Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
நூல் மதிப்புரை

தோழர் ஆர்.என்.கே.யின் 80 ஆண்டு நிறைவு மலர் விமர்சனம்
- தீபர்

Nallakannu தோழர் ஆர்.நல்லகண்ணு 81வது வருடத்திற்குள் நுழைந்திருக்கிறார். அநீதியை எதிர்த்து காட்டாற்று வெள்ளமாய் துடித்தெழுந்த இளைஞர் குழுவின் பிரதிநிதியாக ஆர்.என்.கே. இன்று வாழ்ந்து வருகிறார். காட்டாற்று வெள்ளம் நிறுத்திப் பாய்ந்து நதியாகி; வரப்பு மேடுகளை பயிர் கொழிக்கும் செழிப்பாக்கி கடலில் சென்று சங்கமிக்கும். நிலத்தையும் நீரையும் ஆக்கிரமித்த சமூக கூட்டம் நதிகளை விழுங்கிக் கொண்டது. விழுங்கப்பட்ட நதிகளின் சில பெயர்கள் பாடப்புத்தகத்தோடு இன்று நின்று விட்டன. வளம் தர நினைத்த நதிகள் ஆக்கிரமிப்புகளால் வரட்டுப் புன்னகையை மட்டும் இன்று உதித்து மவுன சாட்சியமாய் அமிழ்ந்து கிடக்கிறது. இந்த சூழலில் இன்றும் களத்தில் நிற்கும் போராளியாய் கம்பீரமாய் நிற்கிறார் தோழர் ஆர்.நல்லகண்ணு.

தோழர் ஆர்.என்.கே.யின் 80ஆண்டு சேவையை நினைவு கூறும் வண்ணம் நான்கு புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. மணாவினுடைய நேர்காணல் தொகுப்பு, வீரபாண்டியனின் ‘மக்களின் மனிதன்’ தொகுப்பு, கே.ஜீவபாரதியின் ‘வந்தவினாக்களும் தந்த விடைகளும்’ என்ற நேர்காணல் தொகுப்போடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு “தோழர் ஆர். நல்லக்கண்ணு, எண்பதாண்டு நிறைவு மலர்” எனும் நூலை வெளியிட்டிருக்கிறது. ஒரு சிறப்பு மலருக்குரிய நேர்த்தி, ஆடம்பரம், புகைப்படக் கோர்வை, விளம்பரங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கே பெற்ற இப்புத்தகத்தில் மொத்தப் பக்கங்கள் குறிப்பிடப் படவில்லை. பகுதிக்கும் மேற்பட்ட பக்கங்களை விளம்பரங்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. ‘LAKSMI NURSING HOME’ என்ற விளம்பரம் இரண்டு பக்கங்களில் அச்சாகி இருக்கிறது. 201 பக்கங்களில் முன்னுரை, பொருளடக்கம் தவிர்த்த 199 பக்கங்கள் கட்டுரைகளுக்கும், புகைப்படத்திற்கும், ஆர்.என்.கே. எழுதிய நூல்களின் சுருக்கமான அறிமுகத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இங்கு வசதி கருதி கட்டுரைகளை இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். 1. சமகால அரசியல்வாதிகளின் கட்டுரைகள், 2. இயக்கத் தோழர்களின் நினைவுகள் என்பதாக பிரித்து அவைகளை விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

சமகால அரசியல்வாதிகளின் கட்டுரைகளில் வைகோ, கி.வீரமணி, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் கட்டுரைகள் பயனுள்ளதாக இருக்கிறது. வைகோ தனக்கேயுள்ள வரலாற்று ஞானத்தின் அடிப்படையில் ஆர்.என்.கே.யின் வரலாற்றையும், அதை ஒட்டிய விவசாய சங்க வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் தனது கட்டுரையில் தென்மாவட்ட கலவரச் செய்தியை 1980ம் ஆண்டுக்கு தள்ளிவிட்டார். 1980களிலும் ஒரு கலவரம் நடந்தது. பீட்டர் 1995 கலவரச் செய்தியை 1980தோடு இணைத்து எழுதியிருப்பது பிழை. அத்தோடு மிக முக்கிய செய்தி ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார். ஆர்.என்.கே.வின் காலில் ஜி.கருப்பையா அவர்கள் விழுந்து வணங்கிய செய்தியை பதிவு செய்துவிட்டு “அவரை உள்ளும், புறமும் நான் அறிவேன். அவருக்குள் இருக்கும் ‘மனிதம்’ பிரம்மாண்டமானது” என ஜி. கருப்பையா அவர்கள் கூறிய செய்தியை பீட்டர் பதிவு செய்திருக்கிறார். வெண்மணி கோரச் சம்பவத்தை அறிந்தவர்களுக்கு ஜி.கருப்பையாவின் சொல்லாடல் பலவித ஞாபகங்களை கண்முன் நிறுத்தும்.

கி.வீரமணியின் கட்டுரை பெரியாரியத்தையும் மார்க்சீயத்தையும் இணைக்கும் புள்ளிகளை தொட்டுச் செல்கிறது. “திராவிடர் கழகமும்-கம்யூனிஸ்ட் இயக்கமும் தமிழ்நாட்டு மக்களின் விடுதலை போராட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் ஒரு பெரிய சக்தியாகும்” என்ற கல்யாண சுந்தரத்தின் கடிதத்தை கி.வீரமணி பதிவு செய்திருக்கிறார். மார்க்சியர்களின் துவக்ககால ஆசைகள் பின்னர் நிராசையாக போனது ஆச்சரியமாகவும், ஆய்வுக்குரியதாகவும் இருக்கிறது. ஒட்டு மொத்த மலரின் பயனுள்ள கட்டுரையாக வீரமணியின் கட்டுரையை இங்கு முன்மொழிதல் தவறல்ல.

வே.துரை மாணிக்கத்தின் குறிப்புகள் விவசாய வரலாற்றை பேசி கவனம் பெறுகிறது. 1946ல் ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் விவசாயத் தொழிலாளர் மாநாடு, பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக பிற்படுத்தப் பட்டவர்களையும் தலித்து களையும் ஒருங்கிணைத்துப் போராடியது, விவசாயிகளை பயமுறுத்திய ஜப்தி நடவடிக்கைக்கு எதிராக போராடியது, கடனா நதி அணைக்காக உண்ணாவிரதம் இருந்தது, காவிரிப் பிரச்சனைக்காக குரல் கொடுத்தது முதலான செய்திகளை பதிவு செய்திருக்கிறார்.

Nallakannu இம்மலரில் விரும்பியோ விரும்பாமலோ தோழர் அண்ணசாமி படுகொலையை பேசவந்த பலரும் அதை காரணமாக்கி ஆர்.என்.கே.யின் சாதி அடையாளத்தையும் வெளிப்படுத்தி விட்டனர். தென்மாவட்ட கலவரத்தை தலித் மக்களின் சுயமரியாதைக்கான போராட்டமாகவும் நாம் அடையாளப்படுத்த முடியும்.

ஒருவேளை தென்மாவட்டப் போராட்டம் நிகழாமல் போயிருந்தால் இன்றுவரை தென்மாவட்டத்தின் பல பகுதிகள் உசிலம்பட்டி பகுதிகளைப் போன்று சாதிய வன்கொடுமை தொழில்படும் இடங்களாக இருந்திருக்கும். அதை மாற்றியதில் இப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. இப்போராட்டத்தின் போது தலித் மக்களோடு கம்யூனிசத்திற்காக பேராடிய தோழர் அண்ணசாமி கொலை செய்யப்பட்டது ஏற்கத்தக்கதல்ல. நடந்திருக்கவும் கூடாது. இது தொடர்பாக ஆர்.என்.கே. பதிவு செய்திருக்கும் கவிதைவரிகளில் ஒரு இடத்தில் கூட ‘தலித் வெறுப்பு’ தென்படவில்லை. ஆனால் அண்ணசாமியை நினைவுகூறும் கட்டுரைகள்; பேட்டிகளில் ஒருவித தலித் எதிர்ப்பு தென்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக ஆனாருனா, கே.ஜீவபாரதி எழுத்துக்களை நாம் இந்த வகையில் கவனப்படுத்தலாம்.

தோழர், பொதுவுடமை என்ற சொற்களை தமிழ் களஞ்சியத்திற்கு வழங்கிய பெருமை கம்யூனிசத்தையே சாரும். தோழர் என்ற சொல்தான் இன்றுவரை சாதிமுலாம் பூசப்படாமல் இருக்கிறது. ஆனால் கட்டுரையாளர்கள் ‘தாழ்த்தப்பட்ட தோழர்’ என எழுதுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகள் சாதி ஒழிப்புப் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதையே இச்சொல்லாடல் உணர்த்திச் செல்கிறது.

சாதி அடையாளத்தை துறந்து வாழ்ந்த ஆர்.என்.கே.வை தஞ்சைத் தோழர் சிவனேசம் வழி அறியமுடிகிறது. தோழர் அண்ணசாமி கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு ‘மாமாவை தலித்துகள் கொன்றிருக்க மாட்டார்கள்’ என்று கூறிய ஆர்.என்.கே.ன் சொல்லாடலை உச்சி முகர்ந்து வரவேற்கலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com