Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006
நூல் விமர்சனம்

வன்முறைகளினூடாக வாழ்வைக் கைப்பற்றிய பெண்ணின் உலகம்

கீரனூர் ஜாகிர் ராஜா

எழுதித் தீராத வாழ்வு கிராமத்துப் பெண்களின் வாழ்வு. எத்தனை முறை எழுதப்பட்டாலும் மீண்டும் மீண்டும் படைப்பாளிக்குத் தன்னிலிருந்து புதியனவற்றை உமிழ்ந்து கொண்டேயிருக்கும் வாழ்வு கிராமிய வாழ்வு. நவீன வாழ்வை முழுக்க எழுதிச் சலித்தபின் கிராமங்களை நோக்கிப் படையெடுக்க வேண்டிய கட்டாயமுண்டு நம் படைப்பாளிகளுக்கு. இதை சு.தமிழ்ச் செல்வியின் ‘கற்றாழை’ நாவல் உறுதி செய்கிறது. கிராமத்தில் பிறந்து ரத்தமும் சதையுமான வாழ்வை உள்வாங்கி, அதையே படைப்புலகமாக்கிக் கொண்டவர் களிடமிருந்துதான் அசல் கிராமிய வாழ்வு கலையாகப் பரிணாமம் அடைந்து மிளிர்கிறது. உரைநடையில் ஆர்.சண்முக சுந்தரம், கி.ராஜநாராயணன், பெருமாள் முருகன் உள்ளிட்டவர்களும், கவிதையில் பழமலய், இலக்குமி குமாரன் ஞானதிரவியம் போன்றோரும் காட்டிய அச்சுஅசலான பட்டிக் காட்டுப் போக்கின் நீட்சியாக சு.தமிழ்ச்செல்வியின் ‘கற்றாழை’ நாவல் விளங்குவதால் இதை ஒரு விதப் பரவசமான மனநிலையில் வரவேற்கத் தோன்றுகிறது. குறிப்பாக மணிமேகலை என்னும் பாட்டாளிப் பெண்ணின் வாழ்வாய் விரியும் இந்நாவலில் விவசாயத் தொழிலின் சகல நுட்பங்களும் சரியான இடங்களில் விவரணைகளாகப் பொருந்தி எழுந்துள்ளதை வாசகன் பூரணமாக அனுபவிக்கலாம்.

Katralai மணிமேகலை, இவள் ஆசைப்பட்டும் கூட ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாதவள். அக்கா பூரணமும் அம்மா பாக்கியமும் போதாக்குறைக்கு அப்பாவின் குடிகாரச் சினேகிதரும் சேர்ந்து கல்விக் கனவைச் சிதறடிப்பதில் தொடங்குகிற மணிமேகலையின் ஏமாற்றச் சங்கிலி மகள் சத்தியாவின் திருமணம் வரை தொடர்கிறது. படிப்பை நிறுத்திய பிறகு ஆரம்பிக்கிற உழைப்பு காடு கழனிகளில் கடுமையாகி திருப்பூர் பனியன் கம்பெனி வரை நீடிக்கிறது. உழைப்பு உழைப்பு அப்படி ஒரு உழைப்பு. பருவமடைந்த பின் அவள் விரும்புகிற அம்முனியக்கா பேரன் சங்கரனையோ (பொழித் தகராறில் தூக்கு மாட்டிச் சாகிறான்) அத்தை மகன் உதயகுமாரையோ (இவனின் தாய் ஓடிப் போனவள் என்பதால்) மணந்து கொள்ள முடியாதவள் குடித்து விட்டு வந்து தாலி கட்டுகிற செல்வராசுவுக்கு கழுத்தை நீட்டுகிறாள். பிள்ளைகளின் கல்வியை ஏன் கல்யாணத்தையுங்கூட தீர்மானிக்கிற இடமாக கிராமத்து சாராயக்கடை அமைகிறது. போதையின் உச்சத்தில் பரிமாறிக் கொள்ளப்படும் சத்தியங்கள் பலரின் வாழ்க்கை அலங்கோலங்களுக்கு காரணமாகி கலவரப்படுத்துகிறது.

மணிமேகலையின் கணவன் செல்வராசு ஏற்கனவே அம்புசத்தை ‘வைத்திருப்பவன்’; மணிமேகலையின் உழைக்கும் இயல்புக்கு மாறாக உழைப்பை மறுத்து குடித்து கும்மாளமிட்டு ஊரைச் சுற்றித் திரிகிறவன். உடல் சார்ந்தத் தேவைகளை மட்டுமே மணிமேகலை இவனிடம் பூர்த்தி செய்து கொள்கிறாள். (அவன் மணிமேகலையை ஒரு நாளும் இந்த விஷயத்தில் தவிக்கவிட்டது கிடையாது). மற்றபடி அவன் உண்டாக்குகிற சகல வன்முறைகளையும் “இது இப்படித்தான் நடக்கும். எனக்கு மின்னாடியே தெரியும்” என்று தாலி கட்டிய மேடையிலேயே வலியோடும் வேதனையோடும் ஏற்றுக் கொண்டவள்தான். இதன் காரணமாகவே மகள் சத்தியாவை கும்பகோணத்தில் - தங்கை வளர்மதியின் ஆதரவில் படிக்க வைக்கிறாள். அக்கா பூரணம் பூரணமாக இவளை ஒதுக்கித் தள்ளியவள். ‘சின்ன மொட்ட’ என்று பாசமாக அழைக்கப்படும் தங்கை வளர்மதி மட்டுமே உடன்பிறந்தவர்களில் அவளைப் புரிந்து கொண்ட ஜீவன். “அந்த ஆளு அடிச்சா நீனும் திருப்பி அடி; சோறாக்கிப் போடாத; துணி தொவச்சிக் குடுக்காத; வேல செய்யிற காசக் குடுக்காத; சோத்துப்பானய அந்தாளு ஒடச்சா கொளம்பு சட்டிய நீ தூக்கிப் போட்டு நொறுக்கு” என்று சிறுபிராயத்திலேயே அக்காவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தவள்.

செல்வராசு மல்லிப்பட்டணத்து இந்திராவை மணந்து குடித்தனம் செய்ய ஆரம்பித்தவுடன், நாவலின் உச்சகட்டம் தொடங்குகிறது. வளர்மதி தாலிக் கொடியிலிருக்கிற பிராங்காசுகளை விற்று திருப்பூருக்கு அழைத்து வந்து அமர்த்துவதன் மூலமாக மணிமேகலையின் மனதில் நம்பிக்கை துளிர்க்கிறது. “எவ்வளவு வெயிலெரிச்சாலும் தாக்குப் புடிச்சி வேருல ஈரத்தக் கட்டி வச்சிக்கிட்டு கெடக்குற கத்தாழயும் நீயும் ஒண்ணுதாங்க்கா” என்று வளர்மதி சொல்வதற்கேற்றார் போல நிராசைகளைச் சுமந்து பழக்கப்பட்ட மணிமேகலை பாத்திரத்தின் வாயிலாக லட்சோப லட்சம் கிராமத்துப் பெண்களின் அவல வாழ்வை வெளிப்படுத்துகிறவராகிறார் சு.தமிழ்ச் செல்வி.

கொட்டும் மழையில் வயல் நடவு, சேறு கிண்டுதல், புல் அறுத்துக் கட்டுதல், கருவேல் வெட்டி வருதல் போன்ற விவசாயக் கூலிகளின் தொழில் சார்ந்த விவரணைகள் நுட்பமாகப் பதிவு செய்யப்படுள்ள இக்கலைப் படைப்பில் உறவுகள் குறித்த உளவியல் பார்வையை மௌனத்துடனும் ஒருவித உக்கிரத் தன்மையுடனும் முன்வைக்கிறார் சு.தமிழ்ச் செல்வி. பழமொழிகளும் இயல்பாக இயைந்த வட்டார வழக்கினூடாக உரையாடல்களும் நெருடலில்லாது வாசகனைக் கடந்து செல்கின்றன. உழைப்பை விரும்பிச் செய்கின்ற பெண்ணாகவும் அதீதமில்லாது அழுத்தமான பெண்ணியக் குரலாகவும் பதிவாகியுள்ள மணிமேகலை அசாதாரணமான மனதிடமும் வைராக்கியமுங் கொண்ட முன்மாதிரியாய் பெண்கள் மனங்களில் இடம் பிடிக்கப் போவதென்னவோ நிச்சயம்.

குறிப்பிடத்தக்க பிறிதொரு அம்சம் தொழில் நகரமான திருப்பூருக்கு நாவல் இடம் பெயர்வதாகும். வருமானம் என்னும் கொடிய நிர்ப்பந்தம் தீவுத்தீவாய்க் குடும்பங்களை திருப்பூரில் கொண்டு வந்து கொட்டுகிறது. எங்கு பார்த்தாலும் அந்த நகரத்தில் நெருக்கித் தள்ளுகின்ற மனிதத் தலைகள், துரத்துகிற டூவீலர்கள், போக்குவரத்து இடையூறுகள், புகை மண்டலம், வேகம். . . வேகம்.... இவைகளைத் தாண்டி ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்கிற விளம்பரம் கதவுக்குக் கதவு தொங்கிக் கொண்டிருப்பதும், ஒன்றரை ஷிப்டு செய்தால் நூறு ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து விடுவதும் தான் அதை உய்விக்கும் நகரமாக்கிக் காட்டுகிறது. கடை கோடித் தமிழனைப் போலவே மணிமேகலைக்கும் அங்கே வாழ்க்கை சாத்தியப்படுகிறது. 1ம் எண் அறை சிவகாமி, 2ம் எண் அறை சுமதி, 3ம் எண் அறை சென்சிலா இவர்களின் கதைகள் நாவலின் உபகதைகளாகின்றன. சத்தியாவின் திருமணத்துக்காக இரண்டாயிரம் கொடுத்து உதவுகிற சிவகாமி போன்ற அபூர்வ மனுஷிகளையும் தாங்கிக் கொண்டுதான் இந்த உலகம் சுழல்கிறது.

மணிமேகலை ஏன் இப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டாள்; பெற்றோராலா? கணவனாலா? மணிமேகலையுடன் வாழ முடியாத செல்வராசு எவளோ மல்லிபட்டணத்து நொண்டிச்சியுடன் திருந்தி வாழ முடிந்தது எதனால்? ‘மகமாயி சத்தியமா இந்தப் புள்ள யாருக்கு உண்டாச்சின்னே எனக்குத் தெரியல எனப் புலம்பும் செகதாம்பா ஓடிப்போகிற எல்லாப் பெண்களின் சாயையும் படிந்தவளா?’ அல்லது அதைக் கடந்தவளா? வாழ்க்கை நெடுக சோகம் தரித்த தன் தாயின் விருப்பத்திற்காகவேனும் சத்தியா நந்தகுமாரை திருமணம் செய்யாதிருக்கலாம்; கம்யூன் வாழ்வை விரும்பி வாழும் மணிமேகலையின் மனதில் இனி எந்த ஆணும் குறுக்கிடமாட்டானா? நந்தகுமாரிடமிருந்து பிரிந்து திரும்புகிற சத்தியாவின் நிலை என்ன?

. . . நாவல் முடிந்த பிறகு நம்முள் எழுகிற இக்கேள்விகளும் வியாக்கியானங்களும் நாவலுக்கு சாதகமான அம்சங்களாகவே அமைகின்றன.

நீண்ட நெடிய தமிழ் நாவல் வரலாற்றில் பெண்ணை மையப்படுத்திய படைப்புகளென காலத்தை விஞ்சி நிற்பவைகளில் கற்றாழைக்கு முக்கியமான இடம் உண்டு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com