Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
சிறுகதை

Mr. இஸ்திரி கண்டுபிடித்த உண்மை NO:1
- நட. சிவகுமார்

Sivakumar ஆந்த பெரிய அடுப்பைச் சுற்றி சாம்பல் நிறைந்து கிடந்தது.

அடுப்பிற்குள்ளால் இறங்கி பயணப்பட ஒரு ஒத்தையடி பாதைக்கான வழிதடம் ஒன்றிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த அடுப்புக் குள்ளால் உள்ள ஊரில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஊரைச் சுற்றிலும் பாக்குமரங்களும் தென்னை மரங்களுமாய் விரவி கிடந்தன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு வேப்பமரம் மருத்துவ மணம் வீசிக் கொண்டிருந்தது. ஊருக்கு வடக்கப் பக்கம் பெரிய பாறையும் மற்ற மூன்று பக்கங்களிலும் குழித்துறை தாமிரபரணி ஆற்றுநீரும் ஓடி கொண்டிருந்தது. தண்ணீருக்குக் கொஞ்சம் கூட பஞ்சமில்லாத அந்த ஊரில் வழிநெடுக்க தூதுவளை செடியும் சோத்துக் கத்தாழை புற்றுகளுமாய் நிறைந்து கிடந்தன.

அந்த ஊரில் உள்ள கிழக்குவாசலை நோக்கிய ஒரு வீட்டில்தான் விஞ்ஞானி Mr.இஸ்திரி வாழ்ந்து வந்தார். பல நாள்கள் தனது வீட்டிலுள்ள ஆய்வு கூடத்தில் அவர் செய்த ஆய்வுக்கு நல்ல பலன் கிடைத்தது. ஆய்வின் மூலம் கண்டுபிடித்த உண்மைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கோடு இரவும் பகலும், பகலும் இரவுமாக சேராங்கொட்டை மையினால் எழுதிய துண்டுப் பிரசுரங்களை எல்லாம் ஆயிரக்கணக்கான மக்களை சென்றடையும் வகையில் ஊரிலிருந்த ஆற்றங்கரையில் உள்ள மரக்கிளைகளிலும் துணி துவைக்கும் கல்லுக்கடியிலும், ஒவ்வொரு வீட்டிலுள்ள கழுதைகளின் கழுத்திலும் கட்டித் தொங்கவிட்டார். ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள மயானக்குழியை தாண்டி இருந்த பெரிய மக்காணிபொத்தை பாறையிலும் பிணத் தைலத்தில் பூசிய வாழைத்தண்டு சாறெடுத்து எழுதிப்போட்டார். கடைசியாக ஊரில் உள்ளவர்களின் காலடி மண், தீட்டுத் துணி, தலைமுடி, நகம் இவைகளை யார் வந்து எந்த நேரத்தில் கேட்டாலும் வெத்திலையில் வைத்து விலைக்குக் கொடுக்கும் வியாபாரியின் புகழ்பெற்ற வெத்திலை பாக்குக் கடை ஒன்று உண்டு அந்த கடையில் உள்ள மீசைக்கார வியாபாரியின் கடையில் போய் தான் கண்டுபிடித்த உண்மைகளை கூறிவிட்டு கடையில் யார் எந்த சாதனம் வாங்க வந்தாலும் தெரியப்படுத்தி விடுங்கள் என்று கூறினார்.

Mr.இஸ்திரி சொன்ன ஒருவரி உண்மையை கேட்டவுடன் மீசைக்காரருக்கு ஆச்சரியமாகவும் நமட்டு சிரிப்பு வரும் வகையிலும் இருந்தது. கரும் கழுதை மையெடுத்து நெஞ்சினில் பூசி கொண்டு குவித்துப் போட்ட காலடி மண்ணையெல்லாம் தோண்டி அடுப்பாக்கி முடிகளால் ஒரு பாத்திரம் செய்து சிறுநீரை விட்டு காய்ச்சி நகங்களை வேகவைத்து பிசைந்து சாப்பிட்ட பிறகும் பசி நிற்கவுமில்லை பசி தீரவுமில்லை. இவன் எப்படி புதிய விஞ்ஞான உண்மையை கண்டுபிடித்தான் என எண்ணினார்.

ஒருமாதத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் மட்டுமே உறங்கும் மீசைக்காரர் கடையை பூட்டிவிட்டு Mr.இஸ்திரி தன்னிடம் சொன்ன உண்மைகளை தெரியப்படுத்த வீடு வீடாக கதவை தட்டினார். ஒரு சிலர் கழுதைகிடந்த துண்டு பிரசுரத்தை பார்த்ததால் வேலைக்கு போக வில்லையெனவும், ஆற்றங்கரை துணி துவைக்கும் கல்லுக்கடியில் கிடந்த துண்டு பிரசுரத்தை பார்த்தவுடன் துணியை தூக்கி கொண்டு வீட்டுக்கு வந்ததாகவும் பலரும் மீசைக்காரரிடம் கூறினார்கள்.

கடைசியாக ஊரில் உள்ள அனைவருக்கும் செரட்டைக்கனல் போல செய்தி பரவியதால் அந்த விஞ்ஞானி Mr.இஸ்திரி வீட்டுக்கு மீசைக்காரர் தலைமையில் மக்கள் கூட்டம் திரண்டது. மக்கள் அனைவரின் முகத்திலும் ஆண்டுகள் பலவாய் இந்தக் கேள்விக்கு யாரும் தேடாத நிலையில் விடை கிடைத்துவிட்டதாக தெரிந்தது.

தூரத்தில் அவர்கள் வரும் போதே இலவம் பஞ்சு மரத்தில் உட்கார்ந்து கொண்ட ஆந்தைகள் வரவேற்றன. Mr.இஸ்திரி வீட்டுக்கு போகும் பாதை விலை உயர்ந்த காஞ்சிபுரம் பட்டுகளால் சிமெண்ட் குழைத்து கட்டப்பட்டிருந்தது. வீடும் வீட்டிலுள்ள அறைகளும் கூட துணிகளால் கட்டப்பட்டிருந்தது.

வீட்டு வாசலில் மிதந்து கொண்டிருந்த தொழுகண்ணி இவர்களை பார்த்து வணங்கியது அனைவரையும் பார்த்தவுடன் விஞ்ஞானிக்கு தலைகால் புரியாத சந்தோசம். பிளிச்சிங் பவுடர் போட்ட தொட்டியில் காரம் சேர்த்து டீ போட்டு செரட்டையில் ஊற்றி, அனைவருக்கும் கொடுத்துவிட்டு வந்திருந்தவர்களை மக்காணி பொத்தை மலை உச்சிக்கு கூட்டிக் கொண்டு போனார். அனைவரும் பலத்த சத்தத்துடன் தாங்கள் கண்டுபிடித்த உண்மையை விளக்கி தாருங்கள் என Mr.விஞ்ஞானியிடம் கேட்டார்கள்.

விஞ்ஞானி Mr.இஸ்திரி மலை உச்சியில் அனைவருக்கும் கேட்கும் வகையில் உரக்க சத்தம் போட்டு ஒரு மலைப் பிரசங்கம் நடத்தினார். “நமக்கெல்லாம் இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள். நம் குழுக்களில் செத்துமிதந்த உயிர்களின் ஆன்மா சாந்தியடையும் நாள். இதுக்கெல்லாம் காரணமான உந்துசக்தியாக இருந்த தாத்தா வண்ணாரமாடனை இந்த நேரத்தில் நினைத்து பார்க்க வேண்டி இருக்கிறது. வண்ணாரமாடன் பெயரைச் சொன்னவுடன் கூட்டத்தில் பலத்த கரகோசம் எழுந்தது. உழைப்புக்கான ஊதியம் கிடைக்காமல் அலைக்கழிக்கபடும் போதும், பேசமுடியாமல் இருக்கும் நம்மை நங்கூரத்தால் தாக்கும் போதும் தாத்தா வண்ணாரமாடன் தான் ஆறுதல் சொல்லி நமக்கு தீங்கு செய்தவனுக்கு தண்டனை வழங்கி இருக்கிறார் என நம்புவோமாக”.

பிறகு Mr.இஸ்திரி உண்மைச் சாதனையை விளக்கினார். உங்களை மாதிரி வேலை செய்துவிட்டு தினமும் வடியும் வியர்வை, ஒரு பக்கவாதம் கால் எலும்பு, உப்புகுத்திகால் சதைத்துண்டு இவைகளை பொடித்து புனல் வைத்து ஒரு சொட்டு விடாமல் ஊற்றி, கண்ணாடி குடுவையில் ஒருதுளை அடைப்பானால் அடைத்து சாராய விளக்கு மூலம் பற்றவைத்த போது சோதனை குழாய் வெடித்து என் மண்டையோட்டின் வழி பாதரச அமுதம் சிந்தியது. மூக்கில் ஒரு தூமை நறுமணமும் வீசத் தொடங்கியது. அந்த நறுமணத்தை நுகரத் தொடங்கிய போதுதான் இந்த உண்மையை கண்டுபிடித்துக் கொண்டேன்.

செய்முறை விளக்கம் :

ஒரு வெள்ளாவி பானையில் பக்கத்து ஊரிலிருந்து வெளுக்க தந்த தீட்டுத் துணிகளையெல்லாம் காரத்தண்ணியில் முக்கி முறுக்கி பிழிந்து சீலைமண் கட்டி வைத்து விட்டு நான் தரும் பாதரச சொட்டில் ஒரு கடுகளவு விட்டுவிட்டு தீ மூட்டினால் கொஞ்ச நேரத்தில் மாவுபோல் வெந்துவிடும். பிறகு உங்கள் தேவைக்கு ஏற்றாற்போல் அலுமினிய பாத்திரத்தில் வைத்து சாப்பிட்டால் பசி தீர்ந்துவிடும். இது நம்மால் மட்டுமே முடியும் என்று கூறிவிட்டு மீதி உள்ள பாதரச சொட்டுக்களையும் அனைவரின் தலைகளிலும் தெளித்தான். அனைவரும் சந்தோசமாக வீடு திரும்பினார்கள்.

அந்த ஊரில் பழஞ்சி தண்ணியும் உப்பும் புளியும் வைத்து குடித்துவிட்டு விடியற்காலம் வேலைக்குப் போகும் ஆள்களின் எண்ணிக்கை விஞ்ஞானி Mr.இஸ்திரியால் குறைந்தது. தினமும் அடுப்பை பத்தவைத்து தங்கள் தேவைக்கேற்றால் போல் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். மீதி நேரத்தில் சந்தோசமாக தாயக்கட்டையாடி கொண்டும், பல்லாங்குழி ஆடி கொண்டும், ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டும் பொழுதை போக்கினார்கள்.

பக்கத்தில் ஊரில் இருந்து அதிகமாக அழுக்கு மூட்டை துணிகளை எடுத்துக் கொண்டு வருபவனுக்கு நல்ல மரியாதையிருந்தது. பக்கத்து ஊரில் உள்ள அழுக்குத் துணிகள் தீரும் போது என்ன வழி என்ற பிரச்சனை பலருக்கும் எழாமலில்லை. ஆனால் Mr.இஸ்திரி அதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டுபிடித்து விடுவார் என நம்பினார்கள். விஞ்ஞானியின் வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் வசிக்கும் ஒருவர், விஞ்ஞானி துணிகள் காய்க்கும் ஒரு மரத்தை வளர்த்து வருகிறார். பிற்காலத்தில் அது ஊரில் உள்ள அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கும். இனி சாப்பாட்டுக்கு குறைந்த பட்சம் 100 ஆண்டுகளாவது பஞ்சமிருக்காது என்று சொன்னார்.

இதுக்கிடையில் வெளுக்க போகும் துணிகளை ஒழுங்கான முறையில் வெளுத்து திரும்பித் தரல்லை ஆகையினால் இ.பி.கே.9999 கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சேவா சங்க CBI பூசாரியிடம் பொதுநல வழக்கு ஒன்று அதாவது பெட்டிசன் கொடுக்கப் பட்டது. அவர் FIR எழுதி வாங்கிவிட்டு இந்தப் பிரச்சனையின் ஆழத்தை கருத்தில் கொண்டு தலைமை அலுவலகமான சுள்ளி CBI சேவாசங்க பூசாரியின் பரிந்துரைக்கு அனுப்பினார். அவரும் செலவை பொருட்படுத்தாது பிரச்சனைக்கு காரணமானவர்களை தண்டிக்க சேவாசங்க கருப்புப்பூனை படையோடு அடங்கிய 887 பேர்களையும் CBI ஒரு ஆபிசரையும் நியமித்தார்.

அடுப்பிற்குள் இருக்கும் ஊர், ஆகையினால் கொஞ்சம் கவனமாக கையாளவது நல்லது தரவுகளை திரட்டி கொள்ளுங்கள் என அந்த அதிகாரிக்கு சேவா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரி உடனே நான் போய் நிலைமைகளை பார்த்து விட்டு வருகிறேன். அதன் பின்னால் தேவைப்பட்டால் நமது சேவாசங்க இராணுவப் படையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு அந்த ஊருக்கு மாறுவேடத்தில் பயணப்பட்டார்.

அவர் சமர்பித்த அறிக்கையின் உள்ளடக்கம்

1. ஊரில் யாரும் வேலைக்குப் போகவில்லை.

2. எந்த பிரச்சனையுமின்றி சந்தோசமாக வாழ்கிறார்கள்.

3. துணிகளை அவித்து தாங்களே சாப்பிடுகிறார்கள்.

4. ஊரில் உள்ள ஒரு விஞ்ஞானியின் வேலை தான் இது.

தீர்வு

இந்தப் பிரச்சனையை உடனடியாக முற்றுப்புள்ளி சூழ்நிலைக்கு கொண்டுயில் கழுத்தில் வர வேண்டுமானால். விஞ்ஞானியை கைது செய்து தூக்கில் போட வேண்டுமெனவும் அவன் ஆய்வின் மூலம் கண்டுபிடித்த உண்மையை கையகப்படுத்த வேண்டுமெனவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

உடனே சுள்ளி சேவாசங்க CBI அதிகாரி துணி தயாரிப்பில் உள்ள விசயங்களை பற்றி ஜவுளித்துறை அமைச்சரிடம் பார்வை கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் பேசிய போது, “நம் நாட்டில் இப்படி ஒரு ஊர் இருக்கிறதா? அடுத்த குளிர்கால கூட்டத்தில் நான் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக பேசி மேற்படி செய்யலாமெனவும், மட்டுமின்றி பிரதமர் மண்ணில் இருந்து தண்ணீர் கண்டுபிடிக்கும் திட்டம் தொடர்பாக வெளிநாட்டுக்கு 10நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறினார். ஆகையினால் கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறினார்.

பக்கத்து ஊரில் உள்ளவர்கள் மனு கொடுத்த கதையும் CBI அதிகாரி தனது ஊருக்கு வந்து விசாரித்து விட்டு சென்றதெல்லாம் Mr.இஸ்திரி காதுக்கு எட்டியது. தொடர்ந்து விஞ்ஞானி தனது ஆய்வு கூடத்திலிருந்து பல ஆய்வுகள் மேற்கொண்டிருந்ததால் அவருக்கு ஏற்கனவே இருந்ததை விடவும் அதிக வலு கூடி கொண்டே இருந்தது. தனது வீட்டில் இருந்து கொண்டே துருத்தியால் ஊதி பெருக்கி பல மாயபலூன்களை Mr.இஸ்திரி பக்கத்து ஊருக்கு அனுப்பினார். அந்த பலூனுக்குள்ளால் உள்ள சாட்டை இராத்திரி உறங்கிக் கிடப்பவர்களை எழுப்பி புரட்டி அடித்தது. அவர்கள் உடல் முழுக்க செரட்டை கனலை வாரி வாரி போட்டது. பகல் நேரத்தில் உடம்பெல்லாம் கொதித்து அப்பளம் போல பொள்ளியது. யாரின் வேலையென கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஊரில் உள்ளவர்கள் திகைத்துப் போனார்கள். பக்கத்து ஊரில் பாயாசத்தில் பாலை ஊற்றி பிரச்சனை யாரால் வந்தது, யாரால் அனுப்பிவைக்கப் பட்டது என தெரியப்படுத்தும் ஆசாமி இருந்தார். பாயாசத்தில் பல லிட்டர் பாலை ஊற்றி பார்த்த பிறகும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் ஊர்பிரச்சனை கொஞ்சம் தெரிந்ததால் ஒரு உத்தேசமாக அந்த விஞ்ஞானியின் வேலைதான் இதுவென தெரிவித்தார். மக்கள் திரும்பவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். இனியும் பொறுமைகாத்து பலனில்லை என்ற முடிவுக்கு வந்த அதிகாரிகள் சேவாசங்க இராணுவப் படைக்குழு 887 பேர் கொண்ட குழுவையும் முதலில் போன CBI அதிகாரியையும் அனுப்பினார்கள்.

ஒரு கழுதை முடியை குடுவையிலிட்டு ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது விஞ்ஞானியின் கண்ணாடி குடுவையில் இராணுவப் படையும் CBI அதிகாரியும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் ஊரின் எல்லை கோட்டை தாண்டும் முன் விஞ்ஞானி ஒரு வெளவால் படையை அனுப்பிவைத்தார். இராணுப் படையினர் திணறிப்போனார்கள். வெளவால்கள் அங்குமிங்குமாக தலையை சுற்றி சுற்றி அடித்தன. பலர் தரையில் விழுந்தனர். துப்பாக்கி எடுத்து சுட்ட போது குண்டு திரும்பி வந்து சுட்டவனை சுட்டது. மீதி உள்ளவர்கள் பயந்து போய் ஆற்று தண்ணீரில் நீந்தி ஊர் எல்லையை தாண்ட முயற்சித்த போது ஆற்றுத் தண்ணீர் உள்வாங்கி கொண்டது. அதில் உள்ள தாமரை தண்டுகள் மேலெழும்பி வந்து தாமரை பூவிலிருந்த பச்சை பாம்புகள் இவர்கள் கண்ணை கொத்த கிளம்பின. பலரின் கண்கள் கொத்தப்பட்டன. அந்த இடத்திலேயே பலரும் மஞ்சள் இரத்தம் கக்கி கக்கி செத்தனர்.

எப்படி எல்லாமோ தட்டுத் தடுமாறி கொஞ்சம் பேர் விஞ்ஞானியின் வீட்டை நோக்கி போய் கொண்டிருந்தார்கள். விஞ்ஞானியின் வீட்டுத் தோட்டத்தை அடைந்து துணிகளான பாதையில் நடந்தபோது, பூத்து முளைத்த கெவுளிக் குஞ்சுகள் அவர்களின் வாயின் வழி உள்ளே நுழைந்து வயிற்றின் வெளியே வந்தன. அனைவரும் அந்த இடத்தில் வயிறுவெடித்து ரத்தம் கொப்பளிக்க செத்தார்கள். மண் பிளந்து மூடிக்கொண்டது. எஞ்சிய CBI அதிகாரி மட்டும் Mr.இஸ்திரியின் வீட்டை நெருங்கி வாசலில் கால் வைத்தவுடன் அவரின் தலை வாசல் படியிலும் கால் மேலாகவும் மாறியது தான் தெரியும். உடனே சிதறு தேங்காயாக அவரின் மண்டை உடைந்து சிதறியபடி துடித்து செத்துப் போனார்.

கழுதை முடியில் சேராங்கொட்டையைத் தடவி கண்ணாடி குடுவையில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார் Mr.இஸ்திரி இது ஒன்றையும் அறியாதது போல.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com