Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
அம்பேத்கரின் பொருளியல் சிந்தனை
-ந. முத்துமோகன்

1915ஆம் ஆண்டு நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் அவரது முதுகலை (M.A) பொருளாதாரப் பட்டத்திற்கான ஆய்வேட்டைச் சமர்பித்தார். “கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகமும் நிதியும்” (Administration and Finance of the East India Company) என்பது அந்த ஆய்வேட்டின் தலைப்பு. அம்பேத்கருக்கு அப்போது 24 வயது. அச்சில் சுமார் 50 பக்கங்களுக்கும் குறைவானது அந்த ஆய்வேடு. மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள அம்பேத்கர் தொகுப்பு நூல்களில் ஆறாவது பகுதியில் (Vol.6) அம்பேத்கரின் ஆய்வேடு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா பிரிட்டனை விட முற்போக்கானது என்ற ஒரு கருத்து நிலவிய காலச் சூழலில் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கா காலனியாக இருந்து விடுதலை அடைந்த நாடு. அது விடுதலைக்காக இங்கிலாந்துடன் மிகப்பெரும் போர் ஒன்றை நடத்த வேண்டியிருந்தது. அமெரிக்கா எந்தக் காலத்திலும் காலனிகளை வைத்துக் கொள்ளாது, அது எப்போதுமே விடுதலைக்குப் போராடும் நாடுகளை ஆதரிக்கும் என்றொல்லாம் சொல்லப்பட்ட காலம் அது. எனவே அம்பேத்கரின் ஆய்வு முற்போக்கான ஓர் அரசியல் பின்புலத்தில் நடந்தது என்ற தோற்றமளிக்கலாம். இருப்பினும் ஆங்கிலேய - அமெரிக்க உறவுகள் தொப்புள் கொடி உறவுகளாகும்.

அமெரிக்க சுதந்திரப் போர் நடந்து ஒரு நூறு வருடத்திற்கு மேல் கழிந்த நிலையில், அமெரிக்க முதலாளியம் பல்வேறு முறைகளில் புதுக்காலனிய அரசியலை நடத்தத் தொடங்கிய காலமாகவும் அது அமைந்திருந்தது. அமெரிக்க நாட்டினுள்ளேயே கருப்பின மக்கள் வெள்ளையரால் நிறவெறிக்கு உட்படுத்திய நிலைமைகளும் இருந்தன. ஆசியருடைய நிலையும் கருப்பர் நிலையை ஒத்ததே. அம்பேத்கருக்கு இவையெல்லாம் தெரியாத விஷயங்களல்ல. எனவே அம்பேத்கர் தனது ஆய்வேட்டில் கிழக்கிந்தியக் கம்பெனி குறித்த கருத்துக்களை முழுவதும் சுதந்திரமாக வெளியிட்டிருப்பார் என்று எதிர்பார்ப்பது சரியாக இருக்காது.

அம்பேத்கரின் எம்.ஏ. பட்ட ஆய்வேடு கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்காலம் பற்றியதாக உள்ளது. இவ்ஆய்வேட்டை எழுதுவதற்காக அம்பேத்கர் 1792 வருடத்திய தகவல்களிலிருந்து சான்றாதாரங்களைத் திரட்டியுள்ளார். அவர் பின்னாட்களில் மேற்கொண்ட டாக்டர் பட்ட ஆய்வேடு, பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நேரடியாக நிறுவப்பட்ட பிறகான நிதி நிர்வாகத்தை ஆய்வு செய்கிறது. அவரது முதுநிலை டாக்டர் பட்டம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய நாணயம் பற்றியது. ஆக, கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வரையிலான ஆங்கிலேய காலனிய ஆட்சிக்காலப் பொருளாதாரத்தை மிக அடிப்படையாக ஆய்வு செய்த அறிஞராக அம்பேத்கரை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இத்தனை ஆழமாக காலனியப் பொருளாதாரத்தை ஆய்வு செய்த அறிஞர் ஒருவரைக் கண்டறிதல் அவ்வளவு எளிதல்ல.

கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானம், செலவு ஆகிய இரு துறைகளை அம்பேத்கர் மதிப்பிட்டு அவரது முடிவுகளை வழங்குகிறார். ஓர் அரசு அல்லது நிர்வாகம் தனது வருமானத்தை எவ்வாறு திரட்டுகிறது, தனது செலவுகளை எத்திசையில் செலுத்துகிறது, அவற்றின் நியாய - அநியாயங்கள் என்னென்ன? என்ற வகையில் அம்பேத்கரின் ஆய்வுகள் அமைந்துள்ளன.

இந்தியாவில் அக்காலத்தில் சிறிய அளவில் தொழில் துறைகள் இருந்தபோதிலும், இந்தியா ஒரு விவசாய நாடாகவே கொள்ளப்பட்டு, நிலவரிசார்ந்த வருமானமே முக்கியமாகக் கொள்ளப்பட்டது என்ற செய்தியிலிருந்து அம்பேத்கர் தனது ஆய்வைத் தெடங்குகின்றார். 1792-1856 வரையிலான காலத்தில் மொத்த வருமானத்தில் 55 சதவீதத்திற்கு மேல் நிலவரிகள் மூலமே ஈட்டப்பட்டது. உப்பு வரி, சுங்க வரி, கஞ்சா வரி ஆகியவை தலா 10 சதவீதத்திற்கும் குறைவானவை. இவ்வாறாக, கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கிய வரிகளால் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் இந்திய விவசாயிகள் என்ற முடிவு அம்பேத்கரின் ஆய்வில் அடங்கியுள்ளது.

நிலவரிகளை ஈட்டுவதற்கு கிழக்கிந்தியக் கம்பெனி மூன்று வகையான முறைமைகளைப் பயன்படுத்தியது. அவை: ஜமீன்தாரி முறை, கிராம வரி, ரயத்வாரி ஆகியவை. இம்முறைமைகளின் வழி கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய வரலாற்றில் முதன்முறையாக நிலத்தில் தனி உடமையை ஏற்படுத்தியது என்பதை அம்பேத்கர் மிக மென்மையாகத் தெரிவிக்கிறார். ஜமீன்தாரி முறை மூலம் கிழக்கிந்தியக் கம்பெனி நிலப் பிரபுக்கள் எனும் புது வர்க்கத்தை (a species of landlords) முதன்முதலாக உண்டாக்கியது என்கிறார். இந்த ஜமீன்தாரர்கள் ஆங்கில நாட்டின் பிரபுக்கள் போல நிலத்தின் மீதும், பண்ணை விவசாயிகள் மீதும் அக்கறை கொள்வர் என கிழக்கிந்திய கம்பெனி எதிர்பார்த்தது என்கிறார். அதேபோல ரயத்வாரி முறைமை மூலம் தனித்தனி (சிறு) உடமைதாரர்களை உண்டாக்கியது என்கிறார். இவ்வாறாக கிழக்கிந்தியக் கம்பெனியினர் நிலத்தில் பிரபுத் துவத்தையும் தனி உடமையும் உண்டாக்கினர் என்பதை அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். இது இந்திய வரலாற்றில் கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்திய அடிப்படையான மாற்றம்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானங்களையும் செலவீனங்களையும் அம்பேத்கர் பட்டியலிடுகிறார். ஏற்கனவே குறிப்பிட்டபடி நிலவரிகளே 55 சதவீதத்தைத் தாண்டி நிற்கின்றன. சுங்க வரி, உப்பு வரி, கஞ்சா வரி ஆகியவை 25 சதத்தை எட்டின. செலவீனங்களை எடுத்துக் கொண்டால், 1809-1857 காலத்தில் சுமார் 60 சதவீதம் ராணுவச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் நீதித்துறைச் செலவுகளுக்காக 15-20 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனையும் போக, மக்கள் தேவை களை நிறைவேற்றும் பொதுப்பணிகளுக்காக எத்தனை சதவீதம் செலவளிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை அம்பேத்கர் எழுப்புகிறார்.

வருமானத்தில் 60 சதவீதம் வரை ராணுவத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளது என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? கிழக்கிந்தியக் கம்பெனி அக்காலத்தில் தனது காலனி ஆட்சியை நாடு முழுவதும் விரிவாக்கிக் கொண்டிருந்தது. காலனி விஸ்தரிப்புப் பணியில் உள்நாட்டு அரசர்கள், பாளையக்காரர்கள் போன்றோருடனும் பழங்குடிகள், விவசாயிகளுடனும் காலனிப் போட்டி யாளர்களான பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் போன்றோருடன் கம்பெனி அக்காலத்தில் போர்களை நடத்தி வந்தது. எனவே கம்பெனியின் பெரும்பாலான வருமானம் ராணுவத்திற்கே செலவிடப்பட்டது.

கிழக்கிந்தியக் கம்பெனி என்பது ஆங்கில நாட்டின் சில வணிகர்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனம். கம்பெனியில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்களுக்கு ஆண்டுதோறும் வருமானத்தின் ஒரு பகுதி லாபமாகக் கொடுக்கப்பட வேண்டும். வருமானம் பெருமளவில் போர்களுக்காகச் செலவிடப்பட்டதால், பங்குதாரர்களுக்கு வருடாந்திர லாபம் செலுத்தப்படுவதற்காக, கம்பெனி ஆங்கிலேய வங்கிகளில் கடன் வாங்கியது. வாங்கிய கடன்களுக்கு வட்டி செலுத்த வேண்டும். எனவேதான், ராணுவச் செலவுகளுக்கு அடுத்தபடியாக வங்கி வட்டிகளுக்காக 10-18 சதவீதம் செலவிடப்பட்டது. இப்படியாக, வருமானத்தின் பெரும்பகுதி சிதறடிக்கப்பட்ட பிறகு பொதுப்பணிகளுக்குப் பணம் மிஞ்சுவதில்லை என்பதே அம்பேத்கரின் வாதம்.

ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக்காட்டிடும் அம்பேத்கர், ஒரு நாட்டின் நிதி வருமானம் அந்த நாட்டு வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும் என்கிறார். ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானம் அவ்வாறு செலவிடப்படவில்லை என்று எடுத்துக் காட்டுகிறார். அதாவது, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி ஒரு காலனி ஆட்சி. அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட ஆட்சியல்ல என்று நிரூபிக்கிறார். எனவே கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி நிர்வாகத்தை நாம் முழுவதும் கண்டிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று அம்பேத்கர் அறிவிக்கிறார். 1853 வரையில் கிழக்கிந்தியக் கம்பெனி (1) எந்த ஒரு பொதுப் பணியையும் திட்டமிடவில்லை (2) ஏற்கனவே புழக்கத்தில் இருந்த கால்வாய்கள், குளங்கள், அணைக் கட்டுகளையும் பேணாமல் பாழடைய விட்டது (3) காலனி விஸ்தரிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியது என்ற முடிவுகளுக்கு அம்பேத்கர் வந்து சேர்கிறார்.

இந்தியா குறித்து ஆய்வுகள் செய்த பிற அறிஞர்களின் எழுத்துக்களை அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார். நவீன இந்தியா (1837) என்ற நூலின் ஆசிரியரான ஸ்ப்ரே என்பாரின் கருத்துக்களை அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார். “கம்பெனியின் நேரடி ஆளுகைக்குள் வராத சுதந்திரப் பிரதேசங்களிலும் அரசர்களின் ராஜ்ஜியங்களிலும் தான் உருப்படியான வேலைகள் நடந்துள்ளன. கம்பெனி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்கள், குளங்கள், பாலங்கள், கிணறுகள் அழியவிடப்பட்டுள்ளன” என்று ஸ்ப்ரே எழுதுகிறார். ஜான்பிரைட் என்ற மற்றொரு அறிஞரின் கருத்துக்களையும் அம்பேத்கர் எடுத்தாளுகிறார்: “1834-1848 ஆகிய 14 வருடங்களில் மான்செஸ்டர் நகரில் தண்ணீருக்காக மட்டும் செலவளிக்கப்பட்ட தொகையை விடக் குறைவாகவே கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியா முழுமைக்கும் எல்லா பொதுப்பணிகளுக்கும் செலவிட்டுள்ளது”. கம்பெனி எத்தனை மைல்கள் ரோடு, மின்சாரம், ரயில்வே பாதை ஆகியவற்றைப் போட்டுள்ளது என்ற புள்ளி விபரங்களை அம்பேத்கர் பட்டியலிடுகிறார். அவையும் ராணுவத் தேவைகளுக்காகவே செய்யப்பட்டன என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆர்.சி.தத் எனும் அறிஞரின் எழுத்துக்களை எடுத்துக்காட்டி அம்பேத்கர் இந்தியாவில் கம்பெனியின் நிலவரி அளவை மதிப்பிடுகிறார். இங்கிலாந்தில் நிலவாடகையில் 5-20 சதவீதமே வரியாக வசூலிக்கப்படுகிறது. ஆயின் இந்தியாவில் கம்பெனியினர் நிலவாடகையில் 80 சதவீதம் வரை வரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. உள்ளூர் ராஜாக்கள் கூட இவ்வளவு வரி விதிப்பது கிடையாது என்று பிஷப் ஹீபர் கூறியது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆய்வேட்டின் கடைசிப் பக்கங்களில் அம்பேத்கர் தனது ஆய்வு முடிவுகளை எழுதுகிறார். இந்தியாவில் இங்கிலாந்தின் பங்களிப்பு பொருளாதாரத் துறையில் அல்ல. இங்கிலாந்து இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்தது. பொருளாதாரமல்லாத துறைகளில் அது தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. மேற்கத்திய கல்வி, நிர்வாகம், சட்டப்பூர்வமான ஆட்சி, அமைதி ஆகியவற்றை அது இந்தியாவிற்கு வழங்கியது. ஆயின் இத்தனைப் பொருளாதார இழப்புகளுக்குப் பின் அது ஏற்படுத்திய அடிமைத்தனமான அமைதிக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், என்று அம் பேத்கர் ஆய்வேட்டை முடிக்கிறார்.

24 வயது இளைஞனாக தனது முதல் ஆய்வேட்டிலேயே கறாரான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அம்பேத்கர் நடத்திச் செல்லும் விவாதங்கள் நம்மை அவர்மீது மரியாதை கொள்ளச் செய்கின்றன. கம்பெனியின் காலனி ஆட்சி, கருணையற்ற சுரண்டல் என்பது போன்ற அரசியல் சொல்லாடல்கள் அம்பேத்கரின் ஆய்வேட்டில் இடம்பெறவில்லை. ஆங்கிலேயர்கள் நிலத்தில் தனி உடமையை ஏற்படுத்தினார்கள், சமீன்தாரர்களை உண்டாக்கினார்கள் என்ற செய்திகள் தகவல்களாகத் தரப்பட்டு உள்ளனவே தவிர அவை குறித்த வெளிப்படையான விமர்சனங்கள் ஏதும் இல்லை. சாதி அமைப்பு குறித்த சொல்லாடல்களும் இல்லை. ஆயின் எடுத்துக் கொண்ட தலைப்பின் எல்லைகளை மீறாமல், கிராமப்புற விவசாயிகளின் மீது அனுதாபத்துடன் அவர் தனது ஆய்வுகளை எடுத்துச் சென்றுள்ளார் என்பதைக் காணமுடிகிறது.

இந்தியாவின் கிராமப்புறங்களில் விவசாய நிலங்கள் துண்டு துண்டாக சிறு அளவுடையனவாக உள்ளன. இதுவே இந்திய விவசாயம் வளர்ச்சி அடையாமலிருப்பதற்கான காரணம் என்று நீண்டகாலமாகப் பல பொருளாதார அறிஞர்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். உலகமயமாக்கச் சூழல்களில் விவசாயத்தில் மேற்கத்திய கார்ப்பரேட் மூலதனத்தை இறக்குமதி செய்து இந்தியக் கிராமங்களில் பெரும் பண்ணைகளை உருவாக்கி விவசாய உற்பத்தியைப் பலமடங்காக்கி விடலாம் என்று இன்றும் நமது அறிஞர் கள் எழுதி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்தியப் பொருளாதாரக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் 1918-ஆம் வருடத்தில் அம்பேத்கர் கிராமப்புற சிறுநில உடமை பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அம்பேத்கர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆராய்ச்சி மாணவராக தன்னைப் பதிவு செய்து கொண்ட முதலாண்டுகளில் இக் கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு முன் தரமான ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும் என்றொரு முன் நிபந்தனை உண்டு. அத்தகைய சூழல்களில் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கலாம். ஆயின் கல்வித் தேவைகளைத் தாண்டிய முக்கியத்துவம் பெற்றதாக இக்கட்டுரை இன்று வரை அமைந்துள்ளதைக் காணுகிறோம். மகராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அம்பேத்கர் தொகுப்பு நூல்களில் முதல் நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.

விவசாய உற்பத்தி வெற்றி பெறுவதற்கு பெருநிலங்கள் தேவை என்ற கருத்தை அடிப்படையாக மறுப்பதிலிருந்து அம்பேத்கர் தனது ஆய்வுக் கட்டுரையைத் தொடங்குகிறார். உலக அளவில் இங்கிலாந்து போன்ற நாடுகள் பெருநில உடமையைக் கொண்டுள்ளன; பிரான்ஸ், டென்மார்க், ஹாலந்து போன்ற நாடுகள் சிறுநிலங்களைக் கொண்டுள்ளன. இரண்டு வகை நாடுகளுமே விவசாயத்தில் வெற்றி பெற்றுள்ளன. அவற்றின் வெற்றிக்கு நிலஅளவு காரணமாக அமையவில்லை என்று எடுத்த எடுப்பிலேயே அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். வேறு என்ன காரணம்?

விவசாயத்தில் உற்பத்தித்திறன் பெருகுவதற்கு பல காரணிகள் பங்கேற்கின்றன. நிலம், இடுமுதல், கருவிகள், உழைப்புச் சக்தி, உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை, சரக்குப்போக்கு வரத்து வசதி ஆகிய பல காரணிகள் அதில் சம்மந்தப்படுகின்றன. பிற காரணிகள் சாதகமாக இல்லாத நிலையில், நிலத்தின் அளவு கூடுவதால் மட்டும் உற்பத்தித் திறன் எப்படிக் கூடிவிடும்? என்பது அம்பேத்கரின் கேள்வி. சிறு அளவு நிலத்தைப் பயிர் செய்வதற்கே இடுமுதல் இல்லாத விவசாயிகள் உள்ள நாட்டில் அதைப் பற்றி யோசிக்காமல் நிலத்தைப் பெரிதாக்குவதால் என்ன சாதித்து விட முடியும் என்று அம்பேத்கர் விவாதிக்கிறார். இன்றைய நமது விவசாயிடம் உழவு மாடுகள் இல்லை. தரமான விவசாயக் கருவிகள் இல்லை, இடுமுதல் இல்லை, இத்தனையும் அவரிடம் இல்லாதபோது அவரிடம் உள்ள நிலத்தின் அளவு அவருக்குச் சிறியதல்ல. பெரியது என்கிறார். இது ஒரு நுட்பமான வாதம். நில அளவு பெரிதாகிவிட்டால் உற்பத்தித்திறன் பெருகிவிடும் எனும் பேச்சின் குருட்டுத் தனத்தை விமர்சிக்கும் வாதம் அம்பேத்கருடையது.

இந்தியக் கிராமப்புறங்களில் நிலம் சிறு அளவுடையதாக உள்ளது. போதாத குறைக்கு, உள்ள நிலமும் கூட ஒரே இடத்தில் சேர்ந்தாற்போல அமைவது கிடையாது. வாரிசுகளுக்கு நிலத்தைப் பங்கிடும் போது நிலம் மேலும் துண்டுபடுகிறது என்ற விஷயங்களையெல்லாம் அம்பேத்கர் விரிவாக விவாதிக்கிறார். ஆனால் நிலத்தைப் பெரிதாக்குவது, ஒன்று படுத்துவது, வாரிசுரிமையால் சிதறாமல் பாதுகாப்பது ஆகியவற்றை யெல்லாம் விட அதிக முக்கியமானது விவசாயிகளின் கையில் இடுமுதலை உத்திர வாதப்படுத்துவது என்று அம்பேத்கரின் வாதம் வளர்கிறது.

பெருநிலங்களில் தான் உற்பத்தித்திறன் வளர்கிறது என்ற வாதத்தில் நில உடமையாளர்கள், பணக்கார விவசாயிகளின் நலன்கள் அடங்கியிருக்கின்றன, அம்பேத்கர் சிறுவிவசாயிகளின் சார்பாக நின்று யோசித்தார். பெருநில ஆதரவாளர்கள் நில உச்சவரம்புச் சட்டங்களுக்கு எதிரானவர்கள். உச்சவரம் பால் பெருநிலம் சிறுநிலங்களாகின்றன என்று அவர்கள் கூறுவார்கள். அம்பேத்கரின் வாதங்கள் வேறு வகையானவை என்பது கவனிக் கத்தக்கது. 1947க்குப் பிறகு இந்திய அரசு பணக்காரர்களின் நலன்களை முன் நிறுத்தியே அதன் விவசாயக் கொள்கையை அமைத்துக் கொண்டது. நில உச்சவரம்பை அது நேர்மையாக மேற்கொள்ளவில்லை. கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், வங்கிக் கடன் அகியவை நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளுக்கும் சென்று சேர்ந்தன. தமிழகத்தில் முன்னேற்றக் கழகங்களும் அது போன்ற அரசியலையே மேற் கொண்டன.

பணக்கார விவசாயிகள் தலைமை தாங்கிய முதலாளிய விவசாய வளர்ச்சியே இங்கு நடந்தேறியது.
சந்தையை மனதில் கொண்டு உற்பத்தி செய்யும் பெரு விவசாயிகள் ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றை நிலத்தில் கொட்டி நிலத்தை அழித்தார்கள். இன்னொரு புறம் மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் சிறு விவசாயிகள் கைவிடப்பட்டனர். அம்பேத்கர் சொன்னதுபோல சிறு விவசாயிகளின் கையில் இடுமுதல் சென்று சேர்வதற்கான எந்த முயற்சியும் இங்கு நடைபெறவில்லை. பின்னாட்களில் அம்பேத்கர் கிராமப்புற விவசாய வளர்ச்சிக்கு அரசுத் தலையீடு அவசியம் என்று எழுதினார். இந்திய விவசாயத்தில் அரசு தலையிட்டது. ஆனால் அது பெரு விவசாயிகளின் சார்பாகவே தலையிட்டது.

சரி, அம்பேத்கரின் கட்டுரைக்குத் திரும்பிச் செல்வோம். இடுமுதலுக்கு வழியில்லாத இந்திய விவசாயிகளின் நிலையைப் பேசும் போது, அம்பேத்கர் பிரச்சினை நமது சமூகப் பொருளாதாரத்தில் உள்ளது என்ற ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். சமூகப் பொருளாதாரம் என்ற சொல் ஒரு புதிய சொல். அதிகமாக நாம் சந்திக்காத சொல். இந்தியக் கிராமப் புற நிலைமைகளைக் குறிக்கும் சொல். சமூக ரீதியாக இந்திய விவசாயிகள் இடுமுதலற்று அரசு உதவியற்று புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளதைச் சுட்டும் சொல். இன்னும் கூடுதலாக, கிராமப்புறங்களில் நிலம், இடுமுதல் ஆகிய வாய்ப்புகளற்று உபரி உழைப்பாளிகள் குவிந்து கிடப்பதை எடுத்துக்காட்டும் சொல். சுமார் 50 சதவீத உழைப்பாளிகள் அவர்களது உழைப்புச் சக்தி முழுவதும் பயன்படுத்தப்படாத சூழல்களில் வாழ்வதை அச்சொல் கூறுகிறது. சமூகப் பொருளாதாரம் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது அநேகமாக அம்பேத்கர் இந்தியச் சாதிச் சமூக அமைப்பே கிராமப்புற விவசாயிகளின் இந் நிலைக்குக் காரணம் என்ற செய்தியைச் சொல்ல வருவதாகப் படுகிறது.

இருப்பினும் வெளிப்படையாக சாதியம் பற்றி அம்பேத்கர் இன்னும் பேசவில்லை. கையில் இடுமுதல் இல்லாமல், வெறும் உழைப்பு சக்தியோடு மட்டும் வாழும் மக்கள் சிறிதளவே நிலம் பெற்றால் கூட அந்நிலத்தில் அவர்களால் உருப்படியாக விவசாயம் செய்ய முடியாது. ஒரு பாறையை மலை உச்சிக்கு உருட்டிக் கொண்டு செல்லும் சிசிபஸ் எனும் கிரேக்க அவலக் கதாபாத்திரம் போலத்தான் இந்திய விவசாயி இருக்கிறார் என்று அம்பேத்கர் எழுதுகிறார். அந்தப் பாறை திரும்பத் திரும்ப உருண்டு கீழே வந்து விடுகிறது. மீண்டும் சிசிபஸ் அந்தப் பாறையை உச்சியை நோக்கி உருட்டிச் செல்கிறான்.

கிராமப்புறங்களில் உழைப்பாளிகள் உபரியாக இருக்கும்போதும் அவர்களுக்கு வாழ்க்கைச் செலவுகள் உண்டு. உண்ணவேண்டும், உடுக்க வேண்டும், உறைவிடம் வேண்டும். எனவே கிராமப்புற உபரி உழைப்புச் சக்தியை வேறு திசைகளுக்குத் திருப்பியாக வேண்டும். நிலத்தை விட ஆதாயமான தொழில்கள் இல்லாததால் கிராமப்புற விவசாயிகள் அங்கேயே முடங்கிக் கிடக்கின்றனர். எனவே நாட்டின் தொழில் வளர்ச்சியே அவர்களது உழைப்பு சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொழில் வளர்ச்சி ஏற்படாமல் இந்தியக் கிராமத்தில் இன்று நிலவும் சமூகப் பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்கிறார் அம்பேத்கர்.

கிராம உழைப்பாளிகளின் எல்லா சக்தியும் விவசாயத்திலேயே செலவிடப்படும் போது நிலத்தின் மதிப்பு குறைகிறது என்கிறார் அம்பேத்கர். நிலத்தின் மதிப்பும் விவசாயத்தின் மதிப்பும் உயர வேண்டுமெனில் கிராமப்புற உபரி உழைப்புச் சக்தி தொழில்துறைகளுக்குத் திருப்பப்பட வேண்டும். சுமார் 50 சதவீத கிராமப்புற மக்கள் தொழில்துறைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

அம்பேத்கர் காந்திய கிராமீயப் பொருளாதாரத்தை ஆதரிக்கவில்லை. நிலச்சுவான்களை தர்மகர்த்தாக்களாகப் புனிதப்படுத்திய காந்தியும் காங்கிரஸ் அரசுகளின் விவசாயக் கொள்கையில் பணக்கார விவசாயிகளின் ஆதரவுநிலை நோக்கி பரிணமித்தது. நாடு தொழில் மயப்படுவதை அவர் ஆதரித்தார். ஆயின் முதலாளியம் தொழில்மயப்படுதலையோ, முதலாளிய விவசாயத்தையோ அவர் ஆதரித்தார் என்று சொல்ல முடியாது. நாட்டைத் தொழில்மயப்படுத்துதலிலும் சிறுவிவசாயிகளுக்கு இடுமுதல் வழங்குவதிலும் அவர் அரசுப் பொருளாதாரத்தையும் அரசுத் திட்டமிடலையும் ஆதரித்தார். அரசு தலையீட்டுடன் கூட்டுப் பண்ணைகளை உருவாக்குதல், கிராமப்புற இடுமுதலுக்காக வங்கிகள் கடனுதவி செய்தல் ஆகியவற்றை அவர் பிற்காலத்தில் வெளிப்படையாகவே முன்மொழிந்தார். அரசு சோசலிசம் என்ற ஒன்றை அவர் பின்னாட்களில் முன்மொழிந்தார்.

கட்டுரையின் இறுதிப்பகுதியில், அம்பேத்கர் கிராமப்புறங்களிலேயே தொழில்சாலைகளை நிறுவுவது விவசாய வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உகந்தது என்கிறார். லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட சில களஆய்வுத் தகவல்களை அம்பேத்கர் எடுத்துக்காட்டுகிறார். அந்த ஆய்வுகளின்படி, விவசாயமும் தொழில்பேட்டைகளும் ஒரு சேர அமைந்திருக்கும் மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு கூடுகிறது. விவசாய உற்பத்தியும் கூடுகிறது. உழைப்பாளிகளின் சம்பளமும் கூடுதலாக உள்ளது.

இந்திய விவசாயத்தில் குறைந்த பட்சம் இரண்டுவகைப் பிரச்சினைகள் உண்டு. ஒன்று: விவசாய உற்பத்தி சக்திகளை எப்படி வளர்ப்பது என்பது. மற்றொன்று: கிராமப்புற உற்பத்தி உறவுகளையும் சமூக உறவுகளையும் எப்படி மாற்றியமைப்பது என்பது. பெருநிலதாரிகளின் பக்கத்தில் நின்று யோசித்தால் உற்பத்தியைப் பெருக்கலாம். ஆனால் கிராமப்புற சமூக உறவுகளை மாற்ற முடியாது. மட்டுமல்ல, பணக்கார விவசாயிகளின் கை ஓங்கிய காலத்தில் கிராமப் புறங்களில் சாதி அமைப்பு மறு உயிர்ப்பு பெற்றுள்ளது என்பதையும் காணுகிறோம்.

அம்பேத்கர் சிறுவிவசாயிகள், நிலமற்ற உழைப்பாளிகள் ஆகியோருடன் நின்று சிந்திக்கிறார். உற்பத்தி சக்திகளை வளர்ப்பது, உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது ஆகிய இரண்டு பிரச்சனைகளையும் அவர் ஒருசேர எதிர் கொள்ளுகிறார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com