Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006

ஒருவரை ஒருவர் நேசிக்க கத்துக்கிட்டால்தான்
மற்றவர்களிடமிருக்கும் நல்ல விசயங்களை கிரகிக்க முடியும்.
நடிகர். ராஜ்கிரண்
நேர்காணல்: ஹாமீம் முஸ்தபா

கேள்வி : தங்களுடைய இயக்கத்தில் உங்களை நடிக்க வைத்த கஸ்தூரி ராஜா, பாலா, சேரன் இந்த இயக்குநர்களின் தனித்தன்மையாக எதை கருதுகிறீர்கள்?

Rajkiran கஸ்தூரி ராஜா விசு சாரிடம் உதவியாளராக இருந்தார். அவரை இயக்குநராக ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அறிமுகப்படுத்தினேன். கஸ்தூரி ராஜாவிடம் எனக்குப் பிடித்த விசயம் நேட்டிவிட்டியான வசனங்கள். பாலா ரொம்ப நுட்பமான உணர்வுகளை அவர் விரும்பியபடி வெளிக்கொண்டு வர விரும்புவார். அதை வெளிக்கொண்டு வந்திடுவார். சேரனும் கிட்டத்தட்ட அதேமாதிரி இயக்குனர்தான். இரண்டு பேரும் தங்களுக்கு என்ன தேவை என்பதை முதலிலேயே சொல்லி நமக்கு புரிய வைத்திடுவார்கள். புரியவைத்த விசயம் நம்மிடமிருந்து வெளிப்படுகின்ற வரைக்கும் சமரசம் பண்ணிக் கொள்ளாமல் வரவைப்பார்கள். சேரனுடைய சிந்தனைகள் பாசிட்டிவாக இருக்கும். பாலாவின் சிந்தனைகள் எதிர்மறையாக இருக்கும்.

கேள்வி : மற்ற இயக்குநர்களின் கையில் ஒரு நடிகனாக உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்ளும் போது ரொம்ப இயல்பான நடிப்பு உங்களிடமிருந்து வெளிப்படுகிறது. அதே நேரம் உங்களின் சொந்த இயக்கமான அரண்மனைக்கிளி போன்ற படங்களில் நீங்கள் ஒரு நடிகனாக வெளிப்படும் போது உங்களிடம் ஒரு மிகை நடிப்பு வெளிப்படுகிறது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நம்ம சொந்தப் படங்களில் மிகை நடிப்பு என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது என்பது நான் இதுவரையிலும் கேள்விப்படாத ஒரு விசயம். இப்பதான் முதன் முறையாக நீங்க கேட்கிறீங்க. என்னுடைய இயக்கத்தில் வந்த மூன்று வெள்ளி விழா படங்களிலுமே என்னுடைய நடிப்பை இதுவரைக்கும் ரசிகர்களும் சரி பத்திரிகையாளர்களும் சரி மிகை நடிப்பு என்று குறிப்பிடவே இல்லை.

ஒரு வாதத்துக்காக மிகை நடிப்பு என்று வைத்துக் கொண்டாலும் பாலாவிடமும் சேரனிடமும் நடிக்கும்போது இன்னும் இயல்பான நடிப்பு என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பாலா படத்திலும், சேரன் படத்திலும் நான் வெறும் நடிகன் மட்டும் தான். ஒரு மாணவன் என்ற நிலையிலிருந்து வாத்தியார்கள் என்ன சொல்ல சொன்னார்களோ அதை சொன்னோம். அதானால் இயல்பான நடிப்பு வந்திருக்கும். என்னுடைய சொந்தப் படங்களில் கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, விநியோகம் எல்லாமே நம்மதுனால நமக்குள்ளே நாம வேலை வாங்கிக் கொள்கிற சாத்தியக் கூறுகள் கம்மி. நமக்குள்ளே என்ன திறமையிருக்கிறது என்பதை நம்மைவிட பாலாவும் சேரனும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

கேள்வி : பொதுவாக தமிழ் சினிமாக்களில் வருகின்ற அப்பா கதாபாத்திரங்கள் தமிழர்களின் அப்பாக்களை பிரதிநிதித்துவப் படுத்தமாட்டார்கள். ஆனால் ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் நீங்கள் தமிழர்களின் அப்பாவாக உங்களின் நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். இதற்கான பயிற்சியை எப்படி பெற்றீர்கள்?

என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது பெரிய கலை, இதற்காக நம்மை அர்ப்பணிக்கணும், அதுக்காக கத்துக்கிடணும், தவமிருக்கணும் என்றெல்லாம் எண்ணம் கிடையாது. நானொரு வியாபாரி. வியாபாரம் பார்க்க வந்திருக்கிறேன். என்னிடம் உள்ள பொருள் நடிப்பு. அதை விற்கிறேன். நீங்கள் காசு கொடுக்கிறீர்கள் வாங்கிக்கிறேன். நடிப்புக்கும் எனக்குமுள்ள தொடர்பு. அவ்வளவுதான்.

கமல்ஹாசன் மாதிரியோ, விக்ரம் மாதிரியோ, நாசர் மாதிரியோ முழுக்க முழுக்க நடிப்புக்காக, கலைக்காக தங்களைத் தாங்களே அர்ப்பணிச்சுக்கிறது என்பது என்னிடம் இல்லை. இந்தப் படங்களில் என்னுடைய நடிப்பு பாராட்டப்படுகிற தென்றால் அந்தப் படத்தின் இயக்குநர்கள் என்னிடம் வேலை வாங்கியது தான்.

பாலா சாரைப் பொறுத்தவரை நந்தா படத்துல இராமநாதபுரம் சேதுபதி வழில வந்த ஒரு ஆள். அந்த ஆளினுடைய கம்பீரம் எப்படி இருக்கும், பார்வை எப்படி இருக்கும், பேச்சு எப்படி இருக்கும் என்பதை கணித்து இந்த கதாபாத்திரத்துக்கு ராஜ்கிரண்தான் பொருந்துவாரு என்று நினைத்து என்னைத் தேர்ந்தெடுத்தார். என்னிடமிருந்து என்னென்ன கொண்டு வரவேணும் என்று நினைத்து வேலை வாங்கினாரோ அதை வெளிப்படுத்தவும் வைத்தார்.

சேரன் எப்படின்னா படப்பிடிப்புக்கு போற அன்றைக்கு முழு ஸ்கிரிப்டையும் நம்ம கையில கொடுத்திடுவாரு. எல்லா கதாபாத்திரங்களின் பாத்திர உருவாக்கம், கதையின் ஒட்டுமொத்த தன்மையோடு நாம முழுகதையையும் படிச்சுப் பார்க்கிறோம். அடுத்ததாக படப்பிடிப்புக்குப் போன உடன் அன்றைக்கு என்ன சீனை சூட் பண்ணப்போறாரோ அந்த சீனை திரும்ப விளக்குவார். இரண்டாவதாக மனசுல காட்சியும் கதையும் பதியுது. மூணாவது நடித்தும் காண்பிப்பார். இப்படி இருந்தா நல்லா இருக்கும்ணே என்று. நமக்கு ரொம்ப எளிதாகப் போய் விடுகிறது. மற்றபடி இதுக்குன்னு நான் தனியாக பயிற்சி யெடுக்கவோ யாரையும் பின்பற்றவோ அதற்கு என்று மெனக்கெடவோ இல்லை.

கேள்வி : உங்கள் படங்களில் தமிழகத்தின் நாட்டுபுற தொன்மங்கள், சடங்குகள் வலுவாக பயன்படுத்தப் பட்டிருக்கும். உறுமா கட்டுவது, மஞ்சள் தண்ணி ஊத்துவது அதுபோல் ‘மாணிக்கம்’ படத்தில் தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடிகள் நடுகல் வழிபாடு மாதிரி வாறது போன்ற காட்சிகள் எல்லாம் இடம் பெறுகிறது. இந்த விசயங்களை எப்படி உள்வாங்கினீர்கள்?

அது இயல்பா நம்ம சின்னவயசில் கிராமங்களில் பார்த்து, கேட்டு அடிமனசில் பதிஞ்ச விசயங்களை திரும்ப எடுத்து பயன்படுத்துகிறேன். நாம் எந்த சார்பில் வாழ்ந்தோமோ அந்த சார்பு சார்ந்து சம்பந்தப்பட்டு நம்முடைய எண்ணங்களும் உருவாக்கங்களும் அமையும். அதுமாதிரி அமைந்தது இவை.

கேள்வி : உங்களுடைய பிறப்பு, வளர்ப்பு சூழல் எல்லாமே இஸ்லாமியப் பின்புலம் சார்ந்தது. நீங்கள் பயன் படுத்துகின்ற தொன்மங்களும் நம்பிக்கை களும் பெரும்பாலும் இஸ்லாத்திற்கு வெளியில் இருக்கின்றவைகள் எப்படி இந்த விசயங்கள் உங்களுக்கு சாத்தியப்பட்டது?

மிகப்பெரிய ஞானிகள், மகான்கள் அரபு தேசத்திலிருந்து கடல் மார்க்கமாக இங்கு வந்து இயல்பாக நபிகள் நாயகம் என்ன சொன்னாங்களோ அதன்படி வாழ்ந்தாங்க. மத்தபடி மதத்தை பரப்பவில்லை. அவர்கள் வாழ்கிற வாழ்க்கையைப் பார்த்து அதில் தாக்கம் பெற்று இங்குள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தைத் தழுவினார்கள். இறைவனும் இதைத்தான் குர்ஆனில் நபியைப் பார்த்து சொல்கிறான். ‘ஒரு மனிதனை என்பக்கம் இழுப்பது என்னுடைய வேலை. இது உம்மால் முடியாது’ என்று. எனவே நாம் எல்லா மக்களையும் நேசிக்கணும். ஏன்னா திருக்குர்ஆனின் ‘குல்யா அய்யுகல் காபிரூன்’ அத்தியாயத்தில் ‘அவரவர் மார்க்கம் அவரவர்க்கு’ என்று இறைவன் தெளிவாக சொல்லி இருக்கிறான். குர்ஆனில் நான்கு வேதங்கள் இறக்கப்பட்டதாக இருக்கிறது. இருபத்தி ஐந்து நபிமார்கள் பற்றிய விபரம் இருக்கிறது. ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் நபிமார்கள் என்று நம்பிக்கை இஸ்லாத்தில் உண்டு. அப்ப இங்க வாழுகிற எல்லா மனிதர்களுமே, எல்லா தத்துவங்களுமே, எல்லா நம்பிக்கைகளுமே இறைவனால் படைக்கப்பட்டவைதான்.

இறைவன் ஒருவன் தான் எல்லாவற்றையும் படைத்தான். அப்படி இருக்கும் போது அதில் வேறுபாடு காட்டாமல் நாம் முடிந்த அளவுக்கு அவர்களை அரவணைத்துப் போனோம் என்றால் அவர்கள் அந்த அளவுக்கு நம்மை கவனிப்பார்கள். உற்று நோக்குவார்கள். அதன் மூலம் மார்க்கத்தையும் புரிவார்கள்.

இப்ப மதமாச்சர்யங்கள் நாட்டில் அதிகமாக இருக்கிறது. நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைஹிவஸ்லாம் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவரின் இறுதி ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் அவர் எழுந்து நிற்கிறார்கள். தோழர்களுக்கெல்லாம் ஆச்சரியம். ‘நபி அவர்களே! இறந்து போனவர் கல்லை வைத்து வணங்குகிறவர் அவரின் உடலுக்கு எழுந்து நிற்கிறீர்களே’ என்கிறாhகள். நபிகள் சொன்னார்கள், ‘அந்த உடல் என்னுடைய இறைவன் அல்லாஹ் குடியிருந்த கூடு’ என்று. ஒவ்வொரு உடலுக்குள்ளும் இறைவன் குடியிருக்கிறான் என்று நபிகள் சொல்கிறார்கள். அப்படி இருக்கிறபோது எந்த மதத்தினராக இருந்தாலும் நாம் நேசிக்கணும்.

நபிகள் நாயகம் அவர்களிடம் ஒருவர் வந்து இஸ்லாத்தைப் பத்தி எனக்குக் கொஞ்சம் சொல்லித் தாருங்கள் என்கிறார். நபிகள் சொல்லித் தருகிறார்கள் சில காலம் கழித்து மீண்டும் வருகிறார். மீண்டும் இஸ்லாம் பற்றி கூறுங்கள் என்ன கேட்கிறார். நபியும் சொல்கிறார். மீண்டும் சில காலம் கழித்து வருகிறார். மீண்டும் நபிகள் சொல்கிறார். சிலகாலம் கழித்து திரும்பவும் அந்த மனிதர் நபியிடம் வந்து எனக்கு இன்னும் இஸ்லாம் என்றால் புரியவில்லை என்று கூறுகிறார். நபிகள் சொன்னார்கள் ‘இஸ்லாம் என்றால் நற்குணம்’ என்று. நற்குணத்தவனாய் நீ நடந்தால் இஸ்லாமியன் என்று.

எனவே நற்குணம் என்ற விசயம் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவரெல்லாம் இஸ்லாமியர். ஆனால் இன்றைக்கு நாட்டில் மதமாச்சரியங்கள் நிறைந்துவிட்டன. ஒருவரை ஒருவர் நேசிக்க கத்துக்கிட்டால் தான் நமக்கு மற்றவர்களிடமிருக்கும் நல்ல விசயங்களை கிரகிக்க முடியும். அந்த குறிக்கோள்களின் வெளிப்பாட்டால்தான் நான் இந்துக் கலாச்சாரத்தை என்னுடைய படங்களில் குறையில்லாமல் சொல்கிறேன்.

இதே தமிழ் சினிமாவில் இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பத்தி படம் பண்ணுவாங்க. சம்பந்தமில்லாம தப்புத் தப்பா காட்டுவாங்க. இஸ்லாமியன் டைரக்டராக இருப்பான். இஸ்லாமியன் தயாரிப்பாளரா இருப்பான். இஸ்லாமியன் சம்பந்தப்பட்டவனாக இருப்பான். ஆனால் தவறு தவறான விசயங்கள்தான் இஸ்லாம் பற்றி வெளிப்படும். ஆனால் நான் இந்துக் கலாச்சாரத்தை எந்தத் தவறுமில்லாமல் வெளிப்படுத்துகிறேன்.

கேள்வி : பொதுவாக முஸ்லிம் சமுதாயம் திரைப்படம், இசை இவை பற்றிய எதிர்மறையான கண்ணோட்டம் உடையதாக சொல்லப்படுகிறது. நீங்கள் திரைத்துறையில் நுழைந்ததை உங்கள் குடும்பமும் முஸ்லிம் சமூகமும் எப்படி பார்த்தன?

Rajkiran and his family அதாவது எனக்கு இன்றைக்கு தெரிநிதிருக்கிற இஸ்லாம் 16 வயதில் தெரியவில்லை. எனக்கு முப்பது வயசுல தெரியல நாற்பது வயதுக்கு மேலதான் தெரிய ஆரம்பித்தது. என்னை மாதிரி நாற்பது வயது வரைக்கும் இஸ்லாத்தைப் பத்தி தெரியாதவன் தொண்ணூறு பேர் இன்றைக்கு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இஸ்லாம் ஒழுங்காக போதிக்கப்படவில்லை. ஏன் போதிக்கப்படவில்லை. ஆலிம்கள் தான் இஸ்லாத்தை போதிக்க வேண்டும். ஆனால் ஆலிம்கள் நிலையோ மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு காலம் காலமாய் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பள்ளிவாசல் சொத்தை அபகரித்தவன், வட்டிக்குக் கொடுத்தவன், ஐந்து நேரம் தொழாதவன் முத்தவல்லியாக இருக்கிறான். இவனிடம் கற்றுத் தேர்ந்த ஆலிம் இரண்டாயிரம் சம்பளத்துக்கு கைகட்டி நிற்கிறார்.

ஆலிம்களுக்குத்தான் இம்மையிலும் மறுமையிலும் வாழ்க்கையை ஜெயிக்கக் கூடிய வித்தை தெரியுது. ஆனால் இவர்கள் அன்றாடப் பாட்டுக்கே கஷ்டப் படுகிறார்கள். இந்த நாட்டில் வசதி வாய்ப்புள்ளவர்கள் மத்தியிலிருந்து குடும்பத் திலிருந்து ஆலிம்கள் உருவானால் அவர்கள் இஸ்லாத்தை தைரியமாக எந்த முத்த வல்லிக்கும் பயப்படாமல் எடுத்து வைப்பார்கள். இஸ்லாம் முழுமையாக தெரியாமல் போனதால் நான் இந்தத் துறைக்கு வந்தேன். இந்தத் துறையில் வதகத்துக்குப் பிறகு இது ஹராமான (தடுக்கப்பட்ட) விசயம், என்று சில ஆலிம்கள் சொல்கிறார்கள். இல்லை. இது ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் தொழில் தானே என்று சில ஆலிம்கள் சொல் கிறார்கள். ஆலிம்களிலே நான் சினிமாத் துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று துஆ (பிரார்த்தனை) செய்பவர்கள் இருக்கிறார்கள். பிஸ்மில்லா சொல்லி சூட்டிங்கை ஆரம்பித்தால் எப்படி அல்லா பேரைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள்.

யோசிக்கும் போது பத்து சதவீதம் கூட இஸ்லாம் இன்னும் நமக்கு புரியலை என்று தெரிகிறது. ஆலிம்களுக்கே கூட புரியலை என்று தெரிகிறது. எல்லாமே இறைவனுடைய நாட்டப்படிதான். அவனின்றி அணுவும் அசையாது. இந்தத் தொழிலில் என்னை வரவைத்ததும் அவன்தான். என்னை நடிக்க வைத்ததும் அவன்தான். என்னை பெயர் சொல்ல வைத்ததும் அவன் தான். என்னை குழம்ப வைத்ததும் அவன்தான். என்னைத் தெளிவாக்கியதும் அவன்தான். என்னை மீறி என்ன தவறு நடந்தாலும் அல்லா மன்னிப்பான். இணை வைப்பதைத் தவிர. ஏன்னா மனிதர்களைத் தவறு செய்பவர்களாகத்தான் படைத்திருக்கிறேன் என்பது இறைவனின் வாக்கு. சினிமாவில் வருகின்ற நூறுபடமும் ஒரே மாதிரி இல்லை. ஒருத்தன் கேவலமா, ஒருத்தன் அசிங்கமா, ஒருத்தன் சமுதாயத்தை சீர்கெடுக்கிற மாதிரி, ஒருத்தன் பெண்களை கேவலப்படுத்துற மாதிரி படம் எடுக்கிறான். நாம் அந்த மாதிரி எடுக்கல. நாம் ஒவ்வொரு படத்திலயும் ஒரு நல்ல செய்தியை சொன்னோம். முதல் படத்தில் குடியினால் வரும் தீமையைச் சொன்னோம். குடிகார னுக்கு குடும்பம் நடத்தத் தெரியாது என்று சொன்னோம். அதைப் பார்த்து ஆயிரக்கணக்கான பேர் கடிதம் போட்டாங்க.

இரண்டாவது படத்துல தாய்மையை மதிக்கணும் சொன்னோம். மூணாவது படத்தில் சீட்டாடுவதன் கொடுமையைச் சொன்னோம். எனவே இப்படி நாம் சினிமாவுல ஒருவேளை இந்தத் தொழில் ஹரமானதா இருந்து அதில் நான் மாட்டியிருந்தாலும் நல்ல விசயங்களைத் தான் சொன்னோம்.

கேள்வி : இளையராஜா - ராஜ்கிரண் கூட்டணி தமிழ் சினிமாவில் பிரமாதமான கூட்டணியாக அமைந்தது. இது எப்படி உருவானது?

இளையராஜா அண்ணனைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. யாரிடமும் எந்த விதமான பாரபட்சமும் அவருக்குக் கிடையாது. ராஜ்கிரணுக்கு நல்லா டியூன் போட்டுக் கொடுக்கணும், பாரதிராஜாக்கு நல்லா போடணும். வேறு யாருக்காவது நல்லா போடக் கூடாது அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. ஒரு காலகட்டங்களில் பத்திரிகைகளில் நீங்க சொன்ன விசயத்தையே எழுதினாங்க. ராஜ்கிரணுக்கு மட்டும் பாட்டுக்கள் நல்லா அமைஞ்சிடுது. அவர் படத்துக்கு மட்டும் ஸ்பெசலாக இளையராஜா பண்ணுகிறார் என்று. நானும் அதை ரொம்ப சந்தோசமாக எடுத்துக்கிட்டு ராஜா அண்ணன் கிட்ட சொன்னா சந்தோசப்படுவார்ன்னு நினைத்து புத்தகத்தைக் கொண்டு போய் ராஜா அண்ணனிடம் காட்டினேன். டென்சன் ஆயிட்டார். அப்ப உனக்கு மட்டும் நான் நல்லா பாட்டு போடுறேன்னா நான் தொழிலுக்கு துரோகம் செய்யறேன்னு சொல்றியா என்னை. மத்தவங்களிடமும் காசு வாங்கித்தான் மியூசிக் போடுறேன்.

உனக்கு மட்டும் நல்லா போடுறேன் மற்றவங்களுக்கு போடலியா? என்று ஆரம்பித்துவிட்டார். எவனோ ஒரு பத்திரிகைகாரன் எழுதினான்னா நீ எப்படி யோசிக்காமல் போனாய் என்று சொல்லிவிட்டு அதுக்குக் காரணம் சொன்னார். நீ வந்து எங்கிட்ட பாடல்கள் வாங்குவதற்காக கதை சொல்லி காட்டுற, முதல் சீனிலிருந்து கடைசி சீன் வரைக்கும் விளக்கமாக சொல்றே. வசனம் உட்பட முழு கதையையும் என் நெஞ்சுல ஏத்திடுறே. உன்ன மாதிரி நாலைந்து இயக்குநர்கள் தான் முழு கதையையும் என் நெஞ்சினில் பதிய வைக்கிறார்கள். இது எனக்குள் இன்ஸ்பிரேசனைத் தருகிறது. மற்ற இயக்குநர்கள் எல்லாம் தூரத்துலேயே நிற்கிறார்கள். கிட்ட வரமாட்டேன் என்கிறார்கள். ஒரு லவ்சீன் ஒரு டூயட் வேணும் என்று கேட்கிறார்கள். இப்படி வாறவங்களெல்லாம் பெரும்பாலும் என்னிடம் வேலை வாங்குவதே இல்லை. இதுதான் காரணம் என்று கூறினார்.

கேள்வி : நீங்கள் சினிமாவை ஒரு வியாபாரமாக பார்த்தாலும் கூட உங்களின் ஒவ்வொரு படத்திலேயும் ஒரு செய்தி சொன்னதாக சொன்னீர்கள். இந்த தன்மையை எப்படி பெற்றீர்கள்?

இது ஒண்ணுமே இல்லை. இது ஒரு நல்ல மீடியான்னு தெரியுது. சினிமா ஒரு நல்ல மீடியா. ஜனங்களிடம் போய் எளிதாக சேர்கிற ஒரு மீடியா, மக்கள் மனசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு மீடியா சினிமா. இந்த மீடியாவின் மூலமாக நாம் நினைத்ததைச் சொல்லலாம். எல்லாருக்கும் நல்லது செய்யணும் ஆசையிருக்கிறது. இதுக்கெல்லாம் இன்ஸ்பிரேசன் எம்.ஜி.ஆர். பாட்டுக்கள். அது சின்ன வயசில் ஏற்படுத்திய பாதிப்பு.

கேள்வி : உங்களின் குடும்ப சூழல், குடும்ப வாழ்க்கை பற்றி?

இன்றைக்கு நான் இந்த அளவுக்கு நிம்மதியா, சந்தோசமா இருக்கிறதுக்கு காரணமாக நினைப்பது இறைவனருளால் எனக்குக் கிடைத்திருக்கிற மனைவி கதிஜா நாச்சியார், என் மகன் திப்புசுல்தான், என் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா. என்னுடைய ஆன்மீக வழிகாட்டியாகவும் என்னை மகனாகவும் தத்தெடுத்துக் கொண்ட என் ஆன்மீக குருநாதர் என் வாப்பா செய்யது பாவா. இவர்களால் தான் நான் நிம்மதியாக சந்தோசமாக இருக்கிறேன்.

கேள்வி : திப்புசுல்தான் என்று சுதந்திர வரலாற்றோடு தொடர்புடைய ஒருவரின் பெயரை உங்கள் மகனுக்கு வைத்திருக்கிறீர்கள் விசேச காரணங்கள் எதுவும் உண்டுமா?

ஒரு முறை சூட்டிங் விசயமாக மைசூர் சென்றிருந்த போது இரண்டு வெள்ளிக்கிழமைகள் திப்புசுல்தான் பாவா கட்டிய பள்ளி வாசலில் தொழுகின்ற சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. அங்கு தொழுதுவிட்டு திப்பு பாவா பெயரில் யாசீன் ஓதினேன். அதுக்கு அப்புறம் அங்கு வச்சுதான் எனக்கு குருநாதர் கிடைத்தார்கள். யாரோ பெரியவங்க இருக்காங்கன்னு சலாம் சொன்னேன். அவங்களும் பதில் சலாம் சொன்னார்கள். பதில் சொல்லிவிட்டு திப்பு பாவாக்கு யாசீன் ஓதினியா என்று கேட்டார்கள். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உன்னுடைய யாசீன் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று சொன்னார்கள். அதில் இருந்து அவங்களை என்னுடைய ஆன்மீக குருவாக எடுத்துக்கிட்டேன்.

என்னுடைய முதல் கல்யாணம் வெற்றிகரமானதாக அமையவில்லை. மனசு வேதனை பட்ட விசயங்கள். பதினான்கு வருசமா முதல் மனைவியைப் பிரிந்து துயரடைந்த காலம். அடுத்த கல்யாணம் பண்ண வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லாமல் இருந்தது. அப்ப என் குருநாதர் சொன்னார்கள். ‘இன்னும் ஒரு பதினைந்து நாளில் உன்னுடைய கல்யாணம் நடக்கப் போகிறதென்று. நான் எதிர்பார்க்காத விசயம், ஆனால் நடந்தது. கல்யாணத்திற்கு முன் மனைவி இந்து மதத்தைப் பின்பற்றினார்கள். நான் ஐவேளைத் தொழுவதைப் பார்த்து இஸ்லாம் குறித்து கேட்டார்கள். விளக்கம் சொன்னேன். அதன் பிறகு இஸ்லாத்திற்கு மாறினார்கள். அதன் பிறகு திருமணம் நடைபெற்றது. என் மனைவி திருமணத்திற்குப் பிறகு தினமும் ஐவேளை தொழுவார்கள்.

தொழுகையின் போது பாத்திஹா சூரா மட்டும் ஓதுவார்கள். இந்த நிலையில் ஒருநாள் என்னிடம் என் மனைவி சொன்னார்கள், ‘மனசுக்குள்ளே ஒரு எண்ணம் ஓடிட்டே இருக்கு, திப்புசுல்தான் பாவா, திப்புசுல்தான் பாவான்னு மனசுல ஓடிட்டே இருக்கு’ என்று. அப்ப நான் என் குருநாதரிடம் சொன்னேன். அவர் சந்தோசப்பட்டு சொன்னார் ‘திப்பு சுல்தான் பாவா அல்லாஹ்விடம் உங்களுக்காக பிரார்த்தனை பண்ணுகிறார். உன் மனைவி கர்ப்பம் தரித்திருக்கிறார். ஆண் குழந்தைதான் பிறக்கும் திப்பு சுல்தான்னு பெயர் வை’ என்றார்கள். அதன்பிறகு இரண்டு நாள் கழித்துதான் கர்ப்பம் தரித்திருப்பதே எங்களுக்கு உறுதியானது. அதன் படிதான் திப்புசுல்தான் என்ற பெயரை வைத்தேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com