Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
குஜராத்தின் இந்து பாசிசம்: இந்திய ஊடகங்கள் தோல்வியடைந்த இடம்
- ஆவணப்பட இயக்குநர் ராகேஷ் சர்மா

சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஈழத்திலிருந்து தமிழ்நாட்டிற்கும் பிறகு பர்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கும் புலம் பெயர்ந்துள்ள இறையியல் பேராசிரியர், மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சில காலம் பணி புரிந்தவர், பின்னைக் காலனிய நோக்கில் கீழை நாட்டு மக்களின் கிறித்தவ வாசிப்புகளுக்கு ஊடாக வெளிப்படும் எதிர்ப்புச் சிந்தனைகளை அடையாளப்படுத்தி வருபவர். விளிம்பு நிலை கிறித்தவங்கள் குறித்து இவரது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் பல வெளிவந்துள்ளன.

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மையமாகக் கொண்ட ஆவணப்படம் தான் ‘இறுதி தீர்வு’ (ஃபைனல் சொல்யுஷன்). இந்திய அரசாங்கத்தின் தணிக்கைத் துறையால் தடை செய்யப்பட்டு, தொடர் போராட்டங்களுக்குப் பிறகு தான் இந்தி ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.ஜே.பி. கட்சியின் மொத்த அஸ்திரத்தை உலுக்கும் இந்தப் படத்தின் உள்ளடக்கம் தான் படம் தடை செய்யப்பட காரணம். இருப்பினும் அக்டோபர் 2004ல் படத்தின் மீதான தடை விலக்கப்பட்டது. இந்தத் தடைகளை மீறி நாடு முழுவதிலும் படம் திரையிடப்பட்டது. கையெழுத்து இயக்கங்கள், மற்றும் தடையை எதிர்த்து 10,000த்திற்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் மக்கள் மத்தியில் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இந்த இலவச பிரதிகளை விநியோகிக்கும் பொழுது அதன் இயக்குனர் ஒரு விசித்திர நிபந்தனையை விதித்தார்.

ஒரு பிரதியை நீங்கள் ஐந்து பிரதிகளாக பெருக்கி விநியோகித்தால் - உங்களுக்கு இலவசமாக குறுந்தகடு வழங்கப்படும். இது ஆவணப்பட உலகிற்கு மிகவும் புதிய அனுபவம். இந்த ஆவணப்படம் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதியை வெளியிட ராகேஷ் சர்மா டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மதுரை நகருக்கு வந்திருந்தார். எட்டு இடங்களில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. எல்லா நிகழ்வுகளிலும் நீண்ட கேள்வி - பதில் அமர்வு தவறாது இடம் பெற்றது.

திரையிடல்கள், கல்லூரி வளாகங்கள், டீக்கடைகள், ரயில் நிலையம், ரோட்டோர இட்லிக் கடைகள், விடுதி அறை, டவுன்ஹால் ரோட்டின் நெடுகிலும் எனத் தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல்கள், ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. உரையாடலின் சில பகுதிகள் இங்கே...

1986ல் ஷ்யாம் பெனகலிடம் உதவி இயக்குனராக என் திரைப்பட வாழ்வை துவக்கினேன். அப்பொழுது அவர் தூர்தர்ஷனுக்காக ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’வை இயக்கிக் கொண்டிருந்தார். அது 56 வாரங்கள் தொடராக ஒளிபரப்பட்டது. அங்கு தான் இந்தக் காட்சி ரூபமான ஊடகத்தின் சகல பரிணாமங்களை உற்று அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. ஷ்யாமுடனான உரையாடல்கள் என் மனதில் பலவிதமான தகவமைவுகளை ஏற்ப்படுத்தியது. ஜாமியா மீலியா பல்கலைக் கழகத்தில் ஊடகம் தொடர்புடைய படிப்பை நான் முடிக்கவில்லை. அந்தப் படிப்பு இனி எனக்குத் தேவை இல்லை என்பதை ஷ்யாம் பெனகல் உடன் இருந்த காலம் தெளிவுபடுத்தியது. பின்பு தனியார் தொலைக்காட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினேன்.
இருப்பினும் குஜராத் படுகொலைகள் குறித்த இந்த ஆவணப்படம் தான் வெளி உலகுடனான நேரடித் தொடர்பும், விவாதமும் ஏற்பட துவக்க புள்ளியாக அமைந்தது.

அரசாங்கம், காவல்துறை, உளவுப் பிரிவுகளின் கடும் நெருக்கடிகளை தாண்டித்தான் இந்த படம் எடுக்கப்பட்டது. படுகொலைகள் குறித்த சம்பவக் கோர்வைகளுடன் பலர் உரையாடுவதை நான் தொலைகாட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். இருப்பினும் நான் அங்கு உறைந்த நிலையில் கிடந்த மனிதர்களை நோக்கிச் சென்றேன்.
இந்த 2002 குஜராத் படுகொலைகளை பொறுத்த வரையில் இந்திய ஊடகங்கள் சந்தித்த படுதோல்வி என்றே கூற வேண்டும். பத்திரிகையாளர்கள் அனைவரும் மூர்க்கமாக தாக்கப்பட்டார்கள், காமிராக்கள், ஊடகக் கருவிகள், வாகனங்கள் சாலைகளில் நொறுங்கிக் கிடந்தன. அப்பொழுது ராஜ்தீப் என்.டி.டி.வியில் பணியாற்றினார். மோடியை நேரடி ஒளிபரப்பில் “உங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 50பேர் தீவைத்து கொளுத்தப்படுகிறார்கள், நீங்கள் இங்கே மகுடி வாசிக்கிறீர்களா?” என்று கேட்டு அங்கிருந்து சென்ற ராஜ்தீப் சர்தேசாயை மோடியின் பரிவாரங்கள் மூர்க்கமாகத் தாக்கினார்கள். அவர் உயிர் பிழைத்ததே ஆச்சர்யம். பர்காதத் அய் அடித்து, நிர்வாணப்படுத்துங்கள் என ஹிந்து பாசிஸ்டுகள் உரக்க கத்தியது என்காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இங்கிருந்து சென்ற பலரும் பலகாலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார்கள். குஜராத் ரத்தகறை போல் மனங்களில் கசப்பாகப் படிந்து கிடந்தது.

காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாப்ரி அவரது இல்லத்தில், அவர் அடைக்கலம் அளித்த 38 சகோதர-சகோதரிகளுடன் கொளுத்தப்பட்டார். அந்த நேரம் பகைவர்களை அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஒரு வேளை அகமதாபாத் நகரத்தின் நரோடா பாட்டியாவில் முகமத்கய்ப் வசித்திருந்தால் அவரது கதி என்னவாகயிருந்திருக்கும். பரோடா நகரத் தெருக்களில் அவர்களது கைகளில் இர்பான் பதான் அல்லது ஜாகிர்கான் சிக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? குல்பர்கா குடியிருப்பில் சானியா மிர்சா வசித்திருந்தால்? உஸ்தாத் பிஸ்மில்லாகான் பால்டி பகுதியில் வசித்திருந்தால்? இன்னும் இந்தப் பட்டியலில் உங்கள் மனதுக்கு தோன்றுகிறவர்களை இணைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் ஒரே வகையான அணுகுமுறைதான் கிடைத்திருக்கும்.

நம்நாட்டு கிரிக்கெட் அணி தீட்டு கழிக்கப்பட்டு ஹிந்து அணியாக உருமாறியிருக்கும்.
திரைப்படப் படப்பிடிப்பு நிகழ்ந்த காலத்தில் ஹிந்து பாசிஸ்ட் குண்டர்களின் குரலும், ப்ரவீன் டகோடியாவின் குரலும் ஒன்று போல ஒலித்தது. சமயங்களில் அந்த குரல்கள், உமாபாரதியையும், சாதவீ ரீத்தாம்பராவை போல் கேட்டது. உற்றுக் கேட்டால் அது அத்வானியின் குரலாக வாஜ்பாயின் குரலாகவும் கேட்டது. குஜராத் வெளியில் ஒலித்தது பல குரல்கள் அல்ல ஒற்றைக் குரல். இஸ்லாமியர்களை கொன்று குவிக்கத் துடிக்கும் மரண ஓலத்தின் குரல்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் தான் கிடந்தார்கள். மொத்த காவல்துறையும் அவர்களின் விரல் அசையும் திசையில் தான் ஓடியது. அடுத்த தேர்தல் பிரச்சாரத்தில் அத்வானி இந்த தேர்தலில் கோத்ராவைப் பற்றி பேசப்போவதில்லை என்கிறார். அவருக்கு அடுத்து பேசிய பி.ஜே.பி. எம்.பி சோலாங்கி - இந்தத் தேர்தல் வளர்ச்சி பற்றியதல்ல - கோத்ரா தான் இப்பொழுது பிரதான விஷயம் என்கிறார். ஹிந்துத்துவம் தேவைக்கேற்ப ஒற்றைக் குரலிலும், பல குரலிலும் ஒலிக்கும். இவைகளைத் தாண்டி மக்கள் நீதி மன்றங்களில் ஆஜராகி கலவரங்கள் குறித்த தனது அபிப்ராயங்களை பகிர்ந்து கொண்டவர் ஹரேன் பாண்டியா. இவர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவர். சில மாதங்களில் அவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். குஜராத் மாய நகரமாக மாறி வருகிறது.

என்.டி.டி.வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பல நாட்கள் குஜராத் மாநிலத்தில் நிறுத்தி வைத்தார்கள். அதேவேளையில் அங்கு வெளியான நாளிதழ்கள் “ரயில் பெட்டியிலிருந்து 60 ஹிந்து பெண்கள் கடத்தல்” போன்ற செய்திகளை வெளியிட்டன. இது போன்ற செய்திகள், இஸ்லாமியப் பெண்களின் மீது பாலியல் வக்கிரங்கள் புரிய தூண்டுகோலாக அமைந்தன. இது போன்ற கலவர காலங்களில் வெளியிட வேண்டிய தலைப்புச் செய்திகளை ஏற்கனவே தயாரித்து வைத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. இனப்படுகொலைகள் நிகழ்ந்த பின்பு அந்த குஜராத் நாளிதழின் சேவையை பாராட்டி நரேந்திரமோடி கைப்பட கடிதம் எழுதினார். மகாத்மா காந்தி கூட அச்சத்துடன் வேறு மாநிலம் நோக்கி நகர்த்திருப்பார்.

* * * *
இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கு முன்னால் நான் என் மனதில் சில தீர்மானங்களை திடமாக வரையறுத்துக் கொண்டேன். நான் இந்தப் படத்தை எதற்காக எடுக்கிறேன்? என் படத்தின் பார்வையாளர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான சில விடைகள் கிடைத்த பிறகு தான் களத்துக்குச் சென்றேன்.

மீண்டும் மீண்டும் அரசியல் விழிப்பு பெற்ற போராளிகள் மற்றும் பெரு நகரத்து மேட்டுக் குடியினரை மட்டுமே நம் பார்வையாளர்களாக வைத்திருந்தால், படங்கள் எடுப்பதில் பயன் இல்லை. அரசியல் விழிப்புடனான போராளிகள் களப் பணிக்குச் செல்ல வேண்டும். அவர்களை அரங்குகளில் தொடர்ந்து வைத்திருப்பது வீண்வேலை. மேட்டுக் குடியினர் படத்தை பார்த்துவிட்டு உங்கள் முதுகை தட்டி சபாஷ் - பிரமாதமான முயற்சி என்பார்கள். ஞாபகம் வைத்திருங்கள் இவர்கள் தேர்தலில் வாக்குகள் கூட போடாதவர்கள்.
அதே வேளையில் உங்கள் ஆவணப்படம் எதிர்முகாமின் தலைவர் முதல் தொண்டன் வரை சென்றடைய வேண்டும். அங்குள்ள ஒவ்வொருவரின் மன சாட்சியையும் அது உலுக்க வேண்டும். வி.ஹெச்.பி. யின் வன்மமான அஜன்டாக்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்கிற வெறியுடன் தான் களமிறங்கினேன்.

நம் நாட்டில் 80ரூ மனிதர்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்காத மௌன நிலையில் உள்ளவர்கள். இவர்களையும் நாம் சென்றடைய வேண்டியது அவசியம். விபூதியை பூசிக் கொள்வதோ, தொழுகைக்குச் செல்வதோ தவறான காரியம் அல்ல. ஆனால் விபூதி பூசிக் கொள்பவர்களை ஆர்.எஸ்.எஸ்காரர் என்றும், தொழுகைக்குச் செல்பவரை இஸ்லாமிய அடிப்படைவாதியாக கருதும் போக்கு இங்கு இயக்கங்கள் மத்தியில் காணப்படுகிறது. இது நகைப்பிற்குரியது. கண்டிக்கத்தக்கது. மாற்றம் பெற வேண்டியது. பி.ஜே.பிக்கு வாக்களித்தவர்களை கூட நாம் உரையாடல்களின் மூலம், திரையிடல்களின் மூலம் மனமாற்றம் செய்திட இயலும். நாம் இன்னும் வீச்சாக சிவில் சமூகத்தில் ஊடுருவ வேண்டும்.

* * *

படம் வெளியிடப்பட்டு 26 மாதங்கள் தொடர்ந்த பயணத்தில் தான் அலைந்து கொண்டிருக்கிறேன். 20ற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. இருப்பினும் மக்கள் மத்தியில் இன்னும் தொலைதூரம் செல்ல வேண்டியது உள்ளது. கன்னடம், குஜராத்தி, ஹிந்தி, தமிழ் என நான்கு மொழிகளில் வெளியானது மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை 35,000 குறுந்தகடுகள் விநியோகிக்கப்பட்டு உள்ளன. இதில் 19,000 குறுந்தகடுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டு உள்ளன. பிப்ரவரி மாதம் குஜராத்தி மொழியாக்கம் வெளியிடப்படும். தினமும் தொலைபேசிகள், மின்னஞ்சல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. அமெரிக்காவின் 20 நகரங்களில் படம் திரையிடப்பட்டது.

ஏறக்குறைய எல்லா திரையிடல்களிலும் வி.ஹெச்.பியினர் வந்து கலாட்ட செய்தார்கள். துண்டு பிரசுரங்கள் வெளியிட்டார்கள். ஏராளமான கேள்விகளை கேட்டார்கள். இந்தப் படம் பொய் சொல்கிறது, இறந்த இஸ்லாமியர்களை போலீஸ் தான் கொன்றது என கோஷம் போட்டார்கள். “நீங்கள் ஏன் காஷ்மீர் பண்டிட்களின் நிலை குறித்து ஆவணப்படம் எடுக்க வில்லை” என வன்மத்துடன் ஆக்ரோசமாக கேட்டார்கள். இந்த கேள்விகள் எல்லாம் ஆவணப்படம் இயங்குகிறது என்பதை புலப்படுத்துகிறது. குஜராத்தி மொழியாக்க பிரதி எழுப்பவிருக்கும் கேள்விகளுக்காக காத்திருக்கிறேன்.

*மதுரையில் நடந்த 8வது ஆவணப்பட- குறும்பட விழாவில் தான் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படம் தமிழில் வெளியிடக் காரணமானவர் ஆர்.பி.அமுதன். அவர்தான் இந்தத் திரைப்படவிழாவை மதுரையில் நடத்தி வருகிறார். ‘ஃபைனல் சொல்யுசன்’ படத்தை தமிழில் மொழியாக்கம் செய்தவர் நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக ‘வானவில்’ எனும் பெயரில் பள்ளி நடத்தி வருபவரும்; குறும்பட இயக்குனருமான ரேவதி அவர்கள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com