Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
தமிமீழத் தேசத்தின் குரல் அண்டன் பாலசிங்கம்
இன்குலாப்

எமது தேச சுதந்திரப் போராட்டத்தை உலக
அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின்
மாபெரும் போராட்டப் பணிக்கு மதிப்பளித்து
தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்
பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான்
பெருமை அடைகிறேன்.
                                                    -வே. பிரபாகரன்

எண்பதுகளில் அண்டன் பாலசிங்கத்தைச் சென்னையில் சந்தித்ததாக நினைவு. அவர் பாலாதானா என்று இன்றும் உறுதியாகக் கூறமுடியவில்லை. என்.ஜி.ஓ. ஊழியர் சங்கத்தில் தமிழீழ ஆதரவாளர் கூட்டமொன்றில் பேசிவிட்டுத் திரும்பியபோது என்னுடன் சிறிது நேரம் பேசியபடி வந்தவர் அவராகத் தான் இருக்க வேண்டும். அந்தக் குறுந்தாடியும் மூக்குக் கண்ணாடியும் இன்னும் நினைவில் நிற்கின்றன. இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் படைகளை அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்து அக்கூட்டத்தில் பேசினேன். எனது பேச்சின் நியாயத்தைப் பாராட்டிப் பாலா பேசியதாக நினைக்கிறேன். அவர் பாலா என்பது எனக்குத் தெரியாது. கொஞ்ச காலம் கழித்து அவர் ஒளிப்படத்தை இதழ்களில் பார்த்தபோதுதான் புரிந்து கொண்டேன். பாலசிங்கம், சந்திரகாசன் போன்றோரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இந்திய அரசு ஆணையிட்டபோது அதை எதிர்த்த ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். பாரிமுனையில் குறளகத்துக்கு எதிரே அது நடைபெற்றது.

அண்டன் பாலசிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து, தமிழீழத்தைச் சார்ந்த பிற இயக்கங்கள் கடுமையான விமர்சனத்தை வைத்ததை நான் கேட்டிருக்கிறேன். விடுதலைப்புலிகளின் பிடிவாதமான நிலைப்பாடுகளுக்கு பாலாதான் காரணம் என்று சிலர் கூறினர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் எண்ணங்களுக்கு பாலா கருத்தியல் வடிவம் தந்தார் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பிடிவாதமான நிலைப்பாடு என்பது கூட பெரும்பாலான தமிழீழ மக்களின் விருப்பம் என்பதையும் காலப்போக்கில் புரிந்து கொண்டேன்.

ஸ்ரீலங்காவின் புகழ்பெற்ற நாளிதழான வீரகேசரியில் தான் அவர் தொடக்கத்தில் பணியாற்றினார். செய்திப் பத்திரிகையில் பணியாற்றும் யாருக்கும் உலகச் சன்னல்கள் திறந்திருக்கின்றன. அந்தக் கால ‘சுதேச மித்திரனே’ பாரதிக்கு உலகப் போக்குகளைக் காட்டவில்லையா? அடிப்படையில் மார்க்சீயத்தின் பால் ஈடுபாடு கொண்ட பாலாவுக்கு உலகளாவிய அளவில் நடைபெற்ற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள், தமது தாயகச் சூழலுக்குப் பொருந்தி வருவதை அவர் உணர்த்திருக்க வேண்டும் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்புத் துறை என்பதும் மறுபகுதிகளைப் பார்க்கும் ஒரு திறவுகோல்தான். அதனால் அவருடைய ஈழம் பற்றிய பார்வை என்பது உலகளாவிய விடுதலை பற்றிய பார்வையின் ஒரு கூறுதான்.

தூதரகப் பணியைத் தொடர்ந்து அவர் இலண்டன் சென்று அரசியல் விஞ்ஞானத் துறையில் கல்வி கற்றார். தமது முதல் மனைவியின் இறப்புக்குப் பிறகு இலண்டனில் ஆஸ்திரேலியப் பெண்ணான ஆடேல் அவர்களைச் சந்தித்தார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அடேல் அவர்கள் விடுதலை இயக்கங்களிலும் பெண் விடுதலையிலும் அளப்பரிய ஈடுபாடு கொண்டவர். அவருடைய நேர்காணல்கள் சிலவற்றில் விடுதலைச் சிந்தனைகள் தெறிப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த இணை இலண்டனில் இருந்த காலத்தில் வெளிநாட்டு விடுதலை இயக்கங்களோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட மூன்றாம் உலக மக்கள் தம்மைச் சுரண்டும் வல்லரசுகளுக்கு எதிராக கொரில்லா யுத்தங்களை நடத்திக் கொண்டிருந்த 70-களின் காலம் அது. கொரில்லாப் போர் குறித்து பாலா ஒரு நூலும் எழுதினார்.

அந்த நூலை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரன் படித்தார். இந்தச் சமயத்தில் பிரபாகரன் பற்றிய பெரும்பாலும் வெளி உலகம் தெரியாத ஓருண்மையைச் சுட்ட வேண்டும். பிரபாகரன் நூல்களை வாசிப்பதில் தீராத தாகம் கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்களில் புகுந்து விடுவார். ‘படிப்பதில் எனக்கு வெறி உண்டு’ என்று அவரே ஒருமுறை குறிப்பிட்டார். இப்படி பாலாவின் நூலால் கவரப்பட்டுத்தான் அவருக்கும் பிரபாகரனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அது, நட்பாகவும் தோழமையாகவும் ஆழ வேரோடியது.

விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் பேச நேர்ந்த போதெல்லாம், விடுதலைப் புலிகளின் முதன்மைப் பேச்சாளராகவும், மதிப்புரைஞராகவும் பாலசிங்கம்தான் முன்னி றுத்தப்பட்டார். அத்துடன் இந்தியாவில் நடந்த திம்முப் பேச்சு வார்த்தைகளிலும் அவர்தான் புலிகளின் பேச்சாளராக இருந்தார். இந்திய அமைதிப்படை வந்து வெளியேறிய அந்தக் காலக்கட்டத்தில் பிரேம தாசாவுடன் இயக்கம் நடத்திய பேச்சுவார்தையிலும் பாலா முக்கிய பங்காற்றி இருக்கிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதவும் பேசவும் வல்ல பாலா, பிரபாகரனுடைய பேச்சுகள் பலவற்றை உலகச் செய்தியாளர் கூட்டங்களில் மொழி பெயர்த்தவர்.

தமிழீழ வரலாற்றில் மிகச்சிறந்த அரசியல் தந்திரியாகப் பரிணமித்தவர் பாலா. போர்க்களத்தில் ஒரு தளபதி எதிரிகளின் படை நகர்வுகளுக்கு ஏற்பத் தனது அணிகளை இயக்குவதுபோல் பேச்சுவார்த்தைகளின் போது மிகத்திறனுடன் தனது வாதத்தை நிகழ்த்துபவர். அவருடைய பேச்சுவார்த்தைத் திறனுக்குப் பிரேம தாசாவுடன் நிகழ்த்திய உரையாடலைக் குறிப்பிடுவார். அதில்,

சிங்களப் பேரினவாதத் தீவிரவாதிகளான லலித் அதுலத் முதலி, காமினி திச நாயக்க போன்றோரைப் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள முடியாதவாறு காய்களை நகர்த்தினார்.

தமிழ்மக்களின், பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட ஓரளவு மென்மையான போக்குக்கொண்ட அமைச்சரான ஹமீது ஊடாகப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்தார்.

பிரேமதாசாவுடன் நெருங்கிய நட்புக் கொண்ட ஒருநீதியரசர் பாலாவுக்கும் நண்பர். இவர் மூலம் பேச்சு வார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார். நீக்குப் போக்குடன் பேசத் தெரிந்த பாலா தேவை ஏற்படின் மிக இறுக்கமான நிலைப்பாட்டையும் எடுப்பார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அறிக்கைகளை நெறிப்படுத்தியவர் பாலசிங்கம் தான். உலக அளவில் அரசியல் அரங்கில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உரிய முறையில் அறிமுகப்படுத்தியவர் பாலாதான்.

மிகக் கடுமையான வகையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறுநீரகங்கள் இரண்டும் பழுது பட்டன. பாலாவை வெளிநாடு அனுப்பத் தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார். அதற்கான வசதிகளைச் செய்யுமாறு அப்போதைய அதிபராக இருந்த சந்திரிகாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சந்திரிகா மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட 250 சிங்கள ராணுவ வீரர்களை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை வைத்தார். இரண்டாம் உலகப் போரில் ஸ்டாலினின் மகனைக் கைது செய்த நாஜிப் படைகள், ஸ்டாலினின் மகனை விடுவிக்க, நாஜிப்படைத் தளபதியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், “என் மகன் சாதாரண போர் வீரன்; ஆனால் அவர்கள் கோருவது ஒரு தளபதியை; என்னால் அப்படி ஈடுபட முடியாது” என்று கூறினார். பாலாவும் இத்தகைய முடிவில்தான் நின்றார். “தமது மருத்துவத்துக்காக சிங்கள வீரர்களை விடுதலை செய்ய வேண்டாம்”, என்று கூறினார்.

ஆனால் பிரபாரகன் வேறொரு முடிவெடுத்தார் விடுதலைப்புலிகளின் அதிக வேக விசைப்படகுகளை உபயோகித்து பாலாவையும் அவரது துணைவியார் அடேல்லையும் சர்வதேசக் கடற்பரப்புக்கு அனுப்பி, அங்கிருந்த இயக்கத்தின் கப்பல் ஒன்றில் ஏற்றி இருவரையும் வெளிநாடு ஒன்றுக்கு அனுப்ப தீர்மானித்தார்” இப்பொறுப்பை புலிகளின் கடற்படைத் தளபதி சூசையிடம் ஒப்படைத்தார். தளபதி சூசை நல்ல செய்தியுடன் திரும்பி வரும்வரை கடற்கரையில் பிரபாகரன் காத்திருந்தார்.

பின்னர் இதுபோல, நலிவுற்ற பாலாவுக்கு மருத்துவ உதவி அளிக்க இந்திய அரசும், ஜெயா அரசும் மறுத்ததும் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது சந்திரிகாவின் தாயார் சிரிமாவோ பண்டாராவுக்கு இங்கு தான் மருத்துவம் பார்க்கப்பட்டது.

இந்தியாவில், இந்திய அரசின் உதவியோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது புலிகளின் விருப்பமாக இருந்தது. அதை ஜெ. அரசு கடுமையாக எதிர்த்தது. 2002 இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு ‘மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டுக்கு’க் கலந்து கொள்ளச் சென்ற நாங்கள், பாலசிங்கத்தையும் அவர் துணைவி யாரையும் அவர்களது இல்லத்திலேயே சந்தித்தோம். அப்பொழுது “இந்திய அரசு இணக்கமின்றி நடப்பது குறித்து வருத்தத்தோடு பாலா குறிப்பிட்டார். தேசிய இனங்களை ஒடுக்கும் ஓர் அரசிடம் இருந்து வேறு எதை நீங்கள் எதிர்பார்க்க முடியும்?” என்று கேட்டேன். அவர் முகம் வாடியது.

களமாடிப் பல வீரர்கள் ஈழ விடுதலைப்போருக்கு உயிரை ஈந்துள்ளனர். பாலாவின் பங்களிப்பு அரசியல் அரங்கு சார்ந்தது. அவருக்கு நேர்ந்த சிறுநீரகப் பழுதும், புற்று நோயும் அவர் பெற்ற காயங்கள் தாம். தமிழீழம் மிகச்சிறந்த அரசியல் தந்திரி ஒருவரை இழந்து நிற்கிறது



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com