Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
சிரிப்பு தரும் சிந்தனைகள்

சொல்லும் சொல்லெல்லாம் வெல்லும் சொல்லல்ல
- நீலம் மதுமயன்

சொல்லும் சொல்லெல்லாம் வெல்லும் சொல்லாக அமைய வேண்டும் என்று எண்ணாதவர்கள் இருக்க முடியாது. சொல் மிக முக்கியமானது. ஒரு சொல்லை ஒருவர் சொல்லும் முறையை வைத்தே அவரது தகுதியைத் தீர்மானிக்கலாம். வார்த்தை வாழ்வின் வாசலாக இருக்கிறது.

வாயால் வாழ்ந்தவர்களும் உண்டு. வாயால் வீழ்ந்தவர்களும் உண்டு. வாக்கு வாழ்வைத் தீர்மானிக்கும் என்று அறிந்து கொண்டவர்க்கு மட்டுமே வாழ்வு வசப்படும். சொல்லைச் சுவைபடச் சொல்வது ஒரு கலை. அந்தக் கலையை விலைப்படுத்தி வெற்றி கண்டவர்கள் பலர். இங்கே நான் பேச்சாளர்களை மட்டும் குறிப்பிடுவதாக எண்ணிவிட வேண்டாம்.

சொல்லும் திறன் இருந்தால் குடும்பத் தலைவனுக்கு குடும்பப் பிரச்சனைகளைத் தீர்க்க அது உதவும். ஒரு வணிகன் தன்னை வளர்க்க இதனை பயன்படுத்தியே ஆக வேண்டும். பயிற்றுவிக்கும் ஆசிரியனுக்கு இந்த சொல்லும் திறன் இல்லை என்றால் எதிரே இருப்பவன் கவனச்சிதறலை கைவசப்படுத்திக் கொள்வான். உருவாக வேண்டியவன் கருவிலே காணாமல் போவதற்கு இது வழி வகை செய்துவிடும்.

எனவே வெல்லும் சொல்லைச் சொல்லும் திறனை வளர்க்க முயல வேண்டும். ‘சொல்லிய சொல் உனக்கு எஜமான், சொல்லாத சொல்லுக்கு நீ எஜமான்’- என்னும் சிந்தனை நினைவில் கொள்ளத்தக்கது. ‘வெல்லும்’ சொல் இன்மை அறிந்து சொல்ல வேண்டும்’- என்றார் வள்ளுவர்.

பலசரக்குக் கடைக்கார அண்ணாச்சிக்கு ஒரு பழக்கம். வேறொன்றும் அல்ல. யாராவது பொருள் கேட்டால், அப்பொருள் இல்லை என்றாலும் இல்லை என்று சொல்லவே மாட்டார்.

“அண்ணாச்சி! ரின் சோப் இருக்கா?”- என்று கேட்டால், இல்லை என்று சொல்ல வேண்டியது தானே, ம்கூம் சொல்லவே மாட்டார். “501 இருக்கு சாருக்கு ஒண்ணு எடுப்பா”- என்பார். வந்தவர், “இல்ல அண்ணாச்சி ரின்சோப் இருக்கா?”- என்று கேட்டால், “பவர்சோப் இருக்கு நல்லா இருக்கும் எடுப்பமா?” என்பார்.

நானும் கவனித்துப் பார்த்திருக்கின்றேன், இல்லை என்றே சொல்லாமல் இருக்கும் பொருளை இதமாகச் சொல்லி நாசூக்காக விற்று பொருள் நன்றாகவே சம்பாதிக்கின்றார்.

இருந்தாலும், மேற்படியாருக்கு ஒரு வருத்தம். ‘எப்போது கேட்டாலும் கேட்டது இல்லை என்றாலும் இல்லை என்று சொல்லாமல் மனிதன் சாமர்த்தியமாக தொழில் செய்கின்றாரே, இவரை ஒரு நாள் எப்படியாவது இல்லை என்று சொல்ல வைக்க வேண்டும்’ என்று எண்ணிக் கொண்டார்.

நினைத்த நாளும் வசதியாக வந்தது. நேராகக் கடைக்குப் போனார். “அண்ணாச்சி நாலு முழ வேட்டி ஒண்ணு குடுங்க”- என்றார். அவ்வளவுதான் அண்ணாச்சி திருதிரு என முழிப்பது போல தோன்றியது. ‘பலசரக்குக் கடையில் வேட்டி ஏது?’- என்று எண்ணி முடிப்பதற்குள், அண்ணாச்சி கடைப் பையனைப் பார்த்து, “டேய் பையா சார் நம்ம ரெகுலர் கஸ்டமர் நாலுமுழ வேட்டி கேட்கிறார், அந்த அரிசி வந்த சாக்குல ரெண்டு எடுத்துக் கொடு ஆத்திர அவசரத்துக்கு கட்டிக்கிடலாம்”- என்றாரே பார்க்கலாம்.

சொல்லெல்லாம் வெல்லும் சொல்லல்ல, ஆனாலும் இது வென்ற சொல்தான். சொல்லில் வல்ல சொல்வல்லார்கள் இருவர் பேசும் போது கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். ஒருவரை வெல்லும் முயற்சியிலே சொல் விளையாடல் தொடரும்.

இருவேறு ஆயுள் காப்பீடு செய்யும் கம்பெனிகளின் ஏஜென்ட்கள் இருவர் ஒன்று சேர்ந்து ஒரு வாடிக்கையாளரை இழுப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு ஏஜென்ட், “எங்கள் ஆயுள் காப்பீட்டுக் கம்பெனியில் சேர்ந்தால் 14-வது மாடி ஒன்றிலிருந்து விழுந்து இறந்தவர் பிணம் வீட்டுக்கு வந்து சேரும் முன்பே காப்பீட்டுப் பணம் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும்”- என்றார்.

அடுத்தவர் சும்மா இருப்பாரா? அவரும், ‘எங்கள் கம்பெனியில் காப்பீடு செய்தால் அதே 14-வது மாடியில் இருந்து ஒருவர் விழுந்து கொண்டிருக்கும் போதே காப்பீட்டுப் பணம் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடும்”- என்றார்.

கேட்டவர் விழாமல் இருந்தால் போதும் என்று தோன்றுகிறதல்லவா? சொல்லை சுவை கூட்டிச் சொல்வதில் அவ்வளவு வைரம் ஏறி விடுகிறது. நாம்தான் திறமையானவர் என்று எண்ணுவதுதான் தவறானது. சொல்லும் சொல்லெல்லாம் வெல்லும் சொல்லாக இருப்பதில்லை.

சின்னச் சின்ன சம்பவங்களையும் பெரிய சஸ்பென்ஸ் போல் கொண்டு கூட்டிப் பேசி பூதாகரமாக்கும் அறிவு சிலருக்கு பிறவியிலேயே வாய்த்திருக்கும். அப்படிப் பட்டவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

மகனோடு விளையாடிக் கொண்டிருந்தார் ஒருவர். அவரைப் பார்க்கப் போனவர், “என்ன அண்ணே நம்ம பையனா?”- என்றார். அவ்வளவுதான் அவர், “நம்ம பையன் இல்ல எம் பையன்”- என்றாரே பார்க்கலாம். குயிக்தியாகச் செயல்படும் புத்தியே சிறந்தது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இருந்தாலும் வந்தவருக்கு கொஞ்சம் வருத்தம் தான். என்ன செய்ய? காலம் கனிவது வரை காத்திருக்க வேண்டியதுதான். ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த அந்தப் பையனின் அப்பா மீண்டும் அவரிடம் பேச்சுக் கொடுத்தார். “எம்பய எதிர் காலத்தில பெரிய டாக்டராவான் என்பதை இப்போதே உறுதியாச் சொல்லலாம்”- என்றார்.

உடனே வந்தவர், எரிச்சலோடு, அதெப்படி இந்தச் சின்ன வயதில் டாக்டராவான் என்பதை உறுதியாக சொல்ல முடியும்? பையனைப் பார்த்தா உங்கள மாதிரி அசடால்ல இருக்கான்? எப்படி கண்டுபிடிச்சீங்க?- என்று போட்டு உடைத்தே விட்டார்.

உடனே பையனின் அப்பா, சற்றும் அசராமல், “நான் என்ன சொன்னேன் டாக்டராவான் என்றுதான் சொன்னேன், இந்தாப் பாருங்க அவன் என்ன எழுதியிருக்கான்னு கண்டு பிடிக்கவே முடியல்லல்ல...” என்றாரே பார்க்கலாம்.

சிலர் ஒருவர் சொல்லும் சொல்லை வைத்தே அவரைத் திருப்பித் தாக்குவார். இது ஒருவகை உத்தி. இதற்கு அதி மேதாவித்தனம் அவசியம் இல்லை, என்றாலும் கூர்த்த மதி கொஞ்சம் வேண்டுமல்லவா?

மும்பையில் உள்ள ஒரு இடத்தின் பெயர் தானே. தாதர் என்னும் இடத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பஸ்ஸைப் பார்த்து பக்கத்தில் இருந்த ஹிந்திக்காரரிடம், “இந்த பஸ் தானே போகுமா?”- என்று தமிழில் கேட்டான். அவரும் புரியாமல் தலையில் அடித்துக் கொண்டார்.

அந்த வழியே இரண்டு தமிழர்கள் தமிழில் பேசிக் கொண்டு வருவதைப் பார்த்து மகிழ்ந்து போய் அவர்களில் ஒருவனிடம், “தமிழா? ரொம்ப சந்தோசம்... இந்த பஸ் தானே போகுமா?- என்று கேட்டான் அவ்வளவுதான், அதற்கு அவன், அதெப்படி பஸ் தானே போகும்? டிரைவர் ஓட்டுனாதான் போகும்”- என்றானே பார்க்கலாம்.

அவர்கள் பேச்சுத்தான் அத்தோடு முடிந்ததே ஒழிய, அந்தப் பேச்சு இன்னும் முடிந்து போய்விடவில்லை. எப்படி என்கிறீர்களா? நீங்களும் முயன்று அதையும் வெல்லும் சொல் ஒன்றைச் சொல்லிப் பார்க்கலாம். முயலுங்கள் முயற்சிக்கு முடிவில்லை முயலும் ஆமையும் ஓடியதில் முயல் தோற்றதற்குக் காரணம் முயலாமையே...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com