Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
நீங்கள்+நான்+நாம் அல்லது வாட்: சிறுவணிகர்களின் மதிப்பைக் கூட்டுமா?
ராஜசேகரன்

நீங்களும் நானும் உலகமயமாக்கலின் கோரப்பிடியில் பலமாய் சிக்கிக் கொண்டுள்ளோம். நீங்கள் நினைத்தாலோ அல்லது நான் நினைத்தாலோ அதிலிருந்து மீளமுடியுமா என்றே தெரியவில்லை. மெத்தப் படித்த மேதாவிகள் சிலபேர் அவ்வப்போது அயல்நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார்கள். உலக வர்த்தகம், உலக மயம், தாராளமயம், தனியார் மயம் இவை குறித்த கருத்தரங்குகளில் உட்கார்ந்திருந்து, சீட்டை தேய்த்து விட்டு தாயகம் திரும்பியவுடன் தாங்கள் கற்றுக் கொண்டதை பரிசோதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இப்படித்தான் ‘வெளிநாட்டுப் பயணம்’ என்று சொல்லி முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் சென்றார். உலகமயமாக்கலுக்கு ஆதரவான ஒப்பந்தங்களில் பலமுறை கையெழுத்திட்டார். நீங்களும் நானும் விற்கப்பட்டோம். யார் யாரோ கட்டளையிடுகிறார்கள்? யார் யாரோ நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள்? நாம் கை கட்டி வாய் பொத்தி நிற்கிறோம். அதன் பலனை வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வடிவங்களில் கண்டும் வருகிறோம்.

உலக வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் திணிக்கப்பட்ட ‘வாட்’ எனப்படும் மதிப்புக் கூட்டு வரி இந்தியாவிற்கும் இதனால் தான் வந்தது. இதைத் தொடர்ந்து 2003-ல் அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் முதலில் பிஜேபி ஆளும் மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு தற்போது தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

நாட்டை விற்றுத் தின்பதில் நமது அரசியல் கட்சிகளுக்கு நிகர் வேறெவருமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், பிஜேபி அரசு கொண்டு வந்த போது, எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சி, ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நிதியமைச்சர் சிதம்பரம் தயவுடன் உத்திரப்பிர தேசம், தமிழ்நாடு தவிர்த்த இதர 28 மாநிலங்களிலும் ‘வாட்’ வரிவிதிப்பை கட்டாயமாக்கியது. சென்ற ஜெய லலிதா ஆட்சியில் அமுல்படுத்தாமல் காலம் தாழ்த்தப்பட்ட இந்த வரிவிதிப்பு முறை கருணாநிதி தயவால் தமிழகத்தில் அமுலாக்கப்பட்டுள்ளது. நாட்டை விற்றுத் தின்பதில் பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், கோடீஸ்வரர்களின் நலன் கருதிக் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் சிறுவணிகர்களின் வயிற்றில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

‘பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும்’ ஆட்டும் தந்திர வேலையை மத்திய அரசு சில நேரங்களில் செய்யும். அந்த வகையில் சில்லறை வர்த்தகம், சிறுவணிகர்கள், நடுத்தர வணிகர்களின் மடியில் கை வைத்து ‘வாட்’ வரிவிதிப்பை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. ‘குறுந்தொழில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கான சட்டத்தையும் கடந்த அக்டோபரில் கொண்டு வந்திருக்கிறது.

‘வாட்’ எனப்படும் இந்த வரிவிதிப்பு முறையை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் முன் இது போன்ற சிறுவணிகர்களுக்கான வளர்ச்சி சட்டங்களின் கோரமுகங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

தற்போது இயற்றப்பட்டுள்ள சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கான சட்டத்தில் இத்தனை ஆண்டுகளாக சிறு வணிகர்களால் எழுப்பப்பட்ட குரல்களெல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டு இச்சட்டத்திற்கான இலக்கணங்கள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக, ‘தொழிலாளர் எண்ணிக்கை, பற்று வரவு’ என்பது போன்ற அடிப்படை விஷயங்களை விட்டு விட்டு ‘மூலதனத்தை’ மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சிறுதொழில் சங்கங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளன. இதே வேளையில் குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்கு வழங்கப்படும் முன்னுரிமைக் கடன் கடந்த சில ஆண்டுகளில் 18ரூ லிருந்து 8ரூமாக குறைந்துவிட்டதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிப்பதையும் நாம் அறிய முடிகிறது.

“98ரூ உள்ள குறுந்தொழில், சிறுதொழில்களுக்குச் சட்டம் என்ற பெயரால் சுமார் 2000 முதல் 3000 வரை வலுவான தொழிற்சாலைகளுக்குப் பலன் தரும் ஒரு சட்டம் இயற்றப்படுவது வேடிக்கையானது. இதனால் சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் நசிந்து விடும்” என்கிறார் சிட்கோ மின்னனு வளாக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி.

மேலும் நம்மையெல்லாம் உலக மயமாக்கல் பிடிக்குள் தள்ளிவிட்ட அமெரிக்கா தனது நாட்டு சிறு தொழில் விற்பன்னர்களுக்கென்று தெளிவான சட்டங்களை உருவாக்கி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் Small Business administration Act சட்டத் தின்படி, ‘500 தொழிலாளர்கள் அல்லது ஆண்டுக்கு 6 மில்லியன் டாலர்கள் (ரூ.28 கோடி) விற்பனை; இதில் எது பொருந்துமோ அவைகள் தான் சிறுதொழில் நிறுவனங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.
தனது சொந்த நாட்டு நலனில் / சிறுதொழில் வர்த்தகத்தில் அக்கறை கொண்ட அமெரிக்கா தனக்கு சாதகமான எத்தனையோ சட்டங்களை இதைப்போல வகுத்திருக்கிறது. இதையெல்லாம் நமது மத்திய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள் ளாமல் அந்தந்தப் பகுதி பிராந்திய மாநிலத்தின் நிதியாதாரமான விற் பனை வரியை மொத்தமாக அள்ளப் பார்ப்பது அவர்களது அற்பத்தனப் புத்தியையே காட்டுகிறது.

‘உள்நாட்டில் சீரான ஒரு பொதுச் சந்தையினை உருவாக்கி, அதன் மூலம் இந்திய உற்பத்தியாளர்கள், (பெரும் முதலாளிகள்) அவர்களின் உற்பத்திச் செலவினைக் குறைத்து, உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளில் போட்டியிடுவதற்கு வகை செய்யவே இந்த மதிப்புக் கூட்டுவரி கொண்டு வரப்படுவதாக’ அதன் குறிக்கோளில் சொல்லப் பட்டிருக்கிறது.

நம்மவர்கள் மொழியில் இதைச் சொல்வதானால்,

‘மாநிலங்கள் முழுமைக்கும் ஒரே வரி விதிப்பை உருவாக்கி, ஒரே இந்தியாவாக கட்டியெழுப்பி, ஒரேயடியாக உலக வர்த்தக நிறுவனத்திடம் விற்றுவிடுவது’. இப்போது புரிகிறதல்லவா? இவர்களது நோக்கம். ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம் என்பது போன்ற கற்பிதங்களின் பின்னணியில் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிகள் நாமெல்லாம் அறிந்ததே. அந்த வகையில் தற்போது இந்தியா முழுமைக்குமான ஒரேவரி விதிப்பு முறையும் கூட்டு சேர்ந்திருக்கிறது. 2003ல் பல்வேறு மாநிலங்களில் வாட் வரி அமுலாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக மாநில அரசுகள் நிதிநெருக்கடியில் தவித்து வருகின்றன. இந்நிலையில் வருடத்திற்கு ரூபாய் 5000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என்ற நிலையிலும் மதிப்புக் கூட்டுவரியை கருணாநிதி அமுலாக்கம் செய்திருப்பது அவரது சிதம்பர விசுவாசத்தை காட்டுவதாய் அமைந்துள்ளது. ‘மாநில சுயாட்சி’ பற்றிப் பேசியவர்கள் இன்றைக்கு மாநில அரசின் கஜானாவை காலி செய்யும் விற்பனை வரியை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். கல்வி போன்ற அடிப்படை விஷயங்கள் மத்திய அரசின் பொதுப்பட்டியலுக்கு போனதன் விளைவுகளை நாம் இன்றுவரை அனுபவித்து வருகிறோம். இதேநிலை இன்று வரிவிதிப்பிற்கும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் கருத்துக்கள் சிறுவணிகர்களுக்கு பலமூட்டுவதாய் அமைந்துள்ளன. ‘மற்ற துறைகளை மத்திய அரசு எடுத்துக் கொண்டது போல மாநில அரசின் உரிமையான விற்பனை வரி உரிமையை விட்டு விடமுடியாது. மத்திய அரசு சிறுவணிகர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல் உற்பத்தியாளர்களுக்கும் பெரும் தொழில் அதிபர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த வரி விதிப்பு முறை கொண்டு வந்துள்ளது. இது பெருமுதலாளிகளின் வணிகக் குழு மங்களுக்கு சாதகமாக அமையுமே தவிர சிறுவணிகர்களின் மதிப்பைக் கூட்டாது” எனும் வார்த்தைகள் உண்மையே.

வாட் விரிவிதிப்பு முறை தமிழகத்தில் அமுலாக்கப்படும் நிலையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் போன்ற பெருமுதலாளிகளின் நிறுவனங்கள் வரவேற்பதையும், சிறு வணிகர்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான ‘தமிழக வணிகர் சங்கப்பேரவை’ முழு மூச்சாக எதிர்ப்பதையும் நாம் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பின்படி, சிறுதொழில்களுக்கான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.10 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.25 லட்சமாக அது உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறுவணிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் குறுந்தொழிலுக்கான ஆண்டு விற்பனை ரூ.3.கோடியாகவும் சிறுதொழிலுக்கு ரூ.30கோடி, நடுத்தரத் தொழிலுக்கு ரூ.300 கோடி என வரையறை செய்து அதை தொழில் வளர்ச்சிக்கான சட்டத்தின் விதிகளில் சேர்க்குமாறும் குறுவணிகர்கள் சார்பில் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எது எப்படியோ சிறுவணிகர்களின் தொழிலில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது தமிழக அரசு. மதிப்புக் கூட்டு வரி அமலாகுமானால் பொருட்களின் விலை உயரும். அத்தியவாசியப் பொருட்கள் விலை உயருமானால் அம்மையாருக்கு செல்வாக்கு உயரும். அம்மையாருக்கு செல்வாக்கு உயர்ந்தால் அய்யாவுக்கு என்ன நேரும்? என்பதை அவரே புரிந்து கொள்வார் என்று நம்புவோம்

குழப்பங்களின் மொத்த உருவம்: வாட்

1. கொள்முதல் மீது செலுத்திய வரியை, விற்பனை மீது உரிய வரியிலிருந்து கழித்துக் கொண்டு மீதியை செலுத்தும் முறையே மதிப்புக் கூட்டுவரி.

2. பொது விற்பனை வரிமுறையில் இருந்த வரி, உபரி வரி, கூடுதல் விற்பனை வரி என்ற முறை மாறி ஒவ்வொரு நிலையிலும் மதிப்புக் கூடும் தொகைக்கு மட்டும் விரி விதிக்கப்படும்.

3. வணிகர்கள் 1ரூ, 4ரூ, 12.5ரூ ஆகிய மூன்று வரி விகிதங்களில் மதிப்புக்கூட்டு வரி செலுத்த வேண்டும்.

4. மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் நிபந்தனைகள் அற்ற சுயவரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும்.

5. தமிழ்நாடு பொது விற்பனை வரிச்சட்டம் 1959ன் கீழ் பதிவு செய்துள்ள வணிகர்கள் அனைவரும் வரி
செலுத்துவோர் அடையாள எண் TIN (Tax Payer Indentification Number) பெற்றுக் கொள்ள வேண்டும்.

மதிப்புக் கூட்டு வரி

1. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாகவும் சுமார் 80 பாராளுமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் இன்னும் மதிப்புக் கூட்டுவரி அமலாக்கம் செய்யப்படவில்லை. இதற்கு மிக முக்கியக் காரணம் வரியின் சிறுகுறு வணிகர்கள் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினரே. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஓட்டுவங்கி இவர்கள் தான். மேலும் 2007-இல் சட்டமன்றத் தேர்தல் நடை பெற இருப்பதும் அமலாக்கப்படாமல் இருப்பதன் மிக முக்கியக் காரணம்.

2. இந்தியா முழுமைக்குமுள்ள சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் பெரும்பாலும் அந்தந்த பிராந்தியப் பகுதி தலித், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே. தங்களது சிறு உற்பத்திப் பொருளை பக்கத்து மாநிலங்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்தே அவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பக்கத்து மாநிலத்துக்கு ஒரு பொருளை கொண்டு சென்று விற்றால் மதிப்புக்கூட்டு வரியின் கீழ் வரி செலுத்த வேண்டும் என்று அவர்களை பயமுறுத்துவது அவர்களை தொழிலை விட்டுவிட வழி ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.

3. உலகமயமாக்கலின் அடுத்த கட்ட வடிவம் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக உருப்பெற்று இருக்கிறது. நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட மாவட்டங்களும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்கள் இரையாகி உள்ளன.

4. மதிப்புக்கூட்டு வரி விதிப்புக்கான உயர்மட்டக்குழுத் தலைவராக மேற்கு வங்க அரசின் நிதித்துறை பொறுப்பாளர் அமர்ந்திருப்பதும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ் டாடா தொழிற் குழுமத்திற்கு விவசாயிகளின், மேதா பட்கர் போன்ற சுற்றுச் சூழல் வாதிகளின் எதிர்ப்பையும் மீறி தாரை வார்த்துக் கொடுப்பதன் மூலம் இடது சாரி அரசுகள் (இடதுசாரிகள் அல்ல) உலகமயத்திற்கு விலை போகியுள்ளதை உணர முடிகிறது.

5. மதிப்புக் கூட்டு வரி மூலம் எல்லாப் பொருட்களுக்கும் ‘பில்’கேட்டு வாங்கும் கலாச்சாரம் பெருகும் என்பது உண்மை தான். ஆனால் கணக்கே காட்டாமல் கள்ளச்சந்தையில் வியாபாரம் செய்யும் பெரும் தரகு முதலாளிகளை இந்த அரசுகள் என்ன செய்யப்போகின்றன?




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com