Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
நூல் மதிப்புரை

நமக்கிடையிலான தொலைவு

- தி.சு. நடராசன்


மதிவண்ணனுடைய கலகம் முக்கியமாக வைதீக சமயமும் அதன் தெய்வங்களும் மற்றும் சாதியமைப்பு எனும் இரண்டின் மீதும் நிகழ்கிறது.

புதிய தலைமுறை எழுத்து உருவாகியிருக்கிறது, இருபதோடு இருபத்தொன்றின் துவக்கத்தில். முக்கியமாகக் கவிதையில், மவுனக் குரல்களுக்கும் இருள் முடுக்குகளுக்கும் மொழி விளையாட்டுக்களுக்கும் என்று கவிந்துகிடந்த ஒரு சூழலைத் தகர்த்துவிட்டு, மற்றும் தனிமையின் பிரம்மைகளுக்கும் சுயமோகங்களுக்கும் அறிவாளித்தன சொல்லாடல்களுக்கும் என்று அடர்ந்துகிடந்த காடுகளை நிராகரித்துவிட்டுப் புதிய சமூக நீதிகளுக்கான போராட்ட குணங்களை மாற்றுக்காக முன்வைக்கிறபோது-அதன்பொருட்டு-இது உருவாகியிருக்கிறது. வீரியமாக, வெளிப்படையாக, உண்மையின் ஆவேசமாக, எதிர்பார்ப்பின் எத்தனிப்பாக இந்தப் “புதியதலைமுறை எழுத்து” உருவாகியிருக்கிறது. இதிலே கலகக்குரல் உண்டு; அதேபோன்று, மாற்றுக்களை முன்வைக்கும் அக்கறையும் உண்டு. இழந்தது எது என்ற அறிவும், இலக்கு எது என்ற உணர்வும் கொண்டு மொழியைப் புதுசாக்கிக் கொண்டு அதன் கரங்களை வலுவாக்கிக் கொண்டு உணர்வுகளின் சாத்தியங்களோடு பிறந்திருக்கிற இந்தப் ‘புதிய தலைமுறை எழுத்தின்’, ஒரு சரியான பிரதிநிதியாக-மாதிரியாக-இங்கே மதிவண்ணன் வந்திருக்கிறார்.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர், தொண்ணூறுகளின் உக்கிரத்தில், கவிதை இளைத்துப் போய்க் கிடந்தது. மூப்பு, அதன் முகம் பூராவும் முளைத்துக் கிடந்தது. பழங்கவுரங்களின் நுரை கொப்புளிக்க, அதன் போதையில், மேவாய்களைத் தடவிவிட்டுக் கொண்ட மூத்த கவிஞர் குழாம், தாங்களே தயாரித்த பீடங்களில் இறுக்கமாக ஆவேசமித்துக் கிடக்க, கிடக்கட்டுமே என்று ஒதுக்கிவிட்டுப், புதிய தலைமுறை எழுத்து, சமூகத்தோடு நேரடியாக எதிர்வினை கொள்ளுவதில் அக்கறை செலுத்துகிறது. இந்த எழுத்தின் தேவை, தெளிவானது; இதன் பயணம் உறுதியானது. சொல்லுகிறார், கவிஞர்.

ரத்தக்கறை படிந்த
கிரீடங்களைக் குறிவைத்து
அடிக்க கவண்கற்களுடன்
தொடங்கிய பயணமிது.

யார் எதிரி? அதிகாரவர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த எதிரிகளின் வரலாறு என்ன? இவர்களை என்ன செய்வதாக உத்தேசம்? சந்தேகத்திற்கு இடமின்றி இலக்கைத் தீர்மாணிக்கிறார் கவிஞர். இதுதான், இந்த வகையான கவிதையின் குணம்.

உள்முகமாக உணர்வுகளை மொழியில் சிறையிலிட்டுவிட்டு பேதலித்துநிற்கும் பிம்பதாரர்களின் எழுத்துகளுக்கு மாறாக இந்தக் கவிதைகளின் உணர்வுகள் மொழியிலிருந்து சுதந்திரமாகப் பீறிட்டு வருகின்றன. எனவேதான் டேவிட்டின் கவண்கல்களாக அவை சரியான இலக்குநோக்கிப் பாய்கின்றன. பாசாங்கு இல்லாத ஆவேசத்தோடு.

எதிர்ப்படும் போதெல்லாம்
என்மேல் காறி உமிழ்வதை
ஒரு பிறவிக் கடமையைப் போலவே
சொய்துவிடுகிறாய்
இப்போதெல்லாம்
உன் வாயிலடைக்க
கைகளில் கொண்டு திரிகிறேன்
தூமைத் துணிகளையும் தூமையில் தோய்ந்த
இக்கவிதைகளையும்.

தீண்டாமைகளுக்கு, பரம்பரையாக வரும் நீசமொழிகளுக்கு, இதைவிட எப்படிப் பதில் தரமுடியும்? இப்படித்தான் முடியும். மதிவண்ணனின் உணர்வுகளும் மொழிகளும் சத்தியமானவை. இது கொச்சையல்ல. கொச்சை யென்பது உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் தொடர்பற்றுப்போய் உதிரியாகத் துருத்திக் கொண்டிருப்பது; தன்னைத்தானே காட்டிக் கொண்டிருப்பது. சொற்கள் உணர்வுகளுக்குள் கரைந்து வரவேண்டும்; தவிர்க்க முடியாத ஒரு தேவையை முன்னிட்டதாக இருக்க வேண்டும். மொழிக்குள் கவிதை புதைந்து கிடப்பதில்லை. மொழியைக் கவிதை விடுதலை செய்கிறது. புதிய தலைமுறை எழுத்தின் பணி இதுதான். மதிவண்ணன் இதனை கவனிப்புடன் செய்திருக்கிறார்.

மதிவண்ணன் தலித் கவிஞர் என்று அறியப்படக்கூடியவர். அவருடைய கவிதைகள், தலித் கவிதைகள் என்று அறியப்படக் கூடியவை. ஆனால், முக்கியமாக இன்று, ‘தலித்’ என்ற வார்த்தை, சாதியடையாளத்தைத் தாண்டி சமூக உணர்வு- சமூக விடுதலை என்பதாக அர்த்தப்படுகின்றபோது, மதிவண்ணன் தலித் கவிஞராகவும் அதேபோன்று நுண் அரசியலுக்குள் காய்நகர்த்தி விளையாடாமல் பொதுவான சமூகவிடுதலையை த்தேடும் ஒரு போராளியாகவும் ஒரே நேரத்தில் அர்த்தப்படுகிறார். அவர் மட்டுமல்ல அவர் போன்று, இயக்கக்குரலையும் விடுதலை யுணர்வையும் கொண்டிருக்கின்ற பல புதிய தலைமுறை எழுத்தாளர்களையும் சேர்த்தே தான் நாம் அப்படி அர்த்தப்படுத்துகிறோம்.

‘நமக்கிடையிலான தொலைவு’ எனும் தொகுப்பில் ஒரு நாற்பத்திநாலு கவிதை களிருக்கும். எல்லாமே அவருடைய பெயர் சொல்லக்கூடியவை. உயர்சாதி மனோபாவங்கள், சாதியமைப்புக்கள் ஆகியவை மீதான எதிர்வினைகள் பெரும்பாலானவை. அதே போன்று, காதல், ஊடகம், தத்துவம், பெருந்தெய்வங்கள், சுயவிமர்சனம், என்பனவும் பாடுபொருளாகி இருக்கின்றன. உலகமயமாதலும் பாடுபொருளாகியிருக்கிறது.

‘நிச்சயமாய் தூக்கி எறிவேன் உன்னை நான் என்னிலிருந்து’ என்று அவர் சொல்லுகிறபோது, ஒரு கூட்டிலிருந்து-ஒரு குழுவிலிருந்து-ஒருவரைத் தூக்கியெறிவதாகக் கூற முடியும். காதலன், தன் காதலியை அல்லது காதலி தன் காதலனை, காதல் பொய்த்துப் போனபின் தூக்கியெறிவதாகவும் கூறமுடியும். அதே மாதிரி உன்னை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள் என்ற கவிதையை அதனுடைய தொடர்ச்சியாகக் கூறமுடியும். உறவுகளில் ஒரு வெறுப்பு, இவருடைய பல கவிதைகளில் ஒரு பதிவு. பெரியார் ஈ.வே.ரா.விற்கு நூலை சமர்ப்பணம் செய்கிறார், “வார்த்தைகளுக்குள் கொடுக்குகளை ஒளித்துவைக்கும் வித்தையைப் படிப்பித்த...” என்று பெரியாரோடு கற்றுக் கொண்டதாக ஒரு அடைமொழியோடு. பெரியாரிடம் அது இருந்ததோ என்னவோ, இவருடைய கவிதைகளில் அது தாராளமாகவே இருக்கிறது. “எனக்கும் தமிழ்தான் மூச்சு-ஆனால் பிறர்மேல் விடமாட்டேன்” என்று தமிழ்ப்பற்றை மிக வக்கிரமாக கிண்டலடித்த ஞானக்கூத்தன் நெஞ்சில் ஒரு ‘கொடுக்கு’ப் பாய்கிறது.

நாற்றமெடுக்கும் குசுவை
பிறர்மேல் தாராளமாய்விடும் நீ
மூச்சை மட்டும் விடாமலிருப்பதில்
ஒளிந்துள்ள
அக்ரஹார ஆச்சாரம்...

இப்படித்தான் கவிதைகள், சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்துப் பல வடிவங்களில் பாய்கின்றன.

மதிவண்ணனுடைய கலகம் முக்கியமாக வைதீக சமயமும் அதன் தெய்வங்களும் மற்றும் சாதியமைப்பு எனும் இரண்டின் மீதும் நிகழ்கிறது. வெளியே இருக்கும் ‘மானிடப்’ பெண்களைக் கோயிலுக்கு நுழைய விடாமல் ‘தீட்டு’ என்பது தடுக்குமானால், கோயிலுக்கு உள்ளேயிருக்கும் தேவியர்க்கு? கேள்வியாக அல்ல; குறுகுறுப்புடன் கூடிய கிண்டலாக, ஒரு கவிதை. இன்னொன்று மத்திய தரவர்க்கத்தினரும் புதுப்பணக்காரரும் வைத்திருக்கும் பூசையறைகள். பக்கத்தில் போதையில் இந்த மனிதர்கள் பிணையலிடும் சாயங்காலப் புணர்ச்சிகளின் போது இந்தத் தெய்வங்கள் என்ன செய்யும்? கேள்வியாக அல்ல; குறுகுறுப்புடன் கிண்டலாக, இப்படி இன்னொரு கவிதையும். வெறும் கிண்டல்கள் அல்ல-சமயங்களுக்குள் புழுவாய் நெளிந்து கிடக்கும் பம்மாத்துக்கள் இப்படித் தோலுரிகின்றன. சாதியமைப்பு எனும் கேவலம்தான், இதனைவிடவும் கோபமாகச் சாட்டையைடி பெறுகின்றன பல கவிதைகளில். ஒளிவுமறைவு அற்ற வார்த்தைகளில்.

கவிஞர், ஒரு தலித் ஆக இருக்கலாம்; அதற்குள் குறிப்பிட்ட ஒருசாதியாக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட ஒரு சாதியை முன்னிறுத்தாமல், உழைக்கும் அடித்தளமக்களின் பிரிவுகளையெல்லாம் சேர்த்துக் கொண்டுவந்து நிறுத்துகிறார். உழைக்காமல் தின்று, அதிகாரங்களையும் கையிலெடுத்துக் கொண்டு, அதற்கு வசதியாகச் சாதியமும் பேசும் ஆதிக்க சாதிக்கு முன்னால், தலித்-அடித்தள-உழைக்கும் மக்களைச் சுரண்டப்படும் வர்க்கமாகக் காட்டுகிறார். கவிஞர் ‘சாதியமும் சில தின்னுட்டுப் பேண்டான்களும்’ என்ற தீர்க்கமான கவிதையொன்றில்.

விதைத்து விளைவித்து அறுத்துத்
தர வேண்டும் நான்.
சொகுசாய் நிழலில் உட்கார்ந்து
தின்பாய் நீ.
தின்றுவிட்டு தினுசு தினுசாய்
பேண்டழிப்பாய் நீ.
திரும்பவும் பேள வசதியாய்
பேண்டதை அள்ள வேண்டும் நான்.

வர்க்கமுரண்பாடு, சாதியமைப்பை முன்னிட்ட ஒரு சமூக அவலமாக இங்கே காட்டப்படுகிறது.
இத்தகைய பார்வையின் தர்க்கம் காரணமாகத்தான், உலகமயமாதல் மற்றும் பன்னாட்டுப் பெரு முதலாளித்துவம் எவ்வாறு தலித் மக்களை - உழைக்கும் மக்களை கொடூரமாகத் தாக்குகிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

செருப்புக் கட்டித்தர வேணுமென
கேட்ட வாலன் பகடையின்
புதல்வர்களிடமிருந்து
‘பாட்டா’, ‘நைக்’ குழுமங்கள்
மாட்டுத்தோலை அபகரித்துப் போன
அன்று
செருப்புத் தைக்கும் எங்கள் ஊசிகளில்
ஒன்று
பழஞ்செருப்பு தைத்தாற்றிக்கொண்டது
ஒன்று
நீங்கள் பேளும் கக்கூஸில் தவறிவிழுந்து
ஒன்று
இக்கவிதையைக் கட்டத் துவங்கியது.

ஒரு தலித் மகன் என்ற தளத்தில் நின்று கொண்டு, தலித் உணர்வை, உழைக்கும் மக்கள் உணர்வாக, சுரண்டப்படும் மக்களின் உணர்வாகப் பார்த்து அதே சமயம் இந்தச் சுரண்டல், பன்னாட்டு முதலாளித்துவத்தின் வழிகாட்டுதலில் கட்டுண்டு நடப்பதையும் கவனித்து, இந்தக் கொடுமை களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற வன்மத்துடனும் உண்மை என்ற ஒரு ஆவேசத்துடனும் இந்தக் கவிஞர் குரல் கொடுக்கிறார். ஆனால் இது, தனிமையான குரல் அல்ல. எழுந்துவரும் புதிய தலைமுறை எழுத்தின் கூட்டுமொத்தமானகுரல். இதனை அடையாளப் படுத்துவதுதான் மதிவண்ணனின் கவிதைகள்.

நூல் : நமக்கிடையிலான தொலைவு
ஆசிரியர் : ம. மதிவண்ணன்
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
45ஏ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை - 5.
பக்கம் : 64 விலை : ரூ.35/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com