Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
“அச்சத்தில் உறைந்த மேட்டுக்குடிகளின் ஜனநாயகம்”
- சாய்நாத் / தமிழில்: அசோக்

“மாபெரும் முற்றுகைக்கு தயாராகுங்கள்”; “பதட்டமும், குழப்பமும் நிறைந்த இச்சூழலை எப்படி எதிர்கொள்வது?”; “மிகப்பெரும் மாற்றத்திற்கு அணியமாகும் தலித் மக்கள்”; “இன்றைய தினம் செவ்வாய்க் கிழமையை விட மோசமென்றா நினைக்கிறீர்கள்?”; “அச்சமூட்டும் வன்முறை: ஒரு கொடுங்கனவு”

இவையெல்லாம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 50-வது நினைவு தினத்தை முன்னிட்டு மும்பையில் திரண்ட லட்சக்கணக்கான தலித் மக்கள் குறித்தும், கயர்லாஞ்சிப் படுகொலையை ஒட்டி மராட்டியத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்தும் நமது செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தலைப்புச் செய்திகள். அந்த மாமனிதனுக்கு தலித் மக்கள் அஞ்சலி செலுத்துவது இது முதன்முறையன்று. வருடந்தோறும் டிசம்பர்-6 அன்று லட்சக்கணக்கான மக்கள் மும்பையின் சத்திய பூமியில் தங்கள் அஞ்சலியை செலுத்துவதற்கு குழுமுகின்றனர். மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்த வருடமும் அவர்கள் கடலென திரண்டிருந்தனர். ஆனால் நம் ஊடகங்களுக்கு இது கொடுங்கனவாய் காட்சியளித்தது.

கயர்லாஞ்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிரானப் போராட்டம் வன்முறை வடிவமாக உருவெடுத்ததைக் கண்டு கதிகலங்கிப்போன ஊடகங்கள் தலித்துகள் குறித்து இப்போது ஒருவித பதட்டத்துடனே செய்திகளை வெளியிடுகின்றன. “அவர்கள் அமைதி குலைந்து பதட்டமாக உள்ளனர்”, “அவர்கள் கட்டுப்பாடுகளை இழந்துவிட்டார்கள்” என்ற வகையில் ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.
அம்பேத்கர் நினைவுதினத்தை முன்னிட்டு திரளும் மக்களால் பொது அமைதியும், போக்குவரத்தும் சீர்குலைவதாக எழுதும் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் தொடர்ந்து 10 நாட்களுக்கு மும்பைநகரின் போக்குவரத்தை சீர்குலைக்கும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் குறித்து வாய் திறப்பதில்லை. ஆறுதல் அளிக்கும் ஒரே செய்தி: டிசம்பர்-6ம் தேதியன்று மராட்டிய பத்திரிகைகளில் சில அவரின் பணி குறித்து சில செய்திகளை வெளியிட்டன.

ஒரு வரலாற்று ஆளுமையை, ஒரு தேசத்தலைவரை பாரபட்சமாக நம் ஊடகங்கள் அணுகியவிதம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டக்குழுத் தலைவர், நேருவின் அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்டஅமைச்சர், பெண்களின் சுதந்திரத்தை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டப்பிரிவை எதிர்த்து தன் சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தவர். . .

சில பத்திரிகை ஆசிரியர்களை தொடர்ந்து குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள்: “எதன்பொருட்டு வருடந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு மும்பை நோக்கி படையெடுக்கின்றனர்?” மரணமடைந்து 50 வருடங்களுக்குப் பிறகும் பலலட்சம் மக்களால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்படும் தலைவர்கள் வேறுஎவரேனும் உண்டா? எந்தவொரு அரசியல் கட்சியாலும், அமைப்பாலும் திரட்டப்படாமல் தன்னெழுச்சியாக நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?.. 85 வயது முதியவர்கள் கூட கையில் இரண்டு ரொட்டித் துண்டுகளுடன், கடும் பசியுடன், தங்கள் வறுமையை மீறி இந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள எது தூண்டுகிறது?

எந்தப் பலனையும் எதிர்பாராது இசைக்கலைஞர்களும் / கவிஞர்களும் டிசம்பர் 6ம் தேதியன்று உயிர்உருகி அவரைப் பாடித்திரிவது எதற்காக? தம் சொந்த செலவில் பல்வேறு பிரசுரங்களை, புத்தகங்களை பதிப்பு செய்பவர்களுக்கு என்ன நோக்கம்? உலகின் வேறு எந்தவொரு தலைவருக்காவது மக்கள் தம் சொந்தச் செலவில் இத்துணை சிலைகள் நிறுவியதுண்டா? தொடரும் இக்கேள்விகளுக்கான விடை மிக எளிமையானது. லட்சக்கணக்கான இந்த மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கும், அந்த மாமனிதனின் லட்சியக்கனவு அது! இன்றுவரை நிறைவுறாமல் இருக்கும் அந்த லட்சியக் கனவு: “சாதிகள் அற்றதொரு உலகம்”... ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று, தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட தம் இனமக்களின் விடுதலைக்கு பலவகையிலும் போராடிய அந்த புரட்சியாளருக்கு ஏதேனும் ஒரு வகையில் தன் நன்றியை, மரியாதையைத் தெரிவிக்க ஒவ்வொரு தலித் குடிமகனும் விரும்புகிறான்.

மகாராஷ்டிராவில் 1980களுக்குப் பிறகு தலித் மக்கள் மீதான வன் கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 1981-ல் தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து பதிவான வழக்குகள் 604. 1990-ல் இந்த எண்ணிக்கை 885ஆகவும், 2000-ல் 1034 ஆகவும் உயர்ந்துள்ளதாக அரசு அறிக்கை தெரிவிக்கின்றது. அரசு உண்மையை மறைத்து வெளியிட்ட அறிக்கை இதுவென்றால், உண்மையில் தலித் பெண்கள் மீதான வன்முறை எண்ணிக்கையில் இதைவிட அதிகமாகவே இருக்கும். 1990-ல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (POA) மூலமாக குறைவான வழக்குகளே பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும், அச்சமயத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிவசேனா - பாரதீய ஜனதா கட்சி கூட்டணியானது, பல்வேறு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவேண்டிய வழக்குகளை மூடிமறைத்தன என்பதுவே உண்மை.

இந்தியக் குடியரசுக் கட்சியும், தலித் பேந்தர் ஆப் இந்தியா (Dalit Panthers of India) அமைப்பினரும் வலிமையாக இருந்த கடந்த காலங்களில் மகாராஷ்டிராவின் தலித் மக்கள் நிலப் பிரபுத்துவ சுரண்டலை எதிர்த்தும், தீண்டாமையை எதிர்த்தும் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால் காலப்போக்கில் சூழ்நிலை மாறியது. இந்தியக் குடியரசுக் கட்சியும், அதன் தலைவர்களும் வெகுஜன அரசியல் கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டனர். தலித் சிறுத்தைகள் அமைப்பும் காலப்போக்கில் சிதைவிற்கு உள்ளானது. விளைவு, தலித்துகளுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரிக்க துவங்கின. 1960-களில் இந்தியக் குடியரசுக் கட்சிக்கு மிகப்பெரும் வாக்கு வங்கியாக இருந்த அகோலா மாவட்டத்தில், சென்ற ஆண்டு 20 தலித் குடும்பங்கள் சாதி வன்முறைக்கு பலியாயின.

குடியரசுக் கட்சியின் பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியால் உள்வாங்கப்பட்டனர். தலித்துகளின் ஒற்றுமை தகரத் தொடங்கியது. இதன் இழப்புகள் அனைத்துத் தளங்களிலும் எதிரொலித்தது. புதிய பொருளாதாரக் கொள்கை நடை முறைப்படுத்தப்பட்டபின் பொதுத்துறை / அரசுத்துறைகளில் குறையத்தொடங்கிய வேலை வாய்ப்பால் தலித்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ‘Timis of India’ பத்திரிகை தரும் தகவலின்படி தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 13 லட்சம் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன.

கயர்லாஞ்சி நிகழ்வு அதைத் தொடர்ந்த எதிர்ப்பு கலகங்கள் குறித்து நமது செய்தி ஊடகங்கள் மிகுந்த கயமையோடு செய்திகளை வெளியிட்டன. கயர்லாஞ்சி நிகழ் விற்கும் சாதிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், ஒழுக்கக்கேட்டால் தலித்பெண்கள் ஊர்மக்களால் தண்டிக்கப்பட்டன என்றும் உண்மைகளை திரித்து செய்திகளை வெளியிட்டன. ‘நிவாரணத் தொகை’ என்ற பெயரில் அரசை மிரட்டி பணம் சுருட்ட நினைக்கும் சதித் திட்டமாகவும், நக்சல்களால் வழிநடத்தப்படுவதாகவும் கயர்லாஞ்சி எதிர்ப்புக் கலகங்கள் சித்தரிக்கப்பட்டன. ஆனால் இதே ஊடகங்கள் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களை கதாநாயகர்கள் போல சித்தரித்தன. (உண்மையில், இந்த கதாநாயகர்களின் உளவியலானது இனவெறிக்கு மிக அருகாமையில் இருப்பது குறித்து இந்த ஊடகங்களுக்கு யாதொரு கவலையும் இல்லை.)

கயர்லாஞ்சி எதிர்ப்புக் கலகங்கள் எவ்வித தூண்டுதலும் இன்றி வெடித்ததன் காரணமாகவே அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த தலித் தலைவர்களின் சம்மதத்திற்காகவும் இக்கலகம் காத்துக் கிடக்கவில்லை. கோபம் கொண்ட தலித்துகள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்தபின்னரே பல தலைவர்கள் மறுநாள் ஓடிவந்தனர். அமைப்பு ரீதியான போராட்ட வடிவங்களை இந்த மக்கள் துக்கி எறிந்தனர்.
வியாபாரிகள், தினக்கூலிகள், ஆசிரியர்கள், வேலையற்றவர்கள், நிலமற்றவர்கள் என தலித் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் தங்களின் தன்மான உணர்ச்சியிலிருந்தும், உணர்வு எழுச்சியிலிருந்தும் வெளிப்படுத்திய கோபத்தைக் கண்டு தலித் தலைவர்களே மிரண்டு போயினர்.

காவல்துறை இக்கலகத்தை நக்சலைட்டுகளுடன் இணைத்துப் பேசினாலும், இத்தகைய ஒருங்கிணைவு மிக்க கலகத்தை சாத்தியப்படுத்தும் வகையில் மாநிலம் முழுமையும் அந்த அமைப்பு வேர் ஊன்றவில்லை. இதே மகாராஷ்டிராவில் இந்தியாவின் பிற பகுதிகளை விட அதிகமான விவசாயிகள் வறுமை, சுரண்டலின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நெடுங்காலமாக நீடித்துவரும் அவர்களின் இயலாமையும் கோபமும் உள்ளீடாக வெடித்து தற்கொலையில் முடிகின்றது. தலித் மக்களின் கோபமும், தன்னெழுச்சியும் கலகத்தில் முடிகின்றது. தங்கள் விடுதலைக்காக இந்த மக்கள் எதற்கும் துணிந்துள்ளனர்.

இதுவே இங்குள்ள மேட்டுக் குடிகளை, அதன் நலன்காக்கும் ஊடகங்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. தலித் மக்களின் தன்னெழுச்சி மிகுந்த விடுதலைக்கான போராட்டமும், அணிசேர்க்கையும் தரும் அச்சத்தை விட இத்தனை காலம் தாங்கள் தலித் மக்களை சுரண்டி பெற்ற தங்கள் வசதிகள் இனி பறிபோய்விடுமோ? என்ற அச்சமே இங்குள்ள மேட்டுக் குடிகளை நடுங்க வைக்கிறது. ஆம்! மேட்டுக்குடிகளின் ஜனநயாகம் அச்சத்தில் உறைந்துள்ளது.

நன்றி: The Hindu 8/12/2006



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com