Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
பின் காலனித்துவம் : சில விளக்கங்கள்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

“கணிதம், கலை, சமூகவியல், வரலாறு என அனைத்திலும் காலனிய சிந்தனை நீக்கம் நிகழ வேண்டும்”.
நீங்கள் வாசித்த இந்த மேற்கோள் ஏ. சிவானந்தனால் ஓரு நேர்காணலின் போது சொல்லப்பட்டது. சுருங்கக் கூறப்போனால் மக்களை காலனியப் பிடிகள், ஆக்கிரமிப்புகள், எண்ணங்களிருந்து விடுவிப்பதை பின் காலனியத்தின் முக்கிய பணி என்று சொல்லலாம்.

சென்ற நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தாக்க கோட்பாடுகளில் (innovative theories) இரண்டு மிக அவசியமாக அலசப்பட்டன. அவை பரபரப்பையும் பலரை எரிச்சலடையவும் செய்தன, காத்திரமான விமர்சிப்புக்குள்ளாயின. இரண்டுமே இலகுவில் புரிந்துகொள்வதில் சிக்கலானவை. ஒன்று பின்நவீனத்துவம். மற்றது பின்காலனித்துவம். இந்த கட்டுரையில் பின் காலனித்துவம் பற்றிப் பார்ப்போம்.

பின்காலனித்துவம் என்றதும் முதல் எழும் கேள்வி பின்காலனித்துவம் எப்பொழுது ஆரம்பமாகியது. நாம் நினைப்பது போல் ஆங்கிலேயக் கொடி இறக்கப்பட்டு சிறிலங்க கொடி ஏற்றப்பட்ட தினத்திலோ அல்லது புதிதாக விடுதலையடைந்த நாடுகள் தமக்கென்று சொந்த விமான சேவையை ஆரம்பித்த போதோ அல்லது தங்களுக்கென்று தேசிய கீதத்தை உருவாக்கியபோதோ அல்ல. காலனிய ஆட்சிக்காலத்தில் காலனிய பிரஜ்யைகள் காலனிய ஆட்சியாளர்களுக்கெதிராய் எப்பொழுது குரல் கொடுக்கத் தொடங்கினார்களோ அப்பொழுதே பின்காலனித்துவம் ஆரம்பமாயிற்று.

தென்னாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் அழகுமுத்து சேர்வை, புலித்தேவர், கட்டபொம்மன், மருதுபாண்டியர், ஊமைத்துரை, வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோர் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்து ஆட்சியாளர்களை எப்பொழுது சஞ்சலப்படுத்தினர்களோ அப்பொழுதே பின்காலனித்துவம் தொடங்கி விட்டது. இந்தியா சுதந்திரம் அடையுமுன் சுப்பிரமணிய பாரதியார் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’ பாடினாரே, அன்றே பின்காலனித்துவத்தின் எதிர்ப்புக்குரல் ஒலிக்கத் தொடங்கியது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த எதிர்ப்புக்கும் தற்பொழுது நடைபெறுகிற பின்காலனித்துவ எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. காலனிய காலத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு அல்லது ஆட்சேபனை நவீனத்தின் கட்டுக்குள் அமைந்திருந்தது. விடுதலையடைந்த பிறகு இப்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சேபனை பின் நவீனத்தினால் தாக்கம் பெற்றது. இந்த பின் நவீனத்திற்கும் பின் காலனியத்திற்குமுள்ள இணைவுகள், இணைவின்மைகள் பற்றி சற்றுப் பின்னர் விளக்குகிறேன்.

பின் காலனித்துவம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்புக்குணம் கொண்ட ஓர் அரசியல் பார்வை. ஒரு எதிர்த்த நிலையுணர்வு. காலனிய ஆக்கிரமிப்பைச் சிக்கல்படுத்திய கலகக்காரர்கள் மேற்கொண்ட மனச்சார்பு, சாத்தியக்கூறான மனோ நிலை. எல்லாக் காலகட்டத்திலும் விழிப்புள்ள மக்கள் அல்லது இயக்கங்கள் அதிகாரத்துக்கும், அடக்கு முறைக்கும் எதிராக உரிமைக்காக போராடினார்களே அப்பொழுதே எதிர்ப்பின் குறியீடாக பின்காலனித்துவம் செயல்படுவதைப் பார்க்கலாம். அது ஒரு எதிர்ப்பு நடவடிக்கையைத் தூண்டிவிடும் கருத்துநிலை. ஒரு விதத்தில் பின்காலனித்துவத்தில் காணப்படும் ‘பின், பின்பு, பின்னர்,’ போன்ற சொற்கள் கால எல்லைகளுக்குள் அடங்குவதில்லை. அவை காலத்தை விஞ்சி நிற்பவை. மீறியவை. பின் காலனியத்தின் செல்வாக்கும் வீச்சும் குறுகிய குறுக்கப்பட்ட கால வரையறைக்குக் கட்டுப்பட்டவை அல்ல.

பின் காலனியத்தின் வருகையும் தோற்றமும்

பின்காலனித்துவம் ஒரு அறிவுக் கோட்பாடாக ஆரம்பிக்கவில்லை. முதலில் அது ஆட்சேபனை அல்லது விடுதலை இலக்கியமாகத்தான் எதிர்ப்பு இயக்கங்களில் சம்பந்தப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது அய்ரோப்பிய கருத்து நிலையிலிருந்து அதன் செல்வாக்குப் பிடியிலிருந்தது மக்களை விடுவிக்க பின்காலனித்துவம் ஒரு சிந்தனைக் கருவியாக பயன்படுகிறது. ஒடுக்கப்பட்டோரின் ஆயுதமாக எழுத்தை பின் காலனியம் கருதுகிறது. இதற்கு பல விடுதலை எழுத்தாளர்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் ஆப்பிரிக்கா அல்லது மேற்கத்திய எழுத்தாளர்கள்.

பான்னன், மிமி, காபறால், சி.ல்.ர். ஜோம்ஸ் - இவர்களுடைய விடுதலை எழுத்துக்கள் வேறுபட்ட அரசியல், கலாச்சார சூழலில் படிக்கப்பட்டாலும் இவர்களின் எழுத்தின் முக்கிய குறிக்கோள் அய்ரோப்பிய எழுத்துகளில் காணப்பட்ட கீழைத் தேசத்தவரைப் பற்றிய தகவல் குழப்பங்களையும் (misinformation) தப்பான பரப்புரைகளையும் (propaganda) திருத்தம் செய்வதும், திருப்பி எழுதுவதுமே. விடுதலை எழுத்தாளர்களையும் இலக்கியப் படைப்பாளிகளையும் அய்ரோப்பிய கலாச்சாரத் திணிப்புக்கு ஈடுகொடுக்கவும், சரிப்படுத்தவும் இலக்கிய படைப்பை மேற்கொண்டார்கள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஆபிரிக்காவைச் சேர்ந்த சினைவா ஆட்சிபே, வோல்லா செயிங்கா, திய்யொ வாங்கொகி மற்றும் மேற்கிந்திய டெர்க் வால்காட், ப்ரொட்த் வையிட் ஆகியோர் 20ம் நூற்றாண்டில் தோன்றிய திறனாய்வுகளில் - நவீனம், பெண்ணியம், அமைப்பியல், எல்லாமே மேற்கத்திய சமூக, அரசியல் கலாச்சார கேள்விகளுக்கும் முரண்பாடுகளுக்கும் விடைதேடும் முயற்சியாக உருவாகின. இதற்கு மாறாக பின் காலனித்துவம் மூன்றாம் மண்டல பிரச்சனைகளுக்கு விமோசனம் தேட 60ல் அமெரிக்காவில் குடியேறிய முன்னாள் காலனிய பிரஜைகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்காலனித்துவம் ஒரு ஆட்சேபனை அல்லது ஒரு எதிர்ப்பு இலக்கியமாகத்தான் முதலில் பொதுக் கவனத்துக்குக் கிட்டியது. பிறகு எண்பதுகளில்தான் பின்காலனித்துவம் ஒரு திறன் ஆய்வுக் கோட்பாடாக மாறி பல்கலைக்கழக பண்டிதர்களின் அறிவார்ந்த திறனாய்வாக மாறியது. இந்த மாற்றத்துக்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று, அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் ஒன்று சேரா நாடுகள் (அணிசேரா நாடுகள்) காலனித்துவத்துக்குக் கொடுத்து வந்த எதிர்ப்புக்குரல் குறைந்து வந்தது. அந்த எதிர்ப்பு வெளியை நிரப்பவே பின்காலனித்துவம் எதிர்ப்பின் குறியீடாக உருவானது என்று சொல்லலாம். இரண்டாவது காரணம் எண்பதுகளில் சோவியத் ஒன்றியம் உடைந்ததின் விளைவாக சோசலிச கருத்துக்கள் சிதறடிக்கப்பட்டன.

அவற்றின் வலிவு இழந்தன. கம்யூனிசம் தளர்ச்சியடைந்தது. ரீகன், தாட்சர் ஊக்கப்படுத்திய தனியார் சந்தை மேலாட்சிக்கு எதிராக இன்னுமொரு மார்க்சிய நெருக்குநிலை சார்பான சிந்தனை முறை தேவையாயிற்று. இதற்கு பின்காலனித்துவம் அறிமுகப்படுத்திய ஆய்வுமுறை துணைபுரிய முற்பட்டது. மூன்றாவதாக, எண்பதுகளில் இன அடையாள அரசியல் உருவாகியது. அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் ஏற்பட்ட மாணவர் கலகம் காரணமாக இனக்குழு சார்ந்த படிப்பியல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்கட்டத்தில் ஆப்பிரிக்க - அமெரிக்கர், லத்தீனோ - அமெரிக்கர், நாட்டி - அமெரிக்கர் சிறுபான்மை சொல்லாடலை அறிமுகப்படுத்தினர். இந்த இன விளக்கவியலை (identify hermeneutics) விளம்பரப்படுத்தவும் அதைச் சர்ச்சைப்படுத்தவும் ஓரளவு விளிம்புநிலை அறிவுக்கோட்பாடு தேவையாயிற்று. இந்த இடத்தை பின்காலனித்துவம் பூர்த்திசெய்தது எனலாம்.

இதில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் 40களில் இந்தியா, ஸ்ரீலங்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. 60-70களில் ஆபிரிக்க நாடுகள் விடுதலையடைந்தன. ஆனால் பின் காலனித்துவம் ஒரு கோட்பாடாக எண்பதுகளில்தான் உருவாகியது. இந்த நீண்ட இடைவெளி பின்காலனித் துவத்துக்கு காலானித்துவத்தைப் பற்றியும், விடுதலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தேசிய அரசியல் அமைப்பு பற்றியும் நிதானமாக மறுபரிசீலனை செய்ய தருணம் கொடுத்தது. அதாவது பின்காலனித்துவம் காலனி ஆட்சியினுடைய எதிர்மறைப் பண்புகள் பற்றி மட்டும் சொல்லவில்லை. அது காலம் தாழ்த்தி வந்ததினால் இனம், சாதி, சமயம், மொழி சார்ந்த தேசிய அரசியலுக்கு மாறாகவும் எதிர்ப்பு வியக்கியானம் செய்தது.

வெள்ளை நிற ஆட்சி போய் மேல்மட்ட உயரிய கறுப்புநிற, பழுப்பு நிறத்தினரிடம் ஆட்சியிருந்ததால் தேசிய ஒற்றுமை, தேச நலன் என்ற எடுத்துரைப்பில் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட மற்றதுகள் (the other) பெண்கள், தலித்துகள், மலையக மக்கள், ஆதிவாசிகள், ஓர் இன ஈர்ப்பாளர்கள் (homosexuals) ஆகியோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர் களுக்கு மானிடத்துவமும் மரியாதையும் தர முனைந்தது. ஆகையினால் பின்காலனித்துவம் காலனித்துவத்தையும், பேரினவாத தேசியத்தையும் தீவிரமாக விமர்சித்தது. சிக்கல் படுத்தியது.

பின் காலனியத்தின் மும்மூர்த்திகள்

பின் காலனித்துவம் ஓர் அறிவியல் கோட்பாடாக அங்கீகாரம் பெறுவதற்கு மூன்று பேர் முக்கியமானவர்கள். பாலஸ்தினிய ஆங்கில இலக்கிய பேராசிரியர் எட்வர்ட் சயித், மற்றும் இரு இந்தியர்கள் - கொமி பாபா, காயத்திரி ஸ்பிவக். இவர்கள் பின்காலனித்துவத்தின் மும்மூர்த்திகள். இவர்களின் எண்ணங்களை வரையறுப்பது சுலபமல்ல. சாய்த்தும் காயத்திரியும் பின்காலனித்துவத்தை ஒரு எதிர் வாசிப்பு உபாயமாக பயன்படுத்துகின்றனர். பாபா பின்காலனியத்தன்மையை (postocoloniality) ஒரு நிலைப்பாடாகக் (condition) கருதுகிறார். மேற்குலகின் தொடர்பால் நவீன வளர்ச்சிகள் சவால்களை உள்வாங்கிக் கொண்டதால் ஏற்பட்டது இந்த நிலைமை. இந்த இருப்பு நிலையில் கொமி பாபா சொல்லும் அடையாளங்கள்: பின் காலனித்துவ பிரஜைகளிடையே காணப்படும் கலாச்சார கலவை மற்றும் கலாசாரத் தாக்கலால் காலனியப்படுத்தப்பட்டவர்கள் மேற்கொள்ளும் ஒப்பொலிப்பண்பு (mimicry), புலம் பெயர்ந்ததால் ஏற்படும் எல்லை நிராகரணம். சாயித் எழுதிய Orientalism மற்றும் Culture and Imperialism நூல்கள் முக்கியமானவை.

இதில் Orientalism பின்காலனித்துவத்தின் அடிப்படைப் பாடநூலாகக் கருதப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு நாட்டு அறிஞர்களிடயே கீழைத் தேசங்களின் மரபுகள், வாழ்க்கை முறைகள், சமயங்கள், அவைகளின் புனிதப் பிரதிகள், இலக்கியங்கள் பற்றியத் தேடலும் விழிப்புணர்வும் ஏற்பட்டன. இதன் விளைவாக கீழைத்தேசவியம் (orientalism) என்ற அறிவியல் சொல்லாடல் (academic discourse) உருவாகியது. சாயித் கருத்துபடி கீழைத்தேசவியத்தின் முக்கிய வேலை மற்றதுகளைப் பற்றிய சங்கதிகளைச் சேகரிப்பது. அவைகளைப்பற்றி அதிகாரமான கூற்றுகளை தெரிவிப்பது. அவற்றைப் பணியவைத்து அய்ரோப்பிய கண்காணிப்புகுள்ளாக்குவது, இலக்கியங்கள், இதிகாசங்கள், வரலாறுகளைக் கட்டுப்படுத்தி மேற்கத்தியோரின் முகமைக்குக் கொண்டுவருவது.

சாய்த்தின் நூல் அறிமுகப்படுத்திய முக்கிய அம்சம் காலனியத்துக்கும் புலமைக்குமிடையேயான மிக நெருங்கியத் தொடர்பு. அதாவது அதிகாரத்திக்கும் அறிவுக்கும் உள்ள உறவு. மற்ற வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக்காட்ட மறந்ததை சாய்துதான் எடுத்துக்காட்டினார். அதிகாரத்துக்கும் புலமைக்குமுள்ள இந்த இணைப்பு எப்படி பாட புத்தகங்களிலும் அரசாங்க ஆவணங்களிலும், மறுபணியாளர்களின் அறிக்கைகளிலும், மனித தர்க்கவியல் ஆராய்ச்சிகளிலும், வரலாற் றெழுத்திலும் நேரடியாகவோ அல்லது மங்கலாகவோ புகுத்தப்பட்டிருப்பதை சாயித் உதாரணங்களுடனும் குறிப்புகளாகவும் அம்பலப்படுத்தினார். இதுவரை மேன்மையான கௌரவமான முயற்சியாகக் கருதப்பட்ட கீழைத் தேசவியம் சாயித்தின் வெளிப்படுத்தலுக்குப் பிறகு தகாத, அவமரியாதையான சொல்லாக வழங்கப் படலாயிற்று.

பின் காலனியத்தின் சேவைகள், திருத்தி எழுதுதல், மீளுருவாக்கம் செய்தல்

பின் காலனியத்தின் சேவைகள், திருத்தி எழுதுதல், மீளுருவாக்கம் செய்தல் பின்காலனியத்தை எளிதில் வரையறுக்க முடியாது. ஒவ்வொரு பயில்வொழுக்குகளும் (discipline) தங்களுடைய இலாக்காக்களின் எல்லைகளுக்கும், இலக்குகளுக்கும், நோக்குகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பின்காலனியத்தை வரையறை செய்திருக்கின்றன. முதலில் ஆங்கிலத் துறையில் ஆரம்பித்து, சரித்திரம், சட்டம் என்று தொடர்ந்து இப்பொழுது விளையாட்டுத்துறை வரை எட்டியிருக்கிறது. இந்த இலாக்காக்களிடையே பின்காலனித்துவம் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் சில முன்னடிப் படைகள் (preoccupations) பொதுவானவை. முக்கியமாக ஆங்கிலேயரின் ஆட்சி மறைந்து போனாலும் கீழைத்தேச வல்லுனர்கள் உருவாக்கிய வகைப்பாடுகள், சித்தரிப்புகள் திருத்தி எழுதப்படவில்லை என்பதில், ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

கீழ்க்கண்டவைகளை பின் காலனியம் முக்கிய இலக்கான வேலைகளாக ஏற்றுக் கொள்ளும் : மேற்கத்திய மேலாண்மையின் கருத்தாக்கத்தை மைய மறுப்பு (decentring) செய்வது; மேற்கத்தியமே பிரபஞ்சம் என்ற ஆளும் எண்ணத்திலிருந்து மேற்கத்தியத்தையும் ஒரு பிராந்தியமாக்குவது; கீழைதேச வல்லுனர்களால் (Orientalists) திரித்து எழுதப்பட்ட வரலாறுகளை குறுக்கீடு) செய்து அவற்றைக் கேள்விக்குள்ளாக்குவது; இலக்கியங்களிலும், ஆவணங்களிலும் பொதிந்து கிடக்கும் சமய, இன வாதங்களையும், காலனிய கருத்துக்களையும் அம்பலப் படுத்துவது; ஆங்கில பேரிலக்கியங்களின் (canon) மைய நிலையைத் தளர்த்தி அய்ரோப்பியர் அல்லாத தென்னாசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களுக்கு சமநிலை கொடுத்து இரண்டையும் இணைத்து வாசிப்பது.

ஒதுக்கிவைக்கப்பட்டோரின் இலக்கியங்கள், சரித்திரங்களை முன்னிலைப்படுத்துவது; அவர்களது தனித்துவத்தையும் கௌரவத்தையும் பேண வைப்பது; காலனித்துவ நாடுகளின் எழுத்தாளர்கள் தங்களின் இனம், மொழி, கலாச்சாரம் பற்றிய படைப்பு வார்ப்புகளை (stereotypes) காலனிய சக்திகளிடமிருந்து மீட்க முயலுவது; அய்ரோப்பியர் படைத்த தங்களைப் பற்றிய சிதைந்த சாதி சார்ந்த சித்தரிப்புகளை மீளப்பெறுவது; அதனை மறு பரிசோதனை செய்வது, பரிசோதிப்பது, கேள்விக்குள்ளாக்குவது. மேற்சொன்னவைகளை பின் காலனியத்தின் அடிப்படை விளக்கவியல் கருமங்கள் (hermeneutical) என்று செல்லலாம். தொடக்கத்தில் அய்ரோப்பிய மேலாண்மைக்கு எதிராக ஆரம்பித்த பின்காலனித்துவ சொல்லாடல் தன் கவனத்தை சமீபத்தில் தேசிய சமாச்சாரங்களில் திருப்பியிருக்கிறது. தேசியம் தூண்டி விடும் தீவிர இனவழி, சமயவழி, மொழிவழி தேசியத்தை ஐயத்துக்கு உட்படுத்துகிறது. குறுகிய மனப்பான்மையான தேசியம் எப்படி தொழிற்படுகிறதென்று பின்காலனித்துவமும் தமிழ் நூல்களும் பற்றிப் பேசும் போது பார்க்கலாம்.

பின் காலனித்துவம் அறிமுகப்படுத்திய வாசிப்பு அறிதல் முறையில் (reading method) இரண்டு முக்கியமானவை. ஒன்று பிரதிகள் அப்பாவித் தன்மையானவையல்ல (Texts are not innocent). இரண்டு அவற்றை வாசிப்பவர்களும் அப்பாவிகள் அல்ல. இரண்டுமே கணிசமான கருத்துநிலைகளை கொண்டவை. இரண்டுமே கருத்துநிலை மூட்டைக் கட்டுகளுடன் செயல்படுவவை. ஆகையினால் எந்த வாசிப்பும் சீரானதல்ல. சிக்கலானது. குழப்பமானது. பின் காலனித்துவம் புகுத்திய மற்றொரு பிரதான வாசிப்பு முறைமை contrapunal reading ஆகும். இந்த வார்த்தை இசை சம்பந்தப்பட்டது. சரியான தமிழ் வார்த்தை கிடைக்காதபடியால் இப்போதைக்கு எதிர்ப்பு ஒலி வாசிப்பு என்று சொல்லிக்கொள்வோம். இதை சாயித் தான் பின் காலனித்துவ சொல்லாடலில் புகுத்தினார்.

ஒரு பிரதியை ஒற்றைத் தொனியில், தனித்து வாசிக்காமல் அதை பல் தொனிகளுடன், மற்ற பிரதிகளுடன் இணைந்து வாசிப்பது. இந்த முயற்சிக்கு முந்திய ஒப்பியலுக்கும் சாயித் அறிமுகப்படுத்திய எதிர்ப்பு ஒலி வாசிப்பிற்கும் வித்தியாசமிருக்கிறது. பழைய ஒப்பியல் நோக்கில் மேற்கத்திய இலக்கியங்கள் அளவு கோலாகவிருந்தன. அவற்றின் ரசனை, நடைக்கேற்ப மற்ற நாட்டு இலக்கியங்கள் எடை போடப்பட்டு, அவற்றின் குறைகள், பலவீனங்கள் எடுத்துச் சொல்லப்பட்டன. அதே போல் சமயப்பிரதிகளில் கிறிஸ்தவ வேதத்துக்கு மதிப்பு கொடுக்கப்பட்டது, பிற சமய புண்ணிய பிரதிகள் எள்ளல் செய்யப்பட்டன. ஆனால் சாயித் கூறும் எதிர்ப்பு ஒலி வாசிப்பு எல்லா பிரதிகளையும் சமமாக பொருள், கருத்து வேறுபாடின்றி ஒரே தளத்தில் பார்வை இடுகிறது. இந்த வாசிப்பு அறிதல் முறை எல்லாப் பிரதிகளையும் ஒரே மட்டத்தில் வைத்துப்பார்க்கிறது.

அப்படிப் பார்ப்பதின் நோக்கம் இப்பிரதிகளில் காணப்படும் இடைவெளிகள், நிசப்தங்கள், முடிவுகள், பிளவுகளை வெளிக்கொண்டு வருவதாகும், உதாரணத்திற்கு Margaret Mitchel -லின்? Gone with the Win -ன் நாவலையும் Alice Randall எழுதிய The Wind Done Gone-யும் இணைத்து வாசிக்கவேண்டும். முதல் நாவல் அமெரிக்க உள்நாட்டுப் போர் பற்றி வெள்ளையர் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. விடுதலையடைந்த துடுக்குமிக்க கறுப்பர்கள் பற்றி நிறைய வசவுகள் இந்த நாவலில் உண்டு. கதாநாயகனின் இனவாத செயல்கள் இந்த நூல் திரைப்படமான போது நீக்கப்பட்டாலும் நாவலில் இவரது வெள்ளைய வெறி விவரிக்கப்பட்டிருக்கிறது. தீவிர இனவாத இயக்கமான கறுப்பர்களை எதிர்க்கும் KKK கூட்டங்களின் அணிவகுப்புகளில் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் ஆலிஸ் ராண்டலின் நாவல் கறுப்பர்களின் பார்வையில் மிட்சலின் படைப்புப்பின் புலனையும் அதே கதாபாத்திரங்களையும் வைத்தே அமெரிக்க உள்நாட்டுப் போரை மறு எழுத்துச் செய்வதுமட்டுமல்ல மங்கலாயிருந்த இன துவேசங்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. அதுபோல் Joesph Conrad-ன் Heart of Darkness-சையும் chinua Achebe-யின் Things Fall Apart-யும் ஒப்பிட்டு படித்தால் ஆப்பிரிக்கா பற்றி ஒரு மொத்தமான சித்திரம் கிட்டும். இப்படி அய்ரோப்பியக் கருத்துகளை மையப்படுத்தும், மற்றதுகளை இழிவு படுத்தும் எழுத்துக்களையும் காலனிய படிவார்ப்புகளை மீளுருவாக்கம் செய்யும் எழுத்துக்களையும் இணைத்து படிக்கும் போது ஒரு பரந்த சிக்கலான முரண்பாடுடைய சித்தரிப்புக் கிடைக்கக்கூடும். இந்த முரண்பாடு பற்றிய பிரக்ஞ்ஞை இலக்கியங்கள், வரலாறுகள் நேர்த்தியானவையல்ல என்று அறிந்துகொள்ள அவசியமாகிறது.
காலனிய பிரஜையின் தோற்றங்கள், செயல்பாடுகள்

காலனிய பிரஜையின் தோற்றங்கள், செயல்பாடுகள்

பின்காலனித்துவத்தின் கணிப்பு என்னவென்றால் காலனித் துவப்பட்ட பிரஜை மூன்று மட்டங்களில் செயல்படுகிறார். இதைச் சொன்னவர் பன்னொன். அவர் சொல்வது ஒரு காலனிய பிரஜை முதல் கட்டத்தில் எஜமான் அல்லது ஆட்சியாளர்களின் நடத்தைகள், போக்குகள், சிந்தனைகள், உணவு, உடை போன்றவற்றை முழுமூச்சுடன் கடைப்பிடித்து அவைகளை அகவயப்படுத்துதலாகும் (internalize). இதற்கு ஒரு நல்ல உதாரணம் அ.மாதவையாவின் தில்லை கோவிந்தனில் வரும் கதாநாயகனின் சிற்றப்பன். அவருடைய அய்ரோப்பிய பாவானையை நாவல் இப்படி வர்ணிக்கிறது. ஐரோப்பிய ஆடையை எப்பொழுதும் தரிப்பது, அவர்களைப் போலவே சிலவேளை தொப்பி அணிவது, தன் நாட்டினரைக் கறுப்பு மனிதர் என்று வைவது, அது மட்டுமல்ல தான் ரயில் வண்டியில் பிரயாணஞ் செய்தபோது, வேறொரு பிரயாணி தன்னை யூரொஷியன் என்று நினைத்தாலோ அவனுக்கு அளவில்லாத சந்தோஷம், மேலம் சிற்றப்பன் அவனுடைய மனைவியையும் வெள்ளக்காரி போல் மாற்ற முயன்றான்.

கிறிஸ்தவச்சியைப் போல சட்டையும் தாவணியும் போட்டுக் கொண்டு தன்னுடன் வெளியே சென்று ஆண் மக்களோடு கலகலப்பாய் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல சிந்தனையில் கூட மேலாட்சிபுரியும் கருத்துக்களைத் திருப்திபடுத்தவும் பிரதிபலிக்கவும் செய்கின்றான். குருகுகதாசபிள்ளை எழுதிய வரலாற்றில் கும்பினியாரை எதிர்த்த கட்டபொம்மனையும் புலித்தேவரையும் ராஜதுரோகிகள் என்றார். ஆஷ் துரையைச் சுட்ட வாஞ்சிநாதனை பாதகன் என்று சாடினார். வ.உ.சிதம்பரம் பிள்ளை கைதானபோது எதிப்பைத் தெரிவிக்க போராட்டம் நடத்தியவர்கள் மீது ஆட்சியாளர்கள் துப்பாக்கி சூடு செய்த போது நடத்தையை நியாயப்படுத்தினார். அதுமட்டுமல்ல அவருடைய நாவல் ஆங்கிலேய அரசு நீடூழிகாலம் நிலைத்து நிற்குமாறு பிராத்திக்கிறோம் என்று முடிவடைகிறது.

இந்தக்கட்டத்தில் காலனிய பிரஜை ஆட்சியாளர்களிடம் மிக விசுவாசமுள்ளவராகக் காட்சியளிப்பார். காலனிய ஆட்சி காருண்யமானது, நேசசக்தியானது என்று கருதுவார். இந்த ஆங்கில மோகத்திலிருந்து நாளடைவில் விடுபட்டு காலனியப்பிரஜை நாட்டு வழக்கத்துக்குத் திரும்புகிறார். இதுவரை மேற்கே பார்த்தவர்கள் இனி கிழக்கே பார்க்கத் தொடங்கினார்கள்.

இந்த இரண்டாம் கட்டத்தில் தான் வேர் தேடும் படலம் ஆரம்பமாகிறது. ஆங்கிலப் பிடியிலிருந்து அப்பாற்பட்டுத்தப்பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள செய்த முயற்சியே இந்த வட்டார வேர் தேடுதலாகும், இந்தக் கட்டத்தில் வட்டார வழக்கங்கள், வட்டார செயல்கள், வட்டார உணவுகள் எல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டன. நவீனத்தின் தாக்கத்தால் கிண்டல் செய்யப்பட்டு உள் ஊர் மறுமலர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று கருதப்பட்ட பிராந்திய எண்ணங்கள், மரபுகள், வாழ்வை விலாசப்படுத்தும் என்ற ஆவலுடன், எதிர்பார்ப்புடன் மீளுருவாக்கம் செய்யப்பட்டன. இந்த வட்டார மாயை அதிக நாள் நீடிக்கவில்லை. ஒன்று மாதவையாவின் தில்லை கோவிந்தன் கூறியதுபோல் பல காலமாய் வேரூன்றிய பழக்க வழக்கங்களின் ஆதிக்கமும், ஆசைகளின் வேகமும் என்னைப் பின்னிற்கு இழுத்தன. மற்றது நாம் நினைப்பதுபோல் நாட்டுப்புற புராணங்களும், கதைகளும், பழ மொழிகளும், கூத்துகளும், ஒப்பாரிகளும் அப்பாவித்தனமானவை அல்ல. அவை சாதி துவேசத்தை தூண்டுகின்றன, வெளிப்படுத்துகின்றன, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களை இழிவுபடுத்த சாதி நிலையை நியாயப்படுத்துகின்றன.

மூன்றாவது கட்டம் இந்த மேற்கத்தியம், பிராந்தியம் என்ற எதிரிடைகளை (binary) மீறி விடுதலை இலக்கியம் படைப்பதாகவும், ஆங்கில மயக்கத்திலிருந்து விடுபட்டு, உள்ளுர்த் தன்மைகளிருந்து நீங்கி உருவாகும். பனான் சொல்லும் மூன்றாவது கட்டத்தைத்தான் பின் காலனித்துவம் வரவேற்கிறது. ஆட்சியாளர் /அடிமை, மேற்கத்தியம் / கீழைத்துவம், வெள்ளையர் / கறுப்பர், எஜமான் / வேலையாள், ஆண் / பெண், பெரும்பான்மை / சிறுபான்மை என்ற முரண்களையும் இரட்டை நிலையையும் கடந்து விடுதலை இலக்கியம் உருவாக்குவதுதான் இந்த மூன்றாம் கட்டம். இந்த எதிரிடைகள் முற்றிலும் எதிர்ப்பை மய்யமாகக் கொண்டவை. நம்முடைய சரித்திரங்கள், சாஸ்திரங்கள் ஒன்றோடொன்று கலந்தவை. தொடர்புடையவை. பின்னிப்பிணைக்கப் பட்டவை, எதிரிடை நெருக்கு விரோதத்தையும் எதிர்ப்பையும் முக்கியப்படுத்துகிறது.

ஆங்கில மேலாண்மையை நிந்திப்பதுமல்ல அதுபோல் தாய்நாடுமேல் அலாதி அன்பு பாராட்டுவதுமல்ல; இந்த இருமை நிலை பொருத்தமானதல்ல. இது இருசாராருக்குமிடையே இடைவெளியை அதிக விசாலப் படுத்துகிறது. ஆட்சியாளர் / அடிமை என்ற பாகுபாடுகளைக் கடந்து அவற்றை இணைத்து ஆக்கப் பூர்வமாக கலந்து ஒரு பிணைப் புருவத்தை (hybridity) உருவாக்குவது தான் இந்த விடுதலை இயக்கத்தின் நோக்கமாகும், பல முரண்பாடான தொகுப்பு முறையே இந்த விடுதலை இலக்கியமாகும். இந்த பிணைப் புருவத்தன்மையை கொமி பாபா மூன்றாம் வெளி (Third space) என்கிறார்

பின் காலனித்துவம் பின் நவீனத்துவம் ஒற்றுமைகள், ஒவ்வாமைகள் :

இந்த இரண்டு கோட்பாடுகளுக்குமிடையே சில நெருக்கமான தொடர்புகள் உண்டு. இரண்டுமே எதிர்ப்பை மையமாகக் கொண்ட திறனாய்வுகள். இரண்டுமே உலகப் பொதுமையான மையம் ஒன்று இருப்பதை மறுக்கின்றன. மாறாக வட்டார வழக்காறுகள், வட்டாரப் பண்பாடுகளை ஊக்குவிக்கின்றன, முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த வட்டார மையப்படுத்தல் என்பது பின்நவீனத்துவம், பின்காலனித்துவம் இவற்றின் முக்கிய வெளிப்பாடுகள். இரண்டுமே மற்றதுகளையும் (the other) ஒதுக்கி வைக்கப்பட்டவைகளையும் முன்னிலைப்படுத்துகின்றன.

இரண்டுமே ஆக்கங்கள், படைப்புக்கள் இவற்றின் அர்த்தங்கள் பிரதிகளுக்கு உள்ளே இயல்பாகவே உள்ளடங்கியிருப்பவை அல்ல என்று கருதுகின்றன. படைப்புகள் கருத்துக்களை தம்வசம் வைத்திருப்பவை அல்ல. அது வாசகருக்கும் ஆக்கங்களுக்குமிடையே ஏற்படும் அளவளாவுதல் மூலமே அர்த்தம் உருவாகிறது. இலக்கியப் பிரதி தானே எல்லா அர்த்தங்களையும் வெளிப்படுத்துவதில்லை. படிப்பவருக்கும் பனுவலுக்குமிடையே (text) நடைபெறும் பேரம் மூலமே அர்த்தம் நிச்சயிக்கப்படுகிறது. இரண்டுமே படைப்புகளின் அர்த்தம் கூட்டுருவாக்கம் செய்யப்பட்டவை என்று நம்புகின்றன. பிரதிகளில் சொல்லாதவை, விட்டப்பட்டவை, மறைக்கப்பட்டவை, மௌனமாக்கப்பட்டவை, வாயடைக்கப்பட்டவைகளை கட்டுடைத்தலில் இரண்டுமே தீவிரமாக ஈடுபடுகின்றன. இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் பிரதிகளின் அர்த்தங்கள் உறுதியின்மையானவை எப்போதும் முடிவடையாததாக நிச்சயமற்றவையாகவே இருக்கின்றன. படைப்பாளி தீர்மானமான கருத்துக்களைத் தெரியப்படுத்துவதில்லை. ஆகவே இரண்டுமே படைப்பாளிகளைக் கட்டுடைப்பதில் முன்னுக்கு நிற்கின்றன.

ஆனால் சில விஷயங்களில் பின் காலனித்துவம், பின் நவீனத் துவத்தின் சில கருத்துக்களிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது. முக்கியமாக பின் நவீனத்துவம் பெரும் விபரிப்புக்கள் (Grand narratives) எல்லாம் இறந்துவிட்டன என்று சொல்கிறது. நமக்குப் பரிச்சயமான உதாரணங்களுடன் இந்த இறப்பைப் பற்றி விளக்குகிறது. திராவிடர் என்ற பெரும் விபரிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இது சிதறுண்டு, சிதைந்துபோயிருக்கிறது. திராவிடம் முக்கியப்படுத்திய தமிழர் என்ற பொது அடையாளத்துக்குள் உள்வாங்கப்பட்ட, தேசிய முன்னுரிமைகளால் (national priorities) மறுக்கப்பட்ட சாதி, சமய அடையாளங்கள் இப்பொழுது தலைதூக்கி நிற்கின்றன.

தங்கள் தனித்தன்மையை, மானிடத்தை, கௌரவத்தை, மீளுருவாக்கம் செய்து அவற்றின் உன்னதங்களை வலியுறுத்துகின்றன. அதுபோல் ஈழத்தமிழர் என்ற பெரும்விபரிப்பு உடைந்து போய் யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், முஸ்லிம் தமிழர் என்ற மாவட்ட, இன வேறுபாடுகள் முளைத்திருக்கின்றன. இந்த பிளவுகள் வரவேற்கத் தக்கவையானாலும் இந்த முறிவுகள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவு இதர மக்களின் துன்ப துயரங்களில் காட்டும் அக்கறையின்மை. ஆனால் பின்காலனித்துவ விளக்கறிஞர்கள் சில பெரும் விபரிப்புகளுக்கு இன்னும் பல வேலைகள் காத்திருக்கின்றன என்கிறார்கள். முக்கியமாக விடுதலை என்ற பெரும் விபரிப்பு. பின் நவீனத்துவம் மேற்கு நாடுகளின் கலாச்சார உந்துதல்களினால் உருவாகியதாகையால் விமோசனம், விடுதலை ஒரு பெரும் கதையாடலாக அங்கே முடித்திருக்கலாம். ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் விடுதலை என்ற பெரும் விபரிப்பு இன்னும் முற்றிலும் சம்பூரணமாகவில்லை. பெண்கள், தலித்துகள், ஆதிகுடியினரின் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலை இப்போதுதான் மிக தாமதமாகவும், மெதுவாகவும் நடந்து கொண்டிருக்கிறது, பேசப்படுகிறது.

இன்னுமொரு வித்தியாசம், பின் நவீனத்துவம் சரித்திரம் முடிந்து விட்டது என்கிறது. வரலாறுகள் எல்லாம் உண்மை நிகழ்ச்சிகள் அல்ல. அவையாவும் சொல்லாடல்களே அல்லது விபரிப்புகளே என்கிறது. விடயநெருக்கமுள்ள உண்மைகளை (objective truth) அறிவது அரிது என்கிறார்கள் பின் நவீனவாதிகள். பின் நவீனவாதிகளுக்கு ஏ. சிவானந்தன் கூறுவது போல், எல்லாம் நிலையற்றவை, சிதறுண்டவை, அலைந்து கொண்டிருப்பவை. பிரபஞ்ச உண்மைகள் என்பது இல்லை. பகுப்பாய்வது மறுத்து உரையாடல் புனிதப்பட்டுவிட்டது. கட்டமைப்பது மறுத்து கட்டுடைப்பு புனிதப்பட்டுவிட்டது. தற்காலிகத் தன்மை நிரந்தரத் தன்மையை மறுத்து புனிதப்பட்டுவிட்டது.

வரலாற்றில் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் தாங்கள் பராதூரமாக்கப்பட்ட வரலாற்றை மீள் கண்டுபிடிப்புச் செய்து பதிவு செய்யும் இந்நாளில் சரித்திரம் இறந்துவிட்டது என்ற செய்தி மேற்கத்திய நாடுகளுக்குப் பொருந்தலாம், கடைநிலை மக்களுக்கு அல்ல. மற்றுமொரு வித்தியாசம், பெண்களும் தலித்துகளும், மனலயக மக்களும், ஒடுக்கப்பட்டோரும், கீழ்நிலை மக்களும் தாங்கள் அன்னியமாக்கப்பட்டதையும், எதிர் படைப்புச் செய்து தங்களுடைய பெருமைகளுக்கும், பாரம்பரியங் களுக்கும் புது அர்த்தம் கொடுக்கும் போது படைப்பாளி இறந்து விட்டார் (author is dead) என்கிறது பின்நவீனத்துவம். இந்தக் கருத்துடன் பின் காலனித்துவம் வேறுபடுகிறது. இப்பொழுதுதான் கடைநிலை மக்களின் ஆசிரியர்கள் அடித்தட்டு மக்களுக்கு மனவலிமையையும் திடகாத்திரத்தையும் கொடுக்க முன் வருகிறார்கள்.

ஒடுக்கப்பட்டோர் தாங்கள் இழந்ததை மறுஎழுத்தாக்கம் செய்யும்போது ஆசிரியர் இறந்து விட்டார் என்று பிரகடனப் படுத்துகிறது பின் நவீனத்துவம். இவைகளை விட பின் நவீனத்துக்கும் பின்காலனித்துவத்துக்கு முள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் முன்னையது தர்ம ரீதியான முடிவுகளை எடுக்கத் தயங்குகிறது. பின் நவீனத்தின் சார்புசாரா நிலையும், முக்கியமாக அதன் அரசியலற்றத் தன்மைப் போக்கும் மக்கள் சார்ந்த போராட்டங்களில் பங்கு பெற தயங்கவைக்கிறது. பின் காலனித்துவம் இதற்குமாறாக மக்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவது மட்டுமல்ல அவற்றை அறமயப்படுத்துகிறது.

தமிழ் நாவல்களும் பின்காலனித்துவமும்

தமிழில் காலனித்துவதை விமர்சித்து எழுதப்பட்ட படைப்பிலக்கியங்கள் மிகக்குறைவே. சுதந்திரப் போராட்டத்தை ஒருசில சிறுகதைகளும், நாவல்களுமே பதிவு செய்திருக்கின்றன என்று வெங்கட் சாமிநாதன் கூறுகிறார். இதில் சி.சு.செல்லப்பா எழுதிய சத்தியாகிரகி சிறுகதையையும், அவருடைய மூன்று பாக சுதந்திர தாகம் நாவலையும் சேர்த்துக் கொள்ளலாம். கல்கியின் அலை ஓசைக்கு காலனியம் பின்புலனாக இருந்தாலும், நாவல் காதலைத்தான் பிரதானப்படுத்துகிறது. வெங்கட் சாமிநாதன் கருத்துப்படி ஒரு நாட்டின் சுதந்திரப் போராட்டம் சுமார் அரை நூற்றாண்டு காலம் நீண்ட ஒரு மகத்தான சரித்திரம் அந்த நாட்டின் இலக்கியத்தில் சரிவர பதிவு பெறாமலேயே போய்விட்ட தென்றால், அந்த நாட்டின் ஆத்மா ஏதோ ஒருவகையில் களங்கப் பட்டிருப்பதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

இதற்கு எதிர்மாறாக இந்தக் குறுகிய இருபது ஆண்டுக்குள் காயங்கள் பசுமையாகவும் இரத்தங்கள் கொட்டிக் கெண்டிருக்கும்போதே தமிழ் ஈழப் போராட்டம் பற்றிய அனுபவங்கள், அபாயங்கள் ஈழத்தில் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் முக்கியமானவை கோவிந்தன் (இயற்பெயர் சூசைப்பிள்ளை ரோபோட்) 80-களின் இறுதியில் எழுதிய புதியதோர் உலகம் மற்றும் சமீபத்தில் வெளிவந்த சோபாசக்தியின் தேசத் துரோகி-ம் சக்கரவர்த்தியின் சிறுகதைத் தொகுப்பு, யுத்தத்தின் இரண்டாவது பாகம். இந்த படைப்பாளிகள் பின்காலனியத்தின் தாக்கத்தால் அல்லது இத் திறனாய்வின் விஷயங்கள் தெரிந்த அறிவு நிலையின் அடிப்படையில் இந்த நூல்களை எழுதாவிட்டாலும் அவர்களின் குறுக்கீட்டினால் குழப்பமாக்கப்பட்ட பிற்போக்கான, எல்லைப்படுத்தப்பட்ட தேசியம்-பின்காலனியத்தின் செயல்பாடுகளுடன் ஒத்துப்போகிறது.

ஒரு விசாலமான சமதன்மையுள்ள பார்வைகளுடன் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஆரம்பமாகிய தமிழ் ஈழ விடுதலை போராட்டம் எவ்வாறு நாளடைவில் இன, சமய, சாதி வேறுபாடுகளால் சிதறி, சிதைந்து போகிறது என்பதை இந்த இலக்கியங்கள் தெரியப்படுத்துகின்றன. தமிழீழ விடுதலையைக் காட்டிலும் அதனூடாகப் பெறவிருக்கும் சோசலிச மாற்றத்திலேயே நாம் கவனமாயிருக்கிறோம் என்ற புதியதோர் உலகம்-இன் கீதா என்ற பாத்திரத்தின் கூற்று ஈழ விடுதலையின் ஆரம்ப கால கனவை வெளிப்படுத்துகிறது. உள் விமர்சனமாக எழுதப்பட்ட இந்த எழுத்துக்கள் துப்பாக்கி யார் கையில் இருந்தாலும் தமிழ் பேரினவாதியானாலும் சரி சிங்களப் பேரினவாதியானாலும் சரி விமர்சிக்கத் தயங்கவில்லை.

மக்களுக்காக தூக்கப்பட்ட துவக்கு குறுகிய தேசிய மனப்பான்மையால் மக்களுக் கெதிராகத் திருப்பப்படுவதை கேள்விக் குறியாக்குகின்றன இந்த எழுத்துக்கள். உதாரணமாக சக்கரவர்த்தியின் ஒரு கதையில் வரும் ஒரு பெயர் தெரியாத தமிழ் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர் முஸ்லிம்களுக்குக் கொடுத்த வேதனைகளை இப்படிக் கூறுகிறார்: ‘முஸ்லிம் பெட்டைகளுக்கு முலை பிடிச்சான். அம்பிளாந்திறை சந்தியில வச்சி ஹாஜிமார கொண்டு குவிச்சன்’ என்று. குறுகியதும், சுயநலமும் கொண்ட தேசியத்தை, விவாதப்பொருள் ஆக்குவதுதான் பின்காலனியத்தின் முக்கிய இலக்கிய வேலைகளில் ஒன்று. இந்த இலக்கிய வேலைகளை இந்த நூல்களில் காணலாம்.

முடிவாக

பின்காலனித்துவம் ஒரு கோட்பாடாக பல்கலைக்கழங்களில் தோன்றி கல்வித்துறை அமைப்புகளால் கட்டுப் படுத்தப்பட்டதால் அது இன்னும் சிந்தனை மட்டத்திலேயே தொழிற்படுகிறது. பின்காலனிய படைப்புகளில் காணப்படும் சிக்கலான மொழி, மந்தமான நடையையும் சாதாரண வாசகர்களையும் திக்கு முக்காட வைக்கும். பின் காலனித்துவ விளக்கறிஞர்கள் சொல்லாடலில் புகுத்திய அருஞ்சொற்கள் பெரும்பாலானவை அருவமான பொருள் கொண்டவை. சிவானந்தன் சொன்னது போல் எந்த மக்களுக்காகப் போராடுகிறோமோ அநத மக்களுக்காக எழுதவே நாம் எப்போதும் எக்காலத்திலும் முயலவேண்டும். பின் காலனித்திய எண்ணங்கள் வகுப்பறை சொகுசுகளிலிருந்து வீதிகளுக்கும் வேர்மட்டங்களுக்கும் செல்ல வேண்டும்.

ஒரு அறிதல் கோட்பாட்டின் சிறப்பும், சாதனைகளும் அதன் சொல்வீச்சிலும் பகுப்பாய்வின் திறமையிலும் கணிக்கப் படுவதில்லை. அது ஏற்படுத்தும் அரசியல், சமூக விழிப்புணர்ச்சியிலும் மாற்றங்களிலும் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. பின் காலனியத்தின் வீச்சும் பரப்பும் அது ஏற்படுத்தும் செய்கையிலும் (praxis) பயனீட்டிலும் தான் எடை போடப்படும். அறிவு மட்டத்தில் இருந்து செயல்முறைக்கு இடம் பெயரத் தவறினால், தயங்கினால், மற்றைய திறனாய்வுகள் போல் பின் காலனித்துவமும் அதன் சக்தி வன்மையையும், விசையையும் இழந்து விடும். இழக்கநேரிடும். கோவிந்தனின் புதியதோர் உலகத்தின் கதாநாயகனின் அப்பா, மகன், சங்கருக்குக் கூறிய வார்த்தைகளை பின்காலனிய விளக்கறிஞர்கள் தங்களுடைய பணிக்கான எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்; மகன், தத்துவங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது, நடைமுறைகளை, யதார்த்த நிலைமைகளை, தந்திரோபாயங்களை சரிவரக் கணிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். எமது காட்சியிலிருந்த பலவீனம் இதுதான், பல முற்போக்கு தாபனங்களின் தோல்விக்கு இந்த பலவீனம்தான் காரணம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com