Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2007
கேரள முதல்வரின் துணிகரச் செயல்
- ஏ.எம். சாலன்

கேரள மாநிலத்திலுள்ள மிக முக்கியமான சுகவாச ஸ்தலங்களில் ஒன்று-மூணார். மூணார் போன்ற இடங்களில் மிகப்பெரிய முதலாளிகளும், தொழிலதிபர்களும் அங்குள்ள இடங்களை குறைந்த விலைக்கு வாங்கி, இயற்கை அழகை ரசிப்பதற்காக வேண்டி வரும் உள் நாட்டு-வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் தங்குவதற்கு வசதியாக ஏ.சி. அறைகளுள்ள மிகப்பெரிய கட்டிடங்களையும் ஹோட்டல்களையும் கட்டியமைத்து, அவர்களிடமிருந்து அதிகப்பணத்தைப் பெற்றுக்கொண்டு வாடகைக்கு விடுவது வழக்கம். அரசுக்குச் சொந்தமான இடங்களையும் அவர்களுடைய இடங்களோடு சேர்த்து சட்டத்துக்கு விரோதமாக அபகரித்து எடுத்து, கட்டிடங்களைக் கட்டிக்கொண்டு பத்தாயிரம், இருபதினாயிரம் ரூபாய் வரையில் வாடகையைப் பெற்று தங்கள் இரும்புப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருந்தார்கள், இங்குள்ள முதலாளிகள்.

தற்போதைய இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கேரளத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு மேற்கண்ட செயல்பாடுகளுக்கு மறைமுகமாக உதவி செய்து, கொடுத்துக் கொண்டிருந்ததே தவிர, அவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் வருவாய்த்துறை, பொதுமராமத்துத்துறை போன்ற துறைகளில் பணியாற்றும் உயர்ந்த அதிகாரிகள்கூட கைக்கூலியைப் பெற்றுக்கொண்டு அரசுக்குச் சொந்தமான இடங்களை அவர்கள் அபகரித்து எடுத்துக்கொள்ள ஒத்தாசை செய்து கொடுத்திருந்தார்கள்.

என்ன நஷ்டம்? அழகான ஹோட்டல்கள் கட்டப்படுவதினால் எல்லோருக்கும் பிரயோஜனப்படுவதுதானே-என்றெல்லாம் நமக்கு எண்ணத் தோன்றலாம்!

1. அரசுக்குச் சொந்தமான நிலங்களை தனிநபர்களோ, அல்லது தனியார் நிறுவனங்களோ அபகரித்து, கைக்குள்ளாக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

2. சுகவாச ஸ்தலங்களிலுள்ள இயற்கையும் சுற்றுப்புறச் சூழலும் இவர்களால் அபகரிக்கப்படுவதோடு மாசுபடுத்தவும்படுகின்றன.

இம்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டவார்களூம் மேற்கொண்டிருப்பவர்களும் வெறும் ஏழாம் கூலிகளல்ல! சில வேளைகளில் நம் நாட்டுச் சட்டங்கள்கூட இவர்களை நெருங்க பயப்படுவதுண்டு. அவ்வளவு பணபலம் உடையவர்கள் இப் பேர்வழிகள். இவர்களுக்குக் கடிவாளம் இடுவது யார்? இவர்களுடைய செயல்களை தடுத்து நிறுத்துவது எவ்வாறு? இவர்கள் அபகரித்து எடுத்த அரசு நிலங்களை மீட்டெடுப்பது எப்படி? என, கேரளம் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில்தான, கேரளத்தின் ஆட்சி பீடம் இடதுசாரிகளின் கைகளில் வந்து சேர்ந்தது.

இடதுசாரிகள், ஆட்சியைக் கைப்பற்றியதும் ஒரு முடிவை எடுத்தனர். எங்கெங்கெல்லாம் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டிருக்கிறதோ, அவைகளையெல்லாம் சட்டத்தின் துணையோடு மீட்டெடுக்க வேண்டும் என.

இதன்படி போனமாதம் (மே மாதம்) அந்த மாதிரி இடங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகளைக் கையடக்கி வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டீசுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் 24 மணி நேரத்திற்குள் அரசு நிலங்களில் கட்டப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டிடங்களையும் நீககம் செய்ய வேண்டும். இது அரசின் கட்டளை, என. அவ்வாறு நீக்கம் செய்யவில்லையென்றால், கேரள அரசு சட்டம், போலீஸ் - இவைகளின் துணையோடு அவைகளை நீக்கம் செய்யும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அளிக்கப்பட்ட தவணை நேரம் முடிவடைந்ததும், அரசு போலீஸ் பந்தோபஸ்துடன் மூணாரிலுள்ள ‘‘உட்சி’’ என்ற இடத்திலுள்ள ஏழு கட்டிடங்கள் நீக்கம் செய்யப்பட்டன. இதன் உரிமையாளர் கேரள மின்சார வாரியத்தில் தலைமை எஞ்சினியராக வேலைபார்த்துக் கொண்டிருந்த திரு பி.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களுடைய துணைவி திருமதி. ஜெயகுமாரி அவர்களுக்குச் சொந்தமானதாகும். அடுத்ததாக, அங்கேயுள்ள பள்ளிவாசல் இரண்டாம் மைலிலுள்ள ஆறு காட்டேஜூகள், ரெஸ்ட்டாரெண்ட், ஓப்பன் ஏர் ஆடிட்டோரியம், நீச்சல்குளம், போன்றவைகள் மண்வாரி எந்திரத்தின் துணையோடு நீக்கம் செய்யப்பட்டன. இவைகளில் ஒரு கட்டிடம் நாலு அடுக்குமாடிக் கட்டிடமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இனி மூணாறிலுள்ள ஏழுமலைக்காட்டில் மூன்று ஏக்கர் இடத்திலுள்ள ஒரு ரிசார்ட்டை நீக்கம் செய்வதற்காக ஏற்கனவே அறிப்பு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் நோவி- அப்ஜெக்‘ன் சர்டிபிகேட் அளித்திருந்தாலும்கூட, அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

இதே மாதிரி ‘ஆனைவிரட்டி’ என்ற இடத்திலும் பல கட்டிடங்கள் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. கூடிய சீக்கிரம் அவைகள்மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிய வருகிறது.

இதுபோல் சாந்தன்பாறையைச் சேர்ந்த ஒரு டாக்ஸி ஓட்டுநருக்கு 27 ஏக்க இடம் இருப்பது தெரிய வந்துள்ளது. அநேகமாக இதுவும் அரசுக்குச் சொந்தமான இடமாகத்தான் இருக்க வேண்டும்.

மூணாறில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் மீட்டுக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் நெடுஞ்சாலைகளின் (மகாத்மா காந்தி ரோடு) ஓரமாக அபகரித்து கட்டப்பட்டக் கட்டிடங்கள் எதெல்லாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்டிடங்களை நீக்கம் செய்ய 24 மணி நேரமும் கொடுக்கப்பட்டது. தானாக முன்வந்து நீக்கம் செய்யவில்லையெனில், அரசு முன்னால் வந்து எந்திரங்களின் துணையோடு மேற்கண்ட முறையில் கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்கம் செய்யும் என.

இதே மாதிரி நதிகளை எடுத்துக்கொண்டோமானால் இயற்கை எழில் மிகுந்த அவைகளின் கரையோரங்கள் தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களினாலும் அபகரிக்கப்பட்டு, இயற்கை அழகினையும், பாடிவரும் நதிகளையும் கண்டு ரசிப்பதற்கு வசதியாக வாடகைக்குக் கொடுக்கும் கட்டிடங்களும், ஹோட்டல்களும் தங்குவதற்குரிய ஏ.சி. அறைகளும் கட்டப்பட்டுள்ளன.

இவையெல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டுவதற்காக வேண்டி இரண்டாவது நடவடிக்கையாக எர்ணாகுளம் பட்டினத்தின் இதய பாகமான மகாத்மா காந்தி சாலையோரத்தில் கட்டி எழுப்பப்பட்டிருக்கிற அரசுக்குச் சொந்தமான பூமியிலுள்ள கட்டிடங்களின்மீது அரசின் கவனம் திரும்பியது. அதாவது பத்மா சினிமா தியேட்டர் வழியாக நகரத்தின் மையத்தில் போடப்பட்டிருக்கிற சாலை இதுஅதாவது எர்ணாகுளம் பட்டினத்தில். மிகப்பிரபலமான-பெரிய பஜாரான ‘பிராட்வே’ய்க்கு அடுத்தபடியாக ஏராளமானப் பொருட்கள் விற்கப்படும் மிகப்பெரிய கடைகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் எல்லாம் மகாத்மா காந்தி சாலை ஓரத்தில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. ஒருவகையில் சொல்வதாக இருந்தால் இம்மாதிரி சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள்தான் எர்ணாகுளம் மாவட்டத்திலேயே மிகப்பெரிய பண முதலைகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இனி, நதியோரங்களை எடுத்துக் கொண்டோமானால் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆல்வாய் நகரத்தின் நடுவே ஓடிக்கொண்டிருப்பது பெரியார் நதி. இது கேரளத்திலுள்ள ஒரு புனித நதியும்கூட ரொம்ப அகலமான இந்த நதியின் இரு கரைகளும இப்போது குறுகிப்போய்விட்டது. இதன் கரைகள் தனிநபர்களால் அபகரிக்கப்பட்டு, அவைகளின்மீது பல நட்சத்திர ஹோட்டல்களும், கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல தடவை இந்நடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பிப் பார்த்தும் கூட, ஒரு பலனும் கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகளோ இவற்றுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

‘மக்களைப் போலவே நம் இயற்கைச் செல்வங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்ற லட்சியம் உள்ள கேரள முதல்வர் திரு.அச்சுதானந்தன் அவர்கள், நதிக்கரையோரங்களில் சட்டத்திற்கு விரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், ஹோட்டல்களையும் உடனே அகற்றுவதற்குரிய ஆணையைப் பிறப்பித்தார். அதற்கு முன்னர் தனியார் பூமிகள் அளந்து திட்டப்படுத்தப்பட்டன. காலம்காலமாக கேட்பாரும் கேள்வியும் இல்லாமல் கையகப்படுத்தி வைத்திருந்தவர்களெல்லாம் இப்போது அரசுக்குச் சொந்தமான பூமியை விட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இதன் விளைவாக நதிக்கரைகள் மீண்டும் விரிவடையப் போகின்றன. மகாத்மா காந்தி சாலையோரம் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தற்போது நீக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் செயலைச் செய்யும்போது, அரசுக்குச் சொந்தமான இடங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு (ஐந்து அல்லது பத்து சென்ட் இடங்களை வைத்துள்ள வீடற்ற மக்கள்) இதில் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இம்மாதிரியான நடவடிக்கை, இடத்துக்கு இடம் மாநிலத்துக்கு மாநிலம் மேற் கொள்ளப்படுமானால், அரசுக்குச் சொந்தமான இடங்களை பணத்தைப் பெற்றுக்கொண்டு தனியாருக்கு ரகசியமாகப் பதிவு பண்ணிக் கொடுக்கும் அரசு அதிகாரிகளும் அரசுக்குரிய இடங்களை வளைத்தெடுக்கும் பெரும் முதலாளிகளும்கூட இனி வரும் காலங்களில் நடுங்குவார்கள் என்பது உறுதி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com