Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006
விமர்சனம்

சாதியாக்க திருவுருக்களுக்கு சூட்டப்படும் தேசிய விடுதலை மகுடம்

குமரன்தாஸ்

‘ஆளும் வர்க்கம் யார் யாரை மலை முகடுகளில் ஏற்றி வைத்திருக்கிறதோ, அந்தத்
தேவதூதர்களையெல்லாம் தரதரவென இழுத்து வந்து, தரையில் போட்டு “பாரடா இவன் மனித இனத்துரோகி” என்று பறைசாற்ற முடியும்’

-சூரியதீபன்


‘ஏடறிந்த (மனிதகுல) வரலாறு முழுதும் வர்க்கப் போராட்ட வரலாறே’ என்று மார்க்ஸ் சொன்னார். ஆனால் நமது பள்ளிப்பாட நூல்களில் மன்னர்களின் வரலாறே மனித குல வரலாறாக கற்பிக்கப்பட்டது. தமிழ் மன்னர்களுக்கு இடைப்பட்ட ஆதிக்கப்போரே தமிழ் மக்களது வீரமாகவும், மன்னர்கள் கட்டிய கோவில்களும், கோபுரங்களுமே கடந்தகால சாதனைகளாகவும் சொல்லப்பட்டன.

கடந்தகால தமிழ் இலக்கியம் எவ்வாறு ஆண்டவனின் அல்லது நம்மை ஆண்டவர்களின் புகழ்பாடும் வேலையைச் செய்ததோ அதைப்போலவே நமது தமிழ் சினிமா தோன்றியது முதல் மன்னர்களதும் ஜமின்தார்களதும் புகழைப் பாடியது; பரப்பியது. (ராஜராஜ சோழன், மதுரை மீட்ட சுந்தர பாண்டியன், சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன். . .) நிலப்பிரபுக்கள், முதலாளிகளைப் போற்றியது. (எஜமான், சின்னக்கவுண்டர், எங்க முதலாளி, தேவர்மகன். . .) இதன் தொடர்ச்சியாக சமீபகாலத்தில் தாதாக்களையும் குண்டர்களையும் மக்கள் நாயகர்களாக காட்டி வருகிறது (நாயகன், தளபதி துவங்கி புதுப்பேட்டை வரை).

ஆனால் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை, விளிம்பு நிலை மனிதர்களுடைய வாழ்க்கையை மட்டும் ஒருபோதும் ‘உள்ளபடி’ தனது திரையில் காட்டிவிடாமல் திட்டமிட்டு மறைத்து வருகிறது. இத்தகைய மோசமான சூழலால் தான் மைய, வணிக சினிமா உலகுக்கு வெளியே மக்கள் இயக்கங்களும், சமூக அக்கறை கொண்ட மனிதர்களும் தங்களது முயற்சியால் மக்களது உண்மை வரலாற்றை, போராட்ட நிகழ்வுகளை ஆவணப் படங்களாகவும், குறும்படங்களாகவும் பதிவு செய்து வருகின்றனர். வணிகநோக்கில், பொழுது போக்கிற்காக என்ற பெயரில் எவ்வளவோ அபத்தமான பித்தலாட்டமான, சாதிவெறி ஆணாதிக்க திரைப்படங்களை தமிழ்ச்சினிமா உலகம் தயாரித்து தமிழ்ச் சமூக பொது உளவியலை நஞ்சாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் திரைப்படத்தின் துவக்கக் காட்சியில் மட்டும் ‘இவையனைத்தும் கற்பனையே’ என்று போட்டு தப்பிக்கின்ற நிலைக்கு மாறாக ஆவணப்படம் என்பது ‘உண்மை வரலாறு / நிகழ்வு’ என்ற உணர்வை பொதுப்புத்தியில் ஏற்படுத்திவந்த சூழ்நிலையில்தான் தினகரன் ஜெய் எழுதி, இயக்கி வெளிவந்துள்ள ‘மருதிருவர்’ என்ற ஆவணப்படமானது ஆவணப்படங்களின் நம்பகத் தன்மையை அடியோடு தகர்த்துப் போட்டுள்ளது.

‘மருதிருவர்’-ஐ மூன்று பகுதிகளாக பிரித்துணர முடிகிறது. முதல் பகுதி 1857- ‘சிப்பாய்க் கலகம்’ பற்றியும் அதனை 1801 மருதுபாண்டியரின் பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்துடன் ஒப்பிட்டு 1857 கலகம் இந்திய நிலமானியமானது பிரிட்டன் முதலாளியத்திற்கு எதிராக நடத்திய போராட்டம்; எனவே அது தேசிய விடுதலைப் போராட்ட மாகாது. சாராம்சத்தில் அது பிற்போக்கானது என்று முடிவு கட்டுகிறது.

இரண்டாவது பகுதி மருதுபாண்டியர் களது புகழ்பாடுகிறது. அதாவது அவர்களது திருப்பணிகள், சாதனைகள் பற்றி விரிவாகப் பேசுகிறது. சாரமாக அவர்களது அரசாட்சிக் காலம் பொற்காலம் என்று கூறுகிறது.

மூன்றாவது பகுதி இத்தகைய பொற்கால ஆட்சியைக் குலைக்க ஆங்கிலேயர் செய்த சதி, ஆக்கிரமிப்புப் பற்றியும் அதனை எதிர்த்த மருது பாண்டியரது வீரம், மதிநுட்பம் பற்றியும் அவர்களது 1801-ஆம் ஆண்டு போராட்டமே உண்மையான (முதல்) சுதந்திரப்போர் - தேச விடுதலைப் போர் எனவும் இது பிரஞ்சுப் புரட்சி, அமெரிக்கச் சுதந்திரப் போர் போன்றவற்றிற்கு நிகரானது என்றும் இது ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது எனவும் நிறுவ முயல்வதுடன் இறுதியாக மருதுபாண்டியர் மற்றும் அவர்களது வாரிசுகள் பிரிட்டிசாரால் கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் கூறுகிறது.

இவ்வாறு ‘மருதிருவர்’ கடந்த கால தமிழக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி மற்றும் நிலப் பகுதியான வரலாற்றையும் பதிவு செய்தல் என்ற பெயரில் விவாதத்திற்குரிய பல்வேறு அரசியல் கருத்தாக்கங்களை முன்வைத்துச் செல்கிறார் தினகரன் ஜெய்.

அவ்வாறு அவர் முன்வைக்கின்ற - ‘ஜனநாயகம், தேசவிடுதலை போன்ற குறிக்கோள்கள் தான் மருதுபாண்டியரது போராட்டத்தின் அடிநாதமாக விளங்கியது’ என்ற கருத்து அபத்தமானது அல்லது உள்நோக்கம் கொண்டது என்று கருத வேண்டியுள்ளது. அன்றைய (18ஆம் நூற்றாண்டு) மருதுபாண்டியர் உள்ளிட்ட பாளையக்காரர்கள் ஆட்சி பற்றிய ஆய்வறிஞர்களது விளக்கங்கள் இந்த முடிவுக்கே நம்மை இட்டுச் செல்கின்றன.

உதாரணத்திற்குச் சில. . .

‘தமிழ் நிலத்தை விசயநகர அரசு கைப்பற்றி நீண்டகாலம் ஆனபிறகும் அதுதன் அதிகாரத்தை எல்லாவிடங்களிலும் செலுத்த இயலவில்லை. . . தன் கீழ் இருந்த பகுதிகளில் குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவித இராணுவ நிலப்பிரபுத்துவ முறையைக் கொண்டு வந்தது. இம்முறையானது அச்சுதராயர் காலத்தில் (1529 - 1542) மதுரை மண்டல அரசுப் பிரதிநிதி விசுவநாத நாயக்கரால் கொணரப்பட்டது என்பர். . .

சிங்கம்பட்டி, சிவகிரி, ஊத்துமலை, மணியாச்சி, நடுவக்குறிச்சி போன்ற மேற்கு நெல்லை மாவட்டப் பகுதியிலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் மறவர் தலைவர்களையே பாளையக்காரரர்களாக ஆக்கினர். மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் கள்ளர் இனத்தவர்களை ஆக்கினர்.

பாளையக்காரர் அமைப்பு இராணுவ, பொருளாதார, அரசியல் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். விசயநகர அரசு வேற்று இனத்து அரசு என்பதாலும் அவர்கள் வேற்றுமொழி பேசுபவர்களாகையாலும் முழுமையாக இங்குள்ள இனத்தவர்களை நம்பியிருக்க இயலாத சூழ்நிலையில் கள்ளர், மறவர் ஆகிய பாளையங்களுக்கு இடையிடையே தெலுங்கர் பாளையங்களையும் அமைத்து நாயக்கர்களை பாளையக்காரர்களாக ஆக்கினர்.

பாளையக் கிராமங்களில் மைய அரசுக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை. பாளையக்காரனே வரிவசூலிக்கும் உரிமையும், நீதி நிர்வாக அதிகாரமும், இராணுவ உரிமையும் உடையவன். பாளையக்காரன் தான் பெறும் கப்பத்தில் மூன்றில் ஒருபங்கை அரசனின் கருவூலத்தில் செலுத்துவான், இன்னொன்றை அரசனுக்கான படைகளுக்குச் செலவிடுவான், கடைசிப் பங்கைத் தனக்காக வைத்துக் கொள்வான்.

பாளையக்காரனுக்கு என்று சொந்தமான தனி நிலங்கள், கோயில் நிலம், பொது நிலங்கள் ஆகியவை உண்டு. தம் கிராமங்களில் நல்ல நிலங்களில் பெரும்பகுதியைப் பாளையக்காரனே சொந்த நிலமாக்கி சாகுபடி செய்வான். எஞ்சியவற்றைத் தம் கீழ் உள்ள பணியாள்களுக்கு வழங்குவான். அவர்கள் அமைதி காலத்தில் விவசாயிகளாகவும் யுத்தகாலத்தில் போர் வீரர்களாகவும் இருப்பர்.

17, 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இத்தகைய பாளையக்காரர்களின் காலமாகவே இருந்தது என்பர். வெளிநாட்டுப் படையெடுப்புகளை எதிர்த்துத் தாக்கவும், உள்நாட்டு அரசியல் நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தவும் நாயக்க மன்னர்கள் பாளையக்காரர்களையே பெரிதும் சார்ந்திருந்தனர். தொடக்கத்தில் பாளையக்காரர் எண்ணிக்கை 72ஆக இருந்தது’. (கோ.கேசவன். பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை)

இத்தகைய 72 பாளையங்களில் ஒன்றான சிவகங்கைப் பாளையத்தின் அதிபதியான மறவர்களிடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சூழலில் மருதுபாண்டியர் வசம் அதிகாரம் வந்து சேர்கிறது. சுமார் 20 ஆண்டுகள், அரண்மனைச் சிறுவயல் என்ற கிராமத்தில் அரண்மனை கட்டி இவர்கள் ‘நல்லாட்சி’ செய்ததாகவும், சுமார் 85 கோவில்களுக்கு திருப்பணி செய்ததாகவும் குறிப்பாக காளையர் கோவில், திருப்பத்தூர், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, மதுரை, திருமோகூர் போன்ற ஊர்க் கோவில்களுக்கு அறப்பணி செய்ததாக தினகரன் ஜெய் பதிவு செய்துள்ளார்.

இந்த திருப்பணிகளின் பின்னணி பற்றி தோழர் கேசவன் பிற அறிஞர்களை மேற்கோள் காட்டி கூறுவது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

. . .இதுமட்டுமன்றி அரசர்கள், அதிகாரிகள், பாளையக்காரர்கள் ஆகியோர் மிக ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொண்டனர். அரசர்கள் அரண்மனைகள், மகால்கள், தெப்பக்குளங்கள், கட்டுவதிலும் கோயில் நிர்மாணப் பணிகளிலும் செலவு செய்தனர். . . பாளையக்காரன் மக்கள் முன் தோன்றும் போது படாடோபமாகவும் ஆடம்பரமாகவும் காட்சியளிப்பதற்கு கணிசமான அளவில் முக்கியத்துவம் கொடுத்தான். அவன் தன் பெரிய பரிவாரத்துடன் தோற்றமளித்தான். தலையில் தலைப்பாகை கட்டி, நெற்றியில் தங்கப்பட்டயம் கட்டி, கைகளில் வீரக்கடகம் இட்டு, தங்கச் சங்கிலிகளும், தங்க வளையல்களும் அணிந்து இடுப்பைச் சுற்றிலும் தங்கத்தாலான மணிகளைக் கட்டி பவனிவந்தான். . . நாயக்கர்களுக்கு அவர்கள் கீழ்உள்ள பாளையக்காரர்கள் கட்டும் திரையே பெரும் வருமானமாக இருந்தது. விளைச்சலில் பாதிப் பங்கை பாளையக்கரான் பொதுச் செலவாக எடுத்துக்கொள்வார். அதில் ஒரு பகுதி நாயக்கருக்கு திரையாகக் கொடுப்பர்.

திருமலை நாயக்கருக்குத் தன் பாளையக்காரர்களிடமிருந்து ஆண்டுதோறும் வருமானமாக ஒரு கோடி இருபது லட்சம் ரூபாய் (1922ன் மதிப்புப்படி) கிடைத்தது என்பர். நாயக்கர் ஆட்சி கேடுற்ற நாட்களில் அதைப் பயன்படுத்திக் கொண்ட பாளையக்காரர்கள் மக்களை மேலும் சுரண்டினர்.

ஜான்-டி-பிரிட்டோ பாதிரியார் தன் கடிதத்தில். . . ‘இந்நாட்டில் மிகவும் தெற்கில் அரசர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவது குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை. தம் கீழ் உள்ள அதிகாரிகள் மக்களை எல்லாவிதத்திலும் சுரண்டுவதற்கு முழுச்சுதந்திரம் கொடுத்து அவர்கள் அனுமதித்தார்கள். அதிகாரிகள் மக்களைச் சுரண்டி தம் பைகளை நிரப்பிக் கொண்டவுடன் அரசர்கள் அவர்களிடத்தில் உள்ளவற்றில் தமக்குத் தேவையானவற்றைப் பிடுங்கிக் கொள்வர். . .’ (கோ.கேசவன் - அதே நூல்)

இத்தகைய கொடுங்கோல் பாளையக்காரர்களில் ஒருவரான மருதுபாண்டியரைத்தான் தினகரன் ஜெய் மக்கள் மீது பற்றுக் கொண்டவர்கள், ஜனநாயகப் பண்பு கொண்டவர்கள் என்று கூறுகிறார். மேலும் இவர் பெருமையாக 85 கோவில்களுக்கு திருப்பணி செய்த மாமன்னர் என்றும் மதுரைக் கோபுரங்களுக்கு நிகராக காளையார் கோவிலில் ராஜகோபுரம் எழுப்பியவர்கள் என்றும் சொல்வதே மக்களை - விவசாயிகளை - எவ்வளவு தூரம் கடுமையாக கசக்கிப் பிழிந்து சுரண்டியிருப்பர் என்பதற்கான ஆதாரமாக அமைந்து விடுகிறது. அல்லது இந்தத் ‘திருப்பணி’களுக்கான பொருளாதாரத்தை மருதுபாண்டியர் எங்கிருந்து பெற்றனர் என்பதை நண்பர் தினகரன் ஜெய் தான் தேடிச் சொல்ல வேண்டும்.

மேலும் சில செய்திகள்

பொதுவாக இந்தியாவில் நிலமானியச் சமூகக் கால கட்டத்தில் பஞ்சம் என்பது மிகச் சாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தது. நமக்குக் கிடைக்கும் விபரங்களைத் தொகுத்துப் பார்த்தால் கி.பி. 1595 முதல் 1795 வரையிலான 200 ஆண்டுகளில் 24 பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டன எனலாம். தஞ்சை நாயக்கர் ஆண்ட பகுதிகளில் மட்டுமல்லாமல், மதுரை நாயக்கர் ஆண்ட பகுதியிலும் பஞ்சங்கள் பெருமளவில் ஏற்பட்டு மக்கள் இன்னலுற்றனர். . .

இத்தகைய பஞ்ச காலங்களில் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து ஏராளமான அளவில் குடிபெயர்ந்தனர். உணவுக்காக பலர் தம்மை அல்லது தம் குழந்தைகளை விற்றனர். இத்தகைய நேரத்தில் வாணிபம் செய்யவந்த டச்சுக்காரர்கள். இங்கிருந்து ஏராளமான பேர்களை விலைக்கு வாங்கி கப்பல் கப்பலாகக் கொண்டு சென்றதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதே நேரத்தில் நாட்டில் நிலவிய நிலவுடமை கொடுங்கோல் ஆட்சியும், அதன் அதிகாரத்துவ பிரிவினர்களும் விவசாயம் சார்ந்துள்ள மக்களைக் கசக்கிப் பிழிந்து தம் கருவூலத்தை நிரப்ப முயன்றனர். . .

மேலும் சில செய்திகள்.. .

‘இந்நேரத்தில் விவசாயத்தில் அடிநிலை மக்களாகிய பள்ளர், பறையர் அதாவது பண்ணையடிமைகள் சமூகத்தின் எல்லாக் கொடுமைகளையும் சேர்த்துச் சுமக்கும் சுமைதாங்கிகளாக இருந்தனர். அரசு நிலம், பாளையக்காரர், தனிநிலப்பிரபு நிலம், கோயில் மடநிலங்கள் ஆகியவற்றில் உழும் பண்ணை அடிமைகளின் நிலை பெரிதும் கொடுமையாக இருந்தது என அறிகிறோம்.

தமிழகத்தில் சோழப் பேரரசு, விசயநகரப் பேரரசு காலத்திற்குப் பின் சமூகப் பொருளாதார அமைப்பில் தேக்க நிலையும் அராஜக நிலையும் காணப்படுகிறது. உற்பத்திச் சாதனங்கள் பெருகவில்லை. மனிதர்களின் உற்பத்தித்திறனில் முன்னேற்றம் இல்லை. ஒரே விதமான பொருள்களே உற்பத்தி செய்யப்பட்டன. உழவு முறையிலும், உழவுக் கருவிகளிலும் மாற்றம் இல்லை. உற்பத்திக்கான கண்டுபிடிப்புகள் எதிலும் அக்கறை இல்லை. உற்பத்தியில் ஈடுபடாத வர்க்கம் உற்பத்திப் பொருளை கைப்பற்றும் அளவைக் கூட்டிக் கொண்டே போயிற்று. கைப்பற்றிய பொருள்களையும் போர்களிலும் ஆடம்பரங்களிலும் பயன்படுத்தியது. ஆளும் வர்க்கத்திற்கு உற்பத்தியின் மீதான அக்கறையைவிட, உற்பத்திச் சுரண்டலின் மீதே அக்கறை அதிகம் இருந்தது. . . சமூக உற்பத்தி முழுதும் தேக்கமுற்று ஒரேவிதமான போக்கிலேயே சுழன்று கொண்டு இருந்தது. . . (மேற்படி நூல்)

இதுதான் நண்பர் தினகரன் ஜெய் போற்றும் மருதிருவர் போன்ற பாளையக்காரர் களின் ஆட்சியின் லட்சணம். இத்தகைய சூழலில்தான் தங்கள் வணிகச் சுரண்டலுக்காக டச்சு, போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சு, பிரிட்டிஷார் என்று ஒருவர் பின் ஒருவராக தமிழகத்திற்குள் நுழைந்தனர்.

****

அடுத்து தினகரன் ஜெய் ‘1857- சிப்பாய்க் கலகம்’, ‘1801- மருதிருவர் புரட்சி’ பற்றிக் கூறியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம். 1857 கலகத்தை பிற்போக்கான கண்ணோட்டத்தின் பாற்பட்டது என்று கூறும் தினகரன் ஜெய் அதற்கு 56 ஆண்டுகளுக்கு முந்தியதும் பாளையக்காரர்களான மருதிருவரால் (இராணுவ நிலப்பிரபுக்களால்) தலைமை தாங்கப் பட்டதுமான 1801- ஆம் ஆண்டு போராட்டத்தை முற்போக்கானதும் தேசிய விடுதலை மற்றும் ஜனநாயக உள்ளடக்கமும் கொண்ட ‘மக்கள் புரட்சி’ என்று கூறுகிறார்.

இங்கு தோழர் கேசவன் 1857- கலகம் பற்றி தனது ‘இந்திய தேசியத்தின் தோற்றம்’ என்ற நூலில் கூறியுள்ள கருத்துக்களை காண்பதன் மூலம் 1801- போராட்டத்தை பரிசீலிக்கலாம்.

‘இது (1857 கலகம்) ஆதிக்க எதிர்ப்புப் போர் என்பதில் ஐயமில்லை; எனினும் இதில் கலந்து கொண்டவர்களின் வர்க்கச் சார்புத் தன்மைகளும் அவர்களது தத்துவமும் இதன் பின்னடைவுக்கு வலுமிக்க காரணங்களாக அமைந்தன. குடியேற்ற ஆதிக்கத்தை இழந்து போன நிலவுடமைக் கண்ணோட்டத்தில் எதிர்த்த மன்னர்களும் குடியேற்ற ஆதிக்கத்தையும் நிலவுடைமையையும் விவசாய வர்க்க கண்ணோட்டத்தில் எதிர்த்த மக்களும் இதில் ஒருங்கிணைந்திருந்தனர். இந்த இரண்டு சமூக சக்திகளும் உள்நாட்டில் பகை முரண் சக்திகள். இவை இரண்டும் தற்காலிகமாக இணைதல் நீடித்து நிற்க இயலாது. நிலவுடைமை மன்னர்கள் என்னதான் மக்களைப் பற்றியே பேசினாலும் அவர்களின் தலைமையில் மக்கள் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்க்க இயலாது.... தொடக்க கால பொதுவுடைமையருள் ஒருவரான எம்.என்.ராய் இது குறித்து ‘... இது பிரிட்டன் மேலாதிக்கத்தைத் தூக்கி எறிவதற்கான முதல் கடும் முயற்சியாகும். ஆனால் இதை எந்த விதத்தும் தேசிய இயக்கமாகக் கருதப்படலாகாது. சீரழிந்து கொண்டிருக்கும் நிலவுடைமையின் இறுதி முயற்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மக்களின் சமூக வளர்ச்சியை தடை செய்யும் அன்னிய ஆதிக்கத்தைத் தூக்கி எறியும் நோக்கத்தைப் பொறுத்த மட்டில் இது புரட்சிகரத் தன்மை உடையதாகும். ஆனால் பிரிட்டன் ஆட்சியை அகற்றிவிட்டு நிலவுடைமையாளர் ஆட்சியைப் புதுப்பிக்க இது விரும்பியதால் அந்த விதத்தில் இது சமூக பிற்போக்கு இயக்கமாகும். . . புறநிலையாக உள்ள இந்த பிற்போக்குக் குணமே இதன் தோல்விக்குரிய காரணமாயிற்று’.

நாம் மேற்காணும் மேற்கோள் மருதுபாண்டியர் மற்றும் கட்டபொம்மன் போன்ற பாளையக்காரர்களது பிரிட்டிஷாரை எதிர்த்த போர்களுக்குப் பொருந்துமா? பொருந்தாதா? இவர்களின் கண்ணோட்டம் நிலமானிய கண்ணோட்டம் இல்லையா? தமது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதி (விவசாயம்) மக்களைப் பின்தங்கிய முறையில் சுரண்டுவதற்கு ஏற்பட்ட தடை மற்றும் தங்களது ஆடம்பர வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றோடு தங்களது இந்து மதத்தைவிட்டு அடித்தட்டு மக்கள் வெளியேறுவதற்கு காரணமான பிரிட்டிஷார் ஏற்படுத்திய பண்பாட்டு நெருக்கடி போன்ற காரணங்கள் தான் இவர்களை எதிர்க்கத் தூண்டியதே தவிர, மக்கள் மீது கொண்ட மாறாத காதலோ அல்லது பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு மக்களது ஆட்சி (குடியாட்சி)யை அமைத்தே தீருவது என்ற கொள்கையோ அல்ல என்பது புரியவில்லையா?

அடுத்து இங்கு நிலவிய சூழலில் பிரிட்டிஷார் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேராசான் காரல் மார்க்ஸ் சொல்வதைக் கேளுங்கள்...

‘இந்தக் கிராம அமைப்புகள் பார்ப்பதற்கு எவ்வளவு எளிமையானவையாகத் தோன்றினாலும் இவையே கிழக்கிந்திய கொடுங்கோன்மைக்கு அடிப்படை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இக்கிராம அமைப்புகள் மனித மூளையைச் சிறுசிறு எல்லைகளில் குறுக்கிவிட்டது. மூடநம்பிக்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக் கொள்ளும்படி மக்களைச் செய்துவிட்டன... இந்தச் சின்னச் சின்ன குழுக்களும், சாதி வித்தியாசங்களும் இந்தியாவை அடிமைத்தளையில் பிணைத்திருந்தன என்பதையும் அவை மனிதனைச் சூழ்நிலையை வெற்றி கொள்ளச் செய்வதற்குப் பதிலாக அவை மனிதனை அதற்கு அடிமையாக்கிவிட்டன என்பதையும்... அவை குரங்கு அனுமானையும்... பசுவையும் மனிதன் வழிபடும்படிச் செய்துவிட்டன என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

பல நூறாண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்திய மனித சமூதாயத்தின் அசைவற்ற தன்மை, சூனியம் சென்ற நூற்றாண்டு வரை நிலவிவந்தன. இதன் காரணத்தாலேயே இந்தியன் கிராம பக்தியிலிருந்து தேச பக்திக்கு உயரவில்லை... தேங்கிய குட்டையின் அருகில் சென்றால் துர்நாற்றம் மூக்கைத் துளைக்கும். இந்திய மனித சமுதாயம் 19ம் நூற்றாண்டு வரையிலும் இப்படித்தான் இருந்தது.

‘இந்தியாவில் இங்கிலாந்து செய்து கொண்டிருக்கும் சமுதாயப் புரட்சிக்குப் பின்னே ஒரு கெட்ட நோக்கம் மறைந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பிரச்சனை அதுவல்ல. ஆசியாவின் சமூக அமைப்பில் புரட்சியை ஏற்படுத்தாமல் மனித இனம் தனது குறிக்கோளை அடைய முடியுமா? என்பது தான் பிரச்சனையாகும். அடைய முடியாது என்றால் இங்கிலாந்து வேறெந்த குற்றம் புரிந்தாலும், இந்தியாவில் சமுதாயப் புரட்சியைக் கொண்டு வந்து வரலாற்றில் தன்னையறியாமலேயே ஒரு ஆயுதமாக விளங்கியிருக்கிறது’. (ராகுல் சாங்கிருத்யாயன் - மனித சமுதாயம்)

இப்போது கூறுங்கள் பாளையக்காரர்கள், மன்னர்கள், நவாபுகள் எதை நிலை நிறுத்துவதற்காக, கட்டிக் காப்பதற்காக பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள் என்று. இத்தகைய கொடுமையான நிலமானிய சாதிய சமூகத்தை சிதைத்து முதலாளியக் கூறுகளை தோற்றுவித்த பிரிட்டிஷாரின் நடவடிக்கையால் கோபம் கொண்ட சனாதன சக்திகளின் ஆயுதப் போராட்டத்தை மாபெரும் பிரஞ்சுப் புரட்சியுடனும், பிரஞ்சு நாட்டில் வெகுமக்கள் - தொழிலாளிகளும், விவசாயிகளும் மன்னராட்சிக்கும் - நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிராக கிளர்ந் தெழுந்ததையும், ‘பாஸ்டில்’ சிறையை உடைத்து எறிந்ததையும் இவர்கள் (பாளையக்காரர்கள்) மற்றும் அவர்களது விசுவாசிகள் பாளையங் கோட்டைச் சிறையில் இருந்து ஊமைத்துரையை விடுவித்ததுடன் ஒப்பிட்டு தினகரன் ஜெய் பேசுவதை என்னவென்று கூறுவது?

இதோ பிரஞ்சுப் புரட்சி பற்றி ஜவகர்லால் நேரு தனது ‘உலக சரித்திரம்’ என்ற நூலில் கூறுவதைக் கேளுங்கள்...

‘16வது லூயியின் ஆட்சியில் பிரான்சின் நிலைமை அவன் ஆட்சியின் ஆரம்பத்திலேயே பசிக் கலகங்கள் விளைந்தன. டி.ஜான் என்னுமிடத்தில் ஒரு பசிக்கலகம் நிகழ்ந்தது. 1777ல் பிரான்சில் மொத்தம் 11 லட்சம் பிச்சைக்காரர்கள் இருந்ததாக அரசாங்க அறிக்கை கூறுகிறது.

குடியானவர்களுக்கு வயிற்றுப் பசியோடு ‘நிலம் வேண்டும்’ என்கிற பசியும் இருந்து. நிலமானியத்தின் கீழ் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் பிரபுக்களாக இருந்தார்கள். நில வருவாயில் பெரும் பகுதியும் அவர்களுக்குச் சென்றது...’ “மக்களை நசுக்கி வந்த நிலமானியத்தை, பிரபுக்களை, மத குருமார்களை வெறுத்தார்கள்... அவர்கள் 1789ஆம் ஆண்டு ஜுலை 14ல் பாரிசில் பொங்கி எழுந்து பழமையான பாஸ்டில் சிறையை கைப்பற்றி அங்கிருந்த கைதிகளையெல்லாம் விடுவித்தார்கள்... பாஸ்டில் சிறை வீழ்ச்சி சரித்திரத்திலேயே ஒரு முக்கியமான பெரும் நிகழ்ச்சியாகும். அதுதான் புரட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. அதுதான் நாடு முழுதும் ஜனங்கள் கிளர்ந்தெழுவதற்கான அடையாளமாக இருந்தது. அதுதான் பிரான்சின் பழைய நிலைமை மாண்டுவிட்டது; பேரரசும் நிலமானிய அமைப்பும் விசேச உரிமைகளும் திரும்பி வரா உலகிற்குச் சென்றுவிட்டன என்று முரசறைந்தது. அதுதான் ஐரோப்பாவின் மன்னர்களுக்கும் மன்னர் மன்னர்களுக்கும் பயங்கரமான உற்பாதமாக விளங்கியது”.

இத்தகைய புரட்சிகரமான மக்கள் எழுச்சியை, மன்னராட்சிக்கு எதிரான ஏழை உழவர்களின் புரட்சிகரமான எழுச்சியை நிலமானியத்தைக் கட்டிக் காப்பதற்கான பாளையக்காரர்களது போராட்டத்துடன் சமப்படுத்திப்பேசுவது வரலாற்று மோசடியல்லவா? மேலும் நேரு கூறுவதைப் பாருங்கள்.

“ஆகவே பிரான்சின் தலைவிதியை நிர்ணயம் செய்த அந்த ஐந்து வருடங்களில் (1789 - 1794) பசியால் வாடும் பாமர ஜனங்கள் செயலாற்றுவதை நாம் காண்கிறோம். அவர்கள் தான் பயங்கொள்ளி அரசியல்வாதிகளை நிர்பந்தப்படுத்தி முடியரசையும், நிலமானியத்தையும், மத ஸ்தாபனத்தின் சலுகைகளையும் துடைத்து நீக்குமாறு செய்கிறார்கள். அவர்கள்தான் ‘கிலடின்’ என்னும் பயங்கர தேவதையை அர்ச்சித்துத் தங்களது பகைவர்களை அவளுக்கு பலியூட்டுகிறார்கள்... கந்தையுடுத்தியவர்கள், பாதரட்சை (செருப்பு) கூட இல்லாதவர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புரட்சியைக் காப்பாற்ற போர்க்களத்துக்கு விரைந்து செல்கிறார்கள்” - (ஜவகர்லால் நேரு - உலக சரித்திரம்)

இத்தகைய மகத்தான பிரஞ்சுப் புரட்சியை 1801-ம் ஆண்டு மருது பாண்டியர் தலைமையிலான போராட்டத்துடன் சமப்படுத்துவது அதாவது நிலமானியத்தை எதிர்த்த உழைக்கும் மக்களது போராட்டத்தை, நிலமானியத்தை நிலைநிறுத்த துடித்த பாளையக்காரர் தலைமையிலான போராட்டத்துடன் சமப் படுத்துவது பித்தலாட்டம் அல்லவா?

அடுத்து அன்றைக்கு (1801) ‘இந்திய தேசியம்’ என்ற கருத்தாக்கம் தோன்றாத போது, தேசிய உணர்வு தோன்றுவதற்கான சாத்தியமே இல்லாத போது, மேலும் பிரிட்டிஷ் அரசின் நேரிடையான ஆட்சியே இங்கு வந்திராத சூழலில் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தை எதிர்த்த மருதுபாண்டியரது போராட்டத்தை ‘தேச விடுதலைப் போர்’, ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு முதல் சுதந்திரப் போர்’ என்றெல்லாம் கூறுவது அபத்தம் அல்லவா?

அடுத்து இவர்களால் புகழ்ந்து போற்றப்படும் மருதுபாண்டியர் வெளியிட்டதாகக் கூறப்படும் ‘ஜம்புத்தீவுப் பிரகடனம்’ என்ன சொல்கிறது என்பதை சற்றுப் பார்ப்போம்.

“ஜம்பு (நாவலந்) தீவிலும், ஜம்பு தீபகற்பத்திலும் வாழுகிற சகல சாதியினருக்கும் நாடுகளுக்கும், பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும், முசல்மான்களுக்கும் இந்த அறிவிப்பு தரப்படுகிறது...

இந்த இழிபிறவிகளால் ஆளப்படும் இந்நாடுகளின் மக்கள் ஏழைகளானார்கள். அவர்களின் உணவு நீர் என்றானது. அவர்கள் இன்னுலுறுவது வெளிப்படை. ஆனால் காரணங்கள் இவை என்னும் அறிவு இல்லாதவர்களாயுள்ளனர்... இதைப் போக்க சாவது எவ்வளவோ மேலானது. மேன்மை தங்கிய நாவாபுக்கு ஆற்காட்டு சுபாவும், விசயரமணத் திருமலை நாயக்கருக்கு கர்நாடகமும் தஞ்சாவூரும்... திரும்ப அளிக்கப்படும். அவரவர் பரம்பரை பாத்தியதையை அடையலாம்...

ஐரோப்பியர் ஆதிக்கம் ஒழிந்து விடுமாதலால் இனி நவாபின் ஆட்சியில் கண்ணீர் சிந்தாத இன்ப வாழ்வு வாழலாம்... எங்கெல்லாம் அந்த இழிபிறவிகளைப் பார்க்க நேர்கிறதோ அங்கேயே அவர்களை அழித் தொழியுங்கள்... இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாதவன் மீசை என் மறைவிடத்து மயிறுக்குச் சமம்...

மேலே சொன்னபடி... செய்ய மறுக்கிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொல்கிற பாவத்திற்கும், நரகத்திற்கும் போகிற வேறு பாவங்களும் ஆன குற்றங்களைச் செய்தவர்களாக... முசல்மான்கள் பன்றியின் ரத்தத்தைக் குடித்தவர்களாக...”

இப்பிரகடனம், மருது பாண்டியர் மக்களை வருண - சாதியாகப் பிரித்து ஆண்டனர் என்பைதயும் ஐரோப்பியரை விரட்டி விட்டு மீண்டும் நவாபு, பாளையக்காரர் ஆட்சியை நிறுவ முயற்சித்தனர் என்பதையும் அதற்காக மக்களது சாதி / மத / நம்பிக்கைகளைப் பயன்படுத்தி மக்களைத் திரட்ட முயன்றனர் என்பதையும் காட்டி நிற்கிறது.

இத்தகைய வர்ண - சாதி அமைப்பை கொண்டவர்களது போராட்ட முயற்சியைப் பற்றி அம்பேத்கர் ‘உங்களுடைய சமூக அமைப்பை மாற்றினால் ஒழிய நீங்கள் முன்னேறவே முடியாது என்பதே என் கருத்து. தாக்குதலுக்கோ தற்காப்புக்கோ மக்களை ஒன்று திரட்ட உங்களால் முடியாது. சாதி என்கிற அஸ்திவாரத்தின் மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும். முழுமையடையாது’ (அம்பேத்கர் - சாதி ஒழிப்பு) என்று கூறுகிறார். ஜம்புத்தீவுப் பிரகடனம் புரட்சிகரமானது தானா? என்பதை நண்பர் தினகரன் ஜெய் பரிசீலிக்கட்டும்.

இன்றைய உலகமய மறுகாலனியாதிக்கச் சூழலில் ஏகாதிபத்தியங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவலையும், சுரண்டலையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை நிலவுகிறது. அதற்கு வெகுமக்களை எழுச்சி கொள்ளச் செய்ய கடந்த கால, மக்களது அந்நிய எதிர்ப்பு வீரஞ்செறிந்த போராட்டங்களை, கலகங்களை அதன் அனுபவங்களை மக்கள் முன் மீட்டுருவாக்கம் செய்து வைக்க வேண்டியது சமூக அக்கறை கொண்ட கலைஞர்களின், ஆய்வாளர்களின் கடமையாகிறது. ஆனால் கடந்த கால வரலாற்றை ஒடுக்கப் பட்ட மக்களது பார்வையில் பரிசீலித்து, மக்களது ஆதிக்க எதிர்ப்பு கலகங்களை, புரட்சிகர நடவடிக்கைகளையே நமது வரலாறாக முன்வைக்க வேண்டுமே தவிர ஆளும் வர்க்கம் கற்பித்து வந்துள்ள வரலாற்றை மக்கள் வரலாறாக மீண்டும் முன்வைப்பது மக்களை ஏமாற்றும் மோசடியாகவே அமையும்.

அந்த வகையில் இன்னும் கூட, தமிழகத்தில் நடந்த நிலமானிய சாதியாதிக்க கொடுமைகளை எதிர்த்த உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட வரலாற்றை முழுமையாக மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய பணி காத்துக் கிடக்கிறது.

மாறாக மருதிருவர் பற்றி (உண்மைக்கு மாறாக) மேன்மைப்படுத்தி, தேச விடுதலை முன்னோடிகளாக முன்வைப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பிற்குப் பயன்படாது. சமூகத் தளத்தில் அகமுடையார் சாதி வாழும் பகுதியில் பிற சாதியினர் மீது குறிப்பாக தலித் சாதிகள் மீது அதிகாரம் செலுத்துவற்கு வரலாற்று நியாயம் கிடைத்ததாகவே கருதப்படும்.

இன்றைக்கும் அகமுடையார் சாதியினர் மருது பாண்டியரை ஏகாதிபத்திய - பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடினர் என்று கருதி தேசப்பற்று அடிப்படையில் தங்கள் வீடுகளில் மருதுபாண்டியர் படங்களை மாட்டி வைக்கவில்லை. ‘தாங்கள் ஆண்ட பரம்பரை’ எனவே தற்போது பிற சாதியினர் மீது அதிகாரம் செய்வதற்கும் ஆதிக்கம் செய்வற்கும், சுரண்டுவதற்கும் உரிமையை வழங்குவதாக கருதுவதாலேயே மருதுபாண்டியரைப் போற்றுகின்றனர். ‘மருதிருவர்’ ஆவணப்படத்தைப் பார்த்து விட்டு அவரது வாரிசுகளாக கருதிக் கொள்ளும் அவ்வினத்தினர் எவரும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு மருது சீமையில் (சிவகங்கைப் பகுதியில்) ‘கொக்கோ கோலா’ நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி மக்களை உறிஞ்சுவதை எதிர்த்து பாய்ந்து விடப் போவதில்லை என்பதோடு உண்மை என்னவென்றால் தமிழகம் முழுவதுமே ஆதிக்க சாதியினர் (பாளையக்காரர்களது வாரிசுகள்) தான் ஏகாதிபத்திய - பன்னாட்டு கம்பெனிகளுக்கு முகவர்களாக, ஏஜெண்டுகளாக செயல்பட்டு தங்களது கைகளை நிரப்பிக் கொண்டுள்ளனர் என்பதையும் நாம் நினைவூட்ட வேண்டியுள்ளது. ஆகவே இங்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சாதியாதிக்க, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்பதோடு இணைந்துள்ளதே தவிர தனியானது அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.

பின்குறிப்பு

மருதிருவரின் மூலப்பிரதி ‘ஜெயபேரிகை’ ஆகும். இதனை தினகரன் ஜெய் சிவகங்கையின் பொதிகை கலை இலக்கியப் பேரவையும் அரும்பு புத்தக நிலையமும் இணைந்து நடத்திய குறும்பட, ஆவணப்பட விழாவில் திரையிட்டார். பிறகு அதன் மீது வந்த விமர்சனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு குறிப்பாக பா.திருநாவுக்கரசு தொகுத்து வெளியிட்ட ‘சொல்லப்படாத சினிமா’வில் வந்த விமர்சனம் போன்றவற்றை கணக்கில் கொண்டே ஜெயபேரிகையை ‘மருதிருவர்’ என்று மாற்றி ஒழுங்கமைத் துள்ளார் என்று கருத வாய்ப்புள்ளது.

‘ஜெயபேரிகை’-யில் மருது பாண்டியருக்கு முன்னும், சமகாலத்திலும் தமிழ் நிலப்பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பாளையக்காரர்களான பூலித்தேவன், கட்டபொம்மன் போன்றோரை விடவும் மருதுபாண்டியரே தேசவிடுதலைக்காக போரிட்டவர்கள்; மற்றவர்கள் தேசவிடுதலைப் போராளிகள் அல்லர் என்று நிறுவும் விதமாக காட்சிப்படுத்தியிருந்தார். அந்நோக்கிலேயே ஆய்வாளர்களது கூற்று, தகவல்கள் என்று இணைத்திருந்தார்.

இதன் காரணமாக மருதுபாண்டியரை தங்களது (இன) முன்னோர்களான உயர்த்திப் பிடிக்கும் அகமுடையார் சாதியினருக்கு உவப்பளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. இதை அப்படியே மாற்றி மருதிருவரில் தென்னாடு ஒ வடநாடு என்ற முரண்பாட்டை மையப்படுத்தி ‘1857- சிப்பாய்க் கலகத்தை’ விடவும் மருதுபாண்டியரின் ‘1801- புரட்சி’-யே உண்மையானதும், முதலானதுமான தேச விடுதலைப்புரட்சி என்றும் அது ‘தமிழர்’களின் தேசியப் புரட்சி என்றும் பேசுகிறது.

இதன் காரணமாக சாதி அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தமிழ்த்தேசிய தளத்தில் செல்வாக்குப் பெறும் நோக்கில் திட்டமிட்டு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனை ஒட்டியே ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழில் (மார்ச் - 2006) கதிர் நிலவன் என்பவர் ‘மருதிருவர்’ ஆவணப்படத்தை பாராட்டி வரவேற்று மதிப்புரை வழங்கியுள்ளார். கூடவே தினகரன் ஜெய் அடுத்து ஈழத்தமிழர் பற்றி ஆவணப்படம் தயாரிக்க இருக்கிறார் என்ற தகவலைத் தருவதன் வாயிலாக ‘மருதிருவர்’-ம் தமிழ்த் தேசிய நோக்கில் அமைந்த ஆவணப்படம் என்று வாசகர் கருதி ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பளிக்கிறது.

மருதுபாண்டியர் போன்ற நிலமானிய - பாளையக்காரர்களை தமிழ்த் தேசியத்தின் அல்லது தமிழ்த் தேச விடுதலைப் புரட்சியின் நாயகர்களான முன்னோடியாக கருதுவார்களேயானால் இவர்களது தமிழ்த் தேசிய அரசியல் சட்டம் அசல் மனுதர்மமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com