Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006

மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தபட வேண்டும்
எம். அசோகன்

அவசரநிலை காலத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான ஆட்சி தூக்கி எறியப்பட்டதைப் போல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வர்ணிக்கப்பட்டன. ஒரு வகையில் அதை விடவும் முக்கியமானது என்று கூடச் சொல்லலாம். வேடிக்கை என்னவென்றால் அன்று நாட்டுக்கே அபாயம் என்று கருதப்பட்ட அதே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது. அதாவது காங்கிரசே பரவாயில்லை என்று மக்கள் நினைக்கிற அளவுக்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இருந்தது.

Agitation விவசாய நெருக்கடி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை, பட்டினிச் சாவுகள், அதிகரித்துக் கொண்டே இருந்த வேலையின்மை, குஜராத் மதப் படுகொலைகள், நாடெங்கும் சிறு பான்மையினர் மீது நில்லாமல் தொடர்ந்த தாக்குதல்கள், கல்வி காவிமயமாக்கப்பட்டது, கொடூரமான பொடாச் சட்டம், ஆலை மூடல்கள், ஜனநாயக உரிமைகள் பறிப்பு என பா.ஜ.க. ஆட்சி எப்போதடா தொலையும் என்று மக்கள் ஏங்கித்தவிக்க ஏராளமான காரணங்கள், இருந்தும் மக்கள் எந்த ஒரு தனிக்கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை அளித்திடவில்லை. இருந்தாலும் மக்கள் குழப்பமடைந்திருக்கவில்லை என்பது தெளிவு.

வகுப்பு வாதம் மற்றும் கண்மூடித் தனமான உலகமயம் என இரண்டையுமே மக்கள் நிராகரித்தார்கள். இரண்டின் மொத்த உருவமாக இருந்த பா.ஜ.க. கூட்டணியை தோற்கடித்தார்கள். வகுப்புவாதத்திற்கு எதிராக மட்டுமே மக்கள் தீர்ப்பளித்தார்கள் என்று எண்ணுவது தவறாகும். எங்கெங்கே பா.ஜ.க.விற்கு மாற்றாக காங்கிரஸ் இருந்ததோ அங்கெல்லாம் காங்கிரசிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்தார்கள். அதே போல் எங்கெல்லாம் பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டிற்கும் மாற்றாக வகுப்புவாதம், உலக மயம் இரண்டையும் எதிர்க்கும் இடதுசாரிகள் வலுவாக இருந்தார்களோ அங்கெல்லாம் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்த கேடுகெட்ட உலகமயக் கொள்கைகளை அமல்படுத்திய காங்கிரசிற்கு மாற்றாக பா.ஜ.க.விற்கே கூட சில மாநிலங்களில் வாக்களித்தார்கள் (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்).

ஆனால் ஆட்சியைப் பிடித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ, தோற்றுப் போன பா.ஜ.க.வோ மக்களின் தீர்ப்பை வேண்டு மென்றே புரிந்து கொள்ள மறுக்கின்றன. தங்கள் ஆட்சியில் இந்தியா ஒளிர்ந்ததாக காவிக்கூட்டம் அடம் பிடிக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களோ முன்னிலும் வேகமாக தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்த முயற்சிக்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் மக்களின் மீதான பொருளாதார தாக்குதல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைகள் 5 முறை உயர்த்தப் பட்டிருக்கின்றன. அவசியப் பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டே யிருக்கின்றன.. வேலையின்மை, அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி என்பது வேலைகளைப் பறிக்கும் வளர்ச்சியாக ஆகிக்கொண்டிருக்கிறது. அதாவது ஏற்கனவே இருக்கும் வேலை வாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

இதற்கு தனியார்மயம் ஒரு முக்கிய காரணம் என்றால் இன்னொரு முக்கிய காரணம் தொழிலாளர் நலச் சட்டங்களை குப்பையில் தூக்கி வீசிவரும் தனியார் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற போக்கு, தங்குதடையற்ற வளர்ச்சி என்ற பெயரில் சர்வதேசப் போட்டியில் தாக்குப்பிடிக்க வேண்டும் என்ற பெயரில் ஒன்று தொழிலா ளர்கள் வீதியில் வீசப்படுகிறார்கள் அல்லது ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். ஆனால் அரசாங்கமோ இருக்கின்ற தொழிலாளர்கள் நலச்சட்டங்களையும் கிழித்துப் போடத் திட்டமிடுகின்றது.

எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் முதலாளிகளின் லாபவேட்டைக்கு தொண்டு செய்யவே பா.ஜ.க. ஆட்சி கடைப்பிடித்த அதே கொள்கைகளைத் தொடர்கிறது. வாக்களித்த பெரும் மக்களின் நலன்களுக்கு விரோதமாகவே நடந்து கொள்கிறது. பொருளாதாரம் 7 அல்லது 8 சதவீதம் வளர்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் விவசாயமோ கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் வீழ்ந்த அதலபாதாளத்தில் இருந்து அது மீளவேயில்லை. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாக நீடிக்கிறது. (பா.ஜ.க. எங்கள் ஆட்சியில் இவ்வளவு இல்லை என்று வெட்கமில்லாமல் கூறிக்கொள்கிறது. அதுவும் கூட பொய்தான்.) மரணத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் போதுமான அளவு எடுக்கப்படவில்லை. ஏதோ ஓரளவு நிவாரணம். அதுவும் ஒரு பகுதியினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கவேயில்லை. பா.ஜ.க. ஆட்சி காலத்தில் இருந்தது போலவே மக்களின் சராசரி உணவு உட்கொள்ளும் விகிதம் வங்கப் பஞ்ச காலத்தில் இருந்த நிலையில்தான் இன்னும் இருக்கிறது.

வாக்களித்த மக்களின் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுக்காமல் ஐ.எம்.எப் உலக வங்கியின் கட்டளைக்கேற்ப செயல்படுவதுதான் காரணம். விவசாயத் துறையில் முதலீடு போதுமான அளவு இல்லவே இல்லை. விவசாய மான்யமும், உணவு மான்யமும் வெட்டப்படுகின்றது. இன்னும் இது பற்றிச் சொல்லப்பட வேண்டியது ஏராளமாக இருந்தாலும் அளவு கருதி சுருக்கிக் கொள்வோம்.

எனினும் நல்லது ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல முடியாது. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 200 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அது முறையாகச் செய்யப்பட வேண்டும் நாடு முழுவதற்கும் விஸ்தரிக்கப் பட வேண்டும்.

வகுப்புவாதத்தை பொறுத்த வரை பா.ஜ.க. மத்தியில் அதிகாரத்தில் இல்லை என்பது ஒன்றே சாதகமான விஷயம். அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றியது மக்கள். ஆனால் ஐ.மு.கூ. அரசாங்கம் அதற்கு எதிராக அந்த அபாயத்தை முற்றிலுமாக ஒழிக்க உருப்படியாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மதக் கலவரங்களைத் தடுப்பதற்கான சட்டம் கொண்டுவரப் படவிருக்கிறது அவ்வளவுதான். மற்றபடி அதற்கெதிராக கருத்துப் போராட்டம் நடத்த இந்த அரசாங்கம் தயாராக இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

அரசு நிர்வாகத்தின் சகல மட்டங்களிலும் ஊடுருவியிருக்கும் மதவெறியர்களை களையெடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கல்வியில் அவர்கள் கொட்டிவிட்டுப் போயிருக்கும் காவிக் கழிசடையை முற்றிலுமாகத் துடைத் தெறியவில்லை. ஏதோ ஒரு சில விதிவிலக்குகள் தவிர, மாறாக சில விசயங்களில் நேர் எதிர்திசையில் செயல்படுகிறது மன்மோகன் சிங் அரசாங்கம். எடுத்துக்காட்டாக ஆரியர்கள் மாட்டுக்கறி உண்டார்கள் என்ற வரலாற்று உண்மையை பாடநூலிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். மாட்டின் பெயரால் மதவெறியர்கள் கலவரங்களைத் தூண்டுவதற்கு நியாயம் வழங்கும் செயலாகும் இது. சில விஷயங்களில் இந்துத்துவவாதிகளின் குரலையே மத்திய அரசாங்கம் எதிரொலிக்கிறது. கொலைகார ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது மத்திய அரசு வருத்தப்பட்டது ஒரு உதாரணம்.

மதக் கலவரங்களை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறது. கலவரங்கள் திடீரென நடந்து விடுவதில்லை. பரஸ்பர பகைமையும் சந்தேகமும் முன்கூட்டியே மக்கள் மனதில் விதைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கலவரங்களைத் தூண்டிவிடுவது சாத்தியம். அதை சங்பரிவாரம் முழுநேர வேலையாகச் செய்து வருகிறது. மத்தியிலுள்ள அரசாங்கமோ அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளோ இதை எதிர்கொள்ள கிட்டத்தட்ட எதுவுமே செய்வதில்லை. மதவெறிக்கு எதிராகத் தான் மத்தியிலுள்ள கூட்டணி அமைந்தது. ஆனால் மதச்சார்பற்ற கூட்டணி என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்பதே கேள்விக்குறி.

வகுப்பு வாதத்திற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதாகும். அப்படியொரு சட்டம் அமலுக்கு வருவது மத வெறியர்களின் தத்துவார்த்த அடித்தளங்களில் ஒன்றையே அசைத்து பலகீனப்படுத்தி விடும். ஆனால் ஐ.மு.கூ. கட்சிகளோ பா.ஜ.க. போலவே இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய மனமின்றி சதி செய்கின்றன. பெண்கள் அதிகாரமும் விடுதலையும் பெற்றுள்ள ஒரு சமுதாயத்தில் எந்த வகை மதவாதிகளுக்கும் இடமிருக்காது.

பெண்ணடிமைத்தனமின்றி மதவாதம் இல்லை. வெறுமனே மதச்சார்பின்மை மதச்சார்பின்மை என்று ஜபித்துக் கொண்டிருந்தால் ஒரு பிரயோசனமுமில்லை. மதவாதிகள் ஏதாவது செய்தால் அதற்கு எதிராக செயலில் இறங்கினால் மட்டும் போதாது. அவர்களின் கருத்துக்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இடமில்லாத வகையில் அரசியல், பொருளாதார சூழலையும் உருவாக்க வேண்டும். சமுகத்தின் பொது புத்தியிலும் மாற்றம் கொணர வேண்டும். ஆளும் கூட்டணிக்கோ அந்த சிந்தனை இருக்கிற மாதிரி தெரியவில்லை.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்த மதவாதிகள் பீகாரிலும் ஜார்க்கண்டிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியதற்குக் காரணம் என்ன? காங்கிரசும், எல்.ஜே.பியும், ஆர்.ஜே.டியும், ஜே.எம்.எம்.மும் தங்களுக்குள் அடித்துக் கொண்டதுதானே? வகுப்புவாத அபாயத்தை முறியடிப்பதை விட இந்த மதச்சார்பற்ற கட்சிகளுக்கு யார் அதிக இடங்களில் போட்டியிடுவது என்பது முக்கியமாக இருந்திருக்கிறது.

அதேபோல் மக்களை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் உலக மயக் கொள்கைகளைத் தான் அமல்படுத்துவோம் என்று அடம்பிடிக்கிறது மன்மோகன் சிங் அரசாங்கம். நாடே பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களித்தபோது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஓரளவிற்கு கர்நாடகத்திலும் மக்கள் மதவாதிகளுக்கு ஆதரவாக ஓட்டளித்ததற்குக் காரணம் அக்கொள்கைகள் தான். ஏற்கனவே 1998ல் பா.ஜ.க. மத்தியிலே அதிகாரத்தைக் கைப்பற்றியதற்குக் காரணம் மக்கள் அக்கொள்கைகளின் மீது கடும் அதிருப்தி அடைந்திருந்ததுதான். ஐ.மு.கூட்டணிக்கு உண்மையிலேயே மதச் சார்பின்மையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறை இருந்தால் அரசாங்கம் உடனடியாக இக்கொள்கைகளைக் கைவிட்டு மக்கள் நலப்பாதையில் பயணத்தை தொடர வேண்டும்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com