Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
இது விளையாட்டல்ல
மு. அப்துல் ரசாக்

மூன்றாம் உலக நாடுகளின் மேல் தங்களது ஆதிக்கத்தை நிறுவுவதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் ஆயுதம் தான் கிரிக்கெட். கிரிக்கெட்டின் உயர் பதவியான டெஸ்ட் அந்தஸ்து உடைய பத்து நாடுகளில் ஏழு நாடுகள் வளர்ச்சியடையாத நாடுகள். கிரிக்கெட் பிறந்த இங்கிலாந்து கூட கால்பந்துக்குத் தான் முன்னுரிமை கொடுக்கிறது. ஐரோப்பிய நாடுகள் கிரிக்கெட்டுக்கு அதிக மரியாதை கொடுப்பதில்லை. இதுவரை ஒரு உலகக் கோப்பையிலும் இங்கிலாந்து வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் ஹாக்கியில் முன்னணியிலிருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஐரோப்பிய நாடுகளுக்குப் பின்னால் இருக்கின்றன. கிரிக்கெட்டில் புதிதாக நுழைகிற நாடுகள் அடிப்படை வசதிகள் இல்லாதவை. உதாரணம் பங்களாதேசும், கென்யாவும். இப்போது மொரிசியசும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி உள்ளது. பின்தங்கிய பல முஸ்லிம் நாடுகளிலும் கிரிக்கெட் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதன் மூலமாக பல பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் நுகர்வோர்களாக அந்த மக்களை மாற்ற முடிந்துள்ளது.

ஆசிய விளையாட்டை இன்னொரு முறை நடத்த இந்தியா விரும்பிய போதும் ஒலிம்பிக் குழுவிலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஆறு உலகக் கோப்பைகளில் இரண்டு இந்தியாவில் நடந்துள்ளது. 1987 ரிலையன்ஸ், 1995 வில்ஸ் கோப்பை இவற்றின் மூலம் கிரிக்கெட் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் ஊடுருவியுள்ளது. தடகளப் போட்டியில் கடைசியில் வந்து சேருகிற நாம் நுகர்வு கலாச்சாரத்தின் உற்பத்தியான உலக அழகியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். அழகிப் போட்டி மூலம் உருவாக்குகிற அதே வியாபார இலக்குதான் கிரிக்கெட் மூலமும் உருவாகிறது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தைகளாக மூன்றாம் உலக நாடுகள் உருமாற்றப்படுகின்றன.

சச்சினுக்கும் திராவிட்டுக்கும் காயம் ஏற்படும் போது கவலைப்படும் ரசிகன் உலகம் முழுவதும் நடைபெறுகிற மனிதப் படுகொலைகள் குறித்து கவலைப்படுவதேயில்லை. பத்து நிமிட விளையாட்டுக்கிடையே இருபது நிமிட விளம்பரம் பார்க்கும் ரசிகன் பிறகு செல்வது பெப்சியோ கோக்கையோ தேடித்தான். கிரிக்கெட் ஒரு போதை. மொபைல் வருவதற்கு முன்னால் ரேடியோவையே காதில் வைத்துக் கொண்டு கமண்டரி கேட்டு அலைந்து கொண்டிருந்தோம். அரசு அலுவலகங்களில் கூட மூச்சடக்கி சதம் அடித்தானா, அவுட் ஆனானா, ஹாட்ரிக் கிடைத்ததா, சாதனை படைத்தானா என்று ஆவலோடு கூடிப் பேசினோம். இன்று கிரிக்கெட் தெரியாதவர்கள் நாகரிகமற்றவர்கள் என்ற நிலைமை இருக்கிறது.

ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுக்களில் உடனடியாக யார் வெற்றி பெற்றார்கள் என்ற முடிவு தெரிந்து விடும். ஆனால் கிரிக்கெட் 5 நாட்கள் தொடர்ந்து பகல் முழுவதும் விளையாடி இறுதியில் இரு அணியும் தோற்கவும் இல்லை வெற்றி பெறவும் இல்லை. ட்ராவில் முடிந்தது என்று கூறுவார்கள். விளையாட்டு மழை காரணம் நடக்காவிட்டாலும் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் பண மழை கொட்டுவது வீரர்களுக்கும் கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டுக்கும் தான். மகராஷ்டிராவின் பெரும்புள்ளியான சரத்பவாரையே தோற்கடித்து போர்டின் தலைவராக இந்தியாவின் மிகப்பெரிய முதலாளிகளான டால்மியாக்களும் A.C.முத்தையாக்களும் தான் வர முடியும்.

இந்த தேர்தலுக்கு உச்ச நீதிமன்றமே தலையிடுமளவிற்கு கோடிகள் புரளுகின்ற துறை அது. வெங்காயத்துக்கும், உருளைக் கிழங்குக்கும், அரிசிக்கும், பருப்புக்கும் என்ன விலை என்று நமது குழந்தைகளுக்குத் தெரியாது. ஆனால் அண்டர்வெயர் வரை பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரச் சின்னங்களாக தாங்கி வரும் நமது வீரர்கள் அவர்களுக்கு ஆதர்ச புருஷர்கள். இதற்காக அவர்கள் கோடிக்கணக்கான பணம் பெறுகிறார்கள். சச்சினின் மதிப்பு ஒரு நிமிடத்துக்கு 1163 ரூபாய். ஆண்டொன்றுக்கு 61.16 கோடி ரூபாய் விளையாடியும் விளையாடாமலும் சம்பாதித்து மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுகிறார். வருமானவரி எவ்வளவு கட்டுகிறார்கள் என்ற கணிதம் யாருக்கும் தெரியாது.

ஆனால் ரசிகனுக்கு நஷ்டமாகும் மணிகளை நாட்களை யார் இழப்பீடு செய்வார்கள். அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் யார் யார் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். முதலில் கொக்ககோலாவின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, அடுத்தது அந்த கோக் பெப்சிக்கு விளம்பரம் செய்யும் சச்சின், பச்சன், ஷாருக்கான் போன்ற பிரபலங்கள், விளையாடுபவர்களுக்கும் நடிப்பவர்களுக்கும் நிழல் நாயகர்களுக்கும் இருக்கிற மரியாதை உழைப்பவர்களுக்கு இல்லாமல் போனது.

ஒலிம்பிக்கில் 100 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாகச் சென்று ஒரே ஒரு தங்கத்தைப் பெற்றுத் திரும்பிய பெண் வீராங்கனைகளுக்குக் கூட இந்த அளவு மரியாதை இல்லை. பல ஒலிம்பிக் வீரர்கள் நல்ல பயிற்சியாளர்கள் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிற அவலநிலை நீடிக்கிறது.

கிரிக்கெட் காமன்வெல்த் நாடுகளில் மட்டும் நடக்கும் விளையாட்டு. பல்லாண்டுகளாக ஐரோப்பாவின் அடிமைகளாக இருந்து அவர்களின் சுரண்டுதலுக்கு ஆளாகிய நாடுகள் தங்களது எஜமானர்களின் விளையாட்டுக்களை ஏற்றுக் கொண்டனர். குளிர் பிரதேசங்கள் பனி மூடிக் கிடக்கும் போது உடல் சூட்டிற்காக பகல் முழுவதும் விளையாடுகிற இந்த விளையாட்டு வெப்ப பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது காலனித்துவம் மூலம் தான். ஒலிம்பிக் போன்ற விளையாட்டு விழாக்களில் கிரிக்கெட் இல்லை. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் கிரிக்கெட்
விளையாடுவதில்லை. பட்டினியும் வறுமையும் தாண்டவமாடும் பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கிறது. வெஸ்ட் இண்டீசின் சமீப கால வரலாற்றை பார்க்கும் போது வாழைப் பழங்களுக்கு பிரசித்திப் பெற்ற அந்த கரீபியன் தீவுகளில் கான்சர் போன்று கிரிக்கெட் நுழைந்து அவர்களின் பொருளாதார வாழ்க்கையை சீரழிந்ததைக் காண முடியும்.

ஆற்றன்பரோவின் காந்திப் படத்துக்குப் பிறகு உலக அளவில் கொண்டாடப்பட்ட இந்திய திரைப்படம் லகான் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். அந்த நாயகன் அமீர்கான் கோலாவுக்கு பிரச்சினை வந்தபோது இது நல்ல பானம் என விளம்பரம் செய்கிறார். பிரபல இலங்கை தொழிலாளர் தலைவரான பாலோடாம்போ, லாகூரில் இலங்கை கோப்பை வென்ற போது, அதைத் தொடர்ந்து உருவான நிலமையை ‘கொக்ககோலா தேசியத்தின் உதயம்’ என்றார்.

சுதந்திரம் அடைவது வரை நிலைநின்ற காலனிய எதிர்ப்பு தேசியம் மறைந்த சந்தர்ப்பத்தில் தான் கிரிக்கெட் தேசியம் இடம் பெற்றது. இது உருவாக்கிய ஆபத்தான அரசியலுக்கும் நவகாலனியத்துக்கும் எதிரான தற்காப்புகளில் முக்கியத்துவமுள்ளது. வெறும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட்டை கருதக் கூடாது. ஆதிக்கம் செலுத்திய இடங்களில் தங்களது வினோதத்திற்காக பிரிட்டன் அறிமுகம் செய்த நேரம் போக்கும் விளையாட்டாக மட்டும் கிரிக்கெட்டைப் பார்ப்பது காலனியத்தின் நீண்டகால அஜென் டாக்களை குறைத்து மதிப்பிடுவதாகும்.

காலனியமும் உலகமயமும் உற்பத்திமயமான சந்தைமயமான சமூகத் திட்டத்தைத்தான் முன் வைக்கிறது. கிரிக்கெட் விழாவாகக் கொண்டாடுவதும் இந்த வாழ்க்கைத் திட்டத்தைத் தான்.

நாள் முழுவதும் விளையாடவும் விளையாட்டைப் பார்க்கவும் ஒரு அசாதாரணமான மனநிலை உருவாக வேண்டும். நவமுதலாளித்துவம் அதற்குத் தகுந்தவாறு உள் மனங்களில் சலனங்களை பஞ்ச் செய்து தொழில் நுட்பங்களின் உதவியுடன் புள்ளி விபரங்களுடன் ஒருவகையான வெறியை ஊட்டுகிறது. அது மோசமாக விளையாடினாலும் நம்ம நாடு வெற்றி பெற வேண்டும் எனும் வகையான தேசியத்தை உருவாக்குகிறது. இது தான் நாம் கட்டமைத்துள்ள எதிரி நாடு வெற்றி பெறுகையில் கலவரம் ஏற்பட வழிவகுக்கிறது. வேறு எந்த விளையாட்டிலும் மைதானத்தை சேதப்படுத்துவதோ அந்த நாட்டுடன் விளையாடக்கூடாது என்ற மிரட்டல் வருவதோ இல்லை. அந்த நாடுடன் விளையாடும் போது போர் நடப்பது போன்ற ஒரு சூழலை அது உருவாக்குகிறது. கார்கில் போர் வீரர்களுக்காக இலவசமாக விளையாடி தங்களது தேசப்பற்றை கிரிக்கெட் வீரர்கள் நிரூபித்தது நினைவிருக்கலாம். சட்டையில் வில்ஸ், தோள் பட்டையில் பெப்சி, மட்டையில் ஆசுகு, முதுகில் சஹாரா, காலில் நைக் என அணிந்து விளையாடினர்.

அஷிஸ்நந்தி, கிரிக்கெட்டை இந்துயிசத்தோடு ஒப்பிட்டு கிரிக்கெட் ஆங்கிலேயர்களால் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விளையாட்டு என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். “கிரிக்கெட்டில் இருக்கக் கூடிய காலத்தை மறுக்கும் தன்மை, புனிதத்துக்கு அது தரும் அழுத்தம், சடங்குகளின் வாயிலாக போட்டியில் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி ஆகியவற்றால் அது இந்திய மேட்டுக் குடியினரால் அங்கீகரிக்கக் கூடியதாக இருக்கிறது” என்கிறார் நந்தி.

கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டில் பிராமணர்கள் எளிதாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு அதில் உடலுடன் உடல் தொட்டுக் கொள்வதற்கான தேவை மிகவும் குறைவாக இருப்பதும் முக்கியக் காரணம் என்கிறார் ஆனந்த். மேலும் “கிரிக்கெட் உடல்கள் பட்டுக் கொள்வதற்கான தேவை அதிகம் இல்லாத விளையாட்டு என்பது பிராமணர்களைக் கவரக் கூடிய ஒரு அம்சமாக இருந்தது, தவிர இதை விளையாடுவதற்கு ஒருவர் மிகவும் வலுவான உடலமைப்பு கொண்டிருக்கத் தேவையில்லை” என்கிறார் வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா.

ஹாக்கி அணியில் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சீக்கியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். “கிரிக்கெட்டும் அது முன்னிறுத்தும் மதிப்பீடுகளும் நமது சமூகத்தில் ஏற்கனவே உள்ள நிலப்பிரபுத்துவ சாதீய சமூகத்தின் அதிகாரப் படி நிலைகளுடன் மிகவும் பொருந்திப் போகின்றன” என்கிறார் ராஜ்தீப்.

கிரிக்கெட்டின் வளர்ச்சியும் பரவலும் பிரிட்டீஷ் பேரரசின் அதிகாரப் பரவலோடு சமகாலத்தில் நிகழ்ந்தவை. ஒரு நுகர்ப் பொருளாக ஆக்கப்பட்ட விளையாட்டு இன்று விளம்பரப்படுத்தவும் வாங்கவும் விற்கவும் நுகரவும் ஊடகங்களில் வல்லுநர்களால் படம் பிடிக்கவும் படுகிறது என்ற அஷிஸ்நந்தியின் கூற்று கவனிக்கத்தக்கது.

இந்தியா உலகக் கால்பந்து நாடுகளின் தரவரிசையில் 117-வது இடத்தில் இருக்கிறது. டிரினிடாட் என்ற பத்து இலட்சம் மக்கள் தெகை கொண்ட நாடு கூட உலகக் கோப்பைக்காக தனது அணியை அனுப்பியிருக்கிறது.

ஆனால் 100 கோடி மக்கள் தொகையில் ஒரு 11 பேரைக் கூட தயார் செய்ய நம்மால் முடியவில்லை. ஆனால் ஈ.எஸ்.பி.என். விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் ஒளி பரப்ப சுமார் 55 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்களை பிடித்திருக்கிறது. அடிடாஸ் என்ற விளையாட்டு உடை உபகரணங்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனம் இந்த ஆண்டு உலகக் கால்பந்துக் கோப்பைத் தருணமாக வைத்து தனது விற்பனையை 6600 கோடி அளவுக்கு எட்டியது.

இங்ஙனம் விளையாட்டுக்குப் பின்னால் அரசும் பொருளாதார நலனும் ஒளிந்திருக்கின்றன. ஒரு போட்டியில் விளையாடி தோற்றாலும் வென்றாலும் இலட்சக்கணக்கான ரூபாய் கிடைக்கிறது. அணியில் இடம்பெற்றால் மட்டும் போதும். விளையாட வாய்ப்பே கிடைக்காமல் இருந்தாலும் பணம் கிடைக்கும். இங்ஙனம் இருந்தும் match fixing என்று காசு வாங்கித் தோற்றுப்போகிற விளையாட்டாகவும் கிரிக்கெட் இருக்கிறது.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com