Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜனவரி 2006
சமயப்புலம்

கிருஸ்து பிறப்பு மையப்படுத்தும் சமூக அமைப்பு
- பி. அருளப்பன்

Arulappan கிறிஸ்து பிறப்பை இன்று உலக மக்களனைவரும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துவின் வழ்வை எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி (லுக்.2:10) எனும்போது சிறைப்பட்டோருக்கு விடுதலையும், பசியாய் இருப்போருக்கு உணவும், சுகமாய் இருப்பவருக்கு தண்ணீரும், நிர்வாணமாய் இருப்பவர்களுக்கு உடையும் அன்னியராய் இருப்பவர்களை அணைத்துக் கொள்வதும், வியாதியால் இருப்போருக்கு அந்நோயிலிருந்து விடுதலை கொடுப்பதும் தான் உண்மையான நற்செய்தியாகும். இன்றும் சமூகத்தில், இப்படிப்பட்டோர் அனேகர் உளர். அவர்களுக்கு ‘கிறிஸ்து’ பிறப்பின் செய்தி எந்தளவுக்கு நற்செய்தியாக அமையும் என்பதைக் காண வேண்டும்.

இயேசு கிறிஸ்து பாலஸ்தீனத்தில் பிறந்தபொழுது அந்நாடு உரிமை இழந்து ரோமப் பேரரசுக்கு அடிமையாக இருந்தது. யூதர்களின் சமய, சமூகப், பொருளாதார நிலை, பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. உயர்குடி மக்கள், நடுத்தர மக்கள், கூலியாட்கள், அடிமைகள் ஆகிய நான்கு பிரிவினர்கள் அன்றிருந்த ஏற்றத் தாழ்வுக்கு எடுத்துக் காட்டாக விளங்கினர். கீழ்நிலையில் வாழ்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டங்கள் பல இருந்தும் அவைமுறையாகச் செயல்படுத்தப்படவில்லை. ரோமர்கள், யூதர்களை ஒடுக்குவதும் யூதர்கள், தங்களுக்கு கீழான ‘சமாரியர்கள் கானாகதியர்கள்’ (இவர்களை தமிழ்ச் சூழலில் தலித் மக்களோடு ஒப்பிடலாம். ஏனெனில் இம்மக்கள் பண்பாட்டு அடிப்படையில் யூதர்களிடம் இருந்து பிரித்து வைக்கப் பட்டனர்.) போன்றோரை சமய சமூக ரீதியாக ஒடுக்குவதும் நிகழ்ந்தது. பெண்கள், ஏழைகள், பாவிகள், உழவர், நாடடுப்புறத்தார் போன்றோருக்கான உரிமை மறுக்கப் பட்டது. இது, கடவுளின் கொள்கையான நீதி, நேர்மை, தூய்மை, ஒற்றுமை ஆகியவைகளுக்கு எதிரான செயலாகும், மனித சமூகம் கடவுளுடைய கொள்கைக்கு எதிராக செயல்படும் போது தனது கொள்கையை இச்சமூகத்தில் நிறைவேற்ற ஒரு தூதுவரை, இறைவாக்கினரை அனுப்புவார். அவ்வாறு, கடவுளின் திட்டமான, வாக்கு (The world of god rewone flesh) மனிவுருவேற்று இப்பூமியில் இயேசுவாய் பிறப்பெடுத்ததாக கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் பிறப்பின் ரகசியங்கள் பலவிதங்களில் கூறப்பட்டாலும் இயேசு நான்கு விதமான சமூக மீட்பை உருவாக்கவே பிறந்தார் என்பதை ‘பைபிள்’ படித்தவர்கள் ஏற்பர். அதனை தொடர்ந்து காணலாம்.

1. ஆணாதிக்கத்திற்கு எதிரான புரட்சி (A Revolution against Patriarchy)

யூத சமூகத்தில் பெண்களின் நிலை சற்று தாழ்வாகவே இருந்தது. தந்தையே, குடும்பத் தலைவர், அவருக்குப் பரந்த அதிகாரமுண்டு, வீட்டில் உள்ள யாரும் அவருக்குப் பயந்து நடக்க வேண்டும். ஆகவே யூதரிடம் பெண்களுக்கு உரிமையில்லை. அவள் தனது தந்தைக்கோ, கணவனுக்கோ பணிந்து நடக்க வேண்டும். கணவனது உடமையாகக் கருதப்பட்டாள். அவளது சொத்து உரிமை வரையறை செய்யப்பட்டது. கடவுளை தொழுது கொள்வதில் அவர்களுக்கு ஆண்களோடு சமநிலை இல்லை. உச்சகட்டமாக, ஒரு யூத குரு தான் புறஇனத்தவனாகவும், பெண்ணாகவும் பிறக்காததற்காகவும் உம்மைப் போற்றுகிறேன் என்று ஒவ்வொரு நாளும் கடவுளிடம் வேண்டுதல் செய்வார். இச்சூழலில் பெண்களும் கடவுள் படைப்பில் சமமானவர்கள் ஆண்கள் இல்லாமல் அவர்களும் எல்லா சேவைகளும் செய்யமுடியும் என்பதை உறுதிப்படுத்தியது இயேசுவின் பிறப்பு. பெண்களின் நிலை உயர்த்தப்படவே கிறிஸ்து ஆண் உறவில்லாமல் கன்னியின் வயிற்றில் பிறந்தார். அவரின் பிறப்பில் பெண்களின் நிலை உயரத் தொடங்கியது.

2. பண ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சி (A Revolution against Plutocracy)

யூத சமூகத்திலும் கூலி வேலை செய்து பிழைத்த ஒரு வகுப்பினர் இருந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் நாட்டுப் புறத்தார்கள். உழவுத் தொழில், மீன்பிடித்தல் முதலிய வேலைகளைச் செய்தனர் (மார். 1:20) யூதரில் பிறிதொரு வகுப்பினர் அம்மீ-கா-அரெட்சு (Ammeha-aretz) என்று அழைக்கப்பட்டனர். இச்சொல்லுக்கு பாமர மக்கள் என்பது பொருள். மேற்கூறிய கூலியாட்களும், நாட்டுப்புறத்தாரும், இவ்வகுப்பைச் சார்ந்தவர்கள், பொருளாதாரத்தில் சற்று தாழ்ந்தவர்கள். இவர்களை பாவிகள் என்றே செல்வந்தர்களான யூதர்கள் அழைத்தனர். கோவில், சமய, சமூக சடங்குகளில் உரிமை மறுக்கப்பட்டவர்கள், யூதர்களால் தீட்டுப் பட்டவர்கள் என ஒதுக்கப்பட்டனர்.

ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு முதலில் நாட்டுப்புறத்தில் வயல் வெளிகளில் கூலிக்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு முதலில் அறிவிக்கப்படுகிறது. அவர் பிறந்த இடமும் மாட்டுத் தொழுவம், அரச குடுபத்திலும் பெரும் செல்வந்தர்கள் குடும்பத்திலும் மெசியா பிறப்பார் என எதிர் பார்த்திருந்த யூதர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது.

கிறிஸ்து தனது பணிக் காலத்திலும் பாவிகள் எனப்பட்ட இம்மக்களோடு அன்பாக பழகினார். பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் (மத்.11:28) என்ற விடுதலைச் செய்தியை வழங்கினார்.

தனது போதனைகளில் ‘காலம் நிறைவேறிவிட்டது. மனமாற்றமடைந்து நற்செய்தியில் நம்பிக்கை வையுங்கள் (மார்க்கு. 1:15) இது இயேசு ஆற்றிய முதல் உரை. இயேசுவின் பணி போதனை ஆகியவற்றின் கருப்பொருள் இவ் வசனத்தில் அடங்கியிருக்கிறது.

அவர் விரும்பும் மனமாற்றம் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை விடுவதும், மரபுப் பிடியிலிருந்து சமய பழமைவாதிகள் சமூக மீட்பின் ஓட்டத்திற்கு உட்படுவதுமாக இருந்தது. (உம்) சகேயுவின் மன மாற்றத்தால் இந்த வீட்டிற்கு இன்று மீட்பு வந்தது (மர்.19:9) என்று பைபிள் வாசகத்தின் மூலம் அறியலாம்.

3. இனஆதிக்கத்திற்கு எதிரான புரட்சி ( A Revolution against ethnorchy)

புனித பூமியான பாலஸ்தீனாவில் இனம் மற்றும் சாதிய வேறுபாடுகள் காணப்பட்டன. யூதர்கள் தங்களது மீட்பர் புனித நகரமான எருசலேமில் பிறப்பார் என்று எதிர்பார்த்தனர்.. எருசலேத்திலும், அதனை சுற்றிய நகரங்களிலும் தங்களது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர். ஆனாலும் தங்களைச் சுற்றி வாழ்ந்த பிறருடன் சமாதானமாய் வாழ்ந்ததாகக் தெரியவில்லை. மெசியா கொணரும் மீட்பு யூத இனத்திற்கு மட்டுமே என்று அழுத்தமாகவும் நம்பினர். ஆனால் கிறிஸ்து பிறந்தது எருசலேத்திற்கு வெகு தூரத்தில் உள்ள பெத்தலகேம் எனும் புறவினத்தார் நகரத்தில். கிறிஸ்து பிறப்பு எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக (சிக்கர். 2:10) பின்னர் அறிவிக்கப்பட்டது.

ஆக, கிறிஸ்து பிறப்பு என்பது யூதர்களுக்கு அல்லது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் கூறப்படும் சமயச் செய்தியன்று. அது ஒரு சமூக மீட்புச் செய்தியாகும். யூதர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட சமாரியர்களை அவர்களின் கிராமங்கள் வழியாகச் சென்று அவர்களோடு தங்கினார். தனது போதனையில் நல்ல சமாரியன் உவமைக் கதை மூலம் அவர்களது சமூகநிலையை உயர்த்தினார்.

4. அறிவுக்கெதிரான புரட்சி (A Revolution against leliterchy)

கிறிஸ்துவின் காலத்தில், யூத சமயத் தலைவர்கள் மூன்று பிரிவாக பிரிந்தனர். பரிசேயர், சதுசேயர், மற்றும் மறைநூல் அறிஞர்கள் (ரபி). இவர்கள் யூத சமய அறிஞர்களாகவும் மக்களிடையே அறிவாளிகளாகவும் விளங்கினர். சமயப் பழைமைவாதிகள் மதக் கொள்கையின் வளர்ச்சியை விரும்பாதவர்கள். சாதாரண மக்களுடன் இவர்கள் அகந்தையோடும் கடுமையாகவும் நடந்து கொண்டனர்.

மறைநூல்களை கற்றுத் தெரிந்ததனால் கிறிஸ்துவின் பிறப்பு எப்போது, எப்படி, எங்கே நடக்கும் என்று கணித்திருந்தனர். அதனாலேயே சமய, அரசியல் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு இந்த சமய வட்டத்திற்கு வெளியில் சமய அறிஞர்களால் கணிக்க முடியாதபடி எளிய கோலத்தில் நிகழ்ந்தது. அவரின் பிறப்பு யூத சமய அறிவுவாதிகளுக்கு எதிரான ஒன்றாக அமைந்தது. கிறிஸ்து போதனையால் அவர்களை கண்ணிருந்தும் குருடர்கள், கொடிய குத்தகைக்காரர்கள், வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகள், அவர்களின் அறிவுவீண் என்று அவர்களது அறிவின் பெருமையைச் சாடி புறம்பாக்கினார். ஆனால் புறவினத்தார் புறம்பாக்கப்பட்டோர், ஏழைகள் முதலியோர் இயேசுவின் பிறப்பினால் தனிச்சிறப்பு பெற்றனர். காணாமல் போனதை தேடவும், மீட்கவுமே மனித மகன் வந்திருக்கிறார். (மார். 19:10) என்பது சமூக, பொருளாதார, அரசியல் ஒடுக்குதலால் வெளிக்கு தெரியாமல் அடக்கப் பட்டிருந்தவர்களை மீட்கவே கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தார். இதை ஏழை எளிய மக்களும் விளங்கிக் கொள்ளவே காணாமல் போன ஆடு, தூரம் சென்ற இளைய மகன், காணமல் போன வெள்ளிக்காசு முதலிய உவமைகளை கிறிஸ்து தனது போதனைகளில் தந்தார்.

பாலஸ்தீன நாட்டில் பிறந்து, ஏழை மக்களின் பரிதாப நிலைகண்டு தனது நாட்டுப்புறப் பிறப்பின் மூலம் புதுச் சமூகம் உருவாக வழிகாட்டியவர். ஆயனில்லா ஆடுகளாகத் திசை தெரியாது சிதறிக் கிடந்த உழவர்களையும், ஏழைகளையும், சமூகத்தில் ஒடுக்கப் பட்டவர்களையும் தனது பிறப்பின் மூலம் ஒன்றிணைத்து சமூக மீட்பின் தொடக்கத்தை தோற்றுவித்தார்.

தனது பிறப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நற்செய்தியையும், தன்னையே பிற்காலத்தில் தோழனாகவும் தொண்டனாகவும் மாற்றிக் கொண்டு ஒடுக்குபவருக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பியவர். ஆகவே அவரது பிறப்பின் நற்செய்தி மையப்படுத்தும் செய்தி சமூக மீட்பாகும்.

கட்டுரையாளர் காமராசர் பல்கலைக்கழக கிறித்தவத்துறை ஆய்வாளர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com