத் தவறுவதில்லை.

வடகலை மரபு வற்புறுத்திய இன்னொரு விஷயம் வழிபாட்டு முறையில் சமஸ்கிருதத்தின் தனித்துவமான இடம் குறித்தது. பெருந்தத்துவ விசாரங்கள் அமையப்பெறாத, உணர்வு பூர்வமான பக்தியை வற்புறுத்திய நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படும் ஆழ்வார் பாசுரங்களின் முக்கியத்து வத்தை வேதாந்த தேசிகர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் கொண்ட போதும் வடகலை வைணவத்தைப் பொருத்த மட்டில் விஷ்ணு வழிபாட்டில் நால்வேதங்களையுமே முதன்மைப் படுத்தியது.

தென்கலை வைணவம் விஷ்ணு வழிபாட்டிற்கு திராவிட வேதங்களான ஆழ்வார் பாசுரங்களே போதும் என்றது.

‘பிரபத்தி’ என்கிற வைணவக் கோட்பாடு குறித்த விளக்கத்திலும் வடகலையும், தென்கலையும் எதிரெதிர் நிலை எடுத்தன. ஒரு ஸ்ரீவைணவ பக்தர் முக்தியடைவதற்கு எத்தகைய பிரபத்தி நிலையை மேற்கொள்வது என்பது குறித்த கருத்து மோதலாக அது அமைந்தது. ஸ்ரீ ராமானுஜரைப் பொருத்த மட்டில் ‘பக்தி’ என்பது மத அனுபவத்தின் சடங்கு மற்றும் கருத்தியற் கூறுகளை ஒருசேரக் குறிக்கிறது. ‘பிரபத்தி’ என்பது - அதாவது பெருமாளிடம் முழுமையாகச் சரண் புகுவது பக்தியில் ஒரு நிபந்தனை.

வடகலைக் குருவான வேதாந்த தேசிகரைப் பொருத்த மட்டில் பிரபத்தி இறைவனை அடையும் பல்வேறு வழிமுறைகளில் ஒன்றென்ற போதிலும், பிரபத்தி நிலையை மனித எத்தனம் முக்கியம் பெருமாளிடம் சரண் புகுதல் மட்டும் போதாது. பிரபத்தியில் குருவின் பங்கை இது வற்புறுத்துகிறது. (பார்ப்பன) குருவின் நெறிப் படுத்தலில் நான்கு வேதங்களையும் கற்றுப் பொருளுணவர்தன் மூலமே பிரபத்தி நிலையை அடைய முடியும். அதாவது வேதக் கல்வி மறுக்கப்பட்ட சூத்திரர்கள் பிரபத்தி நிலையை அடைவது சாத்தியமில்லை.

தென்கலை வைணவத்தின் தலையாய குருவாகிய பிள்ளை லோகாச்சாரியார் பிரபத்தி நிலையை அடைவதற்கு முழுமையான சரண் புகுதல் மட்டுமே போதும் என்றார். குருவின் இடமும், வேதப் பொருளுணர்தலும் இங்கே முக்கியமில்லை. எனவே சூத்திரர்களும் பிரபத்தி நிலை எய்த முடியும்.

ஆக வடகலை, தென்கலை முரண் என்பது வைணவ ஆகம வழிபாட்டில் சூத்திரர்கள் மற்றும் மக்கள் மொழிகளின் இடம் குறித்தது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில் திருவரங்கக் கோயிலில் ஸ்ரீராமானுஜர் புகுத்திய வழிபாட்டு நடைமுறைத் திருத்தங்கள் எவ்வாறு பார்ப்பனரல்லாதவரை உள்ளடக்கியது என்பதைக் காண்போம். ஸ்ரீராமானுஜரின் நெறிமுறையின்படி ‘கோயில் கணக்கர்’ வெள்ளாள சாதியைச் சேர்ந்தவராக இருந்தார். பெருமாளுக்கு இளநீர் வழங்கும் இன்னொரு சடங்கு முக்கியத்துவம் வாய்ந்த பணி கைக்கோள சாதிக்கு அளிக்கப்பட்டது.

முக்கியமான வழிபாட்டுச் சடங்குப்பணி சூத்திர சாதிகளைச் சேர்ந்த ‘சாத்தா முதலிகளு’க்கு வழங்கப்பட்டது. அதாவது பூணூல் சாத்தாது (அணியாது) இறைப்பணிக்குத் தகுதியுடையோர், ஆசிரியரகாவும், புனிதராகவும் மதிக்கப்பட்ட இவர்களுக்கான ஒரே நிபந்தனை: சந்நியாசிகளாக (குடும்பத்தை / திருமணத்தைத் துறந்தவர்களாக) இருக்க வேண்டும் என்பதே. பார்ப்பனர்களுக்கு இந்நிபந்தனை இல்லை. சொல்லப்போனால் பிரம்மச்சாரிகளான பார்ப்பனர்கள் பூசைக் கடமைகளுக்கு தகுதியுடையவர்கள் அல்ல.

சாத்தா முதலிகள் தவிர சூத்திரக் குடும்பத்தினர் சிலர் கோயிலுடன் தொடர்புடைய வர்களாக இருந்தனர். குடும்பத்திலிருந்து விலகாமலும் தமது வழக்கப் பணிகளை / கைவினைத் தொழில்களைத் துறக்காமலும் முக்கிய சடங்குப் பணிகளுக்கு உரித்தவர் களாயினர். பொறுப்புகளும் அதற்குரிய மரியாதைகளும், கோயில் ஊதியமும் இவர்களுக்கு இருந்தது.

கி.பி.1323ல் முஸ்லிம் படை எடுப்பு நிகழ்ந்த வரை இது தொடர்ந்தது. சூத்திரர்கள் தமது பிறவி இழிவைத் தாண்டி இறைச் சடங்குகளுக்கு உரித்தாயிருந்தனர். முஸ்லிம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் கோயில் இருந்த காலத்தில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டதை நாம் அறிவோம். மீண்டும் விஜயநகர ஆட்சி வலிமையாகி அதனுடைய நேரடி அதிகாரிகளின் கட்டுப் பாட்டில் திருவரங்கம் வந்த போது ஸ்ரீராமானுஜரின் வழிபாட்டு நெறிமுறைகள் தூக்கி எறியப்பட்ட சூத்திரர்களின் சடங்கு உரிமைகள் பறிக்கப்பட்டு மீண்டும் முழுமையான பார்ப்பன மேலாதிக்கத்தில் திருவரங்கம் வந்தது. எனினும் ஸ்ரீராமானுஜரின் நெறிமுறை சுமார் 300 ஆண்டு காலம் நடைமுறையில் இருந்தது. தென்கலை ஆசாரியார்களான நம்பிள்ளை, அழகிய மணவாளர் முதலியோர் சூத்திரர்களின் சடங்கு உரிமைகளைக் காத்தனர்.

இன்னொரு முக்கிய வைணவத் தலமான திருவேங்கடம் இன்றுள்ள அளவிற்கு புனித யாத்திரைத் தலமாக ஆகியது 15, 16ம் நூற்றாண்டு களில் தான். வைணவ நெறிமுறைகளை இறுக்கமாகப் பேணிய பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இக்கோயில்கள் இருந்து வந்தது. திருப்பதியை உருவாக்கியவர் என ஸ்ரீராமானுஜர் போற்றப் பட்ட போதிலும் திருப்பதிக்கு அருகிலிருந்து அரசாண்ட சாளுவ நரசிம்மனே (15ம் நூற்றாண்டு) திருவேங்கடத் தலத்திற்கு நிறையக் கொடைகளை அளித்து அதை முக்கியமாக்கியவர். சாளுவ நரசிம்மனின் முகவராக இருந்து திருப்பதிக் கோயிலை நிர்வாகித்தவர் மணவாளரின் சிஷ்யர்.

சூத்திரராக இவர் இருந்திருக்கலாம் என யூகிக்க இடமுண்டு. 15 நூற்றாண்டு வரை வைகானஸ ஆகமப்படி வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டு வந்த திருவேங் கடத்தில் ஸ்ரீராமானுஜரின் நெறிமுறைகள் சாளுவ நரசிம்மன் காலத்தில் புகுத்தப் பட்டன. திருவரங்க நடைமுறைகள் இங்கே இடம் பெயர்க்கப்பட்டன.

‘சாத்தா முதலிகள்’ என்பதற்குப் பதிலாக இங்கே உருவாக்கப்பட்ட சூத்திர சந்நியாசிகள் ‘சாத்தாத ஏகாகி ஸ்ரீ வைஷ்ணவர்’ எனப்பட்டனர். இவர்களுக்குக் கோயிற் சடங்கு உரிமைகள் உண்டு. இவர்கள் தவிர கோயிலுக்குள் வீடுகள் கட்டப்பட்டு குடும்பத்துடன் குடியேற்றப்பட்ட சூத்திரக் குடும்பங்கள் (சாத்தா ஸ்ரீ வைஷ்ணவர்) முக்கிய சடங்குப் பொறுப்புகளை நிறைவேற்றினர். பஞ்சராத்ர ஆகம வழிபாடு முக்கிய பங்கு பெற்றது. சுமார் 50 ஆண்டு காலம் இந்நிலை தொடர்ந்தது.

சாளுவ நரசிம்மனின் காலத்திற்குப் பின் முழுமையாக திருவேங்கடம் விஜயநகர ஆட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது மீண்டும் வைகானஸ ஆகமம் நடைமுறைக்கு வந்தது. சாத்தாத ஏகாசிகள் சடங்கு உரிமையை இழந்தனர். சாத்தா ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூக்கொல்லையைப் பேணும் பொறுப்புக்கு இறக்கப்பட்டனர்.

பார்ப்பன மேலாண்மையைக் கேள்விக் குள்ளாக்கிய பலரும் (நீதிக் கட்சியினர் உள்பட) அவர்களின் அரசு அதிகார மேலாண்மையைத் தான் எதிர்த்தனரே ஒழிய, பார்ப்பனரின் சடங்கு மேலாண்மையைக் கேள்வி கேட்டதில்லை. சமீப அரசியலில் முதலில் இதற்காக களமிறங்கியது பெரியார் ஈ.வே.ரா அவர்களே. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் சாதித்த ஸ்ரீராமானுஜர் அவர்கள் நமது வணக்கத்துக்குரிய மிகச் சில பார்ப்பனர்களில் ஒருவராகிறார்.

ஸ்ரீராமானுஜரின் முயற்சிகள் தோற்ற தென்னவோ உண்மைதான். அதற்கான காரணங்களை ஆராய இது ஏற்ற சந்தர்ப்பமன்று. வருணாசிரம தர்மத்தை நிலை நாட்டுவது என வெளிப் படையாக அறிவித்து தென்னகத்தில் ஆட்சிக்கு வந்த விஜய நகர ஆட்சியும் பாரம்பரியமாக பார்ப்பனருக்கு இருந்த அதிகார பயமும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்க முடியும். பர்ட்டன் ஸ்டெய்ன் இன்னொரு காரணமும் சொல்வார். வடகலை ஒ தென்கலை என்கிற பிளவு முற்றி வைணவம் பலவீனமடைவதைப் பொறாத நிலையினரும் இதில் முக்கிய பங்கு வகித்திருக் கலாம். ‘முஸ்லிம் ஆபத்தில்’ வருணாசிரமம் சிதைந்துவிடும் எனச் சொல்லாடி பஞ்சராத்ர ஆகம முறை வீழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

வைணவத் தலங்கள், வழிபாட்டு முறைகள் தத்துவ விவாதங்கள் எல்லாவற்றையும் கூர்மையாக ஆய்வு செய்தால் படிநிலையில் கீழே உள்ள சாதியினரின் சமூக மேலியக்கம் குறித்த மேலும் பல உண்மைகள் தெளிவாகக் கூடும். ‘சூத்திரர்கள்’ என்பதில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளடக்கப் பட்டனரா என்பது தெரியவில்லை. வைணவ பக்தி மரபில் ‘சண்டாளர்’ உள்ளிட்ட அடியவர் களுக்கும் இடமிருந்ததை நாம் அறியலாம். ஸ்ரீராமானுஜர் தாழ்த்தப் பட்டவர்களுக்கெல்லாம் பூணூல் அணிவித்துப் பார்ப்பனர்களாக்கினார் என்றொரு வரலாறு உண்டு என்பதையும் அறிவோம். இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவதற்கு வைணவத் தரப்பிலிருந்து ஆதரவு வெளிப்படுவதன் பின்னணி இஃதே. ஸ்ரீராமானுஜரும், பெரியாரும் தோற்ற இடத்தில் கலைஞர் வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com