Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
நூல் மதிப்புரை

கேரள சமூக நீதிப் போராட்டங்கள் நாராயணகுருவும் அய்யங்காளியும் பிறகும்
- ஜே.ஜி. ஜோணி ஜெபமலர்

‘சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாறு’ என்ற பொதுத் தலைப்பின் கீழ், முனைவர் கி.நாச்சிமுத்து நிகழ்த்திய சொற் பொழிவின் எழுத்து வடிவம் என்பதனால், கேரளாவில் நடந்த/நடந்து கொண்டிருக்கிற சாதி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி ஆழமான அறிதலுக்கு வேறு நூல்களைத்தான் தேட வேண்டும். ஆனால் தமிழ்ச் சமூகத்துக்கு தெரிய வராத பல செய்திகளும், தலைவர்களின் பெயர்களும் பக்கங்களில் மிதக்கும் போது, இந்தியாவின் ‘முன்மாதிரி’ மாநிலமெனப் பெயர் பெற்ற கேரளத்தின் வரலாறு எவ்வளவு மேலோட்டமாகப் புனையப் பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

கேரளாவின் மனசாட்சி யாகவும், ஒரு சமுதாயத்தின் ஒட்டு மொத்த எழுச்சியை தன் வாழ்நாளிலேயே உருவாக்கியவர் என்பதாகவும் அறியப்படுகின்ற நாராயணகுரு, அய்யாவழி மரபின் தோற்றுவாயாக அமைந்த வைகுண்ட சாமி, மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களின் படை நாயகனாக விளங்கிய அய்யங்காளி ஆகியோரைப் பற்றித்தான் இதுவரை அதிக செய்திகள் தமிழில் பதிவாகி இருக்கின்றன. சுயமரியாதைக் கருத்துக்களின் முன்னோடி சட்டம்பி சுவாமிகள், தாழ்த்தப்பட்டோர் எழுச்சியின் தளபதி குமார குருதேவன், மீனவர் எழுச்சி பேசிய பண்டிட் கறுப்பன் போன்றோர் பற்றிய குறிப்புகளைத் தந்து, இவர்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தந்திருக்கிறார் நூலாசிரியர்.

‘சாதி ஒழிப்பு’ என்பது வேறு; ‘சமூக நீதி’ என்பது வேறு என்று தெளிவாகக் கூறுகிறார் நூலாசிரியர். சாதி ஒழிப்புக்கான வழிமுறை களையும், சமூக நீதிக்கான வழிமுறைகளையும் கூட்டிக் குழப்பிப் பேசுவதில்தான் இன்றைய அரசியல் கட்சிகள் பல பிழைப்பு நடத்துகின்றன. கேரளாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கேரளாவில் தலித்துகளைத் தவிர மீதி எல்லோருக்கும் தங்களை அரசியலில் பிரதிநிதித்துவப் படுத்தவும், பிரதானமானதாகக் காட்டவும் சக்தி வாய்ந்த அமைப்புகள் இருக்கின்றன. ஈழவர்களைப் பிடியில் கொண்டுள்ள எஸ்.என்.டி.பி. அமைப்பும், நாயர்களால் அமைந்த என்.எஸ்.எஸ். அமைப்பும் தேர்தல் நேரங்களில் செயல்படும் விதம் அரசியல் கட்சிகளை தோற்பாவைக் கூத்து ஆடும் படி செய்து விடும். இதில் பிற்படுத்தப்பட்ட சமூகமான ஈழவர் களின் எழுச்சிக்கும், எஸ்.என்.டி.பி.யின் (ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம்) தோற்றத்துக்கும் வித்திட்டவர் மகான் நாராயணகுரு. அதே வேளையில் முற்படுத்தப் பட்ட சமூகம் என்றறியப்படுகிற நாயர் சமூகத்தின் தோற்றம் எழுச்சி, வளர்ச்சி பற்றிய புரிதல்களின் தேவை சாதியமைப்பின் இரகசியம் பற்றி அறிய விரும்புவோருக்கு அவசியம். 1901ல் திருவிதாங்கூர் சென்சஸ் படி 160 உபஜாதிப் பிரிவுகளாக இருந்த நாயர் சமுதாயம் மிகக் குறுகிய காலத்தின் தன் ‘உபஜாதிகளைத்’ துறந்து விட்டு, ‘நாயர்’ என்ற பொதுப் பெயரோடு இயங்குகிற விசையை ‘நாயர் சமாஜம்’ ஏற்படுத்தியது. ஈழவ சமுதாயத்தில் 21 உட்பிரிவுகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நூலுக்கு வெளியே உள்ள தகவல் என்றாலும் ‘சமூக நீதிப் போராட்டம்’ என்று சொல்ல வரும்போது, இந்த சாதி உட்பிரிவுகளை தனக்குள்ளே கிரகித்துக் கொண்டதனால் பலமான சமுதாய அமைப்பை உருவாக்க முடிந்திருப்பது பற்றியும், இது ‘சாதி ஒழிப்பு’ பற்றிய சிந்தனைக்குச் சுடரேற்றுமா என்பது பற்றியும் யோசிக்கலாம். தலித்துகளுக்கு இடையில் காணப்படும் உட்பிரிவுகள் ஓர் ஒன்றுபட்ட இயக்கம் உருவாவதற்கு உருவாக்கும் தடைகள் பற்றியும் நினைத்துக் கொள்ளலாம்.

‘கூவாத கோழி கூவியே தீர வேண்டும்’ என்ற கவிதை முழக்கத்தோடு போராட்டக் களத்துக்கு வந்து, ‘பிரத்தியட்ச தெய்வீக இரட்சா சபை’ என்ற மத அமைப்பைத் தானாகவே துவங்கி, நிலவில் இருந்த இந்து/கிறிஸ்தவ மத ஆதிக்கத்துக்கு எதிராகக் குரலெழுப்பிய குமார குருதேவன் என்கிற பொய்கையில் அப்பச்சன் பற்றிய தகவல் மறைந்து கிடக்கும் வரலாற்றின் ஒரு தும்பைக் காட்டி இருக்கிறது. ‘காற்றும் வெயிலுமேற்ற/கறுத்த சந்ததியே’ என்று அவர் தொள்ளாயிரங்களின் துவக்கத்தில் ஒலித்த குரல், காலம் போகப்போக அடர்த்தி கூடவில்லை. இப்போதும் ஈனஸ்வரத்தில் சி.கே.ஜானு போன்றவரிடமிருந்து கேட்கிறது.

கேரளாவில் பொதுச் சமூகத்தில் ‘சாதி பேசுவது’ காந்திக்கும், காரல் மார்க்சுக்கும் எதிரானது என்பது போல ‘நாகரிகம்’ கருதி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால வேட்பாளர் தேர்வின் போது தனித் தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் தலித்துகளை வேட்பாளராக நிறுத்தாமலிருக்க முடிவு செய்வதிலிருந்து, வீட்டின் உள்வட்டங்களில் மனிதர்களின் நடத்தையை சாதிக்கு குறிப்பிட்டு இட்டுள்ள சொறிப் பெயர்களால் அடையாளப் படுத்துவது வரை ‘மானசீக தளத்தில்’ சாதியுணர்வு கம்பீரமாகவே இருக்கிறது.

நூலை வெளியிட்டுள்ள ‘அம்பேத்கர் ஆய்வு மையத்தின்’ இயக்குர், முனைவர் டி.தருமராஜன் தம்முடைய கச்சிதமான முன்னுரையில் கூறிஉள்ளபடி, “சாதிக்கு எதிரான போராட்டங்களை முன்னிலைப் படுத்தும் ஆய்வுகளின் வருகை தலித்திய சிந்தனைகள் வலிமை பெறுவதை காட்டுகின்றன” என்பதற்கு இந்தச் சிறிய நூலும் ஒரு வலிமையான ஆதாரம்.

நூல் : கேரள சமூக நீதிப் போராட்டங்கள்
நாராயணகுருவும் அய்யங்காளியும் பிறகும்
ஆசிரியர் : கி. நாச்சிமுத்து
வெளியீடு : அம்பேத்கர் ஆய்வு மையம்,
தூய சவேரியர் தன்னாட்சி கல்லூரி,
பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டம்.
பக்கம் : 64 விலை : ரூ.10/-


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com