Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006

இந்திய ஊடகங்களில் சாதி ஆதிக்கம்
தமிழில் - ஜே.பி. அர்ச்சனா

1999ல் நான் ஒரு ஆங்கிலப் பத்திரியையில் தலையங்க எழுத்தாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உயர்கல்வியில் சாத ஆதிக்கம் குறித்து முதல் அனுபவம் கிடைத்தது. பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலிருந்து சில தலித் மாணவர்கள் ஒரு குழுவாக என்னைப் பார்க்க வந்திருந்தனர்.

Drum man கல்லூரி விடுதியில் தங்கி படித்துவரும் அவர்கள் பல காலமாக சாதிய கொடுமைக்கு ஆளாகி வந்தவர்கள். தற்செயலாகவோ திட்டமிட்டோ அவ்விடுதியின் குறிப்பிட்ட இரண்டு தளங்களில் மட்டுமே தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். விடுதியின் மற்ற எங்கும் அவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படவில்லை. உணவு அறையிலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மூலையில் உட்கார்ந்து உணவு அருந்துமாறு பெரும்பான்மையினராக இருந்த மேல்சாதி மாணவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டனர். வேறு பகுதிகளில் அமரும் தலித் மாணவர்கள் கடுமையான ஏச்சுக்குள்ளானார்கள். தவறுதலாக இடம் மாறி உயர் சாதி மாணவர்கள் அமரும் பகுதியில் அமர்ந்த ஒரு மாணவரை சாதிப்பெயரால் திட்டி வெளியேற்றிய சம்பவமும் நடந்தது.

‘எப்பாடுபட்டாவது டாக்டர் ஆகிவிட வேண்டும்’ என்ற தங்கள் பெற்றோரின் நிர்ப்பந்தம் காரணமாக இம்மாணவர்கள் இவ்வனைத்து இழிவுகளையும் சகித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இழிவு வன்முறையாக மாறியது. மாணவர்கள் தாக்கப்பட்டு அவர்களது அறைகள் சூறையாடப்படும் சம்பவங்கள் அரங்கேறின. பொறுத்துப் பார்த்த மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போதுதான் என்னைப் பார்க்க வந்தனர்.

மாணவர்கள் கூறியதைக் கேட்டறிந்த பின் பத்திரிகையின் பெருநகர் பகுதிக்கான பொறுப்பாளரிடம் இதுகுறித்த செய்தி சேகரிக்க ஒரு நிருபரை கல்லூரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். பல நாட்கள் ஆகியும் எவரும் அனுப்பப்படவில்லை. எனவே அவரது மேலதிகாரியிடம் தகவலைக் கூறி நிருபரை அனுப்பக் கேட்டுக் கொண்டேன். மீண்டும் எவரும் அனுப்பப் படவில்லை. எனவே நானே செல்ல முடிவு செய்தேன். அரை நாள் அங்கு செலவிட்டு கல்லூரி நிர்வாகிகள், தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் என அனைவரையும் பேட்டி கண்டேன். உயர்சாதி மாணவர் ஒருவர் சாதிப் பெயரிட்டு அழைத்ததாக தயங்கியபடி ஒத்துக் கொண்டார். ஆனால் செல்லமாக அழைத்ததாகக் கூறினார்.

செய்தியை பிரசுரத்திற்கு கொடுத்த மறுநாளும் அதற்கடுத்த நாளும் பிரசுரிக்கப் படவில்லை. செய்தி சுவாரசியக் குறைவென்றோ, தரத்தில் குறைவானதென்றோ யாரும் கூறவில்லை. ஆனால் எப்படியோ அதைப் பிரசுரிக்க இடம் கிடைக்காமல் இருந்தது. கடைசியாக தலித் மாணவர்களின் போராட்டம் தொடங்கி ஒரு மாதத்திற்குப் பின் வெட்டி சிதைக்கப்பட்ட வடிவத்தில் பிரசுரமானது. இம்மாணவர்களின் துன்பம் வேறெந்த செய்திப் பத்திரிகைக்கோ அல்லது டி.வி. சானலுக்கோ பிரசுரிக்கத் தகுந்ததாகப் படவில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சுமார் ஒரு மாத காலம் நீண்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு நமது தேசிய செய்தி ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத் தோடு இதனை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத்தான் இந்த சம்பவத்தை நான் கூறுகிறேன். 24 மணி நேரமும் பத்திரிகை மற்றும் டி.வி. சானல்கள் குவிந்திருந்தாலும் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய ‘சமவாய்ப்புக்கான மருத்துவ மாணவர்கள் அமைப்பு’ நடத்திய இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான போராட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஒரு டிவி சானல் மட்டும் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த போராட்டத்தை ஒரே ஒரு முறை காட்டியது.

இதுவும் ‘பொது மக்கள் செய்தியாளர்’ ஒருவரால் எடுக்கப்பட்ட படம் மட்டுமே காட்டப்பட்டது. பெரும்பாலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டக் காரர்களையும் அவர்களின் போராட்டத்தை பதிவு செய்யும் மூச்சு விடாமல் பேசும் நிருபர்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

போராட்டக் காரர்களில் ஒரு சாரார் ஈடுபட்ட சாதிவெறி கொப்பளிக்கும் தெரு கூட்டுதல், செருப்பு துடைத்தல், பிற்படுத்தப்பட்ட சாதியினரை இருக்க வேண்டிய இடத்தில் இருந்து கொள்ளுமாறு பாட்டு பாடி எச்சரித்தல் போன்ற செய்திகள் எந்த விமர்சனமும் இன்றி அப்படியே ஒளிபரப்பப்பட்டன. இந்திய மக்கள் தொகையின் பாதியளவிற்கு மேல் இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இவ்வளவு வெறி கொண்டலையும் இந்த ‘தகுதி வாய்ந்த’ மாணவர்கள் எந்த விதமான மருத்துவர்களாக உருவெடுக்கப் போகிறார்கள் என்பது பற்றி யாரும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. வாய்ப்பு வசதி அற்றவர் நடத்தும் போராட்டங்களை ‘போக்குவரத்து நெரிசலாக’வும் ‘சாதாரண’ மக்களைத் தொல்லைக்கு உள்ளாக்குவதாகவும் சொல்லவும் ஒளிபரப்பவும் தெரிந்த இந்த ஊடகங்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடைபெற்ற அனைத்திந்திய மருத்துவக் கழக வேலை நிறுத்தத்தினால் ஏழை நோயாளிகள் பட்ட அவதி என்பது மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் நடத்தும் ‘வீரம் செறிந்த’ போராட்டத்தின் ஒரு வடிவமாகவே தென்பட்டது.

இந்த ஊடகங்கள் தட்டியெழுப்பிய உணர்ச்சிப் பிரவாகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடியவர்களிடம் அகில இந்திய மருத்துவக் கழக அதிகாரிகள் காட்டிய பரிவு பற்றி யாரும் கவலைப் படவில்லை. இந்த வருட ஆரம்பத்தில் ஏழை நோயாளிகள் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் உயர்த்தப்பட்ட போது அதற் கெதிராகக் குரல் கொடுத்த ஒரு பிரிவு மருத்துவர்கள் நிர்வாகத்தினரால் கடுமையாக மிரட்டப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகில இந்திய மருத்துவக் கழக வளாகத்திற்குள் போராட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்கள் புல்தரைகளில் இடம்பிடித்து கொண்டு பந்தல்கள் போட்டு ஏர் கூலர்களையும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தியதோ வியாபாரிகள், வணிக ஒருங்கிணைப்பாளர்கள், கம்ப்யூட்டர் விற்பன்னர்கள் (இவர்களுக்குத் தங்கள் பணியிடங்களில் வேலை நிறுத்தத்திற்கோ போராட்டங்களுக்கோ அனுமதியில்லை என்பது வேறு விஷயம்) போன்றோர் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கு முகமாக வருகை தந்து கொண்டிருப்பதோ நிர்வாகத்திற்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.

அவுட்லுக், தி இந்து, ஃபிரண்ட்லைன் போன்ற பத்திரிகைகள் மற்றும் சில ஊடகங்களின் குறிப்பிட்ட சில நிருபர்கள் தவிர மற்ற ஊடங்களின் ஆசிரியர் குழுவில் சாதிய பிரதிநித்துவம் சரியான அளவில் இருந்திருந்தால் போராட்டம் பற்றிய செய்திகள் இன்னமும் கொஞ்சம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்காதா? மற்றொரு வகையில் கூறுவதாக இருந்தால், இட ஒதுக்கீட்டின் விரிவாக்கத்தை எதிர்க்க முற்பட்ட சாதி மாணவர்களைத் தூண்டி விடுவதன் மூலம் முற்பட்ட சாதியைச் சேர்ந்த ஆசிரியர்களும் நிருபர்களும் சமூக நீதிக்கொள்கை பற்றிய தங்கள் தனிப்பட்ட அதிருப்தியை பிரகடனப் படுத்துவதாக ஊடகங்களின் இந்த செயல்களை எடுத்துக் கொள்ளக் கூடாதா? அப்படியெனில், செய்தி சேகரிப்பு வசதி வாய்ந்தவர்களின் தொழிற்சங்கவாதமாக மாறிவிடாதா?

அதிகாரப் பூர்வமான அரசு அல்லது தனியார் புள்ளி விபரங்கள் இல்லை என்ற போதிலும் ஊடகங்களில் மேல்சாதி ஆதிக்கம் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே. பி.என்.யுனியால் 1996ல் நடத்திய கணக்கெடுப்பின் படி டில்லியில் அரசு அங்கீகரித்த நிருபர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. இன்றைக்கும் அந்நிலை மாறியிருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் நடந்த ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பின் கூட்டத்தில் டில்லியின் மொத்த அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களில் வட இந்திய பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் பத்திரிகையாளர்கள் 3க்கும் குறைவு. சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கான பயிற்சித் திட்டம் பங்கெடுக்க ஆளில்லாததால் ரத்து செய்யப்பட்டது.

பத்திரிகைத் துறையில் தலித் மற்று இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பங்கேற்பு இல்லை என்பது ஒருவேளை திட்டமிடப்பட்ட செயலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் திட்டமிட்ட செயல்தான் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை என ஒரேயடியாக மறுக்கவும் முடியாது. எதுவாகினும், தலித் மற்றும் இதர பிற்படுத்தப் பட்டவர்களின் பங்களிப்பு இல்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்ளும் மனநிலை ஊடகத் துறைக்குத் தேவை.

தகுதி மட்டுமே பிரதானமாக கருதப்படும் ஒரு லட்சிய உலகத்தில் ஒரு பத்திரிகையாளனின் சாதி அல்லது மதச் சார்பு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையினரான ஒருபகுதி குடி மக்களுக்கு இடமில்லாத ஒரு பத்திரிகைத் துறை சமூகத்தை அணுகுகிற தன்மையில் தன்னுடைய தன் நுட்பத்தை இழந்து விடும். பல பிரச்சனைகள் அணுகப்படாமல் போய்விடும். அணுகப்படும் பிரச்சனைகளும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து மட்டுமே பார்க்கப்படும். பத்திரிகைகளும் டிவி சானல்களும் தலித், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம்களை அதிகமாக வேலைக்குச் சேர்த்துக் கொள்வதால் இந்திய பத்திரிகைத் துறை இன்றைக்கு சந்திக்கும் பிரச்சனைகளான; சுருங்கும் செய்திக்கான இடம், கிராமப்புற இந்தியா மற்றும் ஏழை இந்தியர்களின் பிரச்சனைகள் பற்றிய அக்கறையின்மை, குறிப்பிட்ட நிகழ்வுகளின் பின்னால் வெறித்தனமாக அலையும் தன்மை, சென்செக்ஸ் வழிபாடு, அன்றாட வாழ்க்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாத, கிளு கிளுப்பூட்டும் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்றவை குறைந்து விடும் என அர்த்தம் இல்லைதான்.

ஆனால் எல்லா தரப்பினரும் பணியாற்றும் வேலைத் தளத்தின் பன்முகத் தன்மையானது, பரந்து பட்ட தன்மையுடைய அனுபவங்கள், பெரும்பாலும் நகர்ப்புறம் சார்ந்த மேட்டுக்குடி, உயர்சாதி, இந்து மதம் சார்ந்த கருத்தியல்களோடு மோதுவதன் மூலம் செய்தியறையை புதுப்பொலிவு பெறச்செய்யும் என்பதில் ஐயமில்லை.

சமூக நீதிக்கான நடவடிக்கைகளை ஓர் அச்சுறுததலாகக் கருதுவதற்குப் பதிலாக இந்திய ஊடக நிறுவனங்கள் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் வரவை தங்கள் தளத்தை பன்முகப் படுத்தவும் தங்கள் செய்தியாக்கத்தை மேலும் நம்பிக்கைக் குரியதாக்கவும் கிடைத்த வாய்ப்பாகக் கருதவேண்டும். தற்போது இடித்து தரைமட்ட மாக்கப்பட்ட நங்க்லா மச்சி சேரிப்பகுதகிளில் இளைஞர்களுக்கு அங்குர் மற்றும் சராய் சிஎஸ்டிஎஸ் நிறுவனம் கம்ப்யூட்டர் கருவிகளை வழங்கியது. புல்டோசர்கள் துணையுடன் அவர்களின் குடிசைகள் இடிக்கப்பட்ட போது எழுத்தில் வடித்த அவர்களின் உணர்வுகள் இந்திய பத்திரிகை உலகம் கண்ட எந்த தரத்தினும் மேலானதாக அமைந்திருக்கிறது. (ஆர்வமுள்ளவர்கள் காண்க www.sarai.net/nm.htm). அவர்களின் எழுத்து ‘குடிசை அகற்றுதல் திட்டம்’ பற்றிய உண்மை நிலவரத்தை மற்றெந்த டிவி சானல் தருவதை விடவும் அதிகமாகவே தந்திருந்தது. அவர்கள் எழுத்தின் தரம் மற்றெந்த செய்திப் பத்திரிகையின் எழுத்தின் தரத்தை விடவும் அதிகமானதே.

மருத்துவர், பொறியாளர்களாக ஆக நினைக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் கூறுவது போல் தகுதி என்பது வசதி வாய்ப்புகள் மிகுந்த பெற்றோரால் விலையுயர்ந்த கல்வி மூலம் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தரப்படும் மதிப்பெண்கள் மட்டும் அல்ல. சாதிய சமூகப் பொருளாதாரப் பின்புலங்கள் தவிர்த்த, அனைத்துக் குழந்தைகளின் உள்ளுறையும் இயல்பான திறமை குறித்ததே தகுதியாகும். இத்திறமையை வெளிக் கொணராத எந்த சமூகமும், அல்லது பத்திரிகைத் துறை போன்ற எந்தத் துறையும் இழப்பையே சந்திக்கும். குறிப்பாக பத்திரிகை நிறுவனங்கள் தலித், பழங்குடி, முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனிப் பயிற்சி வகுப்புகள் தொடங்குவது குறித்து யோசிக்க வேண்டும்.

இடஒதுக்கீடுகள், சமூக நீதிக்கான செயல்பாடுகள், முதலீடுகள் போன்றவை மக்கள் தங்கள் உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணர்வதற்காக சமூகம் எடுக்கும் நடவடிக்கைகள் ஆகும். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான அறிஞர்கள் யோகேந்திர யாதவ், சதீஷ் தேஷ்பாண்டே, புருஷோத்தம் அகர்வால் போன்றோர் சுட்டிக் காட்டியபடி தற்போதைய மத்திய அரசின் அணுகுமுறை மிகச்சிறந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் ஒரு பிரச்சாரத்தை நடத்துவதன் மூலமும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த கல்வி முறையை கட்டுவதற்கான அறிவார்ந்த ஒரு விவாதத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பை ஊடகத்துறை குழிதோண்டி மூடிவிட்டது. ஆரவாரங்கள் அடங்கியபின் அனைவரது பங்களிப்பினையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்தினை உருவாக்குவதற்கு தங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து ஊடகங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். வீறாப்பு பேசாமல் உரையாடலை ஊக்குவிப்பது ஒரு முறை. இதுவரை சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களை உள்ளே கொண்டு வருவதன் மூலமாக செய்தியறையை நிச்சயமாக பன்முகப் படுத்துவது மற்றொரு முறை. ஒரு கோடிச் செய்திகள் சொல்லப் படுவதற்காகக் காத்திருக்கின்றன. கதை சொல்லிகளை நாம் கூற அனுமதிப்பதாக இருந்தால் மட்டும்.

நன்றி - நியு ஏஜ், ஜுன் 11-17, 2006


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com