Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
ஈராக் எண்ணைக்கு உணவு ஊழல்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து...
- எம். அசோகன்

எண்ணை வாங்கிய 248 நிறுவனங்களில் 139 நிறுவனங்களின் பெயர்களும் ஈராக்கிற்குப் பொருட்களை விற்ற வோல்கரின் ‘குற்றவாளிகளின்’ பட்டியலில் உள்ளன. இக்குற்றச்சாட்டுகளுக்கு வோல்கர் கூறும் ஆதாரங்கள் மோசடியானவை. போலியானவை. கையெழுத்துக்கள் கூட பட்டியலில் உள்ளவர்களால் போடப்பட்டதல்ல. ஆவணங்களும் புனையப்பட்டவை.

Natwar Singh வோல்கரை ஏவிவிட்டவர்கள் நினைத்தது பா.ஜ.கவின் உதவியோடு நடந்துவிட்டது. நட்வர்சிங் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஈராக் எண்ணைக்கு உணவு என்கிற ஐ.நா. திட்டத்தில் அவர் ஊழல் செய்திருக்கிறார் என்பது வோல்கர் அறிக்கையின் குற்றச்சாட்டு.

என்ன ஊழல்? ஈராக்கின் முன்னாள் (?) அதிபர் சதாம் உசேனுக்கு லஞ்சம் கொடுத்தார் நட்வர்சிங்! அப்படித்தான் சொல்கின்றன அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஏவலாளர்களான பா.ஜ.க.வினரும் பெரு முதலாளிகளால் நடத்தப்படும் ஊடகங்களும்.

1996ம் ஆண்டு ஈராக்கிற்கான எண்ணைக்கு உணவு திட்டம் ஐ.நா.வால் ஆரம்பிக்கப்பட்டது. ஈராக் எண்ணை வளத்தைக் குறிவைத்த அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் 1990ல் ஈராக் குவைத்தின் மீது படையெடுத்ததை சாக்காக வைத்து 1991ல் அதன் மீது தாக்குதல் நடத்தின. குவைத்திலிருந்து ஈராக் படைகளை விரட்டியடிப்பது மட்டும் நோக்கமல்ல. சதாமையே அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதுதான் திட்டம். ஆனால் அப்போது அது நடக்கவில்லை.

சதாம் மிகவும் ஆபத்தானவர் அவரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தது. கூட்டணி நாடுகளின் உதவியோடு ஐ.நா.வின் கையைத் திருகி இதற்கான தீர்மானம் போடப்பட்டு அமலாக்கப்பட்டது. ஈராக் எண்ணையை விற்கக் கூடாது, யாரும் வாங்கக் கூடாது, அந்நாட்டிற்கு எந்தப் பொருளும் யாரும் விற்கக் கூடாது.

இப்பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டில் மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது. போதுமான உணவின்றியும் உயிர்காக்கும் மருந்துகளின்றியும் ஐந்து லட்சம் குழந்தைகள் உள்பட சுமார் பத்து லட்சம் பேர் மாண்டனர். தடைகளை நீக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவலாக கண்டனம் எழுந்தது. அதனால் ஐ.நா.சபை உணவுக்கு எண்ணை திட்டத்தை ஆரம்பித்தது.

இதன்படி ஈராக் எண்ணையை விற்கலாம். அதில் வரும் பணம் ஐ.நா.சபையால் நிர்வகிக்கப் படும் பிரத்தியேக கணக்குகளுக்குச் (வங்கி) செல்லும். ஈராக்கிற்கு அல்ல. அப்பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஈராக்கின் உணவு மற்றம் மருந்துத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும். பின்னர் இடப்பட்டியலில் விவசாயம், கட்டுமானம், தொலைதொடர்பு, குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற துறைகள் சார்ந்த பொருட்களும் சேவைகளும் இணைக்கப்பட்டன.

மூன்றில் இரண்டு பங்கு போக மீதி தொகை? அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈராக்கின் மீது தொடுத்த போருக்கும் அவ்வப்போது நடத்திய தாக்குதல்களுக்கும் நஷ்ட ஈடாக அந்நாடுகள் எடுத்துக் கொள்ளும்! பின்னே, குண்டுகள் என்ன இலவசமாகவா கிடைக்கின்றன?

இத்திட்டத்தின் மூலம் 1996லிருந்து 2003மார்ச் வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள 248 நிறுவனங்களுக்கு ஈராக் எண்ணெயை விற்றது. சுமார் 6400 கோடி டாலர் பெறுமான எண்ணையை விற்று 3614 நிறுவனங்களிடமிருந்து 3450 கோடி டாலர் மதிப்புள்ள தனக்குத் தேவையான (அனுமதிக்கப்பட்ட) பொருட்களை வாங்கியது.

எண்ணை என்ன விலைக்கு விற்கப்பட வேண்டும் என்பதைக்கூட ஐ.நா.தான் (அமெரிக்காதான் என்று படிக்க) தீர்மானித்தது. திட்டம் ஆரம்பமானபோது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 23 டாலர் என்ற விலையிலிருந்து இடையே சற்று குறைந்து பின்னர் 2003ல் ஈராக்கை அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் ஆக்கிரமித்தபின் நிறுத்தப்பட்டபோது 30 டாலர்களைத்த தாண்டி விட்டது. ஆனால் ஈராக்கிற்குக் கொடுக்கப்பட்ட விலையோ சராசரியாக 18.74 டாலர் மட்டுமே! மீதி பிடுங்கிக் கொள்ளப்பட்டது!

எனினும் இத்திட்டம் அமலாக்கப்பட்ட போது ஈராக் மக்களுக்கு ஓரளவு நற்பலன்கள் விளைந்தன. 2002 வாக்கில் குழந்தைகளின் சத்துணவின்மை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. குழந்தை இறப்பு விகிதமும் குறைந்தது.

இப்போது பிரச்சனை என்னவென்றால், இந்த ஏற்றுமதி இறக்குமதியில் ஊழல் நடந்திருப்பதாக வோல்கர் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. ஊழல் என்றால் ஐ.நா. விதிமுறைக்கு மாறாக சதாம் அரசாங்கம் எண்ணையின் மீது கூடுதல் வரி விதித்தது; இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது சேவை வரியும் உள்நாட்டு போக்குவரத்துக் கட்டணமும் வசூலித்தது. ரகசிய பண பரிமாற்றமும் நடந்தது. செப்டம்பர் 2000க்கும் செப்டம்பர் 2002க்கும் இடையில் இப்படிச் செய்தது. கூடுதல் வரி கொடுத்த நிறுவனங்கள் 139; கட்டணங்கள் செலுத்திய நிறுவனங்கள் 2253. இதன் மூலம் ஈராக்கிற்குக் கிடைத்த பணம் மொத்த வர்த்தக மதிப்பான 10,000கோடி டாலரில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு! இப்பணம் சில சமயம் ஈராக் தூதரகங்களில் ரொக்கமாகவும், பெரும்பாலும் ஜோர்டான் மற்றும் லெபனானில் உள்ள ‘ஈராக் அரச எண்ணை விற்பனை நிறுவனத்தின்’ வங்கிக் கணக்குகளிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்தின. அதாவது ஈராக் அரசின் கைக்கு பணமே போகக்கூடாது என்றே அமெரிக்க கூட்டு நாடுகளின் / ஐ.நா.வின் அநியாய விதிமுறைக்கு மாறாக சதாம் பணம் (நிதி) திரட்டினார்; சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்து ‘உதவின’ இதுதான் வோல்கர் குழுவின் ‘குற்றச்சாட்டு’.

இந்த வோல்கர் கமிட்டி ஐ.நா.வால் நியமிக்கப்பட்டது தான். ஆனால் யார் வோல்கர் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர். இக்குழுவின் இன்னொரு உறுப்பினர் ரிச்சர்ட் கோல்ட் ஸ்டோன். தென்னாப்பிரிக்க நிறவெறி கால வழக்கறிஞர். மூன்றாமவர் மார்க் பெய்த் எனும் சுவிஸ் நாட்டுப் பேராசிரியர். வோல்கர் ஜார்ஜ் புஷ்சின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், சதாம் பொருளாதாரத் தடைகளினால் ஏற்பட்டுக் கொண்டிருந்த நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கிறார் என்ற கோபம். மேலும் கூடுதல் வரி மற்றும் கட்டணங்களின் மூலம் தான் அனுமதித்ததைவிட அதிக நிதி திரட்டுகிறார் என்ற ஆத்திரம்.

இவ்வரிகள் மூலம் கிடைத்த வருமானம் நேராக சதாம் உசேனின் பாக்கெட்டிற்குப் போனதுபோல் பேசுகிறார்கள். இல்லை. இந்தப் பணமும் நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்காகத்தான் பயன் படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. இக்காலகட்டங்களில் ஈராக் சென்று வந்த பலரும் அதை உறுதிப் படுத்துகிறார்கள்.

உணவுக்கு எண்ணை திட்டம் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததோடு முடிவிற்கு வந்தது. இந்த அநியாயப் படையெடுப்பை பல நாடுகள் கண்டித்தன. படையெடுப்பிற்கு அமெரிக்கா கூறிய காரணங்களெல்லாம் பச்சைப் பொய் என்று தெரிய வந்ததும் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னனும் விமரிசித்தார். அமெரிக்காவிற்குள்ளும் எதிர்ப்பு வலுத்தது.

ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் மற்றும் சதாமை ஆதரித்தவர்கள் மீது சேற்றை வாரித்தூற்ற நினைத்த அமெரிக்கா உணவுக்கு எண்ணைத் திட்டத்தில் நடந்த ‘முறைகேடுகள்’ குறித்து விசாரிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தது. கோபி அன்னனின் மகனும் இத்திட்டத்தின் மூலம் ஈராக்குடன் வர்த்தகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருந்தார். எனவே அவர் மீதும் ‘ஊழல்’ குற்றச்சாட்டு சுமத்துவதன் மூலம் கோபி அன்னனை நீக்குவது அல்லது வழிக்குக் கொண்டு வருவதும் நோக்கம். கோபி அன்னன் வழிக்கு வந்துவிட்டார் என்பது தனிக்கதை. அவரது மகன் மீதான குற்றச்சாட்டுகளை இறுதி அறிக்கையில் ‘தானே வலிய’ நீர்த்துப் போகச் செய்ததை வோல்கரே ஒப்புக் கொள்கிறார். இல்லையெனில் அன்னான் வேலை போய்விடும்.

மொத்தம் எண்ணை வாங்கிய 248 நிறுவனங்களில் 139 நிறுவனங்களின் பெயர்களும் ஈராக்கிற்குப் பொருட்களை விற்ற வோல்கரின் ‘குற்றவாளிகளின்’ பட்டியலில் உள்ளன. இதில் இருவகை. ஒப்பந்தங்கள் மூலம் பலன் பெற்றவர்கள் மற்றும் ஒப்பந்தங்களிற்கு வெளியே பலன் பெற்றவர்கள். முதலாவது நிறுவனங்கள்; இரண்டாவது தனிநபர்கள்; அரசியல் வாதிகள். எண்ணை ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததன் மூலம் பலன் அடைந்தவர்கள்.

இந்த நிறுவனங்களுமா? அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்தன? இல்லை. இவற்றில் மிகப் பெரும்பாலானவை அமெரிக்காவை எதிர்த்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள். பட்டியலில் அமெரிக்காவும் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா தனது நிறுவனங்களைப் பற்றி மூச்சு விடவில்லை. இந்தியாவும் மூச்சு விடவில்லை. பிரான்ஸ், ஜெர்மனி, சீனா போன்ற இதர நாடுகளோ அறிக்கையையே கண்டிக்கின்றன.

தனிநபர்களும் அரசியல்வாதிகளும்தான் அமெரிக்காவின் வோல்கரின்குறி. இவர்களில் இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் மேகவதி சுகர்னோபுத்ரி, பிரிட்டிஷ் அரசியல்வாதி ஜார்ஜ் கால்வோவே, மற்ற இதர நாடுகளின் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளன. ஆனால் எந்த நாட்டிலும் இந்தியாவைப் போல் இது பெரிய அரசியல் பிரச்சனையாக ஆக்கப்படவில்லை. ஏன்?

இக்குற்றச்சாட்டுகளுக்கு வோல்கர் கூறும் ஆதாரங்கள் மோசடியானவை. போலியானவை. கையெழுத்துக்கள் கூட பட்டியலில் உள்ளவர்களால் போடப் பட்டதல்ல. ஆவணங்களும் புனையப் பட்டவை. மேலும் ஈராக்கிலிப்பது அமெரிக்காவின் கைப்பாவை அரசாங்கம்.

ஜார்ஜ் கால்வோவேக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் கொடுக்கப் பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ரஷ்யாவின் முன்னாள் உயர் அதிகாரி அலெக்ஸாண்டர் வோவோகினின் கையெழுத்து போலியானது என்று அந்நாட்டு விசாரணையில் தெரிய வந்துள்ளது. லண்டனிலிருந்து வெளிவரும் ‘அல்ஹயாத்’ என்ற அரேபிய செய்தித்தாளில் பணியாற்றும் ஹசீம் அல் அமீன் என்பவர் ‘ஈராக் ஆக்கிரமிக்கப் பட்டபோது பல முக்கிய அமைச்சகங்களின் லெட்டர் பேடுகள் திருடப்பட்டு விட்டன. எனவே தற்போதைய அரசாங்கத்தால் கொடுக்க ப்படும் ஆவணங்களை நம்பமுடியாது. யார் யார் கைகளில் என்னென்ன கிடைத்ததோ அவரவர் வசதிக்கேற்ப அவற்றை முறைகேடாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பாக்தாத்தில் போலி ஆவணங்கள் பெருமளவு உலவுவதாக ஆவண நிபுணர்கள் கூறுகின்றனர்’ என்று எழுதியுள்ளார்.

‘அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கும், ஆக்கிரமிப்பு திட்டத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தனி நபர்கள் மற்றும் அமைப்புகளைச் சிக்கவைக்கும் (போலி) ஒப்பந்தங்களில் போலி கையெழுத்துப் போட நான் கூலிக்கு அமர்த்தப்பட்டேன்’ சாஜத் அகமத் அலி (ஈராக்கியர்) ‘துனியா-அவ்-வாடன்’ என்ற பாலஸ்தீன நாளிதழில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். (பிப்ரவரி, 04)

‘அபு சலீம் என்பவர் என்னோடு சேர்ந்து நான்கு பேரிடம் இவ்வேலையைக் கொடுத்தார். அவர்தான் பெயர்கள் மற்றும் ஒப்பந்த தலைப்புகள் குறித்த விபரங்களைக் கொண்டு வந்தார். அவற்றில் என்ன எழுதவேண்டும் என்ற நகலொன்றையும் கொடுத்தார். நாங்கள் பத்து நாட்கள் வேலை செய்தோம். நாங்கள் தயாரித்த ‘ஆவணங்களை’ நீராவியில் லேசாக நனைத்து பின்னர் காய வைத்தோம்; அவை பழையவை போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக...’ என்று மேலும் விளக்கமளித்துள்ளார்.

உணவுக்கு எண்ணைத் திட்டதிற்கு முன்பாகவே ஈராக்கிலிருந்து எண்ணை ‘விற்கப்பட்டது’. அதாவது கடத்தப்பட்டது. அமெரிக்காவின் நட்பு நாடுகளின் வழியாகப் பயணம் செய்த இந்த எண்ணையின் பெரும்பகுதி அமெரிக்கச் சந்தைகளுக்கே வந்தன! அதனால் கடத்தலை அமெரிக்கா கண்டுகொள்ளவே இல்லை.

அது மட்டுமல்ல. இப்போதைய அமெரிக்க துணை அதிபர் டிக்சென்னி 1990களில் ஹாலிபர்டன் இன்கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். அந்த நிறுவனம் சுமார் இரண்டரைகோடி டாலர் அளவிற்கு ஈராக்கோடு எண்ணை வியாபாரம் செய்துள்ளது. என ‘திகான் பிரான்சிஸ்கோ போ கார்டியன்’ மற்றும் ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆகிய இதழ்கள் தெரிவிக்கின்றன. அதாவது தடை அமலில் இருந்த காலத்தில்!?

இதோடு கவனிக்க வேண்டியது என்ன வெனில் எண்ணைக்கு உணவு திட்டத்தின் மூலம் விற்கப்பட்ட எண்ணையில் 80சதவிதமும் அமெரிக்கச் சந்தைகளுக்கே வந்தன!

எண்ணைக்காக தான் விதித்த தடையைத் தானே மீறியது; தடை தளர்த்தப்பட்ட போதும் சதாம் விதித்த ‘வரிகளையும் கட்டணங்களையும்’ செலுத்தியேனும் எண்ணையைப் பெற்றது; பின்னர் மொத்தமாக ஈராக்கையே ஆக்கிரமித்து விட்டது. அதே ‘முறைகேடு”(?) விஷயத்தைக் கையிலெடுத்து தன்னுடைய எதிரிகளைப் பதம் பார்க்கவும் செய்கிறது!

நட்வர்சிங் ராஜினாமா செய்ததில் புஷ்நிர்வாத்திற்கு ஏக சந்தோஷம். கூட்டுசேராக் கொள்கையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் உறுதியானவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் தேவை ஏற்படின் அத்தகைய நிலை எடுக்கத் தயங்காதவர். சமீபத்தில் கூட, ‘ஈரான் விஷயத்தில் அமெரிக்கா இன்னும் கடுமையான தீர்மானத்தை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்தால் இந்தியா எதிர்த்து ஓட்டுப் போட வேண்டும்’ என்று பேசினார். இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கிடையேயான புது உறவின் சிருஷ்டி கர்த்தாவான பிரதமர் மன்மோகனே இப்போது வெளியுறவுத் துறையையும் வகிப்பதால் ‘உறவில்’ எந்த சிக்கலும் இருக்காது, எல்லாம் தாங்கள் நினைத்தபடி நடக்கும் என்று அமெரிக்க அதிகார வட்டாரத்தினர் கருதுவதாகச் செய்திகள் கூறுகின்றன. வரும் காலத்தில், காங்கிரசிற்குள்ளே இருக்கும் அமெரிக்க ஆதரவாளர்கள் யாரேனும் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படலாம்.

எண்ணைக்கு உணவு திட்டத்தின் மூலம் நட்வர்சிங்கோ, அவரது மகனோ, காங்கிரஸ் கட்சியோ பலனடைந்திருக்கிறார்களா இல்லையா என்பது முக்கியமில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக், அடுத்து ஈரான், சிரியா, வடகொரியா என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை அரசாங்கம் எதிர்க்குமா ஆதரிக்குமா என்பதுதான் முக்கியம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com