Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
குடிநீர் பிரச்சனை

பொலிவியாவிலிருந்து திருப்பூருக்கு
- குருசாமி மயில்வாகனன்

அரசானது மக்களுக்கு இலவசமாகக் குடிநீர் வழங்கிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துகிறது. இன்னொருபுறம், தூய்மையான குடிநீரின் அவசியம், சிக்கனமாகப் பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து இந்த அரசுகளை யோக்கியமானவை களாகக்காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு ஏகாதிபத்திய வல்லரசாகப் பரிணமித்துள்ள அமெரிக்கா, தனது சுரண்டலுக்கான காலனியாதிக்கக் கொள்கைகளை புதிய முறையில் வடிவமைத்துக் கொண்டது. பிற வல்லரசு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களை துவக்கியது. எம்.என்.சி. என்றழைக்கப்படுகின்ற இப்பன்னாட்டுக் கம்பெனிகள், பிற நாடுகளில் தங்கு தடையின்றி வர்த்தகம் செய்வதற்கு உதவுவதற்காக, உலகவங்கி உலக வர்த்தகக் கழகம் சர்வதேச நிதி நாணயம் போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன.

ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலனியாதிக்கச் சுரண்டல் முறைகள், பல்வேறு வகைகளில் தொல்லைகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வந்தாலும், முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கே உரிய நெருக்கடிகள் கடுமையாக முற்றியதாலும், பழைய முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம், அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. நவீன முறைகளில் திட்டங்கள் தீட்டப்பட்டன. தனியார் மயம், தாராளமயம், உலகமயம் எனப் பெயர்களிடப் பட்டன. பல்வேறு வகையான நிதியுதவித் திட்டங்கள் எனும் தலைப்புகளில் கடன்களை வழங்கி அவற்றின் மூலம் தனது சுரண்டலுக்கேற்றார் போல அரசுகளை வளைத்துக் கொள்வது எனும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இன்று உலகவங்கி, உலகவர்த்தகக் கழகம், ஐ.எம்.எப். போன்றவைகளையே தனது போர்ப்படைகளாகக் கொண்டு பிறநாடுகள் மீதான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. உலக வரலாற்றில் ஏகாதிபத்திய பன்னாட்டு கம்பெனிகளின் இந்தப் புதிய வடிவிலான சுரண்டல் முறைதான் “மறுகாலனியாக்கம்” என்றழைக்கப்படுகிறது.

இந்தியா போன்ற நாடுகளின் பொதுத்துறை நிறுவனங்களைக் கபளீகரம் செய்வது, அவைகளின் பெருங்கொள்ளைக்கான முதல் நிபந்தனையாக இருக்கிறது. நஷ்டத்தில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்களை வாங்குவதற்கு இவர்கள் இன்றும் இளித்தவாயர்கள் அல்லர். ஆனாலும் வாங்குகிறார்கள் என்றால் லாபத்தில் இயங்குகிற நிறுவனங்களை, பொய்யாகவும், போலியாகவும் நஷ்டக்கணக்கு காண்பிக்க வைத்து அவர்களிடம் விற்பதற்கு, இங்குள்ள மத்திய, மாநிலங்களின் ஆட்சிளார்கள் தயாராக இருப்பதுதான் காரணம். நஷ்ட நிறுவனங்களை வாங்கி பன்னாட்டுக் கம்பெனிகளால் அதில் லாபமீட்ட முடியுமென்றால் அதிலுள்ள சூட்சமம் நமக்குப் புரியாததல்ல. நஷ்டத்தை விற்கிறோம் என்று புத்திசாலிகள் போலப் பேசுவது மக்களை ஏமாற்றுவதுதான். பிள்ளை பெற முடியாத மனைவியை அடுத்தவனுக்கு கட்டிக் கொடுக்கிறேன் என்பது போலத்தான் இதுவும்.

இன்று உலகளாவிய வியாபாரத்தில் மிக முக்கியமான விற்பனைப் பொருள் தண்ணீர்.. அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீர் உறிஞ்சும் உரிமையைக் குத்தகைக்கு எடுத்து அந்தந்த நாடுகளிலேயே குடிநீராகவும், குளிர் பானங்களாகவும் விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்கும் தண்ணீர் வியாபாரம்தான் இன்று எண்ணெய் அதாவது பெட்ரோல் வியாபாரத்தையும் விட மிக அதிகமான லாபம் தரக்கூடியதாகும். எண்ணெய் வியாபாரத்தில் கிடைக்கும் 50ரூ லாபத்தை 5ரூ தண்ணீர் வியாபாரத்தில் பன்னாட்டுக் கம்பெனிகள் பெற்று விடுகின்றன.

எனவே தண்ணீரை விற்பனைச் சரக்காக்கும் வேலையைத் துரிதப்படுத்துவதற்காக, உலக வங்கியின் மூலமாக, உலக நாடுகள் அனைத்திற்கும் அமெரிக்காவின் தலைமையிலான வல்லரசுகள் நிர்பந்தங்களைக் கொடுக்கின்றன.

ஒருபுறம், அரசானது மக்களுக்கு இலவசமாகக் குடிநீர் வழங்கிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துகிறது. இன்னொருபுறம், தூய்மையான குடிநீரின் அவசியம், சிக்கனமாகப் பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து தங்களை யோக்கியமானவை களாகக் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

1990 முதல் 2002ம் ஆண்டுவரை குடிநீருக்காக உலகவங்கி கொடுத்துள்ள 276 கடன்களில் 84கடன்கள் குடிநீர் விநியோகத்தைக் கைப்பற்றும் நிபந்தனைகளைக் கொண்டவை. 1996 முதல் 1999 வரை வழங்கப்பட்டுள்ள 193 பிறவகைக் கடன்களிலும் கூட 112 கடன்கள் இதே போன்று தண்ணீரைப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் நிபந்தனைகளைக் கொண்டதுதான்.

ஆனால் இவ்வாறு தண்ணீரைத் தனியார் மயமாக்கும் அதாவது பன்னாட்டுக் கம்பெனிகள் வசம் ஒப்படைக்கும் திட்டங்கள் மக்களின் எழுச்சி மிகுந்த போராட்டங்களினால் பல நாடுகளில் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றன. ஏராளமான அனுபவங்கள் நம் கண்முன்னே இருந்தாலும் ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போம்.

“பொலிவியா”. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான சேகுவாராவின் நாட்குறிப்புகள் எழுதப்பட்ட நாடு. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவின் மூன்றாவது பெரிய நகரம் ‘கொச்சபம்பா’.

1996ல் கொச்சபம்பா நகராட்சிக்கு உலகவங்கி வழங்கவிருந்த கடன்களுக்கு நிபந்தனையாக தண்ணீரைப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கொடுக்க நிர்பந்தம் கொடுத்தது. அதன்பிறகு 1997ல் பொலிவியா அரசு, வாங்கிய கடன்களுக்கு காலநீட்டிப்புக் கோரியபோது, கொச்சபம்பா நகராட்சியின் நீர் நிர்வாக உரிமையைத் தரவேண்டுமென நிபந்தனை விதித்தது. 1999ல் மக்களுக்குக் குடிநீர் வழங்க கொச்சபம்பா நகராட்சி ஒதுக்கிய குடிநீருக்கான மானியத்தை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டது. இறுதியில் 2000ல் கொச்சபம்பாவின் நகரக் குடிநீர் விநியோகத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுப்பதாகக் கூறி கைப்பற்றியது ஒரு அமெரிக்கத் தண்ணீர் கம்பெனி.

விறுவிறுவெனத் தனது வேலைகளைத் துவக்கியது அக்கம்பெனி. குடிநீர்க் கட்டணத்தை பிரதேசங்கள் வாரியாக 200ரூ முதல் 500ரூ வரை உயர்த்தியது. சாதாரணத் தொழிலாளர்களுக்காக நிர்ணயிக்கப் பட்டிருந்த குடிநீர்க் கட்டணமானது 200லிருந்து 800 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மக்களுக்குப் பிரச்சனைகள் துவங்கின. தங்களது செலவுகளில் ஒவ்வொன்றிற்கும் எதிராக குடிநீர்க் கட்டணத்தை வைத்துப் பார்க்க வேண்டிய அவலநிலை வந்தது. உணவு, மின்சாரம், குழந்தைகளின் கல்வி இவைகளைக் கூடக் குடிநீருக்காகக் கைவிட வேண்டிய நிலையில் மக்கள் வெந்து புழுங்கினர். தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் அமிலமெனத் தகித்தது.

ஆதிக்கத்தின் உச்சகட்டமாக, “தண்ணீருக்கான உரிமை எங்களது குத்தகையில் இருப்பதால், மழைநீரை யாரும் சேமிக்கக்கூடாது. அப்படி மீறி மழைநீரைச் சேமிக்கின்ற மக்களும், விவசாயிகளும் எங்களுக்கு வரிகட்ட வேண்டும்” என்று அறிவித்தது அந்த அமெரிக்கக் கம்பெனி.

கொச்சபம்பா மக்கள் பொங்கியெழுந்தனர். சுமார் 3ஙூ லட்சம் மக்கள் போராட்டத்தின் போது திரண்டனர். வழக்கம் போலவே உள்ளூர் போலீஸ் தாக்குப் பிடிக்க முடியாததால் பொலிவிய இராணுவம் வந்தது. தண்ணீருக்காகப் போராடிய மக்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 170பேர் படுகாயமடைந்ததோடு, ஒரு சிறுவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். போராட்டத்தின் முன்னணித் தலைவர்களை நள்ளிரவில் கைது செய்து, நடுக்காட்டிலிருந்து சிறையில் கொண்டு போய்த்தள்ளியது பொலிவிய அரசு. ஆனாலும் உறுதியான மக்கள் போராட்டம் வெற்றியடைந்தது. அந்த அமெரிக்கக் கம்பெனியும் வெளியேறியது.

ஆனால் மகாராஷ்டிரத்தில் “என்ரான்” கம்பெனி வெளியேறும் போது செய்தது போலவே, அங்கும் அக்கம்பெனி வெளியேறியதும், “எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய லாபத்தின் இரு பகுதியாக, சுமார் 200 கோடி ரூபாய்களை பொலிவியா இழப்பீடாகத் தரவேண்டும்” என உலக வங்கி நடத்துகின்ற முதலீட்டாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த 200 கோடி ரூபாயைப் பொது மக்களிடம் வரியாக வசூலிக்க விருக்கிறது பொலிவிய அரசு. இதுதான் தண்ணீரைப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் குத்தகைக்கு விட்ட தனியார் மயப் புராணத்தின் அவலம்.

பொலிவியாவின் கொச்சபம்பா மட்டுமின்றி, பிலிப்பைன்சின் மணிலா, மற்றும் தென்னாப்பிரிக்கா என அவலப்புராணங்கள் தொடர்கின்றன. இனி விசயத்திற்குள் வருவோம். பொலிவிய கொச்சபம்பா நகராட்சி மக்களால் அடித்து விரட்டப்பட்ட அந்த அமெரிக்கத் தண்ணீர்க் கம்பெனியின் பெயர் “பெக்டெல்”. ஆம், இன்று தமிழகத்தில் திருப்பூர் நகரக் குடிநீர் விநியோக உரிமையை 20 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு கைப்பற்றியிருக்கும் அதே “பெக்டெல்” கம்பெனிதான்.

பாதாளச் சாக்கடைத் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் எனும் அமைப்பிடம் விடப்பட்டுள்ளது. இத்திட்டம் மொத்தம் ரூ.569 கோடியிலானது. தமிழக அரசும், இந்திய அரசும் சேர்ந்து 10கோடி; திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் 10கோடி; தவிர மீதமுள்ள 549 கோடிகளும் உலகவங்கி, மும்பை முதலீட்டாளர் கழகம் எனப்பல்வேறு பெயர்களில் பன்னாட்டுக் கம்பெனிகள் கைப்பற்றியுள்ளன. மேலும் இத்திட்டத்திற்கான முழுச்செலவு தெகையையும் “Full Cost Recovery” எனப் பிறநாடுகளில் அமுல்படுத்தியது போன்று திருப்பூர் நகர மக்களிடமிருந்தே வசூலித்துக் கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு குறைந்த விலையில் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்வதற்காக திருப்பூர் சாயப் பட்டறைகளின் விஷக்கழிவு நீரை நொய்யலாற்றின் ஒரத்தபாளையம் அணையில் தேக்கி, சட்டவிரோதமான கொலை பாதகச் செயலைச் செய்தவர்கள் மீது 25 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு இன்று பின்னலாடையை விட லாபம் தரக்கூடிய, தண்ணீரை விற்பனைக்குக் கொடுக்க வேண்டுமென்பதற்காக நீதிமன்றத் தீர்ப்பு, பாதுகாப்பு, எச்சரிக்கை, கழிவுநீர் சுத்திகரிக்காத 600 ஆலைகள் மூடல் என்கிற நீதிமன்றத் தீர்ப்பு என பம்மாத்து வேலைகளைக் காட்டி, விஷக் கழிவுநீரை திறந்து விட்டுவிட்டது. இவ்வருடம் கனமழை பெய்து, ஆற்றின் மேல்புறத்தையும் சுத்தம் செய்து கொடுத்துவிட்டது.

இனிநொய்யலாறு பன்னாட்டுக் குளிர் பானக் குடிநீர்க் கம்பெனிகள், ஒட்ட உறிஞ்சுவதற்கான இடமாக ஆவதற்குத் தயாராகி வருகிறது. அதனால்தான் திருப்பூரின் சுற்றுச்சூழல் குறித்து இவ்வளவு நாள் அடைத்துப் போய்கிடந்த மீடியாக்களும் நீதிமன்றமும் இன்று பெருங்குரலில் ஒப்பாரிகளை வைக்கின்றன. ஒப்பாரி வைக்கச் சொல்கின்றன. “காவேரி, வைகை, தாமிரவருணி உள்பட கழிவுநீர் கலக்கப்படாத ஆறுகள் எங்கேனும் தமிழ்நாட்டில் இருக்கிறதா?” ஆறு, குளம், ஏரிகளையெல்லாம் பன்னாட்டுக் களவாணிக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கின்ற “காட்ஸ்” என்கிற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்துப் போட்டுள்ளது தான் இதற்கெல்லாம் காரணமென்பதை வாக்குச் சேகரிப்புக் கட்சிகள் திட்டமிட்டே மறைக்கிறார்கள். நொய்யலாறு சுத்தமாக்க வேண்டிய அவசியம் வந்திருப்பதற்கும் கூட இந்த துரோக ஒப்பந்தமே பின்னணியாக இருக்கிறது.
பொலிவியாவில் நடந்ததைப் பார்த்தோம். பொலிவியாவிலிருந்து ‘பெக்டெல்’ திருப்பூருக்கு வந்திருக்கிறது. “திருப்பூரில் இப்படியெல்லாம் வராது” என, செயல்திட்டத்தை குறைந்த பட்சமாகவும், சந்தர்ப்ப வாதத்தை அதிக பட்சமாகவும் வைத்திருப்பவர்களும் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக “மட்டுமே” மனித முகமூடியை மாட்டிக் கொண்டிருப் பவர்களும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். காரணம், இவர்களும் பாட்டில் தண்ணீருக்கு பல்லைக் காட்டிக் கொண்டே பர்மிஷன் வழங்கியிருப்பதால் தான். இங்கு எது வரவேண்டும்? எது வந்துவிடக்கூடாது? என்பதில் கவனமாகக் கூட்டணி வைத்துக் கண்காணிக்கும் இவர்கள் இந்தியாவிற்குள் வருதற்கு அனுமதியளித் திருப்பது பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மட்டுமே.

ஆனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்களால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிற போராட்டங்களில் முதலிடம் வகிப்பது குடிதண்ணீருக்கான போராட்டங்கள்தான். இங்கே தொடர்ந்து பெய்திருக்கிற மழை பிரச்சனையின் சூட்டைத் தற்காலிகமாகத் தணித்திருக்கலாம். ஆனால் அடுத்த வருடம் கடும் வறட்சியினால் மறைந்திருக்கும் பூதங்கள் வெளிவந்தே தீரும்.

திருப்பூருக்கும் இந்த அவலம் வருமென்றால் திருப்பூர் நகர மக்களும் இந்தத் துயரம் வருமென்றால், பொலிவியாவிலிருந்து பெக்டல் கம்பெனி திருப்பூருக்கு வந்தது போலவே, பொலிவியாவிலிருந்து பெக்டலை விரட்டிய மக்களின் போராட்டமும் திருப்பூருக்கு வரவேண்டும். உண்மையில் அப்படியொரு போராட்டமானது பொலிவியாவி லிருந்து வரமுடியாது. அது திருப்பூரிலிருந்துதான் வர முடியும் என்பதையும், அது மறுகாலனியாக் கத்திற்கு எதிரான போராட்டமாகத் தான் இருக்க முடியும் என்பதையும், திருப்பூர் நகர மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.அதை அவர்களுக்கு உணர வைக்க வேண்டிய அவசியம், ஒரு வரலாற்றுக் கடமையாக நம்முன் இருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com