Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006

பைரி
சரவணன்1978

இருட்டத் தொடங்குவதற்குச் சற்று முன்புதான் தார்ச்சாலைச் சந்திப்பைக் கடந்து நவபத்கானா தெருவிற்குள் ராமன் தன் நண்பன் சந்திரனுடன் நுழைந்தான்.

இருபுறமும் பாரம்பரிய வீடுகள் நெருக்கமாக அடர்ந்த அக்குறுகிற தெரு வழியாகச் செல்வது சந்திரனுக்குப் புதிது. அவ்வீடுகள் அழகிய முகப்புகளையும், சில வீட்டு ஜன்னல்களின் வழியே தெரியும் விழிகள் அலையாடும் பெண்களின் முகங்களையும், சில வீட்டு வாசற்படிகளில் கால்நீட்டி அமர்ந்திருக்கும் வெண்மேனி கொண்ட தாய்மார்களையும் விழிகள் இமைக்காது பார்த்தபடியே நடந்து வருகிறான். மாலை முழுவதும் விளையாட்டு என்ற கொள்கையைத் தவறாமல் கடைபிடித்து அதை நடைமுறைப்படுத்தித் திளைத்தக் கொண்டிருந்த சிறுவர்-சிறுமியர் கூட்டம் தெருவையே நிறைத்திருந்தது.

ராமுக்கு இந்தத் தெரு பழையதுதான். குறிப்பாகத் தொடர்ந்து இருபது நாட்களாக இதே நேரத்தில், இந்தத் தெரு வழியாகத் தன்னுடைய ஏதேனும் ஒரு நண்பனுடன் சேர்ந்து நடந்து கொண்டிருக்கிறான். இன்றைக்கு சந்திரனுடன் வருகிறான். பாதித்தெருவைக் கடந்தவுடன் ஒரு தந்திக் கம்பத்தின் அருகே நிற்கச் சொல்லித் தானும் நின்று கொண்டான். தெருவிளக்குகள் ஏதும் எரியவில்லை. இருள் கவியத் தொடங்கியது. பக்கத்துத் தெருவிலிருந்து இந்தத் தெருவிற்குள் ஒரு மங்கிய வெளிச்சம் நுழைந்தது. அது மெல்ல மெல்ல அதிகரித்து ஒரு சின்னச் சூரியப் பந்துபோல தெருவில் நகர்ந்து வந்தது. “பைரி வண்டி வந்தாச்சு” என்று மெல்ல தன் நண்பனிடம் கூறினான். “பைரின்னா என்ன?” என்று சப்தமாகக் கேட்டத் தன் நண்பனிடம், பதில் ஏதும் கூறாமல் இருளில் தயங்கியபடியே நடக்கத் தொடங்கினான். தெரு விளக்குகள் அனைத்தும் ஒரேநேரத்தில் மின்னி மின்னி எரிந்தன. தெரு முழுக்கப் பெரிய தனித்தனி வட்டங்களாக ஒளிவெள்ளம் பாய்ந்து நின்றது. வட்டங்களின் இடைவெளிகளில் இருள் சூழ்ந்திருந்தது. இருவரும் பைரி வண்டியை நோக்கி வேகமாக நடந்தனர்.

சிறுவர்கள் தெருவில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். “பைரி! பைரி” என்ற அழைப்புடன் பெட்ரோமாக்ஸ் ஒளியைச் சுமந்த நான்கு சக்கர தள்ளுவண்டியைத் தள்ளிகொண்டு வந்தார் ஒரு பெரியவர். அந்த வண்டிக்கும் இவர்களுக்கும் ஐம்பதடி தூரம் இருக்கும்போதே, ஒரு வீட்டின் வெளிப்புற ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டனர்.

ஒளி வட்டங்களின் இடையில் கவிந்திருந்த இருளைச் சாதகமாக்கிக் கொண்டு, ராமு தன்னுடைய ஏதேனும் ஒரு நண்பனுடன் தினமும் இதே இடத்தில் தான் நிற்கிறான். வாயில்காத்து பொழுதுபோக்கும் அக்கம் பக்கத்து முதுபெண்கள் அவனின் இச்செயலைக் கவனித்தும் கூட ஒருபோதும் கண்டித்ததில்லை. அதற்குக் காரணமாக, இயல்பிலேயே பேரழகிகளாகப் பிறந்து விட்ட பெண்கள் வாழும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஏதாவது ஒரு வேளையில் எவனாவது ஒருவன் காத்துக் கொண்டேதான் இருக்கிறான் என்ற உலக நியதியை நினைத்துக் கொண்டதோ அல்லது இவனைப் போன்றோரைக் கண்டித்ததால் பிறகு கும்பலாக வந்து கலகம் செய்யக்கூடும் என்ற அச்சமோ இருக்கக் கூடும்.

பைரி வண்டியைச் சிறார்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது. சில பெண்கள் சில்லரைக் காசுகளுடன் பைரி வண்டியை நோக்கி நடந்தனர். சிலர் தம் வீட்டுவாசலிலேயே நின்றுகொண்டு தமது வீட்டை நோக்கி வரவுள்ள பைரி வண்டியின் நகர்வுக்காகக் காத்திருந்தனர். பொறுமை இன்றி சந்திரன் ராமுவிடம் கேட்டான்.

“எதுடா அவ வீடு?”

“அஞ்சு வீடு தள்ளி இருக்கு”

“இங்க எதுக்கு நிக்கணும்?”

“பைரி வண்டி அந்த வீட்ட கடந்து வரணும். அதான் சிக்னல். அதுவரைக்கும் இங்கயே நிக்கணும்” என்றான்.

மழை, வெயிலிலிருந்து காக்க தகரக் கூரை வேயப்பட்ட பைரி வண்டிக்குள், பார்வைக்குத் தெரியாதவாறு கீழே புதைத்து வைக்கப்பட்ட ஒரு அடுப்பு, வெளியில் தெரியும்படியான கொதிக்கும் வடைச்சட்டி மற்றும் ஐந்து வெவ்வேறு அளவுள்ள பாத்திரங்கள். முறுக்கு அடுக்கப்பட்டது ஒன்று. ஒன்றில் பருப்புவடை மற்றொன்றில் தேங்காய்த் தட்டை. பிறிதொன்றில் இனிப்புப் போலி. பெரிய பாத்திரத்தில் பச்சை நிறத்தில் சிறிய பூரி போன்ற பைரி.

முள் முருங்கைக் கீரையைப் பக்குவப்படுத்தி அதனை அரிசிமாவில் கலந்து சிறிய சப்பாத்திபோல உள்ளங்கை யினாலேயே தட்டிப் பிறகு எண்ணெயில் போட்டு பொரித்ததும் இருபுறமும் உப்பிய இட்லி போலப் பச்சை நிறத்தில் உருப்பெறுகிறது பைரி. அதனை ரூபாய்க்கு ஒன்று எனத் தாளில் வைத்து காரமில்லாத இட்லிப் பொடியைத் தூவி வழங்குகிறார் பெரியவர்,. பைரி வண்டி இவர்களை நெருங்கும் போது ராமு சந்திரனிடம் கூறினான்.

“டெய்லி இந்த பைரிய ரெண்டு வாங்கி கையில வச்சுக்குவேன். அவ தன்னோட தம்பிய வெளிய அனுப்புவா. அவன்கிட்ட ஒரு பைரிய கொடுத்தனுப்புவேன். அவன் கொஞ்ச நேரத்துல திருப்பி வருவான் கையில் அரை பைரியோட அத வாங்கிக்கிட்டு என் கிட்ட இருக்கிற இன்னொரு பைரிய அவனுக்குக் கொடுத்துடுவேன். சில நேரம் அவ வீட்டுவாசல்ல நின்னு என்னையே பார்த்துக்கிட்டு இருப்பா.”

சந்திரனின் கண்கள் பைரி வண்டியின் மீதிருப்பதைக் கவனித்த ராமு, அவனுக்கும் சேர்த்துக் கூடுதலாக பைரி வாங்கினான். அவள் தம்பி வரவில்லை. நேரம் கடந்தது.

தெருவில் ஓடிப்பிடித்து விளையாடிய ஒரு சிறுவனைத் தடுத்து நிறுத்தி, அவனிடம் அவளின் தம்பியை வீட்டிலிருந்து அழைத்து வருமாறு கூறினான். சந்திரன் பைரியைச் சுவைக்கத் தொடங்கினான். சுவையே இல்லாத தின்பண்டம் அது என்பதை அவன் முகமே காட்டியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் தம்பியை அழைத்து வந்து ராமுவிடம் நிறுத்திவிட்டு, அவன் தன் விளையாட்டுத் தொடரச் சென்றான். அவள் தம்பி ராமுவிடம் ஏதும் பேசவில்லை. ராமு அவனிடம், “இந்தாடா போயி குடுத்துட்டு வா” என்றான். அவன் தன் டவுசரைத் தேய்த்தபடியே தலையைக் குனிந்து நின்றான். “வாங்கிக்கோடா” என்றான் ராமு. “அப்பா அடிப்பாரு” என்றான். ராமுவின் முகம் சுருங்கிவிட்டது. சமாளித்துக் கொண்டு, “அப்பாவுக்குத் தெரிஞ்சு போச்சா? அக்காவ திட்டுனாரா? அடிச்சாரா?” என்று தொடர்ந்து பணிந்த குரலில் கேட்டான். “அடிப்பேன்னு சொன்னார்” என்றான்.

சந்திரனுக்கு நிலைமையின் தீவிரம் புரியத் தொடங்கியது. ராமுவின் கையைப் பற்றினான். அதை பொருட்படுத்தாது அவன், அவள் தம்பி கையில் பைரியைத் திணித்தான். அவன் வாங்க மறுத்து நெளிந்தான். “இன்னைக்கு மட்டும் கொடுத்துட்டு வா” என்று அவனிடம் கெஞ்சும் தொனியில் கூறினான். அவன் வேண்டா வெறுப்புடன் வாங்கிக் சென்றான். அவளது தம்பிக்குப் பைரியைத் தரும் ராமு இன்று ஏனோ மறந்துவிட்டான். சந்திரன் ராமுவிடம் தயங்கியபடியே, “அப்ப நான் கிளம்பட்டுமா?” என்றான். “இருடா அவ குடுத்தனுப்புவா. அத வாங்கிக்கிட்டு ரெண்டுபேருமே போவோம்” என்றான்.

அவள் தம்பி வந்தான். அவன் கையில் தாளில் சுருட்டியபடி அரை பைரி இருந்தது. ராமு அதை வாங்கி அதைப் பார்த்தவாறே செல்லமாக அவள் தம்பியின் தலையை வருடினான். இருவரும் திரும்பிச் செல்லும் போது அவள் தம்பி எதையோ வாயில்மென்று கொண்டிருப்பதை சந்திரன் மட்டும் கவனித்தான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com