Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
திரைவிமர்சனம் - தவமாய் தவமிருந்து

உறவு இழைகளால் நெய்யப்பட்ட உணர்ச்சிகளின் கூடு
- தமிழ்ப்பிரியன்

Cheran இழந்த பிறகே உணரும் உறவுகளின் அருமையை இருக்கின்ற போதே பாதுகாக்க வேண்டிய, போற்ற வேண்டிய அறிவுரைகளை உணர்த்துகிற படம் சேரனின் தவமாய் தவமிருந்து.

பெற்ற பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க சிரமப்படும் பெற்றோர்களை (குறிப்பாக தந்தை) எத்தனை பிள்ளைகள் வளர்ந்து ஆளான பிறகு பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமையை செய்கிறார்கள்? என்ற கேள்வியுடன் துவங்குகிறது படம்.

தமிழ் சினிமாவிற்கே உரிய ‘மாமூலான’ அம்சங்களை தவிர்த்து தந்தையின் கஷ்டங்கள், தந்தை-மகன் இடையிலான உணர்வுகளைச் சொல்ல முனைந்திருக்கிறது இப்படம். ‘ஆட்டோகிராப்’ வெற்றிக்குப் பின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்திருக்கும் சேரனின் இப்படம் ஒரு சாதாரண மனிதனின் மூன்று தலைமுறை, வாழ்க்கையைச் சொல்கிறது.

கிராமத்து நடுத்தர சமூக அப்பாவான ராஜ்கிரண் கதாபாத்திரம் வாழ்க்கை முழுக்க மகன்களின் நல்வாழ்வுக்கு போராடுவதாகவும் பண்டிகைச் செலவு, பள்ளி, கல்லூரி கட்டணங்களுக்கு கடன் வாங்கி செலவழித்து சமாளிக்கிறவராகவும், வளர்ந்து ஆளாகிய பின் பிள்ளைகள் காப்பாற்றிவிடுவார்கள்; கடனை கட்டிவிடுவார்கள் என எண்ணுகிற சாரசரி அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். மூத்த மகன் திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் போகிற காட்சிகள் நடைமுறை வாழ்வியல் பதிவுகள். ஏற்கனவே ஒரு பிள்ளையைப் பிரிந்த ஏக்கத்தில் தவிக்கும் தகப்பனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் கதாநாயகி பத்மபிரியாவுடன் ஏற்பட்ட காதலால், இரண்டாவது மகனான சேரன் வெளியூருக்கு இண்டர்வியூ செல்வதாகக் கூறி, கதாநாயகியை அழைத்துக் கொண்டு சென்னை சென்றுவிடுகிறார். அதற்குப்பின் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோரை நினைத்து மனம் வருந்தி தகப்பனோடு சேரும் சேரன், தாய் தகப்பனைப் போற்றி, பாதுகாத்து, மகிழ்ச்சியை அளிப்பதே கதை. சேரனின் பிள்ளைகள் தாத்தாவின் (ராஜ்கிரண்) வரலாற்றை பாடமாக படிப்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதனுக்கு ஏற்படும் மாற்றங்களைச் சொல்லியிருக்கிறார் சேரன். கல்லூரிப் பருவத்தில் காதல் வயப்படும் சேரன் தன் குடும்பக் கஷ்டத்தை மறப்பதும், காதலிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க தந்தையிடம் பரிட்சைக்கு பணம் கட்டுவதாகக் கூறி பணம் வாங்குவதும், இளைஞர்கள் தங்கள் வயதில் செய்யும் தவறுகளாக மற்ற படங்களைப் போலவே இதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

சேரனுக்கும், புதுமுகம் பத்மபிரியாவிற்கும் ஏற்படும் காதலை சொல்லிய விதம் மென்மை. சந்தர்ப்ப சூழ்நிலையில் தங்களை மறந்து தவறு செய்துவிட்டு, பின் அதை மறைக்க படாதபாடுபடுவதும், தான் செய்த தவறுக்காக நாயகியை அழைத்துக் கொண்டு இருவீட்டிற்கும் தெரியாமல் சென்னை சென்று கஷ்டப்படும் காட்சிகளும் காதலுக்கான ஆழத்தை அழுத்தமாக சொல்லியிருக்கின்றன. பல நல்ல காட்சி அமைப்புடன் நகரும் படத்தில் , சில விஷயங்களை சேரன் கவனித்து இருந்தால் இன்னமும் சில உணர்ச்சிப் போராட்டங்களை தந்திருக்க முடியும்.

சேரன் நாயகியுடன் சென்னை வந்த பின்பு அவர்கள் படும் கஷ்டங்கள் ஏற்கனவே பார்த்து புளித்துப் போன விஷயங்கள். வேலை இல்லாமல் தவிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான சேரன் ஆதிகாலத்து கதாநாயகன் பாணியில் வண்டியிழுப்பது நம்ப முடியாதது. இறுதியில் ராஜ்கிரண் மரணமடைந்ததும் சேரன் அழுவதோடு படத்தை முடித்திருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். சுடுகாடு செல்லும்வரை காட்சிகளைக் காட்டி இழுத்திருக்க வேண்டியதில்லை. சேரனின் தாயாக வரும் சரண்யா நடுத்தர, ஏழைத் தாயை கண்முன் கொண்டு நிறுத்துகிறார். ஒவ்வொரு முறை அவர் புலம்பும் போது அதில் அர்த்தம் இருப்பது போன்றே உணர்வு ஏற்படுகிறது. படத்திற்கு இசை மேலும் வலுசேர்த்திருக்கிறது. பல இடங்களில் இசை உணர்வுகளைச் சொல்லியிருக்கிறது. குறிப்பாக கடைசி 15 நிமிடம்.

Rajkiran எத்தனையோ அடிதடி, மசாலா, 40 பேரை நின்று அடிக்கும் ஹிரோயிச படங்களுக்கு மத்தியில் தரமான படத்தை தர நினைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார் சேரன். தந்தை கஷ்டப்படுவதைப் பற்றியே படம் முழுக்கப் பேசப்பட்டிருக்கிறது. தாயின் போராட்டங்கள், அவள் படும் துயரங்கள், குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் அவளுக்குள்ள பொறுப்புகள் உள்ளிட்டவை நிராகரிக்கப் பட்டுள்ளன. ஒருவேளை இதுவரை தமிழ் சினிமாவில் தாய் கஷ்டப்படுவதாகவே காட்டியுள்ளதால் அதை மாற்ற சேரன் எண்ணியிருக்கலாம். அதில் சேரன் வெற்றி பெற்றிருக்கிறாரா? மாறி வரும் சமூக, பொருளாதார சூழலில் குறைந்த பட்சம் தாய், தந்தை இருவரது பொறுப்புகளையும் சமமாகவாவது காட்டியிருக்கலாம்.

அதே போன்று படத்தின் கதாநாயகி குறித்த காட்சிகள் மிகவும் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. அவளுக்கான பிரச்சனைகள், பெற்றோருக்கும் அவளுக்குமான பிரிவின் வலி, கதாநாயகியை வளர்த்து படிக்க வைத்து, யாரோ ஒருவனோடு ஓடிப்போய் விட்டதை நினைத்து அவர்கள் படும் துயரம் என கதாநாயகி குடும்பத்தாரின் பல முக்கிய கட்டங்கள் கதையில் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி, இளைய மகனின் பொறுப்புணர்ச்சி மட்டுமே காட்டப்படுவதால் பல காட்சிகளில் ஒரு வித இறுக்கத் தன்மை ஊடாடுவதை கண்கூடாகக் காண முடிகிறது. அண்ணனின் மனைவி இங்கு குடும்பத்தைப் பிரிக்கும் விரோதியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளாள். இது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும். அன்று முதல் இன்று வரைக்கும் இது நிகழ்ந்தபடியே இருக்கிறது. எனவே இப்படம் முழுக்க முழுக்க நடுத்தர, சமூக ஆணின் பார்வையே தவிர வேறொன்றுமில்லை.

ஒவ்வொருவரின் உணர்வுகளையும் படம் பிடித்து, காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி உள்உணர்வை தூண்டிவிட்டு கண்களில் கண்ணீருடனும், கனத்த இதயத்துடனும் திரையரங்கை விட்டு வெளிவரும் மக்களைப் பார்க்கையில் படம் வெற்றி பெற்றதாகவே உணரமுடிகிறது. மொத்தத்தில் இழந்த பிறகே உணரும் உறவுகளின் அருமையை இருக்கின்ற போதே பாதுகாக்க வேண்டிய, போற்ற வேண்டிய அறிவுரைகளை உணர்த்துகிற படம் சேரனின் தவமாய் தவமிருந்து. உணர்வுகளின் குவியலாக இருந்தாலும் ஆட்டோகிராப்பிற்கு இணையாக இப்படத்தைச் சொல்ல முடியாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com