Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
எஸ். திருநாவுக்கரசிற்கு இருபத்தைந்து வயதான போது. . .
லஷ்மி சரவணக்குமார்

மிகச் சரியாக சொல்வதானால், அது வெம்மையற்ற உயர்தன்மையுடைய காற்றடி காலத்தின் வழக்கமான ஒரு செவ்வாய் கிழமை. இயல்புக்கு மீறிய நா வறட்சி தொண்டையிலிருந்து பிரியும் உடலை மேலும், மேலுமென துன்புறுத்தியபடி உசிரக் கரைகளில் பெருகிக் கொண்டிருந்தது. வெறுமை ஓர் அரூவமான தொடர்ச்சியாய். . .

அந்தப் பேருந்தில் ஏறிய போது சுவாமிநாதனின் மகனான திருநாவுக்கரசு கருப்பு நிற கார்கோ பேண்ட்டும், வெளிர் சாம்பல் நிற ஆரோ சட்டையும் அணிந்திருந்தான். குறிப்பாக, இடது கை மணிக்கட்டில் பழைய சிட்டிசன் குவார்ட்ஸ் வாட்ச்சும் விரல்களைப் பற்றியபடி இருந்தப் பையில் இரண்டு செட் மாற்று உடைகளும் உடல் உள்ளாடைகளும், கைக்குட்டையும் இருந்தன, நாப்தலீன் உருண்டைகளின் சுகந்தங்களை சுமந்தபடி. . .

பெரும்பாலான மனிதர்களின் பயணங்கள் முக்கியத்துவமானதா என்பதைப் பற்றி அவனுக்குத் தெரியாது. ஆனால் இப்பயணம் அவன் வாழ்க்கையை தீர்மானிக்கிற ஒன்றென்பதால் முக்கியமானதே. பேருந்து கிளம்பிய போது சாலையோர மரங்களைக் கவனித்தான். அவற்றின் நிழல் தொடர்ந்து தரையில் விழுந்து மறைந்தபடியிருந்தது. அவ்வளவும் நிறமற்றவை. இவ்வளவிற்கும் என்ன காரணமென்று பார்க்கப் போனால்,

திருநாவுக்கரசு இருபத்தைந்து வயது நிரம்பியவனாகவும் கொஞ்சம் மாநிறமாகவும் அளவான உயரமுடைய பட்டதாரி இளைஞனாக இருந்தான். சித்தர்களின் ரஸவாதத்தைக் கண்டுபிடித்து இரும்பைப் பொன்னாக்குகிற அதீத முயற்சியில் இயங்கியபடி தன் ஆய்வுக் கூட செலவிற்காக நகரின் மிக முக்கியப் புள்ளிகளை அணுகினான். பலனளிக்காத படியால், பின் வீட்டில் உள்ள தம் பங்கு உடைமைகளை விற்பதற்கு அனுமதி கேட்டான். கூட்டுறவு வங்கியொன்றின் அலுவலராய் இருந்த ஒரு கை சற்றே ஊனமான அவன் தந்தை அவனுக்கடுத்தபடியாய் இருந்த தங்கைக்கு வேண்டு மெனக் கருதி எதுவும் தரமுடியாது என மறுத்து விட்டார். அவன் எதிர்பாராத ஒன்றாகிவிட்டது இது. தவிர, எந்தவொரு வேலையையும் செய்யக் கூடிய மனநிலையில் அவன் இல்லை. ஆகையால், இன்னும் கொஞ்சம் முயன்று பார்க்கலாம் என்றுதான் தோன்றியது.

மழைக் காலமாயிருந்த ஒரு நாளின் ஈரம் கசிந்த மாலைப் பொழுதில் நிறமற்ற வானவில்லைக் கண்டபடி மொட்டை மாடியில் அவன் நின்றிருந்த சமயம், பூத்தொட்டியிலிருந்து உதிர்கிற தண்ணீர் மூர்க்கமாய் மணலைத் தாக்கியது. நாற்பது வயதில் நாய்க்குணம் என்பார்கள். நாய்க்கு என்ன குணம்? அப்பா இப்போது ஐம்பது வயதைக் கடந்து நூற்றி இருபது நாட்களைப் பூர்த்தி செய்திருந்தார். அவ்வப்போது நரை தெரியாமல் இருப்பதற்காக டை அடிப்பதுண்டு. அரசாங்க ஊழியர்தானே! என்றாலும் எதற்கும் நேரங்காலம் பார்ப்பதில்லை. அளவுக்கு அதிகமான காமவேட்கை. சமையலறை, குளியலறை என இடம் பொருளறியாத படி கிளை பரப்பத் தொடங்கி விட்டிருந்தது. மழை பெய்து ஓய்ந்திருந்த நேரம், அம்மாவும் கூடவா இப்படியாகிப் போனாள்?
மனுஷிதானே? பாவம்! இருவரும் சல்லாபித்துக் கொண்டிருக்கிற சப்தம் அவனை சங்கடப்படுத்தியது. சில நாட்கள் நண்பர்களின் அறைகளிலும், மேன்சன்களிலுமாய் பொழுதைக் கழித்தான். என்றாலும் நிரந்தர மாற்றமே சரியெனப்பட்டது.

உங்களுக்கு இந்திராவைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம், ஒருவேளை நீங்கள் அந்தப் பகுதியை சேர்ந்தவராயிருந்தால். திருவைப் போன்ற மாநிறந்தான் என்றாலும் கொஞ்சம் அழகானவள். அதில் அவளுக்கு கர்வமும் உண்டு. திருவின் தங்கையாக இருப்பதற்காக பலமுறை சுயவருத்தம் கொண்டிருக்கிறாள். ஏனெனில்,

“அவனால் பைசா பிரயோஜனம் இல்லை” என்கிற வெறுமை. திருவும் கூட,

“இந்த சனியனால தான் என் வாழ்க்கையே நாசமாகுது!..”

என, இந்த வார்த்தைகளை அவள் முன் பிரயோகிப்பதற்கான சமயத்தை எதிர்பார்த்த படியிருந்தான். வாய்காமலா போகும்? வாய்த்தது. சமந்தமில்லாத ஒரு சமயத்தில் இளங்காலைப் பொழுதொன்றில் நகரிலிருந்து பிரிகிற நெடுஞ்சாலையின் பெருவழியில் அவன் தங்கை யாரோ ஓர் இளைஞனுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தாள். இரு சக்கர வாகனத்தின் நிழல் அவர்களைப் பின்பற்றியபடியே சாலையில் ஊர்ந்தது. இது பெரிதுபடுத்துவதற்கான விஷயமே அல்ல என்று தோன்றலாம். ஆனால் இதற்கான பயணச் செலவாக இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பாவிடம் அவள் பெற்றுக் கொண்ட தொகை இரண்டாயிரத்தைத் தொடும். தனக்குக் கிடைக்காததில் இல்லாத பெருவருத்தம் தங்கைக்குக் கிடைப்பதில் இருந்தது. ஏதாவது செய்து, வீட்டிலிருந்து அவளுடைய அதீத உரிமைகளைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆராய்ந்த போது,

அ) இந்திராவிற்கு அனேக ஆண் நண்பர்கள் இருப்பதும்

ஆ) அனேக முறைகள் அவள் தன் ஆண் நண்பர்களோடு சினிமாவிற்கு போயிருக்கிறாள் என்பதும்

இ) சில சமயம் தம் நண்பர்களோடு பேசுவது அம்மாவிற்கே தெரியும் என்றாலும், அதை பெரிதுபடுத்தவில்லை என்பதும்

ஈ) இந்திராவின் கடந்த பிறந்த நாளன்று குறிப்பிடும்படியாக ‘வேணு’ என்கிற இளைஞன் ஆர்டின் உருவங் கொண்ட இரண்டு பக்கங்களிலும் லவ்பேர்ட்ஸ் பறவைகளிருக்கிற பரிசொன்றை அளித்துக் கீழே “ஆல் வேஸ் வித் யூ” என எழுதியிருந்தது. மேலும் அது இன்னும் பத்திரமாக அவளுடைய டேபிளில் இருக்கிறது.

இதைப் போன்று இன்னும் சில, பல தகவல்களை தெரிந்து கொண்டவன் எப்படியாவது இதனை ஒரு கதையாக்கிவிட்டால் மற்றது தானே நடக்கும் என யோசித்தான். இச்சமயத்தில் அவனுடைய புத்திசாலித் தங்கை இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு விட்டாள்.

“உனக்கு என்ன பிராப்ளம் திரு?...”

“நீதான். . .”

“நானா?” எனச் சிரித்தவள்,

“சரி அதுக்கு?...” எனக் கேட்க இவனுக்கு என்ன பதில் சொல்ல வேண்டுமெனத் தோன்றவில்லை.

“உன்னோட உரிமைகளை விட்டுக் கொடுக்கணும்!. . .”

அவன் தலையைக் குனிந்து கொண்டான்.அவள் சிரித்தாள்.

“உருப்படியா ஏதாவது வேலக்கிப் போ. எல்லாந்தானா வரும்...”

அவள் அறிவுரை சொன்னாளா? அல்லது கேலிக்கு சொன்னாளா? என்பது புரிந்துபடியில்லை. ஏனோ, அவனுக்கு அதன் பிறகு அந்த நினைப்பே அற்றுப் போனது.

இருபத்தைந்து வயதில் நீங்கள் காதல் வயப்பட்டவரா என்பது தெரியாது. திரு காதல் வயப்பட்டிருந்தான். அவள் அழகானவளில்லை தான் என்றாலும் மாதம் நான்காயிரத்து ஐநூறு ரூபாய் ஊதியம் பெறக்குடியவளாய் இருந்தாள். இவனைப் போன்ற மாநிறம், சமஉயரம் சற்று கனத்த சரீரம். மிக விரும்பினாள் இவனை. வேலையற்றவனாய் இருப்பினும் இவனுடைய நேர்மை காரணமாக, வெயிலற்ற ஓர் பகற்பொழுதில் மதுரையிலிருந்து புறநகர்ப் பகுதியை நோக்கி செல்கிற மாநகரப் பேருந்தொன்றில் இருவரும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி அவர்களறியாத விஷயங்களைப் பரிமாறிக் கொண்டபடி வெயிலோடு ஊர்ந்து செல்லும் நிழலை பின் தொடர்ந்தவர்களாய், நீண்டு குறுகிய மேற்தட்டு வீதிகளிலும், ஆளரவமற்ற பகற்நேர பூங்காக்களிலும் பேசித் தீர்த்தனர். தன் லட்சியம் பற்றி அவன் சொன்ன பிறகு இன்னும் ஆழமாக அவனை நேசித்தாள்.

பின்னிரவில் தொலைபேசி வழியே நிறைய பேசிக் கொண்டார்கள். பெரும்பாலும் ஏதுமற்ற மௌனங்களையே மொழியாய் பிரதிபலித்த குரல்கள். பின்னிரவில் மெல்லிய துர்நாற்றம் வாயிலிருந்து புறப்படுகிற சமயங்களில் மேலும் மேலும் தண்ணீர் குடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அவனுடைய நண்பர்கள் வேலைக்கு சென்று விட்ட படியால் அவன் தன் காதல் சமாச்சாரங்களை பரிமாறிக் கொள்ள வேண்டி சில, பல வருடங்களுக்கு முன் பயன்படுத்தி பாக்கியிருந்த டைரித்தாள்களில் எழுதி வைத்தான். முகவரிகள், காலாவதியான தொலைபேசி எண்கள் இவற்றோடு சிறு வயதில் அப்பா எழுதிய சகிக்க வியலாத கவிதைகள் என சிற குப்பையாக இருந்த டைரிகளுக்கு இவன் உயிர்கொடுத்தபோது வீடே ஒளிர்வதைப் போல் உணர்ந்தான்.

அலுவலகம் முடிந்த நேரங்களில் மாநகர வீதிகளில் பேசிக் கொண்டே உலவுவதில் விருப்பமுற்றிருந்தனர். வடக்குவெளி வீதியையொட்டிய அடக்கமான சிறிய கடையொன்றில் அமர்ந்தபடி காஃபியோடு சேர்த்து பரஸ்பரம் காதல் பருகியபடி ஒரு வரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“சும்மாவே இருக்கிறதுக்கு ஏதாவது வேலக்கி ட்ரை பண்ணலாம்ல?..” அவள் இப்படி சொன்ன போது அவனுக்குப் பிடிக்காத அத்தனை பேருடைய முகமும் ஒரு நிமிடம் வந்து போனது. அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து தலையைக் குனிந்தபடியிருந்தவனை, அவள் அணிந்திருந்த புதுக்காலனியின் வெள்ளைப் பூச்சு மினுங்கி நகைப்பது போலிருந்தது.

“போலாமா?. . .”

தலையை உயர்த்தாமலே கேட்டான். மேசையிலிருந்த கைகளைப் பற்றினாள்.

“ஏம்மேலக் கோவமா?..”

அவனிடம் கலையாத மௌனம். இது கூட ஒரு வகையான தாக்குதல் தான். பின்னர் அவள் வீடிருக்கும் வீதிவரை உடன் நடந்து தெரு முனையின் இருட்டில் மெதுவாக அணைத்து அவசரமாக முத்தங்களை பரிமாறிக் கொண்டபடி இருவரும் பிரிந்து நடந்தனர். இதழ்களில் ஒட்டியிருந்த சாயப்பூச்சை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.

யாரும் எதிர்பாராத வண்ணம் இவன் வேலைக்குப் போகாத பிரச்சனை பிரளயமானது அம்மாவிடமிருந்து. தோசைக்கு இன்னும் கொஞ்சம் சட்னி வேண்டுமெனக் கேட்டபோது,

“முக்காத்துட்டு சம்பாதிக்கத் துப்பில்ல. இதில் நூத்தியெட்டு நொன்னநாட்டியம். உஞ் சம்பாத்தியத்தில திண்ணறப்போ கேளு. . .”

தோசைக் கரண்டியோடு அம்மாவைப் பார்த்த போது கற்பனையிலிருந்த ராட்சஷ உருவங்களெல்லாம் மிரட்டி விட்டுப்போனது. அன்று பின்னிரவு வரை அவன் வீட்டுக்குத் திரும்பவில்லை.

அவன் திரும்பியபோது அப்பாவின் அறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த அறையைக் கடக்கிற போது மிகமோசமான முனங்கல்களும், ஸர்ப்பத்தின் நீண்ட மூச்சுகளுமாய் அறை அதிர்ந்தது; உறக்கம் பிடிக்காமல் ஜன்னல் வழியே தொலைந்து போன நிலவைத் தேடித் துளாவினான். நீண்ட நேரத்திற்குப் பிறகு மெல்லிய இருள் வெளிச்சத்தில் வீட்டின் பின்புற சுவரைப் பற்றியபடி அம்மா மூத்திரம் பெய்து கொண்டிருந்தாள். ஆடையைக் கூட சரிசெய்யாமல் நின்றிருந்த அவளைப் பார்க்க சகிக்கவில்லை.

மறுநாள் பகல் பொழுதில் வீட்டை ஒதுங்க வைக்கிற சமயத்தில் டைரிகளில் புதைந்து கிடந்த இவன் காதல் சரித்திரம் அம்மாவின் கண்ணில் பட உடனடியாக அதைத் தம் கணவனின் பார்வைக்கு கொண்டு சென்றாள். அன்றே அவன் வீட்டிலிருந்து வெளியேற்றப்படவும் தவறி விடவில்லை. இறுதியாக, காதலி வைதேகியுடன் பேசி முடிவெடுத்து இருவரும் அருகில் இருக்கும் நகரில் குடியேறுவதாகவும், அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின் இவனும் வேலைக்குப் போவது எனத் தீர்மானமாகியது.

பின்குறிப்பு

கடந்த 08.06.2005 அன்று இருவரும் நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அதோடு அவனும் தன் லட்சியத்தை தங்கள் குழந்தைகள் மூலமாக நிறைவேற்றிக் கொள்வதாக உறுதி கொண்டான். இவர்களைப் பற்றிய கூடுதல் விபரங்கள் வேண்டுமெனில் எஸ்.திருநாவுக்கரசு, 120, விருதுநகர் ரோடு, திருமங்கலம் - 625706 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com