Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூலை 2006
விளையாட்டென்றால் விளையாட்டா?

ஏதோ இருக்கிறோம்...!?!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

அறிஞர் அண்ணா, ஒரு சொற்பொழிவின் போது “ஒரு வெள்ளைக்காரனை பார்த்து நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டால் “ஐ எம் ஃபைன். நான் நன்றாக இருக்கிறேன்’ என்பான். அதே கேள்வியை நம்ம ஊர் ஆசாமியிடம் கேட்டால் “ஏதோ இருக்கிறேன் உங்க புண்ணியத்தில்” என்பார். ஆக அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் நாம் ஏதோ இருக்கிறோம்” என்றார்.

இது தொடர்பான ஒரு நகைச்சுவை கதையும் என் நினைவுக்கு வருகிறது. கடவுளை நேரில் கண்டு வரம் பெற எல்லா நாட்டவர்களும் சென்றார்கள். ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றார். அவர் யார் என்ன வேண்டும் என்று கடவுள் கேட்டார். உடனே “நான் அமெரிக்கர் என் நாடு வல்லரசாக வேண்டும்” என்றார் அவர். கடவுள் சரி என்றார். அடுத்து ரஷ்யர், “வான் மீது என் ஆதிக்கம் வேண்டும்’ என்றார். பிரிட்டிஷ்காரர் கடல் மீது என்றார்.. பிரஞ்சுக்காரர் கலைகள் மீது என்றார். ஜப்பான் மின் அணுவிசையில தான் யாரையும் மிகைத்தோனாக இருக்க வேண்டும் என்றார். ஜெர்மன்காரர் கனரக இயந்திரத் தொழிலில் தனக்கு யாரும் நிகராகக் கூடாது என்றார்.

இப்படி, ஒவ்வொருவராக அவர்கள் கேட்ட வரத்தை தந்த கடவுள் ஒன்றை கவனித்தார்.

ஒவ்வொருவரும் முண்டியடித்துக் கொண்டு முன்னே வருகிறார்கள். ஒருவர் மட்டும் ஒதுங்கி, ஒதுங்கி இவர்களுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தார். அவருக்காக பரிதாபப்பட்டு அவனை அருகில் அழைத்து “நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்” என்று, கடவுள் கேட்டார். அவர் எட்டாக வளைந்து, ஏழாக நெளிந்து, ஒரு கையால் பிடரியைச் சொறிந்து கொண்டே “சும்மா உங்களைப் பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றார். கடவுள் என்ன சொன்னார் அல்லது என்ன சொல்லி இருப்பார் என்பது இங்கு முக்கியமல்ல.

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி பற்றிக் கேட்கும் போதும், படிக்கும் போதும் எனக்கு இந்தக் கதை நினைவுக்கு வருகிறது. 105 கோடி, மக்கள் தொகை கொண்ட ஒரு மிகப்பெரிய நாடு. நமக்கு இதில் இடமில்லை நம்மை விட அளவில், மக்கள் தொகையில் மிகக் குறைவான ஜப்பான், கொரியா, ஈரான், சவூதி அரேபியா என்று ஆசிய நாடுகள் சில பிரதான போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளன. ஏன் ஏழை நாடுகளான ஐந்து ஆப்பிரிக்கா நாடுகளும் ஆட அருகதை பெற்றுள்ளன. நாம் மாப்பிள்ளையாக அல்ல, மாப்பிள்ளை தோழனாகக் கூட வேண்டாம். பந்தியில் இலை போடும் பையனாக கூட இல்லை என்பது தான் வேதனை. ஒருவர் நடுவராகச் சென்று பொறுப்பை ஏற்றுச் செயல்படுவார். இம்முறை அவரும் அழைக்கப்படவில்லை என்பது இன்னொரு சோகம்.

போட்டிகளை பார்க்கக் கூட முடியுமா என்கிற பரிதாபநிலை மாறியுள்ளது. மாற்றிய புண்ணியவாளன்களுக்கு நன்றி. அப்படியே தமிழிலும் தர முயலலாம். ஆனால் இதற்காக தேவைப்படும் கோடிகள் மிரட்டவே செய்யும். ஆனால் வர்த்தக சாத்தியக் கூறுகள் உற்சாகம் தரவே வாய்ப்புண்டு. யார் செய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி. தொலைக்காட்சியைத் தொடும் முன்பு இதை வானொலியில் முயன்று பார்க்கலாம். அரசு இதைச் செய்யலாம். ஆனால் இருந்த தமிழ் வர்ணனையும் இல்லாமல் செய்த அரசு வானொலியிடம் அதை எதிர்பார்ப்பதற்கு இல்லை.

மேலைநாடுகளில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு வானொலி அலைவரிசை உண்டு. தமிழிலும் இங்கே ஏகப்பட்ட அலைவரிசைகள் வானில் தவழவிருக்கின்றன. அவற்றுள் ஒன்றிரண்டையாவது விளையாட்டுக்கு என்று ஒதுக்கலாம். யார் இதைச் செய்வார்கள் என்பது இப்போதைய கேள்வி. ஆனால் காலம் செய்ய வைக்கும் என்பது இதற்கான பதில்.

கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் எல்லாரும் நம் போக்குக்கு அமைய, மேற்கு இந்திய தீவுகளில் 4-1 என்ற கணக்கில் தொடரைத் தோற்றது நிச்சயம் ஒரு பின்னடைவே! இதனால் எழும் ஆற்றமாட்டாமையும், ஆத்திரத்தையும் தொடரை 3-2 என்று வெல்ல வாய்ப்பிருந்தது என்கிற உண்மை மேலும் இரட்டிப் பாக்குகிறது. இப்போது இவர்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்கிற நிலை மாறி, இவர்களால் முடியும் ஆனால் ஏனோ செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்கிற ஆதங்கம் தலை தூக்கி நிற்கிறது.

ஒருநாள் தொடரை தோற்றாலும் டெஸ்ட் தொடரில் சோபிப்பார்கள் என்ற நம்பிக்கையை, முதல் டெஸ்ட், முதல் இன்னிங்சில் சொதப்பியதன் மூலம் ஆட்டம் காண வைத்தார்கள். மேற்கு இந்திய தீவு சிறப்பாக ஆடி 130 ரன்கள் முன்னிலை பெற்றது;

இரண்டாவது இன்னிங்சில் இரட்டைச் சதத்துடன் வசீம் ஜாஃபர் விஸ்வரூபம் எடுக்க இன்னிங்சை முடித்துக் கொண்டதாக அறிவித்து, மேற்கிந்திய தீவு அணிக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு சிறப்பாக ஆடியது. மேற்கிந்திய தீவுகளின் ஆட்டம் குளோஸ் என்கிற நிலையில் உள்ளே வந்த தேவ் முகம்மது ஆபத்பாந்தவனாக கைகொடுக்க, வால் ஆட்டக்காரர்கள் வாலாட்டாமல், குனிந்த தலை நிமிராத மணப்பெண் போல கருமமே கண்ணாகி இந்தியாவின் வெற்றிக் கனவை கலையச் செய்தார்கள்.

இரண்டாவது டெஸ்டின் தொடக்கமே கம்பீரம். சேவாக் அடித்து நொறுக்க; மறுமுனையில் வசீம் ஜாஃபர் பொறுமை திலகமாக ‘சேவாக்குக்கு தோள் கொடுத்தார். இந்திய அணிக்கு முட்டுக் கொடுத்தார். சேவக் பெற்ற சதம் போக அணித்தலைவர் டிராவிட்டும், டெஸ்ட் போட்டியில் தனது கன்னிச் சதத்தை பெற்ற முகம்மது கைஃபும் மேற்கிந்திய தீவு அணியின் வெந்த புண்ணில் வேலானார்கள்.

முன்பெல்லாம் கடைசி மட்டையாளர்கள் வரை வல்லமை பெற்றவர்களாக இருந்தார்கள். பத்தாவதாக களம் இறங்கி செய்யது கிர்மானி சதமும், 11வதாக களமிறங்கி பல்விந்தர் சிங் சாந்து அரை சதமும் பெற்ற கதைகள் உண்டு.

உலகக் கோப்வையை வென்ற 1983ம் ஆண்டில் இந்திய அணியில் விக்கட் கீப்பரைத் தவிர ஏறக்குறைய அத்தனை பேரும் ஆல்ரவுண்டர்கள். பிறகு இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த ‘இனமே’ அருகிப் போனது. இப்போது இர்ஃபான் பத்தான். வீரேந்திர ஷேவாக், யுவராஜ் சிங் என்று பந்தையும் மட்டையையும் ஒரு சேர ஒன்றுபோல் நன்றாகக் கையாளும் பன்முகத் திறமை கொண்ட ‘ஆல்ரவுண்டர்கள்’ ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்திய அணியில் இருப்பது ஒரு பெருமை - வலிமை.

அமுதத்தின் பெருமை அருந்துவதில் இருக்கிறதே தவிர அழகு பார்ப்பதில் இல்லை என்பதையும் இவர்கள் உணர்ந்து கொள்வார்களேயானால் அடுத்த உலகக் போக்கை ‘வாகை சூடிகள்’ நாம்தான் என்பதில் ஐயமில்லை. அதென்ன ‘வாகை சூடிகள்’? 1999ல் லண்டன் சென்று ஐ.பி.சி. - தமிழ் வானொலி நிலையத்துக்காக உலகக் கோப்பை போட்டி ஆட்டங்களை தொகுத்து வழங்கிய போது சேம்பியன் (CHAMPION) என்கிற பதத்துக்கான தமிழ்ச்சொல் என்று ஒரு நேயர் கூறிய யோசனை இது. பாப்கார்ன் லொல்லி பொப் (POPCORN - LOLLYCOP) என்பவற்றுக்கும் பதிலாகக்கூட சோளப்பொரி, கமர்கட் மிட்டாய் என்கிற பதங்களை பயன்படுத்த யோசனை கூறினார்கள். இப்படி எத்தனையோ!!!

அங்குதான் - புலம் பெயர்ந்த நாடுகளில் தான் தமிழ் வாழ்கிறது - வளர்கிறது. இங்கே எப்போதும் தமிழ் வளர்ப்புக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் நடுவில் போராட்டம். இதில் பெரும்பாலும் தமிழ் இந்திய அணியின் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ஆட்டத் தொடரை, இரு நாடுகளுக்கிடையிலான போட்டி என்பதை விட கெவின் பிட்டர்கன் என்கிற மட்டையாளருக்கும் முத்தையா முரளிதரன் என்கிற பந்து வீச்சாளருக்கும் இடையில் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட போட்டி எனலாம். 1-1 என்று போட்டித் தொடர் சமநிலையில் முடிய இவர்கள் இருவரும் கூட புகழ் உச்சியில் சமமாக நின்றார்கள். கடைசிப் போட்டியில் அனில் கும்ளேயைப் போல், ஜிம்லேக்கரைப் போல் முரளியும் ஒரே இன்னிங்சில் பத்து விக்கட்டுகளைப் பெறும் சாதனையை நெருங்கினார். இடையில் ஒரு ‘ரன் - அவுட்’ குறுக்கே புகுந்துவிட்டது என்றாலும் எட்டு விக்கட்டுகளை கைப்பற்றியதும் இதன் மூலம் அணி வெற்றி பெற்றது என்பதும் பெருமைப்பட கூடிய சாதனைகளே. அதை விடவும் முரளி இங்கிலாந்தில் ஆடும் கடைசி டெஸ்ட் இது. இதை மனதில் கொண்டு இரு அணி ஆட்டக்காரர்களும் கூடியிருந்த ரசிகப் பெருமக்களும் முரளிக்கு அளித்த பிரியா விடைபோன்ற மரியாதை இருக்கிறதே அதை இந்த ‘சென்னை மாப்பிள்ளை’ தன் ஆயுளில் மறக்கமாட்டார். வாழ்க!

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கட்டுகள் என்கிற இலக்கை முதலில் தொட்டவர் மேற்கு இந்திய தீவுகளின் கோர்ட்னி வா(ல்)ஷ். பிறகு முத்தையா முரளிதரன், அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, க்ளன் மெக்ரா(த்) இப்போது இதே நமது அணி கும்ளேயும்! இரட்டை வாழ்த்துக்கள்!!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com