Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006

மஞ்சள் பிசாசு
ஆர். பிரேம்குமார்

அந்தி வெயில் மெல்லப் பின் வாங்கிய நேரம். அவசரமாக சந்தைக் கடக்க முயன்ற சொர்ணப்பனை மடக்கிப் பிடித்தார் தங்கராஜ்.

Jewels “என்ன வேய்... பேயறஞ்ச மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு இடி விழுந்த பாம்பு போல அவ்வளவு அவசரமா எங்கே வேய் ஓடுறீரு?”

“இல்ல தங்கராஜ்; இப்போ வர்ற மினிபஸ்ஸைப் பிடிச்சாத்தான் நம்ம வேலப்பன் ஆசாரிக்க வீட்டு முன்னே போகிற பஸ்ஸை மெயின் ரோட்டில் இருந்து பிடிக்க முடியும். என்னாதான் நடுராத்திரிக்குள்ளே வீடு திரும்ப முடியும்...!

“என் வேய்... சொர்ணப்பா... நீரு பிறந்ததே மினி பஸ்ஸுக்குள்ளே என்கிறது மாதிரி இல்ல பேசுறீரு... நேற்றைக்கு வரைக்கும் மைல் கணக்கில் நடந்த கால்கள்தானே! அது சரி.. என்ன விசயம்?”

“இல்லை... என் மகளுக்கு ஆவணியில கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு... அதுதான் நகை நட்டு செய்யயலாம்னு பொன் ஆசாரி வீடு வரைக்கும் போகலாம்னு...”

“என்ன சொர்ணப்பா... விபரம் தெரியாத ஆள் மாதிரி இல்ல பேசுறீரு! ‘பொன்னுக்கு துரு ஏறாது; பொறுமைக்குச் சினம் வராது’ என்கிற கணக்கில் அல்லவா தட்டான் கிட்ட நகையைக் கொடுத்துட்டுக் காத்துக் கிடக்கணும்... இந்த காலகட்டத்தில், ஊருக்கு ஊரு ‘ஹால் மார்க்’ நகை விற்கிற நேரத்தில் நீரு என்னடான்னா சுத்தக் கிராமத்தானாய் இருக்கிறீரே...?”

“அதென்ன தங்கராஜ், ‘ஹால் மார்க் நகை’?”

“இப்பல்லாம் டவுன்லயும் சரி; மற்ற இடங்கள்லயும் சரி... நகைக்கடைகள் புதுசு புதுசா முளைக்குது... சின்னத்துண்டு ரூம் கிடைச்சாலே ஒரு நகைக்கடை தொடங்கிடலாம்... இதில் பல

கடைகள்ல நகைகள் பார்க்கிறதுக்குத்தான் பளபளன்னு இருக்கும். வாங்கிப் போட்ட இரண்டு மாசத்திலேயே பித்தளை மாதிரிப் பல்லை இளிக்கும்... இதுக்காகத்தான் ஒரு தர நிர்ணயம் (Quality control) வேணும்னு ஹால்மார்க் (Hall Mark) முத்திரை பெற்ற நகைகளைத் தரமான நகைகள் என்று விற்கிறார்கள்.

ஹால்மார்க் முத்திரை நகைகளில், இந்திய தர நிர்ணய அமைப்பின் முத்திரை, நேர்த்தித் தன்மை, அதைப் பரிசோதித்த நிறுவனத்தின் முத்திரை, நகை செய்யப்பட்ட ஆண்டின் முத்திரை, கடைக்காரரின் முத்திரை என ஐந்து முத்திரைகள் ‘லென்சு’ வச்சுப் பார்த்தா தெளிவா தெரியிற மாதிரி பொறிக்கப்பட்டிருக்கும்...!’

“அட... பொன் குடத்துக்கு பொட்டு இடற சமாச்சாரமா இல்ல இருக்குது? அது என்ன தங்கராஜ், நேர்த்தித் தன்மை?”

“சொர்ணப்பா... நேர்த்தித் தன்மை என்றால், ஒரு கிராம் தங்கத்தை ஆயிரம் பகுதிகளாப் பிரித்தால் அதில் எத்தனை பகுதி சுத்த தங்கமாக இருக்கும் என்பதுதான்.

சில கடைகளில் 916 நேர்த்தித் தன்மை உள்ள தங்கத்தில் செய்யப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். 916 என்றால், ஒரு கிராம் தங்கத்தில் ஆயிரத்தில் 916 பகுதிகள் சொக்கத் தங்கம் என்று பொருள். இப்படித்தான் 375 என்றால் 9 கேரட்; 585 என்றால் 14 கேரட்; 750 என்றால் 18 கேரட்; 875 என்றல் 21 கேரட்; 958 என்றால் 23 கேரட் ஆகிய நேர்த்தித் தன்மைகளிலும் தங்கம் கிடைக்கிறது. 750 நேர்த்தித் தன்மை உடைய நகைகளை விற்பனை செய்ய ‘ஹால் மார்க்’ முத்திரை அங்கீகாரம் பெற்ற கடைக்காரரும், ‘ஹால் மார்க் முத்திரை பெற்ற தங்கம்’ என்றே விளம்பரம் செய்வார்... எனவே வாடிக்கையாளர்கள் ஏமாந்து போவது சகஜம். இதனடிப்படையில்தான் சில கடைகள் ‘கேரட்’ குறைந்த நகைகளை அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன. அரை பவுன், ஒரு பவுன் என்று சில்லறை விற்பனை நடக்கும் கடைகளில் தரம் பற்றியப் பேச்சு அதிகம் வருவது இல்லை; ஏனெனில் வாங்க வருபவர் ஐம்பதோ, நூறோ கடனில்தான் நகையைப் பெற்றுச் செல்வார். இதில் என்ன ‘குவாலிட்டி’ வேண்டிக்கிடக்கு?

ஆக, தங்கம் வாங்கும் போது 18 கேரட் / 21 கேரட் / 22 கேரட் என்பதில் எது வேண்டும் என்று முடிவு செய்து வாங்க வேண்டும். இன்னொரு விசயமும் கவனிக்கணும்... ஹால் மார்க் முத்திரை நகைகள் விற்கிறாங்க என்பதற்காக அந்தக் கடையில் உள்ள எல்லா நகைகளும் ஹால் மார்க் நகைகளாக இருக்கப் போவது இல்லை...!”

“இந்த ‘கேரட்’ என்கிற வார்த்தையின் பொருளே புரிய மாட்டேங்குதே...?”

“உனக்கு மட்டுமல்ல சொர்ணப்பா, ஊரில நிறைய பேருக்கு இதன் பொருள் தெரியாது.

அந்தக் காலத்தில் மத்தியத் தரைக்கடல் / மத்திய கிழக்கு நாடுகளில், தங்கம் மற்றும் விலை உயர்ந்த இரத்தினங்களை தராசில் வைத்து எடைபோட படிக்கற்காளாக ‘கேரப் விதைகளை’ (Carom seeds) பயன்படுத்தி இருக்காங்க. அதிலயிருந்து உருவனாதுதான் கேரட் (carat / Karat).

ஒரு கேரட் என்பது 24ல் ஒரு பங்கு.

24 கேரட் தங்கம் நகைகள் செய்ய உதவாது. எனவேதான் வெள்ளி, தாமிரம், நிக்கல், துத்தநாகம் முதலியன உடன் சேர்க்கப்படுகின்றன. 18 கேரட் என்றால் 75ரூ தங்கம்; 14 கேரட் என்றால் 58ரூ தங்கம்; 10 கேரட் என்றால் 47.7ரூ தங்கம்.”
தங்கராஜின் விளக்கத்தைக் கேட்டு சொர்ணப்பன் வியந்து போனார்.

“பொன்னின் குணம் போகுமா? பூவின் மணம் போகுமா?’ என்று பெரியவங்க சொல்வாங்களே... நீரு சொல்றதைப் பார்த்தா பொன்னுக்கு மேனி மட்டும்தான் மினுக்கடி என்று அல்லவா தோன்றுகிறது?” சொர்ணப்பன் கேட்டதற்கு தங்கராஜ் பதில் சொன்னார்.

“சொர்ணப்பா... குணாம்சத்தில் மாற்றம் என்கிறது நிறத்திலயும் தெரியும். இயற்கையில் கூட பல நிறங்களில் தங்கம் கிடைக்குது...!”

“அப்படியா?” சொர்ணப்பன் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்.

“பொதுவா மஞ்சள் நிறத் தங்கத்தைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். மஞ்சள் தங்கத்தில் வெள்ளியும், தாமிரமும் கலப்பு செய்யப்பட்டிருக்கும்...! வெள்ளை நிறத்தங்கமும் உள்ளது. அது பிளாட்டினம் போல இருக்கும். எத்தனை பேர் பிளாட்டினம் என நினைத்து வெள்ளை நிறத் தங்கத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வைத்துள்ளார்களோ? இளஞ்சிவப்பு நிறத்திலும் தங்கம் உண்டு.

ஆதிகாலத்தில் சுத்தமான தங்கம் தயாரரிக்க முடிந்தது இல்லை. எப்போதுமே தயாரிப்பின் முடிவில் தங்கமும் வெள்ளியும் சேர்ந்த கலப்பு உலேகாம்தான் (Alloys) கிடைக்கும். அதற்கு ‘ஆசெம்’ (Azem) என்று பெயர். இயற்கையாகவே தங்கமும் வெள்ளியும் கலந்த ‘அலய்’ இருக்கிறது. அதனை எலெக்ட்ரம் (Electrum) என்கிறார்கள். . .”

“இவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சிருக்கிறீரே... வேய்.. தங்கராஜ், நீரு பலே ஆள்தான்.. !”

“என்னைப் பாராட்டிப் பலன் இல்லை சொர்ணப்பா... நம்ம பிள்ளையாண்டான் இருக்கானே பொன்ராசு... அதான் வே... என் அக்கா மகன்... அவன்கிட்டயிருந்து உருவினதுதான் இதெல்லாம்...!”

“நீரு உண்மையைச் சொல்லிப்பிட்டீரே... உம்ம பிள்ளையாண்டான கொஞ்சம் முன்னாடி இந்தப் பக்கம் பார்த்தேனே...!”
இருவரும் சாலையின் இரண்டு பக்கமும் கண்களை ஓட விட்டனர். அப்போது ஒரு சலூனிலிருந்து வெளியே தலையைத் தடவியபடியே வந்து கொண்டிருந்தான் பொன்ராசு.

“... ஏலே... பொன்ராசு... இங்க வாலே!” தங்கராஜ் உரிமையுடன் கூப்பிட்டார்.
பொன்ராசு பக்கம் வந்தான்.

“ஏலே... உன்னைப் பற்றி தாம்ப்ல பேசிக்கிட்டு இருந்தோம்...!”

“என்னைப் பற்றியா?”

“ஆமலே... நீதான் அன்ணைக்கு பேசிக்கிட்டிருக்கப்ப தங்கம் ஒரு மஞ்சள் பிசாசுன்னு கதை எடுத்து விட்டேல்ல... அது பற்றின விசயங்கள்ல சிலதை சொர்ணப்பன் கிட்ட சொல்லிட்டிருந்தேன்!”

“மஞ்சள் பிசாசா? தங்கமா? அவனவன் தங்கம்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்க, நீ என்ன பொன்ராசு இப்படி சொல்றே?” சொர்ணப்பன் பதறிப் போய் கேட்டார்.

“அப்படித்தான் பெரியவரே... தங்கத்தை கோயில்கள்ல அழகு படுத்தவும், விக்கிரகங்கள் செய்யவும், இந்தியாவில பயன்படுத்தறதால, இந்தியர்கள் கடவுளின் உலேகமாகத் தங்கத்தைக் கருதுகிறார்கள். ஆனா, எல்லா நாடுகளின் பூர்வீக வரலாற்றிலயும் தங்கத்துக்கும் கடவுளுக்கும் தொடர்பு இருக்கு...

ஸ்பானியர்கள், அமெரிக்காவின் ஆதி குடிகள் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்திய போதுதான் ‘கடவுளாக’ இருந்த தங்கம் மஞ்சள் பிசாகாக மாறியது.

அமெரிக்காவின் ஆதி குடிகளில் ஒன்றான இன்கா (Incas) இனத்தவர் தங்கத்தைச் சூரியக் கடவுளின் புனித உலேகமாகக் கருதினர். எனவே சூரியக் கடவுளின் கோயில்களில் தங்கம் குவிக்கப்பட்டது. இன்காக்களின் தலைவன் அட்டஹுல்ப்பாவை சிறை பிடித்தபோது, அவரை விடுதலை செய்ய அளக்க முடியாத அளவுக்கு தங்கம் தருவதாகக் கூறினார்கள். ஸ்பானியர்கள் விடுதலை செய்யவில்லை. அதே வேளையில் இன்காக்களிடம் பெருமளவில் தங்கம் உள்ளதை அறிந்த ஸ்பானியர்கள் பெருங்கொள்ளைகளில் ஈடுபட்டனர். இன்காக்களின் தங்கக் கிடங்குகள் சூறையாடப்பட்டன. இன்காக்கள் அஜராங்கோ மலைகளின் இரகசியக் குகைகளில் தங்கத்தை மறைத்து வைத்தார்கள். இன்றைக்கும் இந்த மலைப் பகுதிகளில் ‘தங்க வேட்டை’ நடக்கிறது. நிறைய சினிமாக்கள் கூட இதுபற்றி வெளிவந்திருக்கு.

இன்றைக்கு ஏழை நாடு என்றும், கம்யூனிஸ்ட் ஒளிப்போராளிகளின் பிடியில் உள்ள நாடு என்றும் அறியப்படுகின்ற பெரு நாட்டின் செல்வச் செழிப்பான கஜ்கோ நகரமும் ஸ்பானியர்களால் சூறையாடப்பட்டுள்ளது. பெருநாட்டின் பொற் கொல்லர்களின் கவின்கலை வேலைப்பாடுகள் நிறைந்த பொன் ஆபரணங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு, தங்கக் கட்டிகளாக உருக்கப்பட்டு ஸ்பெயினுக்கு கப்பலேறியது என்பது வரலாறு...!”

“ஏலே பொன்ராசு... நான் இந்தியாவில்தான் தங்கம் கொட்டிக் கிடக்குது என்று நினைத்தால் நீ என்னடான்ன வேற நாட்டு வரலாறெல்லாம் சொல்றே...!” தங்கராஜ் குறுக்கிட்டார்.

“இந்தியாவில் மருந்துக்கு கூட தங்கம் வெட்டி எடுக்க முடியாம ஆயாச்சு... உலகத்திலேயே பழமையான தங்கச் சுரங்கங்கள் இந்தியாவிலயும் வடகிழக்கு ஆப்பிரிக்காவிலும் இருந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இப்ப கர்நாடகத்தில் மட்டும் தான் தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அதிலும் கோலார் தங்க வயல் மூடப்பட்டு விட்டது. வேலை பார்த்த ஆயிரக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர். ஹுட்டி தங்கச் சுரங்கத்திலிருந்து வருடத்துக்கு மூன்று முதல் நான்கு டன் தங்கம் மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் தங்கத்தை கொள்முதல் செய்வதில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது இந்தியா. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 800டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 320டன் தங்கம் தமிழ்நாட்டில் மட்டுமே விற்பனை ஆகிறது...!”

“பொன்னிலே பொரித்து தங்கத்தில தாளிக்கிறவங்க ஊருக்கு ரெண்டு பேரு இருக்கத்தான் செய்றாங்க... பின்னே எப்படி தங்கம் விலை ஏறாம இருக்கும்? சட்டியில இல்லேன்னா எப்படி அகப்பையிலே வரும்?” சொர்ணப்பன் தன் எரிச்சலைக் கொட்டினார்.

“உலகத்திலேயே தங்க நகைகள் மீது பித்து பிடித்தவர்கள் இந்தியர்கள்தான். இந்தியாவுக்கு அடுத்தபடி வேணும்னா ஜப்பானைச் சொல்லலாம். உற்பத்தியே இல்லாமல் இறக்குமதி பண்ணினால் விலை தாறுமாறா எகிறிக் கிட்டுதான் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள 15 தங்கச் சுரங்கங்களிலிருந்து ஆண்டுக்கு 2500டன் தங்கம் மட்டுமே வெட்டி எடுக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 4000டன். இதுதான் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம்!”

“விஷம் ஏறுறது போல இல்ல தங்கத்தோட விலை ஏறி இருக்கு!”

பொன்ராசு சொன்னான்:

‘மத்திய அரசின் தவறான நிதிக் கொள்கையால் தற்போது தங்கம் சவரன் விலை ரூ.10 ஆயிரத்தை எட்டி விடும் என அஞ்சப்படுகிறது. உங்கள் ஆதரவோடு மீண்டும் நான் ஆட்சி அமைத்தால் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவாகி இருப்பவர்களுக்கும், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் பெண்களுக்கும் திருமணத்தின் போது 4 கிராம் (அரை சவரன்) தங்கத்தாலி இலவசமாக வழங்கப்படும்’ என்று அதிமுக தலைவர் ஜெயலலிதா எழுதப்படாத தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசுகிற அளவுக்கு தங்கம் விலை ஏறிவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் இதற்கு முன்னரும் தங்கத் தாலி பற்றிப் பேசி இருக்கிறார்கள். உலகத்திலேயே தேர்தல் பிரச்சாரத்தில் தங்கத்தின் விலை பற்றிப் பேசுவது தமிழ்நாட்டில் மட்டுந்தான் இருக்கும் போலிருக்கு.

ஒரு காலத்தில் ‘சித்திரை மாதத்துப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்’ என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு நெல்லின் விலையும் தங்கத்தின் விலையும் நேர் விகிதத்தில் இருந்த நிலை மாறி, இன்று எதிர் விகிதத்தில் முரண்டு பிடிக்கின்றன. ஒரு சவரனுக்கு 40 மூட்டை நெல் தேவை என்கிற தவறான பொருளாதார விதி நம்மைச் சூழ்ந்துள்ளது.

2006 சித்திரை (ஏப்ரல்) மாதத்தில் தங்கம் கிராமுக்கு ரூ.850 ஆக இருந்தது. அது நொடிக்கு நொடி படிப்படியாக ஏறி, மே மாதம் 15ம் தேதி வாக்கில் உச்ச கட்டமாக கிராமுக்கு ரூ.998 என எட்டி விட்டது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இலட்சக்கணக்கான நகைத் தொழிலாளர்கள்தான். பொதுமக்கள் விலைக்கு அஞ்சி தங்கத்தைத் தொடுவதையே ஆபத்து எனக் கருதும் போது, நகை வேலையை நம்பி இருக்கும் குடும்பங்கள் ‘இடுக்கண் வருங்கால் நகுக!’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது...”

“இனி விலை இறங்குமா - இறங்காதா?” ஏக்கத்துடன் கேட்டார் சொர்ணப்பன்.

“சொர்ணப்பா.. உன் ஆதங்கம் புரியுது. ஆவணிக்கு முன்னாடி விலை குறையுமான்னு பார்க்கிறே... ரொம்பவும் விலை குறையாதபடி பார்த்துக்க முதலாளிகள் நிறைய ‘மார்க்கெட்டிங் டெக்னிக்’ வச்சிருக்காங்க...

சில வருடங்களுக்கு முன்பு வரை ஏப்ரல் - மே மாதங்களில் தங்கம் சுமாராகத்தான் விற்பனை ஆகும். அறுவடைக் காலம் என்பதனால் விவசாயிகள் கொஞ்சம் நகை நட்டு வாங்குவாங்க. அவங்க சேமிப்பு வெறும் நிலமும் நகையும் தானே..! இப்ப என்னடான்னா அதிகம் தங்கம் விற்பனை ஆகிறதே கோடை காலத்தில்தான் என்று ஆக்கி விட்டார்கள்!”

“அதெப்படி... விலை கன்னா பின்னான்னு ஏறிக்கிட்டு இருக்கும்ப எப்படி விற்பனை அதிகரிக்கும்?”

“சொர்ணப்பா... நவீன முதலாளித்துவம் தன்னுடைய தேவைக்கேற்ப மக்களின் பரம்பரை நம்பிக்கைகள், பண்பாட்டுத் தனித் தன்மைகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ளும்.

ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்கும், மே மாதம் 14ம் தேதிக்கும் இடைப்பட்ட சித்திரை மாத வளர்பிறை காலத்தில் மூன்றாம் பிறை தோன்றும் நாள்தான் ‘அட்சய திருதியை?’

இந்த நாளில் தங்கம் என்று அல்ல; வீடு, மனை, துணிமணி, பாத்திரம் என்று எது வாங்கினாலும் அது பல்கிப் பெருகும் என்பது ஐதீகம். இந்த ‘நம்பிக்கையைத்தான் பஞ்சாங்கத்தில இருந்துப் புரட்டிக்கிட்டு வந்து, ‘நிகழ்வு சந்தைப்படுத்தல்’ (Event Marketing) எனப் புதுப்பெயர் கொடுத்து கலக்குறாங்க நகை வியாபாரிகள்.

சென்ற ஆண்டு அட்சய திருதியையின் போது சென்னையில் மட்டும் ஒரே நாளில் 500 கிலோ தங்க நகைகள் விற்றுத் தீர்ந்தன.

இந்த ஆண்டு சுக்கில பட்சத்தில் அட்சய திருதியை வருவதால் ‘வெள்ளை உலோகம்’ வாங்கினால் மிகவும் நல்லது என்று சில ஜோதிடர்கள் ஆரூடம் சொன்னார்கள்...”

“அப்போ அலுமினியத்தை வாங்கிக் குவிச்சு இருப்பாங்களே...!” அப்பாவியாகக் கேட்டார் சொர்ணப்பன்.

“என்ன வேய்... பேசுறீரு? ‘வெள்ளை உலோகம்’ என்றதும் மக்கள் பிளாட்டினம் வாங்கணும் என்பதுதானே வியாபார நோக்கம்... மக்கள் கவனம் பிளாட்டினம் பக்கம் திரும்பி விட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.570க்குக் கிடைத்தால் ஒரு கிராம் பிளாட்டினம் ரூ.2200/-... பார்த்துக்கிடும் நகை வியாபாரம் போற போக்கை...!”

“அப்போ தங்கம் விலை உயர்வுக்கு இதெல்லாம் தான் காரணமா?”

“இது மட்டுமில்ல; சர்வதேச மார்க்கெட் நிலவரம், டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைந்தது போன்ற பல காரணங்கள் இருக்கு. ஆனா எல்லாவற்றுக்கும் மேல் பங்குச் சந்தையில் ஊக வணிகத்தின் மூலம் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவதுதான் முக்கிய காரணம்...!”

“அதென்ன பொன்ராசு... ஊக வணிகம்! கொஞ்சம் விளங்கும்படியா சொல்லேன்...!”

“பங்குச் சந்தையைப் போல் ‘பல்பொருள் பண்டமாற்று நிறுவனம்’ (Multi - Commodity Exchange of India) ஒன்றை துவங்கி இருக்கிறார்கள். இங்கு தங்கம், வெள்ளி, கோதுமை உள்ளிட்ட பல பொருட்களை ‘கம்ப்யூட்டர்’ மூலம் (On-Line) விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறார்கள். பொருட்கள் உடனடியாக கைமாற வேண்டிய அவசியம் இல்லை. இதில் ஈடுபடுவதற்கு முழு விலையைச் செலுத்த வேண்டிய தேவை இல்லை. வெறும் 5 சதவீத பணத்தைச் செலுத்தி தங்கத்தை வாங்கி விற்க முடியும். எதிர்காலத்தில் என்ன விலையில் தங்கம் விற்கும் என்பதை ஊகித்து ‘ஆன்-லைன்’ மூலம் செயல்படும் வியாபாரம். இதனால் தங்கத்துக்கு செயற்கையாக ஒரு ‘கிராக்கியை ஏற்படுத்த முடியும். இதனால் விலை கிடுகிடுவென ஏறும்.

‘தங்கத்தின் விலையில் 5 சதவீதம் மட்டுமே செலுத்தி, அந்தத் தங்கத்தை சந்தைக்கே வரவிடாமல் தடுத்து நிறுத்துவதால் தங்கத்துக்குத் ‘தட்டுப்பாடு’ என்பது போன்ற தோற்றம் உருவாகிறது.”

“இதையெல்லாம் கண்டுக்கிறதுக்கு யாரும் இல்லையா?”

“நிலைமை மோசமாகி வருவதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தங்க வியாபாரிகளோடு ஒரு சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.

‘ஆன்-லைன் மூலம் தங்க வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மொத்த தங்கத்தின் விலையில் 30 முதல் 50 சதவீதம் வரை பணம் கட்ட வேண்டும் என்ற ஒரு நிபந்தனை முன் மொழியப் பட்டிருக்கிறது. இதனால் மட்டும் விலையைக் கட்டுப்படுத்த முடியாது.

தங்கத்தை சேமித்து வைப்பதற்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் இவ்வளவுதான் தங்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் திருமணத்தின் போது மணப்பெண்ணின் எடைக்கு-எடை தங்கம் பரிமாறுவது எல்லாம் கட்டுப்படும். ஆபரணத் தங்கத்தின் கேரட் மதிப்பைக் குறைப்பது விலையைக் குறைக்க பெரிதும் உதவும். இதனால் பாதகமான விளைவுகளும் உண்டு! முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொண்டு வந்த ‘தங்கக் கட்டுப்பாடு’ இன்றைய பொருளாதாரச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது...!”

பொன்ராசு பேசி முடித்ததும் தங்கராஜ் கேட்டார்:

“என்ன வேய்... சொர்ணப்பன்... மகளுக்கு நகை செய்ய தங்க ஆசாரியைத் தேடி வந்ததையே மறந்துட்டீரே இப்ப எங்கே போறீரு? ஆசாரியைத் தேடியா? இல்லை... ஹால்மார்க் கடைக்கா?”

“‘சுண்டக்காய் கால் பணம்... சுமைகூலி முக்கால் பணம்’ சமாச்சாரமெல்லாம் நமக்கு வேண்டாம்! காலம் காலமாக கை பட்டு செய்கிற நகை அணிகிறதுதான் குடும்ப வழக்கம்... அதில் நிறைய அர்த்தம் இருக்கு...” அமைதியாச் சொல்லி முடித்தார் சொர்ணப்பன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com