Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
விவாதப் புள்ளி
“ஏமாற்று” வேலையும் எதார்த்த வேலையும்
- எம்.ஜே. அக்பர் / தமிழாக்கம்: ஜே.ஜி. ஜோணி ஜெபமலர்

‘ஏமாற்று’ (HOAX) என்பது ஆங்கில மொழியில் உள்ளக் கடுஞ்சொற்களில் ஒன்று. அதை இரட்டிப் பாக்கினால் எப்படி இருக்கும்? அதுதான் அரசாங்கமும் நாடாளுமன்றமும் இந்திய முஸ்லிம்களோடு கடை பிடிக்கும் கொள்கையாக இருக்கும்.

மக்களவையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) மையக் கல்வி நிறுவனங்களில் 27ரூ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதா ஏகோபித்த ஆதரவோடு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்தச் சலுகையைப் பெற பொருளாதார அளவுகோல் எதுவும் கிடையாது. எனவே இந்த வகுப்பினரில் ஏழைகளை விடப் பணக்காரர்களுக்கே அதிக நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதைச் செய்வதற்கு அரசாங்கத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரு சிறப்பு பொறுப்பாண்மைக் குழுவோ, 404 பக்கங்களில் புள்ளி விவரங்களோடும் விளக்கப்படங்களோடும் கூடிய அறிக்கையோ தேவைப்படவில்லை. நினைத்தார்கள்; முடித்தார்கள்.

இந்தியாவின் சமூகப் பிரிவுகள் பலவும் கட்டளை பிறப்பித்து வேலைகளைப் பெற்றுக் கொள்கின்றன. இந்திய முஸ்லிம்களுக்கோ பொறுப்பாண்மைக் குழுக்கள் (COMMISSIONS) மட்டும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் கடைசியாக வந்திருப்பது டாக்டர் மன்மோகன்சிங் பிரதமரானப் பிறகு அமைக்கப் பட்டிருக்கும் ரஜீந்தர் சச்சர் பொறுப்பாண்மைக் குழு.

வேலை மற்றும் கல்வி இடஒதுக்கீட்டினால் பயன்பெறும் வகுப்பினர் எல்லோரும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் முஸ்லிம்களை விட முன்னேறிய நிலைமையிலேயே உள்ளனர். எடுத்துக்காட்டாக, சமூகத்தை அச்சத்துக் குள்ளாக்கி, தொழில் முனைவோரை அழித்தொழிக்கும் வகையிலான கலவரங்கள் எதுவும் ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு’ எதிராக அரங்கேறுவது இல்லை.

சச்சர் ஆய்வுக்குழு உள்ளரங்கமாகவும் வெளியரங்கமாகவும் நடக்கின்ற ஒதுக்குதல்களை அம்பலப்படுத்தி உள்ளது. இதே விஷயத்தை இதற்கு முன்னரும் ஆய்வுக் குழுக்கள் கூறி உள்ளன. என்னுடைய கேள்வி, உண்மையிலேயே அரசியல்வாதிகளுக்கு உண்மை நிலைகளை அறிந்து கொள்ள ஒரு பொறுப்பாண்மைக் குழு அவசியந்தானா? என்பதுதான். அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் வாக்குகளை மன்றாடிக் கேட்டுச் சேகரிக்கும் பொழுதில், இலட்சக் கணக்கான முகங்களின் தரிசனத்திலிருந்து இது பற்றிய உண்மைநிலையைக் கண்டறிய முடியாதா?

முஸ்லிம்களுக்கு டாக்டர் மன்மோகன் சிங் அரசின் மீது தனிப்பட்ட உரிமை உண்டு. புள்ளி விவரங்கள் என்ன சொன்னாலும், குஜராத் படுகொலைகளுக்கு எதிராக முஸ்லிம்களின் சக்தி அனைத்தும் குவிமையப் படுத்தினால், முப்பது முதல் நாற்பது தொகுதிகளில் ஏற்பட்ட வாக்காளர் அலை மாற்றம்தான் இன்றைய அரசாங்கம் அமையக்காரணம் என்றே முஸ்லிம்கள் நம்புகின்றனர். எனவே டாக்டர் மன்மோகன்சிங்கிட மிருந்து அவர்கள் எதிர்ப்பார்ப்பது அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த அரசிடமிருந்து இதுவரை கிடைத்திருப்பது வழக்கான சொற்சிலம்பம் மட்டும் தான். இன்னும் நிறைய காலம் பாக்கி இல்லை. இந்த சொற்சிலம்பம் கூட உத்திரப் பிரதேச தேர்தல் முடிந்தவுடன் அடங்கி விடும் என்றே தோன்றுகிறது.
முஸ்லிம்களுக்கு தேசத்தின், வளங்களைப் பயன்படுத்து வதில் முதல் உரிமை அளிக்க வேண்டும் என்று டாக்டர் சிங் சொன்னதால் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். பிறகு வற்புறுத்தல் காரணமாக பிரதமர் சப்பைக் கட்டு கட்ட வேண்டியதாயிற்று. இதனால், அவர் முதல்நாள் இந்துக்களின் வாக்குகளையும் இரண்டாவது நாள் முஸ்லிம்களின் வாக்குகளையும் இழந்துவிட்டார் என்று ஒரு குறும்புக்காரர் நையாண்டி செய்தார்.

காங்கிரஸ் எப்போதுமே முஸ்லிம்களை ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. கட்சிக்குள் நிலவும் இந்த ‘காகித - மதச் சார்பின்மையின்’ வரலாறு குறித்தும் பிரதமருக்குப் பிரச்சினை இருக்கிறது. முஸ்லிம்கள் காங்கிரசுக்கு எதிரியான பா.ஜ.க.வை எதிர்த்தே வாக்களிக்க வேண்டி இருப்பதால் அவர்களுக்கு வாக்குப்பெட்டியின் முன் நிற்கையில் வேறுவழி என்ன இருக்கிறது? எனவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘ஆத்மார்த்தமான தொனியில்’ சில வாசகங்களைச் சொல்லி உங்களது தார்மீக எண்ணங்களை எல்லாம் பதினைந்து அம்சத் திட்டங்களாலான ஒரு மாலையில் கோர்ப்பதுதான். குறிப்பிடத்தக்கதும் முக்கியமானதுமான எதையும் தள்ளிப்போட எப்போதுமே ஒரு ‘நியாயமான’ காரணம் இருந்து கொண்டே இருக்கும்.

இடஒதுக்கீட்டின் மூலம் முஸ்லிம்களும் பயன் அடைகிறார்கள் என்ற புனைவுதான் காகித - மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் முகமூடி ஆகும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 340, 341, 342 ஆகிய பிரிவுகள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றிப் பேசுகிறது. அரசியல் சட்டம் (அட்டவணைச் சாதி) உத்தரவு - 1950-ன் படி, ஏழையிலும் ஏழையான தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுகிறவருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகை கிடையாது. 1956-ல் இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டத் திருத்தம் மூலம், சீக்கிய மதத்துக்கு மாறிஉள்ள தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டின் சலுகைகள் வழங்கப்பட்டன. 1990-ல் இந்தச் சலுகை புத்த மதத்துக்கு மாறியவர்களுக்கும் கிடைக்க வகை செய்யப்பட்டது. இதுவரைக்கும் ஏன் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர் களையும் இதிலிருந்து புறக்கணித்து உள்ளனர் என்பது பற்றி யாரும் விளக்கம் கூறவில்லை. அநீதிக்கான சதி ஆலோசனையில் மௌனம் பேணுவது மிக உதவிகரமானது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலிருந்து முஸ்லிமாக மாறியவர் கள், கொள்கை அளவில், இட ஒதுக்கீட்டின் நன்மைகளைப் பெறத் தகுதியானவர்கள். ஆனால் எத்தனை முஸ்லிம்கள் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்றுள்ளார்கள் என்ற தகவலை யாரும் தெரிவிக்கவில்லை. அப்படித் தெரிவித்தால் இன்னொரு மோசடி அம்பலமாகி விடும். இடஒதுக்கீட்டின் பயன் மிகக் குறைவு. எடுத்துக்காட்டாக மாநில அரசு வேலைகளைப் பார்ப்போம். அசாமுக்கு (மக்கள் தொகையில் 30.9ரூ முஸ்லிம்கள்) அடுத்தபடியாக, எல்லா வகையிலும் முற்போக்கான அரசு கோலோச்சும் மேற்கு வங்காளத்தின் மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 25.2ரூ.

ஆனால் வெறும் 2.1 சதவீதம் மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே முஸ்லிம்கள். மாநில அளவிலும், மைய அளவிலும் மதச்சார்பற்ற அரசின் இராஜாங்கம் நடைபெறும் டெல்லியில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 11.7ரூ. ஆனால் அரசு வேலை பார்க்கும் முஸ்லிம்கள் வெறும் 3.2ரூ மட்டுந்தான். கேரளா பரவாயில்லை. 24.7ரூ மக்கள் தொகையில் 10.4ரூ அரசுவேலை பெற்றிருக்கின்றனர். இதற்கு மாநில அளவிலான முஸ்லிம் லீக், ஆட்சியதிகாரத்தை பலமுறை பங்கிட முடிந்திருப்பது முக்கியக் காரணம். உத்திரப் பிரதேசத்திலும் பீகாரிலும் முறையே 18.5ரூ மற்றும் 16.5ரூ முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் முறையே 5.1ரூ மற்றும் 7.6ரூ முஸ்லிம்கள் மட்டும் மாநில அரசு வேலைகளில் உள்ளனர்.

இந்தியாவின் ஏனைய சமூகங் களைப் போலத்தான் முஸ்லிம் களிடையேயும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. ஆனால் இஸ்லாத்தில் சாதிக்கு இடமில்லை. ஒரு மசூதியின் உள் யாரும் பிற்படுத்தப்பட்டவரோ முற்படுத்தப்பட்டவரோ இல்லை; எல்லோரும் இணையானவர்கள். எனவே கடந்த கால சாதி வேறுபாடுகள் மங்கி வருகிறது. மட்டுமல்ல, ‘பிற்படுத்தப்பட்ட’ முத்திரையை வழங்கிய பாரம்பரியமான நெசவுத் தொழில் போன்றவை எல்லாம் தொழில் நுட்பத்தின் நுழைவினால் வழக்கொழிந்து வருகின்றன. இந்த மக்கள் நகரங்களுக்குள் குடிபெயர்ந்து பாரம்பரியம் மறந்த சூழலில் பணியாளர்களாக மாறி வருகிறார்கள். மூன்றாவதாக, முஸ்லிம்கள் மத மாற்றத்துக்கு முன்பு இருந்த (யாதவ் போன்ற) சாதிப்பெயரை வாலாகக் கொணடிருப்பது இல்லை. எனவே அவர்களது ‘சாதித் தகுதியை’ அளவிடுவது முடியாத காரியம். கேரளாவில் மட்டும்தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (இ.பி.வ.) வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் உள்ஒதுக்கீடாக 10 முதல் 12 சதவீதம் முஸ்லிம்களுக் காக வரையறுக்க முடிந்திருக்கிறது.

எனவேதான், “முஸ்லிம் இ.பி. வகுப்பினர் இந்து இ.பி.வகுப்பினரை விடத் தாழ்மையான ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும், முஸ்லிம் இ.பி.வகுப்பினரின் நில உடைமை என்பது இந்த இ.பி. வகுப்பினரின் உடைமையில் மூன்றில் ஒரு பங்கே வரும் என்றும்” சச்சர் பொறுப்பாண்மைக்குழு சுட்டிக் காட்டுகிறது.
ஏழ்மையின் சித்திரத்தைத் தெளிவுபடுத்த, கோல்கத்தாவின் குறுந்தெருக்களிலும், மும்பையின் சேரிகளிலும், டெல்லியின் அங்கீ கரிக்கப்படாத குடியிருப்புகளிலும், வங்காளம், பீகார், குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களிலும் வறுமையின் பிடியில் வதங்கும் முஸ்லிம்களின் புள்ளிவிவரம் தரப் பட்டுள்ளது.

முஸ்லிம்களை ஒரு பிரிவாக எடுத்து இடஒதுக்கீடு வழங்குவது பயன் அளிக்குமா? ‘ஆம்’ என்பதே உடனடிப் பதில். இப்படித்தான் அரசியல் களத்தில் விளையாட்டு நடைபெறும் என்றால் ஏன் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்த விளையாட்டில் இருந்து ஒதுக்கி நிறுத்த வேண்டும்? எல்லோருக்கும் கேக்கின் ஒரு துண்டு கிடைக்கிறது என்றால் ஏன் இவர்களுக்கும் கிடைக்கக் கூடாது? இவர்கள் ‘அயல் இறை நம்பிக்கையை’ கடை பிடிக்கிறார்கள், அதாவது இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியில் தோற்றம் கண்ட மதங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்காகக் கொடுக்க வேண்டிய விலை இதுவா? இதுதான் உண்மை என்றால், இந்த உண்மையை ‘(அரசான) நிறுவனம்’ மாற்றிக் கொள்ள வேண்டும்; இல்லை என்றால் நிறுவனத்தை மக்கள் மாற்றி விடுவார்கள். இது உண்மை இல்லை என்றால், உண்மை என்ன வென்று யாராவது நமக்குச் சொல்லித் தரவேண்டும்.

கேக்கில் பாக்கி இருப்து கொஞ்சம்தான் என்பது யதார்த்தம். தற்போது வேலைவாய்ப்பு வளர்ச்சி அதிகம் இருப்பது அரசுத்துறையில் அல்ல; தனியார் துறையில் என்பது நாட்டுக்கு ஒரு நல்ல செய்தி. தனியார் துறையில், சில பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தளபதிகள் கேட்பது போல, இடஒதுக்கீடு கேட்பது வளர்ச்சியில் எதிர்மறை ஏற்படுத்தி விடும். ஒரு ஜனநாயகத்தில், பொருளாதாரம் சிலவேளைகளில் அரசியலுக்கு ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் அது மிக அதிகமாகி விடக்கூடாது. பல்லாண்டுகளாக நிலவி வரும் நிலை குலைந்த சமத்துவத்தை நாம் வேறு வழிகளில் நேர்ப்படுத்த முடியுமா என்றுதான் பார்க்க வேண்டும்.

எழுத்தர் பணிகளுக்குப் போட்டி போடுவதை விட, தொழில் முனைவோருக்குக் கடன் வழங்கிப் பொருளாதார வலிமை பெறச் செய்வதே அதிகப் பயனளிக்கும். நகர்ப்புற முஸ்லிம்கள் தங்களது பொருளாதாரத்தை சிறிய தொழில்களாக ஒருங்கிணைத்து உள்ளனர். இது தொழில் ரீதியாக ஒதுக்குதலுக்கு உள்ளானதன் வாயிலாக, எதிர்பாராது உருவான நன்மையாகும். ஆனால் எதிர்காலத்துக்கான திறவுகோல் கல்வியில்தான் உள்ளது; குறிப்பாக ஆங்கிலக் கல்வியில். உருது ஓர் எழிலார்ந்த மொழி. ஆனால் இந்த மொழியில் இருந்து வேலை வாய்ப்புகளைக் கண்டெக்க இயலாது. முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்படும் நிதியிலிருந்து உருது பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்குப் பதிலாக, நமக்குத் தேவைப்படுவது இளம் தொழில் விற்பனர்களை உருவாக்கும் மேலாண்மை/தகவல் தொழில் நுட்பம்/ஊடகம் போன்றவற்றைக் கற்பிக்கும் நிறுவனங்கள்தான்.

நான்கு எழுத்துக்கள் உள்ள ஆங்கிலச் சொற்களைப் பொறுத்த மட்டில் ‘வேலைகள்’ (JOBS) என்பது ‘ஏமாற்று’ (HOAK) என்பதை விட உயர்வானதாகும்.

-நன்றி: “டெக்கான் க்ரனிக்கல்



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com