Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
நிறைவின்மையிலிருந்து பெருகும் வார்த்தைகள்
-கரிகாலன்

நூல்: வெளிச்சத்தின் வாசனை (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்: பா. தேவேந்திரபூபதி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில்-1
பக்கம்: 71 விலை: ரூ.40/-

வார்த்தைகளின் விளிம்பில் வடியும் / மதுவைப் பருகுகையில் / கொப்பளிக்கிறது காமம் என எழுதும் தேவேந்திர பூபதியின் கவிதை நூல் ‘வெளிச்சத்தின் வாசனை’. இந்நூலிலுள்ள கவிதைகள் புதிதாகவே இருக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. காமத்தையும், மதுவையும் ஒளித்து வைத்திருக்கும் வார்த்தைகளின் ரகசியத்தை அறிந்து வைத்திருப்பவர் இவர் எனும் நம்பிக்கையை அளிக்கிறது இந்நூல். இவரது கவிதைகள் அந்தரத்தில் மிதந்து அலையும் தன்மையில் இல்லாமல் வாசிப்பவனோடு கொள்ளும் உரையாடலுக்கான திறப்புகளை கொண்டிருப்பதால், முதல் வாசிப்பின்போதே இவை நமக்கு மிகவும் நெருக்கமானவை எனும் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன.

லௌகீக வாழ்வின் வெற்றி என கருதப்படுபவைகள் அனைத்தும் அடைந்த பின்பு கூட எது டால்ஸ் டாயை நிறைவின்மையை நோக்கி விரட்டியதோ அதுதான் பூபதியையும் கவிதை எழுத இயக்குகிறது. நவீன வாழ்வு தரும் சுகங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் இடையில் ஊடாடும் பலவீனமாக மனதில் எழும் கேள்விகள் பெரும்பாலும் சமகாலமனிதர்கள் யாவர்க்கும் பொதுவானவை. இக்கேள்விகளால் வேட்டையாடப்பட்டு இரையாக விழுங்கி செரிக்கப்படுபவனல்லன் கவிஞன். அதனுடன் சிந்தும் குருதியோடு சதாயுத்தம் நடத்திக் கொண்டிருப்பவன் அவன். அந்தக் களத்தில் ஏற்படும் வலிகள், தோல்விகள், வெற்றிகள் என இவை அனைத்தும் தான் அவனது கொண்டாட்டங்கள். அந்த யதார்த்தமே அவனது இருப்பை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.

இத்தகைய கவிமனம் வாய்க்கப் பெற்றவராக தேவேந்திரபூபதி திகழ்வதை தத்துவ வலிமையும், வாழ்வின் தரிசனங்களையும், பிரபஞ்சப் பார்வையும் உள்ளடக்கிய ‘கரும்பனையும் ஆலமரமும்’, ‘புகைப்படம் பற்றிய மூன்று கவிதைகள்’, ‘வேட்டையின்காடு’, ‘ததாகதன் கடந்து போன நிலம்’ போன்ற கவிதைகள் நிரூபணம் செய்கின்றன. ‘யாருக்கும் யாரையும் அடையாளம் காட்டாத / புகைப்படத்தைத் தாங்கிக் கொண்டு / திரியும் உலகில் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன / தொடர்ந்து / நானற்ற புகைப்படங்கள்’ என முடியும் புகைப்படம் குறித்த கவிதையில் மனிதனின் ‘நான் யார்’ எனும் அடையாளச் சிக்கல், ஈகோ பற்றிய விசாரணை, உடல், உயிர், எண்ணம், பிம்பம் இவற்றிற்கிடையேயான தொடர்புகள் குறித்த தத்துவத்தேடல் என்று ஆழமும், விரிவும் கூடியது. மனிதனை பிரபஞ்சத்தின் ஓர் அணுவாய்ப் பார்க்கக் கூடிய தத்துவத்தேட்டம் நிறையப் பெற்றது.

எளிமையும் சொற்செறிவும், கலை நுட்பமும் இணையப் பெறுவது அபூர்வமான சேர்க்கை, அத்தகைய கலாவெற்றியை இக்கவிதைகள் சாதித்துள்ளன. கவித்துவ நுட்பங்களும், கருப்பொருளும் இயைந்து போகும் போதுதான் கவிதை முழுமையடைகிறது. ‘நமது காதலின் பச்சையம் / பரவும் வீட்டறை ஒரு வனமாகிறது’ எனும் கவிதையை மேற்கூறிய கூற்றுக்கு உதாரணமாக நிறுவலாம். காதல் என்பது ஓர் உணர்வு. அது உயிர்களின் இயல் பூக்கம். அது பச்சையம் போல் பரவுகிறது என்கிறார். பச்சையம் என்பது தாவர வளர்ச்சிக்கு தேவையான ஓர் உள்வய நிகழ்வு. உயிர் வளர்ச்சிக்கு காதல் தேவைப்படுகிறது. பச்சையம் தாவரத்தையும், காதல் உயிரையும் செழிக்கச் செய்கிறது. அதனால் தான் காதலை மனித குலத்தின் பச்சையம் என்கிறார் கவிஞர். அது இல்லத்தை உயிரோட்டம் கொள்ளச் செய்கிறது. பசுமையாக்குகிறது.

பசுமையைப் பெருக்கி வளமாக்குகிறது. காதல் செழிக்கும் இல்லத்தை வனமாக உருவகிக்கிறார். வீடு செயற்கை. வனம் இயற்கை. மனிதன் செயற்கையிலிருந்து விடுபட்டு இயற்கைக்கு திரும்ப வேண்டும். இயற்கைக்கு திரும்புவது காதலால் தான் சாத்தியம். மனிதர்கள், பிரபஞ்சம் என காதல் விரியும் போது உலகம் அன்பால் நிறையும். அளவான, எளிய வார்த்தைகளும், அர்த்தப் பெருக்கையும் உள்ளடக்கிய இக்கவிதை வரிகள் நம் சிந்தனையைத் தாண்டி விரிய வைக்கிறது. இதுதான் கவிதை ஏற்படுத்த வேண்டிய தாக்கம், விளைவு எல்லாம்.

காமத்தை அதற்குரிய வெப்பத்தோடும் குளிர்ச்சியோடும் பகிர்ந்து கொள்ளும் கவிதைகள் பரவலாக இத்தொகுப்பில் உள்ளன. அதிர்ஷ்ட வசமாக யோனி போன்ற பிரயோகங்களே இல்லாமல் என்பது விஷேச அம்சம். பெண்ணுடைய தேக நதியில் துடிக்கும் மீனாக ஆணுடலை உருவகப்படுத்துவதும், புலன்களை குறு விலங்குகளாக உருவகப்படுத்துவதும் கவிதைக்கு அணி செய்யக் கூடியவை. சமூக மதிப்பீடுகள் உதிர்ந்தும், உலர்ந்தும் போகக்கூடிய இடம் காதலும், காமமும். ‘எல்லாக் கட்டளையின் முன்பும் பணிவற்று / ஒரு நட்சத்திரம் போல் / எனது கிளையில் உனது தேவ மலர்’ என கலில் ஜிப்ரானைப் போல் காதல் ததும்பும் வரிகள் வறட்டுத்தனமான நவீன கவிதை வெளியில் கிடைக்கப் பெறுவது ஓர் ஈர அனுபவம்.

அரூபமான ஒரு விஷயத்தை புலன் அனுபவமாகக் காட்சிப்படுத்துவது கவிஞனுக்கு சவால் நிறைந்தது. அத்தகைய இடங்களை நேர்த்தியோடு எதிர் கொள்கிறார் தேவேந்திர பூபதி. ‘காய்ந்த சருகுகளின் கீழ் / மரவட்டையாய் சுருண்டு கிடக்கிறதென் காலம்’ எனும் போது இறவாத்தன்மையுடைய காலம் காத்திருப்பின் தனிமையில் மரவட்டையாய் சுருண்டு கிடக்கிறது என்கிறார். அழகான, வலிமையான கற்பனை.

நெருக்கடிகளின் மத்தியில் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் அற்புதமான வாய்ப்புகள்தான் கற்பனை ‘மனிதர் மிதக்கும் நகரில் வளைவிற்கு திசைகாட்டும் என் விரல் முனையில் துளிர்க்கிறது ஒரு பச்சை நிறத் தாவரம்’ என்கிறார் கவிஞர். அதிகாரத்தின் முள் முனைகளில் இருந்து தப்பிக்க விரும்பும் தாபங்களை இக்கவிதை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. ‘கோப்பு பார்க்கும் புறா / தங்கள் சிறகுகளை உதிர்த்துவிட்டு / இறுதியில் ஓய்ந்து விடுகின்றன’ என்கிறது ‘இராஜ விசுவாசம்’ கவிதை. ஆகாயத்தில் மிதந்து திரிந்து இப்பேருலகை தரிசிக்க வேண்டிய புறா அதிகாரத்தின் கண்ணிகளில் சிக்கித் தவிக்கும் அவலத்தை வெளிக்கொணரும் கவிதை.

இத்தொகுப்பில் உப்பு அதிகம் விவாதப் பொருளாகியிருக்கிறது. மனித உணவு, உடல், கழிவு எல்லாம் உப்பால் ஆனது. உடலுக்கும், கடலுக்கும் உப்பு ருசி. உப்பு ஒரு மெய்ப் பொருள். அதனால்தான் ‘உப்பில் தோன்றி’ ‘உப்பு பதுமையாய்’ ‘இசையால் கடலை உப்பாக்கினான்’ என உப்பு குறித்த சிந்தனை கவிதைகளில் நிறைய இடங்களில் விரவிக் கிடக்கின்றன.

நிறைவாக தேவேந்திரபூபதியின் கவிதைகள் அனுபவச் செறிவும் கவிதை அழகியலும் இணையப் பெற்றவை. தத்துவம், மெய்யியல், காலம், வெளி காமம், உடல், பிரபஞ்சம் என பல மய்யங்களைக் கொண்டவை என வரையறை செய்ய முடியும். இந்த வரையறையை தொடர்ந்து நழுவியும் மீறியும் செல்ல முயல்வதின் மூலம் இக் கவிதைகளின் உயிரோட்டத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com