Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006

சில செய்திகள் - ஒரு கேள்வி
கே. விவேகானந்தன்

செய்தி ஒன்று : காஷ்மீரில் தீவிரவாதிகளை கொலை செய்வோருக்கு பிணம் ஒன்றிற்கு ரூ.1,00,000 எனும் கணக்கில் பரிசு வழங்கப்படும் என பாரதீய ஜனதா கட்சி செயலர் வினய் கட்டியர் அறிவித்துள்ளார்.

VHP செய்தி இரண்டு : முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.கட்சி பிரமுகருமான மறைந்த பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப் பட்டார். இந்த வழக்கில் ஷக்கீல் ஜாரு என்ற காஷ்மீர் இளைஞர் உள்ளிட்ட வேறு சிலரும் ராகுல் மகாஜனின் கூட்டாளிகாளக கைது செய்யப் பட்டுள்ளனர். ராகுல் மகாஜன் போதை தரும் பொடியை ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றில் பீடி சுருட்டுவது போல் சுருட்டி தீபற்ற வைத்து புகை பிடித்ததாகவும் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

செய்தி மூன்று : காஷ்மீரில் ஆக்கிரமிப் பாளர்களை விரட்டியடிப்பதற்காக 1999ல் வாஜபேயி ஆட்சியின்போது நடந்த கார்கில் போரில் உயிரிழந்த இந்திய ராணுவத்தினரின் சடலங்களை எடுத்துச் செல்ல அமெரிக்கா விலிருந்து சவப்பெட்டிகள் வாங்கப்பட்டன. பெட்டி ஒன்றிற்கு ரூ.7,700/- மதிப்புடைய இந்த சவப்பெட்டிகளுக்கு ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தலைமையிலான பாதுகாப்புத்துறை ரூ.1,12,500/- எனும் கணக்கில் மிக அதிக விலை கொடுத்தது எனச் செய்திகள் தெரிவித்தது. இந்த பெட்டிகள் பயன்படுத்த தகுதியற்றவை என ஆய்வில் கண்டறியப் பட்டதால் பயனற்ற நிலையில் இருப்பில் வைக்கப்பட்டது என இந்திய தலைமை கணக்காயர் (C.A.G.) அறிக்கை தெரிவிக்கிறது.

செய்தி நான்கு : வாஜ்பேயியின் ஹிந்துத்துவ ஆட்சியின் போது மத்திய அமைச்சர் திலீப் சிங் ஜீதேவ் ஆஸ்திரேலிய நாட்டு கம்பனி ஒன்றிற்கு கனிம சுரங்க உரிமைகளை வழங்குவதற்காக பணம் வாங்கிக் கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியொன்று கூறியது (நாள்- 16.11.2003) சமூக நலத்திற்கான பணிகளை செய்யவும் இந்து தர்ம வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு பணம் வாங்கியதாக திரு.ஜீதேவ் பின்னர் விளக்கினார். கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலின் போது “இந்தியா ஒளிர்கிறது” செய்தியை இந்திய மக்களுக்கு தெரிவித்திட பா.ஜ.க. தலைவர் லா.கி.அத்வானி நடத்திய “ரத யாத்திரை” எனும் தேர் பயணத்திற்கு அவர் பயன்படுத்திய ஜப்பானிய மாஸ்ட கம்பெனி ஏ.சி. வசதியுடன் கூடிய பேருந்து ஒன்றை தேர் வடிவில் தயார் செய்து வழங்கியது இந்த திலீப் சிங் ஜீதேவ் என வேறு செய்தியொன்று கூறியது (நியூ சண்டே எக்ஸ்பிரஸ் 28.3.2004)

செய்தி ஐந்து : குழந்தைப் பருவத்திலேயே பெண்களை திருமணம் செய்து வைக்கும் தவறான பழக்கத்திற்கெதிராக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த சமூக சேவகி ஒருவர் சமூகவிரோதி, இந்து விரோதி என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனையாக கூட்டு கற்பழிப்பிற்கு ஆளாக்கப்பட்டார். பா.ஜ.கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வு இது.

செய்து ஆறு : (முக்கியச் செய்தியும் கூட) இந்துத்துவ பரிவாரத்தின் மிக முக்கியத் தலைவர் ஒருவர் - கேரளத்தைச் சார்ந்தவர் பம்பாய் நிழல் உலக தாதாவும் உலக அளவில் போதைப் பொருள் கடத்தல் நடத்தி வரும் மாபியாக் கும்பலின் இயக்குனருமாகிய தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அந்நிறுவனத் திலிருந்து பயனடைபவர்’ என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.கட்சியின் மூத்த தலைவருமான ஓ.ராஜகோபால் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் (‘இந்திய டுடே’ மலையாள பதிப்பு - 7.12.2005. பக்.25)

கை மட்டுமல்ல உள்ளம் கூட வலிக்கிறது இச்செய்திகளை எழுதும் போது நாட்டின் எதிர்காலம் மற்றும் வரும் தலை முறையின் நல்வாழ்வு பற்றிய கவலையினை இச்செய்திகள் உருவாக்குகின்றன. இக்கவலைக் கிடையே ஆறுதல் போல செய்தியொன்று வந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹி.ப) இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்போகிறது. நாட்டை பாதுகாக்க என்று நல்ல காரியம் எனத் தோன்றியது. மேலே குறிப்பிட்ட செய்திகளில் காணும் அவலங்களை, குறைகளை, தீமைகளைக் களைந்திட வி.ஹி.ப. முன் வந்துள்ளதே என ஆறுதல் தோன்றியது. ஆனால் செய்தியை முழுமையாக படித்தபோது, இது நன்னெறிப் பயிற்சியல்ல, வன்முறைப் பயிற்சி என தெரிய வந்தது. இந்து தர்மத்தை பாதுகாத்திட வன்முறைப் பயிற்சி தேவையென வி.ஹி.ப. கருதுகிறது.

இங்கு கேள்வி ஒன்று எழுகிறது. தர்மத்தைக் காத்திட நல்ல எதிர்காலத்தை உருவாக்கிட தேவை கராட்டே பயிற்சியா? நன்னெறி கற்பித்தலா என்பது அந்த கேள்வி.

இந்து தர்மத்தின் மிகமுக்கிய வேதம், ரிக்வேதம் இவ்வாறு கூறுகிறது: “தேவைக் கதிகமாக, தவறாக பொருள் சேர்ப்பவன் பாவி. தண்டிக்கப்பட வேண்டியவன்” (ரிக்வேதம் ஒ 117-6)

பா.ஜ.கட்சியின் செயலர் வினய் கட்டியார் காஷ்மீரில் செத்து விழும் பிணம் ஒன்றிற்கு ரூ.1,00,000 பரிசு வழங்கிடுமளவிற்கு பொருள் சேர்த்திருக்கிறார்.

மறைந்த பா.ஜ.க. பிரமுகர் பிரமோத் மகாஜன் புதல்வர் இளம் வயது ராகுல் மகாஜன் ஐநூறு ரூபாய் நோட்டை பீடியாக சுருட்டி புகை பிடிக்கும் அளவிற்கு பொருள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.

சவப்பெட்டி வாங்குவதற்குக் கூட அமெரிக்க சென்று கமிஷன் தேடும் தலைவர்கள் நாட்டை பாதுகாக்கப் போகிறோம் எனக் கூறி வலம் வருகிறார்கள்.

லஞ்சம் வாங்குவது தர்மத்தை வளர்த்தும் நோக்குடன் என மிகுந்த துணிச்சலுடன் வாய் கூசாமல் கூறும் தலைவர்களுக்கு அமைச்சர்களாக ஆறு ஆண்டு காலம் தொடர்ந்து ஆள முடிகிறது. இந்த நாட்டில் இப்படிப்பட்டவர்கள் தயார் செய்து கொடுக்கும் ரதங்களில் ஏறி தேர்ப் பயணம் செய்து இந்தியாவிற்கு மீண்டுமொரு முறை “நல்ல நேரம்” (பீல்குட்) தந்திட லா.கி.அத்வானி மிகவும் சிரமப்படும் காலமிது.

எல்லாவற்றிற்கும் மேலாக கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிமின் கட்டுமான நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து “ஹிந்துத்துவம்” வளர்த்தும் இந்துத் தலைவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. (இந்த நற்செய்தியினை வழங்குபவர் முன்னாள் மத்திய அiச்சரும் பா.ஜ.கட்சியின் முதிர்ந்த தலைவருமாகிய ராஜகோபால் என்பதை மீண்டும் நினைவில் கொள்வோம்)

இதையெல்லாம் கருத்திற்கொண்டு வி.ஹி.ப.விடம் வேண்டுகோள் ஒன்றினை முன் வைப்போம்.

மேலே குறிப்பிட்டுள்ள அவலங்களை, சமூகத் தீமைகளைக் களைந்திட நன்னெறிப் பயிற்சிகளைத் தரலாமே - வினய் கட்டியார், ராகுல் மகாஜன், ஜார்ஜ் பெர்ணாண்டஸ், திலீப் சிங் ஜீதேவ், தாவூத் இப்ராகீமின் கட்டுமானத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு இந்துத்துவம் எனும் செல்லப் பெயரிட்டு “மோடித்துவம்” வளர்த்திடும் இந்துத் தலைவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் சிறிது நன்னெறி கற்றுக் கொடுக்கும் பயிற்சியல்லவா இப்போதைய தேவை? சிறு குழந்தைகளை மணம் முடித்து வைத்திடும் அறிவீனத்தைக் களைந்திட முயற்சிப்பது குற்றமென கருதி தண்டனை வழங்கும் இந்து முக்கியஸ்தர்களுக்கு நல்வழி காட்டிடும் பயிற்சியினை வி.ஹி.ப. நடத்திடலாமே.

மிகவும் துரதிர்ஷ்டமான நிலையில் மரணத்தை சந்திக்க வேண்டி வந்த தனது தந்தையின் ஈமச்சடங்குகள் கூட முடிவடையும் முன்னரேயே மதுஅருந்தி விருந்து நடத்தும் இளைஞர்கள் இன்றைய சமூகத்தின் மிகச் சீரழிந்த கேவலமான நிலைமைக்கு ஒர் எடுத்துக்காட்டு. இப்படிப் பட்டவர்களை அரசியலுக்கு அழைத்து வந்து அதிகார பீடத்தில் அமர்த்திட நாட்டை பல காலம் ஆண்ட இன்னும் ஆளத்துடிக்கின்ற அரசியல் கட்சியொன்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஒழுக்கக்கேடு பற்றி சற்றும் கவலைப்படாமல் அவர்களுக்கு நற்சான்று வழங்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் வாஜபேயி.

அரசியல், பொது வாழ்க்கை மட்டுமல்ல தனிநபர் வாழ்க்கையிலும் நல்ல நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே இந்த நாடு முன்னேற முடியும், மக்களது வாழ்க்கை சுமுகமாகவும் அமைதியுடனும் அமைந்திடும், பாதுகாப்பான எதிர் காலத்தை உருவாக்கிடும், நாம் சேர்த்து வைப்பது நம் சந்ததியினருக்கு பயன்பட இதுவே வழி என்பதை இவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுப்பதல்லவா இப்போதைய தேவை? இதற்கு வி.ஹி.ப. முன்வருமா?

கராட்டே கற்றுக் கொடுத்து கலவரங்களைத் தூண்டாமல் நன்னெறி சொல்லிக் கொடுத்து நல்வாழ்விற்கு களம் அமைப்பது அல்லவா உண்மையான இந்து இந்த நேரத்தில் செய்ய வேண்டியது?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com