Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2007
செல்நீரைத் திருப்பிய செம்மீன்
- பேரா. அப்துல்காதர்

ஊசி விற்க வந்த வெள்ளையர்கள், உண்டாக்கிய கிழிசல்களால், கந்தலாய்க் கிடந்த இந்தியச் சேலையை மாற்றி, மூவண்ண முகூர்த்தச் சேலையைத் தன் பாட்டுத் தறியிலே போட்டுத் தந்த பாவலன் பாரதி. அவன் எழுதிய ‘பாஞ்சாலி சபதம்’ பாரத விடுதலையின் தொன்மக் குறியீடு. “ரௌத்திரம் பழகு” என்று புதிய ஆத்திச் சூடி புனைந்தவன் கோபப்பட்ட இரண்டு இடங்கள் பாஞ்சாலி சபதத்தில் பளிங்கெனப் புலப்படுகின்றன. தருமத்தின் தனிமை தீர்க்க வந்த தருமராசன், சூதில் படிப்படியாக எல்லாச் செல்வங்களையும் இழக்கிறான். பாரதி மௌனமாக இருக்கிறான். நாட்டைப் பணயம் வைத்தவுடன், அவனால் தாளமுடியவில்லை. பாடுவது ஒரு ‘கண்ட காவியம்’ என்பதை மறக்கிறான். சூடு அளக்க வந்த ‘தர்மா மீட்டர்’ வெப்பம் ஏறி. வெடிப்பதைப் போல வெடிக்கிறான்.

“வாயில் காத்து நிற்போன் - வீட்டை
வைத்திழத்தல் போலும்
கோயில் பூசை செய்வோர் - சிலையைக்
கொண்டு விற்றல் போலும்
ஆயிரங்கள்ஆன. நீதி
அவையுணர்ந்த - தருமன்
தேயம் வைத்திழந்தான் - சீச்சீ!
சிறியர் செய்கை செய்தான்”

எனப் பேனாவால் காறி உமிழ்கிறான். சிற்றரசர்கள் ஆங்கிலேயரிடம் தேசத்தை இழந்தது இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையைக் கூட்டியிருக்க வேண்டும். ஆளவந்தவர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்லர், காவலர்கள்.

இந்தச் சரணக்காட்சி பாடுகையில் அவன் பல்லவி போல

“தாயம் உருட்டலானார் - அங்கே
சகுனி வென்று விட்டான்”

எனத் திரும்பத் திரும்பக் கொதிக்கிறான். ‘தாயம்’ விளையாட்டு தாயம் (உரிமை) வைத்து விளையாடிய மன்னர்களைக் குறிக்கிறது. உரிமை என்பது குறிக்கும் தொன்மைச் சொல் தாயம்.

“பால்தர வந்த பழவிறல் தாயம்”

என அரசுரிமை ஊழ்விதிப்படி வந்தது என்பதைப் புறநானூறு பேசுகிறது. அரசியலே தாயமாகி விட்டது. ஒருவரை ஒருவர் வெட்டி, வெளியேற்றித்தான் முன்னேற்றம் நிகழ முடியும். தாயம் என்ற சொல் பாரதியின் கவிதையில் இன்னும் ஆழ அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. தாய விளையாட்டில் சோழிகளை வைத்து விளையாடுவார்கள். கடல் இல்லாத தென்னக மதுரை, திருநெல்வேலிப் பகுதிகளில் புளியங் கொட்டையைச் சோழிகளுக்குப் பதிலாக வைத்து விளையாடுவார்கள். புளியங்கொட்டையை எடுத்து அதனைப் பாதியாகத் தேய்த்துக் கொள்வார்கள். பின்னர் தாய விளையாட்டிற்குப் பயன்படுத்துவார்கள். பாரதியும் இதனைச் சிறுவயது முதலே கண்டிருக்க வேண்டும். விளையாட்டில் ‘தாயம்’ என்றால் எதுவோ அதுதான் அரசியல் தாயத்திலும். 5 அல்லது 7 புளியவிதை முத்துக்கள் பயன்படுத்தப்படும்.

எது தாயம்? நான்கு (ஐந்தாக இருந்தால்), ஆறு (ஏழாக இருந்தால்) கொட்டைகள் கவிழ, ஒன்று மட்டும் நிமிர்ந்திருக்கும் நிலைதான் தாயம். ஆம்! ஒருவனை நிமிர்த்த மற்ற அனைவரையும் கவிழ்ப்பதுதான் அரசியல் தாயம். புளியங்கொட்டையில் பாதி தேய்க்கப்பட்டே தாயத்தில் பயன்படுத்தப்பட்ட புளியவிதை மேல்பகுதி கருப்பாக, அடிப்பகுதி வெள்ளையாக இருக்கும். தாயம் தொடங்கும். வெள்ளையன் ஒருவனை நிமிர்த்த, மற்ற எல்லாக் கறுப்பர்களையும் கவிழ்த்த நிலையைத்தான் பாரதி தாயம் உருட்டலானார் என்ற பல்லவியில் வெளிப்படுத்துகிறான். உருட்டல் புரட்டல்களால் நாடு அடிமைப்பட்டுள்ளதே என்ற கோபம் சுரலயப் பிரளயமாகத் தெறிக்கிறது.

துச்சாதனன் ஒற்றையாடையில் இருக்கும் பாஞ்சாலி துகிலைப் பற்றித் தெருவழியே இழுத்து வருகின்றான்.

“ஆவென்று அலறித் துடிக்கின்றாள்
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள்
மைத்துகில் பற்றி இழுக்கின்றான்
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான் வழிநெடுக மொய்த்தவராய்
என்ன கொடுமையிது என்றே பார்த்திருந்தார்”

இந்தக் காட்சியில் துகிலைப் பற்றியிழுத்த துச்சாதனன் மேலோ, சட்டையைத் தானே உரித்துக் கொள்ளும் பாம்பினைக் கொடியாகப் பெற்றுள்ள துரியோதனன் மேலோ. பாரதிக்குச் சினம் வரவில்லை. மாறாக நடப்பது கொடுமையெனத் தெரிந்தும், தடுப்பது கடமையென அறிந்தும் வேடிக்கை பார்க்கும் மக்களைப் பார்த்துக் கொதிக்கிறான்.

“வீரமிலா நாய்கள் விலங்காம் இளவரசன்
தன்னை இழுத்துத் தராதலத்தில் போக்கி
பொன்னை அவள் அந்தப் புரந்தன்னில் சேர்க்காமல்
நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணை யாவதுண்டோ?”

எனக் கூக்குரலிடுகின்றான். துச்சா தனனைப் பார்த்து மக்கள், தலையசைத்தால் கூட மறுத்ததாகி விடுமென அஞ்சி, வெறுமனே பார்த்து இருந்தார்கள். சாக்கடையில் மொய்க்கும் ஈக்கள் அதனைத் தூர்த்துவிட முடியுமா? எனவே அவர்களை வீரமிலா நாய்கள் எனக் கொட்டி முழக்குகிறான். தென்னை, பனை, தேக்கு, பாக்கு போன்ற நெட்டை மரங்கட்குக் கிளைகள் இல்லை. குட்டை மரங்கட்குக் கிளைகள் உண்டு. நின்ற மக்கள் கைகளை நீட்டித் தடுக்கவில்லை. எனவே கைக்கிளை நீட்டாத மக்களை நெட்டை மரங்கள் என்றது சாலப் பெருத்தமானது.

முண்டாசுக்குக் கீழே முறுக்கி நிமிர்ந்திருக்கிறது பாரதியின் மீசை. வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு முன்பு கறுப்பினம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக. பாரத மாதாவின் வடிவமான பாஞ்சாலியின் மானங் காத்தவனும் கறுப்பு நிறக் கிருஷ்ணன் தான். பாரதியின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்ற முப்பெரும் பாடல்களிலும் வெள்ளைக்கெதிரான கறுப்பு வண்ணம் தான் நுட்பமாகத் தெரிகிறது. பாரதத்தில் கண்ணன் தூது போனது மண்ணை மீட்பதற்காக, அடிமைப்பட்ட மண்ணின் மீட்சிக்காகக் கண்ணனை முன்னிறுத்தி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கண்ணனைக் கறுப்புக் கொடியாகப் பாரதி தூக்கிப் பிடித்திருக்கிறான். மண்விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும் பாரதி பாஞ்சாலி சபதத்தில் தன் வெகுளியை முழுக்க வெளிப்படுத்தினான்.

“செத்த மீன் தான்
ஓட்டத்தோடு
செல்லும்”

என்கிறது ஒரு புகழ்மிக்க ஆங்கிலப் பழமொழி. ஆட்சி, அதிகாரம் என்ற ஓட்டத்தோடு செல்வது அடிமைக் கூட்டம். உயிருள்ள மீன் நீரோட்டத்திற்கு எதிராக நீந்தும். தவறுகிற ஆட்சியாளர்களுக்கு எதிர் இயக்கம் நடத்தும் விடுதலை உணர்வு என்பது உயிர் இருப்பதன் அடையாளமாகும். எதிர்நீச்சல் போடுவது மட்டுமல்ல. நீரோட்டத்தைத் தன் செவுளால் தன் போக்கிற்கு மாற்றிய மீன் பாரதி, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர் ஹரீந்திரநாத் சட்டோ பாத்தியாயா

“A true – born writer is a true - born fighter:”

என்று குறிப்பிடுகின்றார். அச்சு அசலாக இந்த இலக்கணம் அக்கினிக் குஞ்சுகளை அடைகாத்த பாரதிக்கே ஏற்றது. எல்லா அடிமைத்தனங்களோடும் சமரசமின்றி எதிர்த்துப் பாடியவன் கட்டுரைகள் எழுதியவன் மட்டுமல்ல கடைப்பிடித்தவனும் ஆவான்.

‘சந்தி தெருப்பெருக்கும்
சாத்திரம் கற்போம்’

என்று துப்புரவுப் பணிவுக்குச் ‘சாஸ்திர அந்தஸ்து’ தருகிறான்.

“நந்தனைப் போலொரு பார்ப்பான்
நானிலத்தில் உண்டோ?”

என்று எழுதிய அவன் கைதான் கனகலிங்கம் என்ற தலித் தோழருக்கு பூணூல் அணிவித்தது. அவன் சனாதன மாட்டுத் தோலால் ஆன பறையை, தருப்பை எரித்து வளர்த்த நெருப்பில் வாட்டி, முரசு கொட்டியவன். அவன் எழுதுகோலை விதைத்தால் பெரியாரின் கைத்தடிகள் விளையும்.

*-பாரதி 125ஆம் ஆண்டு நினைவாக...
நன்றி: படம் (காலச்சுவடு)

புதியகாற்றின் வாசகர்களோடு அயல்மகரந்தச் சேர்க்கை வழி சந்தித்த பேரா.அப்துல் காதர் அவர்களின் தொடர் இந்த இதழுடன் நிறைவு பெறுகிறது. பேராசிரியர் அவர்களுக்கு புதியகாற்று சார்பாகவும் வாசகர் சார்பாகவும் அன்பும், நன்றியும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com