Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
சிற்றலைகள் வெகு அரிதாகவே மணல் வெளியை தொடுகின்றன
- பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி
- எச். பீர்முகஹம்மது

நவம்பர் இதழ் தொடர்ச்சி

கத்தர்

கத்தர் பஹ்ரைன் மாதிரியே பவள வர்த்தகத்தைக் கொண்டதாக இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் கத்தர் அல்-தனி குடும்பத்திடம் இருந்தது. இவர்கள் சவூதியின் நஜ்த் பகுதியிலிருந்து கத்தரில் குடியேறியவர்கள். அப்துல் வஹ்ஹாபை பின்தொடர்ந்தவர்கள். கத்தரில் பவளம், மீன் மற்றும் மண்பாண்ட வர்த்தகத்தை செய்தனர். அதே காலத்தில் கத்தரின் வடபகுதி பஹ்ரைன் கலீபா குடும்பத்திடம் இருந்தது. இறுதியில் பிரிட்டிஷ் தலையீட்டின் பெயரில் கலீபா குடும்பம் வெளியேறியது. இந்நிலையில் 1872ஆம் ஆண்டு கத்தரின் பெரும்பகுதியை துருக்கி கைப்பற்றியது. இதனால் அல்-தனி குடும்பம் கத்தரை விட்டு குவைத்திற்குச் சென்றது. முதல் உலகப்போர் மத்திய கிழக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பல நாடுகள் அதன் சுயத்துவத்தை அடைந்தன. இதன் நீட்சியாக துருக்கி கத்தரை விட்டு வெளியேறியது. கத்தர் மீண்டும் அல்-தனி குடும்பத்தின் கையில் வந்தது. இதன் பிறகு பிரிட்டனுக்கும் கத்தருக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் படி அல்-தனி குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பின் ஜாசிம் கத்தர் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

பிரிட்டிஷ் அதிகாரத்திலான கத்தரில் ஷேக் அப்துல்லா பொறுப் பேற்ற பிறகு அந்நாட்டு வளர்ச்சிக்கான வரைவுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1939ல் இங்கு பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு கத்தர் பெட்ரோலிய கழகம் உருவாக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி பிரிட்டன் கத்தரை லாவகமாகச் சுரண்டியது. இரண்டாம் உலகப் போர் வரை கத்தரில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த தருணத்தில் ஐம்பது, அறுபதுகளில் கத்தர் பெட்ரோலை ஏற்றுமதி செய்தது. இதன் விளைவாகக் கத்தர் துரித வளர்ச்சி நிலையை அடைந்தது. பள்ளிக் கூடம், மருத்துவமனை போன்றவை உருவாக்கப்பட்டன.

இதன் போக்கில் பிரிட்டன் 1968ல் தன் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்பது அரபு பகுதிகளை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது. விருப்பமுள்ளவர்கள் தன்னுரிமை அடையவோ அல்லது ஒன்றாக இணைந்து புதிய அரசை உருவாக்கவோ செய்யலாம் என்றது. ஆனால் அவர்களுக்கிடையேயான மோதலானது பிரிந்து செல்வதையே தேர்ந்தெடுத்தது. இதன் விளைவாக கத்தர் 1971ல் தனி சுதந்திர நாடானது. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பெட்ரோலை முன்வைத்து பல தொழில்கள் உருவாக்கப்பட்டன. 1974ல் கத்தர் பெட்ரோலியக் கழகம் உருவாக்கப்பட்டது. 1980-1990களில் நடந்த ஈரான் - ஈராக் போரில் கத்தர் ஈராக்கை ஆதரித்தது. இதனால் ஈரானின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது. பின்னர் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்த போது தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டது.

பன்னாட்டுப் படைகளுக்கு முகாமை அமைக்க தன் நாட்டில் இடமளித்தது. தொண்ணூறுகளுக்குப் பிறகு கத்தர் அபரிதமான வளர்ச்சி நிலையை அடைந்தது. பெட்ரோலிய விளைபொருட்கள் அதிக அளவில் உற்பத்தியாயின. இயற்கை எரிவாயு அதிக அளவில் தேக்கப்பட்டது. இயற்கை எரிவாயு சேமிப்பில் கத்தர் உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்குள்ளவர்களில் பெரும்பான்மையினர் சவூதியின் நஜ்த் பகுதியில் இருந்து வந்தவர்கள். சவூதிகளைப் போலவே கலாச்சார ஒருமை காணப்படுகிறது. பெரும்பான்மையினோர் வஹ்ஹாபிசத்தை பின் பற்றுகிறார்கள். 2003ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த போது அமெரிக்கப் படைகளின் முகாமாக கத்தர் விளங்கியது. 2001ல் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டை நடத்தியதன் மூலம் உலகமயமாக்கலோடு தன்னை ஒன்றிணைத்துக் கொண்டது. சவூதி, பஹ்ரைன் வரிசையில் கத்தர் அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இருக்கிறது.

ஐக்கிய அரபு குடியரசு

ஐக்கிய அரபு குடியரசானது துபாய், ஷார்ஜா, அபுதாபி, ராசல், கய்மா, புஜைரா, உம்முல்-குவைன், அஜ்மன் ஆகிய ஏழு அமீரகங்களை கொண்டதாகும். ஒவ்வொன்றும் தன்னாட்சி அமைப்பை பெற்றுள்ளது. இவை அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உடன்படிக்கை மாகாணங்கள் என்றழைக்கப்பட்டன.

இஸ்லாம் இங்கு ஏழாம் நூற்றாண்டில் அறிமுகமாகிறது. அதற்கு முன்பு சுமேரிய, பாபிலோனிய கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் எமிரேட்டின் கடற்கரைகள் கொள்ளைக்கும், கடத்தலுக்கும் பெயர் பெற்றிருந்தன. அதன் காரணமாக இவை கடற்கரைக் கொள்ளை என அழைக்கப்பட்டன. 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதன் கடற்கரைக் கட்டுப்பாடு முழுவதும் பிரிட்டன் வசம் வந்தது. பிரிட்டானிய ரோந்துக் கப்பல்கள் இங்கு வலம் வந்தன. இதன் எல்லாப் பகுதிகளையும் உயர் குடும்பத்தினர் ஆண்டு வந்தனர். இவர்களோடு பிரிட்டன் 1835ல் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இதன்படி இதன் கடற்பகுதி முழுவதும் பிரிட்டனுக்குச் சொந்தம். மேலும் நிலப்பகுதிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை பிரிட்டன் மேற்கொள்ளும்.

இதன் பிறகு எமிரேட்டின் முழுப்பகுதியுமே பிரிட்டன் வசம் வந்தது. 1968ல் பிரிட்டன் எமிரேட்டை ஒன்றிணைப்பது குறித்து ஷேக்குகளிடம் கலந்தாலேசித்தது. அவர்கள் தங்களுக்குள் கூடி ஒருங்கிணைவது குறித்து சிந்தித்தனர். பின்னர் ராசல் கய்மா தவிர மற்ற ஆறு மாகாணங்களும் ஐக்கிய அரபு குடியரசாக இணைந்தன. அதே ஆண்டில் பிரிட்டன் விலகிக் கொண்டது. முதலில் கத்தர், பஹ்ரைன் ஆகியவையும் ஐக்கிய அரபின் கீழ் தான் இருந்தன. பின்னர் 1971ல் தனித் தனியாக விலகிக் கொண்டன. 1973ல் ராசல் கய்மா தன்னை எமிரேட்டோடு இணைத்துக் கொண்டது. அபுதாபியை தலைநகராகக் கொண்ட எமிரேட் உலகை நோக்கி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

மத்திய கிழக்கின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் ஐக்கிய அரபானது மேற்கு நாடுகளை ஒத்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது. நீலவானிற்கு மிக அருகில் சமீபித்திருக்கும் கட்டிடங்கள் நிலத்தை பிரதிபலிப்புச் செய்கின்றன. பன்னாட்டுக் கம்பெனிகள் அனைத்தும் இங்கு தங்கள் ஸ்தாபனங்களை நிறுவியுள்ளன. ஜெபல் அலியை தலைமை இடமாகக்கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளன. எமிரேட் மத்திய கிழக்கிலேயே அதிக அளவில் வெளிநாட்டினரைக் கொண்டுள்ளது. இது உள்நாட்டு மக்கள் தொகையை விட அதிகம். அறுபதுகளில் ஈரானியர்கள் அதிக அளவில் வந்து குடியேறத் தொடங்கினர். பாதுகாப்பற்ற எமிரேட்டின் எல்லைப் பகுதியே அதற்குக் காரணம். பிறநாட்டு மக்கள் தொகையில் இந்தியர்கள் குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். எமிரேட்டை மற்ற நாட்டினர் United Kerala என்றழைக்கிறார்கள். 1957ல் அங்கு நடந்த மகத்தான அக்டோபர் புரட்சியின் விளைவு இது. கட்டுமானத் துறையில் அதிகம் வெளிநாட்டினர் பணிபுரியும் விளைவு இதுதான். புஜைராவின் மலைமுகடுகளில் உடைக்கப்படும் பாறைத்துகள்களானது சிவப்பு வரிகளால் தன்னை எழுதிச் செல்கிறது.

எமிரேட்டியர்களின் கலாச்சார நடைமுறை வித்தியாசமானதாகத் தெரிகிறது. இவர்கள் பதூயீன் நாட்டார் இசையை பின் தொடர்கிறார்கள். கையில் குச்சியை வைத்துக் கொண்டு ஆடும் நடனமானது எமிரேட்டின் கடைத் திருவிழாக்களின் சிறப்பம்சம். வளைகுடாவின் முதல் பெண் பாப்பாடகரான அஹ்லம் எமிரேட்டியர் தான். மத்திய கிழக்கின் வர்த்தகத் தலைநகரமாக எமிரேட் வளர்ச்சியடைந்த போதும் சவூதி மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பிரச்சனை இதற்கு இடையூராக உள்ளது. ஈரான் - ஈராக் போரின் போது எமிரேட் ஈராக்கிற்கு ஆதரவு அளித்தது. அதே நேரத்தில் ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பிற்கெதிராக எதிர் நிலைப்பாட்டை மேற்கொண்டது. சில நேரங்களில் மிகை பெட்ரோல் உற்பத்தியால் ஈராக்கின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது. உலகில் அதிக அளவு தனி நபர் வருமான வீதத்தைக் கொண்டிருக்கும் எமிரேட் ஒரு மரத்தின் உதிர்ந்த இலையாக நகர்ந்து வருகிறது.

ஓமன்

ஓமன் திறந்த, அலைவடிவ மலைப் பிரதேசங்களையும், குன்றுகளிலான பாலைவனத்தையும் கொண்டது. இது வரலாற்றின் போக்கில் நெடியது. இஸ்லாம் இங்கு ஏழாம் நூற்றாண்டில் பரவல் பெறத் தொடங்கியது. தொல்லியல் ஆய்வுகள் ஓமன் 5000 ஆண்டுகள் முந்திய வரலாறு கொண்டதாகத் தெரிவிக்கின்றன.
சுமேரியர்கள் இதனை தாமிரநாடு என்றழைத்தனர். தாமிரத்தொழில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கிறது. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சிதைவுகள் இதை உறுதி செய்கின்றன. நபித் தோழரான அம்ருபின் ஆஸ் கி.பி. 630ல் அன்றைய ஓமனின் மன்னர்களான அப்த் மற்றும் ஜாபர் ஆகியோரிடம் சென்று நபியின் செய்தியை தெரிவிக்கிறார். இதன் பிறகு அவர்கள் இஸ்லாமைத் தழுவுகிறார்கள்.

ஓமன் மேற்கே யமன் மற்றும் சவூதியையும் வடக்கே எமிரேட்டையும் எல்லையாகக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட காலம் வரை கிழக்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள் ஓமனின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதன் பிறகு அதனிடமிருந்து விடுவிக்கப்பட்டன. ஓமனானது 1508 முதல் 1659 வரை போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் துருக்கிய உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் அஹ்மத் இப்னு செய்த்அல் யரூபி என்பவரால் உதுமானிய பேரரசு அகற்றப்பட்டது. இவரே ஓமனின் முதல் சுல்தான். யரூபிய வம்சம் ஓமன் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இவர்கள் ஓமன், சான்சிபார், மற்றும் பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளை வைத்திருந்தார்கள்.

ஓமானிய கடற்பகுதி பாரசீகத்தில் இருந்து வடக்காகவும், இந்தியப் பகுதியில் இருந்து கிழக்காகவும், ஆப்பிரிக்காவிலிருந்து தெற்காகவும் சுற்றி அமைந்திருக்கிறது. இதன்வழி மற்ற வளைகுடா நாடுகளை விட ஓமன் கடல் வர்த்தகத்திற்கு எளிதான ஒன்றாக இருக்கிறது. ஓமானியர்களில் பெரும்பகுதியினர் குடியேற்றக்காரர்களே. ஓரு பகுதியினர் யமனிலிருந்தும் மற்றவர்கள் வட அரேபியாவிலிருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள். ஓமன் உலகில் அதிக அளவு இபாதி முஸ்லிம் பிரிவினரைக் கொண்ட நாடாகும். இங்குள்ள அரபு முஸ்லிம்களில் 70% இவர்கள்தான். இபாதி முஸ்லிம் பிரிவானது ஹாரிஜாக்களின் மித வடிவமாகும். கலீபாவான உதுமான் கி.பி.656ல் அவருடைய எதிரிகளால் கொல்லப்படுகிறார்.

இது அவரின் ஆதரவாளர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்குப் பின் வந்த கலீபாவான அலியிடம் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டிக்குமாறு கோரிக்கை வைத்தனர். உதுமானின் உறவினரும் சிரியாவின் கவர்னருமான முஆவி யா- இப்னு அபு சுப்யான் என்பவர் இதை வலியுறுத்தி வட ஈராக் பகுதியான சிபின் என்ற இடத்தில் வைத்து அலியுடன் போர் புரிந்தார். இதன் விளைவில் அலிக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமரசம் ஆனது. இதன்படி உதுமான் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அலியின் இந்த முடிவு அவரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அலி ஒரு பாவிக்கு துணைபோய் விட்டார் என்றனர். பின்னர் அவரிடமிருந்து விலகி தனியாகச் செயல்பட்டனர். இவர்களே ஹாரிஜாக்கள். நஹ்ரவான் என்ற இடத்தில் வைத்து அலி இவர்களைத் தோற்கடித்தார்.

இவர்களுடன் பதுயீன்கள், மற்றும் மவாலிகள் ஆகியோர் சேர்ந்து கொண்டனர். இவர்கள் பரம்பரை ஆட்சி முறையை எதிர்த்தனர். மாறாக இமாம்கள் மற்றும் கலீபாக்கள் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றனர். இவர்கள் குர்ஆன் வழி ஆட்சி முறையை முன்வைத்தனர். பாவச்செயல் என்பது எல்லோருக்கும் பொதுவானதாகும். இதில் கலீபா அல்லது சாதாரண மனிதர் என்ற வேறுபாடு இல்லை. கலீபாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி சரியானது. ஆனால் அவர்களின் போக்கு தான் திசைமாறியது என்றனர். இதை ஏற்காத, தங்களைத் தவிர்த்த பிற முஸ்லிம்கள் அனைவரும் காபிர்களே. அவர்களுக்கு எதிராகப் போரிடுவதை கடமையாகக் கருதினர். இவர்களின் விரிவாக்கம் ஈரான், ஈராக், ஓமன், வடஆப்பிரிக்கப் பகுதிகள் போன்றவற்றிற்கும் நீண்டது. பின்னர் அப்பா ஸிட், உமய்யத் கலிபாக்களால் படிப்படியாக ஒடுக்கப்பட்டனர்.
கி.பி.680ல் ஹாரிஜாக்களின் தீவிர கூட்டத்தினர் பஸ்ராவிலிருந்து வெளியேறினர்.

இதில் சில பேர் மிதவாதிகளாக இருந்தனர். அவர்களில் ஒருவரான அப்துல்லா இப்னு இபாத் என்பவர் மிதவாத ஹாரிஜா பிரிவான இபாதி முஸ்லிம்களின் தலைவர். ஓமனின் பெரும் பகுதியாக இருக்கும் இவர்கள் மற்ற முஸ்லிம் பிரிவோடு இணக்கமாகச் செல்லும் கருத்தியல் நடைமுறையை வைத்திருக்கின்றனர். இவர்களின் இமாம் என்பவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கென வழிகாட்டுக் குழு ஒன்று உள்ளது. இவர்கள் அடிமையாக இருந்தாலும் அவர்களால் இமாமாக முடியும் என்ற கொள்கையை கொண்டுள்ளனர். பாவச்செயல்கள் எல்லா மனிதர்களுக்கும் சமமானவை. யாரேனும் பாவச் செயல்கள் புரிந்தால் அவர்கள் நிராகரிப்பவர்களின் பட்டியலில் வந்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் முறைப்படி இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்றனர். இவர்களின் மற்ற பகுதியினர் வட ஆப்பிரிக்காவின் சான்சிபரிலும், ஜெரூபா தீவிலும் வசிக்கின்றனர்.

ஓமனின் சுல்தான் உள்நாட்டு இபாதி முஸ்லிம்களின் கலகத்தை எதிர்கொள்ள 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் துணையைத் தேடினார். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அதைப் படிப்படியாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதற்கிடையில் இடதுசாரி சார்புடைய ஓமன் மக்கள் விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது. இவர்கள் ஓமனின் விடுதலைக்காக நாற்பதுகளில் கலகத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரிட்டன் துணையுடன் அந்தக் கலகம் முறியடிக்கப்பட்டது. இதன் பின்னர் அறுபதுகளில் ஜ.நா. சபை தீர்மானத்தின் படி பிரிட்டன் முழுமையாக வெளியேறியது. 1964ல் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலானது ஓமனின் வளர்ச்சிக்கான துவக்கப் புள்ளி. மூன்றாண்டுகளில் ஓமன் பெட்ரோலை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. உள் கட்டமைப்பு வசதிக்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நூற்றாண்டின் இறுதியில் ஓமன் மில்லியன் பேரல்களை ஒரு நாளில் உற்பத்தி செய்வதற்கான இலக்கை எட்டியது. இயற்கை எரிவாயுவையும் குறிப்பிட்ட அளவில் சேமித்து வைத்திருக்கிறது. 1990ல் ஓமன் குவைத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. பன்னாட்டுப் படைகளுக்கான தளத்தை தன் நாட்டில் அமைத்துக் கொடுத்தது. ஓமானியர்களின் கலாச்சாரம் மற்ற வளைகுடா நாடுகளை விட வித்தியாசமாக இருக்கிறது. இவர்கள் மற்றவர்களைப் போன்று தலைவட்டுகளை அணியாமல் தொப்பியை அணிகின்றனர். 1970ல் சுல்தான் செய்த் அவருடைய மகனால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அவருக்குப் பின் வந்த அஹ்மத் ஹப்பாஸ் மற்ற இனக் குழுக்கள் மீது அரசு அடக்கு முறையை பயன்படுத்தினார். இவருடைய காலம்தான் உள் நாட்டுப் புரட்சியின் உச்சநிலை. இபாதி முஸ்லிம் பிரிவினரின் எதிர் செயல்பாடுகளோடு ஓமன் தன்னை முன்னகர்த்திச் செல்கிறது.

குவைத்

குவைத் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் வரலாற்றைத் துவக்கி வைத்து விட்டுச்செல்கிறது. கிரேக்கர்கள் இங்குள்ள தீவுகளில் குடியேறத் தொடங்குகிறார்கள். இவர்கள் இகாரஸ் என்றழைக்கப்பட்டார்கள். நீண்ட இடை வெளிக்குப் பின்னர் 17ம்நூற்றாண்டின் தொடக்கத்தில் நஜ்த் பகுதியிலிருந்து இனக் குழுக்கள் இங்கு வந்து குடியேறத் தொடங்குகின்றன. இவர்கள் பின்னாளில் தங்களுக்குள் ஒன்றிணைந்து கொண்டனர். இவர்கள் பனூஉத்ப் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கென பாதுகாப்பு அரணைக் கட்டினர். இது குத் என்றழைக்கப்பட்டது. இதுவே குவைத் ஆனாது. பவள வர்த்தகம் இவர்களிடையே முக்கியத் தொழிலானது. இதனடிப்படையில் இனக்குழுவானது அல்-சபா, அல்-கலீபா, அல்-ஜலகியா என்ற மூன்று பிரிவாகப் பிரிந்தது. இவர்களில் அல்-சபா கூட்டத்தினர் குவைத்தின் ஆளும் வர்க்கத்தினராயினர். 18ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் சபா இனக் குழுவைச் சேர்ந்த அப்துல்லா அல் சபா என்பவர் குவைத்தின் முதல் மன்னரானார்.

இதற்கிடையே மற்ற இரண்டு இனக்குழுக்களும் அதிகாரத்திற்கான போரில் இறங்கின. இதற்கிடையில் உதுமானியப் பேரரசின் அச்சுறுத்தலும் இருந்தது. இதில் இருந்து தப்பிக்க மன்னர் பிரிட்டனின் துணையை நாடினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பிரிட்டன் அந்நாட்டில் தன் படைக் களத்தை அமைத்தது. பின்னர் உதுமானியப் பேரரசுக்கும் பிரிட்டானிய படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விளைவாக உதுமானியப் பேரரசு தோற்கடிக்கப்பட்டது. குவைத் பிரிட்டனின் காலனி ஆனது. அல்-சபா பிரிட்டனின் பினாமியாக மாறியது. இதன் பின்னர் குவைத் உட்கட்டமைப்பு வசதிக்கான நடவடிக்கைகளில் இறங்கியது.
1938ல் குவைத் கம்பெனி பிரிட்டன் துணையுடன் பெட்ரோலைக் கண்டெடுத்தது. மற்ற நாடுகளைப் போலவே இது ஒரு துவக்கப் புள்ளி. ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு தான் குவைத்தால் பெட்ரோலை ஏற்று மதி செய்ய முடிந்தது.

1961ல் பிரிட்டன் படைகள் குவைத்தை விட்டு வெளியேறின. இந்நிலையில் ஈராக் அதே ஆண்டில் குவைத்தை உரிமை கோரியது. இதனால் குவைத் மீண்டும் பிரிட்டனின் உதவியை நாடியது. பின்னர் ஈராக் அதை கைவிட்டது. முடிவாக குவைத் சுதந்திர நாடானது. ஷேக் அப்துல்லா சலீம் அல் - சபா அதன் மன்னரானார். 1963ல் குவைத் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினரானது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (Organisation of petroleum exporting countries) உருவாக மிக முக்கியக் காரணியாக விளங்கியது. பெருகிய பெட்ரோல் வருவாயை வைத்து மற்ற அரபு நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்தது. எழுபதுகளில் நடந்த அரபு - இஸ்ரேல் போரின் போது குவைத்திய படைகள் எகிப்தின் சூயஸ் கால்வாயில் முகாமிட்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 1965ல் குவைத் சோவியத் ரஷ்யாவுடன் உறவை ஏற்படுத்தியது.

வளைகுடா நாடுகளில் முதன் முதலாக சோவியத் ரஷ்யாவுடன் உறவை ஏற்படுத்தியது குவைத்தான். இது மற்ற நாடுகளுக்கு அதன் மீதான மனஸ்தாபத்தை உருவாக்கியது. ஈரான் - ஈராக் போரில் குவைத் ஈராக்கிற்கு ஆதரவளித்தது. இதனால் ஈரானிய படைகள் குவைத் எண்ணெய் கிணறுகளை தீப்பற்றி எரியச் செய்தன. ஆனால் அப்போர் முடிந்த பிறகு குவைத்தின் எண்ணெய் உற்பத்தி பாதியாகக் குறைந்தது. இதனை சரிசெய்ய எண்ணெய் கிணறுகளை புனரமைக்கும் பணியில் குவைத் ஈடுபட்டது. இதன் விளைவாக எண்ணெய் உற்பத்தி அதன் இலக்கை எட்டியது. இதனால் குவைத்தின் எண்ணெய் சர்வதேச சந்தையில் போட்டிக்கான இடத்தை அடைந்தது. எண்ணெய் விலை பாதியாகக் குறைந்தது. இது ஈராக்கிற்கு கோபத்தை ஏற்படுத்தியது. (இதன் பின்புலத்தில் அமெரிக்காவின் தகிடுத்தனத்தையும் நாம் காண வேண்டியதிருக்கிறது).

ஏற்கனவே இருந்து வந்த எல்லைப் பிரச்சினை எண்ணெய் பிரச்சினை ஆகியவற்றை காரணிகளாக எடுத்துக் கொண்டு ஈராக் 1990ல் குவைத் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கத் தலைமையில் 28 நாடுகள் அடங்கிய பன்னாட்டுப் படையானது ஈராக் மீது போர்த் தொடுத்து குவைத்தை மீட்டுக் கொடுத்தது. இந்தப் போரில் ஈராக் குவைத்தின் பெரிய எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்தது. இது குவைத்திற்கு பெரும் பொருளாதாரச் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் குவைத் மறுகட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குவைத் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. எதிர்க் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றன. இருந்தும் சபா பரம்பரையே ஆட்சியில் தொடர்ந்தது. இதற்கிடையில் குவைத் மன்னர் ஜாபர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் பொருட்டு 1999ஆம் ஆண்டு ‘பெண்கள் வாக்குரிமை’ மசோதாவை கொண்டு வந்தார்.

வளைகுடா நாடுகளில் ஒருசில மட்டுமே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்திருக்கின்றன. இந்த மசோதா பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தோற்கடிக்கப் பட்டது. பின்னர் பெண்ணியவாதிகளின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2005 மே மாதம் நிறை வேற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடைபெற்றத் தேர்தலில் ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்த பிறகு குவைத்தின் வளர்ச்சி நிலையில் சிறிது தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. தேங்கி நிற்கும் உள்முரண்பாடுகளோடு ஒரு பெட்ரோல் குழாயின் நேர்கோட்டில் குவைத் நகர்ந்து வருகிறது.

மேற்கின் பார்வையில் பாரசீக வளைகுடா தண்ணீருக்குள் இருக்கும் உள்ளங்கையாக பிரதிபலிக்கிறது. வளைகுடா நாடுகளின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை நாம் நோக்கும் போது அது முழுவதும் பிரிட்டானிய வளைகுடாவே. இஸ்லாமிய உலகின் பெரும் சவாலாகவும், எதிரோட்டமாகவும் இருந்து வரும் வஹ்ஹாபிசத்தின் பிறப்பிடமும் இதுதான். பிரிட்டன் அப்துல் வஹ்ஹாப் மூலம் லாவகமாக சாதித்த இவ்விசயங்கள் வரலாற்றின் தேய்ந்த பக்கங்களாகவே இருக்கின்றன. இங்குள்ள அரபு இனத்தவர்களுக்கு தாங்கள் இறைவனுக்கு நாடி நரம்பை விட சமீபமாக இருப்பவர்கள் என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது. ஒட்டு மொத்த அரபுகளின் செயல்பாடும் இதை பிரதிபலிப்பதாகவே உள்ளது. வளைகுடாவின் பெட்ரோல் மூளையும் பிரிட்டனே. “எமக்கு ஒரு துளி பெட்ரோலானது ஒரு சொட்டு இரத்தத்திற்கு சமமாகும்”.

1918ல் முதல் உலகப் போர் முடிவில் பிரஞ்சு பிரதமர் சொன்ன வார்த்தைகள் இவை. “ஒரு தேசிய இன அங்கீகாரம் என்பது பெட்ரோலிய வளத்தை வைத்தே உலகில் செல்லுபடியாகும்” என்றார். அமெரிக்க ஜனாதிபதி வில்சன். வியட்நாம் போரில் அமெரிக்காவின் தோல்விக்கு எண்ணெயும் ஒரு காரணமாகும் என்பதை பிந்தைய நாட்களில் போரியல் நிபுணர்கள் வெளிப்படுத்தினார்கள்.

இரண்டாம் உலகப்போரில் பெட்ரோலானது மிக முக்கிய இயங்கு காரணியாக விளங்கியது. வளைகுடா மீதான மேற்கின் கண்காணிப்பிற்கான காரணம் இது தான். ‘வளைகுடா’ என்ற சொல்லே ஈராக் (1991) மீதான பன்னாட்டு படைப் போரின் போது தான் உலகில் முதன் முதலாக குவியமானது. மேற்கின் மூளையை அடிப்படையாகக் கொண்ட imition ஆக இருந்து வரும் வளைகுடா நாடுகள் வளரும் நாடுகளின் மனித உழைப்பை உள்வாங்கிக் கொண்டு நதியின் சலனமாக நகர்ந்து வருகின்றன. எட்வர்ட் செய்த் பின் வருமாறு குறிப்பிட்டது வளை குடாவிற்கு சரியாகவே பொருந்து கிறது “மேற்கில் நீங்கள் ஒருவரை கிண்டலடிக்க வேண்டுமென்றால் அவரை கிழக்கத்தியவாதி (Orientalist) என்று அழையுங்கள்”.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com