Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
புரியாமையில் வாழும் புரிதல்கள்
-களந்தை பீர்முகம்மது

அண்மையில் இந்தியாவில் - குறிப்பாக முஸ்லிம்களை உலுக்கிய தூக்குத் தண்டனைகள் இரண்டு. கோணல் மாணலாகக் கிடக்கின்ற ஒரு வழக்கு விசாரணை மன்றத்திலிருந்து (நீதி மட்டுமே வழங்கப்படுவதாய் இருந்தால் மட்டும்தானே, நாம் அதனை நீதிமன்றமெனச் சொல்ல முடியும்.) சதாம் உசேனுக்கு ஒரு தூக்குக்கயிறு. இன்னவிதமான தீர்ப்பு மட்டும்தான் வந்தாக வேண்டும் என்ற இலக்கை நோக்கி நகர்த்தி வைக்கப்பட்ட அந்த வழக்கு விசாரணை மன்றம், முறையான அரசியலமைப்போ - ஜனநாயகமோ இல்லாத நாட்டிலிருந்து செயல்பட்டது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், முறையாக அரசியலமைப்பு கொண்ட நாடு என்றும் எல்லாக் குடிமகன்களுக்கும் மன்னரென கிரீடம் சூட்டி அழகு பார்க்கிற சுதந்திரதேசமென்றும் சொல்லப்படுகின்ற இந்தியாவிலிருந்தும் கூட முறையற்ற ஒரு தூக்குக்கயிறு கொடுக்கப்பட்டுள்ளது அஃப்சல் குருவுக்கு! தடியால் அடித்துப் பழுக்கவைக்கப்பட்ட இரண்டு “நீதி”களிலிருந்து இரண்டு தூக்குக் கயிறுகள்!

இப்போது கதை இதைப் பற்றியதென்று; அஃப்சலுக்கு எதிரான தூக்குத் தண்டனையை எதிர்த்து நாடுமுழுவதிலும் நடைபெறும் கண்டனக் கூட்டங்களுக்கு முஸ்லிம்கள் பெருமளவில் வந்துகொண்டு இருப்பதைப் பற்றி! இவர்களின் பங்கேற்பு உள்ளபடியே மகிழ்ச்சியைத் தருகின்றது. தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் மட்டுமே முஸ்லிம்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு, அப்புறம் அரசியலின் வாடையே இல்லாத சொந்தமான வாழ்க்கை மண்டலங்களுக்குள் பிரவேசித்து விடுவது அவர்தம் வழக்கம். இராமர்கோவில் இயக்கம் துவங்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தை எதிர்நோக்கி மிகப்பெரும் அபாயங்கள் பாசிச சக்திகளின் மூலமாக மட்டுமல்லாது, அரச பயங்கரவாதத்தின் மூலமும் வந்தடைந்தபடியே உள்ளன.

ஆனாலும் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் நரம்பு மண்டலத்தில் எப்போதுமே சோகைபடிந்த இரத்தம்தான் ஓடியபடி இருக்கின்றது; அதனால் எப்போதாவது வீறுகொண்டு எழுந்து, எப்போதுமே தூங்கிக் கிடப்பதென ஒரு சாபம் உண்டு முஸ்லிம் சமூகத்திற்கு! கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கூட்டமொன்றில், அஃப்சலுக்கு எதிரான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி குல்தீப்நய்யார், நீதிபதி சுரேஷ், எஸ்.வி.ராஜதுரை, கனிமொழி உள்ளிட்டப் பலர் பேசினர்.

முஸ்லிம்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அதில் பேசிய பெரியார் தி.க.வைச் சேர்ந்த கொளத்தூர் மணி கூறிய ஒரு விஷயம் கவனத்திற்குரியது. ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும், அவருடைய இரண்டு மகன்களையும் எரித்துக் கொன்ற தாராசிங்கிற்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டாலும் நாங்கள் அந்தத் தண்டனையையும் எதிர்ப்போம் என்று சொன்னார். எனவே, அன்றையக் கூட்டத்தில் சதாம் உசேன், அஃப்சல் ஆகிய முஸ்லிம்களுக்காக மட்டும் அவர்கள் வாதாடவில்லை. அவர்களின் எதிர்ப்பு தார்மீக ரீதியிலானது. தீர்ப்பு என்பதன் பெயரால் ஒரு உயிரைப் பறிக்கும் செயல்பாடுகளை அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். கடந்த காலங்களில் உலகெங்கும் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் கசப்பானதும், அதிர்வூட்டக் கூடியதுமான முறையிலேயே இருந்துள்ளன. மேலும், மனித உரிமைகள் குறித்து ஏற்பட்ட விழிப்பும் மரண தண்டனைக்கான எதிர்ப்பு முனையைக் கூர்தீட்டுகின்றது.

ஒருமுறை நபிகள் நாயகம் கூறியதாக அவருடைய துணைவியார் ஆயிஷா (ரலி) சொன்ன ஒரு சம்பவம் இது: “மக்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் தங்களிடையே கௌரவமானவன் திருடினால் அவனை விட்டுவிடுவர். தங்களிடையேயுள்ள பலவீனன் திருடினால் அவனுக்குத் தண்டனை தருவர். அதன் காரணத்தால்தான் அவர்கள் அழிக்கப்பட்டனர்”. (ஆதாரம்: புலூகுல் மராம். தமிழில் மவ்லவி எம்.எம்.அப்துல்காதிர் உபரி.) இப்போதும் இதேநிலை தொடர்கின்றது. இந்தியாவில் சாதீய மனோபாவமும் வடக்கத்திய உணர்வுகளும் மொழிபேதமும் கூடுதலான முறையில் அநீதியின் வெளிப்பாடுகளுக்குத் துணை புரிகின்றன. எனவே, ஒருவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் குறித்து வெவ்வேறு விதமான கருத்துகள் தோன்றுவதில் உள்ள நியாயங்களை உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்நிலையில் முஸ்லிம்களின் நிலைபாடு இன்னமும் நெகிழ்வானதாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே இஸ்லாமியத் தண்டனை முறைகள் குறித்து நீண்ட நெடுங்காலமாகவே விவாதங்கள் நடந்தபடியுள்ளன.

முஸ்லிம்கள் பலநாடுகளை ஆளும் சூழலிலும், முறையான இஸ்லாமிய ஆட்சி எந்தவொரு நாட்டிலும் இல்லையென்கிற சூழலிலும் இஸ்லாமியத் தண்டனை முறைகள் மட்டும் நிறைவேற்றப்படுகின்றன. அதேசமயத்தில் முஸ்லிம்களின் ஆட்சிப்பீடம் இல்லாத நாட்டில், இஸ்லாம் விரும்பும் தண்டனை முறைகள் வழங்கப்படும்போது முஸ்லிம்கள் பரவலாக எதிர்ப்பை மேற்கொள்வதையும் காணலாம். எனவே, முஸ்லிம்கள் இரண்டு நிலைகளிலுமே ஊசலாடுகிறார்கள். இன்றைய சூழல் முஸ்லிம்களின் மீது அதை ஒரு நிர்ப்பந்தமாகவும் செலுத்துகின்றது. இன்று உலகளாவிய முறையில் முஸ்லிம்கள் கடும் சவாலை எதிர்கொள்கிறார்கள். நாடுகளுக்கிடையேயும் இனங்களுக்கு இடையேயுமான மோதலாக அது முற்றிவருகின்றது. எந்தவொரு வல்லரசும் முஸ்லிம்களுக்கோ, முஸ்லிம் நாடுகளுக்கோ ஆதரவாக இல்லாத நிலையில் ஒரு சர்வதேச அமைப்பாகிய ஐ.நா .மன்றமே இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றது. இதனை எதிர்கொண்டு போராடும் சக்தியற்றுக் கிடக்கின்றது முஸ்லிம் சமூகம். சவாலை எதிர்கொண்டு வெல்லும் சிந்தனைகளும் இல்லாதிருப்பது நிலைமையை மேலும் முறுக்கிக் கொண்டு போகின்றது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க. ஆண்டால் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பாசிச நடவடிக்கைகள் செயல்படும் என்பது ஒரு மூடநம்பிக்கை. காவல் துறை, உளவுத்துறை, இராணுவம் உள்ளிட்ட அரசு இயந்திரம் முழுவதுமே பாசிச சக்திக்குள் சிக்கி உள்ளது. இடதுசாரிகளான கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவின் கீழே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியே இருந்தபோதும் இந்து பாசிசம் செயல்படாமலில்லை. அஃப்சல் வழக்கில் காங்கிரஸ் முரண்பாடான கருத்துகளைப் பேசுகின்றது; பாதுகாக்கச் சொன்ன பாபர்மசூதி இடிக்கப்படுகிறது; எடுக்கப்பட வேண்டிய இராமர்சிலை பாதுகாக்கப்படுகின்றது; மும்பை வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை நிரூபித்த நீதிபதி கிருஷ்ணா ஆணையத்தைக் காலம் மறந்துவிட்டது; காங்கிரசும் மறந்துவிட்டது.

காங்கிரஸின் எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்தக் கிடைத்த கிருஷ்ணா கமிஷன் அறிக்கையின் மீது படர்ந்து கிடக்கும் மௌனம் காங்கிரசுக்குத் தேவைப்படத்தானே செய்கின்றது. தீபாவளியும் விநாயகர் சதுர்த்தியும் வெடிகுண்டுகள் நிரம்பிய முஸ்லிம்களால் சீர்குலைக்கப்படும் என மத்திய - மாநில அரசுகள் வதந்திகளைப் பரப்பியபடியே உள்ளன. சதாமிற்கு முறையான விசாரணையில்லை என்று சொல்லி விட்டு, அது உள்நாட்டு விவகாரம் என்று ஒதுங்கிவிடவும் முடிகின்றது. எந்தவொரு வன்முறையானாலும் முஸ்லிம்கள் உடனே சந்தேகத்திற்கு ஆளாகின்றனர்; சுற்றிவளைத்துக் கைது செய்யப்படுகின்றனர்; வழக்கு - விசாரணை என்று ஒருபுறம் படுஸ்பீட்; இன்னொருபுறம் வழக்குமில்லை - விசாரணையும் இல்லை எனப் பல்லாண்டுகால இழுத்தடிப்பு! எனவே, கொடிய தண்டனைகள் முஸ்லிம்களைக் குறிவைத்தபடியே உள்ளன. சதாமும் அஃப்சலும் நேர்மையான நீதியின் கீழே தண்டனை பெறவில்லை.

யாராயிருப்பினும் ஒருவர் குற்றவாளியா அல்லவா என்பதனை வழக்கு விசாரணை மன்றம் எப்படித் தீர்மானிக்கின்றது? கண்களுக்குத் தெரியாத முதல் நீதிபதி காவல் துறைதான். ஒருவனைக் குற்றவாளியாக மாற்றும் அனைத்துப் பொய்களையும், சட்ட ஷரத்துகளையும் காவல்துறை தான் தயாரித்து வழங்குகிறது. அஃப்சல் வழக்கில் காவல்துறை பத்திரிகையாளர்களின் முன்னாலேயே குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியாகப் பகிரங்கமாகச் செயல்பட்டது. நேரிலேயே இவ்வளவு நிர்ப்பந்தங்கள் இருக்குமாயின், வெளியுலகப் பார்வை தீண்டாத இடங்களில் வழக்கை நடத்த முனையும் அரசும் காவல்துறையும் என்னென்ன மோசடி வேலைகளை யெல்லாம் செய்யும்? சட்டமும் காவல்துறையும் இராணுவமும் ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் முறைகளைப் பார்க்கும்போது, தண்டனைகள் என்பவை நீதி சார்ந்து வழங்கப்படுவது அல்ல; விருப்பு வெறுப்புகளே தீர்மான சக்தியாகும்.

இதற்கு முஸ்லிம் நாடுகள் எப்படி விதிவிலக்கானவையாக இருக்க முடியும்? அண்மையில் எகிப்து அதிபராக மீண்டும் ஹோஸ்னி முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதையொட்டிப் படிக்க நேர்ந்த ஒரு குறிப்பின்படி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராகச் செயல்பட்டாலும், அவரைத் தோற்கடிக்க முயற்சி செய்தாலும் அவ்வாறு செயல்படும் - முயற்சி செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கதி அதோ கதிதான். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தன் சூழலில் உறுதிகொள்ள முடியாமல் தவிக்கும் போது, ஒரு பாமரனின் அவலத்தை என்ன சொல்ல? இன்றைய அரபுலகம் “கற்கால” மன்னராட்சி முறைமைக் குரியவை. அங்கும் அரசியல் - பொருளாதார - நிறபேத மற்றும் வர்க்க வேறுபாடுகள் உள்ளன. பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு கூட்டம், மதத்தைத் தன்னுடைய சுயநலனுக்கான கருவியாகவே எடுத்துக் கொள்ளும்.

அரச பீடங்களின் விருப்பு வெறுப்புகளை, மதக்கோட்பாடுகளால் மிக அருமையாக விளக்கம் கூறும்படி ஆக்க முடியும். அரபுலகின் குடிமக்கள் இஸ்லாம் வலியுறுத்தும் தண்டனைகளுக்கு அருகில் உள்ளார்கள். அரசோ, இஸ்லாத்திற்கு வெகு தொலைவில் இருக்கிறது. எனவே, ஒரு முஸ்லிமின் நிலை அவருடைய சொந்த மண்ணிலேயே அதிபயங்கரமானதுதான். அதையும் விட வெளிநாட்டுப் பணியாளர்கள் அரபுலக செல்வந்தர்களின் அடிமைகளாக மிரட்டி வேலை வாங்கப்படுகின்றனர்; குறைந்த கூலியே பெறுகிறார்கள்; அவர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

இஸ்லாம் அதன் ஆன்மீகச் சாரத்திலிருந்து திரட்டித்தரும் மாண்புகளை முஸ்லிம்கள் ஆளும் நாடுகள் கபளீகரம் செய்கின்றன. இஸ்லாம் விரும்புகின்ற சமூக நோக்கம் எதுவோ, அதனையே சிதறடித்துவிடுகின்ற ஆட்சி முறைக்கு முஸ்லிம்களும் உரியவர்களே! ஒரு கொலைக் குற்றவாளி அவருடைய மரண தண்டனையிலிருந்து விடுபட வழியுண்டு. கொலையுண்டவரின் குடும்பத்தினர் அதனை மன்னிக்கும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்படலாம். ஆனால் மன்னிப்பு என்பது மனதின் உயர்நிலைப் பண்புகளினால் ஆனதல்ல; அதற்காகக் கொலையுண்டவரின் குடும்பம் விரும்பும் ஒரு பெருந்தொகை கையளிக்கப்பட வேண்டும். இந்தப் பெரியதொகையை வழங்கும் ஆற்றல்படைத்த ஒரு மரணதண்டனைக் குற்றவாளி மீண்டுமொருமுறை பிறக்கும் அரிய வாய்ப்பைப் பெறுகிறார்.

ஏழைக் குடிமகனுக்கு இவ்வாறு மீண்டும் பிறக்கும் சாத்தியமில்லையே! ஒருவன் பெரும்பணம் கொள்ளாதவனாக இருந்தால் அவனுடைய உயிர்வாழும் உரிமை தட்டிப் பறிக்கப்படுகிறது. எனவே, அவன் “எவ்வகையிலேனும்” பணம் சம்பாதிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான். விருப்பத்திற்கு மாறான பணவேட்டையை யாரும் நியாயப்படுத்த முடியாது. தண்டனைகளில் பொருளாதார அளவுகோலைப் புகுத்தும்போது அது சமூகநீதியைப் பதம் பார்த்துவிடும். சமூக ஏற்றத் தாழ்வை நீக்கும் போதுதான் இஸ்லாமிய நீதிகூடச் சரியாகச் செயல்பட முடியும்!

கொலைவழக்கு, திருட்டு, பாலியல் தொழில், ஊழல் என இஸ்லாம் தண்டனைகளைப் பாகுபடுத்தியே உள்ளது. அடிப்படையில் இவை அனைத்துமே ஒரு தனி மனிதனின் அகவுணர்வுகள் சார்ந்து மட்டுமே நிகழ்வதில்லை! இக்குற்றங்களுக்கான மிகப்பெரிய பங்களிப்பு ஒரு சமூக வாழ்வின் நெருக்கடிகள் மற்றும் அவலங்களிலிருந்து உருவானவை. எனவே, குற்றத்தை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பே தண்டனைக்குரியது. அதற்கான தண்டனை என்பது அதனை மாற்றியமைப்பதுதான்.

தண்டனைகளும் சட்டங்களும் இறைவனால் அருளப்பட்டவை, அவற்றை மாற்றுவதற்கோ கைவிடுவதற்கோ நாம் யார் என்று முஸ்லிம் சமுதாயம் கேள்வி கேட்கிறது. அவை இறைச்சட்டங்களே என்ற போதும், மனிதர்களின் கண்காணிப்பின் கீழேதான் அவை செயல்படுகின்றன. இஸ்லாமிய வரலாற்றிலேயே சூழலுக்கேற்ப தண்டனைகளை கலீபாக்கள் மறுவரையறை செய்திருக்கிறார். திருடினால் கரம் துண்டித்தல் என்பது இஸ்லாமியத் தண்டணை முறை. உமர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் வறுமையின் நிர்ப்பந்தத்தில் நடைபெற்ற திருட்டுக்கு இந்தத் தண்டனையிலிருந்து விதி விலக்கு வழங்கினார். மரண தண்டனையின் எதிர்ப்பாளர்கள் கூறிவரும் அனைத்துக் காரணங்களும் இங்கும் பெருந்தக் கூடியனவே! இஸ்லாம் கலிபாக்களின் ஆட்சியைத்தான் பரிந்துரை செய்தது; ஆனால் இன்றைய மன்னராட்சிகளில் சிக்கி உள்ள பெரும்பாலான நாடுகள் முஸ்லிம்களால் ஆளப்படுபவையே! இஸ்லாம் மன்னராட்சியையே நிராகரித்திருக்கும் போது, அந்த மன்னர்களின் ஆட்சி எப்படி மார்க்கச் சட்டங்களை - தண்டனைகளை அமுல்படுத்த முடியும்?
இஸ்லாமியக் கோட்பாடுகள் இன்று பல்வேறு குழுக்களால் பல்வேறு விதமான விளக்கங்களுக்கு உட்பட்டு வருகையில் இஸ்லாமியத் தண்டனைச் சட்டங்கள் மட்டும் எப்படி ஒரே கோணத்தில், ஒரே பார்வையில் செயல்படும்?

இன்றுள்ள தண்டனை முறைகள் அரச பயங்கரவாதத்தை நியாயத்தின் பெயர் கூறி தேசபக்த முகமூடி அணிந்து செப்பம் செய்து கொள்கின்றன. அரசாட்சிக்கு எதிரான சக்திகளைக் களையெடுப்பதில் இத் தண்டனை முறைகள் அரசவம் சத்திற்கு உதவிகள் புரிகின்றன. இன்றைய முஸ்லிம் சமுதாயம் வெடி குண்டுகளுடன் சம்பந்தப் படுத்தப்பட்டுள்ளது. இராக் மண்ணின் பாலஸ்தீனத்தின் விடுதலை வீரர்கள் தம்மைத்தாமே வெடி குண்டுகளாக்கிக் கொள்கிறார்கள். வெடிகுண்டுகளால் சிதையப்போவதையே ஓர் அச்சமாக அவர்கள் கருதாதபோது, ஒரு தூக்குக் கயிறுக்கு அவர்கள் எப்படி அஞ்சுவார்கள்? அச்சமூட்டுவதின் மூலம் எந்த மனமாற்றத்தையும் உருவாக்க வழியில்லை. இதைப் பல்லாயிரம் ஆண்டு அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறந்த கல்வியையும் நல்ல மாண்புகளை உருவாக்கும் சமூக அமைப்பையும் கொண்டே குற்றச் செயல்பாடுகள் தோன்றாமல் தடுக்க முடியும்.

இந்திய முஸ்லிம்கள் ஷரீயத் சட்டத்தை அமுல்படுத்தும்படி சில சமயங்களில் அரசை வலியுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள்; ஆனால் ஷரீஅத் கூறும் தண்டனை முறைகளுக்காக அவர்கள் அரசை நிர்ப்பந்திப்பதில்லை. முஸ்லிம்கள் ஆளாத போது தண்டனை முறைகளை எப்படிக் கோரிப்பெற முடியும் என்பது அவர்களின் வினா. அந்த அச்சம் நியாயமானதும் ஆகும். இஸ்லாமிய நாடுகளில் இன்று ஜனநாயகம் இல்லை. நடப்புலகின் கசப்பான நெருக்கடியில் முஸ்லிம் மன்னர்கள் அடிபணிந்து கிடக்கிறார்கள்; முஸ்லிம் குடிமக்களோ கொந்தளித்தபடி உள்ளார்கள். எனவே, மனநிலைகள் மாறிப் போயுள்ளன. மனநிலைகள் மாறி விட்டால் மன்னர்கட்கும் குடி மக்களுக்குமான இஸ்லாமும் மாறி விட்டது என்றே அர்த்தம். இஸ்லாமியத் தண்டனை முறைகளை இக்காரணங்களைக் கொண்டும் நாம் விவாதிக்கலாம். நமக்குத்தேவை சற்றே விசாலமான மனப்பாங்குதான்!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com