Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
தாஜா செய்யப்படுகிறார்களா? தாழ்த்தப்படுகிறார்களா?
எம். அசோகன்

ஒரு பக்கம் முஸ்லிம்களை தாஜா செய்வதாக சங்பரிவார் ஓயாமல் மற்ற கட்சிகளை குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறது. நாடு சந்திக்கும் எல்லா தீமைகளுக்கும் இதுதான் காரணம் என்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தீர்களானால் மத வன்முறைகளுக்கும், அரச வன்முறைகளுக்கும் அதிகம் இலக்காவது முஸ்லிம்கள்தான். மதச்சார் பற்ற கட்சிகள் சிறுபான்மையினருக்கு ஏராளமான சலுகைகள் வழங்குவதாகவும் சங்பரிவார் புருடா விட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன ஏது என்று விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே பலர் அதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவோ இதற்கு நேர்மாறானது மட்டுமல்ல. அதைவிடவும் மோசம்.

முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, கல்வி நிலைமை குறித்து ஆய்வு செய்த பிரதம மந்திரியின் உயர் மட்டக்குழுவான ராஜேந்திர சச்சார் கமிட்டி, நேஷனல் சாம்பிள் சர்வே, மத்திய மனித வளத்துறை அமைச்சகம் மற்றும் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அதிகாரமளிக்கும் குழுவின் கல்வி சம்பந்தப்பட்ட உபகுழு போன்றவற்றின் அறிக்கைகள் இந்த உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன. அப்பட்டமாகவும், கூச்ச நாச்சமில்லாமலும் பொய் பேசுகிறவர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கிற தென்றால் அது ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கம்தான்.

மிகப்பெரும்பாலான முஸ்லிம்களுக்கு மிக நியாயமான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்படுகின்றன. கல்வி, சுகாதாரம் மற்றும் இதர பொது சேவைகள், வேலை வாய்ப்பு போன்றவைகள் அவர்களுக்கு கிட்டத்தட்ட கிடைப்பதேயில்லை என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு நிலைமை மிக மோசம். இந்திய சமுதாயத்தில் பல நூறு ஆண்டுகளாக ஒடுக்கி அடக்கி அடிமட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் தலித்துகளை விடவும் சில துறைகளில் கீழே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.

முஸ்லிம்களில் 43 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்துக் குடியிருப்புகள், முஸ்லிம் சேரிகள் என்று குஜராத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட மதக்கலவரங்களின் மூலம் “முஸ்லிம்களை சேரிமயமாக்கும்” போக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதன் விளைவு ஒப்பீட்டளவில் தலித்துகளை விட அதிகமாக மின்சாரம் இல்லாத சேரிகளிலேயே முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இந்தியாவில் மின்சாரம் இல்லாத கிராமங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.

தலித்துகளில் 23 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கிடைக்கிற தென்றால் முஸ்லிம் விஷயத்தில் அது வெறும் 19 சதவீதம் மட்டுமே. கிராமப்புறங்களில் பொதுவாக குழாய் நீர் 25ரூ வீடுகளுக்குக் கிடைக்கிறதென்றால் முஸ்லிம் விஷயத்தில் அது வெறும் 10ரூ மட்டுமே.

முஸ்லிம்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே உணவுக்காக பொது விநியோக முறையைப் பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்கள். தலித்துகள் விஷயத்தில் இது 32 சதவீதம்.

தலித்துகளில் 47 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள முடிகிறது என்றால் முஸ்லிம்களில் இது வெறும் 40 தான்.

1970களின் மத்தியப் பகுதி வரை முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட சற்று பரவாயில்லை என்பதாக இருந்தது. ஆனால் இதரப் பிற்படுத்தப்பட்டவர்களை விட மோசமாகத்தான் இருந்தது. இப்போதோ தலித்துகளை விடவும் கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது?

இதற்கு என்ன காரணம் என்பதை சொல்வதற்கு முன்பே யூகித்துவிடலாம். கடந்த 25 ஆண்டு காலத்தில் இந்துத்துவம் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சக்தியாக வளர்ந்திருப்பதும், ஆறு ஆண்டுகாலம் மத்திய அதிகாரத்தில் இருந்ததும், இன்னும் பல மாநிலங்களில் தனியாகவோ கூட்டாகவோ ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக கட்சி அரசியலைத் தாண்டியும் அதன் கருத்துக்களுக்கு செல்வாக்கு இருப்பதும் காரணம். சாதிக் கொடுமை தாளாமல் மதம் மாறிப் போனால் வாழ்க்கை நிலைமை முன்பை விட மோசமாகிப் போய் விட்டது.

இன்று நகர்ப் பகுதிகளில் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் எண்ணிக்கை தலித்துகளைவிட 10 சதவீதம் குறைவாகவே இருக்கிறது. கிராமப்புற பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை இந்த வித்தியாசம் இப்போது வெறும் 4 சதவீதம்தான். ஆனாலும், முன்பு முஸ்லிம் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தலித்துகளைவிட 12 சதவீதம் அதிகமாக இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் தலித்துகளின் வாழ்நிலையில் ஏதோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது என்று எண்ணி விடக் கூடாது. பொதுவாக இன்றைய உலகமயக் கொள்கைகளினால் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவு, சுகாதாரம், கல்வி போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. அதில் மிகப்பெரிதும் பாதிக்கப்படுவது தலித்துகளும் முஸ்லிம்களும் என்பதுதான் விஷயம். இதற்கு வகுப்புவாதம் காரணமின்றி வேறென்ன?

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் 66 சதவீதம் என்றால் முஸ்லிம்கள் விஷயத்தில் அது வெறும் 59 தான். கிராமப்புற முஸ்லிம் குழந்தைகளின் சரிபாதி பேர் கல்வியறிவு அற்றவர்கள். நகர்ப்புறங்களிலோ இது மூன்றில் ஒரு பங்கு. 6 வயதிலிருந்து 13 வயது வரையிலான முஸ்லிம் குழந்தைகளில் எட்டில் ஒருவர் பள்ளிக்குச் செல்வதில்லை. 6லிருந்து 10 வயது வரையிலானப் பிரிவில் 65 சதவீதம் பேர் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு அடுத்த வயதுப்பிரிவில் (11-14) இது வெறும் 33 சதவீதம்தான். அதாவது ஒரு சில வருடங்களுக்கு மேல் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள். ஆதவன் முழுவதுமாக உதிக்கும் முன்பே அவர்களைப் பொறுத்தவரையில் கிரகணம் பிடித்து விடுகிறது.

பள்ளிகளில் சேர்க்கப்படும் அனைத்துப் பிரிவு குழந்தைகளின் தேசிய சராசரி 95ரூ தலித் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் இது 90ரூ. முஸ்லிம்கள் விஷயத்தில் இது 80ரூ தான்.

கிராமப்புற துவக்கப்பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம் குழந்தைகளில் ஆறில் ஒருவர் மட்டுமே உயர்நிலைப்பள்ளி வரை செல்கிறார்கள். நகர்ப்புறங்களில் இது 28 சதவீதம். பட்டப்படிப்பு வரை செல்லும் முஸ்லிம் ஆண்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களைப் பொறுத்தவரை கேவலம் 1.3 சதவீதம்தான். பெண்கள் விஷயத்தில் இன்னும் கேவலம் வெறும் 0.3 சதவீதம்தான். நகர்ப்புறங்களுக்கு இது முறையே 5.1 மற்றும் 2.5 ஆக இருக்கிறது.

மேலும் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிற விஷயத்திலும் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் இதர இந்துக்கள் இடையே வேறுபாடுகள் உள்ளன. முஸ்லிம்களில் 23 சதவீதம் பெற்றோர் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தலித்துகளில் இது 17 ஆகவும், இதர இந்துக்கள் விஷயத்தில் இது 10 ஆகவும் இருக்கிறது. மொத்தத்தில் இந்திய சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதையே உணர்த்துகிறது. போதுமான வருமானமின்மையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதவர்களை ஒப்பிட்டால் முஸ்லிம்களைவிட தலித்துகளே அதிகம்.

அதே நேரத்தில் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை வெறும் மதக்கல்வி புகட்டும் மதரஸாக்களுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள் என்றொரு மாயை இருக்கிறது. ஆனால் 3லிருந்து 4 விழுக்காடு முஸ்லிம் குழந்தைகள் மட்டுமே மதரஸாக்களில் சேர்க்கப்படுகிறார்கள். இதுதான் சச்சார் அறிக்கை சொல்லும் உண்மை. முஸ்லிம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொதுவான பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகிறார்கள். ஆனால் அத்தகைய பள்ளிகளுக்குச் செல்லும் பாதைகள் இவர்களுக்கு “அடைக்கப் பட்டிருக்கின்றன”.
வீடு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர பல முக்கியமான விஷயங்களிலும் இதே பரிதாப நிலைமைதான். இரண்டே இரண்டு விதிவிலக்குகள். ஆண்-பெண் விகி தாச்சாரம் மற்றும் பெண் குழந்தைகள், இந்துக்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களில் ஆண்-பெண் விகிதாச்சாரம் பெண்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அதே போல் பெண்சிசு இறப்பு விகிதமும், பெண்சிசுக் கொலையும் முஸ்லிம்களில் குறைவே. 1998-99ல் பெண்சிசு இறப்பு விகிதம் பொதுவாக லட்சத் திற்கு 73 ஆக இருந்தது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலோ இது வெறும் 59 தான். இந்துக்களில் இது 77 ஆகவும், கிறிஸ்தவர்களில் இது வெறும் 49 ஆகவும் இருந்தது.

பர்தா அணிகிற பழக்கம் குறித்த மிகையான எண்ணங்களின் காரணமாக இந்துப் பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் அதிக பாரபட்சத்திற்கு உள்ளாகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் முந்தைய பத்தியில் சொல்லப்பட்ட தகவல்கள் இக்கருத்து தவறானது என்று உணர்த்துகின்றன. ரீதுமேனன் மற்றும் ஜோயா ஹாசன் ஆகியோர் நடத்திய முஸ்லிம் பெண்கள் நிலை குறித்தான இது வரையிலும் பெரிய ஆய்வு பொதுவாக நிலவும் கருத்துக்களிலிருந்து மாறுபட்டதானதும், சிக்கலானதும் ஆன கருத்துக்களை தெரிவிக்கின்றது. முஸ்லிம் ஆண்கள் இயற்கையிலேயே மதவெறியர்கள், வன்முறையாளர்கள் என்று பொய்யுரைக்கும் இந்துத்துவவாதிகள் முஸ்லிம் பெண்களின் அவல நிலை குறித்து வடிக்கும் கண்ணீர் முதலைக் கண்ணீர் என்பதே உண்மை.

ஒரு சமூகப்பிரிவின் நிலை குறித்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் வேலை வாய்ப்பில் அதற்கென்ன பங்கு கிடைக்கிறது என்பது மிக முக்கிய மானதாகும். 25லிருந்து 45 வயதிற் குட்பட்ட முஸ்லிம் ஆண்களில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் சுய வேலை பார்ப்பவர்கள். அதாவது 50 சதவீதம், தலித்துகளில் இது 28 சதவீதம்தான். இதர ஹிந்துக்களில் 40 சதவிதம். முறையான வேலைகளில் இருப்போர் ஹிந்துக்களில் 25 சதமானம் என்றால் முஸ்லிம்களில் இது வெறும் 18 தான்.

சராசரியாக மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 15.4 சதவீதம் இருக்கும் 12 மாநிலங்களில் ராஜேந்தர் சாச்சர் குழு சேகரித்த விவரங்களின்படி அம்மாநிலங்களில் உள்ள அரசு வேலைகளில் 5.7 சதவீதத்தில் மட்டுமே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒப்பீட்டளவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம். மொத்த மக்கள் தொகையில் அவர்களது விகிதாச்சாரம் எவ்வளவோ அதில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே அரசு வேலைகள் கிடைத்துள்ளன. மகாராஷ்டிராவிலோ இது வெறும் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. கேரளாவில் இது 4.2 சதவீதம். மேற்கு வங்கத்தில் இது வெறும் 4.2 விழுக்காடுதான்.

(எனினும், மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை “தேசப்பிரிவினையின் போது முஸ்லிம்களில் நவாபுகள், நிலப்பிரபுக்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்குச் சென்று விட்டனர். சுதந்திரத்திற்குப் பின்னர் எல்லைப் புற மாநிலங்களிலிருந்து அலை அலையாக எண்ணற்ற முஸ்லிம்கள் வங்கத்திற்குள் வந்துள்ளனர். எப்படியாவது பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அண்டை மாநிலங்களிலிருந்து ஏழை முஸ்லிம்கள் கல்கத்தா நோக்கி வருவதென்பது இன்றும் தொடர்கிறது. ஆயினும் இத்தகைய நிலைமை தொடர்வதை நியாயப்படுத்துவதாக இதனை எடுத்துக் கொள்ள கூடாது.

இடது முன்னணி அரசாங்கம் 1977ல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியிருக்கின்றது. பஞ்சாயத்து அமைப்புகளின் மூலமாக மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் பரவலாக்கப்பட்டிருப்பதன் வாயிலாக உள்ளாட்சி அமைப்புகளில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் என்பது அவர்களது ஜனத்தொகையின் விகிதாச்சாரத்திற்கேற்ப உள்ளது. நிலச்சீர்திருத்தம் வெற்றி பெற்றிருப்பதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு கணிசமான அளவில் பயன் தந்திருக்கிறது” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வார இதழ் “பீப்பிள்ஸ் டெமாக் கரசி” தலையங்கம் எழுதியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

மத்திய அரசுப் பணிகளிலும் நிலைமை மோசம்தான். முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெறும் 4.9ரூ மட்டுமே. பொதுத்துறை நிறுவனங்களில்7.2ரூ, ரயில்வேயில் 4.5ரூ, நீதித்துறையில் 7.8ரூ, சுகாதாரத் துறையில் 4.4ரூ, போக்குவரத்துத் துறையில் 6.5ரூ, உள்துறையில் 7.3ரூ, கல்வித்துறையில் 6.5ரூ, இத்துறைகளில் உள்ள மொத்த வேலைகளில் அவர்களுக்குக் கிடைத்திருப்பது இவ்வளவுதான்.

உயர்பதவிகளில் நிலைமை இதைவிட மோசம். ஐஏஎஸ் அதிகா ரிகளில் 2.2, ஐஎப்எஸ் அதிகாரிகளில் 1.6, ஐபிஎஸ் பதவிகளில் 3 சதவீதம் தான். இந்திய உளவுத் துறை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் இதர விவிஐபி பாதுகாப்புப் படைகளில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. பல்வேறு துணை ராணுவப்படைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் பெயரளவிற்கு மட்டுமே இருக்கிறது (1லிருந்து 5 விழுக் காடு) மாநிலக் காவல்துறைகளிலும் நிலைமை இதுபோல்தான். அவர்களது மக்கள் தொகைக்கும் மொத்தக் காவலர்களில் அவர்களின் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது.

அசாம் மக்கள் தொகையில் 30.92ரூ முஸ்லிம்கள் காவல்துறையிலோ வெறும் 10.55ரூ தான் பீகாரில் இது முறையே 16.53ரூ மற்றும் 5.94ரூ, குஜராத்தில் 9.06ரூ மற்றும் 5.94ரூ, ஜம்மு காஷ்மீரில் 66.97ரூ மற்றும் 56.36ரூ, கர்நாடகாவில் 12.33ரூ மற்றும் 6.71ரூ, மராட்டியத்தில் 10.60ரூ மற்றும் 4.71ரூ, தமிழ்நாட்டில் 5.56ரூ மற்றும் 0.11ரூ, திரிபுராவில் 7.95ரூ மற்றும் 2.01ரூ, உத்திரப்பிரதேசத்தில் 18.50ரூ மற்றும் 4.24ரூ, மேற்கு வங்கத்தில் 25.25ரூ மற்றும் 7.32ரூ, டெல்லியில் 11.72ரூ மற்றும் 2.26ரூ. ஆனால் ஆந்திராவிலோ மக்கள் தொகையில் 9.17ரூ முஸ்லிம்கள், காவல்துறையில் 13.25ரூ! மொத்தமுள்ள 77,850 காவலர்களில் முஸ்லிம்கள் மட்டும் 10,312 பேர்!

எனினும் மதக்கலவரங்களின் போது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் முஸ்லிம்களுக்கு
விரோதமாக இந்துத்துவவாதிகள் போல் நடந்து கொள்வதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அது ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் தன்மைகளைப் பொருத்தே அமைகிறது. (இதன் அர்த்தம் காவல்துறை முற்றிலும் மதச்சார்பற்றதாக இருக்கிறது என்பதல்ல). சில உதராணங்களைப் பார்ப்போம். 2004ம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 88,524 காவலர்கள் இருந்தனர். அவர்களில் வெறும் 99 பேர் மட்டுமே முஸ்லிம்கள்! அது போல் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களிலும் காவல்துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவு. ஆனால் இம்மாநிலங்களில் மதக்கலவரங்கள் குறைவு. அப்படியே யாராவது தூண்டிவிட்டு நடந்தாலும் அவை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

அதே நேரத்தில் இம்மாநிலங்களைவிட முஸ்லிம்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் இருக்கும் குஜராத் மற்றும் மராட்டியத்தில் என்ன நிலைமை என்பதை மீண்டும் சொல்லவும் வேண்டுமோ? திட்டமிட்டு முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்ட மாநிலங்கள் அவை. இங்கெல்லாம் காவல் துறையின் சீருடை காக்கிநிறமா அல்லது ரத்தக்காவி நிறமா என்கிற சந்தேகமே இல்லை. ரத்தக்காவி நிறம்தான். அது போலவே ஆந்திரப் பிரதேசமும், ஹைதராபாத் நகரமும் சுதந்திர இந்தியா கண்ட படுபயங்கரமான மதக் கலவரங்களில் சில நடந்த இடம். காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்டது என்கிற குற்றச்சாட்டிற்கு பலமுறை உள்ளான மாநிலம் ஆந்திரப் பிரதேசம். இவ்வளவு ஏன். ஜம்மு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலம். காவல்துறையிலும் அவர்கள்தான் பெரும்பான்மை. ஆனாலும் அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறை அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ராணுவத்தில் வெறும் 2 விழுக்காடுதான் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆம் அங்கு கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை. இப்படியொரு கணக்கெடுப்பு மதச்சார்பற்ற ராணுவத்தில் மதஉணர்வுகளை உருவாக்கிவிடும் என்று ராணுவம் மறுத்துவிட்டது. காரணம் என்னவோ நியாயம் போல் தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலைமை தெரிந்து கொண்டு குறைகளைச் சரி செய்யும் வாய்ப்பு இதனால் பறிக்கப்படுகிறது.

இப்படி எல்லாப் பணிகளிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது. ஆனால் சிறைச் சாலைகளில் அவர்களுக்கு “மிக அதிகமான பிரதிநிதித்துவம்” கொடுத்துள்ளது நமது மதச்சார்பற்றக் குடியரசு. காவலர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். கைதிகளாக! ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிறையிலிருப்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்துக்களை விட முஸ்லிம்கள் இரண்டரை மடங்கு அதிகமாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் அவர்களின் மக்கள் தொகை 10.6 விழுக்காடு. ஆனால் ஒட்டுமொத்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கையிலோ 40.6 விழுக்காடு. தமிழ்நாட்டிலும் கூட இதுதான் நிலைமை. மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 5.6 விழுக்காடு. சிறைக் கைதிகளோ 9.6 விழுக்காடு. அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. திரைப்படங்களில் வில்லன்களுக்கும், வில்லனின் அடி யாட்களுக்கும் சிறுபான்மையினர் பெயர் வைப்பது சரிதான் என்றெண்ணி விடாதீர்கள். வாழும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் சிற் சில குற்றங்கள் செய்வது சகஜம் தான். அது இந்துவாக இருந்தாலும் சரி. சிறுபான்மையினராக இருந்தாலும் சரி.

ஆனால் இப்படி அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளில் நூற்றுக்கு அறுபதுக்கும் மேலானோர் விசாரணைக் கைதிகள். இது எதை உணர்த்துகிறது? பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து சரமாரியாக கைது செய்து அடைக்கப்படுவதைக் குறிக்கிறது. பொடாச் சட்டம் அத்தகையதுதான் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதை பாஜக இன்று வரை முஸ்லிம்களை தாஜா செய்யும் வேலை என்று உளறிக் கொண்டிருக்கிறது. ஒன்று முஸ்லிம்களை ஒழித்துக் கட்ட வேண்டும் அல்லது பிடித்து சிறையில் அடைத்து விட வேண்டும் என்ற வெறி கொண்டு அலைகிறது.

அரசியலிலும் கூட முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் வேதனையளிக்கும் விஷயம். குறிப்பாக சட்ட சபை மற்றும் பாராளுமன்றங்களில் இது வரையிலும் மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 21லிருந்து 49க்குள்ளாக மட்டுமே இருந்திருக்கிறது. அதாவது மொத்த எம்பிக்களில் 4.3 விழுக்காட்டிலிருந்து 6.6 விழுக்காடு வரை மட்டுமே. இது அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் பாதிக்கும் குறைவானது. 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தது 1980 மற்றும் 1984களில் அமைக்கப்பட்ட மக்களவைகளில் மட்டுமே. தற்போது அது 36 ஆகக் குறைந்து விட்டது. கடந்த மூன்று அவை களில் விகிதாச்சாரம் 6க்கும் கீழே குறைந்துவிட்டது.

முஸ்லிம் பெண்களின் நிலைமை இன்னும் மோசம். இன்று வரை அமைக்கப்பட்டுள்ள 14 மக்களவைகளிலும் சேர்த்து மொத்தமாக வெறும் 11 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மக்கள் தொகையில் அவர்களது பங்கிற்கேற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தால் 440 பேர் இருந்திருப்பார்கள்! என்னவொரு ஓர வஞ்சனை பாருங்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டு பாஜக எதுவும் பேசிவிட முடியாது. இந்துப் பெண்களில் அது எவ்வளவு பேருக்கு வாய்ப்பு அளிக்கிறது என்று கேட்டால் கையும் களவுமாக பிடிபட்ட திருடன் போல் முழிக்கும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுப்பதில் அது முன்னணியில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயங்குகின்றன. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் தேர்தல் முறையாகும். பதிவான வாக்குகளில் வெறும் கால் பங்கு வாங்கினால் கூட ஒருவர் ஜெயித்துவிட முடியும். வேட்பாளர்களிலேயே அதிக ஓட்டுகள் யார் வாங்குகிறாரோ அவர் வென்றவர். பெரும்பான்மை மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அவர் வென்றவர். இதனால் கட்சிகள் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே களத்தில் இறக்க விரும்புகிறார்கள். இந்துக்களில் ஒரு கணிசமான பகுதி வாக்குகள் கிடைத்தாலும் ஜெயித்து விடலாம் இல்லையா?

மேலும் இந்துத்துவ அரசியல் செல்வாக்கு உயர்ந்துள்ள சமீப காலப்பின்னணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் தொகுதியில் நற்பெயர் பெற்றவர்களாக இருந்தாலும் மதச் சார்பற்ற கட்சிகளே அவர்களை நிறுத்தப் பயப்படுகின்றன. இந்துத் துவக் கருத்துப் பிரச்சாரத்தின் வீச்சும், வீரியமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

மேலும், இந்தத் தனித்தொகுதிகள் விவகாரம். இது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் தொகுதிகளில் பல தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலித்துகள் 50ரூக்கு மேல் இருக்கும் தொகுதிகள் பல பொதுத் தொகுதிகள் பட்டியலில் இருக்கின்றன. இது ஏக காலத்தில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் வாய்ப்பு மறுக்கின்ற ஏற்பாடாகும். இது ஒரு தொகுதியில் எந்தப்பிரிவு (பொது மற்றும் தலித்) மக்கள் அதிகமாக அல்லது கணிசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு அதை ஒதுக்காமல் வேறு மாதிரிச் செய்தால் அதற்கு அப்படித்தானே அர்த்தம் கொள்ள முடியும்?
தொகுதிகளின் மறுசீரமைப்பின் போது பொதுவான விதிகளையும் நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக அறிவிப்பதன் மூலம் அவர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் சச்சார் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. வழக்கம் போல் பாஜக இதை விமர்சித்துள்ளது. தேர்தல் ஆணையம், தொகுதி மறுசீரமைப்புக் கமிட்டி போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை விமர்சிப்பதற்கு ஒப்பாகும் என்று பசப்பியுள்ளது. ஏதோ இத்தகைய அமைப்புகளையெல்லாம் மதிப்பவர்கள் போல.

மக்களவையில் முஸ்லிம்களின் குறைவான பிரதிநிதித்துவத்தை அல்லது பறிக்கப்பட்ட வாய்ப்புகளை அவர்களது மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் தேசிய அளவில் அது 47 சதவீதமாக இருக்கிறது. ராஜஸ்தானில் அது 91 சதவீதம், குஜராத்தில் அது 82, மகாராஷ்டிராவில் 71, மத்தியப் பிரதேசத்தில் 50, தமிழ் நாட்டில் 53 ஆக இருக்கிறது. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் கூட இது 40ஐ தாண்டுகிறது. மாநில சட்டமன்றங்களில் இது இன்னும் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆந்திராவில் 61, பீகாரில் 47, குஜராத்தில் 79, மத்தியப் பிரதேசத்தில் 69, மகாராஷ்டிராவில் 62. மக்களவையோடு ஒப்பிடும் போது ராஜஸ்தானில் இது பரவாயில்லை 50 தான். ஆனால் உத்திரப் பிரதேசத்தில் 39லிருந்து 40 ஆக அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அங்கு எங்களை விட்டால் முஸ்லிம்களைக் காப்பாற்ற வேறு யாரும் இல்லை என்கிற கட்சிகள் பல இருக்கின்றன. வெட்கக்கேடு!

இதே புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு உண்மைகளை திரிக்கவும் முடியும். உதாரணத்திற்கு இந்தியாடுடே (டிசம்பர்.6, 2006) என்ன கூறுகிறது பாருங்கள். முஸ்லிம்களில் பட்டம் பெற்றவர்கள் 3.6ரூ. இது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிகளுக்குத் தேவையான தகுதி. இந்தப் பதவிகளில் ஏற்கனவே முறையே 2.2ரூ, 3ரூ, 1.6ரூ முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இது (இந்துக்களோடு ஒப்பிடும்போது) அதிகப் பிரதிநிதித்துவம் என்கிறது. அடைப்புக் குறிக்குள் இருக்கும் இரண்டு சொற்கள் அதில் இல்லை என்றாலும் உள்ளர்த்தம் அதுதான்.

ஆனால் இது அதிகப் பிரதிநிதித்துவமா? மொத்த மக்கள் தொகையில் சுமார் 8.2ரூ இருக்கும் இந்துக்கள் மேற் குறிப்பிட்ட மூன்று உயர்பதவிகளிலும் 90ரூ இருக்கிறார்கள். ஆனால் சுமார் 12ரூ முஸ்லிம்களோ வெறும் 3ரூக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். நியாயமாக இதை இப்படித் தானே ஒப்பிட வேண்டும்? இது ஏதோ முஸ்லிம்கள் மற்றவர் களைவிட நல்ல நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சி அல்லவா? இந்தியா டுடேவின் மை நிறம் காவி போலும்.

மேலும் “...அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நேரம் கச்சிதமாக இருக்கிறது. உத்திரப் பிரதேச மாநிலத் தேர்தல் களுக்கான ஏற்பாடுகள் நடக்கும் இந்த வேளையில் இந்த அறிக்கை வந்திருப்பது “முஸ்லிம்களுக்கு நியாயமான பங்கை” வழங்குவதாகவும், வாக்குறுதிகளை அள்ளி விடுவதற்கு வசதியாக அமைந்திருக்கிறது” என்று எழுதுகிறது. பல அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் என்பதும், நிறை வேற்றப்படுவதற்கு அல்ல. ஓட்டுக்கள் வாங்கும் உத்திதான் என்பதும் உண்மைதான். ஆனால் முஸ்லிம்களுக்கு அந்த வெற்று வாக்குறுதி களைக் கூட வழங்கக் கூடாது என்கிறதா இ.டு.?

இந்திய அரசியல் சட்டம் அனைத்து மதத்தவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் என்று உறுதி மொழி அளிக்கிறது. ஆனால் அந்த உறுதிமொழிக்கு பச்சைத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. சட்டமன்றங்களில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 1949ல் அரசமைப்பு அவை விவாதித்து அந்த யோசனையை நிராகரித்தது. அப்போது “...இது பெரும்பான்மை சமூகத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையாகும். ஏனெனில் இதற்குப் பின் அவர்கள் தங்களால் பிற மதத்தவருடன் பெருந்தன்மையாகவும், நியாயமாகவும் சிறுபான்மையினரின் மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும் நடந்து கொள்ள முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். நாம் அந்த நம்பிக்கைக்கேற்ப நடந்து கொள்வோம்” என்று நேரு கூறினார். ஆனால் அந்த நம்பிக்கைக்கேற்ப இந்தியா நடந்து கொள்ளவில்லை.

உறுதியான ஆக்கப்பூர்வ நடவடிக்கை மூலம் நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். தலித்துகள் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குப் போலவே முஸ்லிம்களுக்கும் Affirmative Action தேவைப்படுகிறது. அதுவும் அஷ்ரப்புகள் அஜ்லப்புகள் மற்றும் அர்ஸால்கள் என்று மூன்று பிரிவினர் இந்திய முஸ்லிம்களில் உள்ளனர். இவர்களில் அஜ்லப்புகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைப் போன்ற அளவிற்கு உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று சச்சார் குழு கூறுகிறது. அர்ஸால்கள் தலித்துகளின் நிலையில் இருக்கின்றனர். அஷ்ரப்புகள் மட்டுமே எந்த சமூகரீதியான (முஸ்லிம்களுக்குள்) உரிமை மறுப்புக்கும் ஆளாகாதவர்கள். ஏனெனில் அவர்கள் ஒன்று இந்து மேல் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களாகவோ அல்லது ஆதியில் வந்த முஸ்லிம்களின் வழித்தோன்றல்களாகவோ இருக்கிறார்கள். இவர்களில் அர்ஸால்கள் தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களாவர். இவர்கள் இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யும் பரம்பரையான தொழில்களையே செய்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் தலித்துகளாகக் கருதப்படுவதில்லை.

மதம் மாறியவர்களை தலித்துகளாகக் கருதாத 1950ம் ஆண்டின் அரசியல் சட்ட உத்தரவு 1956ல் ஒரு முறையும், 1990ல் ஒரு முறையும் திருத்தப்பட்டது. முதலில் சீக்கியர்களாக மாறிய தலித்துகளுக்கும், அடுத்து புத்த மதத்தைத் தழுவிய தலித்துகளையும் தலித்துகள் பட்டியலில் சேர்ப்பதற்காக இத்திருத் தங்கள் செய்யப்பட்டன. ஆனால் இன்று வரை கிறிஸ்தவர்களாகவோ, முஸ்லிம்களாகவோ மாறிய தலித்துகள் அந்தந்த மதத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதன் மூலம் இடஒதுக்கீட்டின் பலன்கள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவை அதிகரித்து அதில் தாழ்த்தப்பட்ட (அர்ஸால்கள்) மற்றும் பிற்படுத்தப்பட்ட (அஜ்லப்புகள்) முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கலாம். இதற்காக 50ரூ உச்ச வரம்பு என்பதை மாற்றி மேலும் உயர்த்தலாம். ஏன் இப்படி உயர்த்தப் பட வேண்டும் என்கிறோம் எனில் இருக்கும் ஒதுக்கீடுகளில் முஸ்லிம்களுக்கும் பங்கு அளித்தால் அதை இந்துத்துவவாதிகள் தலித்துகளையும், பிற்படுத்தப்பட்டோரையும் சிறுபான்மையினருக்கு எதிராக எடுத்துக்காட்டப் பயன்படுத்திக் கொண்டுவிடுவார்கள். ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு 5ரூ இடஒதுக்கீடு வழங்க முயற்சிக்கப்பட்ட போது பாஜக அதைத்தான் செய்தது. ஒட்டு மொத்தத் திட்டச் செலவில் 15ரூ அனைத்து சிறுபான்மையினருக்கு என்று ஒதுக்கப்பட வேண்டும்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பள்ளிக் கூடங்களில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவது குறித்து ஆய்வுகளையும் பதிவுகளையும் மேற் கொண்டு, அதன்படி சிறுபான்மையினர் அதிகமாக வாழும் மாவட்டங்களில் 7000 துவக்கப் பள்ளிகளையும், உயர்துவக்கப் பள்ளிகளையும் இந்தக் கல்வி ஆண்டில் ஆரம்பிக்க அனுமதித்துள்ளது. கல்வி உத்திரவாதத் திட்டத்தின் கீழ் 32250 மையங்களைத் துவக்கியுள்ளது.
மேலும் உரிமை மறுக்கப்பட்டவரின் குறைகளைக் கண்டறிந்து தீர்க்க தக்க நடவடிக்கைகள் எடுப்பதற்காக சமவாய்ப்புக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசுப்பணிகளில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மதச்சார்பற்ற சமூக மதிப்பீடுகளை போதிக்கும் பாட நூல்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் சகிப்புத் துன்மையை வளர்க்க பல்கலைக்கழக மான்யக் குழுவை விருத்தி செய்ய வேண்டும் போன்ற பல ஆலோசனைகளை சச்சார் குழு பரிந்துரைத்துள்ளது. அவை குறித்து தீர ஆராய்ந்து கூடிய சீக்கிரம் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் மூலம் முஸ்லிம்கள் இன ஒதுக்கலுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும். மேலும் மேலும் அவர்கள் ஒதுக்கப்படுவது சமுதாய அமைதிக்கு ஆபத்தாகும். உரிமை மறுக்கப்பட்டு, அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒடுக்கப்படும் உரிமை மறுக்கப்படும் எந்த சமூகப் பிரிவிற்கும் இது பொருந்தும். அதே வேளையில் நீண்ட கால திட்டங்களும் வகுக்கப் பட வேண்டும். உதாரணமாக தற்போதைய தேர்தல் முறை மாற்றப்பட்டு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை கொண்டு வரப்பட வேண்டும். அதில் எந்த சமூகப் பிரிவும் புறக்கணிக்கப்படுவதாக நினைப்பதற்கோ அல்லது புறக்கணிக்கப்படுவதற்கோ வாய்ப்புகள் இன்றைய தேர்தல் முறையைவிடவும் குறைவு. இந்தியாவின் பலம் அதன் பன்முகத் தன்மையிலேயே இருக்கிறது என்பதை நாம் எப்போதும் மறக்கலாகாது.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com